“டேய் வாடா நெறய வேலை இருக்கு” என்ற இமயனை பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தான் மதி.
“என்னடா?” – இமயன்
“எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்” என்றான் மதி.
“என்ன உண்மை”.
“ரெண்டு வருஷமா கோவில் கமிட்டில இருக்கோம், முக்கியமான ரெண்டு மூணு வீடு தவிர இதுவரைக்கும் யார் வீட்டுக்கும் நீ நன்கொடை வாங்க வந்ததில்லை, இன்னைக்கு ஆளுக்கு முன்ன பில் நோட்டோட நிக்குற! என்ன விஷயம்? நீ சொல்லாம நான் வரமாட்டேன்” என்றான் நண்பனை முறைத்துக்கொண்டே.
“இப்போ என்னடா உண்மையைச் சொல்லணும் அவ்ளோதானே, நான் என் தேவதையைப் பாக்க போறேன், வரியா இல்லையா” என்க.
“ஏதே…” என்று நெஞ்சில் கை வைத்தான் மதி.
அவனைப் பார்த்து அழகான புன்னகை விரிந்தது இமயனின் அதரங்களில், மதியின் மனம் நிறைந்தது அதைப் பார்த்ததும்.
“யார்ரா மாப்ள” என்க.
“வந்தா காட்டுவேன்” என்றான் புன்னகை மாறாமல்.
உடனேயே நண்பனின் பின்னால் ஏறிக்கொண்டான் மதி “எவ்ளோ நாளா நடக்குது” என்ற மதியை பார்த்தவன்.
“மாப்ள சத்தியமா மண்டை கொழம்புது ஒண்ணுமே புரியல, அது யாருடா எனக்குத் தெரியாம உனக்குப் பிடிச்ச ஒரு பொண்ணு அதுவும் நம்ம ஊர்ல என்றான் ஒன்றும் புரியாமல்.
பதில் சொல்லவேண்டியவன் அமைதியாக அந்தத் தெருவின் முன்னில் இருந்த மரத்தின் நிழலில் வண்டியை நிறுத்தினான், அங்கே இவர்களைக் காத்து வயதில் மூத்தவர்கள் நான்கு பேர் நின்றனர்.
“வந்து நேரமாச்சா பெரியப்பா” என்றான் ஒருவரை பார்த்து.
“இல்லையா நாங்களும் இப்போதான் வந்தோம், உனக்கு எம்புட்டு வேலை கிடக்கு தெரியும் இருந்தும் நேரம் ஒதுக்கி நீ வந்திருக்க ரொம்ப சந்தோஷமயா” என்றவரை பரிதாபமாகப் பார்த்த மதி.
“அவன் உங்களுக்காக எங்க வந்தான்? எல்லாம் இப்படி ஏமாளிங்களா இருக்கீங்களே” என்று புலம்பிக்கொண்டே அவனுடன் நடந்தான்.
“முதல் வீட்ல இருந்து தொடங்கலாம்” என்று ஒவ்வொரு வீடாகச் சென்றனர்.
இமயனை அங்குப் பார்த்தவர்களுக்கு ஆச்சர்யமே, அவனுக்கு அங்கே நல்ல பேர் சிறிய வயதிலே மூன்று குடும்பத்தைத் தாங்கி நின்று மீண்டு வந்தவன் என்று ஒரு மரியாதை அவன்மீது.
ஒரு சொல் யாரும் அவனைத் தவறாகச் சொல்ல முடியாது, செல்வராணியின் மகன் என்பதையே அந்த ஊரில் பலரும் மறந்துவிட்டதை போலத்தான் தோன்றியது.
இளைஞர்கள் அவனிடம் யோசனை கேட்டுக்கொள்வார்கள் அருமையாகப் பேசி அவர்களிடம் வேலை வாங்குவான், கோவில் விழாவிற்கு கூடப் பலரும் முன்வந்து வேலைகளை ஏற்றுக்கொண்டனர்.
அவனுடைய வீடு வந்தபோது மற்ற மூவரும் சென்று பணம் பெற்றுக்கொள்ள இவன் அடுத்த வீட்டிற்கு சென்றுவிட்டான்.
இமயவரம்பனின் தந்தை பாண்டியனே பணம் நல்கினார், மகனை ஆசையாக அவர் பார்த்து நிற்க அவரைத் திரும்பிக்கூட பாராமல் மதியுடன் முன்னே நடந்துவிட்டான்.
இறுதியாக அந்தப் பெரிய மாளிகையின் உள்ளே நுழைந்தனர் வீடே அமைதியாக இருந்தது, அருகில் நெருங்க நெருங்க மெல்லிசையாகச் சிவனை ஆராதித்து பாடல் ஒன்று அனைவரின் செவியையும் நிறைத்தது.
