“அப்புறம்..” என்று ராகம் இழுத்தவன், “சொல்லுங்க நந்தனா?” என்று மேலும் சீண்ட,
“நான் என்னோட வேலையை தான் பார்த்தேன்” என்று அவன் கண்களைப் பார்த்து சொல்லி விட்டு, தன் அறையை நோக்கி நடந்தாள் அவள்.
ஆனால், நொடியில் அவளின் வழியை மறித்துக் கொண்டு முன்னே நின்றான் அவன்.
அவளின் மிரண்ட விழிகளில் தன் பார்வையை பதித்து, “நான் உன்னை தொல்லை பண்றேனா நந்தனா?” என்று நிரஞ்சன் கேட்க, சட்டென பதிலின்றி தடுமாறினாள் நந்தனா.
“இல்ல. அப்படியெல்லாம் இல்ல” என்று அவள் சமாளிக்க,
“அப்புறம் ஏன் என்னை அவோய்ட் பண்ற?”
“அச்சோ. அப்படியில்ல..”
“பிளீஸ். நீ என்னை அவோய்ட் பண்றது அவ்ளோ அப்பட்டமா தெரியுது. ஆனா, எனக்கு காரணம் தான் புரியல. நான் எதுவும் தேவையில்லாம பேசிட்டேனா? காஃபி சாப்பிட தானே கூப்பிட்டேன்” என்றவன்,
“இப்போ ஃப்ரீ தானே? என்னோட ஒரு கப் காஃபி? பிளீஸ்?” என்று கேட்க, அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது.
வலக் கரத்தை உயர்த்தி மணி பார்த்தாள். நேரம் நள்ளிரவு ஒன்று என்றது கைக் கடிகாரம்.
“இப்பவா?” என்று சந்தேகமாக கேட்டவளுக்கு, “எஸ். இப்பவே” என்று பதில் கொடுத்தான் அவன்.
இருவரும் சில நொடிகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி மௌனமாய் நின்றனர்.
“ஓகே. வாங்க, போகலாம்” என்று அந்த மௌனத்திற்கு மொழி கொடுத்தாள் அவள்.
ஹோட்டலின் பின் பக்க வழியாக வெளியேறி, அந்நேரத்திலும் இயங்கிக் கொண்டிருந்த மும்பையின் தெருக்களில் நடக்க ஆரம்பித்தனர்.
மிக அருகில் கடல் இருந்ததால் குளிர் காற்று இருவரின் மேனியையும் தொட்டு தழுவி நழுவிக் கொண்டிருந்தது.
“அழகை பார்த்து தான் பொதுவா எல்லோருக்கும் ஈர்ப்பு வரும். ஆனா, எனக்கு மட்டும் ஏன் அறிவை பார்த்து ஈர்ப்பு வருது நந்தனா?” திடீரென்று அவன் கேட்க, தனது நடையை நிறுத்தி அவனை ஏறிட்டாள் நந்தனா.
“என்னால இன்னும் கூட நம்ப முடியல. ஒரு பொண்ணு கிரிக்கெட்ல இவ்வளவு தூரம் வந்திருக்கான்னு” அவன் வியப்புடன் சொல்ல,
“சின்ன வயசில் இருந்தே எனக்கு கிரிக்கெட் அறிமுகம் நிரஞ்சன்.” என்றவள் மேல நடக்க ஆரம்பித்தாள்.
“உன்னோட இந்த வேலை, நீ இருக்க இந்த இடம், உன்னோட சக்சஸ். இதெல்லாம் தான் உன்கிட்ட பேச சொல்லி என்னை தூண்டுது”
என்றவனின் பேச்சில் இடையிட்டு, “காஃபி வாங்கி தரேன்னு சொன்னீங்க” என்றாள் அவள்.
அவள் பேச்சை மாற்றுவதை கண்டுக் கொண்டவன், சிரிப்புடன் கடற்கரையை ஒட்டிய பகுதியில் அவளை கூட்டிக் கொண்டு போனான். அதற்கு பின் அவர்களுக்கு நடுவில் பொதுவான பேச்சுகள் தான் இடம் பிடித்தது.
“மும்பையில் டீ தான் நல்லா இருக்கும்” என்றவன், நெருக்கடி மிகுந்த தெருவோர கடை ஒன்றில் இருந்து இருவருக்கும் மசாலா டீ வாங்கி வந்தான்.
அதிக வெளிச்சம் இல்லாத அந்த தெருவில் இரவை, இருளை, தனிமையை ரசித்த படி நடந்துக் கொண்டே டீயை அருந்தினர் இருவரும்.
நிரஞ்சன் தன் ஆரம்ப கால வாழ்க்கையைப் பற்றி சொல்லிக் கொண்டே வந்தான். படிப்பு, குடும்பம், கிரிக்கெட் அறிமுகம், அதற்குள் வர பட்ட போராட்டங்கள், அவமானங்கள், அனுபவங்கள் என்று அவன் பேசிக் கொண்டே போக, நடையை நிறுத்தி விட்டு, நின்று அவனை நன்றாக நிமிர்ந்து பார்த்தாள் நந்தனா.
