நந்தனா தனது அறையின் கதவை திறக்க, அதன் மேல் சாய்ந்து நின்றான் நிரஞ்சன்.
அவன் முகம் ஆவலாக அவளின் பதிலை எதிர்பார்த்து கொண்டிருந்தது.
“விளையாட்டை உங்க கோச் கிட்ட கத்துக்கோங்க நிரஞ்சன். வாழ்க்கையை யாரும், யாருக்கும் கத்துக் கொடுக்க முடியாது. அதை வாழ்ந்து தான் பார்க்கணும்.” என்றவள்,
“வாழ்ந்து பார்க்க.. நீங்க வேற ஆளைத் தான் பார்க்கணும்” மெல்லிய குரலில் என்றாலும் தீர்க்கமாக சொல்லி விட்டு அறைக்குள் நுழைந்து கதவடைத்தாள் நந்தனா.
கதவில் சாய்ந்து நின்றிருந்த நிரஞ்சன் தடுமாறிப் போனான். அவளிடம் இருந்து அப்படியொரு பதிலை அவன் எதிர்பார்க்கவே இல்லை. முதல் பந்திலேயே க்ளீன் பவுல்ட் (clean bowled) ஆனது போலிருந்தது.
அவனால் ஒன்றுமே யோசிக்க முடியவில்லை. பட்டென்று அவளின் அறைக் கதவை தட்டி திறக்க செய்து, அவளிடம் விளக்கம் கேட்க தூண்டிய மனதை கட்டுப் படுத்துவதற்குள் அவனுக்கு தலை வலிக்க ஆரம்பித்திருந்தது.
மறைமுகமாக என்றாலும் தெளிவாக, நேருக்கு நேராக அவன் கண்களைப் பார்த்து தனது மறுப்பை சொல்லியவளின் மீது அவனால் கோபப்படவே முடியவில்லை. ஏதேதோ சிந்தனைகளில் சிக்கியப் படி, நான்காம் தளத்தில் இருந்த தனது அறையை நோக்கி நடந்தான் அவன்.
இங்கே கட்டிலில் கைக் கட்டி அமர்ந்திருந்த நந்தனாவின் இதயம் தாறுமாறாக துடித்துக் கொண்டிருந்தது. அவளின் வார்த்தைகளால் நிரஞ்சனின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியும், அவன் கண்களில் வந்து போன நிராசையும், அவள் கண்களை விட்டு அகல மறுத்தது.
நாளை நடக்க வேண்டிய போட்டி எப்படி நடக்க வேண்டும், யார் ஆடினால் சிறப்பாக இருக்கும், வெற்றி பெற அணியினர் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தீர அலசி, ஆராய்ந்து முடிவெடுக்கும் பணியில் இருப்பவள், இன்னும் 40 – 50 வருடங்களுக்கான தனது வாழ்க்கையை குறித்து எவ்வளவு யோசிப்பாள்? அத்தனை எளிதில் முடிவெடுத்து விடுவாளா என்ன?
அவளைப் பொறுத்த வரை வாழ்க்கை வாழ்வதற்கே. மகிழ்ச்சியாக, நிம்மதியாக.
ஆனால், நிரஞ்சன் உடனான வாழ்வு எப்படி கற்பனை செய்து பார்த்தாலும் மகிழ்ச்சியை தவிர மற்றவை தான் அதிகமாக இருந்தது. மனதை கல்லாக்கி கொண்டு தான் மறுப்பை சொன்னாள் அவள்.
காலமும், காதலும் போடும் கணக்கை பாவம் அப்போது அவள் தான் அறிந்திருக்க வில்லை.
அடுத்து வந்த நாட்கள் சென்னை அணி தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அந்த வருடம் கோப்பையை கைகளில் தூக்கி விடும் வெறி மட்டும் அனைவரின் கண்களிலும் தெரிந்தது.
இறுதி போட்டி சென்னை – ஹைதராபாத் அணிகளுக்கு இடையே என்று முடிவாகி விட்டிருந்தது.
நந்தனா எப்போதும் தன் வேலையில் மூழ்கி இருந்தாள். நிரஞ்சன் அவளை பார்க்க நேர்ந்தாலும் பேச முயற்சிக்க வில்லை. சிறு புன்னகையை கூட சிந்தாமல், முகம் திருப்பிக் கொண்டு போனான் அவன். அவளுக்கு அதில் எந்த வருத்தமும் இல்லை.
