“நாங்க வேண்டாம் தான் சொன்னோம் அப்பத்தான் கேக்கலேன்னா” என்றாள் ஜமுனா.
“ஒருத்தன் பின்னாடி வந்ததுக்காக ஓடி ஒளிய முடியாது தைரியமா போங்க அண்ணே இருக்கேன்” என்றபிறகு அங்குப் பேச்சுக்கள் ஏது.
“சித்தப்பா நீங்கத் தோட்டத்துக்குப் போங்க எனக்கு முக்கியமான வேலை இருக்கு அத முடிச்சுட்டுதான் பண்ணைக்குப் போகணும்” என்க.
“சரிய்யா நீ போ நான் பாத்துக்குறேன், அதுக்கு முன்னாடி ஒரு எட்டு ஆசுபத்திரிக்கு போயிட்டு வந்துர்றேன்” என்றவரை அவன் முறைத்து நிற்க “சித்தப்பா போலாமா” என்று வந்து நின்றாள் நித்யா.
இமயனின் விழிகள் கூர்மையாக அவளில் படிய கையில் இருந்த பாத்திரத்தைப் பின்னில் மறைத்தவள், அவன் பார்வை கூர்மையாவதை உணர்ந்து.
“அம்மாதான் சாப்பாடு குடுக்க சொல்லுச்சு அத குடுத்துட்டு அப்படியே ஹிமானி கூடப் பெருமாள் கோவில் போகணும், அப்புறம் நேரே வீட்டுக்குப் போய்டுவேன் ஆசுபத்திரில இருக்க மாட்டேண்ணே” என்று கடகடவென்று அனைத்தையும் ஒப்பித்தாள்.
பல சந்தர்ப்பங்களில் செல்வராணி நித்யாவையும் அவள் தாயையும் நன்றாக வேலை வாங்குவார் அதாலேயே அவர்கள் இருவரையும் அங்கே அனுப்புவதில்லை இமயன்.
அவன் எதிர்பாராமல் காலைச் சுப செய்தியாக அவனின் செவியை நிறைத்தது ஹிமானி கோவில் செல்வது, ஒன்றும் பேசாமல் விரைவாகத் தன் அறைக்குத் திரும்பினான்.
“வாம்மா அவன் மனசு மாறதுக்குள்ள போய்டலாம்” என்ற மாணிக்கம் வண்டியை எடுக்க நித்யாவும் அவசரமாக ஏறிக் கொண்டாள்.
முக்கியமான வேலையைத் தூக்கி உறியில் மாட்டிவிட்டு முதல் ஆளாகப் பெருமாள் கோவில் சென்று நின்றான் அவளைக் காண.
“அடியே பாப்பாத்தி பாருடி உன் தம்பிய எப்படி கிடக்குறான்னு, கையை அசைக்கவே இன்னும் ஒரு வாரம் ஆகுமாம் உடம்பெல்லாம் ரத்தம் கட்டி கிடக்கு, வாய திறக்கவே முடியல பாரு, எப்படி வீங்கி இருக்குனு, வயசுல நம்மள விடப் பெரியவனாச்சே சொந்த அண்ணன் ஆச்சேன்னு நெனப்பிருக்கா அந்தத் திமிர் புடிச்சவனுக்கு” என்று மருத்துவமனையில் அமர்ந்து ஒப்பாரி வைத்தார் செல்வராணி.
“சும்மாவா உழைச்சு உரமேறிய உடம்பு அடி இடி மாதிரிதானே விழும், உங்க புள்ளைகிட்ட யாரும் வம்படியா போய் வாங்க சொல்லலையே” என்று வந்த மருமகனை பார்த்ததும் கமுக்கமாக வாயை மூடிக்கொண்டார் செல்வராணி.
மருத்துவரிடம் பேசிவிட்டு வந்தான் பாப்பாத்தியின் கணவன் முத்துவேல் “என்ன சொல்லுறாங்க மாப்பிள” என்ற மாமியாரை பார்த்தவன்.
“உடம்புல கொழுப்பு கூடுதலா இருக்காம் அதைக் குறைக்க சொல்றாங்க” என்று சீரியஸாக சொன்னவனை பார்த்து “உண்மையா பொய்யா” என்று தெரியாமல் திரு திருவென்று விழித்தார்.