மேலே அமர்ந்து ஹிமானி பாடிக்கொண்டிருக்க ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தார் தேவகி, வீட்டின் பணிப்பெண் கோவில் ஆட்கள் வந்திருப்பதாகத் தகவல் சொல்ல அவர் கீழிறங்கி வந்தார்.
“யாரோ வந்திருக்கிறார்கள்” என்ற எண்ணத்தில் அங்கேயே அமர்ந்துவிட்டாள் ஹிமா.
கீழே வந்தவர் விவரங்களைக் கேட்டுக்கொண்டார் “கோடி லிங்கம் சிவன்கோவில்ல சிவராத்திரிக்கு இந்த வருஷமும் சிறப்பா செய்யணும்னு விரும்புறோம்” என்றனர் வந்தவர்கள்.
“கண்டிப்பா…. ரொம்ப சந்தோஷம்” என்றவர் “நானே இதைப் பத்தி பேசணும் நெனச்சேன், இந்த வர்ஷம் அன்னதான செலவு மொத்தமா நாங்களே ஏத்துக்குறோம்” என்றார் தேவகி.
“ரொம்ப சந்தோஷம்மா” என்றவர்கள் இமயனை பார்க்க “யார் பேர்ல எழுதட்டும்” என்றான் அவன்.
“ஹிமானி சம்ருதா, என் பேத்தி பேர்ல எழுதுங்க” என்றார் அவர்.
படியில் இறங்க தொடங்கிய ஹிமானியின் செவிகளில் அவனின் குரல் விழுந்த நொடி பரவசத்தில் மான் குட்டியாகப் படிகளில் ஓடி இறங்கினாள், அவள் கொலுசொலி இன்னிசையாக உள்ளத்தை நிறைக்க விழி உயர்த்தி அவளைப் பார்த்தான் இமயன்.
அவனை அங்கே எதிர்ப்பார்க்கவில்லை என்ற ஆச்சர்யத்தை தப்பாமல் அவனுக்குக் கடத்தியது அவள் விழிகள்.
பேத்தியைப் பார்த்த தேவகி “வா உன் கையால காசைக் கொடு” என்றுவிட்டு அவரின் அறைக்குள் சென்று சிறிது நேரத்தில் பணக்கட்டோடு வந்தார்.
அவள் கையால் அதைக் கொடுக்க இமயன் வாங்கிக்கொண்டான், ரசீதை அவளிடம் நீட்ட அவள் விழிகள் உயர்ந்து அவனைப் பார்த்தது, தேவகி மற்றவர்களிடம் பூஜை முறைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க.
“நன்றி” என்றவனின் புன்னகை பெண்ணவளின் உள்ளதை கொள்ளை கொண்டது, விழிகள் விரித்து அவனைப் பார்த்தவளை நோக்கியவனின் புன்னகை இன்னும் விரிந்தது.
“பில் பத்திரம்” என்றவன் குரலில் மீண்டவள் பார்வையை அதில் பதிக்க சிறிய பொருள் ஒன்று அதனுடன் இருந்தது, உள்ளங்கையில் அதை ஒலித்துக்கொண்டவள் ரசீதோடு பாட்டியின் அருகில் சென்று நின்றுகொண்டாள்.
உள்ளங்கையை விரித்துப்பார்க்க வண்ணமயில் தொகை விரித்தாடும் அழகான சிறிய மூக்குத்தி.
“அப்போ நாங்க வரோம் கண்டிப்பா எல்லாரும் பூஜைக்கு வந்துடனும்” என்று பெரியவர்கள் கைகூப்பி விடை பெற அவளுக்காக மட்டும் கண்சிமிட்டி புன்னகைத்தவனின் பின்னே சென்ற மனதை பிடித்துவைக்க விரும்பவில்லை அவள்.
இதயத்தை ஏதோ ஒன்று…
இழுக்குது கொஞ்சம் இன்று…
இதுவரை இதுபோலே நானும் இல்லையே…
கடலலை போலே வந்து…
கரைகளை அள்ளும் ஒன்று…
முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே…
இருப்பது ஒரு மனது…
இதுவரை அது எனது…
என்னைவிட்டு மெதுவாய் அது…
போகக் கண்டேனே…
இது ஒரு கனவு நிலை…
கலைத்திட விரும்பவில்லை…
கனவுக்குள் கனவாய் என்னை நானே கண்டேனே…
எனக்கென்ன வேண்டும் என்று…
ஒரு வாா்த்தை கேளு நின்று…
இனி நீயும் நானும் ஒன்று…
எனச் சொல்லும் நாளும் என்று…
அன்றைய கலக்ஷனை கொஞ்ச நேரத்தில் முடித்துக்கொண்டார்கள் “வேலை இருக்கு பெரியப்பா நாளைக்கு வர முடியுமா தெரியல” என்றான் இமயன்.
