மிருதுளா மெல்ல கண்களை விழிக்க திவி தான் அவளை தன் மடியில் வைத்திருந்தாள்.அவளை மெல்ல எழுப்பிய திவ்யா அவள் அருந்த நீர் தர அவளோ சுற்றி பார்க்க அந்த காவலர் அந்த அறையில் இல்லை.தான் ஏதோ தவறாக நினைத்துவிட்டோமா என்று கூட மனதில் ஒரு நப்பாசை எழுந்தது மிருதுளாவிற்கு.ஆனால் இல்லை என்று சற்று நேரத்தில் புரிந்தது.அந்த கடையின் முதலாளி,
“இந்தாம்மா மிருதுளா….இப்ப எப்படி இருக்கு….”என்று கேட்க,மிருதுளா எதுவும் கூறவில்லை பதிலாக தலையை மட்டும் ஆட்டினாள்.
“இங்க பாரும்மா….உன் புருஷன் தான் பணத்தை எடுத்திருக்கான் அவங்க கையில ஆதாரம் இருக்கு…நீ அவங்க கூட போ….”என்று விட்டேத்தியாக கூற,மிருதுளா அரண்டுவிட்டாள்.அவளின் முகம் கலங்க,அவளின் கையை இறுக பற்றிய திவ்யா,
“நாங்க இரண்டு பேருமே போய் பார்த்துட்டு வரோம் சார்….”என்று கூற,அவரோ,
“இல்லமா இது…இந்த மாதிரி எல்லாம் என் கடைக்கு யாரும் வந்ததில்லை….அதனால….”என்று அவர் கூறும் எழுந்த திவ்யா தன் ஒரு கரத்தால் மிருதுளாவையும் எழுப்பி,
“ஏய் என்னடீ…இப்ப போய் இப்படி பேசிக் கிட்டு இருக்க….”என்று மிருதுளா சற்று கோபமாகவே கேட்க,
“நீ சும்மா இரு….மிரு….”என்றவள் அவரை பார்க்க,அவரோ உடனடியாக அவர்கள் இருவர் கணக்கையும் மொத்தமாக தீர்த்து அனுப்பிவிட்டார்.இருவரும் வெளியில் வர அந்த காவலர் நின்றிருந்தார் ,மிருதுளாவை மறைத்தது போல வந்த திவ்யா,
“சார் நாங்க எங்க வரனும்….”என்று நேரிடையாக கேட்க,அவரோ தன் மேல் அதிகாரியிடம் பேசிவிட்டு இருவரையும் கேரேஜிற்கு வரும்படி பணிந்தார்.
“சரி சார் நாங்க ஆட்டோல வரோம்….”என்று கூற,அவரும் மிருதுளா மாசமாக இருக்கும் காரணத்தால் சரி என்றுவிட்டு ஒரு ஆட்டோவில் இருவரையும் ஏற்றிவிட்டு பின் தொடர்ந்தார்.
மிருதுளாவும்,திவ்யாவும் கேரேஜின் உள்ளே நுழைய அங்கு பெரிய காவல் அதிகாரி அமர்ந்திருக்க,அவருடன் மாணிக்கமும் அவரின் பக்கத்தில் குமரனும் நின்றிருந்தான்.குமரன் இவர்களை கண்டவுடன்,
“குமரா….”என்று அதட்டலிட்டார் மாணிக்கம்.தன் மகனும் இதில் கூட்டு என்று தெரிந்த பின் மிகவும் உடைந்து போனார்.மனது நிலையில்லாமல் தவித்தது.தன் மகனா இவ்வாறு செய்தான் என்பதை ஒரு தந்தையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.இதில் குமரன் வேறு அவரை ஏற்றிவிட ஒரு கோபத்தில் போலீஸ் வரை சென்றுவிட்டார்.ஆனால் தன் முன்னே நிறைமாத வயிற்றுடன் நிற்கும் பெண்ணை பார்த்தவுடன் நெஞ்சம் பிசைந்தது.
“உட்காரும்மா….”என்று மிருதுளாவை உட்கார சொன்னவர்,ராமிடம் அவளுக்கு தண்ணீர் எடுத்து வரும் படி பணிந்தார்.
