எது நிஜம்? எது கனவு? என்று பிரித்து அறிய முடியாத நிலை. கண்களை இறுக்கமாக மூடித் திறந்தாள் நந்தனா.
அவனை நேராக பார்த்து, “நிஜமா உங்களுக்கு என்னைத் தெரியலையா நிரஞ்சன்? அப்படி ஈஸியா மறந்து போற அளவுக்கா உங்க வாழ்க்கையில் நான் இருந்தேன்?” குரல் உடைந்து விடாமல் இருக்க அவள் மிகுந்த சிரமப்பட வேண்டியிருந்தது. அவனது முகத்தில் கலவையான உணர்வுகள் வந்து கணத்தில் காணாமல் போனது.
“அந்த ஃபோட்டோல நாம முறைச்சிட்டு நிக்கறோம். சுகாஸ் கல்யாண ஃபோட்டோல. ஏன் நந்தனா?”
“சின்ன சண்டை..” முணுமுணுத்தாள்.
மெல்ல அவளின் கரம் பற்றினான் நிரஞ்சன். அவளுக்கு உடல் சிலிர்த்தது.
“நமக்கு நிச்சயம் ஆகிடுச்சு தானே? கல்யாணம் பண்ணிக்க இருந்தோம் தானே? நமக்குள்ள என்னென்னமோ நடந்து இருக்கும் தானே? ஆனா, இந்த கையை தொட்ட மாதிரியே எனக்குத் தோணல, ஃபீல் ஆகல. உனக்கும் என்னோட டச் புதுசு போல. புல்லரிக்குதே?”
உதடு கடித்து புன்னகையை விழுங்கினாள் அவள். அவர்கள் இதுவரை ஒழுங்காக கையை கூட பிடித்தது கிடையாது. இதில் அவன் சொல்வது போல “என்னென்னமோ” நடக்க எல்லாம் எங்கே வாய்ப்பிருந்தது?
அப்போதைக்கு சமாளிக்க,
“ஏன் இவ்ளோ கேள்வி கேட்கறீங்க?” என்று எதிர் கேள்வி கேட்டாள் நந்தனா.
“பதில் சொல்லேன். பதில் இல்லையா?”
அந்த கேள்வியில் இருந்த உண்மை அவளைச் சுட, அவனை வெறித்துப் பார்த்தாள் நந்தனா.
அவளுக்கு என்னமோ தவறாக பட்டது. சில நொடிகள் அவனையே கூர்ந்து பார்த்தாள் அவள்.
பின்னர் மெதுவாக கதை சொல்ல ஆரம்பித்தாள்.
“நாம சென்னையில தான் ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ணோம்.”
“ம்ம்”
“இட் வாஸ் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட். நான் தான் உங்ககிட்ட வந்து ஃப்ரப்போஸ் பண்ணேன். உங்களுக்கும் என்னை பிடிச்சது. நீங்க குடும்பத்தோட எங்க வீட்டுக்கு வந்து, என்னை பொண்ணு கேட்டீங்க. அப்பா யோசிச்சு சொல்றேன் சொன்னார்.”
அவள் சொல்லிக் கொண்டே போக, அவன் கண்களில் சிரிப்பின் சாயல்.
“அப்புறம்…” என்றான், ஆர்வமாக.
“சரின்னு சொல்லிட்டார்”
“எதுக்கு?”
“நம்ம கல்யாணத்துக்கு” திடமாக சொன்னாள் நந்தனா.
“அப்படியா?” என்று அவன் புருவம் உயர்த்த, வேகமாக தன் அலைபேசியை எடுத்து தந்தைக்கு அழைத்தாள் நந்தனா.
வீடியோ அழைப்பில் கார்த்திகேயன் முகம் தெரிந்தது.
