மிருதுளா அழுது கொண்டே இருக்க பரிமளம் தான் கத்திக் கொண்டிருந்தார்.
“இப்ப நாங்க என்ன சொல்லிட்டோம்னு இப்படி கத்துற பரிமளம்….உண்மைய தான சொன்னோம்…..அவனே ஒரு ரவுடி பய அவன் கிட்ட இருந்து இந்த பொண்ணு அடிவாங்கி சாவுறதுக்கு உன் ஊருகே போ சொன்னது தப்பா….”என்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கூற,
“இந்தா நீ யாருடீ….அந்த புள்ளைய பார்த்து ஊருக்கு போனு சொல்லுரவ…..தினமும் உன் புருஷன் கூட தான் குடிச்சிட்டு வந்து உன்னை அடிக்கிறான் ஏன் நீ போவ வேண்டியது தான….வந்துட்டா….அடுத்தவன் குடி கெடுக்க….ஒழுங்கா போயிடுங்க இல்ல இப்ப போனவன் திரும்பியும் வருவான் அவன் கிட்ட எல்லாத்தையும் சொல்லிபுடுவேன்….”என்று பரிமளம் ஒரு குண்டை போட அனைவரும் அவர் எதிர்பார்த்து போல கலைந்துவிட்டனர்.
“ஆங்…..இது அந்த பயம் இருக்கட்டும்….வந்துட்டாளுக….தான் பஞ்சாயத்தே தலைக்கு மேல இருக்கு இதுல அடுத்தவன் பஞ்சாயத்தை தீக்க போங்கடீ….”என்று மேலும் தன்னால் முடிந்தமட்டும் கத்திவிட்டு வந்தவர்,
“இந்தா பொண்ணு….உன் பேரு கூட கேட்கலை பாரேன்…..”
“மிருதுளா….”
“மிருதுளா….ம்ம்ம்…நல்லா தான் இருக்கு…..எனக்கு நீ கண்ணு தான்….இந்தா இப்படி இடிஞ்சி உட்கார்ந்தா எப்படி எந்திரி….”என்று தன் கையை நீட்ட,மிருதுளாவிற்கு ஏதோ கடவுளே கை கொடுப்பது போல் இருந்தது.அவரின் கையை பற்றிக் கொண்டு எழுந்தவளை ஆதுரமாக அணைத்துக் கொண்டவர்,
“நீ வா கண்ணு….”என்று பரிதி இருந்த குடிசையின் உள் அழைத்து சென்றார்.மிகச்சிறிய குடிசை ஒரு அறை மட்டுமே இருந்தது.வீடு என்பதை விட காலி இடம் என்று தான் கூற வேண்டும் வீட்டில் ஆள் இருப்பதற்கு அறிகுறியாக அவனின் இரண்டு மூன்று சட்டைகள் கொடியில் தொங்கி கொண்டிருந்தன.அவன் ஏன் குடிசையை திறந்தபடியே வைத்திருக்கிறான் என்று அதனுள் நுழைந்தவுடன் புரிந்து கொண்டாள் மிருதுளா.
“என்ன கண்ணு அப்படி பார்க்குற இப்ப புரியுதா அவன் ஏன் வீட்டை திறந்த படியே போட்டு போறான்னு….ஆங்…என்ன பண்ணுறது புத்தி சொல்லி கொடுக்க நாதியில்லை….”
“என்ன அவருக்கு யாரும் இல்லையா….”என்று மிருதுளா கேட்க,பரிமளம் அவளை வாஞ்சையாக பார்த்தார்.
