மீரா அழுதுகொண்டே நடந்த விஷயங்களை சொல்லி முடிக்க மறுமுனையில் கேட்டுக்கொண்டிருந்த நெடுஞ்செழியன் மௌனமாயிருந்தான்.
“ஸார் நான் சொல்றதை நீங்க நம்பலையா?…” என்றாள் பயத்துடன்.
‘இத்தனை சொல்லியும் கூட அவன் தன்னை நம்பாமல் போய்விட்டால் என்ன செய்வது’ என்ற அச்சம் அவளின் வார்த்தைகளில்.
“அதெல்லாம் இல்லைம்மா. நம்பறேன். இப்பவும் இந்த காலத்துல கூட இதெல்லாம் நடக்குதுன்னும் போது தான் வேதனையா இருக்கு. இந்த மாதிரி சில கேஸ் எல்லாம் நானுமே பார்த்திருக்கேன்…” என்றவன்,
“என்ன ஒன்னு, மகாலட்சுமி. அதுதான் அதை நீங்க உணர்ந்திருக்கீங்கன்றது தான். ஓகே, லீவ் இட். எந்த ஊர் சொன்னீங்க?…” என கேட்டுக்கொண்டான்.
“ஸார் ப்ளீஸ், உங்களால எங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியுமா? வேற யாரையும் எனக்கு தெரியாது ஸார்…” என்று மீரா சொல்ல,
“தைரியமா இருங்க…” என்றவன்,
“கூட யாரோ வந்திருக்காங்கன்னு சொன்னீங்களே?…” என்று கேட்டு தரணிதரனிடம் போனை தர சொல்ல,
“நான் டாக்டர் வீட்டுக்கு எதிர்வீடு தான் ஸார். தரணிதரன். மெடிக்கல் ஷாப் வச்சிருக்கேன்…” என அவனும் சொல்லிவிட்டு,
“இங்க ரொம்ப அசிங்கமா பேசறாங்க ஸார். மகா இறந்தப்பவும் இப்படித்தான் கேஸை இழுத்து மூடி ஒண்ணுமில்லாம பண்ணிட்டாங்க…” என ஆத்திரப்பட்டான்.
“கேட்க ஆளில்லைன்னா எல்லாம் செய்வாங்க. நீங்க மீராவுக்கு பக்கபலமா இருங்க. ஏற்கனவே ரொம்ப காயப்பட்டிருக்காங்க. எங்கையாவது நல்லா இருப்பாங்கன்னு நினைச்சேன். ப்ச்…” என்றான் ஆதங்கமாய் நெடுஞ்செழியன்.
“இப்ப நாங்க என்ன பன்றது ஸார்? ராகவியை தேடனும். இங்க ஸ்டேஷன்ல ஒத்துழைச்சாங்கன்னா கண்டிப்பா பெரிய உதவியா இருக்கும். சாமியார் சொல்றதை பார்த்தா ரொம்ப பயமா இருக்கு ஸார்….” என்றான் தரணிதரன்.
“தரணிதரன் நீங்க முதல்ல மீராவை கூட்டிட்டு ஐஜி ஆபீஸ் போங்க. இது வேற ஸ்டேட். என்னால உடனே எதுவும் பண்ணிடமுடியாது. நான் அங்க பேசறேன்…” என்று சொல்ல,
“ஸார் என்ன சொல்றீங்க?…” என்றான் தரணிதரன்.
“பதட்டப்பட வேண்டாம். என்னோட ப்ரென்ட் அங்க தான் அசிஸ்டன்ட் கமிஷனரா வொர்க் பன்றார். உங்களுக்கு கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவார். நான் பேசறேன். அதுக்கு முன்னாடி நீங்க ஐஜி ஆபீஸ் போங்க…” என்று சொல்ல,
“ஓகே, ஸார் இப்பவே கிளம்பிடறோம்…” என சொல்லியவன் மீராவிடம் போனை நீட்டினான்.
“இதுக்கு ஏன் தேங்க்ஸ்? சொல்ல போனா எங்க டிப்பார்ட்மென்ட் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லனும். இந்த மாதிரி ஆளுங்களை என்ன செய்யனும்ன்னு நான் பார்த்துக்கறேன். நீங்க ஐஜி ஆபீஸ் போங்க…” என்று சொல்லிய நெடுஞ்செழியன் அழைப்பை துண்டித்தான்.
வேறு மாநிலம். விஷயமும் பெரிது. கண்டிப்பாக இதனை அத்தனை எளிதில் விடவும் முடியாது. தானும் சட்டென தலையிட முடியாது.
நேரம் கடத்தாமல் முதலில் காவல்துறை ஆணையரிடம் பேசியவன் அவரின் மூலமாக கேரளா ஐஜியிடம் பேச வைத்து தானும் விவரம் சொல்லி துரிதகதியில் விஷயங்கள் பரிமாறப்பட்டது.
அங்கே அவர்கள் இதனை பார்த்துக்கொள்வதாக சொல்லிவிட பெரும் நம்பிக்கை.
