நெற்றியில் முத்தமிட்டு கதவருகே சென்று திரும்பி கலங்கிய கண்களோடு அவர் என் மீது வீசிய பார்வை, மிகுந்த வேதனைகளையும் சோதனைகளையும் சந்தித்திருக்கிறார் என்பதற்குச் சாட்சியாய் இருந்தது. அவர் சென்றதும் அம்மா வந்தார்.
எவ்வளவு செலவாகியிருக்கிறது என்று விசாரித்தேன். இரண்டு லட்சம் என்று கூறினார்.
வாழ்வின் சில சமயங்களில், நம்பிக்கையும் பிடிப்பும் வடிந்து தீர்ந்த நிலையில், மீண்டும் துவங்க அம்மா மட்டுமே உதவ முடியும் அல்லவா!!
மீண்டும் இரவு. பீப் பீப் ஒலி. பச்சையும் சிவப்புமாய் அணைந்து அணைந்து எரியும் சிறு ஒளி. பக்கத்தில் எனக்காக மூச்சு விடும் வென்டிலேட்டரின் இரைச்சல். தனிமை. ஆழியாய் ஆர்பரிக்கும் மனம்.
Accident எப்படி எந்த இடத்தில் நிகழ்ந்திருக்கும், யார் மீட்டது, என்ன கிழமை, ஏன் என் நினைவில் இல்லை, இடித்த கார் எப்படிப்பட்டது, நான் என்ன நிறப் புடவை அணிந்திருந்தேன் இப்படிப் பலவாறாக சிந்தனைகள். நள்ளிரவு x ray. வேறு வழியின்றி வந்த தூக்கம்.
காலை, சொல்லிச்சென்றது போல் video call செய்தார் அவர். செவிலி உதவியுடன் இணைந்தேன். அவர் மடியில் இருந்தான் அர்ஜுன். ஆசையாய் “அர்ஜுன்” என்று வாயசைத்தேன்..
45 நாட்களுக்குப் பிறகு உச்சிக் குடுமியுடனும் மூக்கிலும் தொண்டையிலும் பெரிய tube உடனும் பஞ்சடைந்த கண்களுடனும் ஒட்டிக்கிடந்த கன்னங்களுடனும் வெறும் வாயை மட்டும் அசைக்கும் உருவத்தை அம்மா என்று அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை நான் பெற்ற என் சின்ன மகனால். மிகவும் வலித்த தருணம். மறக்கவே முடியாத தருணம்.
“அம்மா பாரு டா, அம்மா கூப்பிடு, அம்மாகிட்ட பேசு” என்று அவரும் அம்மாவும் அப்பாவும் உந்தியும் யாரோ போல் என்னை அவன் பார்த்த பார்வை தந்த வலியை விளக்க வார்தைகள் கிடைக்கவில்லை.
அழைப்பினைத் துண்டிக்கச் சைகை காட்டினேன். திரும்பவும் அழைத்தார். வேண்டாம் என்று மறுத்தேன். ஏன் என்று சுற்றியிருந்தோர் கேட்டனர். வாயசைத்தோ எழுதிக்காட்டியோ என் வேதனையை என்னவென்று புரியவைப்பது….
முதல் முறையாக உடைந்தேன்.
மருத்துவர் குழு. இம்முறை புதிய உத்தரவுகள். இரத்த நாளத்தில் இணையும் பாலோடு வெளி உணவுகள் ஆரம்பிக்கத் திட்டமிட்டனர். முதலில் எதிலிருந்து துவங்கலாம் என்று என்னையே கூறச்சொன்னார் தலைமை மருத்துவர். “இளநீர்” என்றேன்.
அவருக்கு அறிவித்தனர். இளநீரோடு வந்தார். 45 நாட்களுக்குப் பிறகு வாய் வழி உணவு…
“ஏன் video call பாதியில கட் பண்ணிட்ட?” என்று கேட்டவருக்கு என்ன பதிலுரைப்பதென்று தெரியவில்லை. என் முகம் மாறியதைக் கவனித்துப் பேச்சை மாற்றினார். இடுப்பெலும்பு ஓரளவு கூடிவிட்டதாகவும் மறுநாள் பளுவைத் துண்டிக்கப்போவதாகவும் சொன்னார்.
“என்ன weight? புரியல்ல” என்று கேட்டேன். வலது குதிகாலில் துளையிட்டு எட்டு கிலோ எடையுள்ள இரும்பு குண்டு தொங்கிக்கொண்டிருப்பதாகக் கூறினார். Traction procedure.
நான் பெற்ற பிள்ளைக்கே என்னை அடையாளம் தெரியவில்லை என்பதை விட இது ஒன்றும் அதிர்ச்சியாய் இல்லை.
நுரையீரல் பயிற்சிக்காக வென்டிலேட்டரை இரண்டு modeகளில் மாற்றி மாற்றி இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டு விடைபெற்றார்.
மீண்டும் தனிமை…. மிகவும் வெப்பமாக உணர்ந்தேன். வெப்பமானி 103 டிகிரிகள் காட்ட உடனே தலைமை மருத்துவர் விரைந்து வந்தார். Blood culture செய்ய உத்தரவு. தமணி தேடுதல் வேட்டை.. femoral artery யில் எடுத்தனர். வலி.. உடலோடு மனதிலும் சேர்ந்து கொண்டது. உடைந்து சிதறி அழுதேன்.
நான் அழுகிறேன் என்பது கேட்டு விரைந்து மீண்டும் வந்தார் அவர். அழுவதற்கான நேரங்கள் கடந்து விட்டதாகவும் இது மீட்டெடுப்பதற்கான நேரமென்றும் பேசினார். தைரியமாய் இருப்பதாய் வாக்களித்தேன். விடை பெற்றார்.
தொலைத்த இடத்தில் தானே தேட வேண்டும்.. உடைந்த இடத்திலிருந்தே பொறுக்கிச் சேர்த்து ஒட்டிப் பூசி மீள்வதென்று தீர்மானம் செய்தேன். வைராக்கியம்..
வேண்டிய அனைத்தும் தர வல்லது.
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.