பரிதி வேலைக்கு செல்ல தொடங்கி ஐந்து மாதங்கள் கடந்திருந்தது.காலை மிருதுளாவுடன் செல்பவன் மிருதுளா வீட்டிற்கு வந்த பிறகு தான் வருவான்.அவனின் வருமானம் என்ன ஏது என்று இதுவரை மிருதுளா கேட்கவில்லை அவனும் கூறவில்லை.ஆக அவனின் வருவாயை அவன் என்ன செய்கிறான் என்பது அவனிற்கு தான் தெரியும் மிருதுளாவும் அவன் இந்தளவிற்கு மாறியதே போதும் என்று நினைத்து விட்டுவிட்டாள்.இதில் திவ்யா தான் தினமும் அவனிடம் புலம்புவாள் மிருதுவை வேலைக்கு அனுப்பாதே என்று ஆனால் பரிதி அதை காதில் வாங்கியது போல காட்டிக் கொள்ளமாட்டான்.
இன்று காலையில் எழுந்ததிலிருந்தே பரிதிக்கு நேரம் சரியில்லை என்று தான் கூறவேண்டும்.அந்த மருத்துவ வளாகத்தில் ஒரு பகுதியில் பெண்கள் தங்களின் நிறைமாத வயிற்றை பிடித்தபடி அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தனர்.அவர்களின் முகத்தில் தான் எத்தனை எத்தனை மகிழ்ச்சி தங்களின் புதுவரவை எதிர்நோக்கும் கண்களுடன் தங்கள் கணவர் அல்லது தன் தாய்மார்களிடம் பேசிய படி இருந்தனர்.அங்கு ஒருவனின் முகம் மட்டும் கோபத்தை காட்டிக் கொண்டிருந்தது.அவன் இளம்பரிதி.
“எல்லாம் அந்த குட்டி பிசாசால வரது….இருக்கு அவளுக்கு….”என்று மண்டகபொடி திவ்யாவிற்கு நடந்துகொண்டிருந்தது.ஏனென்றால் எப்போதும் மிருதுளாவை அவள் தான் மருத்துவமனை அழைத்து வருவாள்.இன்று தனக்கு வேலை இருப்பதாக கூறி பரிதியை அழைத்து போகும் படி அவனை வற்புறுத்தி அனுப்பி வைத்தாள்.அதற்கு காரணமும் மிருதுளா தான் அவள் தான் திவியிடம் கூறியிருந்தது நாளை அவரை எப்படியாவது என்னுடன் வருமாறு செய்துவிடு என்று.தோழி கேட்டு மறுப்பாளா திவ்யா இதோ செய்துவிட்டாள்.ஆனால் அதற்கு அவள் பட்ட பாடு சொல்லி மாளாது.இப்போது நினைத்தாலும் சிரிப்பு தான் வந்தது மிருதுளாவிற்கு,
“ஏன் நீ தான அவளை எப்போதும் கூட்டிட்டு போவ….நீயே கூட்டிட்டு போ….என்னை வேலைக்கு போ வேலைக்கு போன்னு உயிரை வாங்குனாள்ல நான் வேலைக்கு போகனும்….”என்று பரிதி கோபமாக கத்த,திவ்யா எதற்கும் அசரவில்லை.
“இந்தா மகாராசா….ஏதோ உன் பொண்டாட்டி நீ வருனும்னு பிரியபடுறா கூட்டுட்டுபோ இல்லை போகாத….எனக்கு என்ன வந்தது…..பிள்ளைதாச்சி பொண்ணை அழ வைச்சிக்கிட்டே இரு…”என்றவள் மிருதுளாவை வீட்டின் உள்ளே தள்ளி,
“போடீ….போ…ஓரமா உட்கார்ந்து கண்ணை கசக்கிட்டு இரு….அப்புறம் அந்த டாக்டர் பிள்ளைக்கு தான்….”என்று அவள் அடுத்த வார்த்தை கூறும் முன் ஏதோ உடையும் சத்தம் என்ன என்று திரும்ப பரிதி தான் பக்கத்தில் இருந்த ஒரு பூந்தொட்டியை உடைத்திருந்தான்.
