பனிப்புகையாய் சிற்பமாய் கோர சத்தத்துடன் மெல்லிய அலறலும் அழுகையுமாய் திமிறிக்கொண்டிருந்தாள் மகாலட்சுமி.
“உன்னை இப்படியா மகா பார்க்கனும்?…” என சத்தமாகவே அழ ஆரம்பித்துவிட்டார் கோகிலா.
பேச்சிக்கு வார்த்தையே வரவில்லை. மகாலட்சுமியை நினைத்து வருந்துவதா இல்லை அவளால் தன் பிள்ளைகள் கஷ்டப்படுவதை நினைத்து கலங்குவதா என எதுவும் புரியவில்லை அவர்.
“என்ன தாயி வேணும் உனக்கு? எம்மகள விட்டுடும்மா. எஞ்சாமியா உன்னிய நெனச்சுக்குதேன் ஆத்தா….” என கையெடுத்து மகாவை நோக்கி பேச்சி கும்பிட,
“பெரிம்மா ப்ளீஸ்…” என அவரின் கையை பிடித்தாள் மீரா.
“கொஞ்சநேரத்துக்கு யாரும் பேசக்கூடாது…” என்றார் ஸ்ரீசக்திவித்யாதரன் அனைவரையும் பார்த்து.
தரணிதரன் மௌனமாகவே பார்த்திருந்தான். வந்ததில் இருந்து ஸ்ரீசக்திவித்யாதரன் பேசிய பேச்சுக்கள் அந்தளவுக்கு அவனை அச்சமூட்டி இருந்தது.
இது எல்லாவற்றிற்கும் மேல். என்னவோ இதில் பெரிதாய் இருக்கிறது என்றவன் மனதின் உள்ளுணர்வு பொய்க்கவில்லை.
“உன் பேர் என்னம்மா?…” என்றார் மகாவை பார்த்து ஸ்ரீசக்திவித்யாதரன்.
சட்டென பனிசிற்பம் அமரவைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து இரண்டடி மேலெழும்பி சுழன்றது.
துகள்கள் தெறித்த இடமெல்லாம் ரத்த துளிகள் பூக்களாக சிதற ஆவென்ற ஓலம் ஓங்காரமாய் மகாவிடமிருந்து.
அவளின் கழுத்து பகுதியில் இருந்து விடாமல் குருதி வழிய ஸ்ரீசக்திவித்யாதரன் கண்கள் அதற்கிணையாய் சிவந்தது.
“இங்க வாம்மா…” என அவர் மீராவை அழைத்து,
“இந்த விளக்கை ஏத்து. இந்த குங்குமத்தை விளக்கை சுத்தி பொட்டுக்களாக வச்சுட்டே வா. நான் சொல்ற வரைக்கும் விளக்கும் அணையக்கூடாது. குங்குமமும் தீரக்கூடாது. நீ நிமிர்ந்தும் பார்க்கக்கூடாது….” என்றார்.
“இதெல்லாம் அவ ஏன் செய்யனும்? நான் செய்யறேன் சாமி. என் பொண்ணு வேண்டாம். வாழ்ந்து முடிச்சு எல்லாத்தையும் பார்த்துட்டேம்ய்யா. இந்த பொழப்பு கெட்டவளுக்கு இனி என்னத்துக்கு இந்த உசுருங்கேன்? அது வாழ வேண்டிய புள்ள, வேணா சாமி…” என கையெடுத்து கும்பிட்ட பேச்சி,
“எவ்வுசுரு போனா போவட்டும். எம்புள்ள வேணாம்ய்யா. உங்க காலுல வேணா விழுவறேன். அது ஏற்கனவே அரை உசுரா கெடக்குது. இன்னும் அத வாட்ட வேற ஒன்னத்தையும் காமிச்சிட வேண்டாம் சாமி…” என்றவர் கதறல் அனைவரின் மனதையும் உலுக்கியது.
“ஏற்கனவே ஒரு உசுரு போக காரணமாகிட்டோமேன்னு சரியா அன்னந்தண்ணி அண்டுததில்ல. எங்களுக்காவண்டி அவ வாழ்ந்துக்கிட்டு இருக்கா…” என கண்ணீர் வடிக்க,
“காரணகாரியங்களின்றி இந்த பூமில எதுவுமே இல்லைம்மா. எல்லாம் விதிக்கப்பட்டது. உங்க பொண்ணால ஒரு மரணம் எப்படி விதிக்கப்பட்டதோ, அதே பொண்ணால தான் இப்ப நடக்கவிருக்கற விபரீதமும் தடுக்கப்படவேண்டும்ன்னு விதிக்கப்பட்டிருக்கு…” என்றார் ஸ்ரீசக்திவித்யாதரன்.
