ஆதினி அருகே அமர, அரிச்சந்திரன் எழுந்தவன் “தூங்கலையா?” என்று கேட்டான்.
“உங்களை காணும்னு வந்தேன்” என்று ஆதினி சொல்ல, “சும்மா உட்கார்ந்திருந்தேன்” என்று சொல்லி முன்னே சென்று கேட்டைப் பூட்டியவன்
“வா தூங்கலாம்” என்று அவளோடு உள்ளே போனான். கதவினைப் பூட்டி வரவும் அரிச்சந்திரன் ஆதினிக்கு மறுப்பக்கம் படுக்க, அரியின் கண்கள் சோர்வில் மூடின. நேற்று காலையும் ஆதினி கல்லூரி சென்றது, இன்று மீண்டும் காலையிலிருந்து வேலை என்று உடல் சோர்வு அதிகம் அவனுக்கு.
ஆதினிக்கும் சோர்வு, ஆனாலும் வரும்போது ஒரு மணி நேரத்துக்கும் மேல் உறங்கியதில் இப்போது அவ்வளவு தூக்கமில்லை. அதை விட அருகே அரிச்சந்திரன். பேச வேண்டியது நிறைய இருந்தது, நிறைய பேசவும் தோன்றியது.
ஆதினிக்கு அவனிடம் தயக்கங்கள் கிடையாது, தயங்கும் வகையில் தலைவனும் நடந்ததில்லை!! அவளுக்கான மரியாதையை, உரிமையை முதல் நாள் இருந்து கொடுப்பவன், முக்கியமாக அவளின் விருப்பத்தை. அந்த துணிவில்,
“அரி!” என்று மெல்ல அழைத்தாள்.
“சொல்லும்மா” அவன் திரும்பி ஆதினி பக்கம் படுத்தபடி கேட்க, ஆதினி விட்டத்தைப் பார்த்தாள்.
“நான் என்ன தப்பு செஞ்சேன்? உங்கள பிடிக்காம நான் பிரியணும்னு சொல்லல, எனக்கு அப்போ எதுவும் பிடிக்கல. எனக்கு சொல்ல தெரியல, உலகமே பிடிக்கல! ஹாஸ்டல் போகணும்னு கேட்டேன். மறுபடி அங்க போய் ரிலாக்ஸ் ஆனேன். உங்ககிட்ட சாரி கேட்டேன், ஆனாலும் ஏன் என்னை அவாய்ட் பண்றீங்க?” என்று ஆதினி குரல் மெல்லியதாய் இருந்தாலும் அழுத்தமாக கேட்டாள்.
“உனக்குப் பிடிக்கலனு போன, பிடிச்சிருக்குனு சாரி சொன்ன. ரைட்! அப்ப உன்னோட விருப்பம் மட்டும்தான் இல்லையா?” என்று அரி கேட்க
“உங்களுக்குத்தான் என்னை பிடிக்குமே, இல்லை பிடிக்கலையா?” அவன் புறம் வேகமாய் திரும்பி ஆதினி கேட்டாள். நிச்சயம் பிடிக்காது என்று சொல்ல மாட்டான் என்று மிகப்பெரிய உறுதி, இல்லாவிட்டால் ஆதினிக்கு அந்த கர்வமிருக்காதே!
“உனக்கு என்ன தோணுதோ அதான்!” கொஞ்சம் புன்னகையோடு அவன் சொல்ல
“அப்புறம் ஏன் என்னை ஹாஸ்டல்ல வந்து பார்க்கல, போன் பண்ணல… நான் உங்ககிட்ட சாரி சொல்றதுக்கு முன்னாடி வரை அடிக்கடி கால் பண்ணுவீங்க தானே?” என்று அத்தனை கேள்வியையும் ஆதங்கத்தையும் அரிச்சந்திரனிடம் கொட்டினாள் ஆதினி.
அரிச்சந்திரனின் ஒதுக்கம் அவளை ஓயவிடவில்லை.
“டயர்டா இருக்கு ஆதினி, நாளைக்குப் பேசலாம்” அரி கொட்டாவி விட்டபடி சோர்வாக சொல்ல, அதுவும் கூட ஆதினிக்கு அந்த நேரத்தில் தவறாகப்பட்டது. அவ்வளவு பிரியத்தைக் கொட்ட தாத்தாவும் அப்பாவும் இருக்க, மனம் என்னவோ இந்த அரிச்சந்திரனை சுற்றியே வந்தது.
‘பிடிக்கலன்னா பிடிக்கல, பிடிச்சிருந்தா பிடிச்சிருக்கு. அதானே சொல்ல முடியும்.?’ அவள் மனம் இதையே நியாயமென நினைத்து. நியாயம் அவளுக்கு! அரிச்சந்திரனுக்கு, அவனுக்கென்று ஒரு மனம். அதிலும் ஆசைகள் இருக்கும் என்று அவன் இடத்தில் இருந்து ஆதினியால் யோசிக்க முடியவில்லை.
“இப்பவும் அவாய்ட் பண்றீங்க?” ஆதினி ஆதங்கமாக சொல்ல, அரிச்சந்திரனுக்கு நைட்’ல பஞ்சாயத்தா என்று கடுப்பாக வந்தது.
“ஏன் செய்யல, அந்த கேள்வி விடு. உனக்கு என்னை பிடிச்சது, ஓகே! நான் பார்க்கல, பேசல. நீ என்ன செஞ்சிருக்கணும்? பிஸீயா இருக்கீங்களா? ஏன் வரலனு நீயா ஒரு கால் பண்ணியிருக்கலாம். செஞ்சியா? அதுக்கு பதிலா ஹாஸ்டல்ல நைட் கலாட்டா பண்ணின, க்ளாஸ் கட் அடிச்ச, வேணும்னே படம் பார்த்து வம்பு பண்ணின. இதெல்லாம் செஞ்சிட்டு என்னை உன் ஹெச்.ஓ.டி முன்னாடி நிக்க வைச்ச. இதுக்கெல்லாம் காரணம் என்ன?” என்று பொறுமையாகக் கேட்டான் அரிச்சந்திரன்.
காரணம்? என்னை தேடவில்லை என்ற ஏக்கம், ஆதங்கம். அதை எல்லாம் விட ஆதினி அரிச்சந்திரனுக்கு முக்கியமில்லையா என்ற கேள்வி.
‘இந்த அட்வகேட் எல்லா குற்றத்தையும் என் மேல சுமத்துறான் யுவர் ஹானர்’ என்று மனதோடு சொல்ல, அரி இவள் மௌனமாக இருக்கவும்,
“காரணம் உன் ஈகோ. உனக்கு பிடிச்சதுதான் நடக்கணும்” என்றான் குற்றச்சாட்டாக. ஆதினிக்கு சுருக்கென்றது, கூடவே கோபம் வந்தது.
“உங்களுக்கு ஈகோ இல்லையா? நான் ஏன் இதெல்லாம் செய்றேனு தெரிஞ்சும் என்னை அவாய்ட் பண்ணினீங்கதானே? சாரி சொல்லியும் என்னை இப்படி பண்றீங்க” என்று வருத்தமும் கோபமும் கலந்த பாவனையில் அவனிடம் ஒற்றை விரல் நீட்டி குற்றமாய் கேட்க அரிக்கு இரவில் வாக்குவாதம் செய்ய எண்ணமில்லை. அவனுக்கு இரவுகள் பிடித்தவை!
அரிச்சந்திரனுக்கு கோபத்தில் பேசிவிடுவோம் என்று தோன்ற, அவளின் விரலை பிடித்தவன் அவள் வாய் மீது கொண்டு வைத்து,