இந்திய அணி ஒரு தொடருக்காக தென் ஆப்பிரிக்கா சென்று, தொடரை கைப்பற்றி இந்தியா திரும்பி இருந்தது.
அங்கு நடந்த இறுதி நாள் போட்டியில், பந்தை பறந்து பிடிக்கப் போன நிரஞ்சன், கையில் பந்துடன் ஏடாகூடமாக தரையில் விழுந்திருந்தான். தோள் பட்டையில் பலத்த அடி. தொலைக் காட்சியில் அதைப் பார்த்துக் கொண்டிருந்த நந்தனாவிற்கு அதிகமாக வலித்தது.
மூன்று வாரங்களில் இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி ஆஸ்திரேலியா செல்வதாக இருந்தது. ஆனால், காயம் காரணமாக அந்தத் தொடரில் இருந்து நீக்கப்பட்டான் நிரஞ்சன். இது போன்று நடப்பது விளையாட்டில் சகஜம் என்பதால், நிரஞ்சன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஓய்வு அப்போது அவனுக்கு மிகவும் தேவையாக இருந்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டான் அவன்.
நந்தனா பாரிஸில் இருந்தாள். அங்கு சுகாஸுன் திருமணத்தில் கலந்து கொள்ள வந்திருந்தாள் அவள்.
உலகின் கேமரா கண்களில் சிக்கி விடாமல் இருக்க, இருவர் வாழ்வின் மிக முக்கியமான நாளை மன நிறைவுடன் கொண்டாட இந்தியாவில் திருமணத்தை வைக்காமல் மிக ரகசியமாக பாரிஸில் திருமணத்தை நடத்த முடிவு செய்திருந்தது மணமக்களின் குடும்பம். மிக நெருங்கிய சொந்தங்களும், நட்பும் மட்டுமே திருமணத்திற்கு அழைக்கப் பட்டிருந்தனர்.
சுகாஸ் தனது நீண்ட நாள் காதலியும், சிறு வயது தோழியுமான பிரியாவை ஆர்ப்பட்டமில்லாத அதே நேரம் அழகான பின்னணியில் கரம் பிடிக்க காத்திருந்தான்.
ஐந்து நாட்கள் நடந்த திருமண விழா அனைத்திலும் நந்தனா இருந்தாள். சுகாஸ் மட்டுமல்ல அவன் மணக்க இருந்த பிரியாவுமே நந்தனாவிற்கு நெருக்கமான தோழி தான். அவர்களின் திருமணத்தை தவிர்க்க விரும்பாமல் தன் வேலைகள் அனைத்தையும் ஒரங்கட்டி விட்டு அங்கு வந்திருந்தாள் அவள்.
மணமக்களின் குடும்ப வழக்கப் படி அன்றைய தினம் அவர்கள் தங்கியிருந்த ரிசார்ட்டின் உள்ளேயே சங்கீத் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
இரண்டு குடும்பங்களும் ஆட்டமும், பாட்டமுமாக இருக்க மணமக்கள் கூட விருந்தினர்களோடு இணைந்து ஆடிக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
அனைத்தையும் மென்மையான புன்னகையுடன் ரசித்துக் கொண்டு, ஓரமாக நின்றிருந்த நந்தனாவை அவர்களோடு இழுத்து ஆடத் தொடங்கினாள் கேப்டனின் மனைவி. அங்கு ஓடி வந்து இணைந்து கொண்டாள் மணப்பெண் பிரியா. ஒருவரை ஒருவர் சுற்றி விட்டு சுழன்று ஆடிக் கொண்டிருந்தனர். பாலிவுட்டின் அதிரடி பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது, பிரியா அவளை கைப் பிடித்து சுற்றி விட, அவளிடம் இருந்து அப்படியே மாறி சுகாஸின் கரங்களில் வந்து சேர்ந்திருந்தாள் நந்தனா.
சுகாஸ் அவளை சத்தமான சிரிப்புடன் மீண்டும் சுழற்றி விட, “வேண்டாம் சுகாஸ், பிளீஸ்” என்று அலறியவளின் கால்கள் தனது சமநிலையை இழக்கத் தொடங்கி இருந்தது.
அவள் அணிந்திருந்த சேலை காலில் சுற்ற, “கடவுளே…” என்று ஒற்றைக் காலில் அதிவேகமாக சுழன்று தடுமாறியவளை இடுப்பில் கரம் கோர்த்து மென்மையாக நிறுத்தியது முரட்டு கரங்கள்.
