“அட என்னம்மா நீங்க? என்னவோ காலுக்கு கீழே ஊறிட்டு போனதாட்டம் இருந்துச்சு. அதேன் அலறிட்டேன்…” என்று சொல்லியவன்,
“சரி நீங்க உள்ள போங்க. நான் கார நிப்பாட்டிட்டு வாரேன். என்னமாச்சும் அவசியம்ன்னா ஒரு போனை போடுங்க….” என்றுவிட்டு கடைசியாக,
“உங்க மகளை பத்தரமா பார்த்துக்கோங்க. ரெண்டுமூணு நாள் வீட்டுல இருக்கட்டும். அப்பறம் வேலைக்கு போக சொல்லுங்க…” என்றான்.
“தம்பி சொன்னா சரித்தான்…” என்ற பேச்சி உள்ளே திரும்பி செல்ல பெருமூச்சுடன் தரணிதரன் காரை கிளப்பி ஷெட்டில் விட சென்றான்.
நல்லவெயில் காய்ந்திருக்க காரை நிறுத்திவிட்டு நடந்து வந்தவன் பார்வை மகாலட்சுமியின் வீட்டை நெருங்க நெருங்க அங்கே அவள் சிறிது சிறிதாய் உருவகம் பெற்று அமர்ந்திருந்தாள் முழுதாய்.
ஒரு நொடியில் தடுமாறி இரண்டடி பின்னே சென்று நின்று பார்த்தவனுக்கு நாவே வறண்டுபோனது.
இதுவரை தான் பாராதது இது. அதுவும் உயிரோடு இருக்கும் பொழுது எப்படி இருந்தாளோ அப்படியே அமர்ந்திருந்தாள்.
எப்பொழுதும் அந்த திண்ணையில் தான் அமர்ந்திருப்பாள் புத்தகத்துடன், இல்லையென்றால் அவள் தாயுடன்.
“எப்ப பாரு தெருவுல வேடிக்கை. எங்க என்ன நடக்குதுன்னு உன்னை கேட்டா போதும். போ போய் உள்ள போய் படி…” என தலையில் எத்தனை குட்டு வைத்திருப்போம் என நினைத்தவன் நெஞ்செல்லாம் தவியாய் தவித்தது.
“ண்ணா ஸ்கூல் பஸ் போயிரும். என்னை பஸ் ஸ்டாப் வரை கொண்டுபோய் விடமுடியுமா முடியாதா?…” என சண்டைக்கு நின்று தன்னோடு வரும் குட்டி தங்கை.
இந்த நிமிடம் அவள் இல்லை என்பதே நெஞ்சை அறுத்திருக்க, மீண்டும் முழு உருவமாய் அமர்ந்திருப்பவளை கண்டு ஆசையாய், பாசமாய் செல்வதற்கு பதில் அச்சமும், நடுக்கமுமாய் விலகி நிற்கவேண்டிய இந்த விதியை நொந்துகொண்டான்.
எதிர்வீட்டை வெறித்தபடி முகத்தில் எவ்வித உணர்வுமின்றிய பெண்ணின் கவனம் தரணிதரனின் மீது மின்னலாய் விழ ஒருநிமிடம் அவனின் இதயத்துடிப்பு நின்று துடித்தது.
பார்த்தவள் அவனை பார்த்தபடியே தான் இருந்தாள். வெறுமையான விழிகள் அவனுக்கு எதையோ உணர்த்த முற்படுகிறதோ?
இத்தனை வருடங்கள் இல்லாது இப்போது எதற்கு? அவனுக்கு எதுவும் தெரியவில்லை.
கால்கள் முன்னேறி நடக்க தரணிதரன் துணிந்து வேகமாய் சென்று நின்றான் மகாலட்சுமியின் முன்.
சற்றுமுன் காருக்குள் தான் பார்த்த பனிசிற்பமும், அது செய்த செயலும் நெஞ்சில் ஊசியாய் ஒரு வலியை உண்டாக்க,
“மகா குட்டி…” என்றழைத்தான் குரல் தழுதழுக்க.
அருகில் சொல்லும்முன் மழுக்கென்று நீர் விழிகளில் நிறைந்துவிட்டது. அவன் அழைப்பில் மகாவின் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் குருதியை பூச,
“என்னடா ஆச்சு? மகா…” என்றான் மீண்டும்.