பாப்பாத்தி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டாள் “பத்து நிமிஷம் சேர்ந்தாப்புல வெயில்ல நின்னு வேலை பாத்திருக்கியா, வயல் வேலை செய்ய ஆளு இல்லாம தரிசா கிடக்கு, உனக்குச் சின்னவன்தானே அவன் சும்மா இருந்து இந்தப் பதினெட்டு வருஷத்துல நான் பாத்ததில்லை”.
“எட்டு வயசுல உங்க அப்பாகூட மாடு மேய்க்க பால் கறக்க, வீடு வீடா கொண்டு குடுக்கனு அப்போகூட அவன் வேலை செஞ்சுதான் பாத்திருக்கேன், குந்தி தின்னாக் குன்றும் கரையுமாம் ஏற்கனவே கரைஞ்சிருச்சு அதுக்கப்புறமும் இப்படியே இருந்தா அடுத்தவன் காட்டுல கூலி வேலைக்குத்தான் போகணும்” என்றவன்.
“இந்தா புள்ள நான் போய் டீக்குடிச்சுட்டு உங்களுக்கும் வாங்கிட்டு வரேன்” என்று வெளியில் சென்றான்.
சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்த செல்வராணி “ஏண்டி பாப்பாத்தி இவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிவெச்சுட்டா ஒழுங்கா வேலை பார்த்து நல்லா இருப்பான்ல” என்க.
“ஆமாம் உன் மவனுக்கு பொண்ணு குடுக்க வரிசையில நிக்குறாங்க, வந்தத எல்லாம் வெரட்டிவிட்டுட்ட இப்போ யார் பொண்ணு தருவா, அதும் ரொம்ப நல்ல பேர சம்பாரிச்சு வெச்சுருக்கான்” என்று முகத்தை வெட்டினாள்.
“சரிடி, ஏதோ போறாத காலம் உன் தம்பிதானே நம்ம புவியை உன் தம்பிக்குக் குடேன், நல்லா பாத்துப்பான்டி நானும் இருக்கேன் என் பேத்தியைப் பாதுக்கமாட்டேனா” என்க.
பாப்பாத்தி நெஞ்சில் கைவைத்து “ஆத்தீ” என்று அலறிவிட்டாள்.
“என்னடி” என்ற தாயை பார்த்தவள் வேகமாக வெளியில் எட்டி பார்த்துவிட்டு “புத்தி மழுங்கிடுச்சாமா உனக்கு, என் புள்ளைக்கு இப்போதான் பதினேழு வயசு ஆகுது இவனுக்கு வயசு முப்பது தாண்டிடுச்சு”.
“அதோட இந்த விஷயம் என் புருஷன் காதுல விழுந்தது என் மவ உன் வீட்ல வாழவரமாட்டா நான் தான் வாழாவெட்டியா வந்து இருக்கணும், என் வாழ்க்கைல கும்மி அடிச்சுடாத”.
“தப்பித்தவறி சின்னவன் காதுக்கு விஷயம் போச்சு…. சின்னப் புள்ளைக்கு கல்யாணம் பேசினன்னு உன்னையும் கட்டாய கல்யாணம்னு உன் புள்ளயையும் அவனே போலிஸில புடிச்சு குடுத்துடுவான், திரும்ப அடிவாங்கத் தெம்பு இருக்கா உன் புள்ளைக்கு” என்க அவளை முறைத்துக்கொண்டு பேசாமல் இருந்துவிட்டார் செல்வராணி.
வாயிலில் நிழலாட நிமிர்ந்து பார்த்த பாப்பாத்தி “வாங்க சித்தப்பா” என்று எழுந்து நின்றாள்.
“என்னத்தா எப்படி இருக்க புள்ளைங்க எங்க?? மறுமவன காணும்?” என்றவரிடம் “நல்லா இருக்கேன் சித்தப்பா, புள்ளைங்க அத்தை கூட இருக்கு அவர் டீ வாங்கியார போயிருக்காரு” என்றவள்.
“வாடி எப்படி இருக்க” என்றாள் பின்னேயே வந்த நித்யாவிடம்.