“ம்ம்….அதையெல்லாம் அப்புறம் சொல்லுறேன் கண்ணு….நீ செத்த நேரம் படுத்து எந்திரி…அந்த பய வந்தானா என்ன இழவை கூட்டுவானோ……”என்றவர் மிருதுளாவின் கையை பிடித்து,
“ஆனா ஒண்ணு கண்ணு….இப்ப செத்த முன்னாடி உன் வாழ்க்கைகாக நீ நின்ன பாரு அப்படியே நில்லு….இல்ல வெளில தள்ளிட்டு போயிட்டே இருப்பான்….அவனை பொறுத்தவரை இந்த அன்பு,பாசம் எல்லாம் வெறும் வேஷம்னு நினைக்கிறவன்….அதனால விட்டுடாத இறுக்க பிடிச்சுக்க….கொஞ்சம் கெட்டவன் தான் ஆனா கேடு கெட்டவன் இல்லை….”என்று அவர் கூற,
“தெரியும்….”என்று ஒற்றை வரியில் பதில் வந்தது மிருதுளாவிடம் இருந்து.அவளது பதிலில் பரிமளத்தின் மனது நெகிழ்ந்து போனது,
“இது போதும்…இது போதும்….அவனை நீ நல்ல புரிஞ்சிகிட்டாலே போதும்…”என்று நெஞ்சம் நெகிழ கூறிவிட்டு சென்றுவிட்டார்.அவர் சென்றவுடன் மிருதுளாவிற்கு அதுவரை இருந்த தைரியம் அனைத்தும் வடிந்ததை போல் இருந்தது.அவன் மீண்டும் திரும்பி வந்தால் என்ன செய்வது என்ற நினைப்பே பயத்தை கொடுத்தது ஆனாலும் மனதில் பரிமளம் கூறிய வார்த்தைகள் அவளை நிதானத்திற்கு கொண்டு வந்திருந்தது.
மிருதுளாவிற்கு பரிதியை பற்றி இதோ இப்போது வரை எதுவுமே தெரியாது தான் ஆனால் அவள் பார்த்தவரையில் அவன் பெண்கள் விடயத்தில் நல்லவன் என்று புரிந்திருந்தாள்.ஆம் அன்று கடைசியாக மயங்கும் போது அவன் முகம் பார்த்து தான் மயங்கினாள் ஒரு இரவு முழுவதும் அவனுடன் இருந்திருக்கிறாள் ஆனால் அவன் தன்னிடம் தவறாக நடந்துகொள்ளவில்லை அதோடு அவன் தன்னை அந்த கயவர்கள் கூட்டத்திடம் இருந்து காப்பாற்றி இருக்கிறான் இவ்வாறு அவனுக்கு பாதி நல்லவன் பட்டத்தையும் பாதி கெட்டவன் பட்டத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
காலை வீட்டை விட்டு சென்ற பரிதி நள்ளிரவு தான் குடிசைக்கு வந்தான் அவன் வரும் போது எப்போதும் திறந்து கிடக்கும் குடிசை இன்று மூடியிருக்க எரிச்சல் மண்டியது வேகமாக சென்று பரிமளத்தின் கதவை உடைக்க ஆரம்பித்தான்.
பரிமளமோ தன் குடிகார கணவனை குடிசைக்கு அப்போது தான் இழுத்து வந்து படுக்க வைத்துவிட்டு தூங்கியிருந்தார்.திடீர் என்று தன் கதவு உடைபடவும்,
“வந்துட்டானா…..அடேய் உங்க புருசன்,பொஞ்சாதி சண்டையில என் கதவை ஏன்டா உடைக்கிற….”என்று தன் கட்டை குரலில் கத்திக் கொண்டே தான் கதவை திறந்தார்.
“ஏய் கிழவி அவளை வெளில கூப்பிடு…..”என்று அவனும் அவருக்கு மேல் கத்த,
“அட எடுப்பட்ட பயலே எதுக்குடா இப்படி ராத்தியில கத்தி என் உயிரை எடுக்குற…நானே இப்பதான் அந்தாளை இழுத்துட்டு வந்து படுக்க வச்சேன்….நீ கத்தி திருப்பியும் எழுப்பிவிடாத….”