“என்ன மாமா நீங்க திருட்டு பய பொண்டாட்டிக்கு எல்லாம் மரியாதை கொடுக்குறீங்க….ஏய் எங்க பணம் எங்க ஆங்….புருஷன் தான் திருடுவானா இல்லை நீயும் அதுக்கு கூட்டா….ஆங்….”என்று குமரன் எகிறிக் கொண்டிருக்க,
“பளார்…..”என்று விட்டார் ஒரு அறை மாணிக்கம்,
“என்னடா நானும் பார்த்துக்கிட்டு இருக்கேன்….நீ ரொம்ப துள்ளுர….ஆங்….பொம்பள பிள்ளைங்க கிட்ட எப்படி பேசனும் தெரியாது ஆங்….தோளை உரிச்சிடுவேன்….ஒழுங்கா ஒரு ஓரமா உட்காரு….”என்று ரௌத்திரமாக கூற குமரன் அடங்கிவிட்டான்.ஆனால் கங்கு போல பற்ற வைத்துவிட்டதே அது போதும் என்று நினைத்துக் கொண்டான்.
குமரன் தன்னை இவர்கள் மெதுவாக வெளியில் நகர்த்த முயற்சிக்கிறார்கள் என்று புரிந்து தான் மகேஸ்வரன் கூறியவுடன் ஊருக்கு செல்வது போல சென்றுவிட்டு உடனே திரும்பியும் இருந்தான் வந்து பார்த்தால் அவனுக்கு தொக்காக சம்பவம் கிடைத்திருக்க இது தான் சமயம் என்று பரிதிக்கு எதிராக மாணிக்கத்திடம் பற்ற வைத்து அவரின் நெஞ்சில் நஞ்சை விதைத்துவிட்டான்.
மாணிக்கம் எங்கும் எதிலும் நிதானம் என்று இருக்கும் மனிதர் இன்று மகனும் இதில் அடக்கம் என்று பொழுது வழுக்கிவிட்டார்.என்ன இருந்தாலும் தந்தை என்று வரும் போது அனைத்தும் மாற தான் செய்கிறது.மாணிக்கம் குமரனை கை ஓங்கியதும் பக்கத்தில் இருந்த அதிகாரி தான் அவரை பிடித்து அமர வைத்தார்.
“சார் கொஞ்சம் பொறுமையா இருங்க விசாரிக்கலாம்….நான் இதுக்கு தான் ஸ்டேஷன் போகலாம்னு சொன்னேன்….நீங்க தான் வேண்டாம்னு சொல்லிட்டீங்க….”என்று கூற,
“எப்படி சார்…இந்த பொண்ணுங்களை ஸ்டேஷன் அது இது அழைக்க முடியும்…..அதுவும் இந்த பொண்ணு வாயும் வயிறுமா இருக்கு….இவ புருஷன் தப்பு பண்ணியிருக்கான் தான் அதுக்காக இந்த பொண்ணை தண்டிக்க முடியாதுல்ல….”என்று ஒரு வீட்டின் பெரியவராக மாணிக்கம் கூற அனைத்தையும் கேட்ட மிருதுளா மீண்டும் உடைந்து அழுதுவிட்டாள்.அவளின் பக்கத்தில் இருந்த திவ்யா,
“இந்தா பொண்ணுங்களா….முதல்ல உட்காருங்க….இதுல இளம்பரிதியோட பொண்டாட்டி யாரு….”என்று அந்த அதிகாரி கேட்க,
“ந….நா….நான் தான் சார்….”என்று தேம்பியபடி கூறினாள் மிருது,
“நீ யாரும்மா….”என்று திவ்யாவை பார்த்து அவர் கேட்க,
“நான் இவளோட தோழி சார்….இவ கூட தான் வேலை பார்க்குறேன்….”என்று கூற,
“ம்ம்….என்ன மிருதுளா…உனக்கு உன் புருஷன் எங்க இருப்பான்னு தெரியுமா….”என்று விசாரணையை தொடங்க,
“இல்லை சார் எனக்கு எதுவும் தெரியாது….நேத்து காலையில போகும் போதே நான் நைட் வரமாட்டேன்….வேலையிருக்குனு தான் சொல்லிட்டு போனார்….அப்ப கூட நான் தனியாவானு கேட்டேன்….இல்லை என்கூட மகேஸ்வரன் வரான் சொல்லிட்டு போனார்…..”என்று நேற்று தன் கணவன் கூறியதை அப்படியே கூற,அதுவரை அமைதியாக இருந்த மாணிக்கம் மகனின் பெயர் அடிபடவும்,
“இங்க பாரும்மா….என் பிள்ளையை ஏன் இழுக்குற….உன் புருஷன் எங்க இருப்பான் அது உனக்கு தெரியுமா தெரியாதா….”என்று தோரணையாக கேட்க,
“தெரியாது சார்…..”என்று மிருதுளா கூற,
“அது எப்படிமா உன் புருஷன் எங்க போறான் வரான் கூடவா உனக்கு தெரியாது….”என்று காவல்துறை அதிகாரி கேட்க,மிருதுளா எந்த பதிலும் தரவில்லை தெரிந்தால் தானே கூற முடியும்.