“நல்லாருக்கேன்கா” என்றவள் “பெரிம்மா இந்தா காலைக்கு அம்மா இட்லி சாம்பார் குடுத்துவிட்டுச்சு” என்று தூக்கு பாத்திரத்தை அங்கே வைக்க.
“ஏன் அந்த மகாராணிக்கு வந்து பாக்க முடியாதோ, அக்கா புள்ள அடிபட்டுக் கெடக்கானே ஒத்தைல என்ன பண்ணும் கூடப் போய் நின்னு பாப்போம்னு இருக்கா அவளுக்கு, வீட்ல என்னத்த அடைகாக்குறா” என்று தன் வெண்கல குரலில் நீட்டி முழங்க.
“மா மொள்ள பேசு இது ஆசுபத்திரி வெளில அனுப்பிடுவாங்க, சித்தி வேணும்னேவா வரமா இருக்கும்? இவன் என்ன போருக்கா போயிட்டு வந்து படுத்துருக்கான் எல்லாரும் வந்து வந்து பாக்க” என்றாள் பாப்பாத்தி.
தாயை பேசியதும் நித்யாவிற்கு ஆத்திரமாக வந்தது “தென்னந்தோப்புல ஊடால நட பப்பாயா கண்ணு வந்துருக்கு, நானூறு கண்ணு நடனும், ரெண்டு தோப்புல வேலை கிடக்கு, அண்ணே சொல்லிப்புச்சு எங்கயும் போக வேண்டாம் தோட்டத்துல நில்லுங்கனு” என்க முகத்தை வெட்டிக்கொண்டார் செல்வராணி.
“நீ உடுத்தா அதெல்லாம் சொன்ன இவங்களுக்கு புரியாது” என்ற மாணிக்கம்.
“ஆத்தா பாப்பாத்தி தோட்டத்துல வேலை கிடக்கு நம்ம தோட்டம் தங்கராணி தோட்டம் ரெண்டுலயும் நடனும் அங்க வர்ணமும் தங்கமும் நிக்குறாங்க நானும் போறேன், சின்னவனுக்கு முக்கியமான வேலை இருக்குனு கெளம்பிட்டான்”.
“அவனும் பாவம் எங்க ஒக்காந்து எழுறான் எந்த நேரமும் ஓட்டம்தான்” என்றவர் உள்ளே நுழைந்த முத்துவேலை பார்த்து நலம்விசாரித்து “வீட்டுக்கு ஒரு எட்டு வந்துட்டு போங்க” என்க.
சாமி கும்பிட்டு பிரகாரம் சுற்றி ஓரமாகக் குளத்தின் படிக்கட்டில் மர நிழலில் நின்று குளத்தைப் பார்த்திருந்தான் இமயன், கோவிலுக்குள் அனைவரும் அறிந்தவர்கள் உள்ளேயே நின்றிருந்தால் ஆராய்ச்சியாகப் பார்க்கத் தொடங்குவர்.
இதுபோல் தனியாகக் கோவிலுக்கு வந்ததில்லை கடவுள் நம்பிக்கை இல்லை என்று அல்ல, விசேஷ நாட்களில் வருவது அல்லாது இப்படி சாதாரண நாட்களில் வந்ததில்லை.
அதிகம் போவது சிவன் ஆலயத்திற்கு, அதுவும் தனியாகக் காட்டின் உள்ளே இருக்கும் அந்த அமைதிக்கு வேண்டியே அங்குச் செல்வான்.
“என்னடா பண்ற விடலை பசங்க மாதிரி சின்னதா ஒரு சந்தேகம் வந்துட்டாலும் தீயா பரவிடும், உன்னால அந்தப் புள்ளைக்கு கெட்ட பேர் வரக் கூடாது” என்று நினைத்தவன் சென்றுவிடலாம் என்று மீண்டும் குளத்தின் வழியே உள்நுழைய.
அடர் நீல நிறத்தில் வெள்ளி ஜரிகை இழையோடும் சல்வாரோடு, அதே நிறத்தில் கழுத்தை சுற்றி கிடந்த ஷால் காற்றில் மிதக்க, நித்யாவுடன் கோவில் படியைக் கடந்து வந்துகொண்டிருந்தாள் அவன் தேவதை.