“பேசுடாம்மா, மகா. அண்ணாடா…” என மீண்டும் மீண்டும் சொல்ல முகத்தில் தெரிந்த சிவப்பு அவளின் உருவத்தில் பரவ பேச முடியாமல் தலை அசைந்தது.
தன் கண்ணுக்கெதிரே இந்த பகலில் நடந்துகொண்டிருக்கும் அமானுஷ்யத்தில் தரணிதரன் நிலைகுற்றிய பார்வையுடன் நின்றுவிட சட்டென அனைத்தும் மாயமாய் மறைந்து மீண்டும் பழைய தோற்றம் பெற்ற மகாவின் பார்வை எதிர்வீட்டை பார்த்தது.
“வா வா போயிட்டு உடனே வருவோம். சாய்ங்காலம்ன்னா கடையில கூட்டமா இருக்கும். சட்டுன்னு மொகத்த காமிச்சிட போறாங்க. இப்பன்னா பதவிசா சொல்லிட்டு வரலாம்…” என்று பேசியபடியே பேச்சி ஒரு பையை கையில் இடுக்கியபடி ராகவியுடன் பேசிக்கொண்டே வந்தார்.
தரணிதரன் இன்னும் அங்கே நிற்க கண்ட பேச்சி அவனை நெருங்க மகாலட்சுமியிடம் எவ்வித அசைவும் இல்லை.
அமர்ந்து பார்த்தது பார்த்தபடியே அவள் இருக்க பேச்சிக்கோ, ராகவிக்கோ அப்படி ஒருத்தி அங்கிருப்பதே தெரியவில்லை.
“என்ன தம்பி கார நிப்பாட்டிட்டீங்களா?…” என்றவர் தரணிதரனை நெருங்கவும் அவன் பதட்டமானான்.
மகாலட்சுமியின் பார்வை முழுவதும் ராகவியிடம். அவள் அருகில் வந்ததுமே மகாவின் விழிகள் கண்ணீரை சுரந்தது.
அதை கண்ட தரணிதரன் திடுக்கிட்டதோடு அந்த கண்ணீர் ஏன் எதற்கு என புரியாமல், குழப்பமும் பதட்டமுமாய் பார்த்தான்.
“தம்பி உங்களத்தான்…” என மீண்டும் பேச்சி அழைக்க,
“ஆங், இப்பத்தேன். நிப்பாட்டிட்டு நடந்து வந்தேன்….” என தடுமாறி சமாளிக்க,
“பொறவு தம்பி, கேக்க நெனச்சு மறந்துட்டேன் பாருங்க. மீராவுக்கு வைத்திய செலவு எம்புட்டாச்சுன்னு சொன்னா நல்லாருக்கும்…” என்றார் அவர் சங்கோஜமாய்.
“இல்ல தம்பி மாசம் ஆரம்பிக்கமுன்ன இம்புட்டு செலவு. இப்பவே சொன்னீயன்னா எங்கங்க இறுக்கி பிடிக்கன்னு கட்டுசெட்டா பார்த்து திருப்பி குடுக்க ஏதுவா இருக்கும்….” என்ற பேச்சி,
“இல்ல தம்பி, மீராவுக்கு தெரிஞ்சா வைய்யுவா. இந்த காச நீங்க புடிங்க. எம்புட்டாச்சுன்னு சொல்லுங்க. நான் போயி போன மாச காசையும் வாங்கிட்டு வாரேன்….”
“அட நாந்தேன் சொல்லுதேன்ல…” என்றவன் பேச்சியை சமாளித்து நகைக்கடையில் பணத்தை கட்டும்படி சொல்லி அனுப்பி வைப்பதற்குள் போதும் போதும் என்றானது.
“எப்பவேணா காச திருப்பி குடுங்க. நானே எழுதி வைக்கிதேன். மாசம் இம்புட்டுன்னு கொஞ்சமா குடுங்க. போதும்மா. நாமலாம் வாழறதுக்கு இப்படி மாத்தி மாத்தி உதவிக்கிட்டா தான் உண்டு…” என்று அப்போது பணத்தை வாங்க அவன் முழுதாய் மறுத்துவிட்டான்.