“சார்….”என்று திவ்யா பொதுவாக அழைக்க,தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த மாணிக்கமும் காவல் அதிகாரியும் திரும்பி என்ன என்று பார்க்க,
“சார்….பரிதி எனக்கு அண்ணன் போல தான்….எங்க அண்ணன் தான் எடுத்தாருனு எப்படி சொல்லுறீங்க….”என்று கேட்க,
“இங்க பாரும்மா….சிசிடீவில பதிவாயிருக்கு….”என்று ஒரு பதிவை அவரின் மொபைலில் இருந்து காட்ட,அதில் பரிதி பணப்பை வாங்குவது மட்டும் தான் இருந்தது.
“சார்….இதுல அண்ணன் பை வாங்குறது மட்டும் தான் இருக்கு…ஆனா பணத்தை எடுத்தமாதிரி இல்லையே….”என்று கேட்க,
“என்னமா….எங்களுக்கு சட்டம் சொல்லி கொடுக்குறியா….”என்று அந்த அதிகாரி எகுற தொடங்க,மிருதுளா பயந்துவிட்டாள் அவள்,
“திவி நீ போ….நான் பார்த்துக்குறேன்….”என்று அவளை இந்த இடத்திலேந்து நகர்த்த பார்க்க,
“உன்னை விட்டுட்டு எல்லாம் நான் போகமாட்டேன்….”
“திவி அம்மா….”என்று மிருதுளா மேலும் பேசும் முன்,
“அம்மா கிட்ட சொல்லிட்டேன்…வந்துட்டு இருப்பாங்க…”என்று கூறிக் கொண்டிருக்கும் போதே நாயகி பதட்டத்துடன் உள்ளே நுழைந்தார்.அவர் கையில் ஒரு பையும் இருந்தது.
“இதோ வந்துட்டாங்க….”என்று கூறிவிட்டு அவரிடம் இருக்கும் பையை வாங்கி கொண்டாள்.வந்தவர் தன் மகளின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டார்.அதை பார்த்த மிருதுளாவிற்கு அத்தனை சங்கடமாகி போனது.
“அய்யோ தன்னால் இவர்களும் அல்லவா அல்லாடுகிறார்கள்….எனக்கு மட்டும் ஏன்…ஏன்…”என்று மனதில் கத்திக் கொண்டே அழுதவள்,பின் ஒரு முடிவுடன் மாணிக்கத்திடம் திரும்பி,
“சார்….நான் தான் இளம்பரிதியோட சம்சாரம்….நான் இங்க இருக்கேன்…இவங்களை அனுப்பிடுங்க…இவங்களுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை….”என்று கை கூப்பி கூற,மாணிக்கத்திற்கு தர்ம சங்கடமாகியது.
