தேனீ மாவட்டம் ஆங்கூர்பாளையம் கிராமத்தின் அழகான காலை பொழுது பறவைகளின் இனிமையான கீதத்தோடு மக்கள் வாசல் தெளித்து கோலமிட்டுக்கொண்டிருக்க , ரம்யமான அந்த அதிகாலை வேளையில் அபஸ்வரமாக ஒலித்தது ஒரு குரல்.
“ஏய் கவிதா… வாடி வெளில , என்ன திண்ணக்கம் இருந்தா என் புள்ளய வளச்சு புடிக்க பாத்திருப்ப” என்ற சத்தத்தில் பதறி அடித்து வெளியில் ஓடி வந்தார் செட்டியாரம்மா கமலாட்சி.
“ஆத்தீ!! மறுபடியுமா… வெளங்காம போறவன் என் குடும்பத்திலேயே வெடிய வெக்குறானே ஆண்டவா நான் என்ன பண்ணுவேன்” என்று பதறி பார்க்க செல்வராணியின் வெண்கலக்குரலில் அந்த தெருவின் ஆல் இந்தியா ரேடியோ அனைத்தும் வெளியில் கூடிவிட்டது.
கமலாட்சியின் கை கால்கள் நடுக்கம் கொள்ள பூஜை அறையில் இருந்த செட்டியார் ராமநாதன் முகம் இறுக வெளியில் வந்து நின்றார்.
“வாய்யா வா உள்ள தான் இருந்தியா ??”.
“பொம்பள புள்ள ரெண்டையும் இப்படி ஒழுக்கம் இல்லாம வளத்திருக்கியே வெக்கமா இல்ல” என்றவரை பார்த்த ராமநாதன் .
“இந்தா பொம்பளையாச்சேன்னு பாக்குறேன் நாலு வருஷத்துக்கு முன்னாடி நீ வந்து இதே மாதிரி கத்தினப்போ என் புத்தி மழுங்கி போச்சு பொட்டப்புள்ள பேரு கெட்டுப்போச்சேன்னு யோசிக்காம முடிவெடுத்துட்டேன்”.
“இந்த தடவ உன் ஆட்டம் இங்க செல்லாது ஊர்ல இருக்குற பொட்டப்புள்ளைகளுக்கு ஒழுக்கம் கத்துக்குடுக்காம உன் புள்ளைக்கு அத கத்துக்குடு” என்க.
“என்னய்யா வாய் நீளுது உன் பொண்ணு பின்னாடி நாலு மாசமா என் புள்ளை சுத்தி இருக்கான் , உன் பொண்ணு யோக்கியமா இருந்தா முன்னாடியே சொல்லி இருக்கணும்ல ?? நீயும் என்கிட்டே வந்து இப்படினு சொல்லணும்ல ? இவ்ளோ நாள் உன் பொண்ணு சொல்லாம இருந்ததே தெரியல அவ லட்சணம் என்னனு” என்று தன் குரலை இன்னும் உயர்த்த , ராமநாதரின் முகம் இருண்டது.
“கவிதா….” என்றவர் கர்ஜனை குரலில் பயத்தில் முகம் வெளிற வெளியில் வந்த மகளின் கன்னம் பழுக்க ஒன்று வைத்தவர் “உண்மையா அவன் உன் பின்னாடி வந்தானா” என்க.
எரியும் கன்னத்தை கைகளில் தாங்கி “ஆமாம்” என்று தலையை ஆட்டினாள் மகள்.
மீண்டும் அவளை அடிக்க பாய்ந்த கணவனை தடுத்த கமலாட்சி “ஏனுங்க என்னனு கேளுங்களேன் அடிச்சே கொன்னுடுவீங்க போல, சொல்லேண்டி ஏன் இத வீட்ல சொல்லல” என்ற அம்மாவின் கேள்வியில் அவரை பார்த்தவள்.
“சொன்னா என்ன செய்வீங்கம்மா , அக்காவுக்கு செஞ்ச மாதிரி என் படிப்பை நிறுத்தி அடுத்த மாசமே என்னை எவனுக்காவது கட்டி குடுத்திருப்பீங்க”.
“அதுக்கு பயந்துதான் சொல்லல , தப்பே செய்யாம எப்பவும் நாங்க ஏன்மா தண்டனை வாங்கணும்” என்று தேம்பிய மகளை மார்போடு அணைத்துக்கொண்ட கமலாட்சியின் பார்வை கணவனை குற்றம் சுமத்தியது.
“என்ன ஆத்தாளும் பொண்ணும் நாடகம் ஆடுறீங்களா” என்ற செல்வராணியின் குரலில் மீண்டவர் .
