அன்று காலை பத்து மணிக்கு மேல் தான் கேரேஜிற்கு வந்தான் பரிதி.மகேஸ்வரன் அன்று முன்பே வந்துவிட்டான்.அவன் கார் ஒன்றை அப்போது தான் சரி பார்த்துக் கொண்டிருக்க அப்போது தான் பரிதி உள்ளே நுழைந்தான்.வேகமாக வந்தவன் நேற்று பார்த்து முடித்திருந்த லாரியை ஒரு முறை சரி பார்த்துவிட்டு அதன் சாவியை மாணிக்கத்திடம் கொடுத்துவிட்டு வர,
“ஏன் இன்னைக்கு இவ்வளவு லேட்….”என்று கேட்டபடி அவனிடம் வந்தான் மகேஸ்வரன்,
“வீட்ல பங்ஷன் அதான் லேட்டாகிடுச்சி…..”என்றவன் அடுத்த வண்டியை பழுது பார்க்க தொடங்க,
“என்ன பங்ஷன்….எங்க கிட்ட எல்லாம் சொல்லல….”என்று மகேஸ்வரன் இயல்பாக கேட்க,பரிதி தலையை சொரிந்தான் உண்மையில் அவனுக்கு இதெல்லாம் தெரியாது.நேற்று தான் நாயகி நாளை நாள் நன்றாக இருப்பதாக கூறியவிட சரி என்றுவிட்டான்.காலையில் அவர்கள் அக்கம்பக்கத்தில் உள்ள சில பெண்கள் மட்டும் அழைத்து வீட்டில் சிறிதாக மிருதுளாவிற்கு ஐந்தாமாதம் மருந்து கொடுக்கும் வைபவம் நடந்தது முடிந்திருந்தது.
பரிதிக்கு இதெல்லாம் புதிதாக இருந்தது அவன் ஓரமாக நின்று கொண்டான்.அவன் முதலில் வேலைக்கு கிளம்பி நிற்க மிருதுளா தான் இருக்க வைத்தாள்.அவளின் முகத்தில் தெரிந்த ஏக்கத்தில் தான் இருந்தான்.அதுவே அத்தனை மகிழ்ச்சி அவளின் முகத்தில்.பரிதி இதற்கு தேவையான பணத்தை மட்டும் திவ்யாவிடம் முன்பே கொடுத்துவிட்டான் என்ன வேண்டுமோ செய்யுங்கள் என்று அதனால் பணத்திற்கு எந்த பிரச்சனையும் வரவில்லை.சிறிய அளவில் விழா சிறிப்பாகவே முடிந்துவிட்டது.
“ஓய் நான் என்ன கேட்டுடேன்னு இப்படி ப்ரீஸ் ஆகி நிக்குற….”என்று மகேஸ்வரன் கேட்க,
“இல்ல…..எனக்கு தெரியாது….இந்த மாதிரி பங்ஷன் எல்லாம் நான் போனதே இல்லை….அதான்….”என்றவன் மீண்டும் காருக்குள் தலையைவிட,
“புரியலை….”என்ற மகேஸ்வரனிடம் சுருக்கமாக தன்னை பற்றி கூறிவிட்டு மீண்டும் காருக்குள் தலையை விட்டுவிட்டான்.கேட்ட மகேஸ்வரன் தான் என்ன மாதிரி உணர்ந்தான் என்று அவனிற்கே புரியவில்லை.ஆனால் இதுவரை பரிதியின் மீது சிறு புள்ளி போல் இருந்த பொறாமையும் கரைந்து போனது.ஆம் பொறாமை தான் தந்தையின் மனதில் தன் இடத்தை அவன் பிடித்துவிட்டேனே என்று அவனிற்கு இருந்தது தான் ஆனால் இதோ இன்று அது முற்றிலுமாக மறைந்துவிட்டது.