போட்டி நாள் பரபரப்பாக விடிந்தது.
மும்பை வான்கடே மைதானம் மஞ்சளும், சிவப்பும் கலந்து ஜகஜோதியாக ஜொலித்துக் கொண்டிருந்தது. மாலை சூரியன் சுட்டெரித்து கொண்டிருந்தான். ஆனால், ரசிக பெருமக்கள் அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் போட்டியை காண ஆவலாக அங்கு கூடியிருந்தனர்.
இறுதிப் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.
சென்னை வீரர்கள் பீல்டிங் செய்ய மைதானத்திற்குள் இறங்கினார்கள். நந்தனா எப்போதும் போல லேப்டாப்பில் புதைந்து இருக்க, அவள் முன் வந்து கை நீட்டினான் நிரஞ்சன்.
முதலில் அதிர்ந்து, பின் புன்னகைத்து, அவன் கரம் பற்றினாள் அவள்.
“ஆல் த பெஸ்ட்” என்றவள், அவன் கேட்காமலேயே, “நோ பால் (No ball) போடாம இருக்கப் பாருங்க. முடிஞ்ச வரை அவொய்ட் பண்ணுங்க பிளீஸ்” என்று சொல்ல, நிரஞ்சனின் கண்கள் மகிழ்ச்சியில் மின்னியது.
“கண்டிப்பா நந்து” என்றான்.
ஆனால், அன்றைக்கு நிரஞ்சன் தவறுதலாக வீசிய நோ பாலை எதிர் அணியின் வில்லியம் சிக்ஸருக்கு பறக்க விட்டார். ஹைதராபாத் அணிக்கு ஃப்ரீ ஹிட்டாக (Free hit) ஆறு ரன்கள் இலவசமாக சேர்ந்திருந்தது.
அதை எதிர்பார்த்தது போல கண்களை மூடி பெரு மூச்சொன்றை வெளியிட்டு மீண்டும் ஆட்டத்தில் கவனத்தை பதித்தாள் நந்தனா.
அந்த சீசனின் தொடக்கத்தில் இருந்தே மிக நன்றாக ஆடிய ஹைதராபாத் அணி, இறுதி போட்டியில் தங்களின் பலம் மொத்தத்தையும் உள்ளே இறக்கி இருந்தது. ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் கூட, மறு பக்கம் அசராமல் அடித்து ஆடிக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.
இருபது ஓவர் முடிவில் ஆறு விக்கெட்களை இழந்து 179 ரன்களை குவித்திருந்தார்கள் அந்த அணியினர்.
சென்னை அணி 180 ரன்கள் அடித்து வெற்றி பெற வேண்டிய சூழலில் களத்தினுள் இறங்கியது.
“என்ன இப்படி நின்னுட்டு இருக்கீங்க? ரெடியாகலையா?” தனக்கு அருகில் நின்றிருந்த நிரஞ்சனை பார்த்து நந்தனா கேட்க, அவளை கண்களில் கேள்வியுடன் விசித்திரமாக பார்த்தான் அவன்.
அவன் ஆறாவதாக இறங்க வேண்டியவன். ‘நான் ஏன் இப்போதே தயாராக வேண்டும்?’ என்று அவன் யோசிக்க, அவனுக்கு பதில் சொல்லவில்லை நந்தனா.
சென்னையின் ஆட்டம் தொடங்கி இருக்க, அதைப் பார்க்க ஆரம்பித்தாள் அவள். நிரஞ்சன் சென்று உடை மற்றும் பேட்டிங் செய்ய தேவையான உபகரணங்கள் அணிந்து தனது பேட்டுடன் தயாராக வந்து நின்றான்.
ராஜ் மற்றும் ஆஸ்திரேலியா வீரர் ஷான் தொடக்க ஆட்டக் காரர்களாக மைதானத்தில் இறங்கினர். அந்தோ பரிதாபம், போன வேகத்தில் 11 ரன்களில் அவுட்டாகி திரும்பி வந்தான் ராஜ்.
சென்னை அணியும், அவர்களின் ரசிக கூட்டமும் பதட்டத்துடன் ஆட்டத்தை கண்டுக் கொண்டிருக்கையில் அடுத்து இறங்கிய சுகாஸும் 30 ரன்களில் வெளியில் வர, அனைவர் முகத்தில் அப்பட்டமாக பரவியது ஏமாற்றம்.
