“பளார்” என்று அறை விழுந்த சத்தத்தில் ஹாலிற்கு வந்து பார்த்தாள் ஹிமானி , அனைவரும் தேவகியை பார்க்க ஹிமானியின் பார்வை தங்கை விராலியின் மீது பதிந்தது.
ஒரு கன்னத்தை கையால் அழுத்தி பிடித்து நின்றிருந்தாள் விழியில் நிற்காமல் நீர் வழிந்தது “இன்னும் எட்டு மாசத்துல கல்யாணம் , ஒழுங்கா ஒரு ரொட்டி சுட தெரியுதா” என்ற தேவகி அவள் டேபிளில் வைத்திருந்த பாத்திரத்தை காட்டினார்.
தங்கையின் அருகில் வந்த ஹிமானி அவளை தன்னோடு சேர்த்து நிறுத்த ஹிமானியின் தோளில் சாய்ந்து சத்தமில்லாமல் அழுது கரைந்தாள் விராலி.
“ரொட்டி சின்னதா இருக்கு , இது மொத்தமா இருக்கு , இதுல கொஞ்சம் கரிஞ்சிருக்கு , அதோட நெய் அப்படியே கொண்டு வந்து வெச்சுருக்க தனி தனியா எல்லார்க்கும் கிண்ணத்துல வெக்கணும் தெரியாதா?”.
“இப்படி பொறுப்பில்லாம இருந்தா போற எடத்துல எங்களை என்ன சொல்லுவாங்க” என்றவரை என்ன செய்ய என்று பார்த்திருந்தாள் ஹிமானி.
அவர் சொல்லிய எதுவுமே பெரிய குற்றங்கள் அல்லவே , அதிலும் ரொட்டிகள் நன்றாகவே இருந்தது மகன்கள் அனைவரும் ஒன்றும் பேசாமல் அமைதியாக உண்டுகொண்டிருக்க , அன்சல் பாட்டியை எதிர்த்து கேள்விகேட்டான்.
“எதுக்கு பாட்டி அவளை அடிசீங்க , ரொட்டி எல்லாம் நல்லா தானே இருக்கு , அப்படியே இல்லனாலும் அதுக்கு ஏன் அடிசீங்க சொன்னா அடுத்த தடவ சரியா செய்யப்போறா” என்க.
“இல்ல பெரியப்பா நா சொல்றத….” என்றவன் முடிக்கும் முன் அவனை அடித்திருந்தார் அவன் தந்தை பிரவன்.
“என்ன நெனச்சுட்டு இருக்க பாட்டியை கேள்வி கேக்குற , பெரியப்பாவை எதிர்த்து பேசுற எங்க இருந்து இந்த பழக்கம்” என்றவுடன்.
இத்தனை நேரம் அமைதியாக இருந்த ஆன்சல் “பா அவன் சொல்லவந்ததை கேளுங்க வெறும் ரொட்டி சுடவும் டீ போடவுமா நம்ம பொண்ணை கல்யாணம் பண்ணி அனுப்புறோம் , இது பெரிய விஷயமான்னு தான் கேட்டான் அவளுக்கு அண்ணனா இதைக்கூட பேச எங்களுக்கு உரிமை இல்லையா” என்றவன்.
“வா” என்று தமையனை அங்கிருந்து அழைத்து சென்றுவிட்டான்.
ஹிமானி விராலியை தன்னுடைய அறைக்கு அழைத்து சென்றாள்.
அனைவரும் அமைதியாக இருக்க “சரி சரி சாப்பிடுங்க இதுக்குதான் ஆம்பள பசங்கள கூட அதிகமா படிக்க வைக்க வேண்டாம் சொன்னேன், இன்னும் கொஞ்சம் கவனிங்க அவங்கள , அப்படியே இவங்க கல்யாணத்தையும் சீக்கிரம் முடிக்கணும்” என்றார் தேவகி.
தாய்மார்கள் ஒன்றுமே செய்ய முடியாத இயலாமையில் நின்றனர்.
ஐஸ் கட்டிகளை மெல்லிய துணியில் சுற்றி விராலிக்கு ஒத்தடம் கொடுத்தாள் ஹிமானி “எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்” என்ற விராலியை அயர்வாக பார்த்தாள்.
நிச்சயம் முடிந்துவிட்டது திருமண நாள் குறிக்கப்பட்டு விட்டது , இந்த குடும்பத்தில் இருந்துகொண்டு எப்படி அவர்கள் முடிவு செய்த திருமணம் வேண்டாம் என்று முடிவெடுக்க முடியும்.
விராலிக்கு எரிச்சலாக இருந்தது , தினமும் குறைந்தது ஐம்பது சப்பாத்திகள் சுட வேண்டும் மூன்று வேலையும் ரொட்டி வேண்டும் அவர்களுக்கு , அதோடு கொஞ்சம் சாதம் ஏதாவது காய் என்று வேண்டும்.
