ஸ்ரீசக்திவித்யாதரன் சொல்லிய திசையில் தேடி அலைந்து ஓய்ந்துவிட்டனர்.
பூச்சியப்பன் சல்லடையாக தேடியும் அவர்கள் கிடைக்காததில் ஆவேசத்தில் இருந்தான்.
“எங்கடா எங்க போய் தொலைஞ்சாங்க? எப்படி எங்க தேடியும் கிடைக்கலை?…” என்று கிட்டத்தட்ட வெறி கொள்ளும் அளவிற்கு போயிருந்தான்.
இந்தளவு அவன் ஆவேசம் கொண்டதே இல்லை. இயலாமையின் ஒரு விதமாய் கோபம் வெளிப்பட உடன் இருந்தவர்கள் அனைவரும் அரண்டு போயினர்.
“இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு ஸார்…” என்று மீரா அவனுக்கு அழைத்து சற்று முன் சொல்லியிருக்க போகவிருக்கும் உயிரை எப்படி காப்பாற்ற போகிறோம் என்று நிலைகுலைந்து நின்றிருந்தான்.
“தென்திசை மட்டுமில்லை. எல்லா பக்கமும் தேடியாச்சு. எப்படி எப்படி மிஸ்ஸாச்சு?…” என தலையை ஆற்றாமையால் இழுத்து பிடித்தவன் புருவங்கள் சுளித்தது.
“கார் எடு…” என்று ஓட்டுனரை பார்த்து சொல்லி அதில் ஏறி அமர்ந்தவன் மீராவின் வீடு நோக்கி சென்றான்.
செல்லும் பொழுதே சாலையோரம் பச்சைநிற அறிவிப்பு பலகை அந்தந்த பகுதியின் பெயர்களை தாங்கி நிற்க பார்த்தவன் மூளைக்குள் சட்டென்று ஒரு வெளிச்சம்.
“அப்போ மீராவோட வீட்டுல இருந்து எதிர்திசை தென்திசை….” என்று சொல்லியவன்,
“கோ பாஸ்ட்…” என்றான் ட்ரைவரிடம்.
மீராவிற்கு அழைத்தவன் அவள் எங்கே என கேட்க மயானத்தின் அருகில் இருந்தாள் மீரா.
“மீரா உங்க வீட்டுக்கு வாங்க…” என்றவன் தரணிதரனிடம் போனை தர சொல்லி,
“தரணி மீரா வீட்டோட எதிர்திசை தென்திசை. ஆனா அந்த காஞ்சனமாலா கிருஷ்ணன் வீடு இருக்கறது கிழக்கு திசையில. இன்னொன்னு மேற்கு திசையில. வீட்டை சல்லடையா அலசியாச்சு. எங்கயும் பிடிபடலையே?…” என்றான் பூச்சியப்பன்.
“கண்டிப்பா அவங்க இருக்கற வீட்டுல இருக்க வாய்ப்பில்லை ஸார். வேற எங்கையோ?…” என்று யோசித்தவன்,
“ஒரு நிமிஷம் ஸார். நீங்க வந்துக்கிட்டே இருங்க. நான் திரும்ப கூப்பிடறேன்…” என்ற தரணிதரன்,
“இப்ப எதுக்கு வீட்டுக்கு? என்னால முடியாது. ராகவி இல்லாம நான் எப்படி தரணி?…”
“சொன்னா கேளும்மா. முதல்ல கோகிலாக்காவுக்கு கூப்பிடுவோம்…” என்றவன் அழைக்கும் பொழுது இன்னொரு வண்டி வர சுதாரித்து பின்னால் நகர்வதற்குள் இடித்து தள்ளப்பட்டனர் இருவருமே.
“ஏய்…” என்று கத்திய தரணிதரன்,
“மீரா உனக்கு ஒன்னுமில்லையே?…” என்றான்.
“ம்கூம் இல்லை. நீங்க ஓகே வா?…” என்று கேட்க,
“அதை எல்லாம் இப்ப பார்க்க முடியாது. பைக்ல ஏறுங்க…” என்றவன் தனது போனை தேட பைக்கின் அடியில் நொறுங்கி இருந்தது.
“போச்சு…” என்று அதை எடுத்தவன்,
“உங்க போன்ல இருந்து கோகிலாக்காவுக்கு கூப்பிடுங்க…” என கேட்கும் பொழுது தான் கையிலிருந்த போன் எங்கோ விழுந்திருந்தது…”
“போன் மிஸ் பண்ணிட்டேன் தரணி. இப்ப தான்…” என்று அவள் தேட,
“ப்ச். மீரா நேரம் போகுது. இப்ப தேட முடியாது வாங்க…” என்றவன் மீராவுடன் வீடு நோக்கி சென்றான்.
