சென்னை வந்திறங்கினர் மிருதுளாவும் அவளது மணவாளனும்.மிருதுளா மிரண்டு பார்த்தபடி இறங்க அவனோ வேகமாக இறங்கி தன்னுடன் ஒரு ஜீவன் வருகிறது என்ற நினைவு கூட இல்லாமல் செல்ல, மிருதுளாவோ அவனின் பின்னே கிட்டத்தட்ட ஓடினாள் என்று தான் கூற வேண்டும்.ஒரு கட்டத்தில் அவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல்,
“ஏங்க…ஏங்க….அய்யோ நில்லுங்க….”என்று அழைத்தபடியே வர அவனோ எதையும் காதில் வாங்காமல் சென்று கொண்டே இருந்தான்.
“இவரு என்ன இப்படி போறாரு….விட்டுடாதடீ மிருது….”என்று நினைத்தவள் வேகமாக அவனின் முன் சென்று இரு கைகளையும் விரித்தபடி நின்று,
“நில்லுங்க….”என்று மூச்சு வாங்க நிற்க,அவனோ அவளை மேலும் கீழும் ஒரு வெற்று பார்வை பார்த்துவிட்டு அவளை கடந்து சென்றுவிட்டான்.மிருதுளாவிற்கு அப்போது தான் ஒன்று புரிந்தது அவன் தன்னை வேண்டும் என்று தான் நிராகரித்து செல்கிறான் என்று.ஆனால் ஏன் என்று நினைத்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை.அவள் தேங்கி நின்றது ஒருநிமிடம் மட்டுமே எங்கே அவன் தன்னை விட்டு சென்றுவிடுவானோ என்று பயந்து வேகமாக அவனின் பின்னே ஓடினாள்.அந்த ஜனசந்தடி மிகுந்த இடத்தில் அவன் லாவகமாக புகுந்து செல்ல அவளாள் அவ்வளவு எளிதாக முடியவில்லை ஒருகட்டத்தில் அவன் எங்கு சென்றான் என்று தெரியாமல் நின்றுவிட்டாள்.
அவ்வளவு தான் இனி தான் எங்கு போகபோகிறோம் தனக்கு என்று யார் இருக்கிறார்கள் மீண்டும் தனது ஊருக்கும் செல்ல முடியாது என்ன செய்வது ஏதுசெய்வது என்று புரியாமல் மனதின் அழுத்தம்,இயலாமை அனைத்தும் அழுகையாக வெளிப்பட,
“வழிவிடு….”என்று அவளின் தோள்களில் கையை போட்டு தன்னருகில் இழுத்தான் அவன்.பலமின்றி அவனின் மேலே விழுந்தாள்.அவளின் கண்ணகள் கண்ணீரை உகுக்க அது அவனின் சட்டையில் பட்டது.
“ப்ச்….எதுக்கு அழுவுற….என்ன வேணும் உனக்கு…”என்று அவன் கேட்க மிருதுளாவிற்கு அழுகை மட்டுமே வந்தது.இரு கைகளாலும் கண்ணீரை துடைத்தபடி அவனையே பார்த்துக் கொண்டு அழுது கொண்டிருக்க,
“சரி நீ அழு…”என்று விட்டு அவன் செல்ல,
“நில்லுங்க….நில்லுங்க….அய்யோ உங்க பேரு கூட எனக்கு தெரியாது….”என்று மிருதுளா அழுகையோடு அவனின் பின் மீண்டும் ஓட்டம் எடுத்தாள்.பின்னே இவனை விட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பயமே அவனை பின் தொடர வைத்தது.
“என் பேரு எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு நீ என்ன செய்ய போற….”என்றவன் ஒரு சிறிய சந்திற்குள் புகுந்து கொண்டே கேட்க, என்ன சொல்லுகிறான் இவன். நான் யார் என்று மறந்துவிட்டானா இல்லை இவனுக்கு வேறு குடும்பம் ஏதாவது இருக்குமா என்று பத்துநிமிடத்திற்குள் அவளின் சிறு மூளை சற்று அதிகமாக யோசித்துவிட அதற்குள் அவன் சென்றிருந்தான்.
”அச்சோ போயிட்டாரே….”என்று தலையில் தட்டியவாரே வேகமாக இவளும் அவனின் பின்னே நுழைந்தவள்,
“நில்லுங்க….நில்லுங்க….ப்ளீஸ்….”