“கிளம்ப சொல்லு……”என்றவன் நிற்காமல் வெளியில் செல்ல,
“இந்தா மகாராசா….இப்படி அடுத்தவன் வீட்டு பொருளை உடைச்சிட்டு போனா எவன் காசு கொடுக்கிறது….தினம் இதே வேலையா போச்சு….”என்று திவ்யா கத்த அதைக் கேட்க பரிதி அங்கில்லை.ஆக இப்படி தான் அவனை வரவழைத்திருந்தாள் மிருதுளா.
பரிதியின் முகமோ எண்ணையில் போட்ட கடுகு போல அவ்வபோது வெடித்துக் கொண்டிருந்தது.மிருதுளா அவனை ஓரக்கண்ணால் பார்ப்பதும் பின் முன்னே பார்பதுமாக அமர்ந்திருந்தாள்.இன்று தன் கணவன் தன்னுடன் வந்திருக்கிறான் என்ற சந்தோஷமா இல்லை அவனின் மாற்றம் தந்த தெளிவோ ஏதோ ஒன்று அவளின் முகம் அத்தனை பிராகாசித்தது.
“மிருதுளா இளம்பரிதி……”என்று அவளின் பெயர் அழைக்கப்படவும் அவள் எழ,பரிதி அப்படியே அமர்ந்திருந்தான்,
“வாங்க…”என்று சற்று குனிந்து அவனை அழைக்க,அவளை முறைத்தபடி எழுந்தவன் அவளுடன் நடந்தான்.அனுமதிகேட்டு மருத்துவர் அறையில் நுழைய,அவர்களை புன்னகையுடன் வரவேற்ற மருத்தவர்,
“வாம்மா….மிருதுளா….இது தான் உன் புருஷனா….”என்று பரிதி பார்த்து கேட்க,
“ஆமா டாக்டர்….”என்றவள் முகத்தில் தான் எத்தனை எத்தனை வர்ணஜாலங்கள்.பரிதி இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தான் அவனிற்குமே புரிந்தது தான் வந்ததன் தாக்கம் அவளின் முகத்தில் வெளிபடுகிறது.ஆனால் அவனால் சிலவற்றை உடனே ஏற்க பயம்,ஆம் பயம் தான் அதுவும் குழந்தை என்னும் போது இன்னும் அதிகமாக வந்திருந்தது.அவனிற்கு தான் எதுவுமே தெரியாதே அதனால் தான் அவன் வரமாட்டான்.அதோடு ஏனோ மனதில் இனம் புரியா நடுக்கம் இருந்தது அதை அவன் வெளிகாட்டிக் கொள்ளவில்லை அவ்வளவே.
“வேற…ம்ம்….வேற எதுவும் இல்லை இல்ல….அது….”என்று எதை எப்படி கேட்க என்று புரியாமல் அவன் தவிக்க,அவனின் தவிப்பை மிருதுளா கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருந்தாள் என்றால் மருத்துவரோ சிரித்தபடி,
“மிஸ்டர்.பரிதி….உங்க வொய்ப்,குழந்தை இரண்டு பேரும் நல்லா இருக்காங்க….”என்று கூற அப்போதும் பரிதியின் முகம் தெளிவில்லாமல் இருக்க,
“நீங்க ரொம்ப பயப்படுறீங்க….அவ்வளவு தான்….அவங்க நல்லாயிருக்காங்க….”என்று கூற,சரி என்னும் விதமாக தலையாட்டியவன் வெளியில் வந்ததும்,
“வா உன்னை கடையில விட்டு நான் போறேன்….”என்று கூற,
“அச்சோ இன்னைக்கு எனக்கு ஸ்கேன் இருக்கு….வாங்க….”என்று கூறிவிட்டு முன்னே நடக்க,
“என்ன ஸ்கேனா….அப்படினா….ப்ச்….அதான் டாக்டர் எல்லாம் நல்லா இருக்குனு சொல்லிட்டாங்களே அப்புறம் என்ன….”என்று புரியாமல் கேட்க,
“ச்சு….உங்களுக்கு சொன்ன புரியாது பார்த்தா தான் புரியும்…..நீங்க வாங்க……”என்று அவனின் கையை பிடித்து ஸ்கேன் செய்யும் அறைக்கு முன்னே அவள் அழைத்து செல்ல,
“ஏன்டீ என் உயிரை எடுக்குற…எனக்கு…எனக்கு….”