“இந்தா உன் புள்ளைகிட்ட என் மவ கடுதாசி வாங்கல வாங்கி இருந்தா அப்போ பேசு இப்போ கெளம்பு, என் பொண்ணு விஷயத்தை நான் பாத்துக்குறேன்” என்றவரை வசைப்பாடிக்கொண்டே நடந்தாள் செல்வராணி.
அவள் கூற்றில் ஒரு சதவீதம் கூட நியாயம் இல்லை என்பதை அறிந்தாலும் செட்டியார் மகளின் ஒழுக்கத்தை கூறு போட்டுக்கொண்டிருந்தது ஒரு கூட்டம்.
காற்றை கிழித்துக்கொண்டு போன வேகத்திலே திரும்பி வீட்டை நோக்கி பறந்து வந்தது அந்த சைக்கிள், வேப்பமரத்தின் நிழலில் மிதிவண்டியை “க்ரீச்” என்ற சத்தத்தோடு நிறுத்தினான் சக்கரை.
தீவனம் கொத்திக்கொண்டிருந்த கோழிகள் எல்லாம் உயிரை கையில் பிடித்துக்கொண்டு சிதறி ஓடியது .
சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த உஷா “என்னத்துக்கு இப்படி காத்துல பறந்து வார” என்று அவனை நெருங்கினாள்.
“அண்ணே எங்க?” என்றவன் பார்வை சுற்றிலும் சுழல, பின் பக்கம் கிணற்றடியை காண்பித்தாள் உஷா.
“குளிக்குதா… அப்பாடா” என்று திண்ணையில் கால் நீட்டி அமர்ந்தான்.
வெளியில் செல்ல தயாராகி வந்த மாணிக்கமும் அவர் மனைவி பஞ்சவர்ணமும் யோசனையாக பார்த்துக்கொண்டே அவனை நெருங்கினர்.
அவரை நிமிர்ந்து பார்த்தவன் உஷாவிடம் திரும்பி “கொஞ்சம் தண்ணி குடு ஆத்தா” என்றான் மேல்மூச்சு வாங்க.
அவனை விசித்திரமாக பார்த்துக்கொண்டே உள்ளே சென்றவள் ஒரு சொம்பில் தண்ணீரோடு வந்தாள்.
அவன் குடிக்கும் வரை பொறுமை காக்க முடியாத பஞ்சவர்ணம் “என்னய்யா என்ன சேதி” என்க.
அவரை நிமிர்ந்து பார்த்தவன் “இன்னைக்கு நம்ம எண்ணெய் செட்டியார் வீட்ல கலவரம் நடக்குது , பாதி ஊரு அங்கதான் நிக்குது” என்றான்.
“ஆத்தீ என்னய்யா சொல்ற” என்றவர் பதட்டமாக தோட்டத்து பக்கம் எட்டி பார்த்தார்.
“கொஞ்சம் பொறுமையா இரு வர்ணம்” என்ற மாணிக்கம் “என்னாலே என்ன பிரச்சனை” என்றார் பதட்டத்தை மறைத்து.
“வேற என்ன செட்டியார் மவ கவிதா நேத்து காலேஜில இருந்து வரும்போது வழிமறிச்சு கடுதாசி குடுத்திருக்கு பெரியண்ணன் , ரொம்ப நாளா அந்த புள்ளை பின்னாடியே போயிருக்கு போல”.
“அந்த புள்ளையும் அது அக்காவுக்கு நடந்த மாதிரி நமக்கும் ஆயிடும்னு பயந்துகிட்டு வீட்ல சொல்லல , அப்படியும் அது பயந்த மாதிரியே இப்போ எல்லாம் நடக்குது , இவங்கள என்ன செய்யனு தெரியல” என்றான் சக்கரை.
“என்ன செய்யணும் கைய கால ஒடச்சு வீட்ல மூலைல போடணும், எத்தன பொண்ணுங்க வாழ்க்கை போச்சு , கடுதாசி கொடுத்தவன விட்டுட்டு அந்த புள்ளையை எதுக்கு இந்த பெரியம்மா அசிங்கப்படுத்துது “.
“இவங்க புள்ளை ஊர்ல இருக்குற எல்லா புள்ளைங்க பின்னாடியும் பொறுக்கி மாதிரி சுத்துவவான் லெட்டர் குடுப்பான் , அம்மா அடுத்த நாள் அந்த புள்ளைங்க வீட்டில போய் எல்லாரையும் அவமானப்படுத்துவாங்க , நாமளும் எத்தனை வருஷமா இதை பாத்துட்டு இருக்கறது” என்று ஆவேசமானாள் உஷா.
“இல்லனா மட்டும் அவனுக்கு தெரியாம போகுமா” என்று கேட்டுக்கொண்டே வந்தான் மதியழகன்.
