“என்னடா தம்பி பண்ணிட்டு வந்திருக்க? இது உனக்கே நல்லா இருக்கா?”
அங்கலாய்த்தார் கிருஷ்ணகுமார். தந்தையின் கேள்விக்கு பதில் சொல்லாமல் தன் முன்னிருந்த பிரியாணியை ரசித்து உண்பதில் கவனம் செலுத்தினான் நிரஞ்சன்.
“ஏன்பா, இங்க நின்னுட்டு சாப்பிட்டுட்டு இருக்க. ஒழுங்கா ஒரு டேபிள்ல போய் உட்கார்ந்து சாப்பிட்டா என்ன? நீ பண்ற எதுவும் சரியில்ல”
மதிய உணவை ஹோட்டலின் கிட்சனில் நின்று உண்டுக் கொண்டிருந்தான் நிரஞ்சன். சுவரில் சாய்ந்து நின்று கையில் தட்டை ஏந்திக் கொண்டு, உண்டவனைப் பார்க்க பெற்றவருக்கு தாளவில்லை.
ஆனால், அவனோ,
“ஆமா ப்பா, நான் பண்ற எதுவுமே சரியில்ல தான். என்னப் பண்ண சொல்றீங்க? வெளில போய் உட்கார்ந்து சாப்பிட்டா, கஸ்டமர் எல்லாம் என்னை சுத்தி தான் நிப்பாங்க. அப்புறம் அதுக்கும் கத்துவீங்க.” என்றவன்,
“வேற என்ன பண்ணிட்டேன்னு இப்போ கோபமா இருக்கீங்க?” வாயில் பிரியாணியை திணித்த படியே அவன் கேட்க,
“சுகாஸ் கல்யாணத்துக்கு நீ போய் இருக்க வேண்டாம். அங்க, மருமக..”
சட்டென நிரஞ்சன் அவரை முறைக்க,
“என்னை ஏன்டா முறைக்கற? அந்த பொண்ணை தனியா விட்டுட்டு வந்துட்ட நீ, மும்பையில் இருக்காங்க வேற. மீடியா தொல்லை அதிகமா இருக்கும். எப்படி தனியா கேள்வியை சமாளிக்கும் மருமக?”
“முதல்ல மருமக, மருமகன்னு சொல்றதை நிறுத்துங்க ப்பா. அவளை பத்திரமா மும்பையில் விட்டுட்டு தான், நான் சென்னை ப்ளைட் ஏறினேன். அவ, அவங்க அப்பா கூட போய்ட்டா.” என்று கோபமாக ஆரம்பித்தவன்,
“அவ, அவ என்னை.. கல்யாணம் பண்ணிக்க முடியாது சொல்லிட்டா ப்பா” என்று குரல் உடைய சொல்ல,
“ஆமா. இப்ப தான் சொன்னாங்க பாரு. அதான், அவங்க அப்பா தெளிவா அன்னைக்கே சொல்லிட்டாரே” என்று அவர் முணுமுணுக்க, தந்தையை முறைத்து விட்டு,
“ரமேஷ் ண்ணா, கொஞ்சமா சோறும், மீன் குழம்பும் தாங்க ண்ணா” என்று நிரஞ்சன், கிட்சனிற்குள் தலை நீட்டி கத்த,
“அது வயிறா இல்ல வேற..” மகனின் முறைப்பில் தான் சொல்ல வந்ததை முடிக்கவில்லை கிருஷ்ணகுமார்.
“இருங்க ப்பா. அம்மாக்கு கால் பண்றேன். இப்போ நீங்க சொன்னதை அப்படியே சொல்றேன். பிள்ளை சாப்பிடுறதை பார்த்து கண்ணு வைக்கறீங்கன்னு உங்களை நல்லா கவனிப்பாங்க”
அவனுக்கு பக்கத்தில் காலியான மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, சிக்கன் பெப்பர் ஃப்ரை தட்டுகள் இருக்க, மேலும் சோறும், குழம்பும் கேட்கும் மகனை கரிசனத்துடன் பார்த்தார் அந்த தந்தை.
மன அழுத்தம் அவனை இப்படி உண்ண வைக்கிறது என்பது அவருக்கு புரிந்தது.