“ப்ச்….இது என்னடா ரோதனையா போச்சு….”என்று சலித்தபடி நடையின் வேகத்தை குறைக்க,
“என்ன இப்படி பேசுறீங்க….அய்யோ கொஞ்சம் நில்லுங்களேன்….என்னால ஓட முடியல….மயக்கம் வருது….”என்றவளின் குரல் பலகீனமாக ஒலிக்க அவனின் நடை நின்றது.திரும்பி அவளை ஒருமுறை பார்த்தவன் என்ன நினைத்தானோ,
“சாப்பிடுறியா….”என்று கேட்க,மிருதுளாவின் தலை தன் போல் ஆடியது.நேற்று காலை சாப்பிட்டது அதன் பின் நடந்தவை அனைத்தும் ஏதோ அவளை கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் நடந்து முடிந்திருக்க இப்போது நிற்பதற்கு கூட தெம்பில்லை என்று தான் கூற வேண்டும்.
அவளை பக்கத்தில் உள்ள ஒரு உணவகத்திற்கு அழைத்து சென்றவன்,அவளுக்கு தேவையானதை வாங்கி கொடுக்க எந்த மறுப்பும் கூறாமல் வாங்கி கொண்டவள்,எங்கே தான் சாப்பிட குனிந்தால் அவன் சென்றுவிடுவானோ என்று அவனையே பார்த்துக் கொண்டே இருக்க அதை அவனும் உணர்ந்து கொண்டானோ என்னவோ,
“எங்கேயும் போகல முதல்ல சாப்பிடு….”என்று விட்டு அவளுக்கு எதிரில் அமர அவளோ அப்போதும் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“ஏய் என்ன சாப்பிடுறியா இல்லை போகவா….சும்மா நசநசனு….உயிரை எடுக்குது….”என்று திட்ட தொடங்க,மிருதுளாவிற்கு நின்ற கண்ணீர் மீண்டும் ஊற்றெடுக்க தொடங்க அதை துடைத்துக் கொண்டே,
“இல்ல உங்களுக்கு….”
“ஆங்….என்ன…”
“நீங்க சாப்பிடுல….”
“இல்ல எனக்கு வேணாம்…”என்றுவிட்டு அவன் முகத்தை வேறு புறம் திருப்பி கொள்ள,தனக்கு வாங்கிய தோசையில் அவனுக்கும் பாதியை பிரித்து மற்றொரு தட்டில் வைத்தவள்,
“நீங்களும் சாப்பிடுங்க….”என்று கூற அவனோ அவளை கோபமாக முறைத்தவன்,
“உன்கிட்ட நான் சாப்பாடு கேட்கலை புரியுதா…”என்று அழுத்தமாக கூற,மிருதுளாவோ,
“இல்ல நீங்களும் சாப்பிடுங்க…அப்ப தான் நானும் சாப்பிடுவேன்….”என்று அவளும் பிடிவாதமாக கூற,
“ஏய்ய்ய்ய்…..”என்று கோபமாக கையை ஓங்கிவிட்டான்.மிருதுளாவிற்கு சப்தமும் நடுங்கிவிட்டது.உணவகத்தில் உள்ளவர்கள் அனைவரும் இவர்கள் இருவரையுமே பார்க்க,மிருதுளா தனது இருக்கையிலேயே ஒன்றிவிட்டாள்.சாப்பிட தானே சொன்னோம் எதற்கு இவ்வளவு கோபம் என்று அவளுக்கு புரியவில்லை.
“ஒழுங்கா சாப்பிடுறதா இருந்தா சாப்பிடு….இல்ல போயிகிட்டே இரு….”என்றுவிட்டு அவன் வெளியில் செல்ல எத்தனிக்க,
“எனக்கு ரொம்ப பசிக்குது….எங்கேயும் போயிடாதீங்க ப்ளீஸ்….”என்றாள் மிக மெல்லிய குரலில்,அந்த குரல் அவனை ஏதோ செய்தது தான் இருந்தும் அதை புறந்தள்ளியவன் அவளின் அருகே எதுவும் பேசாமல் அமர்ந்து கொண்டான்.அதன் பின் மிருதுளா எதுவும் பேசவில்லை என்பதைவிட உடம்பில் வலுவில்லை என்பதே நிஜம்.அமைதியாக தனது உணவை உண்டவள் எழுந்து கை கழுவ செல்லும் முன்,
“எங்கேயும் போயிடாதீங்க….”என்று தேம்பியபடி கேட்க,
“ம்ம்ம்….”என்று அவனின் தலை மட்டும் ஆடியது.அதையே சம்மதமாக ஏற்று கை கழுவி விட்டு வந்தாள்.அவள் வரும் வரை அவன் அந்த இடத்திலேயே அமர்ந்திருந்தான்.