“எல்லாரும் இப்படி கூடி கூடி பேசுனா அவனுக்கு தெரிஞ்சிடும் , அவன் சாப்பிட்டு முடிக்கற வரைக்கும் பேசாம இருங்க” என்றவன்.
“உஷா போய் சாப்பாடு எடுத்துவை” என்றான்.
“டேய் நீ சாப்டியா” என்றான் சக்கரையிடம்.
“சாப்ட்டேண்ணா”.
“சரி நீ முன்னாடி போய் அவன் சொன்ன வேலையை செய் , மாமா நீங்க கத்தரிக்காய் தோட்டத்துக்கு போங்க , அவன் இன்னைக்கு அந்த பக்கம் போனா சரியா வராது” என்றவனை பார்த்து சம்மதமாக தலை அசைத்தவர் முகம் கலங்கி போய் இருந்தது.
“என்ன மாமா என்ன பண்ணுது” என்று அருகில் நெருங்கிய மனைவியை பார்த்தவர் .
“புள்ள வர்ணம் எனக்கு என்னமோ உள்ளுக்குள்ள பயந்து வருது , ரெண்டு பொட்டப்புள்ளைகள பெத்து வெச்சுருக்கோம் எத்தன புள்ளைக அவங்க குடும்பம்னு எல்லாரோட சாபமும் நம்ம மொத்த குடும்பம் மேலதான விழும்”.
“என்ன மாமா ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க” என்று கணவனை கலக்கத்தோடு பார்த்தார் பஞ்சவர்ணம்.
“இல்ல புள்ள மனசுக்கு என்னமோ சரியாப்படல” என்றவர்.
“ஏய்யா மதி வேலைக்கு போக நேரம் ஆகலையா” என்க.
“போகணும் மாமா” என்றவன் பார்வை தோட்டத்து கதவை பார்க்க தலையை துவட்டிக்கொண்டே உள்ளே வந்துகொண்டிருந்தான் இமயன்.
“மா அண்ணண் குளிச்சுட்டு வந்துடுச்சு” என்ற இளயமகள் ஜமுனாவின் குரலும் சேர்ந்தே ஒலித்தது.
“மாமா நீங்க தோட்டத்துக்கு போங்க , உங்கள இப்படி பாத்தாலே அவனுக்கு சந்தேகம் வந்துடும்” என்றான் மதியழகன், கவலை தோய்ந்த முகத்தோடு நின்ற மாணிக்கத்தை பார்த்து.
“சரிப்பா” என்றவர் மகன் வருவதற்குள் தன்னுடைய வண்டியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
பள்ளிக்கு தயாராகி நின்ற தங்கைகள் இருவரும் தயங்கி நிற்க சாப்பிட வந்தவன் பார்வை அவர்களை கேள்வியாய் நோக்கியது.
“புள்ளைங்க எல்லாம் சாயந்திரம் கம்பராயர் பெருமாள் கோவில் போலாம்னு சொன்னாங்க , பரிச்சைக்கு முன்னாடி ஒரு தடவ போலாம்னு….” என்று வார்த்தைகளை எண்ணி எண்ணி பேசினாள் உஷா.
“யார் யார்..” என்றான் சாப்பிட அமர்ந்துகொண்டு.
அவள் வரிசையாக பெயர்களை சொல்ல “சரி நேரத்தோட வீட்டுக்கு வந்துடனும்” என்று முடித்துக்கொண்டவன் , சட்டை பையில் இருந்து காசை எடுத்து குடுத்து “பிடிச்சது வாங்கிக்கோங்க” என்றான்.
காசை வாங்கிக்கொண்டவர்கள் தாயிடம் தலை அசைத்து விடைபெற்றனர்.
மகனுக்கும் மருமகனுக்கும் வெண்பொங்களோடு சாம்பார் சட்னி பரிமாறிய பஞ்சவர்ணம் மருமகனை பார்க்க “நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சைகை செய்தவன்.
“மாப்ள என்னை ஸ்கூல்ல விட்டுட்டு நீ பண்ணைக்கு போ ஒரு அரைமணி நேரத்துல நான் வரேன்” என்றான்.
“என்னமோ பண்ணுங்க” என்ற பாவனையில் சித்தியை பார்த்துவிட்டு எழுந்துவிட்டான் இமயவரம்பன்.
“நல்லா வெச்சாங்க பேர… எந்த நேரத்துல வெச்சாரோ இந்த மாமா இமயவரம்பன்னு எதுக்கும் மலை எறங்க மாட்றான் , இவனை சமாளிக்கறதுக்கு நான் ரெண்டு பொண்டாட்டி கட்டி ஒரே வீட்லயே வாழ்ந்துடலாம் போல” என்று மனதிற்குள் எண்ணிய மதி “போலாமா மாப்ள” என்று குரல் கொடுத்தான்.