“சரி அடுத்த தடவை பங்ஷன் வைக்கும் போது கண்டிப்பா எல்லாருக்கும் சொல்லனும்….”என்று மகேஸ்வரன் கூற,
“அடுத்த தடவையா அது எப்போ வைப்பாங்க…எனக்கு தெரியாதே….வந்தா சொல்லுறேன்….”என்றவன் குரல் காரின் உள்ளிருந்தே வர மகேஸ்வரனின் முகத்தில் விரிந்த புன்னகை.உண்மையில் இவன் விசித்திரமானவன் தான் என்று நினைத்துக் கொண்டான்.அதன் பின் இருவரும் அவரவர் வேலையில் ஈடுபட,சரியாக மதியவேளை நெருங்கும் நேரத்தில் திவ்யா வந்தாள்.
“பரிதிண்ணா….உங்களை பார்க்க பொண்ணு ஒண்ணு வந்திருக்கு….”என்று ராம் கூற,மகேஸ்வரன் தான் முதலில் பார்த்தது,பரிதி காரின் அடியிலிருந்து எழுந்து வரும் முன் மகேஸ்வரன் யார் என்று பார்க்க சென்றவன் அதிர்ந்து நின்றுவிட்டான்.
“குள்ள கத்திரிக்கா….”என்று முணுமுணுத்தவன்,அவளை நெருங்கும் முன் பரிதி அவளை நெருங்கி அவளின் தலையில் ஒரு கொட்டு வைத்தவன்,
“ஆஆஆஆ……ஏன் ராசா அடிச்ச….வலிக்குது…..”என்றவள் கண்கள் கலங்கி விட்டது.அதனை பார்த்த மகேஸ்வரனுக்கு அத்தனை மகிழ்ச்சி,
“அப்படி தான் நண்பா நல்ல கொடு….குள்ள கத்திரிக்கா….என்னா பேச்சு பேசுது…..கல்லையா எடுத்த இப்ப என் நண்பன் கிட்ட பேசு பார்ப்போம்….”என்று மனதிற்குள் கவுண்டர் கொடுத்துக் கொண்டான்.
“அடிச்சா வலிக்க தான் செய்யும்….நீ எதுக்கு இங்க வந்த….”என்று கேட்க,அவனின் முன்னே ஒரு கூடையை அவள் நீட்ட,அதனை வாங்காமல் அவளை மேலும் முறைத்தவன்,
“என்னதிது…”
“ஆங்….சாப்பாடு…..உன் ராணியம்மா தான் கொடுத்துவிட்டாங்க….இந்தா பிடி….”என்று கூற,அவனோ வாங்காமல் முறைத்தபடி இருக்க,
“அடியே உன் ராசா வாங்குற மாதிரி தெரியலை வா போகலாம்….”என்று குரல் கொடுக்க,அதுவரை அலட்சியமாக இருந்தவன் வாயிலை பார்க்க மிருதுளா நின்றிருந்தாள்.வியர்வையை துடைத்தபடி அவள் நிற்க வேகமாக அவளிடம் சென்றவன்,
“ஏய் நீ எதுக்கு இப்ப வந்த….”
“சாப்பிட்டு வேலையை பாருங்க….திவி கொடுத்துட்டு வா….நிக்க முடியலை….”என்றவிட்டு செல்ல பார்க்க,வேகமாக அவளின் கையை பிடித்தவன் திரும்பி மகேஸ்வரனிடம் வந்துடுறேன் என்று கூறிவிட்டு சென்றான்.திவ்யாவோ ராமிடம் கூடை கொடுத்துவிட்டு,வந்தா கொடுத்துடு தம்பி என்றுவிட்டு நகர,
“ஓய் குள்ள கத்திரிக்கா….”என்றபடி வந்தான் மகேஸ்வரன்.வந்தவன் ராமை கண் காட்ட அவன் வேகமாக அந்த இடத்தை காலி செய்துவிட்டான்.