“போலாம்….”என்றுபடி அவள் வர,
“போலாம் இல்லை நான் போறேன்….நீ என் பின்னாடி வராத….அப்புறம் இந்த கயறு இருக்கு அதனால தான் வரேன்னு எல்லாம் என்கிட்ட சொல்லாத….அது அந்த சமயம் என்னை காப்பாத்திக்க தான் நான் அப்படி செஞ்சேன்….மத்தபடி நமக்குள்ள ஒண்ணுமில்ல…நீ உன் வழியை பாரு….நான் வழியை பார்க்குறேன்…..”என்றுவிட்டு அவன் எழுந்து செல்ல,மிருதுளா ஆணியடித்தது போல் அங்கேயே நின்றுவிட்டாள்.
“என்ன சொல்லுகிறான் இவன்….தாலியை வெறும் கயறு என்கிறான்…..அவனை காப்பத்திக் கொள்ள தனக்கு தாலி கட்டினானா……எதற்காக இவனை காப்பாத்திக் கொள்ள வேண்டும்…..”என்று பலவேறு சிந்தனையில் இருந்தவளை களைத்தது உணவகத்தில் வேலை செய்பவரின் குரல்,
“ம்மா…தள்ளுமா….இலை எல்லாம் எடுக்கனும்….”என்று கூற,அப்போது தான் நிகழ்வுக்கு வந்தவள் சுற்றிமுற்றி பார்க்க அவன் சென்றிருந்தான்.இது தேங்கி நிற்கும் சமயம் இல்லையே என்று உணர்ந்தவள் வேகமாக உணவகத்தை விட்டு வெளியில் வந்து பார்க்க அவன் அந்த தெரு முனையை தொட்டிருந்தான் இனி ஓடினாள் மட்டுமே அவனை பிடிக்க முடியும் என்று நினைத்தவள் ஓட்டம் எடுத்தாள்.அந்த நெரிசலான பாதையில் அனைவரையும் இடித்து தள்ளிவிட்டு ஓடினாள் ஒருமுறை ஒருவள் வாழ்வில் அடிவாங்கினால் பயப்படலாம் ஆனால் இவள் வாழ்வில் பல அடிகளை வாங்கி பழகியதனாலோ என்னவோ அவனை பின் தொடர்ந்தாள்.ஆனால் இந்தமுறை அமைதியாக பின் தொடர்ந்தாள்.
அவனோ தன்னை நம்பி வந்தவளை விட்டு வந்துவிட்டோம் என்கிற குற்றவுணர்வு இல்லாமல் சென்று கொண்டிருந்தான்.மிருதுளாவிற்கு மனதெங்கும் ரணம் மிகுந்து இருந்தாலும் கால்கள் என்னவோ அவனை நோக்கி சென்று கொண்டு தான் இருந்தது.
கடைசியாக அவன் ஒரு சந்தில் திரும்ப மிருதுளாவும் அவனின் பின்னே சென்றாள் அது ஏழ்மையான மக்கள் வாழும் இடம் சிறுசிறு குடுசைகள் வரிசையாக இருந்தன.தெருவின் கடைசியில் உள்ள ஒரு குடிசையின் உள் சென்றவன் கதவடைத்து கொள்ள,மிருதுளாவோ அந்த குடிசையின் முன் அமர்ந்து கொண்டாள்.மனதெங்கும் வலி வலிகள் மட்டுமே ஏன் கடவுள் என்னை மிகவும் சோதிக்கிறார் இவன் எதற்கு என் ஊருக்கு வந்தான் என்று தெரியவில்லை இவனை ஏன் என் வாழ்க்கையில் கடவுள் பிணைத்தார் என்று தெரியவில்லை இவ்வாறு அவளின் மனதில் எழும் கேள்விகளுக்கு பதிலும் தெரியாமல் அமர்ந்திருந்தாள்.
மிருதுளா அவனின் வீட்டின் முன் அமர்ந்திருந்தை அந்த தெரு வாசிகள் பார்த்துவிட்டு ஏதோ தங்களுக்குள் பேசிவிட்டு சென்றனர்.ஆனால் யாரும் அவளிடம் நெருங்க முயலவில்லை.மிருதுளாவிற்கு இது அனைத்தும் ஏதோ ஒருவித ஒவ்வாமை உணர்வை மட்டுமே கொடுத்தது.இங்கிருந்து எழுந்து சென்றுவிடலாம் என்றால் எங்கு செல்வது என்று கூட தெரியவில்லை கையிலோ சொர்ப பணம் தான் இருந்தது.இதை அந்த பொல்லாத சித்தப்பாவிடம் இருந்து எடுக்க சித்தி எத்தனை கஷ்டம் பட்டிருப்பார் என்று நினைக்கையில் மனதில் வேதனை கூடி தான் போனது.
