நான்கு மாதங்கள் கடந்துவிட்டது பரிதி மிருதுளாவை விட்டு சென்று.பரிமளமும் தனக்கு தெரிந்த வரையில் அவனை தேடி பார்த்துவிட்டார் ஆனால் பலன் தான் இல்லாமல் போனது.
“இந்த பய இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கலை கண்ணு…..இப்படி உன்னை தனியா விட்டுட்டு போயிட்டானே….பாவீ….”என்று மிருதுவிடம் புலம்புவார்.மிருது அவருக்கு எந்த சமாதானமும் செய்யமாட்டாள் அவர் மனதில் உள்ள அழுத்தத்தை அவர் வெளியில் கொட்டி விடுகிறார் தன்னால் முடிவதில்லை அவ்வளவு தான் என்று நினைத்துக் கொள்வாள்.ஆம் அவளின் மனதில் என்ன இருக்கிறது என்று யாரும் அறியா வண்ணம் பார்த்துக் கொண்டாள்.அதற்காகவே பகல் நேரங்களில் யாருடனாவது இருந்துவிடுவாள். அவளின் மன அழுத்தங்கள் யாவும் இரவு தான் வெளிபடும்.
மிருதுளாவிற்கு காலை முதல் இரவு வரை நேரம் றெக்கை கட்டி தான் பறக்கும் ஆனால் இரவு நேரங்களில் பரிதியை மனது தேடும் எங்கு எப்படி இருக்கிறானோ என்று மனது படபடத்துக் கொண்டே தான் இருக்கும்.ஆனால் ஒரு முறை கூட அவன் தன்னை விட்டு சென்றிருக்க கூடும் என்று தோன்றவில்லை ஏனோ மனதில் அத்தனை நம்பிக்கை அவனின் மேல்.அவனின் சட்டையை கைகளில் வைத்துக் கொண்டவள்,
“எங்க போனீங்க…..ஏன் இப்படி என்னை வதைக்கிறீங்க….எனக்கு தெரியும் நீங்க என்னை விட்டுட்டு போகலைனு ஆனா இப்படி இருக்க என்னால முடியலை வந்துடுங்களேன்….”என்று அதனுடன் பேசிக் கெண்டே அதை அணைத்தபடி படுத்துக் கொண்டாள் அவளின் இரவு நேரங்கள் இவ்வாறு தான் கழியும்.அவளின் மனதின் பாரங்கள் எல்லாம் அவளுடன் தான் மற்றவர்கள் முன் அதை காட்டிக் கொள்ள அவள் விரும்பவில்லை.அவன் ஒருவன் இல்லை என்ற குறை மட்டும் தான் மற்றபடி வாழ்க்கை அதன் போக்கில் போய் கொண்டு தான் இருந்தது அவளிற்கு.
ஆனால் பெரிய புயலுக்கு முன் வரும் அமைதி கூட ஆபத்தானது தான் என்பதை அவள் உணரவில்லை.அவள் வாழ்வில் வரப்போகும் புயல் அவளை முற்றிலுமாக நிலையிழக்க செய்யவிருக்கிறது அதில் இருந்து அவள் கரைசேரவே முடியாது என்பதும் அவளுக்கு தெரியவில்லை.அன்று காலையில் எழும் போதே மிருதுளாவிற்கு மனது ஏதோ போல தான் இருந்தது.
“கடவுளே ஏன் தெரியலை மனசு ஏதோ படபடனு அடிச்சிக்குது….எந்த அசம்பாவிதமும் இல்லாம இன்னைக்கு பொழுது போகனும்….”என்று கடவுளிடம் பிராத்தனை வைத்துவிட்டு தான் வேலைக்கு சென்றாள்.ஆனால் அவளின் பிராத்தனைக்கு கடவுள் செவி சாய்க்கவில்லை போல அதனாலே அன்றைய நாள் அவளின் வாழ்நாள் முழுவதும் அச்சுறுத்த போகிறது.