பேச்சிக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் மீராவை இதில் சம்பந்தப்படுத்த வேண்டாம் என்று நினைத்தார்.
அவரளவில் இதை எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறாரே தவிர பெரிதாய் அனுபவப்பட்டதில்லை.
இப்போது கண்ணுக்கு முன்னால் ஒரு உருவம் உயிரை தொலைத்து எதற்கோ அலைபாய்ந்து கொண்டிருக்க அதன் தாக்கம் தன் குடும்பத்திற்குள் என்பதே பேச்சிக்கு தாங்க இயலாததாக இருந்தது.
“நீ வாம்மா. வந்து உட்கார்…” என்று மீராவை அழைக்கவும் எழுந்தவள் ஸ்ரீசக்திவித்யாதரன் காண்பித்த இடத்தில் வந்தமர்ந்தாள்.
“நல்லா ஞாபகம் வச்சுக்கோம்மா. மனசை ஒருநிலைப்படுத்து. உன்னோட ஐம்புலன்களும் விளக்கிலும், அதன் அபிஷேகத்திலும் தான் இருக்கனும். இங்க பேசப்படற எதற்கும் நீ சலனப்படக்கூடாது. எந்த சப்தங்களும், காட்சிகளும் உன்னை அசைக்கக்கூடாது….” என்றவர்,
“அப்போ தான் இதுக்கான விமோச்சனம் என்னன்னு எனக்கான கட்டளை மூலமா உனக்கு சொல்லவரும். துர்கையம்மனை மனசுல வச்சுக்கோ. உனக்கு அந்த தாய் வழிகாட்டுவா…” என்றவர் சொல்லியதற்கு தலையசைத்தாள் மீரா.
மீரா மகாவை திரும்பி பார்க்க தவித்த தன் மனதை அடக்கியபடி விளக்கேற்ற கைகள் செல்ல மகாவின் அலறல் பெரிதானது.
அங்கே ராகவியின் நிழல் உறவுகளின் பார்வையிலிருந்து மறைந்துகொண்டிருப்பதை மகாலட்சுமியால் உணர முடிந்தது.
சொல்லமுடியாமல் அவள் ஆவி துடிதுடிக்க அங்கிருந்து செல்லவும் முடியாமல் தத்தளித்தாள் மகாலட்சுமி.
“அந்த ஆத்மாவால பேச முடியலை. அவங்க சொல்ல நினைக்கிறதை நான் என் தியானத்து மூலமா தான் தெரிஞ்சுக்க முடியும். இந்த கட்டுக்குள் அவங்க இருக்கற வரை தான் எதுவும் சாத்தியம். பூஜையை நிறுத்திடாதம்மா…” என கூறி,
“விளக்கேற்றும்மா…” என்று ஸ்ரீசக்திவித்யாதரன் சொல்லவும் ஜோதியை ஏற்றியவள் கைகள் குங்குமத்தை துளியளவு எடுத்துக்கொண்டது.
ஸ்ரீசக்திவித்யாதரன் கண்கள் மூடி மகாலட்சுமியின் ஆழ்மனத்தின் அழுத்தங்களில் இருந்து வார்த்தைகளை சேர்க்க ஆரம்பித்தார்.
அவர்களை விட்டு தள்ளி அமர்ந்து இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பேச்சியால் அதனை காண முடியவில்லை.
“ஆத்தா மீனாட்சி…” என அதை பார்த்ததும் பேச்சி சத்தமின்று அழ,
“ம்மா, ஒன்னுமாவாது. இது என்னனு தெரிஞ்சிருச்சுன்னா நமக்கு நல்லது தான? தைரியமா இருங்க…” என்றான் தரணிதரன்.
“ஆமா, நாங்க இத்தனை பேர் இருக்கோமே?…” என்றார் கோகிலாவும்.
“இதெல்லாம் நாச்சிக்கு தெரிஞ்சா உசுரையே விட்டுருவா. தாங்கிக்க மாட்டாளே?…” என பேச்சி தன் முகத்தை துடைத்துக்கொண்டே,
“ஒருவார்த்தை இங்க வந்துருக்கோம்ன்னு நாச்சிக்கு ஒரு போனை போட்டு சொல்லிருவோமா?…” என்றார்.
