“அதுலயும் முக்கியமா உன் அண்ணன் கண்ணுல இன்னும் எப்படி விழாம இருக்கு!! ஏன்னா முதல்ல இந்த புள்ளைக்குல கடுதாசி குடுத்திருப்பான்” என்றான் மதி.
முடிக்கும்போது சட்டென்று மூலையில் உரைத்தது “அய்யயோ அந்த பரதேசியை பத்தி பேசி இவன் பீ.பியை ஏத்திட்டேனோ” என்று .
இமயனின் முகம் இறுக வண்டியின் வேகம் கூடியது , அவனின் கோபம் புரிந்தததால் அமைதியாகிவிட்டான் மதி.
மதியழகனை பள்ளியில் இறக்கிவிட்டு அவனிடம் ஒன்றும் பேசாமலே வேகத்தில் சீறி பாய்ந்தது இமயனின் புல்லட் .
ஆங்கூர்பாளையத்தில் இருந்து சுருளி அருவிக்கு செல்லும் வழியில் இருக்கிறது இமயனின் பண்ணை , நான்கு மாடுகளை வைத்து தொடங்கினான் , இன்று இருநூறு மாடுகள் உள்ளது , அதிகம் கிர் வகை மற்றும் சிகப்பு சிந்தி , நாட்டு மாடுகள் கொஞ்சம்.
அதோடு நாட்டுக்கோழி வளர்ப்பும் உண்டு , இறைச்சியாகவும் முட்டையும் விற்கப்படும் , கையிருப்பு.. சித்தப்பாவின் நிலத்தை அடமானம் வைத்த பணம் , வங்கி கடன் என்று மொத்தமாக இதில் கொட்டி அவனின் எட்டு வருட உழைப்பின் பலன்.
கடன்கள் அனைத்தையும் அடைத்து இன்று அறியப்படும் ஒரு நபராக வளர்ந்து நிற்கிறான் , வருமானம் வர தொடங்கியதும் முதலில் மீட்டது நிலத்தைத்தான் ஒரு பக்கம் அதில் விவசாயமும் இந்த பக்கம் பண்ணை என்று கடின உழைப்பு.
இன்னும் கொஞ்சம் வங்கி கடன் பாக்கி இருக்கிறது அகல கால் வைக்க விரும்பாதவன் இமயன் நிறுத்தி நிதானமாக நிலையாக முன்னேறுகிறான்.
காலை பண்ணையை சுத்தப்படுத்துவது , பால் கறப்பது அனைத்தும் முடிந்துவிட்டது இனி மாலை ஒரு முறை வேலை இருக்கும் , பண்ணையை ஒருமுறை சுற்றிவந்தவன் தன் அறைக்குள் சென்று கணக்கு வழக்கை பார்க்க அமர்ந்தான்.
சிந்தனை முழுதும் நிறைந்து நின்றாள் ஹிமானி , தன்னை அடையாளம் தெரிந்திருக்குமா நினைவு வைத்திருப்பாளா என்ற யோசனையில் மூளை சூடானது , எதிலும் கவனம் வைக்க முடியவில்லை தலையை பிடித்து அமர்ந்துவிட்டான்.
முனியாண்டி வேலாயி தம்பதிக்கு செல்வராணி தங்கராணி என்று இரண்டு பெண் பிள்ளைகள் முனியாண்டி விரைவாக விடுதலை வாங்கி சென்றுவிட்டார்.
செல்வராணி பாண்டியன் தம்பதிக்கு பாப்பாத்தி என்ற மகளும் கவியரசன் , இமயவரம்பன் என்று இரு ஆண்பிள்ளைகள்.
பாண்டியனின் உடன் பிறந்த சகோதரன் மாணிக்கத்தை தங்கராணிக்கு பேச மாணிக்கம் மறுத்துவிட்டார் , அவரின் மாமன் மகள் பஞ்சவர்ணம் மீது கொண்ட காதலே காரணம் , மாணிக்கம் பஞ்சவர்ணம் தம்பதிக்கு உஷா ஜமுனா என்று இரு பெண் பிள்ளைகள்.