நடன வேகத்தில் அந்த உருவத்தின் மீது அதிவேகமாக மோதி நின்றாள் நந்தனா. அவளின் கைகள் பிடிமானத்திற்காக அனிச்சையாய் அவன் தோளிலும், மார்பிலும் பதிந்தது. மெல்ல நிமிர்ந்து அந்த முகத்தைப் பார்த்தாள். அலை அலையாய் கேசம் காற்றில் அலைபாய, கண்களில் சிரிப்பும், உதட்டில் இறுக்கமுமாக நின்றிருந்தான் நிரஞ்சன்.
அவர்களை சுற்றி அனைவரும் நடனமாடிக் கொண்டிருக்க, இருவரின் உலகம் மட்டும் சுற்றுவதை நிறுத்தியிருந்தது.
“ஹாய்… ரஞ்சன்..” என்றாள் மூச்சு வாங்க.
அவளின் சேலை தொடாத வெற்றிடையில் அழுத்தமாக கரம் பதித்து, அவளை பார்த்தது பார்த்தபடி நின்றான் நிரஞ்சன். அவள் முகத்தில் இருந்து நகர மறுத்தது அவன் கண்கள்.
“கை வலி எப்படி இருக்கு?” கேள்வியை அவன் காதில் தான் அவள் கேட்க வேண்டியிருந்தது. அவன் தோளில் பதிந்திருந்த தன் கரத்தை விலக்கப் பார்த்தாள் நந்தனா, விடவில்லை அவன்.
“நிரஞ்சன்…” அவள் அழுத்தமாய் அழைக்க, கேள்வியுடன் ஒற்றைப் புருவம் உயர்த்தினான் அவன்.
அவள் பதட்டமாய் உதடு கடிக்க, பார்வையை அதில் பதித்த நிரஞ்சன், மிக நிதானமாக அந்தக் கேள்வியை கேட்டான்.
“நாம கந்தர்வ மணம் பண்ணிக்கலாமா நந்தனா?” அவன் கேட்ட நொடி நந்தனாவின் விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் பட்டென விரிந்துக் கொண்டது.
வார்த்தைகளை விட்டு விடாமல் இருக்க உதட்டை கடித்து உள்ளிழுத்துக் கொண்டாள் அவள்.
“இவங்க பாரம்பரியம், பண்பாடு, பழக்க வழக்கத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறாங்க பார்த்தியா? அஞ்சு நாள், பத்து நாள்னு ஒரு கல்யாணத்தை திருவிழா போல கொண்டாடுறாங்க. நம்ம பக்கம் கூட இன்னமும் இது போல பண்றாங்க தான். அதான் நானும்…” என்றவன், ஒரு உச் கொட்டலுடன் பேச்சை நிறுத்திக் கொண்டான்.
நந்தனாவிற்கு அவனது மன நிலையும், கோபமும் புரிந்தது.
அவள் மனம் தானாக பின்னோக்கி சென்றிருந்தது.
நந்தனா அப்போது வேலை விஷயமாக ஆஸ்திரேலியா சென்றிருந்தாள்.
அம்மாவிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு வர யதார்த்தமாக எடுத்து, “நான் சாப்பிட்டேன் மா. நீங்க சாப்பிட்டீங்களா?” என்று அவள் ஆரம்பிக்க,
“அப்பா ரொம்ப கோபமா இருக்கார் நந்து. அவர் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்திருக்கலாம் நீ. உன் ஆசையை அவர் என்னைக்கு தடுத்திருக்கார், சொல்லு? அம்மா கிட்டயாவது சொல்லி இருக்கலாம் இல்ல? நானாவது சமாளிச்சு இருப்பேன்” அவர் பேசிக் கொண்டே போக, நந்தனாவிற்கு தலையும் புரியவில்லை, வாலும் தெரியவில்லை.
“அம்மா, என்னம்மா சொல்றீங்க? அப்பா ஏன் கோபமா இருக்கார்? நான் என்ன…”
“அது.. உன்னை பொண்ணு கேட்டு மாப்பிள்ளை வீட்ல இருந்து வந்திருக்காங்க. மாப்பிள்ளை, அவரும் வந்திருக்கார்”
“ம்மா, நிரஞ்சன் வந்திருக்காரா?” என்று வேகமாக கேட்க,
“அப்போ உனக்கு தெரியுமா?” என்று கிடுக்கி பிடி போட்டார் அவர்.
“கெஸ் பண்ணேன் மா. சரி. அதை விடு, அப்பா என்ன சொன்னார்?”
“அவங்க கிட்ட பேசிட்டு இருக்கார் நந்து. ஆனா, அவங்களை பார்த்ததும் அப்பா முகமே சரியில்ல. அவருக்கு பிடிக்கல போல. நீயும் மாப்பிள்ளையும் விரும்பறீங்களா?” அப்பாவியாக கேட்ட அம்மாவை அந்நொடி அணைத்து கொள்ள முடியாததற்கு அப்படி வருந்தினாள் நந்தனா.