“ஆங்….என் தூக்கத்தை கெடுத்துட்டு நீ மட்டும் நல்லா தூங்குவியா….இந்தா வரேன்….யோவ் ஏழுமலை….யோவ்…”என்று இவன் கத்த,
“அடேய்…அடேய்….பாவி பயலே…..ஏன்டா என் பாவத்தை வாங்குற….”என்று பரிமளம் அவனுடன் மல்லுக்கு நின்று கொண்டிருக்க,சரியாக மிருதுளா கதவை திறந்து கொண்டு வந்தாள்.அவள் வந்ததை பார்த்தவன் பரிமளத்திடம் திரும்பி,
“இன்னைக்கு தப்பிச்சிட்ட நாளைக்கு இருக்கு உனக்கு….”என்றுவிட்டு தனது குடுசைக்குள் போக,
“அடபாவி….அப்ப தினமும் இப்படி என் உயிரை எடுப்பியா…..”என்று பரிமளம் நெஞ்சில் கை வைத்து கேட்க,
“நீ என் உயிரை எடுத்தல்ல அதுக்கு பழிக்கு பழி…..போ…போ….போய் தூங்கு இல்லை உன் புருஷனை எழுப்பிவிட்டுறுவேன்….”என்று உள்ளிருந்தே குரல் கொடுத்தான். இவன் அடிக்கும் கூத்தை பார்த்தபடி மிருதுளா கதவருகில் தான் நின்று கொண்டிருந்தாள்.
“இந்த தெருவே உன்னை ரவுடி உள்ள விடாதனு சொல்லுச்சி கேட்டேனா….உள்ள விட்டேன் பாரு என்னை சொல்லனும்….”என்று உள்ளே குரலை கொடுத்துவிட்டு,
“நீ ஏன் கண்ணு நிக்குற….போ…போய் தூங்கு….இவனுக்கு இதே வேலை தான்….போ…”என்றுவிட்டு தூக்கத்தில் தள்ளாடியபடி சென்றார்.அவர் சென்றதும் மிருதுளாவும் தன் கதவை அடைத்துவிட்டு அங்கேயே நின்றுவிட்டாள்.மனதில் ஒருவித தயக்கம் ஆணவனுடன் இரவு பொழுது தனியாக இருப்பது அவளுக்கு ஏதோ முள்ளின் மேல் நிற்பது போல் இருந்தது.என்ன தான் வெளியில் அவள் இவன் என் கணவன் என்று கூறினாலும் மனது இன்னும் அவனை கணவனாக முழுதாக ஏற்கவில்லை என்பது உண்மை.நின்றவள் நின்றபடியே இருக்க எங்கோ கேட்ட ஹாரன் சத்தில் நிகழ்வுக்கு வந்து சுற்றி முற்றி பார்க்க அவனோ கட்டாந்த தரையில் ஒரு கையை தலைக்கு கொடுத்து மற்றொரு கையால் முகத்தை மூடியபடி தூங்கியிருந்தான்.
அவன் பாதி இடத்தை அடைத்துக் கொண்டு தூங்க மிருதுளா அந்த கதவின் அருகிலேயே அமர்ந்துவிட்டாள்.யார் இவன் எதற்காக இவனை கடவுள் என் வாழ்க்கையுடன் பிணைத்தார் என்று தான் அவளின் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது ஆனால் மனதின் ஓரத்தில் அவனின் மீது ஏதோ சிறு நம்பிக்கை ஒளிகீற்றாக இருந்தது உண்மை.அவள் கடந்த வந்த ஆண்களில் தந்தையை தவிர மற்றவர்கள் அனைவருமே பெண்களை ஒரு போதை பொருள் போல தான் உபயோக்கிப்பார்கள்.ஏன் அவளின் சித்தப்பா கூட அதே ரகம் தான் அதனால் தான் அவள் சித்தி அத்தனை திண்ணக்கமாக அவர் தன்னை எதுவும் செய்யமாட்டார் என்று கூறியது.
