வண்ணான்தொட்டி என்பது சலவை தொழிலாளிகள் சலவை செய்யும் இடம், ஆற்றை ஒட்டிச் சென்னியம்மன் கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கிறது, பெரிய பெரிய தொட்டிகளோடு துணி துவைக்க பெரிய சலவை கற்கள் பதிக்க பட்டிருக்கும்.
கோவிலுக்குச் சொந்தமான நந்தவனம் சுற்றிலும் இருந்தது, கோவிலுக்குச் செல்லும் வழியில் பூச்செடிகள் நிறைந்து இருக்க அதன் வலப்பக்கம் முழுதும் மரங்கள் இருக்கும்.
சலவை தொழிலாளிகள் தவிர அந்தப் பக்கம் ஆட்கள் அதிகம் செல்லமாட்டார்கள், அவர்கள் காலையிலே வந்து சலவை
செய்து துணிகளை உலர்த்திவிட்டு செல்வார்கள்.
தன்னை மீட்டுக்கொண்டவன் மதியின் தோளைத் தட்டி மீண்டும் மரத்தில் சாய்ந்தமர்ந்தான் “வேண்டா டாப்போதும் வாப்போலாம்” என்றான் மதி.
“ஹ்ம்ம் ஹூம்” என்று மறுப்பாகத் தலை அசைத்தவன் “அவ எனக்கு யாரு என்ன மாதிரின்னு நீ தெரிஞ்சுக்கணும், என்னையும் அவளையும் தவிர யாருக்கும் தெரியாத என் வாழ்க்கையோட மோசமான ஒரு நிகழ்வைத் தெரிஞ்சுக்குற மூணாவது ஆள் நீ தான்” என்றவன் மீண்டும் தொடர்ந்தான்.
கொஞ்சம் பணம் படைத்தவள் ஊரில் ஒருவரும் தன்னை எதிர்த்துப் பேசமாட்டார்கள் அதோடு அழகனான மகனைப் பெற்றவள் என்ற கர்வம் நிறைய உண்டு செல்வராணிக்கு.
மூத்தவன் கவியரசன் நல்ல நிறமாகப் பார்க்க ரோமியோ போல இருப்பான், இமயவரம்பன் கொஞ்சம் நோஞ்சான் அப்பொழுது…. அதோடு அவன் தந்தையின் நிறம்.
செல்வராணியின் கர்வத்திற்கு பெரும் அடியாக இளைய மகனைப் பார்த்தார் அவர், வண்ணான் தொட்டியில் சுத்தமான நீர் கிடைக்கும் ஆகையால் அந்த ஊரில் பலரும் அங்கே சென்று தண்ணீர் பிடித்துக்கொள்வார்கள் அன்று காலைத் தண்ணீர் பிடிக்கச் சென்ற செல்வராணியின் செவியில் விழுந்தது சில பெண்களின் பேச்சு.
“அவன் பாக்க ஹீரோ கணக்கா இருக்கான் பொம்பள பிள்ளைகளும் அறியாம திரும்பிப் பாத்துடுது, இவன் ஒடனே லெட்டரை தூக்கி நீட்றான் அவன் ஆத்தா அடுத்த நாளே வம்புக்கு வந்துடுறா, என்ன சொல்ல அவ கிட்ட வாய குடுக்க நம்மால முடியுமா”.
“அவ திமிருக்கு ஆண்டவன் குடுத்துருக்கானே ரெண்டாவது பிள்ளையை, செல்வராணிக்கு மக்கு பிள்ளை மாடு மேய்க்குது” என்று சிரிக்க.
“அடியே அந்தப் புள்ளய தப்பா சொல்லாதீங்க அது தங்கம்டி, யார் வம்புக்கும் போறதில்லை, இவளோட எந்தக் குணமும் இல்லை, என்ன படிப்பு ஒன்னு தான் வரல, அந்தப்புல்லைய தப்பா பேசாதீங்க பாவம்” என்றார் ஒருவர்.
கேட்டிருந்த செல்வராணி அதே ஆத்திரத்தோடு வீட்டிற்கு சென்றார், சரியாகத் தேடாமல் தங்கக்காசு காணாமல் போய்விட்டது என்று அணைத்து கோபத்தையும் அவன்மீது இறக்கினாள் ராக்ஷசியாக.
அன்று முழுவதும் அங்கேயே கிடந்தான், சத்தம் போட்டு யாரையும் அழைக்க முடியவில்லை, இப்படி தன்னை யாரேனும் பார்த்துவிட்டால் இந்த ஊருக்குள் அதன் பிறகு தலை உயர்த்தி நடமாட முடியுமா என்ற எண்ணம் அவன் தொண்டையை இறுக்கியது.
இரவும் வந்துவிட்டது, அனைவரும் சிவன் கோவிலில் கூடி இருக்க காலையிலிருந்து ஒரு சொட்டு நீர் கூட இறங்காமல்
தொண்டை காய்ந்து வலித்தது.
