நந்தனா கண்களை மூடி சோஃபாவில் சாய்ந்திருக்க, “நந்து, அப்பா சொல்றதை தான் எப்பவும் கேட்கணுமா? அம்மா சொல்றதையும் ஒரு முறை கேளு டா. அவரும் கிரிக்கெட்டில் தான் இருக்கார். அவரை விட உன்னோட வேலையை யாரால புரிஞ்சுக்க முடியும். சொல்லு? அப்பா பேச்சை கண்ணை மூடிட்டு கேட்காம, கொஞ்சம் என் பேச்சை கேட்டு..” அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே,
“வாயை மூடு பூரணி. என் மகளுக்கு நிரஞ்சன் வேண்டாம். சரி வராது” என்று கத்தினார் கார்த்திக்கேயன்.
“அதை நீங்க சொல்லாதீங்க, கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தப் போற அவ சொல்லட்டும்” என்று பதிலுக்கு பூர்ணிமா குரலை உயர்த்த, நந்தனா பெற்றோரை பார்ப்பதை தவிர்த்தாள்.
“அவ தான் பதில் சொல்றாளே பூரணி. உனக்கு தான் புரியல” என்ற கணவரை கொலை வெறியுடன் பார்த்தார் பூர்ணிமா.
“ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் வேண்டாம் வேற படின்னு சொன்னேன். கேட்டாளா உன் பொண்ணு? அன்னைக்கு அதான் படிப்பேன்னு என் கூட எவ்வளவு வாதாடி இருப்பா? இன்னைக்கு நிரஞ்சன் உனக்கு வேணாம்மான்னு சொல்றேன். அவ விரும்பியும் கூட காரணமே கேட்காம, அமைதியா என்னோட முடிவை ஏத்துக்கறா? ஏன்னு யோசிச்சியா பூரணி? மாப்பிள்ளை வீட்டுக்கு வந்திட்டு போனார். அதைப் பத்தி ஒரு வார்த்தை கேட்டு இருப்பாளா? அவளுக்கு என்னோட முடிவு சரின்னு படுது. அதான் அமைதியா அதை ஏத்துக்கறா..” கண் மூடி அமர்ந்திருந்த மகளை அவர் கை காட்டி சொல்ல, மகளை அதிர்ச்சியாய் பார்த்தார் பூர்ணிமா.
“நந்து” என்று அவர் அழைக்க,
“என் முடிவுல அவளுக்கு கோபம்னா ஏன் இப்படி அமைதியா இருக்க போறா உன் பொண்ணு”
“எனக்கு புரியல. மாப்பிள்ளை, அந்த பையன் நிரஞ்சன், நல்லவர் தானே? அப்புறம் ஏன் வேணாம் சொல்றீங்க? அவர், அவரை பத்தி தப்பான நியூஸ் எதுவும் கிடைச்சதா?” தாயாக பூர்ணிமா பதற,
“இல்ல பூரணி. அவர் ரொம்ப நல்ல பையன் தான். நான் ஏற்கனவே சொன்னது தான் காரணம். ரெண்டு பேரும் கிரிக்கெட்..” அவர் முடிக்கும் முன்பே, “ஐயோ.. இதையே சொல்லாதீங்க. எனக்கு மண்டை வெடிக்குது” என்று கத்தினார் பூர்ணிமா.
“அந்த நடிகை மேட்ச் பார்க்க வந்தா என்ன நடக்கும் தெரியுமா? கேப்டனோட பர்பாமென்ஸ், சக்சஸ், ஃபெயிலியர் எல்லாத்துக்கும் அவரோட பொண்டாட்டியை தான் பேசினாங்க, விமர்சனம் பண்ணாங்க. இப்பவும் பண்றாங்க. அப்படி இருக்கும் போது, நாளைக்கு..” கணவரின் வார்த்தைகளை கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கினர் பூர்ணிமா. மேலே கணவர் சொன்னவற்றை அவரால் கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை.
“நம்ம பொண்ணோட முடிவை தான் நிரஞ்சன் கிட்ட நான் சொன்னேன் பூரணி. அவ முடிவை மாத்தினா, நிரஞ்சனை நம்ம வீட்டு மாப்பிள்ளையாக்க வேண்டியது என் பொறுப்பு” என்றார் கார்த்தியேன் முடிவாக.
இறுதியில் பூர்ணிமாவும் கணவரின் முடிவை தான் ஆதரிக்க வேண்டியிருந்தது.
மகளின் சோகமான முகத்தை காண்கையில் மனதை என்னவோ செய்ய அவளை நெருங்கி இறுக அணைத்து கொண்டார் அவர்.
“அந்த ஃபோட்டோ அவ்ளோ அழகா இருந்தது நந்து குட்டி. நீ அவரை தான் விரும்பறேன்னு ஏற்கனவே எனக்கு தெரிஞ்சதால, அந்த ஃபோட்டோ பார்த்து எனக்கு வருத்தமே இல்ல டா.” என்ற அம்மாவின் வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டாள் நந்தனா.
“கல்யாணம் ஒரு நாள் கூத்து தான். ஆனா, அந்த பந்தம் ஆயுசு முழுக்க உன் கூடவே வரும். நீயே நல்லா யோசிச்சு முடிவெடு நந்து குட்டி. எங்களுக்கு உன் சந்தோசம் தான் முக்கியம். நீ நிம்மதியா இருந்தா தான் நாங்களும்..”