“ம்ம்….உரிப்படா உரிப்ப….அன்னைக்கு தப்பிச்சிட்ட இன்னைக்கு மாட்டுன….இரு….”என்றவள் கீழே கல்லை தேட,அவளை இடைவளைத்து பக்கத்தில் இருந்த சிறிய அறையில் தள்ளியவன்,
“என்னடீ….ரொம்ப துள்ளுர…ஆங்…நான் தான் சாரினு சொன்னேன் தான….அதுக்கு மரியாதை இல்லாம பேசுவியா….”என்றவனின் மூச்சு காத்து அவளின் முகத்தில் அறைந்தது அவளின் முகத்தின் மிக அருகில் அவனின் முகம் இருக்க திவ்யாவிற்கு வார்த்தைகள் வர மறுத்தது.கேரேஜில் அனைவரும் சாப்பிட சென்றிருக்க யாரும் இல்லை அதுவே மகேஸ்வரனுக்கு வசதியாக போய்விட்டது.அதோடு திவ்யாவின் பயந்த கண்கள் அவனை மேலும் உற்சாகமூட்ட,
“என்ன முழிக்கிற…ஆங்…அன்னைக்கு என்னடானா நீ பாட்டுக்கு கல்லை எடுக்குற….ஆங்….”என்று அவன் பாட்டிற்கு பேச திவ்யாவோ அவனின் நெருக்கத்தில் பயந்து அவனை தள்ள முயன்று கொண்டிருந்தாள்.ஆனால் மகேஸ்வரனுக்கு இது எதுவும் தெரியவில்லை.அவனிற்கு அவன் நினைத்தபடி அவள் தனியாக சிக்கிக் கொண்டாள் அவ்வளவே.திவ்யாவின் பயந்த முகத்தை பார்த்தவரே,
“விடு….விடு…என்னை விடு….”என்றவளின் சத்தமும் அவள் கண்களில் தெரிந்த கண்ணீரையும் கண்டவன்,
“ஏய் என்ன ரொம்ப பயந்துட்டியா….”என்று கேட்டுவிட்டு நகரும் போது தான் அவனே அவர்களின் நெருக்கத்தை உணர,
“ஏய் சாரி….சாரி…..குள்ள கத்திரிக்கா….”என்று அவன் கத்தும் போதே அவள் அழுது கொண்டே சென்றிருந்தாள்.
“அச்சோ போச்சு…இப்ப அவன் கிட்ட போய் சொல்ல போறா….ஏன் இவ கூட மீட் பண்ற டைம் எல்லாம் நான் சொத்துப்புறேன்னு தெரியலை….”என்று தன் தலையில் தட்டிக் கொண்டான் மகேஸ்வரன்.
இங்கு பரிதியோ மிருதுளாவை மெதுவாக வீட்டிற்கு அழைத்து வந்து வீட்டின் உள் அமர வைத்தவன்,அவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தான்.அவளோ,
“இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை….எப்ப பாரு வேலை வேலை….”என்று வாயிற்குள் முணகியபடி தண்ணீரை வாங்கி அருந்த,
“ஏன்டீ சொல்லமாட்ட….நீ தான வேலைக்கு போ வேலைக்கு போனு என் உயிரை எடுத்த இப்ப சலிச்சிக்குற…சரி விடு நான் என் பழைய தொழிலுக்கே போறேன்…”என்று பிபியை ஏற்ற,
“ப்பா சாமி…நான் கேட்கவேயில்லை போயிட்டுவாங்க….”என்று அவனை பார்த்து கும்பிடு போட்டவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.இன்று ஒரு நாள் அவள் விடுமுறை எடுத்துள்ளாள் அவனை எடுக்க சொன்னாள் அவனோ முடியாது என்று விட்டு சென்றுவிட அதனால் வந்த கோபம் தான் இது.
“சரி நான் கிளம்புறேன்….நீ சாப்பிட்டியா…”என்று கேட்டுக் கொண்டே எழ,
“பொண்டாட்டி கோச்சிக்கிட்டு இருக்கா கொஞ்சமாச்சும் அவளை சமாதானப்படுத்தனும் தோணுதா…அப்படியே கிளம்புறத பாரு…”என்று மிருதுளா சத்தமாகவே முணுமுணுத்துவிட்டு திரும்ப அவன் அங்கு இல்லை சென்றுவிட்டானோ என்று எழ,நாயகி வந்துவிட்டார் கையில் உணவு தட்டுடன்.