காலை நேர வேலைகளில் திவ்யாவும்,மிருதுளாவும் இருக்க அவர்களுடன் வேலை பார்க்கும் பெண் ஓடி வந்து பரிமளத்திற்கும்,நாயகிக்கும் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருப்பதாக கூற மொத்தமாக நிலைகுலைந்து தான் போயினர் இருவரும்.அடுத்த அரைமணிநேரத்தில் மிருதுளாவும்,திவ்யாவும் அரசு மருத்துவமனையில் தங்களின் தாய்மார்களை தேடிக் கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு அறையாக தேடியவர்கள் முதலில் கண்டது நாயகியை தான் தலை,கால் அனைத்திலும் கட்டு போடப்பட்டிருந்தது அவரைக் கண்ட திவ்யா கதறிவிட்டாள்,
“ம்ம்மா…..”என்று அவள் அலற,மிருதுளாவிற்கு அவளை அடக்கவே முடியவில்லை அவளின் மனம் முழுவதும் பரிமளத்திற்கு என்னவானது என்பதிலேயே இருந்தது.
“திவி….கொஞ்சம் அமைதியா இருடீ…..ப்ளீஸ்…..”என்று மிருது கூறியும் திவ்யாவின் கதறல் அடங்கவில்லை சிறு வயதில் தந்தையை இழந்து இப்போது தாயும் அரை உயிராய் இருக்க பார்க்க பார்க்க நெஞ்சம் நடுங்கியது எங்கே இவரும் தன்னை விட்டு சென்றுவிடுவாரோ என்று.மிருதுளா எவ்வளவு கூறியும் திவ்யா தன் தாயை விட்டு நகரவில்லை அவரின் தலையை தடவியபடியே இருந்தாள்.அந்த அறையில் இருந்து வெளிவந்து அடுத்தடுத்த அறையில் அவள் தேட அவளை கவனித்த ஒரு நர்ஸ் அவளிடம் நெருங்கி,
“யாரம்மா தேடுற…”என்று கேட்க,
“அது….இன்னைக்கு அடிப்பட்டு ஒருத்தவங்க…..”என்று அவள் கூற முடியாமல் தடுமாற,
“ஓஓ…..அந்த சாலை விபத்தா….அதுல நீ யாரை தேடுற……”என்று அவர் கேட்க,
“அது பூ வித்துக்கிட்டு இருந்தவங்க….”
“ஓஓஓ அந்த அம்மாவா….”என்று அவரின் குரல் இறங்கி இருக்க,மிருதுளாவிற்கு பதட்டமானது,
“அவங்க….எங்க…”என்று கேட்கும் போதே குரல் கமற தொடங்கியது.
“அது….நீ என் பின்னாடி வா….”என்று அவர் அழைக்க,
“மேடம் கொஞ்சம் சொல்லுங்களேன் அவ…அவங்க….”என்று கலங்கிய படி கேட்டுக் கொண்டே வர,அவர் ஒரு அறையின் முன் நின்றவர் அவளிடம் கையை மட்டும் காட்ட,
“என்ன இங்க இருக்காங்களா…..”என்றவாரே அவள் அந்த அறையின் உள்ளே வேகமாக நுழைந்துவிட்டாள்.நுழைந்த அடுத்த நொடி வாயை பொத்தியபடி வெளியில் வந்தவளுக்கு கண்கள் குளமாகி எதிரில் தெரிந்த விம்பங்கள் மங்கலாக தெரிய அப்படியே மயங்கி சரிந்தாள்.மிருதுளா கண்விழுக்கும் போது திவ்யா தான் அவளின் பக்கத்தில் இருந்தாள்.
“திவி….திவி…பரி….பரிம்மா…”என்று அவள் கூற முடியாமல் தேம்ப,
“ஏய்….பரிம்ம்மா எங்க….ஆங்…எங்க நான் அவங்களை பார்க்கனும்….வா….வா…”என்று அவள் கத்த தொடங்க,திவியால் அவளை அடக்க முடியவில்லை.