“இங்க பாரும்மா…நாங்க ஒண்ணும் அவங்களை இருனு சொல்லலை….”என்று அந்த அதிகாரி சொன்னவர்,
“சார்….பரிதி எனக்கு அண்ணனா இவங்க எனக்கு அண்ணி அப்படி இருக்குறப்ப நான் எப்படி இவளை விட்டுட்டு போவேன்….என்னால முடியாது….”என்று பிடிவாதமாக கூறிவிட.திவ்யாவை ஆச்சிரியமாக பார்த்தார் மாணிக்கம்.இன்று ஒரு சிறு பிரச்சனை என்றால் உறவுகளே ஓடிவிடும் இதில் ஒட்டுமில்லாமல் உறவுமில்லாமல் இந்த பெண் ஒரு கஷ்டத்தில் தன் தோழிக்கு துணையிருக்கிறாளே என்று.திவ்யா தனது கையில் இருந்த பையை மாணிக்கத்தின் முன் வைத்து,
“இதுல பணம்,நகை இருக்கு எவ்வளவு தேரும்னு எனக்கு தெரியாது…..இதை வச்சிக்குங்க….”என்று கூற,
“இந்தா பொண்ணு….என்ன நீ உன் இஷ்டத்துக்கு பேசிக்கிட்டே இருக்க….நீ இந்த பணத்தை குடுத்துட்டா….திருடனது இல்லைனு ஆகிடுமா…ஆங்….”என்று காவல் அதிகாரி கேட்க,
“திருட்டு திருட்டு தான்….நான் இல்லைனு சொல்லலை….ஆனா அது என் அண்ணன் மட்டும் தான் செஞ்சுதான்றது தான் என்னோட கேள்வியே…அதுக்கு நீங்க பதில் சொல்லமாட்டேங்குறீங்க….அதோட கடைக்கு உள்ளேயும் கேமரா இருக்குமே அதை காட்டுங்க….”என்று விவரமாக கேட்க,அந்த அதிகாரியே என்னடா இந்த பெண் இப்படி நம்மளையே கேள்வி கேட்குது என்று நினைத்துவிட்டார்.
“இங்க பாரும்மா…எனக்கு இந்த பணமெல்லாம் வேண்டாம்….உன் அண்ணன் எங்க இருக்கான் அதை மட்டும் சொல்லு….”என்று மாணிக்கம் கேட்க,
“இன்னைக்கு நைட் கண்டிப்பா வந்துடும் சார்….”என்று திவ்யா கூற,
“அது எப்படி பணத்தை எடுத்துக்கிட்டு இங்க வருவானா….”என்று அவர் கேள்வி கேட்க,
“வருவாரு….”என்று அழுத்தமாக கூறினாள் திவ்யா.அவளின் அந்த நம்பிக்கையான பதிலில் மாணிக்கம் என்ன நினைத்தாரோ,
“சரிமா நீங்க போங்க….”என்றுவிட்டார்.
“சார் என்னதிது….நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க…”என்று காவல் அதிகாரி கூற,
“சார்….நான் என் புருஷன் வராம போகமாட்டேன்….”என்றுவிட்டு அங்கிருந்த நாற்காலி ஒன்றில் தளர்ந்து அமர்ந்துவிட்டாள் மிருதுளா.இனி உடலிலும்,மனதிலும் சக்தியில்லை அவளிற்கு.இரவு வரவேண்டியவர்களோ விடியல் நெருங்கும் நேரம் தான் வந்தனர்.பரிதி கேரேஜின் உள் நுழையும் போதே கண்டது நாற்காலியில் ஓய்ந்து போய் அமர்ந்திருந்த மிருதுளாவை தான்.வேகமாக அவளிடம் நெருங்கியவன்,
“ஏய் நீ ஏன் இங்க வந்த….ஆங்….”என்று கேட்டுக் கொண்டே அவளை ஆராய,மகேஸ்வரனுக்கு நிலைமையின் திவீரம் புரிந்து போனது.பரிதியைக் கண்ட மிருதுளா எந்த உணர்வையும் காட்டவில்லை தன்னை தொட்ட அவன் கரத்தை விலகி மெல்ல எழ முற்பட,
“ஏய் இரு….”என்று அவளின் கைகளை பிடித்து எழுப்பிவிட்டவன்,
“என்ன ஆச்சு….”என்று கேட்க,அவளோ அவனிடம் எந்த பதிலையும் தராது,அங்கு அமர்ந்திருந்த மாணிக்கத்தை பார்த்து,
“வந்துட்டாரு சார்….நான் கிளம்புறேன்…”என்றுவிட்டு மெல்ல நடக்க,பரிதி திவ்யாவிடம் கண்ணை காட்டினான்.அதை புரிந்து கொண்டவள் மிருதுளாவுடன் செல்ல நாயகியும் அவளுடன் சென்றார்.