மிருதுளா எவ்வளவு நேரம் அங்கு அமர்ந்திருந்தாளோ,
“யாரும்மா….இங்க ஏன் உட்கார்ந்து இருக்க….”என்று ஒரு பெண்மணியின் குரல் பக்கத்தில் கேட்க நிமிர்ந்து பார்த்தாள்.அங்கு தன் தலையில் வைத்திருந்த கூடையை கீழே வைத்தவிட்டு இவளையே அளவிடும் பார்வை பார்த்தபடி அவர் நிற்க,
“அது…இங்க…”என்று அவன் இருந்த வீட்டை காட்ட,
“ஓ…பரிதி வீட்டுக்கு வந்திருக்கியா…..ஆனா அவன் இங்க இல்லையே….”என்று விட்டு கதவை பார்க்க அது சாத்தி இருந்தது.அவன் இருந்தால் மட்டுமே அந்த கதவு மூடியிருக்கும் இல்லையேல் திறந்தபடி தான் இருக்கும்.
“ஓஓஓ….வந்துட்டானா….எப்ப வந்தான்…ஆமா நீ அவனுக்கு என்ன வேணும்….இதுவரை அவனை தேடி யாரும் வந்ததில்லையே….”என்று அவர் பாட்டிற்கு பேசிக் கொண்டிருக்க,
“அவர் பேர் பரிதியா…..”என்று அவரிடம் கேட்டாள் மிருதுளா.
“என்ன அவன் பேரு கூட தெரியாம….”என்றவர் அவளை ஊன்றி கவனிக்க அப்போது தான் அவள் கழுத்தில் தொங்கி கொண்டிருந்த மஞ்சள் நாணை கண்டார்.
“ஆத்தாடீ…இந்த பய கல்யாணமே கட்டிக்கிட்டானா….இரு இவனை….”என்றவர் வேகமாக பரிதியின் கதவை தட்டினார்.
“அடேய் கதவை திற….திறடா….நான் பரிமளம் வந்திருக்கேன்….”என்று ஓங்கிய குரலில் கத்த அக்கபக்கத்தில் இருந்தவர்கள் எல்லோரும் இவர்கள் வீட்டையே பார்க்க ஆரம்பித்தனர்.
“அடேய் நீ இப்ப கதவை திறக்கிறியா இல்லை நான் கதவை உடைச்சிக்கிட்டு உள்ள வரவா….”என்ற கத்திக் கொண்டே கதவை தட்ட,மிருதுளாவிற்கு பயம் பிடித்துக் கொண்டது எங்கே வெளியில் வந்து தன்னை மீண்டும் அடிக்க கை ஓங்கி விடுவானோ என்று இருந்தும் நடுங்கும் நெஞ்சை பிடித்தபடி நின்றிருந்தாள்.
பரிமளம் பத்து முறையேனு கத்திய பிறகு தான் அவன் கதவை திறந்தான்.
“ஏய் நீ இன்னும் போகலையா….உன்னை….”என்று கேட்கவாரே கீழே கிடந்த பெரிய கல்லை தூக்க,
“டேய்…டேய் என்னடா பண்ணுற….”என்று பரிமளம் பாய்ந்து அவனின் கைகளில் இருந்த கல்லை தட்டிவிட்டார்.
“ஏய் உன்னை தான் எதுக்குடீ இங்க வந்த ஆங்….”என்று அதற்குள் அவன் அவளிடம் நெருங்கியிருந்தான்.