“மிரு….மிருதூதூதூ…..”என்று திவ்யா அவளை விட ஆவேசமாக கத்த,அதில் அரண்டு அவளை பார்க்க திவி தன் மூச்சை இழுத்து பிடித்து வெளியில் விட்டவள்,
“அவங்…அவங்க இல்…..இல்லை….”
“சொல்லாத….சொல்லாத….அப்படி சொல்லா திவி…..அப்படி சொல்லாதடீ……”என்று அவள் கதற,அவளை அணைத்து கொண்டவள்,
“மிருது….என்னாலையும் நம்ப முடியலைடீ…ஆனா அது தான் உண்மை….அவங்க விபத்து நடந்த இடத்திலேயே…..”என்றவள் அதற்கு மேல் கூற முடியாமல் அவளின் உடல் குலுங்க,
“அய்யோ…..திவி….பரிம்மா….என்னோட பரிம்மா இப்ப இல்லையா….என்னால தாங்கிக்க முடியலைடீ….ம்மாஆஆஆஆ……”என்றவள் மீண்டும் மயக்கத்திற்கு சென்றுவிட்டாள்.
மிருதுளா தன் எதிரே நடப்பவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.அவளின் நினைவுகள் எல்லாம் தன்னை தாய் போல் பார்த்துக் கொண்டவரை தேடிக் கொண்டிருந்தது.
ஒருவாரம் கடந்திருந்தது பரிமளம் இறந்து ஏழுமலைக்கு மனைவி இறந்தது கூட தெரியாது.ஆள் முழு போதை இது நாள் வரை சொந்தம் என்று வராதவர்கள் இன்று பரிமளத்தின் வீட்டின் முன் தான் நின்றார்கள்.உயிர்,உணர்வுகள் உள்ள மனிதனுக்கு இல்லாத மரியாதை அது எதுவும் இல்லாத பணம்,சொத்து போன்ற ஜடபொருள்களுக்கு உண்டே அதன் பொருட்டே அவர்களின் இந்த வருகை.வந்தவர்கள் பரிமளத்தின் இறுதி காரியத்தை முன்நின்று செய்துவிட்டு ஜம்பமாக அவரின் வீட்டில் தங்கி கொண்டனர்.அதிலும் ஏழுமலையின் அண்ணன் மகனின் பார்வை மிருதுளாவையே வட்டம் அடித்துக் கொண்டிருந்தது.
அதுவும் அவளின் நிலையை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கூறியதைக் கேட்டதில் இருந்து அவன் மிருதுளாவை அடைய முடிவெடுத்துவிட்டான்.அதனால் அவளை அவ்வபோது நோட்டம்விட தொடங்கினான்.ஒருவன் தன்னை தவறாக பார்க்கிறான் என்ற உணர்வே இல்லாமல் இருந்தாள் மிருதுளா.
மிருதுளாவிற்கு பரிதி சென்றதிலேயே பாதி ஜீவனில் இருந்தவள் பரிமளத்தின் மறைவில் மொத்த ஜீவனையும் இழந்து தான் நின்றாள்.வீட்டை விட்டு எங்கும் செல்வதில்லை விட்டத்தை வெறித்தபடி தான் அமர்ந்திருப்பாள்.அங்காடிக்கும் ஒரு வாரமாக வேலைக்கு செல்லவில்லை.திவ்யாவின் அம்மாவிற்கு காலில் அடி பலம் என்பதால் அவளும் இரண்டு வாரம் விடுமுறை எடுத்திருந்தாள்.ஆக உணவு உறக்கம் அனைத்தும் துளைத்து பாதி ஜீவனாக இருந்தாள் மிருதுளா.