காலை எழுந்த பரிதி கண்டது கதவுடன் ஒன்றியபடி உறங்கி கொண்டிருந்த மிருதுளாவை தான்.ஒரு நிமிடம் அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் அழுதழுது கன்னங்கள் இரண்டிலும் கண்ணீர் வழிந்த கோடுகள் இருந்தன.கழுத்தில் புதிதாக மின்னிய மஞ்சள் கயறு அவன் கண்களில் விழுந்து இவள் எனக்கானவள் என்று கூற அவன் மனம் மகிழ்வதை விட கோபம் தான் கொண்டது.வேகமாக எழுந்து அவள் படுத்திருந்த கதவை திறக்க திடீர் என்று தன்னை யாரோ தள்ளுவது போல் இருக்க வேகமாக எழுந்த மிருதுளா எதிரில் ஐயனாரை போல் நின்றவனைக் கண்டு பயந்து கத்திவிட்டாள்.
“ஏய்….தள்ளு…வாசல்கிட்ட படுத்துகிட்டு….”என்றுவன் கதவோடு அவளையும் சேர்த்தே தள்ளிவிட்டு போய்விட,மிருதுளா இன்னும் தான் எங்கு இருக்கிறோம் என்ற உணர்வே இல்லாது அமர்ந்திருக்க,
“கண்ணு….மிருது கண்ணு…….”என்று பரிமளம் கத்தவும் உணர்வுக்கு வந்தவள் வேகமாக எழுந்து வெளியில் வர,பரிமளம் கையில் இரண்டு குடத்துடன் நின்று கொண்டிருந்தார்.
“வா கண்ணு தண்ணி லாரி வந்துடுச்சி…..உனக்கும் குடம் எடுத்துட்டு வந்திருக்கேன்….புடிச்சுக்க….”என்றவர் முன்னே ஒரு எட்டு எடுத்து வைத்துவிட்டு,
“ஏன் கண்ணு குடம் தூக்க தெரியுமா….”என்று கேட்க தன்னையும் மீறி மிருதுளா சிரித்துவிட்டாள்.
“அச்சோ….அச்சோ…..இங்க பாருங்கடீ….எம்பூட்டு அழகு….”என்று அவர் மிருதுளாவை அவர் வர்ணிக்க,அந்த நேரம் சரியாக பரிதி வந்தான்.
“அச்சோ இவர் கிட்ட சொன்னா அதுக்கு இவரு எடக்கால பதில் சொல்லுவாரு…..”என்று அவள் நினைக்க அவனோ பரிமளத்தை அடிக்க கை ஓங்கி கொண்டு வர,
“அய்யோ….”என்று மிருதுளா வேகமாக பரிமளத்திடம் வர,அவள் வருவதைக் கண்டவன் கையை கீழே போட்டுவிட்டு,
“அடிங்க….நான் பொண்டாட்டியே இல்லனு சொல்லிக்கிட்டு இருக்கேன்….நீ ஊரு முழுக்க இவ தான் என் பொண்டாட்டினு சொல்லிகிட்டு திரியுற….உன்னை முதல்ல கொல்லனும்…..”என்றுவிட்டு நகர,
“போடா டேய்……உனக்கு பயம்….அதான் ஓடுற…..”என்று அப்போதும் அவர் அடங்காமல் பேச,
“அச்சோ சும்மா இருங்க….”என்று மிருதுளா கூறும் நேரம் அவரின் முகத்தின் நெற்றியை உரசியை படி ஒரு கல் வந்து விழுந்தது.
“அடேய் என்னையவே கல்லால அடிக்கிறியா…..இரு உன்னை….”என்று அவரும் ஒரு கல்லை தூக்க மிருதுளா அவரின் கை வேகமாக தட்டிவிட்டவள் அவரை இழுத்து செல்ல,
“என்ன உன் புருஷனை அடிச்சிடுவேன்னு இழுத்திட்டு வரியா….”என்று அவர் அவளின் கைகளில் திமறியபடி கத்திக் கொண்டே வர,
“இல்ல தண்ணீ லாரி போயிட்டா அதான்…..”