“ஏய் நீ தான் பரிதியா…”என்ற காவல் அதிகாரி அவனை நெருங்கும் முன் அவனை மறைத்தபடி நின்ற மகேஸ்வரன்,
“சார்…என்ன விஷயம்….”என்று கேட்க,அவனை பார்த்துவிட்டு அவர் மாணிக்கத்தை பார்க்க,
“மகி நீ இங்க வா…”என்று அழைக்க,
“முடியாதுப்பா….இதுல இவன் மட்டும் கிடையாது நானும் தான் இருக்கேன்….அப்படி இருக்க அவனுக்கு மட்டும் தண்டனை அதை நான் ஒத்தக்கமாட்டேன்…”என்று பிடிவாதமாக கூற,
“தம்பி அதான் அப்பா சொல்லுறாங்கல நீங்க தள்ளுங்க….இரண்டு தட்டுதட்டுனா பணம் எங்க இருக்குனு சொல்லுவான்…”என்றவர் பரிதி முறைத்து பார்க்க,அவனோ இதெல்லாம் எனக்கு புதிதல்ல என்பது போல பார்த்துக் கொண்டிருந்தான்.
“ப்பா நீங்க ரொம்ப தப்பு பண்ணுறீங்க….நான் தான் பணத்தை எடுத்தேன்….என் தேவைக்கு நான் தான் எடுத்தேன்….”என்று அழுத்தமாக கூறிய மகேஸ்வரனை அதிர்ச்சியாக பார்த்த மாணிக்கம்,
“என் பிள்ளையை என்னடா பண்ண…உன்னை நம்பி வேலைக்கு சேர்த்த எனக்கு நீ நல்ல மரியாதை கொடுத்துட்ட….”என்று பரிதியிடம் கோபமாக அவர் கத்தியவர்,காவல் அதிகாரியை தனியே அழைத்து அவரிடம் தன் புகாரை திருப்பி வாங்கி கொண்டவர் பரிதியிடம் வந்து,
“நீ வெளில போ….உனக்கு இங்க வேலை இல்லை….”என்று அகங்காரமாக கூற,அவன் சரி என்று தோள்களை குலுக்கிவிட்டு சென்றுவிட்டான்.மகேஸ்வரன் மாணிக்கத்திடம் பேச முற்பட அவரோ அவனை கண்டு கொள்ளாமல் சென்றுவிட யாரை பார்ப்பது யாரை விடுவது என்று புரியாமல் தலையில் கை வைத்து மகேஸ்வரன் அமர்ந்துவிட்டான்.அவனிற்கு தந்தைஇந்த விஷயத்தை இப்படி இழுத்து வைப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.அவன் பணத்தை எடுத்துவிட்டு அங்கிருக்கும் கேமராவில் அவரிடம் தன் பக்க விளக்கத்தை கூறி தான் சென்றிருந்தான்.அப்படி இருக்க ஏன் இவ்வாறு செய்தார் என்று உட்கார்ந்திருக்கும் போது,
“ஏன் மாப்புள இப்படி பண்ண….பாரு மாமனுக்கு எத்தனை தலையிறக்கமா போயிடுச்சு…..”என்று குமரனின் குரல் கேட்க,அவரை முறைத்தபடி,
“நீ தான் அப்பாவை ஏத்திவிட்டதா….”என்று கேட்க,குமரனுக்கு அன்று நேரம் சரியில்லை போல அதனால் தான் செய்ததை கூற அடி வெளுத்துவிட்டான்.
“இனி உன்னை இங்க எங்காயவது பார்த்தேன்….”என்று ஒற்றை விரலை நீட்டி எச்சரிக்க குமரன் உயிர் வேண்டும் என்ற பயத்தில் தன் ஊரை பார்க்க ஓடிவிட்டான்.
முதலில் தந்தையை சரி செய்ய வேண்டும் என்று தன் வீட்டை நோக்கி அவன் சென்று கொண்டிருக்கும் போது பரிதியிடம் இருந்து அழைப்பு வர,
“அச்சோ அங்க என்ன பிரச்சனைனு தெரியலையே….”என்று நினைத்துக் கொண்டு தான் அழைப்பை ஏற்றான்.அந்த பக்கம் கூற பட்ட செய்தியில் நேராக பரிதி இருக்கும் குடியிருப்புக்கு சென்றுவிட்டான்.