“வீட்ல உங்கம்மா உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கா தம்பி. நீ இங்க உட்கார்ந்து சோறையே பார்க்காதவன் மாதிரி சாப்பிட்டுட்டு இருக்க. மருமக வீட்ல இன்னொரு முறை பேசிப் பார்ப்போமா தம்பி?” அந்த கேள்வியில் சாப்பிடுவதை நிறுத்திய நிரஞ்சன், பட்டென்று தட்டை மேடையில் வைக்க,
“இல்லப்பா, நான் வேணும்னா மருமக கிட்ட நேரா பேசி பார்க்கவா?”
அமைதியாய் சென்று கையை கழுவி விட்டு வந்தான் நிரஞ்சன்.
“இந்த மாதிரி ஒரு ஃபோட்டோ வர்ற அளவுக்கு.. தப்பு தம்பி. உனக்கு ஒன்னுமில்ல. நந்தனா..”
“அந்த பேரை சொல்லாதீங்க ப்பா. வேணாம். நீங்க எதுவும் பண்ண வேணாம். எனக்காக யாரும், எதுவும் பண்ண வேணாம்” தந்தையின் முகம் பார்க்காமல் சொன்னவன்,
“நான் பண்ணது தப்பு தான். சுகாஸ் கல்யாணத்துக்கு நான் போய் இருக்கக் கூடாது. சாரி ப்பா.” என்று சொல்ல, மகனின் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு அங்கிருந்து அகன்றார் கிருஷ்ணகுமார்.
“நீ சின்ன பையன் இல்ல நிரஞ்சன். உனக்கு எல்லாம் தெரியும். ஆனாலும், சரியான முடிவை எடு. இது உன் வாழ்க்கை” என்று அவர் சொல்லி விட்டு செல்ல, அவனது தொண்டைக் குழி அவஸ்தையாய் ஏறி இறங்கியது.
உணவின் கலவையான மணங்கள், அவன் மனதின் கலவையான உணர்வுகளை ஒத்திருக்க, சூனியத்தை வெறித்தபடி அங்கேயே நின்றிந்தான் நிரஞ்சன்.
“அம்மா, அவங்க வீட்டுக்கு போய் பேசி பார்க்கலாம்னு சொல்றா தம்பி” சென்னையில் கிருஷ்ணகுமார் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்த அதே கேள்வியை தான், மும்பையிலும் கேட்டுக் கொண்டிருந்தார் கார்த்திகேயன்.
“அவங்க வீட்டுக்கு போய் பேசவா நந்து?” உணவை சுவாரசியமின்றி உண்டு கொண்டிருந்த மகளிடம் கார்த்திகேயன் கேட்க, மகளை முந்திக் கொண்டு பதில் சொன்னார் பூர்ணிமா.
“ஓ, இப்போ அவங்க வீட்டுக்கு போக போறீங்களா? உங்களுக்கு தேவை வரும் போது… போங்க, போங்க. உங்களுக்காக தான் ஆரத்தி தட்டோட வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க” என்று அவர் நக்கலாக சொல்ல, மனைவியை முறைத்தார் கார்த்திகேயன்.
“பின்ன என்னங்க? வீடு தேடி வந்தவங்களை என்னெல்லாம் கேள்வி கேட்டீங்க நீங்க? பொண்ணு கொடுக்க முடியாதுன்னு அவ்ளோ கறாரா சொல்லி அனுப்பிட்டு, இப்போ போய் அவங்க வீட்டு வாசல்ல நிப்பீங்களா? உங்களுக்கு காரியம் ஆகணும்னா போய் கால்ல விழுறேன்னு சொல்றீங்க. இதை அன்னைக்கு அவங்களை அவமானப் படுத்தி அனுப்பும் முன்ன யோசிச்சு இருக்கணும்”
“பூரணி..”
“என்ன பூரணி? உங்க மிரட்டலுக்கு எல்லாம் நான் ஆள் இல்ல.” என்று கணவரை பார்த்து அசட்டையாய் சொன்னவர், மகளின் தட்டில் கொஞ்சம் சாதம் வைத்து, தயிர் ஊற்றி, சேனை கிழங்கு வறுவலை வைத்தார்.
இன்னும் குழம்பு சோற்றையே உண்டு முடிக்காமல் பிசைந்துக் கொண்டிருந்தாள் நந்தனா.
“விடு, விடு. எத்தனை தடவை அதையே சொல்லுவ.” என்று மகளின் தலைக் கோதிக் கொடுத்தவர்,
“அந்த ஃபோட்டோவை நெட்ல இருந்து எடுக்க சொல்லி இருக்கலாம் இல்ல நந்து” என்று கேட்க, மௌனமாய் ஒரு நொடி தட்டை வெறித்தாள் நந்தனா.