அடுத்து கேப்டன் இறங்கி வான வேடிக்கை காட்டுவார் என்ற அனைவரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி, ஆறாவது இறங்க வேண்டிய நிரஞ்சனை நாலாவதாக இறக்கியது சென்னை அணி. நந்தனாவின் கேள்வியில் இருந்தே அவன் இதை எதிர்பார்த்திருக்க, மிக இக்கட்டான சூழ்நிலையில் பதட்டத்தை வெளியில் காண்பித்துக் கொள்ளாமல் களம் இறங்கினான் நிரஞ்சன்.
அவன் மைதானத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கும் போதே, “யார்க்கர் பாலில் கவனம்” (Yorker ball) என்று அவனைப் பார்த்து வாயசைத்தாள் நந்தனா.
முதல் ஓவரிலயே யார்க்கர் பால் வீசப்பட, நூலிழையில் அவுட்டாகாமல், பேட்டால், பாலை தடுத்து, தப்பித்து நின்றான் நிரஞ்சன். அதன் தாக்கம் அந்த ஓவர் முழுவதும் அவனிடம் இருந்தது. மிகப் பதட்டமாக ஆடினான்.
ஆனால், அந்த ஓவர் முடிவில் தன்னை பெரிதும் சமாளித்து, அடுத்து அவன் ஆடியது முழுவதும் மிரட்டலான ஆட்டம்.
பந்தை கண்டபடி அடித்து சிதற விடாமல், மிக நேர்த்தியாக ஆடினான் அவன்.
அப்படியே நின்ற இடத்திலேயே பந்தை எதிர்க் கொண்டு நேராக நிரஞ்சன் அடித்த சிக்ஸ் (Straight six) எல்லாம் “டெக்ஸ்ட் புக் பர்பெக்ட் ஷாட்”.
அவனோடு இணைந்து ஷானும் 60 ரன்களுக்கு மேல் அடித்து எதிரணியை கதி கலங்க வைத்தார்.
சென்னை வெல்வதற்கு இன்னும் சொற்ப ரன்களே தேவையாக இருந்தது.
சென்னை அணியின் மஞ்சள் ரசிக கூட்டம் மொத்தமாக தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து நின்று விட்டது.
“சென்னை, சென்னை… நிரஞ்சன், நிரஞ்சன்…ஷான், ஷான்” என்று உற்சாக மிகுதியில் கோஷமிட்டு கொண்டிருந்தனர்.
“சென்னை நீட்ஸ் 3 ரன்ஸ்” என்று அறிவிப்பு பலகை காண்பிக்க, ஹைதராபாத்தின் சிவப்பு கூட்டம் இப்போதே சோகமாகி இருந்தது.
“அண்ட் தட்ஸ் அ ஃபோர்…”
18 வது ஒவரின் மூன்றாவது பந்தை, நிரஞ்சன் ஸ்டைலாக இறங்கி, ஃபோர் அடித்து சென்னை அணியை அந்த வருடத்தின் ஐபிஎல் சாம்பியன் ஆக்கியிருந்தான்.
ஆறு வருடங்களுக்கு பிறகு சென்னை அணி கோப்பையை கைப் பற்றி இருக்க, அந்த நொடியில் இருந்து வெற்றிக் கொண்டாட்டம் களை கட்டத் தொடங்கி இருந்தது.
“சென்னை, நிரஞ்சன், ஷான், சாம்பியன்ஸ்” என்று கூட்டம் கத்தி ஆர்ப்பரித்து, வான்கடே மைதானத்தை அதிர வைத்துக் கொண்டிருந்தது.
நந்தனாவின் முகத்தில் வெற்றிப் பெருமிதம் மின்ன, மலர்ந்து புன்னகைத்தாள் அவள். அவளது குழு ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்திக் கொண்டது.
சிவராஜிடம் சொல்லிக் கொண்டு, இறுதிப் போட்டியை காண வந்திருந்த தந்தையுடன் அங்கிருந்து அப்படியே கிளம்பி விட்டாள் நந்தனா. அதற்கு மேல் அவளுக்கு அங்கு என்ன வேலை இருக்கிறது?