மிருதுளா,திவ்யாவும் தங்கள் வீட்டிற்கு வர அங்கு வேறு பிரச்சனை காத்திருந்தது.பரிதியை பற்றி அங்கும் விசாரணை செய்ததால் வீட்டின் உருமையாளர் மிருதுளா,திவ்யா இருவரையுமே வீட்டை உடனடியாக காலி செய்யும் படி கூறிவிட்டார்.திவ்யா அவரிடம் தங்கள் நிலைமை பற்றி எடுத்துக் கூற முற்பட்டுக் கொண்டிருக்க,மிருதுளா எதுவும் பேசாமல் தங்கள் வீட்டில் நுழைந்து அவளுடைய சாமான்கள மூட்டைக் கட்டிவிட்டு வெளியில் வந்தவள் யாரையும் பார்க்காமல் செல்ல தொடங்க,அதனை கண்ட திவி,
“ஏய் மிருது…..ஏய்….நில்லு….நில்லுடீ….”என்று கத்திய படி பின்னே வந்தும் அவள் காதில் வாங்காமல் சென்று கொண்டே இருக்க அவளின் முன்னே வேகமாக வந்து நின்றான் பரிதி.
“எங்க போற….”என்று கேட்டபடி அவளின் கையில் இருக்கும் பொதியை வாங்க முற்பட,அவளோ தராமல் நகர்ந்து அவனை தாண்டி நடக்க தொடங்க,அவளின் கையை அழுத்தமாக பற்றியவன்,
“ஏய் என்ன ஆங்….அதான் வந்துட்டேன்ல….அப்புறம் என்ன ஆங்….”என்றுவிட்டு அவளின் கையை இழுக்க,அவளோ அவனின் முகத்தை கூட பார்க்கவில்லை,பேசவுமில்லை ஆனால் அவனின் கை பிடியை விலக்க போராட,பரிதியின் பிடி இன்னும் இறுக ஒரு கட்டத்தில் அவளிற்கு வலி எடுக்க,
“சாரி….வலிக்குதா….வா….வீட்டுக்கு போய் பேசிக்கலாம்….”என்று அவளை இழுக்க,
“வீடா….அது எங்க இருக்கு….உன்னை மாதிரி திருடனுக்கு எவன் வீடு கொடுப்பான்…..”என்று மிருதுளா வார்த்தைகளை விட,
“ஏய்ய்ய்ய்….”என்று கையை ஓங்கிவிட்டான் பரிதி.திவ்யாவும்,நாயகியும் நடுக்கத்துடன் அவனை பார்க்க,மிருதுளாவோ அவனை எரித்துவிடுவது போல பார்த்தவள்,
“ஓஓ….சாருக்கு கோபம் வருதோ….நான் மட்டுமா சொல்லுறேன்….இப்ப ஊரே சொல்லுதே….ஆங்….என்ன செய்ய போற….ஆங்….”என்று ஆவேசத்துடன் கேட்க,
“ப்ச்….இது நீ நினைக்கிற மாதிரி இல்லை….”என்று அவளுக்கு புரிய வைக்கும் நோக்குடன் பேச,
“நீ என்ன சொல்ல போற…ஆங்…நீ அடுத்தவன் பணத்தை எடுத்துட்டு இல்லைனு சொல்ல போறியா….ஆங்….உன்னால இதோ….என்று திவ்யாவை காட்டியவள்…..இவளும் தெருவுல நிக்குற….ஆங்……என்ன சொல்ல போற…..ஆங்….உனக்கு யாரை பத்தியும் கவலையில்லை நீ என்ன நினைக்குறியோ அதை தான் செய்வ…..அதனால யார் பாதிக்கப்பட்டா உனக்கு என்ன….அப்படி தான….சொல்லு…..சொல்லு…..”என்று அவனின் நெஞ்சை பிடித்து தள்ள அவனோ இரும்பு போல நின்றான்.
“நீ பேச மாட்ட….நீ தான் மனுஷனே இல்லையே அப்புறம் உன்கிட்ட இதெல்லாம் எப்படி எதிர்பார்க்க…”என்றவிட்டு தளர்ந்து ரோட்டிலேயே அமர்ந்துவிட்டாள்.
“அய்யோ….மிருது…..”