“அம்மா..” என்ற மகளின் அழைப்பு அவரை மேலே பேச விடவில்லை. அணைப்பின் வழியே அழுத்தமாக, அவளுக்கு தேவையான ஆறுதலை தந்தார் அவர்.
நந்தனா தன் முடிவில் உறுதியாக நின்றாள். ஆனால், அவளும் தன் முடிவை மாற்றிக் கொள்ளும் நாளும் வரத் தான் செய்தது.
நாட்கள் வேகமாக ஓடிக் கொண்டிருக்க, நிரஞ்சனை கிரிக்கெட் ஆக்கிரமித்துக் கொண்டது. அவனது காயம் முழுவதும் குணமாகி, என்ஓசி (NOC) வாங்கி இருக்க, மீண்டும் இந்திய அணி ஆடிய அத்தனை சர்வதேச போட்டிகளிலும் இருந்தான் அவன்.
நந்தனா அவனை அடிக்கடி பார்க்க நேரிட்டாலும், பேச முடியவில்லை. நிரஞ்சன் அவளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. முற்றிலுமாக தவிர்த்தான் அவன். அது வலித்தாலும், வெளியில் காட்டிக் கொள்ளவில்லை அவள்.
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கு தேவையான வீரர்களின் ஏலம் விரைவில் நடக்க இருந்தால், அதற்கான வேலையில் மூழ்கி இருந்தாள் அவள்.
சென்னை அணியின் நிர்வாகத்தினருடன் இணைந்து இயங்கிக் கொண்டிருந்தது அவர்கள் குழு. அவளுக்கு கூடுதலாக அவளது வழக்கமான வேலைகளும் இருக்க, முடிந்த வரை தன்னை அதில் மூழ்கடித்து கொண்டாள்.
ஆனால், அது அத்தனை எளிதாக இல்லை.
ஒவ்வொரு காணொளியையும் ஓட விட்டு, குறிப்புகள் எடுக்கையில் திணறி போனாள் அவள்.
நிரஞ்சனின் பேட்டிங், பவுலிங் அதன் நிறை, குறைகள் எதுவும் அவளது கண்ணுக்கு புலப்பட வில்லை. மாறாக திரை முழுவதும் தெரிந்த அவன் முகம் மட்டுமே அவளை வசீகரித்து நிறைத்தது.
அவளுக்கே அவளை பார்க்க பாவமாக இருந்தது. முட்டாளை போல தோன்றினாள் அவள்.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான அன்றைய போட்டியை முடித்து விட்டு, தனது காரை நோக்கி நடந்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன். அங்கே வழியில் அமர்ந்து வேலைப் பார்த்து கொண்டிருந்த நந்தனாவின் முன் ஒரு நொடி நின்றவன், பேச்சுகள் இன்றி அவளது காஃபி கோப்பையை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்திருந்தான்.
அவளின் மன சஞ்சலங்கள் அனைத்தும் விலகி, மனதார புன்னகைத்தாள் நந்தனா.
ஆனால், மறுநாள் அதை தடம் தெரியாமல் துடைத்து எறிந்தான் நிரஞ்சன்.
மறுநாள் மாலை நியூஸிலாந்து அணி பேட்டிங் செய்ய, இந்திய அணி வீரர்கள் வியர்வையில் நனைந்த படி மைதானத்தில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தனர்.
ஆட்டத்தின் பத்தாவது ஓவரில் எதிரணியின் வில்லியம் வீசப்பட்ட, பந்தை களத்தில் இறங்கி ஓங்கி அடிக்க, பந்து மிக உயரமாக சென்று கொண்டிருந்தது.
தன்னை நோக்கி வந்த பந்தை பிடித்து விடும் நோக்கில், பந்தின் மேல் பார்வையை பதித்து பின்னோக்கி நடந்தான் நிரஞ்சன்.
பந்து நேராக அவன் கைகளில் வந்து விழுந்தது. பின்னோக்கி ஓடி அதை பிடித்த வேகத்தில் நிலைத் தடுமாறி அப்படியே நிரஞ்சனும் விழுந்தான்.
“அவுட்…” என்ற ஆரவாரம் எழுந்து அடங்கிய பின்னும், தரையில் விழுந்த நிரஞ்சன் எழுந்திருக்க வில்லை.
கேமரா கண்களின் வழியே ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த நந்தனாவின் கண்கள் ஒரு கணம் அப்படியே நிலைக் குத்தி நின்று விட்டது. மறுகணமே சுதாரித்து, எழுந்து ஓடினாள் அவள்.
ஆட்டத்தை பத்திற்கும் மேற்பட்ட கேமராக்கள் படம் பிடித்துக் கொண்டிருந்தது. அத்தனையும் அப்போது நிரஞ்சனை தான் படம் பிடித்துக் கொண்டிருந்தது.
அந்த நிமிடம் எதுவுமே நந்தனாவிற்கு பொருட்டாக படவில்லை. உலகம் மறைந்து நிரஞ்சன் மட்டுமே அவள் கண்களுக்கு தெரிந்தான்.
கண் மண் தெரியாத வேகத்தில் மைதானத்திற்குள் நுழைந்தாள் அவள்.
அதற்குள் அவனுக்கு முதலுதவி கொடுக்கப் பட்டிருந்தது. மெல்ல எழுந்து இரண்டு அடிகள் கைத் தாங்கலாக நடந்து வந்த நிரஞ்சன், அப்படியே மயங்கி சரிந்தான்.
நந்தனாவின் விழிகளில் இருந்து கண்ணீர் தானாக வழிய, உறைந்து நின்றாள் அவள்.