“இல்லம்மா, இப்ப வேண்டாம். பூஜை ஆரம்பிச்சு எந்த தடங்கலும் வேண்டாம். இருங்க…” என்றான் தரணி.
அவரின் உள்ளுணர்வு எதையோ அறிவுறுத்த முயல இன்னதென்று கண்டுகொள்ளமுடியவில்லை பேச்சியால்.
“அப்பனுங்க செஞ்ச பாவம் இப்படி கிடந்து வாட்டுதே. என்னன்னு இதுல இருந்து மீண்டு வர?…” என அலண்டுகொண்டே தான் இருந்தார் பேச்சி கோகிலாவிடம்.
“ம்மா கொஞ்சநேரம் அமைதியா இருங்க. நம்மோட சத்தம் கூட மீராவை திசைதிருப்பிட கூடாது…” என தரணிதரன் சொல்லவும் தான் வாயை மூடிக்கொண்டார்.
ஆனாலும் பார்வையால் அந்த பனி உருவத்திடம் கெஞ்சலும் கதறலுமாய் மானசீகமாய் வேண்டிகொண்டிருந்தார் பேச்சி.
மீராவின் பார்வை எரிந்துகொண்டிருந்த விளக்கில் மட்டுமே பதிந்திருக்க நேரம் செல்ல செல்ல ஜோதியின் ஜுவாலை அவளின் முகத்திற்கு நெருக்கமாய் வருவதை போலவே இருந்தது.
உள்ளம் கிடுகிடுக்க சீரான சுவாசம் தடைபட்டு போக, முயன்று தன் மனதை தைரியப்படுத்தினாள் மீரா.
மகாவிடமிருந்து எல்லாமே முழுதாய் தெரிந்துகொள்ள வேண்டும். எதற்காக இந்த அலைகழிப்பு என்று அறிந்தாகவேண்டும் என நினைத்தவள் மனதில் காரணமே இன்றி மகாவின் உருவமாய் தோன்றிய ராகவி வந்து நிற்க தொண்டைக்குழி ஏறி இறங்கியது.
சிறு கல்லாய் அந்த காட்சி மீராவை சலனப்படுத்த பதட்டம் இன்னும் அதிகமாகியது அவளுக்கு.
விரல்கள் குங்குமத்தை இன்னும் அதிகமாகவே எடுத்துக்கொண்டு விளக்கை நிறைக்க உடலெல்லாம் சலசலவென்று வியர்வை.
ஸ்ரீசக்திவித்யாதரன் சொல்லிய மந்திரத்தின் இடையில் ராகவியின் பெயர் நடுக்கமாய் கேட்க அதை முதலில் உணர்ந்தது தரணிதரன்.
“என்ன சொல்றாங்க இவங்க?…” என அதிர்ந்தவன் ஸ்ரீசக்திவித்யாதரனை பார்த்தான்.
மீரா மந்திரத்தின் இடையே ராகவியின் பெயர் உச்சரிக்கும் பொழுதெல்லாம் கண் மூடி மகாவின் ஆழ்மனதோடு மானசீகமாய் கலந்திருந்தவர் உடல் குலுங்கியது.
“ம்ம்ம்…” என்ற ஸ்ரீசக்திவித்யாதரன் சப்தம் அதட்டலாய் உறுமலாய் வெளிப்பட்டது.
மீண்டும் மீண்டும் மீராவின் உச்சரிப்பில் ராகவியின் பெயரும் மனக்கண்ணில் அவள் அழைக்கும் காட்சியும்.
என்னதென்று பிடிபடவில்லை. பதட்டம் கூடியது. அங்கே ஸ்ரீசக்திவித்யாதரன் உடலும் அசௌகரியத்தை காண்பித்தது.
மகாவின் உருவம் அவரின் கட்டுப்பாட்டிலிருந்து வெளிவர திமிறியதை போலிருந்தது.
தரணிதரனுக்கும் மற்றவர்களுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. கோகிலா பேச்சியின் கையை இறுக்கமாய் பற்றிக்கொண்டார்.
மீராவை நெருங்கவும் முடியாமல், என்ன நடக்கிறது என விளங்காமல் தரணிதரன் அல்லாடினான்.
‘மீரா ப்ளீஸ், கவனத்தை சிதறவிடாதம்மா. மீரா, மீரா’ என மானசீகமாக அவளின் முயற்சிக்கு பலம் சேர்க்க முயன்றான் தரணிதரன்.