அவளால், “ஆம்” என்றும் சொல்ல முடியவில்லை. அதே நேரம் முழு மனதாக, “இல்லை” என்று மறுக்கவும் முடியவில்லை.
“ம்மா, அது வந்து..” என்று அவள் இழுக்க,
“அப்பா என்ன பேசறார்னு நான் போய் பார்க்கறேன். உனக்கு அப்புறம் கால் பண்ணி சொல்றேன் என்ன நந்து?” என்றவர், மேலே அவள் பேச இடம் கொடுக்காமல் அழைப்பை துண்டித்திருந்தார்.
அம்மாவை மீண்டும் அழைக்க துடித்த கரங்களை கட்டுப் படுத்திக் கொண்டு அலைபேசியை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் அவள்.
அன்று இரவு வரை அவளுக்கு வீட்டில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. அப்பாவும் அழைக்கவில்லை. நிரஞ்சனும் அழைக்கவில்லை. இரண்டு ஆண்கள் மேலும் அவளுக்கு அப்படியொரு கோபம் வந்தது.
என்ன நடந்தது என்று தெரியாமல் அவளுக்கு மண்டை வெடிக்கும் போலிருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் காத்திருக்க முடியாமல் அம்மாவை அழைத்து விட்டாள் அவள்.
“வேலையை முடிச்சுட்டு வா நந்து. நேர்ல பேசிக்கலாம்” என்றவரின் குரலில் சுரத்தே இல்லை.
“என்னாச்சு மா? அப்பா..”
“ப்ச், ரெண்டு நாள்ல வீட்டுக்கு வந்திடுவ தானே? அப்போ சொல்றேன். இப்போ எதையும் கேட்காத” என்றவர், அவளின் உடல் நலம், உணவு குறித்து பேச ஆரம்பிக்க, அமைதியாக அவருக்கு பதில் கொடுக்க ஆரம்பித்தாள் அவள்.
அப்பாவை அழைத்தாள். உலக கதை, கிரிக்கெட் கதை பேசினாரே ஒழிய, நிரஞ்சனை பற்றி பேச அவர் தயாராகவே இல்லை. அவள் பேச முயன்றாலும் வெகு சாமர்த்தியமாக அந்த பேச்சை தவிர்த்தார் அவர்.
மூன்றாம் நாள் இந்தியா திரும்பிய நந்தனாவிற்கு அவள் எதிர்பார்த்த அதிர்ச்சி காத்திருந்தது.
நிரஞ்சன் குடும்பத்திடம் அவனுக்கு நந்தனாவை கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து இருந்தார் கார்த்திகேயன்.
நிரஞ்சனின் செய்கையையும் அவள் எதிர்பார்த்திருக்க வில்லை. தந்தையின் மறுப்பையும் ஜீரணிக்க முடியவில்லை. அதே நேரம் அவரின் விருப்பத்தை மீறவும் மனமின்றி அந்நிகழ்வை கனவென கடந்து விட்டாள் அவள். அப்படி கடக்க முடியாமல் வலிக்கத் தான் செய்தது.
அந்த வலியையும், கனவையும் நிஜமென நிரூபித்துக் கொண்டிருந்தான் அவள் முன் அழுத்தமாய் நின்றிருந்த நிரஞ்சன்.
“என்னை, உனக்கு ரொம்ப பிடிக்கும்னு எனக்கு நல்லாத் தெரியும் நந்தனா. நான் முறையா தானே வந்து பொண்ணு கேட்டேன். ஏன் முடியாது சொன்னீங்க? முறைகள்ல நம்பிக்கை இல்லையா? சொல்லு, கந்தர்வ மணம் பண்ணிக்கலாம். இங்கேயே, இப்பவே”
விழிகள் இரண்டும் கலந்திருக்க, “நமக்குள்ள கல்யாணம் சரி வராது நிரஞ்சன்” என்றாள் நந்தனா.
“அப்போ காதல்?”
“காதலின் முடிவு?”
“காதலுக்கு முடிவே இல்ல நந்து. அது அழியாதது” என்றான் அழுத்தமாக. அவளுக்கு சிரிப்பு வந்தது.
“ப்ச், வசனம் பேசாதீங்க. நீங்களும், நானும் கிரிக்கெட்டில் இருக்கற வரை நமக்குள்ள கல்யாணம் சாத்தியமே இல்ல ரஞ்சன்” அவள் பேச பேச அவன் உடல் இறுகுவதை அவளால் நன்றாக உணர முடிந்தது. இருவரும் அணைத்த நிலையில் தான் அதுவரை நின்றிருந்தனர். அவள் விலக முயன்றாலும், விடவில்லை அவன்.
“உங்க அப்பாவும் இதையே தான் சொன்னார். ஏன்…” அவனை மேலே பேச விடாமல் இடை வெட்டினாள் நந்தனா.