“ஏன் கண்ணு சாப்பிடாம என்ன பண்ணுற…ஆங்…தம்பி வந்து சொல்லிட்டு போகுது…இந்த கழுதையை உனக்கு சாப்பாடு கொடுக்க சொல்லி அனுப்பிச்சா எங்க போச்சு….”என்று தன் மகளுக்கும் திட்டுவிழ மிருதுளாவோ பரிதியை நினைத்து பல்லை கடித்தாள்.
கேரேஜில் மகேஸ்வரன் தலையில் கையை வைத்தபடி அமர்ந்திருக்க,
“என்ன தலைமுழுகி போச்சு உனக்கு….”என்று கேட்டபடி வந்த பரிதியை பார்த்தவுடன்,எதுவும் பேச்சுவரவில்லை தான் செய்தது தவறு ஒரு பெண்ணை அப்படி நடத்தியிருக்க கூடாது ஆனால் அவளும் தன் வாயை அடக்காமல் பேசுகிறாள் அதன் விளைவு தான் இது என்று ஆயிரம் சமாதானங்கள் கூறிக் கொண்டாலும் அவளின் கலங்கிய விழிகள் அவனை இம்சித்தன.
“சரி தான் நானே உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசனும் வந்தேன் நீ என்னடானா இப்படி கனவு கண்டுகிட்டு இரு…”என்ற பரிதியின் பேச்சில் நிகழ்வுக்கு வந்தவன்,
“ஏய் அதெல்லாம் ஒண்ணுமில்ல……”என்றவன் பரிதியின் முகத்தை ஆராய அவனோ சாப்பிடுவதில் கவனமாக இருக்க,நல்லவேளை குள்ள கத்திரிக்கா எதுவும் சொல்லலை போல இல்லை என் பாடு திண்டாட்டம் தான்.
“இப்படி ஒருத்தனை பார்க்க வச்சிக்கிட்டு சாப்பிட்டா உனக்கு வயித்தை தான் வலிக்கும்….”என்றவன் இயல்பாக பரிதியின் சாப்பாட்டில் இருந்து கொஞ்சம் எடுத்து உண்ண,பரிதிக்கு மனதில் ஒருவித இதம் முதல் முறையாக வெளியிடத்தில் தன்னை மனிதனாகவும்,நண்பனாகவும் பார்க்கும் ஒருவன்.முதல் நட்பு மிகவும் வலிமையானது தான் போல.அந்த வகையில் மகேஸ்வரன் பரிதியின் இரும்பின் இதயத்தில் இடம் பெற்றான்.
மாணிக்கமும் அவனிடம் நல்ல முறையில் தான் இருப்பார் ஆனால் அவரின் தோரணையில் எந்த மாற்றமும் இருக்காது நான் முதலாளி நீ இங்கு தொழிலாளி என்ற முறையில் தான் இருப்பார் நடத்துவார்.ஆனால் மகேஸ்வரனை முதன் முதலில் சந்தித்த நாளில் இருந்து அவனிற்கு ஏதோ நெருக்கமானவனாக தெரிந்தான்.அதுவே அவனிடம் தங்குதடையின்றி பேச தூண்டியது.
“சரி தான் இப்ப நீ கனவுக்கு போயிட்டியா….என்னவோ பேசனும் சொன்ன…….”என்று கேட்டவாரே சாப்பிட்ட கையை மகேஸ்வரன் கழுவ,
“ம்ஹம்….நான் தான் முன்னவே சொன்னேனே காசு ரொம்ப செலவாகும் வேண்டாம்னு சொல்லிட்டாரு…..”என்று மகேஸ்வரன் கூற பரிதியின் முகம் யோசனைக்குள்ளானது.