“அட ஆமால்ல…அதை மறந்தே போயிட்டேன்….இந்த பயலோட இருந்தா இப்படி தான்….”என்று பேசிக் கொண்டே இருவரும் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்தனர்.மிருதுளா குடுசையை நெருங்கும் நேரம் ஏதோ ஒரு சட்டை மாட்டிக் கொண்டு அவளை கடந்து சென்றான் பரிதி.அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க,
“கண்ணு குடத்தை உள்ள வச்சிட்டு வந்து உன் புருஷனை பார்த்துகிட்டு இரு….”என்று பரிமளம் கிண்டல் பண்ண,அவரை பார்த்து மென்மையாக புன்னகைத்துவிட்டு குடத்தை உள்ளே வைத்துவிட்டு வந்தவள் பரிமளத்திடம்,
“பாத்ரூம் எங்க இருக்கு….”என்று கேட்க,
“என்ன ரூமா….அதுக்கு நான் எங்க போக….”என்றவர் ஒரு கூடை பூவை தரையில் கொட்டியபடி கேட்க,
“அது குளிக்கிறதுக்கு…”என்று அவள் கேட்டவுடன்,
“ஓஓஓ…குளிக்கிறதுக்கு கேட்கிறியா……வா நான் காட்டுறேன்….”என்றவர்,அவளை தன் குடுசையிக்கு சற்று தள்ளியிருந்த ஒரு பொது குழாயை காட்டி,
“இங்க தான் கண்ணு குளிக்கனும்….”என்று கூற மிருதுளாவிற்கு அய்யோ என்றானது.அவள் இதுவரை இப்படி பொது இடத்தில் எல்லாம் குளித்தது இல்லை.அதுவும் அந்த இடத்தை சுற்றி ஆண்கள் பெண்கள் என்று அனைவரும் வந்து போய் கொண்டிருந்தனர்.
“இங்கயா….”என்றவளின் முகம் அஷ்டகோணலாக மாறியது.
“என்ன கண்ணு இப்படி வெளில எல்லாம் நீ குளிச்சது இல்லையா….”என்று பரிமளம் கேட்க அவளது தலை தானாக ஆடியது.
“சரி இங்கிருந்து தண்ணியை பிடிச்சிக்கிட்டு போய் தான் நீ உன் வீட்டிக்கு பின் பக்கம் குளிச்சிக்க….”என்று கூற,
“அட என்ன கண்ணு….ரூம் ரூம்னு கேக்குற….நீ வா நான் பின் பக்கத்தை காட்டுறேன்….”என்றவர் வீட்டின் பின் பக்கத்தை காட்ட அங்கும் திறந்த வெளி தான் ஆனால் என்ன சற்று பாதுகாப்பாக இருந்தது.வெளியில் குளிப்பதற்கு இது எவ்வளவோ மேல் என்று தான் இருந்தது.பரிமளத்திடம் ஒரு குடம் வாங்கி தண்ணீர் பிடித்து வந்து சுத்தப்படுத்தி கொண்டு மட்டும் வர,
“என்ன கண்ணு குளிக்கலையா….”
“இல்ல இப்படி வெளில குளிச்சி பழக்கமில்லை…..அதான்….நான் விடியகாலையிலே குளிச்சிக்கிறேன்….”என்றபடி அவரின் அருகே அமர,அவளை பார்த்த பரிமளத்திற்கு பாவமாக இருந்தது.தன் கையில் வைத்திருந்த ஒரு பொட்டலத்தை அவளின் கையில் திணித்து,
“முதல்ல சாப்பிடு….அப்புறம் பேசலாம்….”என்று கூற,
“வேண்டாம்…நான்….”என்று அவள் கூற வருவதை தடுத்தவர்,
“நீ சாப்பிட்டு இருக்க மாட்ட எனக்கு நல்லா தெரியும்….முதல்ல சாப்பிடு…ம்ம்….”என்று அவளின் கையில் உள்ளதை பிரித்து கொடுக்க மிருதுளாவின் கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது.அவளின் கண்ணீரை துடைத்த பரிமளம்,
“இங்க பாரு கண்ணு….இப்ப எதையும் யோசிக்காத சாப்பிடு….”என்றவரின் கனிவான பேச்சு அவளின் மனதில் இருந்த காயத்திற்கு பெரிய மருந்தாக இருந்தது.அவள் சாப்பிடும் போது பரிமளம் நிறைய பேசினார் அவரின் வாழ்வு பற்றி பரிதி பற்றி.அதன் மூலம் அவள் தெரிந்து கொண்ட விடயம் பரிமளத்தின் கணவன் ஒரு குடிகாரன்,ஊதாரி அதனால் சொந்தங்கள் இருவரையும் ஒதுக்கிவிட்டன இதோ இருக்கிற இரு குடிசைகள் தான் அவரின் சொத்து அதை தவிர பரிமளம் தான் பூக்கள் வித்து அவரை தன்னால் முடிந்தமட்டும் பார்த்துகொள்கிறார்.பரிதியை அவருக்கு ஐந்து வருடங்களாக தான் தெரியும் என்றவர்.