“ம்ம்ம்….உங்களுக்கு….”என்று அவளும் ராகம் பாட,
“அடியே அறை வாங்க போற…எனக்கு என்னவோ போல இருக்கு….இங்க இருக்கவே பயமா இருக்கு….”என்று மனதில் நினைத்தை கூறிவிட்டான்.அவனிற்கு இங்கு வந்ததில் இருந்து ஏதோ போல் தான் இருந்தது அதுவும் ஒரு பெண்ணிற்கு திடீர் என்று வலி வந்துவிட அவரை அழைத்து செல்வதை பார்த்தவனுக்கு இன்னும் இன்னும் பயம் பிடித்துக் கொண்டது.அதோடு அந்த ஸ்கேன் செய்யும் அறைக்கு பக்கத்தில் தான் பிரசவ அறை இருப்பதால் அந்த பெண்ணின் அலறல் வேறு அவனை நிலைகொள்ளாமல் தவிக்க செய்யதது.அதனால் தன் மனதில் நினைத்ததை மறைக்காமல் கூறிவிட,மிருதுளாவோ அவனின் நடுங்கும் கரங்களை தனக்குள் பொத்தி வைத்துக் கொண்டவள்,
“எதுக்கு பயப்படுனும்……இதெல்லாம் நாம கடந்து தான் வருனும்….இப்படி பயந்தா எதுவும் சரியாகாது….தைரியமா இருங்க….”என்று கூற அவளின் கைகளை இறுக பற்றிக் கொண்டவனின் முகம் தெளிவில்லாமல் தான் இருந்தது.மிருதுளாவிற்கு தான் அவனை அழைத்து வந்து பயமுறுத்திவிட்டோமோ என்ற பயம் வந்தது.இன்று அவளிற்கு ஐந்த மாதம் தொடங்குகிறது அதனால் அவளிற்கு ஸ்கேன் எடுக்க சொல்லியிருந்தனர்.அதனால் தான் பரிதி அழைத்து வந்திருந்தாள் ஆனால் அவனோ இப்படி பயப்படுவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.அவளின் முகமும் கலங்குவதைக் கண்டவன்,
“ப்ச்…சரி…சரி….விடு பார்த்துக்கலாம்….”என்றுவன் அவளின் கைகளை தட்டிக் கொடுக்க,சரியாக அவளை உள்ளே அழைத்தனர்.அவள் உள்ளே சென்று அவளை படுக்க வைத்துவிட்டு பரிதியை உள்ளே அழைக்க அவன் நடுக்கத்துடன் தான் உள்ளே நுழைந்தான்.அந்த இருண்ட அறையில் உள்ள ஒரு சிறிய திரையை பார்க்குமாறு மருத்துவர் கூற அதனை கண்டவனுக்கு தன்னையும் மீறி நெஞ்சம் நெகிழ்ந்தது.தன் ரத்தம் தனக்கே தனக்கான உறவு அதை வார்த்தைகளால் கூறமுடியவில்லை.மிருதுளா அவனின் கைகளை பிடித்துக் கொள்ள,அவனும் அதை விடாமல் பற்றிக் கொண்டான் இனி அவள் தான் எல்லாம் என்னும் விதமாக.
ஒருவழியாக அனைத்தும் முடிந்து வரும் போது இருவருமே இருவேறு மனநிலையில் இருந்தனர்.பரிதிக்கு தன் குழந்தை தன் உறவு என்ற மகிழிச்சி இருந்தாலும் ஒரு பக்கத்தில் பயமும் இருந்தது.மிருதுளாவிற்கு கணவன் தன்னுடன் இருக்கிறான் என்ற உணர்வே அத்தனை மகிழ்ச்சியை தந்திருந்தது.பரிதி மிருதுளாவை வேலை செய்யும் இடத்தில் விட்டுவிட்டு அவனும் வேலைக்கு சென்றான்.
