இமயவரம்பனை அவள் சந்தித்தது ஒரு எதிர்பாரா சமயத்தில், அவன் யார் என்று தெரியாது அவன் இருந்த சூழ்நிலைக்குக் காரணம் என்ன என்று தெரியாது அந்த நொடி அவனைக் காப்பாற்ற தோன்றியது வெறும் பத்து வயதான அந்தப் பாலிகைக்கு.
அதன் பிறகு பல மாதங்கள் கழித்து அவனைப் பார்த்தாள் இவர்களுடைய மரக்கடையில் வேலை செய்துகொண்டிருந்தான்.
இவளைப் பார்த்தவன் முதலில் தடுமாறி பின் அவளைத் தவிர்த்தான், அவன்தான் என்பதை புரிந்துகொண்டவள் சுற்றிலும் ஆட்கள் இருப்பதை பார்த்து எப்படி அவனிடம் பேச என்று தயங்கி நின்றாள்.
வீட்டில் இருப்பவர்கள் கூட அவளின் குரலைச் சரியாகக் கேட்டிருப்பார்களா தெரியாது பெரும்பாலும் தலை ஆட்டல் மட்டுமே அவள் பதிலாக இருக்கும், பேச்சுக்கள் மிக மிகக் குறைவு இனிமையான குரல் வளம், அதிகம் ஸ்லோகங்களும் கீர்தனைகளும் ஒலிக்கும் அவள் குரலில்.
ஆனால் இன்று எப்படியும் அவனிடம் பேசிவிட வேண்டும் என்று நினைத்தாள், பார்வை மட்டும் அவனில் நிலைத்து இருந்தது ஒரு கட்டத்திற்கு மேல் அந்த அவஸ்தையைத் தாங்க முடியாதவன் அவளை நிமிர்ந்து பார்க்க அந்தப் புன்னகை அவனை மொத்தமாக வீழ்த்தியது.
“நல்லா இருக்கீங்களா…” என்றாள் இதழசைப்பிலும் கைகளின் அபிநயத்திலும், அந்தப் பதினேழு வயது காளையின் மனதில் தன்னால் முதல் சலனம் விழுந்ததை அறியாமல்.
இத்தனை நாட்களாக அவளைத் தெய்வமாகப் பார்த்திருந்தான், அவன் மானத்தை காத்தவள் உயிர் வாழப் பிடிப்பை தந்தவள், “நன்றாய் இருப்பதாக” தலை ஆட்டினான்.
“காயம் சரி ஆயிடுச்சா” என்றாள் காலைக் காண்பித்து அதற்கும் தலையசைப்பே.
“நா ஹிமானி…” என்றாள் காற்றாக, அவன் செவிகளை அடையவில்லை சுற்றிலும் ஆட்கள் வேலை பார்க்கிறார்கள் யார் கண்ணிலாவது விழுந்துவிட்டால் என்ற பதட்டம் இருந்தது அவனிடம்.
“ஹிமானி…” என்ற தந்தையின் அழைப்பில் திரும்பிப் பார்த்தவள் மீண்டும் அவனைப் பார்த்துத் தந்தை அழைத்ததை சுட்டிக்காட்டி “ஹிமானி…” என்க, மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.
“உங்க பேர்?” என்றவளிடம், எப்படி சொல்ல என்று தடுமாறி நின்றவன் “அண்ணே, என் பேர சரியா சொல்லுங்க” என்றான் தூர நின்றவரிடம்.
“அதுதாம்ல வர மாட்டுது மறந்து மறந்து போயிடுறேன்” என்றார் அவர் பாவமாக.
சிரித்துக்கொண்டவன் “இமயா…” என்றான் சத்தமாக.
அவன் ஹிமானியின் செவிகளில் அது “இதயா….” என்று நுழைந்து அவள் இதயத்தில் பதிந்தது, அதன் பிறகும் இத்தனை வருடங்களில் சில முறை இருவரும் பார்த்திருக்கிறார்கள்.
அனைத்தும் பொதுவான இடங்களில், தூர நின்று, எதிர்பாராமல்…. ஒவ்வொரு முறையும் அவளிடமிருந்து அதே புன்னகையும் கேள்வியும்.
வயதிற்கு வந்தபிறகு கட்டுப்பாடுகள் இன்னும் தீவிரமாக அவனைப் பார்க்கவே இல்லை, மூன்று வருடங்கள் முன்பு இவர்களின் மரப்பட்டறைக்கு குஜராத்திலிருந்து வரவேண்டிய வண்டி பிரச்சனை ஆகி நின்றது.
நம்பிக்கையான ஆளைத் தேடி அவர்கள் நிற்க, ஊர் ப்ரெசிடெண்ட் கேட்டுக்கொண்டதால் இமயவரம்பன் அவனுடன் மதியும் செல்வதாக முடிவானது.