ஹிமானி நன்றாக சமைப்பாள் , இப்பொழுது விராலி கல்யாணம் முடிவானதால் அவளே வீட்டில் சமைக்க வேண்டும் என்பது தேவகியின் கட்டளை.
அவளும் பாவம் தினம் தினம் இதை செய்து செய்து அவளுக்கு வெறுப்பு வந்துவிட்டது , பிடித்த திருமணம் என்றால் ஆசையாக அனைத்தையும் செய்து பழகி இருப்பாள் இப்பொழுது இந்த திருமணமே பிடிக்கவில்லை இதில் சமையல் ஒன்றுதான் கேடா என்பது அவள் வாதம்.
“என்ன செய்ய முடியும் விராலி” என்று கன்னம் பற்ற.
“என்னால முடியாது , மாலா அவதட் நஹி (எனக்கு பிடிக்கல) இந்த நரகத்துல இருந்து இன்னொரு நரகத்துக்கு அனுப்புறாங்க , இவங்களுக்கு எந்த விதத்திலையும் குறைஞ்சவங்க இல்லை அவங்க, எனக்கு அவனை பிடிக்கல அவங்க வீட்ல யாரையுமே பிடிக்கல” என்று அழுத்தவளை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள் ஹ்மானி.
ஹிமானியை விட நான்கு மாதங்கள் இளையவள் விராலி , ஹிமானிக்கு வீட்டோடு மாப்பிளை பார்த்துக்கொண்டிருக்க அவர்கள் விரும்பிய போல ஒன்றும் கூடிவரவில்லை அந்த சமயம் வந்த ஒரு வரன் நல்ல குடும்பம் என்று இவர்களுக்கு தோன்ற , விராலிக்கு முடிவு செய்துவிட்டனர்.
அது ஒரு கூட்டு குடும்பம் இங்கிருப்பதை போல பத்து பண்ணிரெண்டு பேர் இருக்கும் குடும்பம் , இங்கிருப்பதை போல அடக்குமுறைகள்.
அவனை விராலிக்கு பிடிக்கவே இல்லை , அவனிடம் அவள் பேச மறுத்தாலும் வம்படியாக பேச வைப்பான் தேவகியிடம் சொல்லி , ஒரு மணி நேரம் அவனே பேசிக்கொண்டிருப்பான் இவள் பதில் கூட சொல்ல மாட்டாள் பல சமயம்.
அதற்கு அவனின் அம்மா “என்ன பெண் பிள்ளை இவள் பையன் அழைத்து பேசினாலும் அவள் அவனிடம் கூறி சிறிது நேரத்திலே வைக்க வேண்டாமா , இவ்வளவு நேரம் பேசுறா? இதெல்லாம் என் வீட்டுக்கு சரியா வராது” என்று ஒரு பஞ்சாயத்தை கூட்டினார்.
அதற்கும் இவளுக்குத்தான் திட்டு விழுந்தது “அட பரதேசிங்களா நீங்க பாத்தவன் தான் பேசியே சாவடிக்கிறான் , அந்த எருமையை விட்டுட்டு என்ன கேக்குறீங்க” என்றவளுக்கு இவர்கள் அனைவரையும் பத்து நாட்கள் பாலைவனத்தில் தண்ணீர் இல்லாமல் தவிக்க விடும் ஆத்திரம்.
விராலி கொஞ்சம் துடுக்குத்தனம் மிகுந்தவள் ஹிமானியை போல அல்ல “நீ வேணா பாரு சொல்லாம ஒரு நாள் ஓட போறேன்” என்றாள் முடிவாக.
“கல்யாணத்தை நிறுத்த முடியுமா விரா…. நாம ஆசைப்பட்டதெல்லாம் நமக்கு கிடைக்க வாய்ப்பிருக்கா என்ன!!” என்ற ஹிமானியின் குரலில் எம்மாற்றமும் ஏக்கமும் நிறைந்து வழிந்தது.
அவன் வேண்டும் அவன் காதல் வேண்டும் , அவனிடம் கேட்க்கும் தைரியமும் இல்லை , உன்னை அப்படி பார்க்கவில்லை என்று அவன் கூறிவிட்டாள் அதை தாங்கும் திடமும் இல்லை.
ஹிமானியை பார்த்த விராலிக்கு வருத்தமாக இருந்தது , தாங்களாவது பரவாயில்லை ஆனால் ஹிமானியை பாட்டி எப்பொழுதும் அவரின் அடிமையை போலவே நடத்தி இருக்கிறார்.
திருமணம் கூட அவளுக்கான விடுதலையை தராது இந்த நரகத்திலேயே அவள் வாழ வேண்டும் மடிந்து மண்ணாகும் வரை இந்த வீட்டிற்குள் அவள் ஒரு கொலு பொம்மையாக , என்ன கொடுமை இது என்று அனைவர் மீதும் கோபம் வந்தது.
இதில் அதிகம் கோபம் அவன் மீதுதான் கையில் கிடைத்தால் அவனை கடித்து தின்று விடும் ஆத்திரத்தில் இருந்தாள் விராலி பிடித்தம் சொல்லி வருடம் ஒன்று கடந்து விட்டது இன்றும் பதில் சொல்லாமல் இருக்கிறான்.