மாணிக்கம் கேரேஜ் அந்த இடத்தில் இருக்கும் பெரிய கேரேஜ் அதுதான்.அதோடு அங்கு வண்டியை எடுத்து சென்றால் நல்ல முறையில் சரி செய்து தருவார்கள் என்று அனைவருமே கூறுவர்.அதன் உரிமையாளர் மாணிக்கமும் நேர்மையான மனிதர் அவர் பார்க்க சாதாரணமாக இருந்தாலும் மனிதர்களை நன்கு எடை போடக்கூடியவர்.அதனால் தான் அவரை இந்த தொழிலில் சாய்க்க முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
அவருக்கு ஒரு கண் குடும்பம் என்றால் மற்றொரு கண் அவரின் இந்த கேரேஜ் என்று தான் கூற வேண்டும்.காலைவேளை வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது.காரின் அடியில் இருந்து ஒருவன்,
“டேய் ராமா…அந்த ஸ்பேனர் நம்பர் பத்தை எடு….”என்று கூறிக் கொண்டிருக்க அவர்களை மேற்பார்வையிட்டபடி வந்த குமரன்,
“டேய் கந்தா…..”என்று குரல் கொடுக்க,காரின் உள்ளிருந்து தலையை வெளியில் எடுத்து பார்த்த கந்தன்,
“என்னங்க ய்யா…”என்று பவ்யாமாக கேட்க,
“எங்கடா அந்த புது பய….ஆளை காணும்…..”என்று விசாரிக்க,
“அது….தெரியாதுங்களேய்யா…..”என்று கூற பல்லை கடித்த குமரன்,
“என்னடா கூட வேலை பார்க்குறவன் வரலை என்கிட்ட சொல்லனும் தெரியாது….என்ன கொழுப்பு ஏறி போச்சி உங்களுக்கு….ஆங்…..”என்று சத்தமிட அங்கு மிதமிருந்த நான்கு ஆட்களும் என்னவென்று பார்க்க தொடங்க,
“குமரா….”என்ற மாணிக்கத்தின் சத்ததில் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க தொடங்கிவிட்டனர் என்றால் குமரனோ கலவரமான முகத்துடன்
“அடக்கடவுளே இவரு எப்போ வந்தாரு…..”என்று தன் மனதிற்குள் திட்டிக் கொண்டான்.ஆனால் கந்தானோ கலவரமான முகத்துடன் தன் பெரிய முதலாளியை பார்த்து,
“ய்யா…..எனக்கு தெரியாதுங்க….என்கிட்ட எதுவும் சொல்லல…..”என்று பாவமாக கூற,
“நீ வேலையை பாரு கந்தா நான் பாரத்துக்குறேன்….”என்றுவிட்டு அவர் தனது அறைக்குள் நுழைந்து கொள்ள,குமரனுக்கு உள்ளுக்குள் கோபம் கொப்பளித்தாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் அவரின் பின்னே வேகமாக சென்றான்.
குமரன் இந்த கேரேஜின் உரிமையாளர் போன்று சுற்றி வருபவன்.மாணிக்கத்தின் மனைவியின் சொந்தம் அதனால் சற்று செருக்குடன் தான் இருப்பான்.ஆனால் மாணிக்கத்தின் முன் அவனும் அங்கு வேலை செய்பவர்களில் ஒருவன் மட்டுமே.அதனால் அவரிடம் எதையும் காட்ட முடியாது.
“என்ன குமரா இது நீ உன் வேலை பார்க்காம கந்தன் கிட்ட என்ன பேச்சு….”என்று மாணிக்கம் கேட்க,
“அதுங்க மாமா….”
“இங்க நான் உனக்கு மாமா கிடையாது இதை எத்தனை தடவை சொல்லியிருக்கேன்…..இந்த உறவு முறையெல்லாம் இந்த கேரேஜ்க்கு வெளில தான் இங்க உள்ளே நீயும் இங்க வேலை பார்க்குற ஒருவன் தான்…..இதுக்கு அப்புறம் இது போல ஏதாவது நீ பண்ண வேலையை விட்டு தூக்கிடுவேன் பார்த்துக்க….போ…..”என்ற அழுத்தமான மாணிக்கத்தின் வார்த்தைகளில் குமரன் அமைதியாக போய்விட்டான்.ஆனால் உள்ளுக்குள் மாணாக்கத்தின் மீது அத்தனை வன்மம் ஏறிக் கொண்டு தான் இருந்தது.