நேராக வீட்டிற்குள் செல்லாமல் கோகிலாவின் வீட்டிற்கு சென்று அவரின் கதவை தட்டினான்.
“என்ன தரணி? இப்படி வந்திருக்க? ட்ரெஸ் எல்லாம் மண்ணா…” என்றவர் உள்ளே அழைக்க,
“இப்ப எனக்கு சுத்தமா நேரமில்லை. ஒரு பத்து நாளைக்கு முன்னாடி சாதரூபம் நகைக்கடை கிருஷ்ணன் ஈசி போட்டு பார்க்க ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு வந்ததா பேச்சுவாக்குல சொன்னீங்களே? அது எந்த இடம்னு தெரியுமா? நல்லா யோசிங்கண்ணே…” என்றான் அவன் பரபரப்புடன்.
“ஆமா ஆனா அது அவருக்கு இல்லை. தெரிஞ்சவங்க வாங்கறார்னு சொன்னார் தரணி….” என்றார் கோகிலாவின் கணவர்.
“இல்லண்ணே, எனக்கென்னமோ அது அந்தாளு வாங்கத்தான்னு தோணுது….” என்றான்.
அவர்கள் இருவரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று எதுவும் புரியவில்லை மீராவிற்கு.
ஆனாலும் தரணிதரன் முகத்தில் தெரிந்த கலவரமும், அதற்கு இணையான ஒரு நம்பிக்கையும் அவளை பிடிமானம் கொள்ள செய்தது.
“தரணி…” என மீரா அழைக்க,
“உங்க வீட்டுக்கு போக வேண்டாம் மீரா. இப்ப அவங்க கேள்விக்கு பதில் சொல்ல முடியாது…” என்றவன்,
“அண்ணே எனக்கு உங்க போன் தரமுடியுமா?…” என வரும்வழியில் நடந்தவற்றை அவன் சொல்லவும்,
“எடுத்துட்டு வரேன்ப்பா…” என்று சொல்லி உள்ளே சென்றார்.
“ராகவியை கண்டு பிடிச்சிடலாமா?…” என நம்பிக்கையுடன் மீரா கேட்க,
“ஹ்ம்ம்…” என்றவன் அவள் கையில் கட்டியிருந்த கடிகாரத்தை பார்த்தான்.
“இன்னும் ரெண்டேகால் மணி நேரம் இருக்கு…” என்று சொல்ல,
“நேரத்தை சொல்லாதீங்க தரணி. எனக்கு பதட்டம் அதிகமாகுது…”
“நேரம் இதுதான்னு தெரிஞ்சுக்கிட்டா தான் நாம சீக்கிரம் போக முடியும்…” என்றான் அவளிடம்.
“தரணி விசாரிச்சிட்டேன் ப்பா. யாரோ அச்சுத்கன் நம்பூதிரின்றவர்கிட்ட தான் இடத்தை வாங்க போறாங்கலாம். ஆனா கிருஷ்ணன் பேர்ல இல்லை. வேற யாருக்காகவோ தான் விசாரிக்க வந்தாராம்…” என்று கோகிலாவின் கணவர் போனுடன் சொல்ல,
“அது எந்த இடம்ன்னு கேட்டீங்களா?…” தரணிதரன் முகத்தில் அப்போது தான் முழுமையான நம்பிக்கை.
“ஆமாப்பா, கொல்லம் பீச் பக்கத்துல இருக்குது. பெரிய வீடு இல்லை. ஆனா ரொம்ப பழைய வீடு. அவர்கிட்ட இருந்து தான் அந்த வீட்டை வாங்கறதா ப்ளான் போல…” என்றார்.
“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அண்ணா. அந்த அட்ரஸ் மட்டும் தெரியுமா?…” என்றவன்,
“அச்சுத்கன் நம்பூதிரியா அவர் பேர்…” என்று சொல்லி மீராவை பார்த்தான்.