தங்கராணியை அதே ஊரை சேர்ந்த பச்சையப்பனுக்கு மனம் முடித்தனர் அவர்களுக்கு நித்யகல்யாணி ஒரே மகள்.
பஞ்சவர்ணத்தின் அண்ணன் செந்தில் தங்கையின் திருமணத்திற்கு முன்பே திருமணம் முடிந்து மதியழகனும் பிறந்திருந்தான் , மலைக்கு தேன் எடுக்க செல்லும் செந்தில் அங்கிருக்கும் மலை வாழ் பெண்ணின் மீது காதல் கொண்டு அங்கேயே வாசம் செய்ய தொடங்க மனக்கவலை கொஞ்சம் கொஞ்சமாக மதியழகனின் தாயை காவுவாங்கியது.
தாயை இழந்து தந்தையும் உடன் இல்லாமல் இருந்தவனை மாணிக்கமும் பஞ்சவர்ணமும் தங்களுடன் வைத்துக்கொண்டனர் , தாய் தந்தை மீது கொண்ட வெறுப்பில் பதினாலு வயதில் வீட்டை விட்டு வெளியேறிய இமயவரம்பனுக்கும் அவர்களே அடைக்கலம்.
அரண்மனை போன்ற வீட்டின் மதில்சுவரை நெருங்க நெருங்க மீண்டும் சிறைக்குள் செல்லும் உணர்வே ஹிமானிக்கு , உள்ளே வரமால் வாயிலில் நின்றே ஹிமானியிடம் வீட்டிற்கு போவதாக கூறினாள் நித்யா.
அந்த வீட்டிற்குள் அவள் செல்வதில்லை மிக மிக அவசியம் என்றால் ஒழிய அதற்குள் செல்ல விருப்பம் இல்லை , அவளின் விழிகள் நேரே அந்த பளிங்கு மாளிகையின் தாழ்வாரத்தை நோக்க பெரிய மர ஊஞ்சலில் ராஜமாதாவின் தோரணையோடு ஆடிக்கொண்டிருந்தார் தேவகி.
“நாளைக்கு வரேன்” என்று கூறி விடைபெற்றாள் , தலை நிமிராமல் உள்ளே நடந்த ஹிமானி பாட்டியிடம் பிரசாதம் கொடுத்துவிட்டு நேரே பூஜையறை சென்றுவிட்டாள்.
மரத்தொழில் அவர்களுடையது , அவர்களே செய்து கொடுப்பது மற்றும் தனியாக கடையும் வைத்திருக்கிறார்கள் , தரமான நல்ல பொருட்களுக்கு அவர்கள் கடைக்கே மக்கள் அதிகம் வருவது , அதோடு வீட்டிற்கு இப்படி கட்டில் வேண்டும் உணவு மேசை ஊஞ்சல் என்று கேட்டு வருபவர்களுக்கு அதைப்போல அவர்கள் கேட்கும் மரத்தில் கேட்கும் வேலைப்பாட்டுடன் செய்து கொடுப்பர்.
இப்பொழுது அமைச்சர் ஒருவர் மகளின் திருமணத்திற்கு தேக்கடியில் பங்களா ஒன்று கட்ட , அதற்க்கு அணைத்து விதமான மர வேலைகளும் இவர்களிடம்.
கல்யாணப்பெண் அவளின் வீட்டிற்கு அவளே வடிவமைத்து கொடுத்திருக்கிறாள் என்ன என்ன பொருள் , எந்த மரம் , எப்படி வேண்டும் அனைத்தும்.
கோடிகளில் வியாபாரம் இன்றுதான் முதல் மரம் அறுத்து வேலை தொடங்க போகிறார்கள் , ஹிமாவின் கையால் பூஜைசெய்து திலகம் இட்டு பின்பே செல்வார்கள் , இன்று முழுவதும் வெறும் பால் பழம் உண்டு அவள் விரதம் இருக்க வேண்டும்.
வீட்டின் உறுப்பினர்கள் அனைவரும் வரிசையாக வந்து நின்றனர் , பெரியப்பா முன்ஜல் பெரியம்மா ரமீலா அண்ணன் யாஷ் அண்ணி பாயல்.