“அந்த ஃபோட்டோவை ஏன் மா எடுக்கணும்? நான் என்ன தப்பு பண்ணிட்டேன்? அப்படி அதுல என்ன தப்பா இருக்கு? பார்க்கட்டுமே. உலகம் பார்க்கட்டுமே ம்மா. யாருக்கோ பயந்து, யாரோ தப்பா பேசுவாங்கன்னு பயந்து, நான் தப்பு பண்ணினதா ஏன் பயப்படணும் ம்மா?”
“உங்களுக்கு என்னைப் பத்தி நல்லா தெரியும், என் பிரெண்ட்ஸ், எனக்கு நெருக்கமானவங்க எல்லோருக்கும் என்னைப் பத்தி தெரியும் மா. வேற யாருக்கு நான் என்னை நிரூபிக்கணும்? வேலை வெட்டி இல்லாம, எங்கேயோ ஜாலியா உட்கார்ந்துட்டு, மொபைல்ல காஸிப் படிக்கிற யாருக்கோ நான் ஏன் பயப்படணும் மா? அவங்க என்ன நினைச்சாலும் எனக்கு கவலையில்லை”
“அவங்களுக்கு பயந்து, இந்த ஃபோட்டோவை ரிமூவ் பண்ணுங்கன்னு நாலு பேரை வேலைக்கு உட்கார வச்சா, அவங்க என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க மா?”
“இதெல்லாம் வக்கனையா பேசு. ஆனா, நான் கேட்கற கேள்விக்கு மட்டும் பதிலே சொல்லாத, என்ன? ஊர், உலகத்தை விடு. அது என்னமோ பேசிட்டு போகட்டும். அதுக்கு பயந்தா வீட்டை விட்டு வெளில போகவே முடியாது.” என்றவர்,
“மாப்பிள்ளையை ஏன் வேணாம் சொல்ற? உங்கப்பா ஏன் வேணாம் சொல்றார். நீயும் அவரை விரும்பும் போது..”
“ம்மா, அப்படியெல்லாம் ஒன்னும்…”
“இல்லன்னு சொல்லப் போறியா? எப்போல இருந்து பொய் சொல்ல கத்துக்கிட்ட நந்து? அதுவும் அம்மா கிட்ட?” பூர்ணிமா குரலை உயர்த்த, மனைவியின் அருகில் சென்று அமர்ந்தார் கார்த்திகேயன்.
நந்தனாவின் தலை தானாக தட்டை நோக்கி குனிந்தது.
“நான் நந்துவை வார்ன் பண்ணினேன் பூரணி. நிரஞ்சன் கிட்ட இருந்து விலகி இருக்க சொன்னேன். இந்த பொண்ணு கேட்டா தானே” மனைவியின் கரம் பற்றி கிசுகிசுத்தார் கார்த்திகேயன்.
அவ்வளவு தான், கண்ணை விரித்து கணவரை கொடூரமாக முறைத்த பூர்ணிமா,
“பேசாதீங்க, சொல்லிட்டேன். மாப்பிள்ளை, இவளைப் போலவே கிரிக்கெட்டில் இருக்கார். தமிழ் பையன், அவ்வளவு நல்ல குடும்பம். எவ்வளவு முறையா வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்டாங்க. குணமா, தன்மையா பேசினவங்களை விரட்டி விட்டுட்டு இப்போ அவங்க வீட்ல போய் பேசவா கேட்கறீங்களே? உங்களுக்கே ஓவரா தெரியல. ஆனா, ஒன்னு மட்டும் சொல்லிக்கறேன். நல்லா கேட்டுக்கோங்க. எவனாவது ஹிந்தி, மராத்தி, சிந்தி பேசறவனை மருமகன்னு கூட்டிட்டு வந்தீங்க. நான் பத்ரகாளி ஆயிடுவேன், சொல்லிட்டேன்”
“உங்க பொண்ணு பார்க்கற வேலைக்கு முதல்ல எவன் பொண்ணு எடுப்பான். என்ன கிரிக்கெட் வேலையா? டீம் கூடவே அலையணுமான்னு தான் முதல்ல கேட்பானுங்க. இதுல தங்கமா ஒருத்தன் வந்தா, அவனை அசிங்கப் படுத்தி…”
“அம்மா.. அவரை யாரும் அசிங்கப் படுத்தல” நந்தனா பட்டென்று சொல்ல,
“அப்படியா, நந்து? உனக்கு தெரியுமா? அன்னைக்கு வீட்டுக்கு வந்தவர் கிட்ட உங்கப்பா என்ன கேள்வி கேட்டார்னு உனக்கு தெரியுமா? உங்கப்பாவை கேளேன். அவர் பண்ண காரியத்தை பத்தி பெருமையா சொல்வார்” பூர்ணிமா கோபமாக சொல்ல, அப்பாவை திரும்பி பார்த்தாள் நந்தனா. மகளின் பார்வையை எதிர்கொண்ட கார்த்திகேயன் எதுவும் பேசவில்லை.