“நந்து, ஹாஸ்பிட்டலயா இருக்க? நிரஞ்சன் எப்படி இருக்கார்? அப்பா வந்துட்டே இருக்கேன் மா. நீ பயப்பட…” படபடவென்று அவர் பேச,
“எங்க கல்யாண தேதி முடிவு பண்ணிட்டீங்களா ப்பா?” மகளின் அந்த கேள்வியில் அவரின் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி. மகள் மறைமுகமாக தனது திருமண முடிவை சொல்லி விட்டதை உணர்ந்தார் அவர். ஒரு நிமிடம் அவர் பக்கம் அசாத்தியமான அமைதி.
“சீக்கிரமே கல்யாணத்தை வச்சுடலாம் நந்து மா” என்று பதில் கொடுத்து, மகளின் முடிவை அப்படியே ஏற்றுக் கொண்டதை காட்டினார் கார்த்திகேயன்.
அப்பா அவள் மேல் வைத்திருந்த கண் மூடித் தனமான பாசமும், நம்பிக்கையும் அவளை உணர்ச்சி வசப்பட செய்தது.
மிகவும் சிரமப்பட்டு, பேசினாள் அவள்.
“நிரஞ்சன் கேட்கறார் ப்பா. அவருக்கு என்னை..” அவள் தடுமாற, நிரஞ்சன் கை நீட்டி அலைபேசியை வாங்கினான்.
அவன் முகம் பார்த்ததும், “நிரஞ்சன், மாப்பிள்ளை… உங்களுக்கு எப்படி இருக்கு? நல்லா இருக்கீங்க தானே?” மகளுக்காக உருகியது அந்த தந்தையின் மனம்.
“கன்கஷன் தான் சார். வேற ஒன்னுமில்ல. ரெஸ்ட் எடுத்தா சரியாகிடுவேன்” என்றான் புன்னகையுடன்,
“கல்யாண தேதி..”
“அது.. ஒன்னும் அவசரம் இல்ல. பொறுமையா பார்க்கலாம் சார். நான் முதல்ல சரியாகி வர்றேன். நீங்க நேர்ல வாங்க, பேசலாம்” என்ற நிரஞ்சன் அணைப்பை துண்டித்திருந்தான்.
அவளது அலைபேசிக்காக கையை நீட்டினாள் நந்தனா.
“நாம உண்மையாவே கல்யாணம் பண்ணிக்க இருந்தமா நந்தனா?” அவன் மீண்டும் அதே கேள்வியை கேட்க,
“ஆமா. உங்களுக்கு வரிசையா இன்டர்நேஷனல் மேட்சஸ் இருந்தது. அதுனால, கல்யாண தேதி முடிவாகல”
“என்னது? நிஜமாவா?” என்றவன், அவளை ஒரு முறை தலை முதல் கால் வரை பார்வையால் வருடினான். ஜீன்ஸ், குர்தா அணிந்திருந்தாள், கையில் ஸ்மார்ட் வாட்ச், காதில் பொட்டாய் மின்னியது பட்டாணி அளவில் வைரம். மற்றபடி ஒப்பனை, அலங்காரம் என்று ஒன்றுமே இல்லை. ஆனால், அவன் கண்களுக்கு பேரழகியாய் தெரிந்தாள் அவள்.
அந்த கண்களில் தெரிந்த அலைப்புறுதல் கூட அவனை அதிகமாக ஈர்த்தது.
“என்னால நம்பவே முடியல நந்தனா. உன்னை கல்யாணம் பண்ணி, உன் கூட ஜாலியா ஹனிமூன் போறதை விடவா எனக்கு மேட்ச் முக்கியமா போச்சு?” அவன் பொய் கோபத்துடன் கேட்க,
“ஆமா” என்றாள் அவள் அழுத்தமாக,
“உங்களுக்கு சின்னதா அடிப்பட்டதும், என்னையே மறந்துட்டீங்க.” என்று கோபமாக தொடங்கியவள்,
“இதுல கல்யாணமா உங்களுக்கு முக்கியமா…” அவளை முடிக்கவிட வில்லை அவன்.