மேலும் ஒருவாரம் கடந்திருந்த நிலையில் திவ்யா மிருதுளாவைக் காண வந்திருந்தாள்.அவளுக்குமே பரிமளத்தின் இழப்பு மனதை உலுக்கியது தான் ஆனால் மிருதுளா அளவிற்கு அவள் துவலவில்லை.மிருதுளாவைக் காண வந்தவள் கண்டது இருண்ட குடிசையில் எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்த மிருதுளாவை தான்.
“ஏய் மிருது….மிருது….”என்றவளின் அழைப்பு அவளை சென்றடைந்தாகவே தெரியவில்லை.திவ்யா அவளின் தோள்களை தொட்டு உலுக்கவும்,
“ஆங்…..”என்றவள் தலையை திருப்பி திவ்யா பார்த்துவிட்டு மீண்டும் விட்டத்தை வெறிக்க,
“இவளை…..”
“ஏய் மிருது….மிருது….எழுந்திரி….எழுந்திரிடீ…..”என்று அவளை உலுக்கி எழுப்பி விட்ட திவ்யா,
“முதல்ல முகத்தை அலம்பு….போ…..”என்று கூற மிருதுளா அவள் கையை விட்டவுடன் மீண்டும் அமர போவதை பார்த்தவள் அவளே அவளை இழுத்து சென்று முகத்தை அலம்பி அழைத்து வந்து உட்கார வைத்துவிட்டு வீட்டில் ஏதாவது சாப்பிட இருக்கிறதா என்று பார்த்தாள்.அவளுக்கு மிருதுவின் நிலை புரிந்து போனது உண்ணாமல்,உறங்காமல் இருந்திருக்கிறாள் என்று.
“ஏய் இந்தாடீ….இரு உனக்கு சாப்பிட எதாவது வாங்கிட்டு வரேன்…..”என்று கூற மிருதுளாவிடம் எந்த பிரதிபலிப்பு இல்லை.திவ்யா வேகமாக வெளியில் சென்று மிருதுளாவிற்கு சாப்பாடு வாங்கிவிட்டு வரும் போது குடுசையின் உள்ளிருந்து ஒரு ஆணின் குரல் கேட்க திவ்யா தயங்கி நின்று கவனிக்க தொடங்கினாள்.
“ஹலோ….உங்களை தான்….என்ன பேசமாட்டேங்குறீங்க….”என்று கேட்டவாரே அவள் தோள்களை தொட போக,
“நீங்க யாரு….உங்களுக்கு என்ன வேணும்….”என்று கேட்டவாரே உள்ளே நுழைந்துவிட்டாள் திவ்யா.வெளியில் இருந்து உள்ளே என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டே இருந்தவள் அவன் தவறாக மிருதுவை பார்த்துக் கொண்டே அவளை தொட போக உடனே உள்ளே நுழைந்துவிட்டாள்.
அந்த புதியவனோ திவ்யா ஒருமாதிரியாக பார்த்துக் கொண்டே,
“இல்ல இவங்களை கூப்பிட்டேன் இவங்க கண்டுக்கல அதான்….கூப்பிடலாம்னு….”என்று கூறியவன் கண்கள் மிருதுளாவை துகிலுறித்துக் கொண்டிருந்ததைக் கண்டு திவ்யா பல்லை கடித்தாள்.
“அச்சோ என்னாச்சு….”என்று பதறி மிருதுவிடம் அவன் நெருங்கும் முன் மிருதுவை நெருங்கிய திவ்யா,
“அது நான் பார்த்துக்கிறேன்….நீங்க கிளம்புங்க…..”என்று நறுக்கென்று கூற,
“சரி சரி…..”என்று மனதே இல்லாமல் கூறியவன் ஏதாவது தேவை என்றால் அழைக்கும்படி மிருதுளாவை கண்களால் பருகியபடி கூறிவிட்டு தான் போனான்.அவன் சென்றவுடன் வேகமாக குடுசையின் கதவை அடைத்த திவ்யா வேகமாக மிருதுவின் அருகில் வந்து அவளின் தோள்களை உலுக்கினாள்.