“நாளைக்கே கிரிக்கெட்டை விட்டா என்ன பண்ணுவீங்க நிரஞ்சன்னு கேட்டார்? மாப்பிள்ளை முகம் போன போக்கை நீ பார்த்து இருக்கணும். பையன் ஷாக்காகி, அப்படியே கண்ணை கூட அசைக்காம பார்த்துட்டே இருந்தார். ஆனாலும், அவ்வளவு பொறுமையா உங்கப்பாக்கு பதில் சொன்னார். தெரியுமா?”
“அப்பாக்கு சொந்தமா ஹோட்டல் இருக்கு சார், ஸ்கூல் படிக்கும் போதிருந்தே நான் அங்க தான் எப்பவும் இருப்பேன். காலேஜ் முடிக்கும் முன்னாடியே, தொழில் அப்பாகிட்ட கத்துக்கிட்டேன் சார். கிரிக்கெட் மேட்ச் இல்லாத நேரம் ஹோட்டல்ல தான் இருப்பேன். ஒருவேளை கிரிக்கெட் இல்லாம போனாலும் அங்க தான் இருப்பேன். என் கிரிக்கெட் கனவே அங்க இருந்து தான் சார் ஆரம்பிச்சது. அப்பா கஸ்டமருக்காக வச்சிருந்த டிவியில கிரிக்கெட் பார்த்து அதுக்குள்ள வந்தவன் சார் நான். கிரிக்கெட் இல்லனாலும், எங்கப்பவோட ஹோட்டல் சோறு போடும் சார் எனக்கு.”
“நானும் இப்போ சொந்தமா ரெண்டு ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சு சக்சஸ் புல்லா நடத்திட்டு இருக்கேன். என் குடும்பத்தை என்னால காப்பாத்த முடியும் சார்.”
நிரஞ்சன் சொன்னதை பூர்ணிமா சொல்ல, நந்தனாவிற்கு அதற்கு மேல் ஒரு வாய் சோறு கூட உள்ளிறங்கும் என்று தோன்றவில்லை.
உணவுடன் தட்டை நகர்த்தி வைத்து விட்டு அப்பாவை, ‘ஏன் ப்பா’ என்ற கேள்வியுடன் பார்த்தாள் அவள். காரணம் தெரிந்தும் கேட்கப் படும் கேள்வி. அவரும் பதில் சொல்லவில்லை.
“என்ன பார்வை ரெண்டு பேருக்கும்? அப்பாவும், பொண்ணும் மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்கீங்க? பதில் சொல்லுங்க. இப்போ ஒழுங்கா மாப்பிள்ளையை வீட்டுக்கு கூப்பிட்டு பேச போறீங்களா இல்லையா?”
பூர்ணிமா சத்தமாக கேட்க, மற்ற இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“பூரணி, கொஞ்ச நாள் ஆகட்டும். நாமளே நந்துக்கு வேற நல்ல பையனா பார்ப்போம்”
“ஏன், ஏன்? அந்த நிரஞ்சனுக்கு என்ன குறை? கிரிக்கெட்ல தானே இருக்கார். இவளை நல்லா பார்த்து…”
“அதான் பிரச்சினையே பூரணி. அவரும் கிரிக்கெட்ல இருக்கார். இது சரி வராது. உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது?” என்று கத்திய கார்த்திகேயன், “என் பொண்ணு என்னைக்குமே அனலிஸ்ட் நந்தனாவா தான் இந்த உலகத்துக்கு தெரியணும். நிரஞ்சன் மனைவி நந்தனாவா இல்ல” என்று சொல்லி முடிக்கும் முன்,
“ஓஹோ..” என்றார் பூர்ணிமா கோபமாக,
“பொண்டாட்டிக்கு ஒரு நியாயம். மகளுக்கு ஒரு நியாயமா? அதென்ன நான் மட்டும் இத்தனை வருஷமா கார்த்திகேயன் பொண்டாட்டி பூர்ணிமாவா தான் இருக்கேன். அதுல உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா, மகளுக்குன்னு வரும் போது ரூல்ஸ் எல்லாம் தலைகீழா மாறுது” அவர் கையைக் கட்டிக் கொண்டு கேட்க, நந்தனா வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, எழுந்து போய் கை கழுவி வந்தாள்.