அதை அறியாமல் அவளைத் தேடி கொண்டே இருந்தது நிரஞ்சனின் கண்கள்.
வெற்றிக்கான கோப்பையை கையில் ஏந்திய கணம், மனம் தானாக நந்தனாவிடம் தான் சென்று நின்றது. அவளிடம் வெற்றியை, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள விழைந்தது அவன் மனம்.
அவளோ, தந்தையுடன் அவனைப் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தாள்.
“உண்மை தான் நந்து. இப்போ உள்ள பசங்க அவ்ளோ ஷார்ப்பா இருக்காங்க. நிரஞ்சன் எப்பவும் துடிப்பான பிளேயர் தான். அவனுக்கு இன்னமும் பிரகாசமான எதிர்காலம் கிரிக்கெட்டில் இருக்கு.” எளிதில் யாரையும் பாராட்டாத தந்தையிடம் இருந்து நிரஞ்சனுக்காக வந்த வார்த்தைகளில் நந்தனாவிற்கு அப்படியொரு மகிழ்ச்சி.
அரை மணி நேரத்திற்கும் மேலாக அவனைப் பற்றியே அவர்கள் பேசிக் கொண்டு வர, மகளின் முகத்தை நன்றாக திரும்பிப் பார்த்து, “டோண்ட் ஃபால் ஃபார் ஹிம்”(Don’t fall for him) என்று தந்தையாக எச்சரித்தார் அவர்.
கிரிக்கெட்டை அவர் சொல்லிக் கொடுக்காமலேயே கற்றுக் கொண்டவள் அவள்.
எத்தனையோ கிரிக்கெட் வீரர்களை வியந்து, புகழ்ந்து மகள் பேசி பார்த்திருக்கிறார் அவர். ஆனால், கண்ணில் கனவுடன் அவள் பேசுவதை இப்போது காண்கிறார். ஒரு தந்தையாக, மகளின் அந்த மாற்றம் அவருக்கு பிடிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். அதனால் தான் முதலிலேயே எச்சரித்து விட்டார் அவர்.
நந்தனாவின் பேச்சு அப்படியே நின்று போனது.
நிரஞ்சனிடம் ஏற்கனவே விழுந்து விட்டாள் என்று எப்படி சொல்வாள் அவள்? அதற்கு தந்தையின் எதிர்வினை என்னவாக இருக்கும்? குழம்பிப் போய் கண் மூடி அமர்ந்து விட்டாள் அவள். கார் மும்பையின் தெருக்களில் வழுக்கிக் கொண்டு அவளின் வீடு நோக்கி விரைந்தது.
சென்னை அணியின் வெற்றிக் கொண்டாட்டங்கள் எதிலும் அவள் கலந்துக் கொள்ளவே இல்லை. இத்தனைக்கும் அவளுக்கும் அழைப்பு வந்திருந்தது.
தன்னை சந்திப்பதை தவிர்க்கவே அவள் வரவில்லை என்பதை புரிந்துக் கொண்ட நிரஞ்சனுக்கு அதை நம்புவது தான் கடினமாக இருந்தது.
சென்னை அணி கோப்பையை வென்றதற்கு வாழ்த்துகள் கூட தெரிவிக்கவில்லை அவள் என்பதில் அவனுக்கு அத்தனை வருத்தம்.
அவனது ஆட்டம் குறித்து விமர்சிப்பாள், பாராட்டுவாள் என்ற அவனின் கனவும், எதிர்பார்ப்பும் கானலாகி போனது.
ஒரு புன்னகை, சின்னதாய் விடை பெறுதல் கூட இல்லாமல் பிரிந்து போனவளை தொடர்பு கொள்ள அவன் எடுத்துக் கொண்ட எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிய, அவனுக்கு வருத்தமும், கோபமும் சரி விகிதத்தில் வந்தது.
நந்தனாவை மீண்டும் சந்திக்கும் நாளை எதிர்பார்த்த படி தன் விளையாட்டில் கவனம் செலுத்தினான் அவன்.
அவனை மறுத்து விட்டு மனதில் மறுகி கொண்டிருந்தாள் அவள். ஆனாலும், அவனை சந்திக்க முற்பட வில்லை அவள்.
இருவரும் அவரவர் பாதையில் பிரிந்து சென்றிருந்தார்கள்.