இருந்தாலும் அப்படியே விட்டுவிட முடியாதே. உடனடியாக பூச்சியப்பனுக்கு அழைத்தான்.
அங்கே தான் பூச்சியப்பனும் காவல்துறை உதவி ஆணையராக பணி புரிய அது இந்த சமயத்தில் பேருதவியும், பெரும் நம்பிக்கையுமாய் இருந்தது நெடுஞ்செழியனுக்கு.
“வாவ் அண்ணா, எப்படி இருக்கீங்க? காத்து என்னாவாம் ஸ்டேட் தாண்டி வீசுது?…” என்றவனின் சிரிப்பு குரலில் நெடுஞ்செழியன் முகத்தில் மென் புன்னகை.
“அங்க வேலையே இல்லாம சும்மா சுத்தற போல? அதான் உனக்கொரு வேலை தரலாமேன்னு தான் கூப்பிட்டேன். நீ பண்ணுனதுலையே உருப்படியான விஷயம் சென்ட்ரல் கவர்மென்ட் ஜாப் பார்க்கறது தான். இப்போ எவ்வளோ நல்லதா போச்சு….” என்றவன்,
“இந்த கேஸ்க்கு தனி டீம் இருப்பாங்க ண்ணா. ஸ்குவாட் யாரை அலார்ட் பன்றாங்கன்னு கமிஷனர் தான் முடிவு பண்ணுவார்….”
“இருக்கலாம் பூச்சி. ஆனா மீராவுக்கு நீயும் சப்போர்ட்டா இருக்கனும். இது மனுஷங்கள எதிர்த்து இல்லை. அதையும் மீறியது. அதான் சொல்றேன். பாவம் அவங்க…” என்றான் நெடுஞ்செழியன்.
“புரியுதுண்ணா, யார்கிட்ட கேஸ் போகுதுன்னு பார்த்துட்டு நான் ஜாயின் பன்றேன். கண்டிப்பா கவனிச்சிடலாம்…” என்று நெடுஞ்செழியனிடம் பேசிக்கொண்டிருக்க பூச்சியப்பனுக்கு அழைப்பு வந்துவிட்டது.
“அண்ணா ஐஜி ஆபீஸ்ல இருந்து கால். மேபி. நான் வந்து கூப்பிடறேன்…” என சொல்லி வைத்தவன் சற்று நேரத்தில் மீண்டும் நெடுஞ்செழியனுக்கு அழைப்பு விடுத்தான்.
“காட் கிரேஸ். கேஸ் என் கைக்கு வந்திருக்கு. இனி நான் பார்த்துக்கறேன் ண்ணா…” என்று சொல்லவும் நெடுஞ்செழியனுக்கு அத்தனை நிம்மதி.
“முதல்ல அந்த இன்ஸ்பெக்டர் வாயில நாலு மிதி மிதி. கம்ப்ளைன்ட் பண்ண வரவங்ககிட்ட தகாத முறையில பேசியிருக்கான். ராஸ்கல்…” என்று நெடுஞ்செழியன் பல்லை கடித்தவன்,
“பத்திரம் பூச்சி. ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனமா எடுத்து வை. இவ்வளோ தைரியமா பன்றாங்கன்னா அவங்களுக்கு ஹெல்ப் பன்றதுக்கு ஆளுங்க இருக்காங்க…” என எச்சரிக்க,
“காத்து நுழையாத இடத்துல கூட இந்த காட்டுப்பூச்சி நுழைஞ்சிருவான் ண்ணா. முதல்ல அந்த இன்ஸ்பெக்டர் மண்டையையும், அவன் மண்டை மேல இருக்கற கொண்டையையும் புடுங்கிட்டு வாரேன்…” என்றான் பூச்சியப்பன்.
“முதல்ல பேக்ஸ் அனுப்பி அவனை இங்க அலறியடிச்சுட்டு வர வை. என்ன நடக்குதுன்னு எனக்கும் அப்பப்ப அப்டேட் பண்ணு….” என்று சொல்லி அழைப்பை துண்டித்தான் நெடுஞ்செழியன்.
இத்தனை விஷயங்களும் இங்கே நடக்க மீராவும் அங்கே சென்று சேர சரியாக இருந்தது.
“நாங்க வந்துட்டோம் நெடுஞ்செழியன் ஸார்…” என்றாள் அவனுக்கு அழைத்து.
“நீங்க உள்ள போங்க. அங்க கேஸ் என் ப்ரென்ட் கைக்கு தான் போயிருக்கு. தைரியமா இருங்க. நானும் உங்களோட காண்டேக்ட்ல தான் இருப்பேன்….” என்றான் நெடுஞ்செழியன்.
மீராவிற்கு அவனுக்கு எத்தனை நன்றி சொன்னலும் தகும் என்று தோன்றியது. மீண்டும் நன்றி உரைத்துவிட்டு உள்ளே சென்றாள்.
நேரடியாக ஐஜி அலுவலக அறைக்கு செல்ல கமிஷ்னரும், பூச்சியப்பனும், இன்னும் ஐந்து பேரும் இங்கே தான் இருந்தனர்.