ஏற்கனவே பணகஷ்டம். இப்போது மகாலட்சுமி வரவு, அதன் பின்னணி எதுவும் புரியாமல் அந்த குடும்பத்திற்கு என்னவோ என மனது பதைபதைக்க இதில் பணமாவது ஒன்றாவது.
கறார் பேர்வழி அங்கே கலங்கி போய் இருந்தான். பணத்தை வாங்காமல் அவர்களுக்கு தன்னால் என்ன உதவ முடியும் என யோசித்தான்.
இவற்றிற்கு எல்லாம் மேல் மகலாட்சுமி தன்னிடம் சொல்ல வருவது என்ன? முதலில் அதற்கு தெளிவு கிடைக்க வேண்டும்.
இத்தனை சிந்தனைகளுக்கு மத்தியில் அவனால் நிம்மதியாய் இருக்கமுடியவில்லை.
“சரி தம்பி வரேன்…” என்றவர் கலங்கிய கண்ணீரை துடைத்தபடி நகைக்கடை நோக்கி கிளம்பினார் ராகவியுடன்.
அவர்கள் செல்வதை பார்த்த தரணிதரன் புருவங்கள் சட்டென இடுங்க ராகவியின் அருகில் செல்லும் நிழலை பார்த்தான்.
திரும்பி திண்ணையை பார்க்க அதில் துளித்துளியாய் நீர் திவலைகள் நின்றிருக்க என்னவோ கிறுக்கல்கள். அவன் அதை உணர்வும் முன் அத்தனையும் புகையாகி போனது.
மகாலட்சுமியின் குறிப்புகள் காலங்கடந்து தான் அவர்களின் பார்வைக்கு தெரியவரும் என்பது தான் விதிக்கப்பட்டதோ?
“என்ன எழுதியிருந்தா?…” என்றவன் அதை மீண்டும் பார்த்துவிட்டு,
“மகா…” என்றழைக்க அந்த நிழல் ஒருநொடி நின்று மீண்டும் திரும்பியும் பாராமல் ராகவியுடனே ஒட்டி நடந்தது.
“என்னண்ணே இங்க நிக்கிறீங்க?…” என்றான் கோபி உள்ளிருந்து வந்து தரணிதரனை பார்த்து.
அதிர்ந்த முகத்தை மறைத்துக்கொண்டு தரணிதரன் உள்ளே செல்ல அவனின் பின்னோடு வந்த கோபி,
அவன் என்ன நினைக்கிறான் என்று கோபிக்கு எதுவும் தெரியவில்லை. எதுவும் என்றால் மனதில் வைத்துக்கொள்ளாமல் பட்டென்று பேசிவிடுபவன் அமைதியில் கோபிக்கும் என்னவோ போலிருந்தது.
“அப்பறம் அண்ணே நான் இப்ப வீட்டுக்கு போயிட்டு குளிச்சிட்டு வரேன். ஒரு ஒருமணி நேரத்துல வந்துடறேன். போகட்டுங்களா?…” என்று தயங்கி கேட்க,
“சரி…” என்று மட்டும் சொல்லியவன் அமைதியில் கோபிக்கு தான் தலை சுற்றியது.
“இந்தண்ணனுக்கு என்னமோ ஆகிடுச்சு. முனிகினி அடிச்சிருச்சா? கோடாங்கிய கூப்பிட்டு மந்திரிச்சு வேப்பிலை அடிக்க சொல்லனும்..” என முணுமுணுத்துக்கொண்டே தன்னுடைய பையை அவன் எடுக்க,
“டேய் நில்லு, என்ன சொன்ன?…” என்று தரணிதரன் அவனை பிடித்துவிட்டான்.
மருத்துவமனையிலும் கிடைக்காத சம்பளம். ஒருவரை மட்டுமே கவனிக்கவேண்டிய வேலை.
எவ்வித அலைச்சலும் இன்றி சொகுசாய் தானும் நிம்மதியாய் எந்தவித தொந்தரவும் இல்லாமல் பொழுதை ஓட்டுவது வேறு இடத்தில் சாத்தியமில்லையே.
அந்த வேலையினால் அவனுக்கு அதிகமாய் வருமானமும் இருக்க, குடைச்சலும் இல்லாதிருக்க விட மனமில்லை.