“என்ன யோசனை ம்ம்….நடக்காது விடு….”என்றான் மகேஸ்வரன்.தந்தை ஒன்றை வேண்டாம் என்று மறுத்தால் மறுத்தது தான் அதுவும் கேரேஜ் விஷயத்தில் அவரின் முடிவு தான் இறுதியானது.
“இல்ல….இந்த இடம் இப்ப நல்ல டெவலப் ஆகுது….அப்ப இந்த மாதிரி கார் நிறையா வரும்னு நினைக்கிறேன்….”என்றவனின் முகத்தில் யோசனை ரேகைகள்.
“ம்ம்ம்….நீ சொல்லுறது சரி தான்…ஆனா என்ன பண்ணுறது….”என்றான் மகேஸ்வரன்.
“நீ என்ன பண்ணுற….இதை பத்தி இன்னும் நல்ல விசாரி அதாவது எவ்வளவு செலவாகும்,என்னனென்ன பண்ணணும் நமக்கு இந்த இடம் போதுமா எல்லாம் விசாரி…நானும் என்னால முடிஞ்ச வரை விசாரிக்கிறேன்…..ஏனா நேத்து அந்த லாரியை வாங்கிட்டு போகும் போது அந்த ஓனர் பேசிக்கிட்டு இருந்தார்….இந்த ஆடி,பி.எம்.டபில்யூ கார் எல்லாம் வாடகைக்கு கொடுப்பாரு போல அந்த காரெல்லாம் சர்வீஸ் விடுறத பத்தி பேசிகிட்டு இருந்தாரு….அவரையே நாம முதல் கஸ்டமரா புடிச்சிடலாம்….”என்று கூற மகேஸ்வரனுக்கும் ஆசை தான் ஆனால் தந்தை என்று அவன் தயங்க,
“சார் கிட்ட எல்லா விபரமும் சேகரிச்சு நாம பேசினா தான் புரிஞ்சிப்பாரு….ஏனா அவருக்கு இதெல்லாம் வெறும் வார்த்தையால சொன்னா புரியாது….இதே நம்ம கையில பேப்பர் இருந்தா யோசிப்பாரு…..”என்று பரிதி கூற,
“ஓய் சரியா சொன்ன….அப்பா கண்டிப்பா ஒத்துப்பாரு…..சரி நான் நாளைக்கே என் பிரண்டு ஒருத்தன் இருக்கான் அவன் கிட்ட கேட்டு வரேன்….”என்று கூற பரிதியும் சரி என்னும் விதமாக தலையாட்டினான்.அதன்படி அடுத்து வந்த நாட்களில் இருவரும் விசாரிக்க தொடங்கினர்.அதோடு அவர்களின் வேலையிலும் கவனமாக இருந்தனர்.
இதற்கிடையில் மகேஸ்வரன் திவ்யாவை அவள் வேலை பார்க்கும் இடத்தில் பார்த்துவிட்டு அவளிடம் பேச முற்பட அவளோ இவனை கண்டு கொள்ளாது சென்றுவிட்டாள்.
“குள்ள கத்திரிக்கா….திமிரு மட்டும் குறைய மாட்டேங்குது….இவ கிட்ட எப்படி பேசுறது……”என்று யோசித்தவன் அடுத்த நாள் காலை சீக்கிரமாகவே வந்தவன் அவள் கடைக்கு செல்லும் வழியில் வந்து நின்று திவ்யாவின் வருகைக்கு காத்திருந்தான்.முதல் நாளே அவள் எங்கு இருக்கிறாள் என்ன செய்கிறாள் என்று அவளை பற்றிய அனைத்தும் தெரிந்து கொண்டவன்,
“எப்பா குள்ள கத்திரிக்கா….தன்மான சிங்கம் தான் போல….சின்ன வயசுலே அவ்வளவு கஷ்டத்திலேயும் யார் உதவியும் இல்லாம வேலைக்கு சேர்ந்திருக்காளே…..”என்று அவளை பற்றி பெருமை பாடிக் கொண்டான்.ஏதோ யோசனையில் இருந்தவனை களைத்தது இரு பெண்களின் குரல் நிமிர்ந்து பார்க்க அவள் தான் மிருதுளாவுடன் பேசியபடி நடந்து வந்து கொண்டிருந்தாள்.