“எனக்கு உங்களைப் பத்தி நல்லா தெரியும் நிரஞ்சன். எனக்கு மட்டுமில்ல, இந்த உலகத்துக்கே உங்களை தெரியும்” என்றாள் சிரிப்புடன்,
“அப்படியா? அப்படியென்ன எனக்கு தெரியாத விஷயம் நிரஞ்சன் கிட்ட இருக்கு?” அவள் கிண்டலாக கேட்க,
“முதல்ல நிரஞ்சனை பத்தி உனக்கு என்ன தெரியும்? அதைச் சொல்லு?” எப்போது இத்தனை நெருக்கமாக வந்தான் என்று அதிர்ந்து அவனைப் பார்த்தாள் அவள்.
“அது.. அது..”
“நிரஞ்சனுக்கு நந்தனாவைப் பிடிக்கும். அது தெரியுமா உனக்கு?” அவள் கண்களில் அதிர்ச்சியில் விரிய,
“ஏன் பிடிக்கும்னு காரணம் தெரியாமயே பிடிக்கும். அவளைப் பார்க்க பிடிக்கும், பேச பிடிக்கும். அவ வேலை செய்யறதை பார்க்க பிடிக்கும். அவ அபிநயம் பிடிச்சு ஆடுறதை ரசிக்கப் பிடிக்கும். தான் பெரிய ஹீரோன்னு நினைச்சுட்டு சுத்தற எங்களை மாதிரி பல கிரிக்கெட்டர்களுக்கு மத்தியில அசால்ட்டா அலட்டாம நிமிர்ந்து நடந்து போற அந்த திமிர் பிடிக்கும். நல்ல திறமையை பாராட்டுற அவளோட மனசு பிடிக்கும்”
“நிரஞ்சன்..” அவளுக்கு குரலே வரவில்லை. அவன் இவ்வளவு தூரம், இத்தனை விரைவாக செல்வான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.
இருவருக்கும் நடுவில் மெலிதான ஈர்ப்பு இடையோடி கொண்டிருந்ததை அவள் உணர்ந்து தான் இருந்தாள்.
பல வருடங்களாக அவள் நிரஞ்சனின் மிகப் பெரிய ரசிகை. அவனது திறமை மீது, சாதனைகள் மீது அவளுக்கு பெரும் மரியாதை இருந்தது.
ஆனால், அவள் மனதில் இருந்த உணர்வுகளுக்கு அவன் வார்த்தை கொடுப்பான் என்று அவள் எதிர்ப்பார்க்க வில்லை.
அவளின் பதிலை எதிர்பார்க்காமல், அவள் கரம் பற்றி ஹோட்டலை நோக்கி திரும்பி நடக்கத் தொடங்கினான் நிரஞ்சன்.
இந்த முறை கையை பிரிக்க தோன்றினாலும் அதைச் செய்யாமல் அமைதியாய் நடந்தாள் அவள்.
அரை மணி நேரம் கழித்து ஹோட்டலை அடைந்து, அவளின் அறை முன்னர் நின்றனர்.
“இன்னைக்கு மேட்ச்ல என்னோட ஆட்டம் எப்படி இருந்தது?” திடீரென்று சம்மந்தம் இல்லாத கேள்வியை கேட்டான் அவன்.
அவள் பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்தே கேட்டான் அவன். அன்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டி முடிந்ததும் அவள் சுகாஸுடம் சொன்னது தான் அவனுக்கு நினைவிற்கு வந்தது.
“டார்லிங் நான் எப்படி ஆடினேன்” என்று சுகாஸ் அவளிடம் கேட்க, கொஞ்சம் கூட யோசிக்காமல், லேப்டாப்பில் இருந்து தலையை உயர்த்தாமல், “வொர்ஸ்ட் (Worst)” என்றாள் நந்தனா.
நிரஞ்சனுக்கு வாயடைத்து போனது. சுகாஸுன் முகம் பார்க்க, அது போன போக்கில் அவனுக்கு சிரிப்பு வரும் போலிருந்தது.
“ஒரு நாளும் பாராட்டிடாத என்ன?” என்று அவன் கத்த,
“அதான் உலகமே உங்களை பாராட்டுதே. அப்புறம் அதையே ஏன் என்கிட்டயும் எதிர்பார்க்கறீங்க?” நந்தனா முகத்தை லேசாக கைகளில் தாங்கிக் கொண்டு அசட்டையாக கேட்க,
“என் தப்பு தான். என்னை சொல்லணும். உன்கிட்ட கேட்டேன் பார்” என்று அவன் கோபமாக சொல்ல, லேப்டாப்பில் ஒரு காணொளியை ஓடி விட்டு அவர்கள் பக்கம் திருப்பி வைத்தாள் அவள்.