“டேய் இப்ப என்ன கேட்டேன்னு இவ்வளோ பதறி போற?…” என்ற தரணிதரனின் அதட்டலில் தான் கோபி அமைதியானான்.
“நீ சொன்னியே கோடாங்கி, முனி. இது நிஜமாவே வொர்க்கவுட் ஆகுமா?…” என்று கேட்க ஒரு நொடி நிம்மதியான கோபி,
“என்னது வொர்க்கவுட்டா?…” என்றான் விழிகள் தெறிக்க.
“இப்ப என்ன கேட்டுட்டேன்னு இவ்வளோ பயந்து பார்க்கற?…”
“இல்லண்ணே, நீங்க சீரியஸா கேட்கறீங்களா?…” இன்னும் கோபி தெளியாமல் கேட்க,
“ஆமா. நிஜமா தான்….” என பல்லை கடித்த தரணிதரன்,
“ப்ச், உனக்கு எப்படி சொல்லி புரியவைக்க…” என தலையை வேகமாய் கோதியவன்,
“கோபி, இந்த இறந்து போனவங்கட்ட பேசுவாங்களே. அதை பத்தி தெரியுமா உனக்கு?…” என அவனை இன்னும் பீதியாக்கினான்.
“அண்ணே என்னன்னே சொல்றீங்க?…” என பயந்து போனவன் தரணியின் தீர்மானமான பாவனையில்,
“எனக்கு அதை பத்தி எதுவும் தெரியாது. ஆனா பசங்க ட்ரை பண்ணியிருக்காங்கன்னு சொல்ல கேள்விப்பட்டிருக்கேன்…” என்றான் தயக்கமாய்.
“எனக்கு அதை பத்தி தெரிஞ்சுக்கனுமே கோபி…” என்றவனின் இந்த முகபாவனையே புதிது கோபிக்கு.
“என்னன்னே என்னமும் பிரச்சனையா?…” என கேட்க,
“விஷயம் வெளில தெரியவேண்டாம். நான் அப்பறமா விளக்கமா சொல்றேன். நீ எனக்கு அது என்ன எப்படின்னு மட்டும் கேட்டு சொல்லு. புரியுதாடா?…” என்று சொல்ல,
“செய்யின்னா செய்யறேன் ண்ணே. என்னத்துக்கு இப்படி எல்லாம்?…” என்ற கோபி விசாரிப்பதாக சொல்லி கிளம்பி சென்றான்.
அவன் சென்றதும் ஆழ்ந்த மூச்செடுப்புடன் திரும்பி பார்க்க நடராஜ் விழித்து மகனை தான் பார்த்தபடி இருந்தார்.
“அய்யா…” என அருகில் சென்றவன் முகத்தின் கலக்கத்தில் கண்ணை மூடி திறந்தவர் என்னவென்று தலையசைத்து கேட்க நடந்ததை எல்லாம் தரணிதரன் சொல்ல நடராஜின் கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது.
இப்போது வரை அவரால் மறக்க முடியாமல் உள்ளுக்குள் கனத்து போயிருக்கும் விஷயமல்லவா அது.
கண்கண்ட சாட்சியாக தானிருந்தும் கைகால்கள் விழுந்த நிலையில் வாய் பேசமுடியாத காரணத்தினால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாதென்ற வாதத்தில் அங்கே தங்களுக்கு எதிராய் என்ன நடந்து, யார் ஜெயித்தது என்றே தெரியாமல் ஒரு உயிர் இழப்பிற்கான விடை தெரியாமல் போயிருந்ததே?
உயிரல்ல, உயிர்கள் என்று தெரிய வரவிருந்த நொடி, மீராவும், ராகவியும் வந்ததன் நோக்கம் என்னவென அறியும்முன், தேவ ரகசியம் விளங்கும்முன் அங்கே அந்த ஷணம் அனைவரின் கண்ணிலிருந்து கவன சிதறலில் ராகவி மாயமாகியிருந்தாள்.
எதை அறிந்துகொள்ள வேண்டி அவர்கள் எடுத்துவைத்த முதல் படியிலேயே கவனமெனும் பாத சுவட்டின் ரேகை அழிந்து போனது.