அதுவும் கிராமத்தில் இருந்த தன் பெரியப்பாவின் பெண்ணான வைரத்தை மாணிக்கம் திருமணம் செய்து வந்ததிலிருந்து அவரின் சொத்தான இந்த கேரேஜின் மீது தான் குமரனுக்கு கண்.அதற்காக தானே இங்கே வந்து வேலை செய்வது போல நடித்துக் கொண்டிருக்கிறான்.குமரன் மாணிக்கத்தின் அறையில் இருந்து வெளிவரும் போது தான் பரிதி கேரேஜினுள் வந்தான்.அவன் வருவதை பார்த்த குமரனுக்கு இன்னும் கோபம் ஏறி தான் போனது.தன்னை மதிக்காத பரிதியை அவனிற்கு பிடிக்கவில்லை.
மாணிக்கம் பரிதியை பார்த்ததும் அழைக்க,அவன் அவரின் அறைக்குள் போகும் போது,
“போ…போ இன்னைக்கு உனக்கு இருக்கு….எவ்வளவு தைரியம் இருந்தா வேலைக்கு லேட்டா வருவ….இன்னைக்கு தெரியும் என் மாமா யாருன்னு….”என்று கூறிவிட்டு குமரன் செல்ல,அவனை திரும்பி ஒருமுறை நக்கலாக பார்த்தவன் மாணிக்கத்தின் அறைக்குள் நுழைந்தான்.
“என்னப்பா….நீ பாட்டுக்கு வர போற….இது என்ன சத்திரமா….”என்று மாணிக்கம் கோபமாக காய,பரிதியோ தெணாவட்டாக அந்த இடத்தை சுற்றி பார்த்துவிட்டு,
“இது சத்திரம் போல இல்ல தான்….”என்று கூற மாணிக்கத்திற்கு கோபம் வருவதற்கு பதிலாக ஏதோ சுவாரசியம் வந்தது என்று தான் கூற வேண்டும்.
“நீங்க கேட்ட கேள்விக்கு பதில் கிடைசுடுச்சுனா நான் போய் என் வேலையை பார்க்கவா…..”என்று பரிதி கேட்க மாணிக்கத்தின் தலை தன் போல் ஆடியது.அதே போல் அவரின் மனதும் திறமை இருக்கும் இடத்தில் திமிறும் இருக்க தானே செய்யும் என்று கூறிக் கொண்டது.இது இன்றல்ல அவன் முதன் முதலில் இங்கு வேலைக்கு சேர்ந்ததிலிருந்து கூறுவது தான்.அதுவும் அவன் வேலை கேட்டவிதத்தை அவரால் மறக்கவே முடியாது என்று தான் கூற வேண்டும்.இன்றும் அவன் வேலை கேட்டானா என்றால் அது இல்லை என்று தான் கூற வேண்டும் இவராக அவனிற்கு வேலை கொடுக்கும்படி அல்லவா செய்தான்.அது தான் திறமை அதனால் தான் அவனிடம் பிடித்தம் இருக்கிறது.
முதன் முதலில் பரிதி இந்த கேரேஜிற்கு வந்த போது மாணிக்கம்,
“இங்க பாருப்பா இங்க வேலையெல்லாம் இல்லை….போயிட்டுவா…..”என்று தான் கூறினார்.அதற்கு அவன்,
“நான் வேலைக்கு வந்தேன்னு உங்க கிட்ட சொல்லையே…..நான் வேலை தேடிக்கிட்டியிருக்கேனு தான சொன்னேன்….”என்றவன் பார்வை அந்த கேரேஜையே வலம் வர,
“அப்புறம் எதுக்கு உள்ள வந்த….”என்றவரின் குரலில் ஒருவித எரிச்சல் இருந்தது.வேலை நேரத்தில் இப்படி இடைஞ்சல் செய்கிறானே என்று.அதற்கு அவன் கொடுத்த பதில் தான் அவனை வேறு ஒருவனாக காட்டியது.
“நான் வேலை பார்க்க போற இடம் எனக்கு தோதா இருக்கானு தான் பார்த்தேன் சார்….அதுக்கு உள்ள வந்து தான பார்க்க முடியும்….”என்றவன் தூரத்தில் நின்றிருந்த லாரியை கை காட்டி,
“என்ன பிரச்சனை அந்த வண்டியில….”என்று கேட்டுக் கொண்டே அதன் அருகில் செல்ல,
“ஏய் இந்தாப்பா….நில்லு….”என்று கத்திக் கொண்டே அவனின் பின்னே சென்றார்.அது மாலை மங்கும் நேரம் என்பதால் அனைவரும் சென்றிருந்தனர்.இவரும் கேரேஜை மூடும் நேரத்தில் தான் துரை உள்ளே வந்து அலப்பறையை கூட்டிக் கொண்டிருந்தார்.