“நானா உன்னை வேலைக்கு போக வேணாம் சொன்னேன் பூரணி. நீயே தான்..”
“ஹான்.. எப்பவும் இதை மட்டும் சரியா சொல்லி சமாளிச்சிடுங்க. ஓவியம் போல ஒரு பொண்ணை பெத்து, அவளை ரசிச்சு என் ஆசைக்கு வளர்க்க முடிஞ்சுதா என்னால? எப்பவும் உங்க ராஜியம் தான்.” பூர்ணிமாக்கு கண்கள் கலங்கியது.
“நந்து குழந்தையில் இருந்தே அப்பா, அப்பானு உங்க பின்னாடி தான் திரிஞ்சா, பொம்பளை பிள்ளைக்கு விளையாட பார்பி டால் வாங்கி கொடுக்காம, கிரிக்கெட் பேட், பால் வாங்கி கொடுத்தீங்க. வீட்டுக்குள்ள ரெண்டு பேரும் சேர்ந்து கிரிக்கெட் ஆடி எத்தனை பொருளை உடைச்சு இருப்பீங்க. உங்க கூட உட்கார்ந்து அவளும் எந்நேரமும் கிரிக்கெட் பார்த்துட்டே இருந்தா. இந்த வீடு கிரிக்கெட் சத்தம் இல்லாம ஒரு நாளாவது அமைதியா இருந்து இருக்குமா? நீங்க வீட்ல இருந்தாலும், இல்லனாலும் வீட்ல கிரிக்கெட் தான் ஓடிட்டு இருந்தது.
கடைசில என்னாச்சு? பத்து வயசுல ஷர்மா பவுலிங்கையும், சச்சின் பேட்டிங்கையும் பத்தி பேசினா உங்க பொண்ணு. அன்னைக்கு அவளை உச்சி முகர்ந்தீங்க. அவளுக்கு பிடிச்ச விஷயத்துல உங்களை இன்னும் இம்ப்ரஸ் பண்ண, படிப்பை விட கிரிக்கெட்டை தான் அதிகம் படிச்சா அவ. தெரு பசங்க கூட போய் கிரிக்கெட் ஆடினதில தொடங்கி, உங்க ஸ்டூடண்ட்ஸ் கூட கிரிக்கெட் ஆடுறதுன்னு போய், கடைசியா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் படிச்சு, சிவராஜ் அண்ணா இன்ஸ்டியூட்ல அனலிஸ்ட் கோர்ஸ் முடிச்சு, ட்ரைனிங் எடுத்து.. இங்க வந்து நிக்கிறா.. அதுல எனக்கு சந்தோசம் தான், பெருமை தான். அதுனால தான், நான் உங்க ரெண்டு பேருக்கும் இடைல என்னைக்கும் வந்ததே கிடையாது”
“ஆனா, ஒரு சாதாரண அம்மாவா எனக்கும் என் பொண்ணை கல்யாணம், குழந்தை, குடும்பம்னு பார்க்க ஆசை இருக்காதாங்க? சொல்லுங்க. உங்களுக்கு மகன் இல்லைனு மகளை நீங்க உங்க ஆசைக்கு கிரிக்கெட் குள்ள இழுத்துக்கிட்டீங்க..”
“மகன் வேணாம்னு நானா சொன்னேன் பூரணி. நந்துக்கு அடுத்து ஒரு மகன் பெத்துருக்கலாம் தான். நீ தான் விடல” கார்த்திகேயன் மனைவியின் பக்கம் சாய்ந்து முணுமுணுக்க, அந்த வயதிலும் வெட்கப் பட்டார் பூர்ணிமா.
“பச், விவஸ்தை இல்லாம. அப்போ பால், பேட்டுன்னு சுத்திட்டு, பொண்டாட்டி பின்னாடி சுத்த உங்களுக்கு நேரமில்லை. இப்போ, பொண்ணு பக்கத்துல இருக்கும் போது பேச்சை பாரு.” என்று கணவரை முறைத்தவர், “பேச்சை மாத்தாதீங்க” என்றார் சத்தமாக.