“அது என் முடிவு. அதை தான் அப்பா உங்ககிட்ட சொன்னார்.” கோபத்தில் பற்றியிருந்த அவளின் இடையை விரல் பதிய அழுத்திப் பிடித்தான் நிரஞ்சன்.
அவனை தன் முழு பலத்துடன் தன்னிடம் இருந்து பிரித்து விட்டு, வேகமாக அங்கிருந்து வெளியேறி இருந்தாள் அவள். பிரிந்து செல்பவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் நிரஞ்சன்.
மறுநாள் திருமண நிகழ்வில் இருவரும் பார்த்துக் கொண்டாலும், பேசிக் கொள்ளவில்லை.
“என்ன நடக்குது டார்லிங்?” என்று சுகாஸ் அவளிடம் நிரஞ்சனை கண் காட்டிக் கேட்க, “உன் கல்யாணம் நடக்குது. அதுக்கு அவரும் வந்திருக்கார். நானும் வந்திருக்கேன்” என்று உதடு சுழித்து சொல்லி விட்டு கடந்து போனாள் அவள். கண் சிமிட்டி புன்னகைத்தான் அவன்.
சுகாஸ் வேண்டுமென்றே அவளுக்காக நிரஞ்சனை திருமணத்திற்கு அழைத்திருக்கிறான் என்பது புரிந்தும் அவளால் ஒன்றும் செய்ய முடியா நிலை.
சென்னை அணியில் கேப்டன் மற்றும் நிரஞ்சனை மட்டுமே திருமணத்திற்கு அழைத்திருந்தான் அவன். இத்தனைக்கும் நிரஞ்சனும், சுகாஸும் அப்படியொன்றும் நெருக்கமும் கிடையாது. அவனை முறைத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள் அவள்.
திருமணம் சிறப்பாக நடந்து முடிந்திருந்தது. இரவு கொண்டாட்டங்களில் சிறிது நேரம் இருந்து விட்டு அறைக்கு திரும்பி விட்டாள் அவள்.
அப்போது தான் ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்தவளை கலைத்தது அறைக் கதவு தட்டப்படும் சத்தம் கூடவே காலிங் பெல்லின் தொடர்ந்த அலறல்.
அந்த குரலில் அவளின் உறக்கம் நொடியில் கலைந்து போக, படக்கென்று படுக்கையில் எழுந்து அமர்ந்தாள்.
“நந்து..”
இரவு உடையுடன் போய் கதவை திறக்க, பாதி உறக்கத்தில் எழுந்து வந்தது போல சிவந்த விழிகளும், கலைந்த தலையும், ஆடையுமாக அங்கு நின்றிருந்தான் நிரஞ்சன்.
கண்களில் கேள்வியுடன் நின்றவளின், கைப் பிடித்து அறைக்குள் நுழைந்து கதவை மூடினான்.
“நிரஞ்சன்…” என்றாள் அதிர்ந்து.
பின்னே கந்தர்வ மணம் குறித்து பேசி விட்டு, அர்த்த ராத்திரியில் அறைக்குள் வந்தால், அவளும் தான் என்ன நினைப்பாள்?
“ரஞ்சன், என்னப் பண்றீங்க? வெளில…”
அவனது அலைபேசியை அவளது முகத்துக்கு நேராக நீட்டினான் நிரஞ்சன்.
நந்தனாவின் கண்கள் கண்ட காட்சியில் உதடுகள் தானாக மூடிக் கொண்டது.
அவளை மென்மையாய் இழுத்து படுக்கையில் அமர வைத்தான் நிரஞ்சன்.
“நந்து.. நான் பார்த்துக்கறேன்.” என்றவனை கண்களால் எரித்தாள் நந்தனா.
அவர்கள் இருவரும் ஓரிரவில் தலைப்பு செய்தியாகி இருந்தனர்.
சுகாஸின் திருமண புகைப்படங்களோடு சேர்த்து, அவர்கள் இருவரும் அணைத்த படி நிற்கும் புகைப்படமும், இணையம் முழுக்க “வைரலாகி” இருந்தது.
“அதிரடி ஆட்டக்காரர்கள் இருவருக்கும் அடுத்தடுத்து திருமணமா?”
“இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சுகாஸின் திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு. இந்திய அணியின் நட்சத்திர வீரர் நிரஞ்சன் தன் காதலியுடன் கலந்து கொண்டுள்ளார். புகைப்படங்கள் இதோ”
“நிரஞ்சன் கிருஷ்ணகுமாரை மணக்க இருக்கும் நந்தனா கார்த்திகேயன்.”
செய்திகள் ஒவ்வொன்றாக மாற்றி மாற்றி ஒலிக்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அப்படியே அமர்ந்திருந்தனர்.