“என்ன இந்த வண்டியில பிரச்சனை….”என்று அவன் கேட்டுக் கொண்டே அந்த லாரியை அவன் ஆராயத் தொடங்க,மாணிக்கத்திற்கு கோபம் தலைக்கேற,
“ஏய் யார் நீ…நீ பாட்டுக்கு உள்ள வந்து பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்க….முதல்ல வெளில போ….”என்றவர் சுற்றி முற்றி பார்த்தார் தனது ஆட்கள் யாரேனும் தென்படுகிறார்களா என்று.
“சும்மா சுத்தி சுத்தி பார்க்காம…..அந்த டூல்ஸ் கிட்டை உள்ள தள்ளுங்க….”என்றவனின் குரல் லாரியின் கீழிருந்து கேட்க,
“இவன் எப்ப கீழ போனான்….”என்று கேட்டவாரே அந்த டூல்ஸ் கிட்டை உள்ளே தள்ளினார்.என்ன தான் செய்கிறான் என்று பார்ப்போம் என்று.ஏனோ அவனின் பார்வையில் கல்மிஷம் இல்லை ஆனால் திமிறு மட்டும் எக்கச்சக்கமாக தெரிந்தது.இது போல் பெரிய வாகனத்தை பழுது பார்க்க சரியான ஆட்கள் அவரிடம் அமையவில்லை அதனால் வெளியிடத்திலிருந்து தான் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் சம்பளத்திற்கு தான் அழைத்துவருவார்.பார்ப்போம் என்ன தான் செய்கிறான் என்று அமைதியாக நின்றுவிட்டார்.ஒருமணி நேரம் அவன் தலை வெளியில் தெரியவில்லை பேச்சும் இல்லை ஆனால் வேலை மட்டும் நடந்து கொண்டிருந்தது.
“இன்ஜின் முழுசா அடிவாங்கிடுச்சி….மாத்தி தான் ஆகனும்….வேற வழியில்லை….அதே மாதிரி இடது பக்கத்து டயரும் ரொம்ப தேஞ்சி போயிருக்கு மாத்தனும்…..”என்று வெளியில் வந்து அவன் கூற மாணிக்கம் அவன் கூறிய அனைத்தையும் பார்த்து குறித்துக் கொண்டவர் பார்வையில் சற்று மெச்சுதலும் இருந்தது.ஓரளவிற்கு அவரும் இதை தான் கணித்திருந்தார்.
“இங்க இது போல பெரிய வண்டி பார்க்க ஆளில்லைனு நினைக்கிறேன்….நல்ல ஆளா பார்த்து போடுங்க….வரேன்….”என்று விட்டு அவன் பாட்டிற்கு செல்ல மாணிக்கத்தின் முகத்தில் சுவராசியத்துடன் கூடிய புன்னகை,
“அட இருப்பா….வேலை வேணும் கேட்டுட்டு போற….”என்று அவர் கத்திக் கொண்டே வர,
“நான் இப்பவும் அதை தான் சொல்லுறேன்….நான் வேலை தேடிக்கிட்டு இருக்கேன்னு….எனக்கு இடம் தோதா அமையுதானு பார்க்க தான் வந்தேன்….”என்று கூறிக் கொண்டே செல்ல,
“அப்போ இந்த இடம் உனக்கு தோதா இல்லையா….”என்றவர் கேட்க,அவரின் கேள்வியில் திரும்பி அவரை பார்த்தவன் அவரிடம் வந்து,
“நான் வேலைக்கு வருனும்னா….சில கண்டீஷன் இருக்கு…..”என்று கூறிவிட்டு அவரை பார்க்க,அவனின் பதிலில் இன்னும் சுவாரஸ்சியம் தான் ஏறியது,
“சரிப்பா சொல்லு அது என்ன கண்டீஷன்….”என்று தனது இருக்கையில் அமர்ந்து கேட்டார்.அவனும் அவரின் எதிர் இருக்கையில் அமர்ந்து,
தன்னை பற்றியும் தான் கடந்து வந்த பாதையை பற்றியும் ஒன்றுவிடாமல் கூறியவன்,