எரிந்துகொண்டிருந்த ஜோதியில் உதடுகள் நடுங்க மந்திரத்தை உச்சாடனம் செய்தபடி அடுத்த துளி குங்குமத்தை எடுத்தவள் கண்கள் நிலைகுத்தி நின்றது.
“ராகவி, ராகவி. குட்டிம்மா…” என்ற மீராவின் பார்வை விளக்கில் மட்டுமே.
ஆம், அந்த விளக்கின் நடுவில் காட்சிகள் விரிந்திருந்தது. எங்கோ ஏதோ ஒரு இடத்தின் இருளில் சுற்றிலும் அகல்விளக்குகள் தாமரை பூக்களின் மேல் எரிந்துகொண்டிருக்க நடுவில் ராகவி.
“ராகவி…” என்ற மீராவின் ஓலம் பெரிதாக அவளின் பதட்டத்தில் விளக்கு கவிழ்ந்து குங்குமத்தில் பரவ விளக்கின் எண்ணெய்யும் குங்குமமும் கலக்கவே இல்லை.
“மீரா, மீரா என்னடி?…” என பேச்சி ஒருபுறம் பற்றிக்கொள்ள,
“என்னாச்சு மீரா? ஏன் இப்படி பண்ணிட்டீங்க?…” என்று தரணிதரன் கேட்க,
“மீரா பதட்டப்படாத. ராகவி வீட்டுல தான் இருக்கா. என்னம்மா?…” என்றார் கோகிலா.
அத்தனை பேர் உலுக்கியதும் தான் தன்னினைவு வந்தாள் மீரா. அப்போது தான் தன் கவனம் கலைந்திருப்பதும், பூஜை நின்றிருப்பதுமே தெரிந்தது.
ஸ்ரீசக்திவித்யாதரன் உடல் தளர்ந்து மீராவை பார்த்தபடி இருந்தார். மகாவின் அழுகை குரல் விசும்பலாய் கேட்டது.
“சாமி ராகவி ராகவி. என் அக்கா பொண்ணு….” என மீரா பதட்டமாய் எழுந்து சொல்ல அவளால் நிற்கவும் முடியவில்லை.
“விதிக்கப்பட்டது…” என்ற ஸ்ரீசக்திவித்யாதரன் குரலில் சிறு வேதனை.
“ராகவிக்கு என்ன? என் பேத்திக்கு என்ன?…” என்ற பேச்சி தரணிதரனிடம் திரும்பி,
“தம்பி…” என்று அழைக்கும் பொழுதே அவன் மங்களத்திற்கு அழைப்பு விடுத்திருந்தான்.
“என்ன தம்பி துணிய கொண்டு வந்துட்டாளா கவி பாப்பா?…” என்றார் அவர் எடுத்ததுமே.
“என்ன சொல்றீங்க? ராகவி எங்க?…” என்றான் அவன் பீதியில் உறைந்த குரலில்.
“கொஞ்ச முன்ன தான கோவில்ல இருந்து போன் போட்டா மீரா. எதிர்வீட்டு மகா பாப்பாவோட துணியை கோவிலுக்கு கொண்டுவர சொல்லி சொன்னதால நான்தான் போயி சரோஜாட்ட வாங்கி குடுத்தேன்…” என்று கூறினார்.
“என்ன காரியம் பண்ணிருக்கீங்க மங்களத்தம்மா. படிச்சு படிச்சு சொன்னேனே? யாரும் வெளில போக வேண்டாம்ன்னு. அதுக்கு தான அங்கயே இருக்க சொன்னேன் உங்கள…” என்றவன் தலையில் அடித்துக்கொள்ள பேச்சி தான் கேட்ட விஷயத்தில் மூர்ச்சையாகிவிட்டார்.
மீராவும், கோகிலாவும் அவரை தாங்கி பிடித்துக்கொள்ள சக்கர வளையத்திற்குள் அமர வைக்கப்பட்டிருந்த மகாவின் குரல் பேரொலியை எழுப்பியது.
அவளின் ஆத்மா எங்கோ பலமாய் இழுக்கப்பட மகாவின் சத்தம் இன்னும் அதிகமானது.
“அவங்க வேலையை காண்பிக்க ஆரம்பிச்சிட்டாங்க…” என்ற ஸ்ரீசக்திவித்யாதரன் உடனடியாக மகாவின் ஆன்மாவை காப்பாற்ற மந்திரங்களை கூற ஆரம்பித்தார்.