பரிதியின் முழுபெயர் இளம்பரிதி என்றும் அவனுக்கு யாரும் இல்லர் என்றவர் அவன் தான் ஒருமுறை தன் கணவனை ஒரு இக்காட்டான கட்டத்தில் காப்பாற்றினான் என்றும் கூறினார்.அதனால் தான் அவர் அவனை தன் வீட்டில் குடி வைத்திருப்பதாகவும் கூறினார்.
“அது….அது அவர் என்ன வேலை பாக்குறாரு….”என்று மிருதுளா தன் சந்தேகத்தை கேட்க,
“அது எனக்கு தெரியலை கண்ணு….காலையில போவான் ராத்திரிக்கு வருவான்….நான் எதாவது கேட்டா பதில் வராது அதனால அவன் கிட்ட கேட்டது இல்லை….ஆனா மாசமாசம் குடுசைக்கு வாடகை கொடுத்திடுவான்….”என்றுவிட்டு அவரின் பூ கட்டும் வேலையை தொடர்ந்தார்.மிருதுளா முதலில் அவனை பற்றி முழுதாக தான் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.அதனால் அவனிடம் பேச வேண்டும் என்று இரவு காத்திருக்க அவனோ இரவு இரண்டு அல்லது மூன்று மணிக்கு தான் வருவான் வந்தாலும் அவள் இருப்பை உணர்ந்தது போல் எந்த உணர்வும் இல்லாது படுத்துக் கொள்வான்.மிருதுளாவிற்கு தான் அவனிடம் எப்படி பேச வேண்டும் என்று தெரியவில்லை.
இதோ அவள் வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது ஆனால் பரிதி இன்று வரை ஒரு வார்த்தை என்ன பார்வையை கூட அவள் புறம் திரும்பியதில்லை.விடியற்காலை குளிப்பவள் பரிமளத்துடன் இணைந்து பூ கட்டி அவருக்கு உதவுவாள் பின் அவர் தான் இவளுக்கு ஏதாவது உணவு கொடுப்பார் இவள் வேண்டாம் என்று மறுத்தாலும் ஊட்டிவிட்டு செல்லுவார்.
அவன் என்ன செய்கிறான் என்று அவளுக்கு தெரியாது அவள் என்ன செய்கிறாள் என்று அவனுக்கு தெரியாது.காலை செல்லுபவன் இரவு வருவான் படுத்து தூங்குவிட்டு மீண்டும் காலையிலேயே சென்றுவிடுவான்.அதையும் மீறி அவள் கூப்பிட்டால் காது கேளாதவன் போல் போய்விடுவான் மிருதுளாவிற்கு கோபம் எல்லை கடந்து கொண்டிருந்தது.
என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறான் இவன்,இவனாக வந்து தாலி கட்டிவிட்டு அது வெறும் கயறு என்று கூறுகிறான் இன்னைக்கு எப்படியும் பேசிடனும் என்று நினைத்துக் கொண்டு அவனுக்காக காத்திருக்க தொடங்கினாள் ஒருமுறை கதவடைத்து அவன் செய்த அலப்பறையை பார்த்துவிட்டதால் கதவை திறந்து வைத்து தான் அமர்ந்திருந்தாள்.