இரண்டாவது பெரியப்பா பிரவன் மனைவி வம்ஷி , மகன்கள் ஆன்சல், அன்சல் மற்றும் மகள் விராலி.
ஹிமாவின் தந்தை பிரணத் , தாய் சல்மா ஹிமானியின் குட்டி தம்பி ரன்வீர் அனைவரும் , உடன் பாட்டி தேவகியும்.
வீட்டின் மூத்த பேரக்குழந்தை மஹிமா திருமணம் முடிந்து மஹாராஷ்டிராவிலே இருக்கிறாள்.
ஆரத்தி காண்பித்து ஆண்கள் அனைவர்க்கும் லட்டுவை கொடுத்து நெற்றியில் திலகம் இட அனைவரும் தேவகியிடம் ஆசி பெற்று வெளியேறினர்.
முன்னில் இருக்கும் பாலை குடிக்க பிடிக்காமல் வெறித்து பார்த்து அமர்ந்திருக்கும் மகளை வேதனையோடு பார்த்தார் சல்மா , விரும்பியதை உன்னக்கூட முடியாமல் என்ன வாழ்விது என்று ஆத்திரமாக வந்தது.
“சல்மா… அத்தை பாக்காம கொஞ்சம் காபி குடுக்கலாம் பாவம் குழந்தை அவளுக்கு பால் பிடிக்காது , அதை சொன்னாலும் இவங்க புரிஞ்சிக்க மாட்றாங்க” என்று கையை பிசைந்தார் மூத்த மருமகள் ரமீலா.
“அக்கா நாம குடுத்தாலும் அவளை எங்க அவங்க தனியா விடுவாங்க, இன்னைக்கு பூரா அவங்க கண்ணு முன்னாடியே இருந்து அவ ஸ்லோகம் சொல்லணும்” என்று வம்ஷி கூற.
“நீங்க சாப்பிடுங்க எனக்கு பசிக்கல” என்று தங்கள் அறைக்குள் நுழைந்துகொண்டார் சல்மா , மகளின் எதிர்காலம் அவரை வெகுவாக அச்சுறுத்தியது.
பாலும் பழமும் வேண்டாம் என்று அன்று முழுவதும் பிடிவாதமாக உண்ணாமல் இருந்தாள் ஹிமானி , சரியாக ஒன்பது மணிக்கு தேவகி உறங்க செல்ல , அவளின் அறை வாயில் தட்டும் சத்தத்தில் அவள் இதழ்களில் மெல்லிய புண்ணகை.
கதவை திறந்தவளை அப்படியே தள்ளிக்கொண்டு கட்டிலின் அருகில் வந்த சகோதரர்கள் ஆன்சல் மற்றும் அன்சல் சுட சுட மசால் தோசையை அவள் முன் விரித்து வைக்க , மணக்க மணக்க காப்பியோடு வந்து அவளுக்கு தன் கையாலே ஊட்டிவிட்டார் பெரியம்மா ரமீலா.
இவர்களின் அன்புதான் இன்னும் அவளை உயிர்ப்போடு வைத்திருக்கிறது , இப்பொழுது சில வருடங்களாக இப்படி மாறி இருக்கிறது , அண்ணன்களின் உருட்டல் மிரட்டலில்.
அவளும் கொஞ்சம் பாட்டிக்கு தெரியாமல் இரவு மட்டும் உண்ணுகிறாள் , மகன்கள் யாரும் தேவகி கிழித்த கோட்டை தாண்ட மாட்டார்கள் மூத்த பேரன் யாஷும் அப்படியே கடுமையானவன்.
பெரியம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு இதை வேடிக்கை பார்த்தான் ரன்வீர் , பெரிதாக இதில் உடன்பாடு இல்லை வம்ஷிக்கு ஆனாலும் ஒன்றும் கூறாமல் அமைதியாக ஒதுங்கி நின்று விடுவாள்.