அதில் ஒரு முறை கேட்ச் அவுட் மிஸ் ஆகியிருந்தது. அடுத்த பந்தில் ரன் அவுட்டாக வேண்டியது, நூலிழையில் தப்பித்திருந்தான் சுகாஸ். அடுத்த ஓவரில் பந்தை ஸ்டைலாக அவன் இறங்கி அடிக்க, பந்து கீப்பரின் கைக்கு போய் இருந்தது. இம்முறை அவுட்.
பேட்டை கக்கத்தில் இடுக்கி கொண்டு தலையை தொங்க போட்டு மைதானத்தை விட்டு வெளியேறி கொண்டிருந்தான் சுகாஸ்.
“கடவுளே, என்னை பார்க்க எனக்கே கேவலமா இருக்கு மேன்” என்றவன்,
“வெறும் பத்து பால்ல, 24 ரன் அடிச்சு இருக்கேன். அதைப் பத்தி ஒன்னுமே சொல்லாத” என்று அவன் நந்தனாவிடம் சடைக்க,
“ஓ, யா. எவ்வளோ ரன்ஸ். டீம் இன்னைக்கு வின் பண்ணதுக்கு நீங்க தான் காரணம்” நந்தனா நக்கலாக சொல்ல,
“போதும். இன்னைக்கு இந்த டேமேஜ் போதும். நான் வர்றேன்” சுகாஸ் அங்கிருந்து விலகி நடக்க, நிரஞ்சன் அவனைப் பின் தொடர்ந்தான்.
அவனுக்கு சிரிப்பை அடக்குவது அத்தனை சிரமமாக இருந்தது.
மிஸ்டர் ஐபிஎல் என்று அழைக்கப்படும் சுகாஸ். அப்படி அழைக்கப் படுவதற்கு மிகப் பெரிய சாதனை பட்டியல் கையில் வைத்திருந்தான். ஐபிஎலில் 5000 ரன்களை எட்டிய முதல் கிரிக்கெட் வீரன். ஐபிஎலில் 100 சிக்ஸர்கள் அடித்தவன் என்று சொல்லிக் கொண்டே போகலாம். அவனைப் போய் இப்படி விமர்சிக்கிறாளே என்று அவன் நினைக்க,
“பெர்பெக்ட் ஷாட் அடிக்கணும். இல்லனா, தெரு கிரிக்கெட் ஆடாதன்னு சொல்லுவா நந்தனா. உன்னோட நெகடிவ் உனக்கு தான் முதல்ல தெரியணும். ஆனா, அதை எதிராளிக்கு தெரிய விடாம பார்த்துக்கறதுல தான் இருக்கு உன்னோட சாமர்த்தியம் சொல்லுவா. ம்ம்.” சுகாஸ் சொல்ல அமைதியாய் கேட்டுக் கொண்டான் நிரஞ்சன். அப்படியே பேசிக் கொண்டே இருவரும் உடை மாற்றும் அறைக்குள் நுழைந்தனர்.
இப்போது அதை நினைத்தபடியே அவன் நந்தனாவிடம் அவனது ஆட்டம் குறித்து கேட்க, அவனையே பார்த்தது பார்த்த படி நின்றாள் அவள்.
“ஹலோ, பதில் சொல்லு” என்று மேலும் அவன் சீண்ட,
“என்ன சொல்ல?”
“உண்மை” என்ற நிரஞ்சன், “அன்னைக்கு 91 ரன்ஸ் எடுத்தேனே? கொல்கத்தாவிற்கு எதிரா? அதையும் சேர்த்து சொல்லு” என்று கேள்விகளை அடுக்க,
“இந்த ஐபிஎல்ல உங்களோட பெஸ்ட் இன்னும் நீங்க கொடுக்கல நிரஞ்சன். கிரிக்கெட் மறந்த மாதிரி ஆடிட்டு இருக்கீங்க. மோசமான பவுலிங், சொதப்பலான பேட்டிங், பீல்டிங் அதை விட மோசம். நேரா உங்க கைக்கு வந்த கேட்சஸ் மிஸ் பண்ணி இருக்கீங்க.. சரியா ரன் அவுட் பண்ண..”
“ரன் அவுட்டை சரியா பண்ண நீ சொல்லிக் கொடேன் நந்தனா. நான் உனக்கு நிரஞ்சனை சொல்லித் தரேன். நான் என்ன சொல்லித் தர்றது. நீயே கத்துப்ப.” நந்தனாவின் கண்களில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.
நிரஞ்சனின் கண்களின் வழியே அவன் மனதை படிக்க முயன்றாள் அவள்.
“விளையாட்டை மட்டுமில்ல, வாழ்க்கையையும் எனக்கு கத்துக் கொடேன் நந்தனா. உன் வாழ்க்கையை சுவாரசியமாக்க வேண்டியது என் பொறுப்பு”
அவன் விளையாட்டாக பேசவில்லை என்பது அவளை திடுக்கிட செய்தது. ஒரு கணம் அவனையே இமைக்காமல் பார்த்தவள், மறுகணம் தன் பதிலை சொன்னாள்.
அதற்காக மூன்று நாட்கள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு திரிந்தான் நிரஞ்சன்.