“இதெல்லாம் நான் உங்ககிட்ட ஏன் சொல்லுறேன்னா….நான் என்னை மாற்றிக்க முயற்சி எடுக்குறேன் அதுவும் என் பொண்டாட்டிக்காக….நான் என் வேலையில சரியா இருப்பேன்…அதுக்கான சம்பளத்தை நீங்க கொடுத்தா போதும்….இப்ப சொல்லுங்க…..”என்றுவிட்டு அவரின் முகத்தை பார்க்க அவரோ ஏதோ யோசனையில் இருந்தார்.தயங்குகிறார் என்று புரிந்து போனது அவனிற்கு அதனால் அவன் எழ,
“நாளை காலையிலேந்து வேலைக்கு வாப்பா……அதோட நீ பார்க்குற வேலைக்கு சரியான சம்பளம் வந்துடும்……”என்று அவர் கூற,இம்முறை ஆச்சிரியமாக பார்ப்பது பரிதியின் முறையானது.அவரை பற்றி வெளியில் விசாரித்துவிட்டு தான் வந்திருந்தான்.கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை தொண்தொண்பது சதவிகிதம் இருந்தாலும் தனது கடந்த காலம் யோசிக்க வைத்திருந்தது.ஆனால் முயற்சி செய்து பார்த்து பின் தோற்று போகலாம் என்று எண்ணி தான் வந்தான்.ஆனால் அவனிற்கு எதிர்பாராத வெற்றி கிடைத்தது என்று தான் கூற வேண்டும்.
மாணிக்கத்திற்கு குழைந்து வழிந்து வேலைக்கு சேர்பவர்களை விட தன்னை பற்றிய உண்மையை தைரியமாக கூறி வேலை கேட்ட பரிதியின் மேல் ஒருவித பிடித்தம் உருவானது.அதோடு அவன் திறமையானவன் என்பதையும் அவர் கண்டு கொண்டார் அதனால் அவனை இழக்க விரும்ப அவரின் வியாபார மூளை இடம் கொடுக்கவில்லை.அதனால் பரிதியை வேலைக்கு வர சொல்லிவிட்டார்.இதோ அவன் சேர்ந்து ஐந்து மாதங்கள் கடந்துவிட்டது எந்தவித பிரச்சனையும் இருந்ததில்லை.அதோடு இப்போது பெரிய வண்டிகளின் வரத்தும் அதிகமானதால் அவருக்கு வருமானம் அதிகமானது என்று தான் கூற வேண்டும்.
“அய்யா….”என்று கஸ்டமர் அழைப்பில் நிகழ்வுக்கு வந்தவர் அவருடன் பேசியவாரே வெளியில் வந்தவர் கண்கள் தானாக பரிதியிடம் தான் சென்றன,அவனோ தனது வேலையில் மும்முரமாக இருந்தான்.மற்றவர் முதலாளி வந்தால் அவர்களின் கவனம் சிதரும் ஆனால் அவனோ தான்னுன்டு தன் வேலையுண்டு என்று தான் இருப்பான்.அதுவே அவனை இன்னும் பிடிக்க வைத்தது.இதை அனைத்தையும் குமரனின் கண்கள் குறித்துக் கொண்டு தான் இருந்தன,
“இருடா உன்னை எப்படி தூக்கனும்னு எனக்கு தெரியும்….”என்று மனதிற்குள் கருவிக் கொண்டவன் இரவு நேராக சென்றது மாணிக்கத்தின் மகன் மகேஸ்வரினிடம்.மாணிக்கத்தின் மகன் மகேஸ்வரன் மெக்கானிக்கல் படித்து முடித்துவிட்டு வெட்டியாக இருக்கிறான்.அவனிற்கு ஒரு கார் ஷோரும் வைக்க வேண்டும் என்பது தான் கனவே ஆனால் அதற்கு அவனின் தந்தை உதவ மறுக்க தினமும் தந்தைக்கும் மகனிற்கும் முட்டிக் கொள்ளும்.அதை கொண்டு தான் குமரன் குளிர் காய வந்திருந்தான்.சதிகாரனின் வலையில் தான் மாட்டியிருப்பது தெரியாமல் பரிதி தன் மிருதுவுடன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.