“என்னாச்சு தரணி?…” என கோகிலா கேட்க,
“ராகவியை மீரா வர சொன்னதா வெளில வரவழைச்சிருக்காங்க. யார் எதுக்கு செய்யறாங்கன்னு எதுவும் தெரியலை…” என்றவன் தலையை பிடித்துக்கொண்டான்.
“எவ்வளோ நேரம் ஆச்சு மங்களத்தம்மா? கோவிலுக்கு தான் வரதா சொன்னாளா? என்ன சொல்லிட்டு போனா?…” என்றான் அவன்.
“கோவில்ல இருந்து தான் போன் வந்துச்சு. மீரா போன் கீழ விழுந்துருச்சாம். அதான் போய்ட்டு வரேன்னு சொன்னா…” என்று அவர் பதட்டமாய் சொல்ல,
“என்னன்னு கேட்கமாட்டீங்களா நீங்க? அதுவும் மகாவோட ட்ரெஸ் எதுக்குன்னு யோசிக்க மாட்டீங்களா? அவ தான் சின்ன பிள்ளை. என்னம்மா நீங்க?…” என்றவன்,
அதற்குள் தன்னால் முயன்ற அளவு ஸ்ரீசக்திவித்யாதரன் பாதுகாப்பு வளையத்தை அதிகப்படுத்தியிருந்தார் மகாவுக்கு.
கண்ணை மூடி இருந்தவர் உடல் அதிர்ந்தது அவர் மனக்கண்ணில் கண்ட காட்சிகளால்.
“நாளை மறுநாள் ஜென்ம நட்சத்திரம். நூத்தி எட்டு விளக்குகள். நூத்தி எட்டு தாமரை மொட்டுக்கள். குருதி நாற்றம். கரு மை. தங்க பஸ்பம். ஜோதியில் கொதிக்கும் தங்க பஸ்பத்தில் உயிரோடு சிறு மொட்டின் உயிர் பலி…” உடல் இறுக இறுக அவர் சொல்லிக்கொண்டே சென்றார்.
கேட்டுக்கொண்டிருந்தவர்கள் உடல் தூக்கிவாரி போட்டது. ‘பலியா?’ என உடலெலாம் பாய்ந்த ரத்தம் உறைந்து போனது.
“யார் பலி? யாரை?…” என மீராவின் நாவண்ணம் ஒட்டிக்கொண்டது.
“சாமி…” என தரணிதரன் அழைக்க அவர் மீராவிடம் திரும்பினார்.
“அந்த பொண்ணு பிறந்த நட்சத்திரம், ருதுவான நட்சத்திரம் என்ன?…” என்றார் சந்தேகத்திற்காக.
மீரா ஞாபகமாக சொல்லவுமே ஆழ்ந்த பெருமூச்சு மேலெழும்பியது ஸ்ரீசக்திவித்யாதரனுக்கு.
“நாளை மறுநாள் நள்ளிரவு அந்த பொண்ணோட ஜென்ம நட்சத்திரம் லக்கனத்தோட சங்கமிக்குது. அதுக்குள்ள அந்த பொண்ணை கண்டுபிடிக்கனும் மகளே. காப்பாத்தனும்…” என்றார் மீராவிடம்.
“என்ன சாமி, என்ன சொல்றீங்க? எங்க ராகவி…” என அவள் கதற,
“நம்பிக்கையா இரு. நம்பிக்கையோடு இரு. அந்த தாய் நம்மை கைவிட மாட்டா. இதுவரைக்கும் உனக்கு இந்த சின்ன பொண்ணு தான் காவலா இருந்தா. இனியும் இருப்பா. அகிலாண்ட நாயகி துணையா இருப்பா….” என்று சொல்ல,
“மகா எங்களுக்கு காவலாவா?…” என்ற மீரா மகாவை பார்க்க பனி சிற்பம் இப்போது உருவம் பெற்றிருந்தது.
மகாவிற்கு நடந்த அவலத்தை அவர் சொல்ல சொல்ல கேட்டவர்கள் நெஞ்சம் கொதித்தது.
“அதுவுமே இன்னும் முழுமை பெறலை. அதுக்குள்ள பூஜை தடை பட்டிருச்சு…” என்றவரிடம்,
“சாமி இப்ப எனக்கு ராகவி எங்க இருக்கான்னு தெரியனும். யாரால அவளுக்கு ஆபத்துன்னு தெரியலையே. இப்ப நான் எங்க போய் தேடுவேன்…” என்று மீரா அழுது கரைய,