தீக்காயத்தில் ஏறிக் கடிக்க தொடங்கிய எறும்புகள் மெல்ல மெல்ல அவன் மேனியில் பரவத் தொடங்கியது, தட்டிவிட முடியாமல் காலையும் உடலையும் ஆட்டி ஆட்டிப் போராடினான், அவனுடைய அழுகுரல் யார் செவியையும் சென்று சேரவில்லை.
ஹிமானியின் குடும்பத்தினர் இங்கேயே வந்துவிடும் முடிவுக்கு வந்தபிறகு இங்கே இடம் வாங்கி வீடு கட்டும் வேலை நடந்தது, அதற்கான பூமி பூஜைக்கு ஹிமானியை அழைத்து வந்திருந்தார் அவளின் பெரியப்பா.
பூஜை முடிந்து அவர் பனி ஆட்களிடம் பேசிக்கொண்டிருக்க இவளுக்கு ஒரே இடத்தில் அமர்ந்திருக்க பிடிக்கவில்லை, மெல்ல நடக்க தொடங்கினாள் அந்தத் தெருவின் இறுதியில் தெரிந்த ஆற்றை நோக்கி.
அங்கிருந்த பெரிய தொட்டிகள் சலவை கற்கள் அனைத்தையும் ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டே நடந்தாள், வலப்பக்கம் கோவிலும் அதன் வழி எங்கும் வண்ண மலரும் இருக்க அந்தப் பக்கம் நடந்தவளின் செவிகளில் விழுந்தது மெல்லிய முனகல் சத்தம்.
முதலில் பயம் வந்தாலும் பார்க்காமல் திரும்பிச் செல்ல மனம் வரவில்லை, செடிகளை நீக்கி உள்ளே நடந்தாள், கொலுசொலி அவனின் புலன்களை விழிக்கச் செய்ய, வருவது பெண் என்றவுடன் “வராதீங்க” என்றான் ஈனஸ்வரத்தில்.
உள்ளே நுழைந்து பார்த்தவள் மனம் எல்லாம் பதறியது என்ன செய்ய வேண்டும் என்றே அவளுக்குத் தெரியவில்லை உதவிக்கு
சில நொடிகள் தயங்கி நின்றவள் வேகமாக அவன் அருகில் நெருங்கினாள், அவன் கால்களை மடித்து உடலைக் குறுக்கி “போ வராத” என்றான் கண்ணீரோடு.
அவள் எதையும் கேட்கவில்லை கைகளால் எறும்புகளைத் தட்டிவிட அது அவளையும் கடித்தது, கைகளில் மண்ணை எடுத்து அவன் மேலே போட்டுத் துடைக்க எறும்புகள் கீழே விழுந்தது.
ஹிமானியின் விழிகள் ஏன் என்றே தெரியாமல் நிறைந்து வழிந்தது, அவன் விழி நீரை துடைத்தவள் “ரடு நாகோ (அழாத), மேத்தூஜ்ஹய சோபட் ஆஹி (நான் இருக்கேன் உனக்கு)” என்றாள் அழுதுகொண்டே.
அவன் பேசிய வார்த்தைகள் கொஞ்சம் புரிந்தது, ஆனால் அவளுக்குத் தமிழ் பேச வராது அப்பொழுது, அவள் சொன்ன எதுவும் அவனுக்குப் புரியவில்லை.
தனக்கு ஒரு அன்னையாக ஆறுதல் கூறுகிறாள் என்பது மட்டும் அவனுக்குப் புரிந்தது, அவனுக்காக அவள் சிந்திய கண்ணீர் அவன் இதயத்தில் விழுந்தது துளிகளாக.
எறும்புகளை மொத்தமாக எடுக்க முடியவில்லை அவளால் கைகட்டை அவிழ்க்கப் பார்த்தால் அவளால் முடியவில்லை, சிறிய பெண் அவளுக்கு இயலாமையில் பெரிதாக அழகை வெடிக்க அவன் நெஞ்சில் முகம் வைத்துக் கட்டிக்கொண்டாள்.
“மாலா காலாட் நஹி கே காரு (எனக்கு என்ன செய்யத் தெரியல)” என்று.
“தண்ணி” என்றான் கண்கள் சொருக.
அவசரமாக எழுந்தவள் துணி துவைக்க அவர்கள் வைத்திருக்கும் பக்கெட் ஒன்றில் தண்ணீர் பிடித்து அதோடு தேடி கண்டுபிடித்துத் துரு பிடித்த ஒரு சிறிய பிளேடு ஒன்றையும் கொண்டுவந்தாள்.
தண்ணீரை அவனுக்குத் தன் கைகளில் அல்லி குடிக்க கொடுத்தவள் மீதி தண்ணீரை அவன் மேலே அப்படியே ஊற்றினாள் அப்படியாவது எறும்புகள் போகட்டும் என்று.