அதைப் பற்றிப் பேச ஹிமானியின் வீட்டில் இருவரும் வந்திருந்த சமயம் அவனைப் பார்த்தாள், உழைப்பில் உரமேறி கம்பீரமாக நின்றான், அவன் மீசை அவளை வெகுவாகக் கவர்ந்தது, மதி கூறிய எதற்க்கோ மெலிதான புன்னகை சிந்திய அதரங்களில் அவள் பார்வை பதிந்தது.
அவளுள் மெல்ல மெல்ல நிறைந்துகொண்டிருந்தான் இமயவரம்பன், நித்யா சொல்லும்வரை கூட அவன் உண்மையான பெயர் “இமயா” என்பது அவளுக்குத் தெரியாது, அறிந்தபிறகும் அவள் அதை மாற்றிக்கொள்ளவில்லை அவளுக்கு எப்பொழுதும் அவன் “இதயா” மட்டுமே.
யோசனைகளின் தாக்கத்திலிருந்து விழித்தவள் கட்டிலில் படுத்தாள் உறக்கம் வரவில்லை, அவனுடன் மட்டுமே வாழ விருப்பம் வழி மட்டும் தெரியவில்லை, அவனுக்குத் தன் மீது விருப்பம் இருப்பதையே அவள் அறியவில்லை.
ஒருவேளை பிடித்திருப்பதாகக் கூறினால் “உன்னை அப்படி நினைக்கவில்லை” என்று சொல்லிவிடுவானோ என்ற பயம் மனம் முழுதும் உண்டு, முதலில் அவனிடம் பேசும் தைரியம் வர வேண்டுமே.
அதிகம் தனிமையிலே வளர்ந்தவள் மற்றவர்களிடம் சகஜமாகப் பேசுவது கூட அவளுக்குச் சரியாக வராது யோசித்து யோசித்து எப்பொழுதோ உறங்கி இருந்தாள்.
காலையிலே நித்யாவிடமிருந்து அழைப்பு வந்தது “சித்தி சித்தப்பாவுக்கு கல்யாண நாள் அதால எல்லாரும் கோவிலுக்குப் போறோம், நீ கெளம்பி நில்லு நான் வந்து கூட்டிட்டு போறேன்” என்றாள்.
மாணிக்கம் பஞ்சவர்ணம் தம்பதிக்கு இருபத்தி ஐந்தாம் வருட திருமணநாள், தம்பதியருடன் மகள்கள் உஷா ஜமுனா, மதி, இமயன் நித்யா மற்றும் அவள் தாயார் இருந்தனர்.
இன்று இவர்கள் சார்பாகப் பூஜை சாமிக்கு, அதோடு காலை மிளகு தோசையும் சர்க்கரை பொங்கலும் பிரசாதமாகக் கொடுத்துக்கொண்டிருந்தனர் இமயனும் மதியும்.
மற்றவர்கள் ஒரு பக்கம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர், ஹிமானியின் விழிகள் அவனை விட்டு நகர மறுத்தது, அரக்கு நிற சட்டை, வேட்டி கட்டியிருந்தான்.
நித்யா அழைக்க இருவரும் அவர்கள் அருகில் சென்று நின்றனர் மாணிக்கம் வர்ணம் தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்து கடவுளை வணங்கி முடிக்க “நீ விளக்கு போடு நா வந்துர்றேன்” என்ற விராலி குளத்தை நோக்கிச் சென்றாள்.
விளக்கு போட்டு முடித்த ஹிமானி இமயன் தனியாக நின்று பிரசாதம் கொடுப்பதை பார்த்துத் தயங்கி தயங்கி அவன் அருகில் சென்றாள்.
அனைவரும் பிரசாதம் வாங்கி சென்றிருந்தனர் அவளைப் பார்த்தவன் எதையும் முகத்தில் காட்டவில்லை இலையை எடுத்து அவளுக்குப் பிரசாதம் வைத்து நீட்ட வாங்காமல் நின்றாள்.
ஒரு நொடி உலகம் ஸ்தம்பித்தது இமயனுக்கு மையிட்ட நேத்ரங்கள் அவனிடம் யாசித்து நிற்க “உன்ன மறக்கணும்னா இந்த இமயன் மொத்தமா இல்லாம போகணும்” என்றான் உளமார.
நதிஎங்கு செல்லும்? கடல்தன்னைத் தேடி… நதிஎங்கு செல்லும்? கடல்தன்னைத் தேடி… பொன்வண்டோடும் மலர் தேடி… பொன்வண்டோடும் மலர் தேடி…
என் வாழ்வில் நீ வந்தது விதியானால் நீ எந்தன் உயிரன்றோ…
பூங்காற்று புதிதானது… புதுவாழ்வு சதிராடுது… இரண்டு உயிரை இணைத்து விளையாடும்… உயிரை இணைத்து விளையாடும்… பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது…
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.