“இவ என்ன இவங்க கூட வரா….இப்ப எப்படி பேசுறது….”என்று மகேஸ்வரன் யோசிக்கும் போதே திவ்யா அவனை கடந்து சென்றிருந்தாள்.அவள் கடந்து செல்லவும் அவளையே அவன் பார்த்திருக்க,மிருதுளாவின் கவனம் சிதறாமல் அவனை திரும்பி முறைத்துவிட்டு ஒற்றை விரல் நீட்டி எச்சரிக்கை செய்துவிட்டு சென்றாள்.அதைக் பார்த்தவனுக்கு தன்னையும் மீறி சிரிப்பு பீறிட்டது.
“குள்ள கத்திரிக்கா…..”என்று அவளின் பெயரை கூறிக் கொண்டே தனது கேரேஜிற்கு சென்றான்.முதலில் அவளிடம் மன்னிப்பை வேண்ட அவளை பின் தொடர்ந்தவன் அவளின் செயல்களை ரசிக்க தொடங்கினான்.மெல்ல மகேஸ்ரவனின் இதயத்தில் திவ்யா அவளின் குறும்பு தனங்களால் இடம் பெற தொடங்கினாள்.ஒருகட்டத்தில் அவளை பார்க்காமல் அவனிற்கு வேலை நடக்காது என்ற நிலையும் வர தினமும் காலை அவளை தூரமாக நின்று பார்த்துவிட்டு தான் போவான்.மிருதுளா இதை கவனித்து கேட்க திவ்யா மழுப்பலாக பதில் கூற எப்போதும் மடை திறந்த வெள்ளம் போல் பேசுபவள் திக்கி திணறி பதில் கூறவும் புரிந்து கொண்டாள் இது வேறு என்று.
மிருதுளாவிற்கு கவலை பிடித்துக் கொண்டது அவனை பார்த்தால் பெரிய இடத்து பையன் போல இருந்தான்.அவன் திவ்யாவை பார்ப்பது நல்லதற்கில்லை அதோடு அவனை போல உள்ளவர்கள் சும்மா டையம் பாஸ் என்பார்களே அது போல தான் இதுவும் என்று நினைத்தாள்.அதனால் இதை எப்படி கையாள என்ற யோசனை தான்.கணவனிடம் கூறலாமா என்று யோசித்தபடி அவள் இருக்க கணவனே அவளின் யோசனை படிந்த முகத்தை கண்டு கேட்டுவிட்டான்.அவனிடம் அனைத்தையும் கூறிவிட்டாள்.மிருதுளாவிற்கு திவ்யாவின் பின் ஒருவன் வருகிறான் என்று தெரியுமே தவிர அவன் மகேஸ்வரன் என்று தெரியாது.
பரிதிக்கு கோபம் தான் அந்த பையன் மீது அல்ல திவ்யாவின் மீது என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் இவள் என்று நினைத்தவனுக்கு அவளை இழுத்து வைத்து அறையும் எண்ணம்.அடுத்த நாள் காலை மிருதுளாவும்,திவ்யாவும் கடைக்கு போகும் போது மிருதுளா கூறிய இடத்திற்கு பரிதி வந்தான் இதை திவ்யா எதிர்பார்க்கவில்லை என்றால் மகேஸ்வரனைக் கண்ட பரிதிக்கு அதிர்ச்சி தான்.
பரிதி தன்னை கண்டு கொண்டான் என்று நினைத்த மகேஸ்வரன் நேரிடையாக அவனிடம் பேச முடிவு எடுத்துவிட்டான்.அவனால் என்னவானாலும் திவ்யாவை விட்டு தர முடியாது.அதனால் பரிதி கேரேஜிற்கு வந்தவுடன் அவனிடம் செல்ல அவன் எதற்கு வருகிறான் என்று அறிந்த பரிதி அவனை தவிர்க்க மகேஸ்வரனுக்குள் அதிர்ச்சி.அவன் கோபப்படுவான் இல்லை அடிப்பான் என்று நினைத்திருந்தவனுக்கு அவனின் மௌனமான விலகல் மிகவும் பாதித்தது.