அவளுக்கு அந்தக் கயிறை அறுக்கவும் தெரியவில்லை விரலை வெட்டிக்கொண்டாள், ரத்தம் அவள் உடைகளில் சிதறியது வலியில் அலறினாள்.
“போ நீ போயிடு போ” என்றான் அவளிடம்.
வலியைப் பொறுத்துக்கொண்டு கொஞ்சம் அறுத்துவிட்டாள், அவன் இருந்த பலத்தை எல்லாம் திரட்டி இழுக்க வந்துவிட்டது, இப்படியே எப்படி வெளியில் செல்ல இயலும் அவன் உடலைக் குறுக்கி சுருண்டு அமர.
“உடை வேண்டுமே” என்று அவளுக்கு உரைத்தது, எங்கிருந்து கொண்டுவர? மீண்டும் சென்றபோது அவளைத் தேடி அவளின் பெரியப்பா வருவது தெரிந்தது.
கையில் கிடைத்த சாக்கு ஒன்றை வேகமாக அவனிடம் கொடுத்தாள், அதற்குள் ஹிமாணி என்ற அவளின் பெரியப்பாவின் குரல் கேட்டது.
“உயிர் இருக்குற வரை உன்ன மறக்கமாட்டேன்” என்றான்
விழிகள் நிறைய அவளை நோக்கி.
“யார்கிட்டயும் சொல்லாத” என்றவனை பார்த்தவள் “சொல்லமாட்டேன்” என்று சைகை செய்து அவசரமாக வெளியில் ஓடினாள்.
அவள் பெரியப்பா முன்ஜல் கைக்காயத்தைப் பார்த்துப் பதறி விசாரிப்பது தெரிந்தது, ஏதோ பேசி அழுது அவருடன் நடந்துவிட்டாள்.
அவன் கூறியதை உள்வாங்கி அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்தான் மதி.
“எப்படிலாமோ போராடி சித்தப்பாகிட்ட போய்ச் சேந்துட்டேன், எனக்குச் சூடு போட்டு இப்படி கட்டி போட்டது மட்டும்தான் அவருக்கும் தெரியும்”.
“அங்க என்ன நடந்ததுன்னு யாருக்கும் நான் சொல்லல, தங்ககாசு அங்கேயே தான் இருந்தது” என்றவன்.
“இப்போ சொல்லு அவ தேவதை தானே” என்றான் விழியில் நீரோடும் இதழில் புன்னகையோடும்.
“ஹ்ம்ம்…” என்று தலை ஆட்டிய மதிக்கு பேச்சு வரவில்லை.
“மன்னிச்சுடு மாப்பிள நான்… எனக்கு…. எதுவுமே தெரியல, நீ எப்போவும் எனக்காக நின்ன, ஏண்டா என்கிட்டே கூட எதுவும்
சொல்லல?” என்றவனின் தலை முடியைக் கலைத்தவன்.
“அதுல இருந்து வெளில வரவே மாசங்கள் ஆச்சு, அதுக்குள்ள என்னைவிட பெரிய பிரச்சனை உனக்கு, வாழ்க்கையோட போராட்டத்துல எல்லாத்தையும் எனக்குள்ளேயே வெச்சுக்கிட்டேன்”.
“நான் எப்பவும் யோசிப்பேன் என் ஹிமானி வராம போயிருந்தா?? சிவராத்ரியோட மறுநாள் நெறய துணி இருக்கும், வயசு பிள்ளைங்க அவங்க அப்பா அம்மானு எல்லாரும் துணி துவைக்க வருவாங்க, யார் கண்ணுலயாவது பட்டிருந்தா”.
“ஊருக்கே தெரிஞ்சிருக்கும் செல்வராணி மகன் இப்படி இருந்தான் அப்படினு, அப்புறம் இந்த ஊர்ல என்னால நடமாட முடிஞ்சிருக்குமா இல்ல நான் உயிரோட இருந்துதான் பிரோயோஜனம் இருந்திருக்குமா?”.
“செத்து மண்ணா போனாலும் அந்த அவமானம் போயிருக்காது, இன்னைக்கு இந்த ஊர்ல கவுரவத்தோட தலை நிமிர்ந்து நிக்குறேன்னா அதுக்கு அவ மட்டும் தான் காரணம்”.
“அப்போ அவ என்கிட்டே பேசின எந்த வார்த்தைக்கும் எனக்கு இன்னமும் அர்த்தம் தெரியாது, ஆனா என் கண்ணீரை தொடச்சுவிட்ட அந்தக் கைகளைக் கடைசி வரைக்கும் விடாம பிடிச்சுக்கணும்னு முடிவு பண்ணேன்”.
“விடமாட்டேன்…… விட முடியாது…” என்றவனை தோளோடு சேர்த்து அணைத்து நின்றான் மதி.
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.