“நீங்க இங்கயே நில்லுங்க. நான் வந்திடறேன்…” என்றவன்,
“அண்ணே இந்த போனை நீங்க வச்சுக்கோங்க. நான் அப்பா நம்பரை எடுத்துக்கறேன். உங்ககிட்ட பேச எனக்கு வசதியா இருக்கும். எனக்கு அந்த அட்ரஸ் கிடைக்குமான்னு கொஞ்சம் விசாரிங்க ப்ளீஸ்…” என்று சொல்லி கோபியிடம் சென்றவன் தந்தை உறங்குவதை பார்த்துவிட்டு,
“கோபி உனக்கு தெரிஞ்சவங்க கொல்லம் பீச் பக்கம் இருந்தா எனக்கு காண்டேக்ட் பண்ண சொல்லுடா. ராகவி விஷயம் தான்…” என்றான்.
“ஒரு ப்ரென்ட் இருக்காண்ணே. நான் அங்க வர சொல்றேன்…” என்று கோபி சொல்ல,
“சரி அப்பாவை பார்த்துக்கோ…”என்றுவிட்டு வெளியே வந்தான்.
மீரா இன்னும் தன் வீட்டையே தான் பார்த்துக்கொண்டிருந்தாள். யாராவது வருகிறார்களா என்று.
“சரிங்கண்ணே நாங்க கிளம்பறோம். பூச்சியப்பன் சார்க்கு கால் பண்ணா போன் நாட் ரீச்சபிள். அவர் வந்தா இந்த தகவலை சொல்லி அனுப்புங்க…” என்றவன் மீராவுடன் கிளம்பிவிட்டான்.
இன்னும் இரண்டுமணி நேரம் மட்டுமே. தரணிதரன் பைக் சாலையில் சீறி பாய்ந்தது.
அவர்கள் இருக்கும் திசையிலிருந்து தென்திசை. எத்தனை உண்மை ஸ்ரீசக்திவித்யாதரன் சொல்லியது என நினைத்துக்கொண்டான்.
தனக்கு இது முன்பே தோணாமல் போய்விட்டதே என மானசீகமாக தலையில் தட்டிக்கொண்டு சென்றான்.
இடையில் வாகனம் ஒருமுறை தடுமாற அவன் மனதும் அதை போலவே தான் இருந்தது.
“தரணி பார்த்து போங்க…” என்றாள் மீரா அவனின் தோளை பற்றியபடி.
“நீங்க நல்லா புடிச்சுக்கோங்கம்மா. கீழே விழுந்திடாம…” என்று சொல்லியவன் கவனத்திலும் கூடுதல் கவனமாக இருந்தான்.
“மறக்காம பூச்சியப்பன் ஸார்க்கு கால் பண்ணிட்டே இருங்க…” என்று சொல்ல,
“நாட் ரீச்சபிள் தரணி…” என்றாள் மீரா கண்ணீருடன்.
அவளின் உள்மனது ராகவி அங்கே தான் இருக்க கூடும் என்று எச்சரிக்கை காண்பித்துக்கொண்டே தான் இருந்தது.
அதற்குள் பூச்சியப்பனும் வந்துவிட்டால் எத்தனை உதவியாக இருக்கும் என நினைத்துக்கொண்டே செல்ல இதோ இன்னும் ஒருமணி நேரம்.
“பூச்சியப்பன் ஸார்…” என்று வந்த அழைப்பை பார்த்து மீரா சொல்ல,
“பேசுங்க. நான் பைக் நிப்பாட்டறேன். இல்லைன்னா சிக்னல்ல கட்டாகிரும்…” என்றான் அவன்.
“மீரா இப்ப எக்ஸாக்ட்டா எங்க இருக்கீங்க?…” என பூச்சியப்பன் கேட்க,
“பீச் பக்கத்துல வந்துட்டோம் ஸார்…” என்றாள் மீரா.
“ஓகே, நீங்க போங்க. நான் அந்த ஏரியா ஸ்டேஷன்க்கு சொல்லிடறேன்…” என்றான் அவன்.
இன்னும் நம்பிக்கை வலுத்தது. முகத்தில் தெளிவு பிறக்க சந்தோஷத்தில் கண்ணீர் பொங்கியது.
“ஓகே ஸார் ஓகே…” என்றாள்.
“போலீஸ் கூட வந்திருவாங்களாம் தரணி. கண்டுபிடிச்சிடலாம் இல்ல?…” என்றாள் சந்தோஷமாய்.
“ஹ்ம்ம், வண்டில ஏறு. கோபி ப்ரென்ட் லைட்ஹவுஸ் பக்கத்துல வெய்ட் பன்றானாம்…” என்று சொல்லி அங்கே அவனையும் அழைத்துக்கொண்டு அவரின் வீட்டிற்கு செல்வதற்குள் காவல்துறையும் அங்கே வந்து சேர்ந்தது பூச்சியப்பன் உத்தரவின் பெயரில்.