அன்று முழுவதும் மகேஸ்வரன் எவ்வளவு பேச முயன்றும் பரிதி தவிர்த்துவிட மாலை வீட்டிற்கு கிளம்பும் போது,
“பரிதி….உன்கிட்ட காலையிலேந்து பேசனும்னு வரேன்….நீ பாட்டுக்கு போனா என்ன அர்த்தம்….”என்று அவனை இழுத்து பிடித்து கேட்க,அவனோ,
“உன் கூட பேச வேண்டிய அவசியமில்லைனு அர்த்தம்….”என்று கூறிவிட்டு நகர,அவனை தடுத்தவன்,
“ஏய்….நான் அவளை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்….அவளை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு….”என்று தன் மனதில் உள்ளதை கூறிவிட,
“இதை நீ முதல்ல உங்க அப்பா,அம்மா கிட்ட சொல்லு….அப்புறம் அவளை பார்க்கலாம்…..”என்று பரிதி கூற,
“கண்டிப்பா சொல்ல தான் போறேன்….என்னைக்கு இருந்தாலும் அவ தான் என் பொண்டாட்டி….அதுக்கு முன்னாடி நான் சுயமா நின்னு எனக்குனு ஒரு அங்கிகாரத்தை உருவாக்கி கிட்டு தான் பேசுவேன்….”என்று மகேஸ்வரன் அழுத்தமாக கூற,
“அப்ப நீ சாதிச்சதுக்கு அப்புறம் அவளை பாரு….அதுவும் உன் அப்பா,அம்மாவோட…..”என்றுவிட்டு செல்ல,
“கண்டிப்பா நடக்க தான் போகுது….எனக்கு மச்சான் மோதிரம் இப்பவே எடுத்து வச்சிடு….”என்று கூறியவன் வேகமாக போய் கொண்டிருந்த பரிதியின் முன் வந்து,
“இங்க பாரு….உனக்கு என்கிட்ட என்ன வேணாலும் கேட்கலாம் கோபப்படலாம் அதுக்கு உரிமை இருக்கு….ஆனா என்னை தவிர்க்க பார்க்காத…கஷ்டமா இருக்கு….”என்று தன் மனதில் உள்ளதை கூறிவிட,பரிதியோ அவனின் தோள்களை தட்டிவிட்டு செல்ல,
“அடேய் சொல்லிட்டு போடா….”என்று மகேஸ்வரன் கத்த,
“போடா டேய்….நான் என் பொண்டாட்டிக் கிட்டேயே இப்படியெல்லாம் பேசினதில்லை….”என்று கூறிக் கொண்டே செல்ல,
“என்னடா சொல்லுற….”
“ஆங்….இந்த அழுகாச்சி படம் எல்லாம் நான் பார்க்க மாட்டேன்…..போ….போ….நாளைக்கு உங்க அப்பா கிட்ட பேசனும் அதுக்கு நாம விசாரிச்ச எல்லாத்தையும் எடுத்துட்டு வா…..முதல்ல வேலையை பாரு….அப்புறம் குடும்பத்தை உருவாக்கலாம்….”என்றுவிட்டு சென்றுவிட மகேஸ்வரன் முகத்தில் அழகிய புன்னகை.ஏதோ பெரிய பாரம் இறங்கிய உணர்வு.இனி எல்லாம் நலம் என்று நினைத்திருக்க அப்படியில்லை மகனே இனி தான் உனக்கு இருக்கிறது என்று அவனை திணறயடித்தான் இளம்பரிதி.அவனின் அவசரவேலைகளில் மகேஸ்வரன் முழிபிதுங்கி போனான் என்றால் மிருதுளாவோ கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.