அந்த நாளின் மொத்த சோர்வும் அவளின் முகத்தில் இருக்க, ஒற்றை விரல் நீட்டி அவளின் முக வடிவை நிதானமாக அளந்தான் நிரஞ்சன். புருவங்களை நீவி விட்டான். மனதில் இனம் புரியா அமைதி பரவ, கண்களை இறுக மூடினாள் நந்தனா.
மெல்ல விழிகளை திறந்து, “உங்களுக்கு மெமரி லாஸ்னு சொன்னாங்க. சீக்கிரமே உங்களுக்கு பழசு எல்லாம் ஞாபகம் வந்துடும் தானே? என்னை.. என்னை நிரந்தரமா மறந்திட மாட்டீங்க தானே? நமக்குள்ள நடந்தது எல்லாம் உங்களுக்கு ஞாபகம் இல்லாமயே போய்டுமா நிரஞ்சன்?” அலைபாய்ந்த விழிகளும், பரிதவித்த அவளின் குரலும் அவனை அசைத்து தான் பார்த்தது.
“நமக்குள்ள என்ன நடந்தது நந்தனா?” அழுத்தமாக கேட்டான்.
“என்னென்னமோ” என்றாள் வேண்டுமென்றே, அவன் முகத்தில் மந்தகாசமான புன்னகையொன்று வந்துப் போனது.
மெலிதாக தனக்குள் ஏதோ முணுமுணுத்தான் நிரஞ்சன்.
அவனையே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்த நந்தனா, அவனது உதட்டசைவை வைத்தே வார்த்தைகளை படித்து விட, “பிராடு, பிராடு, யாரு பொய் சொல்றா? நீங்களா? நானா? எனக்கு அப்பவே தெரியும்? எனக்கு டவுட் வரவும் தான் எல்லாத்தையும் மாத்தி மாத்தி சொன்னேன்” என்று கத்தியவள், அவனை வலிக்காமல் அடிக்கத் தொடங்கி இருந்தாள்.
“ப்பா, எவ்ளோ பொய் சொல்றா?” என்று நிரஞ்சன் முணுமுணுத்திருக்க, வீடியோ அனலிஸ்ட்டான நந்தனாவிற்கு அவனது உதட்டசை படிப்பது கடினமாக இல்லை. விழிகளை குவித்து அதை எளிதாகவே படித்திருந்தாள் அவள்.
“ஏன் இப்படி பண்ணீங்க நிரஞ்சன்? எல்லாமே விளையாட்டு தானா உங்களுக்கு? நான் எப்படி பயந்து போனேன் தெரியுமா? என்னை.. யார்னு கேட்டீங்க… எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?” எத்தனை முயன்றும் அவளால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
“ப்ச், நந்து” என்றவன், அவளை இழுத்து அணைத்திருந்தான்.
“நான் விழுறதை பார்த்து இந்த விக்கெட் இவ்வளவு ஈஸியா விழும்னு தெரிஞ்சுருந்தா, நான் எப்பவோ தலை குப்புற விழுந்து இருப்பேனே” அவன் குறும்புடன் கண் சிமிட்டி சொல்ல,
“விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாதீங்க நிரஞ்சன். நீங்க மயங்கி விழவும் எனக்கு உயிரே போய்டுச்சு.” சொல்லும் போதே அவள் உடல் நடுங்க, அதை அவனாலும் உணர முடிந்தது.