“ஏய் மிருது….ஏய்….இங்க பாருடீ….”என்றவள் பளார் என்று ஒரு அறைவிட்டாள் அதில் நிலை தடுமாறி மிருதுளா கீழே விழ அவளை பிடித்து எழுப்பிவிட்டு அவளின் முகத்தை நிமிர்த்திய திவ்யா,
“இங்க பாரு….நான் பேசுறது கேட்குதா….ஏய்…மிருதூதூதூதூ….”என்று அந்த குடுசை அதிற கத்த,மிருது திவ்யாவின் கைகளை மெல்ல எடுத்துவிட்டு நகர்ந்து அமர்ந்து மீண்டும் விட்டத்தை வெறிக்க தொடங்க,அவளின் தோள்களில் வேகமாக அடித்த திவ்யா,
“ஏன்….ஏன்டீ இப்படி இருக்க….”என்று கூறிக் கொண்டே அடிக்க,
“ஓஓஓ….அம்மா அதனால தான் சாப்பிடாம,தூங்காம உட்கார்ந்திருந்தீங்களா…..சரி சாவு….ஆனா இதையும் கேட்டுக்கிட்டு சாவு…..”என்றவள் மிருதுளாவின் கன்னத்தை பிடித்து தன்னை பார்க்க செய்து,
“உன் பரிம்மாக்கு இப்படி அழுதளே பிடிக்காது இதுல நீ இப்படி தற்கொலைனு சொல்லுற பாரு….அதை…இதோ…இதோ….என்று குடுசையை சுற்றி காட்டியவள்….இங்க தான் எங்காவது அவங்க ஆன்மா இருக்கும் கேட்கட்டும்…..ரொம்ப சந்தோஷபடுவாங்க….உன்னை இத்தனை நாள் வளர்த்ததுக்கு நீ அவங்களுக்கு செய்யுற நன்றிகடன் இது தான் செய்யி…..நான் வரேன்…..”என்றுவிட்டு அவளை உதறி தள்ளிவிட்டு எழுந்தவள்,
“ஆங்…இதை சொல்ல மறந்துட்டேன் பாரு…..நீ சாவுறதுக்கு முன்னாடி உன்னை கடிச்சு குதற ஒருத்தன் சுத்திக்கிட்டு இருக்கான்….பார்த்துக்க…இப்ப கூட வந்துட்டு போறான் அதுவே உனக்கு தெரியலை….நல்லவேளை நான் வந்தேன் இல்லை….”என்றுவிட்டு செல்ல,மிருதுளாவிற்கு திவ்யா கூறியதைக் கேட்டதும் தான் எவ்வளவு பெரிய தவறு செய்கிறோம் என்று புரிந்தது.பரிமளம் இருந்தவரை எதற்கும் கலங்கதே எதிர்த்து நின்று பழகு என்று கூறுவார் அதை எப்படி மறந்தேன் என்று தனக்குள் கேட்டவாரே மருகினாள்.
“திவி…..”என்று மிருதுளா அழுதபடியே அழைக்க,
“போடி…போ….போய் சாவு……நீ சாவுறதுக்கு முன்னாடி உன்னை சிதைக்காம பார்த்துக்க முடியுதானு பாரு….”என்று கூறிக் கொண்டே அவள் போக,
“திவி…திவி….போகாதடீ….கொஞ்சம் நில்லுடீ…..”என்று மிருதுளா சற்று குரலை உயர்த்த,அதன் பின்னே திவ்யாவின் நடை நின்றது.
“இங்க வாடீ…..என்னால முடியலை….”என்று எழ முயன்று தோற்று கொண்டிருந்தவளைக் கண்டு வேகமாக அவளை நெருங்கி,
“ப்ச்….இரு உட்காரு…..”என்றுவிட்டு அவள் வாங்கி வந்த உணவை எடுத்து மிருதுளாவிற்கு ஊட்டிவிட்டாள்.மிருதுளாவும் எந்த மறுப்பும் கூறவில்லை அமைதியாக உண்டாள் நல்லபசி அவளிற்கு திவ்யா வாங்கி வந்த உணவு அவளுக்கு பத்தவில்லை என்று தான் கூற வேண்டும்.திவ்யாவும் அதை உணர்ந்திருந்தாள்.