அவளின் மகன்கள் செய்வதை தவறு என்று அனைவர் முன்பும் கூறி அவர்களை சிறுமை படுத்த விரும்பவில்லை அதே நேரம் தான் கூறினாலும் மகன்கள் தன் பேச்சை கேட்க மாட்டார்கள் என்பதும் ஒரு காரணம்.
ஹிமானியை தேவகி கொண்டாடுவது கொஞ்சம் எரிச்சலையும் கிளப்பும் வம்ஷிக்கு , அவளின் மகள் விராலிக்கு இதுபோன்ற அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை என்ற பொறாமை நிறைய உண்டு , இது பெருமையோ வரமோ அல்ல ஒரு விதமான சாபம் என்று அவளிடம் யார் கூற.
தமக்கைக்கு அக்கறையாக தண்ணீர் கொண்டு வந்து வைக்கும் மகளை பார்த்து பல்லை கடிக்கத்தான் முடிந்தது.
மதி வந்து வெகு நேரம் சென்றே வீட்டிற்கு வந்து சேர்ந்தான் இமயன், கத்திரிக்காய் பறிக்கும் இடத்திற்கு போகவேண்டும் என்று எண்ணியவன் எங்கும் செல்லவில்லை.
அவளை பார்த்த நொடியில் இருந்து மனம் நிம்மதியின்றி தவிக்கிறது, ஒருவரிடமும் சொல்லி ஆறுதல் தேட இயலாது ஏன்? அவன் சித்தப்பாவிற்க்கே விஷயம் முழுதாக தெரியாது.
மீண்டும் அவளை காண எத்தனை இரவுகள் அவள் வீட்டின் எதிரில் இருக்கும் வேப்பமரத்தின் மறைவில் இரவில் ஒளிந்து நின்றிருக்கிறான், இத்தனை அருகில் அவளை பார்ப்பது இதுவே இரண்டாவது முறை.
தீவிரமான யோசனையோடு நடந்து வந்தவனை அவன் முகத்தை வைத்தே எதுவோ சரி இல்லை என்று புரிந்துகொண்டார்கள் பஞ்சவர்ணமும் மாணிக்கமும்.
“எதுக்கு இவ்ளோ நேரம் முழிச்சு இருக்கீங்க எனக்கு எடுத்து சாப்பிட தெரியாதா” என்றான் சித்தயிடம்.
கணக்குகளை அவனிடம் ஒப்படைக்க காத்திருந்த மாணிக்கம் அதை அப்படியே மாற்றி வைத்துவிட்டு “இல்லையா சும்மா அப்படியே பேசிட்டு இருந்தோம் நேரம் போயிருச்சு” என்க.
“போய் தூங்குங்க , சித்தி சாப்பாட்ட குடு நான் குளிச்சுட்டு சாப்பிடுறேன்” என்று வாங்கிக்கொண்டு இந்த வீட்டிற்கு பக்கத்திலே இருந்த ஒரு சிறிய வீட்டிற்குள் நுழைந்தான்.
மாணிக்கத்தின் வீட்டில் இரண்டு அறைகள் மட்டுமே , அதிலும் இரண்டும் பெண்பிள்ளைகளாக இருக்க ஒரு கட்டத்தில் பக்கத்திலே சிறிதாக ஒரு ஹால் இரண்டு அறைகள் வைத்து கட்டிக்கொண்டு மதியும் இமயனும் அங்கே மாறிக்கொண்டனர்.
இவன் வீட்டிற்குள் நுழைய வினாத்தாள் எடுக்கும் வேளையில் மூழ்கி இருந்தான் மதி , அரசு பள்ளியில் கணித ஆசிரியர் அவன்.
“என்ன பிரச்சனை உனக்கு ? காலைல நான் சொன்னதுல அப்செட் ஆயிட்டியா??” என்ற மதியை பார்த்தவன் அவனிடம் தான் மறைத்து வைத்து இருக்கும் அந்த ஒற்றை ரகசியத்தை மீண்டும் தன்னுள் புதைத்துக்கொண்டு “வேலைய பாருடா” என்று குளிக்க செல்ல.
“இவன் திருந்த மாட்டான்” என்று மீண்டும் புத்தகத்தில் பார்வை பதித்தான் மதி.