“இதெல்லாம் நடக்குமா நடக்க வாய்ப்பிருக்குனு நீ நம்புறியா விரா , நாம அண்ணங்ககிட்ட பேசலாம் அவங்க நமக்கு சப்போர்ட் பண்ணுவாங்க”என்றாள் ஹிமா அப்பாவியாக.
“உனக்கு இன்னும் மனுஷங்களை புரியல , இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கு வேணா அவங்க குரல் குடுப்பாங்க கல்யாணம் மாதிரி விஷயத்துக்கெல்லாம் நமக்கு தான் அறிவுரை கிடைக்கும் , கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போங்க அவங்க சொல்ற தப்பை எல்லாம் சரி பண்ணிக்கோங்க அப்படின்னு”.
“அதோட உன்னால கிடைக்குற அதிர்ஷ்டத்தை இழக்க அவங்க கூட விரும்பல அதனாலதான் அவங்களும் சேந்து உனக்கு வீட்டோட மாப்பிள பாக்குறாங்க , உன் கிட்டயோ என் கிட்டயோ கேட்டாங்களா எப்படி மாப்பிள வேணும்னு” என்ற விராலியை பார்த்திருந்த ஹிமானிக்கு அழுகை வந்தது.
“இங்கிருந்து விடுதலை இல்லையா” என்றவள் தளர்ந்து கீழே அமர்ந்தாள் .
அவளை பார்க்க நெஞ்சம் அடைத்தது உள்ளுக்குள் அவளுக்கும் எத்தனை ஆசைகள் இருக்கும் அவளுக்கு என்ன பிடிக்கும் என்று கூட யாருக்கும் தெரியாது , மனதில் என்ன நினைக்கிறாள் என்று எங்கேயும் வாய் திறந்ததில்லை.
விராலிக்கு தலை வலிப்பதை போல இருந்தது “நா போய் தூங்குறேன் அப்போதான் காலைல மைண்ட் பிரெஷா இருக்கும் யோசிக்க முடியும்” என்றவள் அவள் அறைக்கு செல்ல , ஹிமானி கால்முட்டியில் முகம் புதைத்து விழி மூடினாள்.
ஹிமானி…… அவளை சொல்லி குற்றம் இல்லை அவள் வளர்க்கப்பட்ட விதம் அப்படி , சிறு வயதில் தேவகி அவள் மனதில் பதியவைத்தார் “நீ இந்த வீட்டின் அதிர்ஷ்டம் நான் சொல்றதை கேட்டு நீ நடந்தா நாம எல்லாரும் இப்படி வசதியா செல்வாக்கா வாழலாம்” என்று.
அறியா பிராயத்தில் அவளும் அதை நம்பினாள் , வீட்டில் மற்றவரிடம் கோபப்பட்டு குரல் உயர்த்தும் பாட்டி , பெரியப்பா யாரும் அவளிடம் அப்படி நடந்துகொள்வதில்லை , நல்ல நல்ல ஆடைகள் ஆபரணங்கள் எந்த விஷயமாக இருந்தாலும் தன் கையால் தொடங்குவது என்று அவளுக்கு பெருமையாகவே இருந்தது.
மெல்ல மெல்ல தான் ஒரு சிறைக்குள் வளர்க்கப்படும் தங்க கிளி என்னும் உண்மை புரியத்தொடங்கியது , ஹிமானி விராலி நித்யா அனைவரும் ஒன்றாக படித்தவர்கள் ஆனால் விராலியும் நித்யாவும் மிகவும் நெருங்கிய தோழிகள் அவர்களுடன் படித்தாள் என்பதை விட எப்போதாவது வந்து சென்றாள் என்றுவேண்டுமானால் கூறலாம்.
காரணம்… ஹிமானியை தேவகி அதிகம் பள்ளிக்கு அனுப்புவதில்லை கோவில் , பூஜை , மஹாராஷ்டிரா என்று எப்பொழுதும் அவருடனே வைத்திருக்க தோழிகளுடன் கழிக்க வேண்டிய அழகான தருணங்களை எல்லாம் இழந்துவிட்டாள்.
பள்ளி செல்லும் தருணங்களில் ஒன்றாக இருந்தாலும் பல சமயம் ஹிமானியின் சிந்தனைகள் வேறு எங்காவது இருக்கும் , நித்யாவின் குடும்பம் இமயனின் குடும்பம் அவர்களை பற்றி அனைத்தையும் விராலி அறிவாள்.
ஆனால் ஹிமானிக்கு ஒன்றும் தெரியாது , நித்யா கல்லூரி செல்கிறாள் நாங்களும் அவளுடனே சென்று வருகிறோம் என்று கூறி போராடி சம்மதம் பெற்றாள் விராலி , என்றாலும் ஹிமணியை அனுப்ப அவர் தயாராகவில்லை அந்த வாய்ப்பும் அவளுக்கு கிட்டாமல் போனது.