“கண்ணு….”என்று திவ்யாவும்,நாயகியும் அவளை பிடித்து எழுப்ப பார்க்க,அவளோ ஒற்றை கையால் அனைவரையும் தடுத்தவள்,
“இவனை கட்டுன பாவத்துக்கு நான் ரோட்டுல தான் இருக்கனும்….எல்லாம் என் தலையெழுத்து…..இதுல உங்களையும் இப்படி இழுத்துவிட்டு கஷ்படுத்திட்டேனே….அது தான் என்னால தாங்க முடியலை….”என்று தன் நெஞ்சில் அறைய,அவளின் கையை வேகமாக பிடித்த பரிதி,
“ஏய்ய்ய்….என்னடீ….ரொம்ப பண்ணுற….எந்திரி முதல்ல….நான் தான் சொல்லுறேன்ல….நான் திருடல…..”என்றவுடன் கோபத்தில் அவளின் சட்டை பிடித்த மிருதுளா,
“நீ திருடல….ஆங்….ஏன்டா….ஏன் பொய் சொல்லுற….ஆங்….”என்று இரு கன்னித்திலும் அரைய,திவ்யாவும்,நாயகியும் பயந்து தான் விட்டனர் அவளின் இந்த பரிமாணத்தில்.ஆனால் பரிதியோ அவள் அடியை தாங்கி கொண்டே அவளை எழுப்பி அணைத்து பிடித்தவன் ஒரு கையால மகேஸ்வரனுக்கு அழைத்து தனக்கு உடனடியாக ஒரு வீடு வேண்டும் என்று கேட்க அவன் தந்தை பார்க்க சென்று கொண்டிருந்தவன் வேகமாக பரிதியிடம் வந்துவிட்டான்.
பரிதியை அடித்து ஓய்ந்த மிருதுளா அவனின் மார்பிலேயே மயங்க அவளை தாங்கி கொண்டவன்,திவ்யாவிடம்,
“குட்டி பிசாசு…ஒரு ஆட்டோ பிடி….”என்று கூற அவனை முறைத்துக் கொண்டே ஒரு ஆட்டோவை அழைத்து வந்தாள்,
“இல்ல தம்பி அது….”என்று நாயகி தயங்கினார்.அவருக்கு பயம் வந்துவிட்டது இவர்களால் தங்கள் வாழ்வும் பாதிக்கப்படுகிறதே என்று நினைத்துவிட்டார்.அவரின் நினைவை புரிந்து கொண்ட பரிதி,
“இங்க பாருங்க….நீங்க எங்கேயும் போக முடியாது…அதுக்கு நான் அனுமதிக்கவும் மாட்டேன்….ஒழுங்கா உட்காருங்க….”என்று மிரட்டல் தோணியில் கூற,அவர் இன்னும் தான் பயந்தார்.
“ம்மா….உட்காரு….அவ வேற மயங்கிட்டா….எவ்வளவு நேரம் அண்ணன் அவளை சுமக்க முடியும்….”என்று நாயகியை ஏற்றி அவளும் அமர,மிருதுளாவை உள்ளே விட்டு அவளின் தலையை நன்றாக பின் பக்கம் சாய்த்து படுக்க வைத்தான்.அதற்குள் மகேஸ்வரன் வந்திருக்க,
“டேய் என்னடா…”
“வீடு என்னாச்சு….”என்று கேட்க,
“ஏன்டா நான் வீட்டை இடுப்புல கட்டிக்கிட்டு அலையுறேனா….இருடா இனி தான் கேட்கனும்….”என்று கூற,அவனை முறைத்த பரிதி,
“உடனே ஏற்பாடு பண்ணு….சீக்கிரம்….”என்று கூற,மகேஸ்வரன் உடனே நியாபகம் வந்தவனாக,
“டேய் எங்களுக்கு இன்னொரு வீடு இருக்க…வா…அங்க போலாம்….”என்று கூற பரிதி முதல் முறையாக தயங்கினான்.அவனின் தயக்கத்தை புரிந்த மகேஸ்வரன்,
“டேய் ஒண்ணும் யோசிக்காத….அப்புறம் யோசிக்கலாம்…இப்ப இவங்களை சேப்பா இருக்க வைக்கனும்….”என்றுவிட்டு அந்த ஆட்டோ டிரைவரிடம் தன் வண்டியை பின் தொடருமாறு கூறிவிட்டு பரிதியுடன் தன் வீட்டிற்கு அழைத்து சென்றான்.பரிதிக்கு நினைவு முழுவதும் மிருதுளாவை எப்படி சமாளிப்பது என்பதில் தான் இருந்தது.ஆனால் இம்முறை பரிதிக்கு நல்ல பாடத்தை மிருதுளா புகட்டுவாள்.அவளின் அதிரடியில் பரிதியே தானாக முன்வந்து திருட்டு என்பதே இனி என் வாழ்வில் இல்லை என்று கூறுவான் கூறவைப்பாள்.