இரண்டு மணிபோல் வந்தவன் மிருதுளா கதவின் அருகில் அமர்ந்திருப்பதை பார்த்தும் கண்டு கொள்ளாமல் உள்ளே சென்று படுத்துக் கொள்ள,வேகமாக அவனின் அருகில் வந்தவள்,
“உங்க கிட்ட பேசனும்….”
“…….”
“உங்க கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன்….கொஞ்சம் எந்திரிங்க….”என்று மீண்டும் அழைக்க மறுபுறம் பதிலில்லை.வேகமாக அவனின் அருகில் அமர்ந்தவள் அவனை தொட வெடுக்கென்று அவன் எழ மிருதுளா இப்படி எழுவான் என்று அறியாதவள் இரண்டடி பின் சென்றுவிட்டாள்.
பரிதியின் கண்கள் இரண்டும் கோவைப்பழம் போல் சிவந்து இருக்க,மிருதுளாவிற்கு நெஞ்சம் நின்று துடித்தது.என்ன பேச வந்தோம் என்பதை மறந்து அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க அவனோ இரண்டு நிமிடம் ஏதோ பொருளை பார்ப்பது போல் பார்த்துவிட்டு மீண்டும் படுக்க,
“அச்சோ உங்க கிட்ட பேசனும்….”என்றவள் மீண்டும் அவனை நெருங்க,
“ஏய்ய்ய்ய்…..”என்று அவன் கையை ஓங்கி விட மிருதுளா நெஞ்சாங்கூடே காலியாகியது அவள் சுவருடன் ஒன்ற,வேகமாக எழுந்தவன் அவளை தான்டி வெளியில் செல்ல முற்பட,
“நில்லுங்க….நில்லுங்க….”என்றவள் குரல் மிகவும் பலவீனமாக ஒலிக்க அவனது நடை நின்றது.அவன் நின்றவுடன் மெல்ல சுவற்றை பற்றிக் கொண்டு எழுந்தவள்,
“ப்ளீஸ்….நான் உங்க கிட்ட பேசனும்….”என்று கூற,
“இங்க பாரு எனக்கு உன்கிட்ட எதுவும் பேச எனக்கு விருப்பமில்லை….நீ இங்க இருக்கிறது எனக்கு பிடிக்கவும் இல்லை….”என்று கூற,
“ஏ….ஏன்….நான் என்ன பண்ணேன்….”என்று அவள் தேம்பி அழ,
“நான் என்ன பண்ணேன்….தாலி கட்டி இங்க கூட்டிட்டு வந்து இப்ப போ…போனா….நா…..நான் எங்க போவேன்….”என்று கதறி அழ,
“ஏய்….இங்க பாரு என்னை காப்பாத்திக்க தான் உனக்கு அந்த கயறை கட்டினேன் உன்னை கூட்டிக்கிட்டு வந்தேன்…..அதுக்காக உன்னை என்கூடவே வச்சிருக்க எல்லாம் முடியாது…..”
“என்ன உன்னை காப்பாதிக்க காப்பாதிக்கனு சொல்லுறீங்க….நீ என்ன சொல்லுறீங்க….”
“இங்க பாரு எனக்கு பேசறதே பிடிக்காது….இதுல உனக்கு கதையெல்லாம் சொல்லமுடியாது….உன்னால முடிஞ்சா இரு இல்லையா போயிட்டே இரு….”
“நீங்க என்ன வேலை பார்க்குறீங்க அதமட்டும் சொல்லிட்டு போங்க….நான் வேற எதுவும் கேட்கலை….”என்று மிருதுளா அதி முக்கிய கேள்வியை கேட்க,அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு,
“அப்ப நீ போகபோறது இல்லை….”என்று கேட்க மிருதுளாவின் தலை வேகமாக இல்லை என்று ஆடியது,
“பதில்….”என்று மிருதுளா கேட்க,அவன் அவள் கேட்ட கேள்விக்கு பதில் கூறிவிட்டு சென்றுவிட அந்த பதிலை கேட்ட மிருதுளா தான் நெஞ்சை பிடித்து கொண்டு நின்றுவிட்டாள்.