“அடப்பாவி என்னமா நடிக்கிறான் நானே நம்பிடுவேன்டா” என்று அவனைப் பார்த்திருந்தான் மதி.
“பரவாயில்லப்பா நாங்க பாத்துக்குறோம் உனக்கு இன்னும் கோவில் வேலை கிடக்கே நீ அதைப் பாரு” என்றவர்கள்
விடைபெற நண்பர்கள் பண்ணையை நோக்கிச் சென்றனர்.
செல்லும் வழியில் சிவன் கோவிலில் வண்டியை நிறுத்தியவன் மலைமீது ஏறி மர நிழலில் பாறையின் மீது அமர்ந்துகொண்டான், நண்பனைப் பின்தொடர்ந்து வந்த மதி அவன் அருகில் அமர்ந்துகொண்டான்.
அவனே சொல்லட்டும் என்று இவன் அமைதியாக இருக்க மரத்தில் சாய்ந்து விழிமூடிய இமயன் “பதினாலு வருஷம் முன்னாடி அவளை முதன் முதலா பாத்தேன்”.
“உனக்குத் தெரியுமே எனக்குப் படிப்பு வரலன்னு அதுக்காக அவங்க என்னை எவ்வளோ அடிச்சுருக்காங்க” என்றான் “அம்மா” என்ற வார்த்தையை உச்சரிக்காமல்.
“நான் படிக்கலன்னு தானே அடிக்குறாங்கனு நானும் பொறுத்துக்கிட்டேன், வாழ்க்கை நரகமா மாறிக்கிட்டு இருந்த காலம் அது எனக்கு”.
“அக்காவோட ரெண்டாவது பிரசவம் ரொம்ப சிக்கலா இருந்ததால புள்ளையும் தாயும் நல்லபடியா பொழச்சு வந்தா தங்க காசு காணிக்கையா குடுக்குறதா வேண்டியிருந்தாங்க வீட்ல, அதோட ஒரு நேர பூஜைக்கான செலவும் ஏத்துக்கிட்டாங்க”.
“அன்னைக்கு காலைலே பூஜை சாமான் வாங்க கவிய கூட்டிட்டு அப்பா தேனீ போய்ட்டார், காலைல எல்லா வீட்டுக்கும் பால் ஊத்திட்டு தூங்கிட்டு இருந்த என் கால்ல சட்டுன்னு ஒரு எரிச்சல், அலறி அடிச்சு நான் எழுந்தா கால கீழே வைக்க முடியல”.
“தோச திருப்பியால பெருசா சூடு இழுத்துட்டாங்க, வலில நான் துடிச்சேன் ஏன் எதுக்குன்னு எனக்குத் தெரியல, படிக்கப் போகாம பொறுக்கிட்டு திரியுறேனு பாத்தா திருடவும் செய்றியா நாயேன்னு கால்ல மிதிச்சுச்சு, உயிரே போய்டுச்சு அந்த நிமிஷம்”.
“நான் எதையும் திருடலைனு சொல்லியும் கேக்கல, தங்க காசைக் காணும், நீதான் எடுத்த குடுன்னு வெறகு கட்டையால அடி வெளுத்துச்சு”.
“நான் எவ்ளோ சொல்லியும் நம்பள, அங்கேயிருந்து வண்ணான்தொட்டி வரைக்கும் என்னைத் தரதரன்னு இழுத்துட்டு போச்சு, உடம்பெல்லாம் வலி, அதைவிட கால்ல வலி என்னால எழுந்து ஓட முடியல”.
“நம்ம செல்லியம்மன் கோவில் காட்டுல மரத்துல என் கை ரெண்டையும் சேத்து கட்டிபோட்டுச்சு, அன்னைக்கு புது டிரஸ் போட்டிருந்தேன் சித்தப்பா எடுத்துக் குடுத்தது”.
“திருட்டு நாய்க்குத் துணி ஒண்ணுதான் கேடா உனக்கெல்லாம் மாணம்ன்னு ஒன்னு இருக்கானு மொத்தமா துணிய அவுத்துடுச்சு, ஒண்ணுமே இல்லாம நான் அப்படியே…” என்றவன் குரல் இடற பேச்சு நின்றது.
“இமையா…” என்று நண்பனை அப்படியே அணைத்துக்கொண்டான் மதி, அவனின் சூடான விழிநீர் மதியின் சட்டையை நனைத்தது.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.