“வாங்கம்மா…” என்றவர் நடந்தவற்றை விசாரித்துவிட்டு அதனை கைப்பட எழுதியும் வாங்கிக்கொண்டார்.
அப்போது நடந்தது மட்டுமல்லாது, ஐந்து வருடங்களுக்கு முன் நடந்த மகாலட்சுமி கொலை வழக்கும் மறுவிசாரணைக்கு எடுக்கப்பட்டது.
தரணிதரன் நடந்த ஒவ்வொன்றையும், தற்போது ஸ்ரீசக்திவித்யாதரன் மூலம் அறிந்துகொண்டதையும் சேர்த்தே ஒன்றுவிடாமல் சொல்ல அதிர்வுடன் உள்வாங்கினார்கள்.
“பூச்சியப்பன்…” என்ற ஆணையர் உடனடியாக விசாரணையை துவங்கும்படி உத்தரவிட்டார்.
“வாங்க…” என தனது அலுவலக அறைக்கு சென்றவன் மீரா, தரணிதரன் அதனுடன் அந்த காவலர்கள் ஐந்து பேரையும் அழைத்துக்கொண்டான்.
“எத்தனை மணிக்கு ராகவி கிளம்பினதா சொன்னீங்க தரணிதரன்?…” என பூச்சியப்பன் கேட்க தரணிதரன் தனது போனில் ராகவி தன்னுடைய மெடிக்கல் ஷாப்பை கடந்து சென்ற நேரத்தை காண்பித்தான்.
“நாங்க சாமியாரை பார்த்துட்டு அங்க இருந்தே மீரா அம்மாவுக்கு கால் பண்ணினோம். அப்போதான் சொன்னாங்க நாங்க கால் பண்ணினதா சொல்லி ராகவி கிளம்பினதா…” என்று நேரத்தை சொல்ல,
“ஐயப்பன் நீங்க ராகவி போட்டோவை வச்சு அந்த ஏரியா சிசிடிவி புட்டேஜ் எல்லாம் செக் பண்ண சொல்லுங்க. எல்லா ஸ்டேஷனுக்கும் இந்த போட்டோவை பேக்ஸ் அனுப்பிடுங்க. எந்த நம்பர்ல இருந்து ராகவிக்கு கால் போனதுன்னு ட்ரேஸ் பண்ணிடுங்க…” என்று சொல்லிவிட்டு,
“தாமஸ் எங்க சங்கரன்? இன்னுமா ஸ்டேஷன்ல இருந்து வரார்?…” என்று கடுமையான முகபாவனையுடன் கேட்க,
“நான் இன்பார்ம் பண்ணிட்டேன் ஸார். வந்திடுவார்…” என்று தாமஸ் சொல்ல அதற்குள் சங்கரன்அடித்து பிடித்து வந்து சேர்ந்தான்.
மீராவையும், தரணிதரனையும் அங்கே பார்த்தவனுக்கு உதறல். அதுவும் ஐஜி அலுவலகம் வரை வந்து உடனடியாக வழக்கு பதியப்படிருக்க வியர்த்தது சங்கரனுக்கு.
“வாங்க இன்ஸ்பெக்டர்…” என்று தோரணையாக அழைத்த பூச்சியப்பன்,
“தாமஸ் நான் சொன்னதை கவனிங்க. இதுவரைக்கும் இந்த டிஸ்ட்ரிக்ல மட்டுமில்லாம எங்க எல்லாம் பெண் குழந்தைங்க காணாம போன கேஸ் ரிஜிஸ்டர் ஆகியிருக்குன்னு பாருங்க. இன்னும் மூணுமணி நேரத்துல எனக்கு அந்த டீடெய்ல்ஸ் வேணும்…” என சொல்லி அனுப்பினான்.
“எஸ் ஸார்…” என சொல்லி தாமஸ் நகர பூச்சியப்பன் பார்வை சங்கரனை ஆராய்ந்தது.
“மீரா, நீங்க வெளில வெய்ட் பண்ணுங்க. கூப்பிடறேன்…” என்று அவர்கள் இருவரையும் அனுப்பியவன் சங்கரனிடம் திரும்பினான்.
“ஸ்டேஷனுக்கு வரவங்களுக்கு மரியாதை தர உன்னை மிஞ்ச முடியாதாமே? ஆமாவா?…” என்றான் பூச்சியப்பன் அவனிடம்.
“ஸார்…” என்று சங்கரன் இழுக்க,
“ஷட்அப். சென்ஸ் இல்ல? புள்ளையை காணுமேன்னு பதறி வரவங்கட்ட இப்படித்தான் அசிங்கமா நடந்துக்கறதா? உனக்கெல்லாம் எதுக்குய்யா போலீஸ் வேலை? கேஸ் எடுத்து நடத்தாம வெட்டியா உக்கார்ந்து திங்க அதென்ன உன் மாமியார் வீடா?…” என்று கேட்க சங்கரன் தலைகுனிந்தான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.