“சாரி சாரி, நந்து. எனக்கு ஒன்னும் ஆகல. ஹாஸ்பிடல் வந்ததும் டெஸ்ட்ஸ் எடுத்து பார்த்திட்டு நிறைய கேள்விகள் கேட்டாங்க. அந்நேரம் பிரைன் ஷாக்ல கன்பூஸ் ஆகிடுச்சு போல. என்னால சரியான பதிலே சொல்ல முடியல. உளறி வச்சேன். அதான் மெமரி லாஸ்னு சொல்லிட்டாங்க. மேனேஜ்மென்ட் ஆபீஸியல் ஸ்டேட்மெண்ட்டா அதை பிரஸ்ஸிக்கு கொடுக்க, என் மேனேஜரும் அப்படியே டுவீட் போட்டுட்டான் ” அவள் முகத்தை கைகளில் ஏந்தி அவன் சொல்ல,
“நீங்க கீழே விழுந்த அந்த நிமிஷம் எனக்கு.. எனக்கு எல்லாமே பிளாங்க் ஆகிடுச்சு நிரஞ்சன். உங்களைத் தவிர வேற ஒன்னுமே என் மனசுல இல்ல. பயம், பயம் அப்படியொரு பயம். நீங்க கண் முழிச்சு பேசினா போதும்னு இருந்தது. எனக்கு… நீங்க இல்லாம வாழ்க்கையில எதுவுமே இல்லனு அந்த நிமிஷம் தான் தெளிவா புரிஞ்சுது. அப்பவே முடிவு பண்ணிட்டேன்” அவள் சொல்ல சொல்ல அவன் முகத்தில் அப்படியொரு பூரிப்பு.
“கிளியரா, எனக்கு டைரக்ட் ஆன்சர் சொல்லு நந்தனா, பிளீஸ்” என்றான் இறைஞ்சுதலாக.
“வாழ்க்கையை எனக்கு கத்துக் கொடேன் நந்தனா. நான் உனக்கு நிரஞ்சனை கத்துத் தர்றேன். இந்த நந்தனாவை கத்துக்கவும் ரொம்பவே ஆசையா இருக்கேன். அதுக்கு நான்… நாம என்ன பண்ணனும்?” அவளின் தாடையை பற்றி, கண்களோடு கண் கலந்து அன்றைக்கு ஹோட்டல் அறை வாசலில் வைத்து கேட்ட கேள்வியை அவன் திரும்பவும் கேட்க,
“வாழ்க்கையை வாழ்ந்து தான் பார்க்கணும் நிரஞ்சன். அதை உங்க கூட வாழ்ந்து பார்க்க நான் ரெடி” இம்முறை அவனுக்கு பிடித்த பதிலை சொன்னாள் அவள்.
அவளின் பதிலில், பற்கள் தெரிய பெரிதாக புன்னகைத்தான் நிரஞ்சன்.
“இந்த விக்கெட்டை விழ வைக்க, நான் எவ்வளவு பால் (Ball) போட வேண்டி இருக்கு. ஆனாலும், தட்டிட்டேன் இல்ல” அவன் கண்ணடித்து சொல்ல, இருவருக்குமே சிரிப்பு வந்தது.
அந்த மருத்துவமனையின் அறை முழுவதும் எதிரொலித்தது அவர்களின் இணைந்த சிரிப்பொலி.
“நான் என்னையே மறக்கும் நிலை வந்தாலும், இந்த ஜென்மத்தில் உன்னை மறக்க மாட்டேன் நந்தனா. அதை நீ ஞாபகத்தில் வச்சுக்கோ” அவன் குரலில் இருந்த உணர்ச்சிகள் அவளின் மனதை ஆழமாக தொட்டது.
“நிறைய தமிழ் படம் பார்த்து கெட்டு போய் இருக்கீங்க நிரஞ்சன். ஒரே சினிமா வசனமா பேசுறீங்க” என்றாள் நக்கலாக,
இருவருக்கும் இடையில் ஆழமான புரிதலும், அன்பும், பரஸ்பர நம்பிக்கையும் இருந்ததால் மட்டுமே திருமண பந்தத்ததில் இணைய முடிவெடுத்தார்கள். ஆனால், நிழலுக்கும், நிஜத்திற்கும் வித்தியாசம் உண்டு தானே?