“ம்ம்ம்…..இவ்வளவு பசியை வச்சிக்கிட்டு இருந்திருக்க….உன்னை என்ன செய்யலாம்…..ஆங்…..”என்று திவ்யா மிருதுளாவை முறைத்துக் கொண்டு திட்ட மிருதுளா மௌனமாக தலையை குனிந்தாள்.
“வாயை திறடீ……ஊமை கொட்டான் மாதிரி இருக்காத எரிச்சலா இருக்கு….”என்ற திவ்யாவும் தொய்வாக மிருதுளாவின் அருகே அமர்ந்தாள்.
“என்னாச்சு திவி….”என்று மிருதுளா கேட்க,
“என்ன என்னாச்சு????”
“ஏய் ஏன்டீ இப்படி உட்கார்ந்திருக்க….”என்று தன் அருகே ஓய்ந்து அமர்ந்திருந்த திவ்யாவிடம் கேட்க,
“சும்மா தான் வேண்டுதல்…..”என்றவளின் நக்கல் பதிலில் மிருதுளாவின் முகத்தில் மென்னகை வெகு நாட்களுக்கு பிறகு,இரண்டு நிமிடம் அவளை அமைதியாக பார்த்த திவ்யா
“என்கூட வந்திடு மிருது….இங்க நிலவரம் சரியில்லை….வந்துட்டு போனவன் பார்வை சரியில்லை…..எனக்கு உன்னை இப்படி தனியா விட்டுட்டு போகவும் முடியாது வந்திடுடீ…..”என்று திவ்யா கெஞ்சலாகவே கேட்டாள்.எங்கே தான் கூப்பிட்டு அவள் வரவில்லை என்று மறுத்துவிட்டாள் அவளிடம் தர்க்கம் தான் புரிய வேண்டும்.அவளை விட்டு செல்ல மனமில்லை.ஆனால் திவ்யா நினைத்தற்கு மாறாக மிருதுளா உடனே ஒத்து கொண்டது மட்டுமல்லாமல் அவளுடன் கிளம்பியும் விட்டாள்.
இதோ மிருதுளா திவ்யாவின் வீட்டில் தஞ்சம் அடைந்து இன்றோடு இரண்டு வாரம் கடந்துவிட்டது.முன்பு போல் ஓய்ந்து அமராமல் மீண்டும் வேலைக்கும் செல்ல தொடங்கிவிட்டாள்.திவ்யாவிற்கே ஆச்சரியம் தான் மிருதுளாவை தேற்ற வேண்டுமே என்று நினைத்து பயந்தவளுக்கு அந்த பயம் தேவையில்லை என்று தோன்றிவிட்டது.அந்தளவிற்கு தன்னை தேற்றிக் கொண்டிருந்தாள் மிருதுளா.
ஆம் தன்னை தேற்றி தான் கொண்டிருந்தாள் அவனிற்காக ஆம் அவன் ஒருவனிற்காக.இப்போது கூடவா அவனை தேடுகிறாள் என்று கேட்டாள் ஆம் என்று தான் பதில் வரும்.அத்தனை காதலா அவனிடம் என்று கேட்டால் இல்லை என்று தான் கூறுவாள் ஆனால் அவனை தேடிக் கொண்டு தான் இருக்கிறாள்.அவனிற்கான அவளின் தேடல் எதற்கு என்று மிருதுளா மட்டுமே அறிவாள்.அவளின் தேடலும் விரைவில் முடிவுக்கு வரும் ஆனால் இம்முறை மிருதுளாவின் வாழ்வில் பரிதி தான் நுழைவான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.