“உன் பொண்டாட்டி உன் பின்னாடி வராம எங்கடா போவா….”என்று அவர் கட்டை குரலை வைத்துக் கொண்டு கத்த,
“ப்ச் இப்ப நீ வாயை வச்சுகிட்டு சும்மா இல்ல கொன்னுடுவேன்….”என்று அவரிடம் கையை நீட்டி எச்சரித்துவிட்டு மிருதுளாவிடம் திரும்பியவன்,
“ஏய் கிளம்பு….ஏதோ போனா போகுதுனு உன்னை காப்பாத்திவிட்டா….நீ என் உயிரை எடுக்கனே வந்திருக்க…”
“நான் என்ன பண்ணேன்….ஆங்….சொல்லுங்க….நான் என்ன பண்ணேன்….நீங்க தான என் முகத்துல எதையோ வச்சு அழுத்தி மயங்க வச்சீங்க….எனக்கு தெரியும் கடைசியா நான் உங்க முகத்தை பார்த்தேன்….எதுக்காக அப்படி பண்ணீங்க….எல்லாம் உங்களால வந்தது……உங்களால தான் நான் மாட்டிக்கிட்டேன்……அப்பவும் நீங்க தான் என்னை காதலிக்கிறதா சொல்லி தாலி கட்டிட்டு…இப்ப அது சும்மா ஒரு கயறு அதை கழட்டுட்டு உன் வேலையை பாருனு சொல்லுறீங்க….என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க….ஆங்…..சொல்லுங்க….”என்று மிருதுளா தன்னையும் மீறி அவனின் சட்டையை பிடித்து கத்திவிட்டாள்.
அந்த இடத்தில் மிருதுளாவின் குரல் மட்டுமே கேட்டது அனைவரும் கலவரமான முகத்துடன் பரிதியை பார்த்துக் கொண்டிருக்க அவனின் முகமோ கொஞ்சம் கொஞ்சமாக மிருகமாக மாறிக் கொண்டிருந்தது.அதை கவனித்த பரிமளம் அவனை தடுக்கும் முன் அவளை தன்னிடம் இருந்து தள்ளிவிட்டவன்,
“ஏய் உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா என் சட்டையே பிடிப்ப…உன்னை….உன்னை….”என்று அவளை அடிக்க கை ஓங்கி கொண்டு போக நடுவில் தடுக்க வந்த பரிமளத்தையும் அவன் தள்ளிவிட்டிருந்தான்.அவன் தள்ளிவிட்டதில் கீழே விழுந்திருந்த மிருதுளா சுதாரித்து எழும்பும் முன் அவளின் முடியை பிடித்து அவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டான்.அதில் சுருண்டு விழுந்துவிட்டாள்.
“அய்யோ…பாவீ….அடேய்….நீ நல்லா இருப்பியா….பொம்பளை பிள்ளை மேல கை வைக்குற….”என்று கத்தி கொண்டே தூக்க முடியாத தன் உடம்பை தூக்கி ஓடி வந்த பரிமளம் மிருதுளாவை தூக்கிவிட,
“கொன்னுடு….என்னை அடிச்சே கொன்னுடு….நான் இருந்தாதான எல்லாரும் அவங்க அவங்க இஷ்டத்துக்கு என்னை அடிச்சி அடிபனிய வைப்பீங்க…கொன்னுடுங்க….நானும் எங்க அப்பா,அம்மா கிட்டேயே போறேன்….”என்று அவனின் கைகளை பிடித்து தன் கழுத்தில் வைக்க,அதுவரை மூர்க்கமாக இருந்தவன் அவளின் கதறலைக் கண்டு அவளை வேகமாக தள்ளிவிட்டவன்,
“என்னவேனா பண்ணுங்க….ஆனா நான் இந்த இடத்தை விட்டு போகமாட்டேன்….எனக்கு….எனக்கு இங்க உன்னைவிட்டா யாரையும் தெரியாது….என்னால போகமுடியாது….அடிப்பியா அடி கொல்லுவியா கொல்லு…”என்றுவிட்டு வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு மீண்டும் அதே திண்ணையில் மிருதுளா அமர்ந்து கொள்ள,அவளை கோபமாக பார்த்தவன் எதுவும் கூறாமல் வெளியில் சென்றுவிட்டான்.
“அப்படி போடு ராசாத்தி….இந்த கொழுப்பெடுத்தவனுக்கு ஏத்த பொண்ணு தான் நீ….”என்று அவளின் அருகே அமர்ந்த பரிமளம் அவளின் தலையை ஆதுரமாக தடவியவாரே,
“அவன் ஒரு கல் தான் கண்ணு….ஆனா கொஞ்சமே கொஞ்சம் நல்லவன் தான்….”என்றவரை நிமிர்ந்து பார்த்த மிருதுளாவின் முகத்தில் கசந்த முறுவல் மட்டுமே.இனி தன் வாழ்வு தன் கையில் தான் என்று முடிவெடுத்தவள் அதை எதிர்கொள்ளவும் தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தாள்.ஆனால் அவள் வாழ்வில் இன்னும் அதிர்ச்சிகள் குறையவில்லை இன்னும் இருக்கிறது என்று அவளின் விதி அவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்ததை அவள் அறியவில்லை.