“மாப்பிள்ளையும் பொண்ணும் வந்தாச்சி” என்ற முதியவர் ஒருவரின் குரலில் அப்பொழுது தான் உள்ளே நுழைந்தனர் தணலனும் – யமுனாவும் திருமண தம்பதி சமேதராக…
அடுத்து தன் நிலை என்னவென்று அறியாத சிறு பேதையாக உள்ளே நுழைந்தவளை அடுத்ததாக தன் வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தான் தணலன்… அவளின் சேலை முந்தானையுடன் பின்னிப் பிணைக்கப்பட்ட தன் தோள் துண்டினையும் தோளில் சுமந்து கொண்டு உள்ளே நுழைந்தான் தணலன்…
பார்க்கும் அனைவரிடத்திலும் தணலாய் தகிப்பவன் அல்ல… தணலாய் எரியும் நெருப்பினை தனக்குள் சுமந்து கொண்டு வாழ்பவன்…
வாழ்க்கையில் அவன் சிரித்து யாருமே பார்த்ததில்லை… ஆனால் அவனால் மற்றவர்கள் மகிழ்ந்து சிரித்தது அதிகம்… அவனின் சிரிப்பை மட்டுமல்ல அவன் வாழ்க்கை ஒட்டு மொத்தத்தையும் எடுத்து சென்று விட்டாள் ஒருத்தி…
அவனுக்கு கல்யாணம் என்பதால் ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது… இவனுக்கு அவர்களின் பார்வை சங்கடத்தையும், ஒரு வித தயக்கத்தையும் கொடுத்தது…
“இவ்வளவு பிரம்மாண்டமான திருமணம் தேவையா??” என பல தடவை வீட்டினுள் இருப்பவர்களிடம் போராடி விட்டான்…
ஆனால் அவர்களோ விடாப்படியாக கல்யாணத்தை மிகப்பிரம்மாண்டமாக நடத்தினார்கள்… காரைக்குடியே அசந்து நின்றது என்றால் மிகையாகாது… ஏழு நாள் திருவிழா என்றே கூறலாம் அந்தளவிற்கு பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருக்கிறது…
“ஆயிரம் ஜன்னல்கள் கொண்ட வீட்டினை பார்க்க வேண்டும் என்றால் அதற்கு காரைக்குடியை தான் கைக்காட்டுவார்கள்”… அந்தளவிற்கு பிரம்மாண்டமான வீட்டினை பூர்வீகமாக கொண்டு வாழ்பவர் தான் வேதாச்சலம் அவரின் துணையார் தான் வேதவள்ளி…
இவர்களின் அன்பிற்கு அடையாளமாக மூன்று பிள்ளைகள் பிறந்தனர்… முதலாய் பிறந்தது பெண் பிள்ளை தான்…
தலைச்சம் பிள்ளை பெண் பிள்ளையாக பிறந்தால் வீட்டில் எப்பொழுதும் சௌந்தர்யம் நிறைந்திருக்கும் என்பதால் அவருக்கு சௌந்தரவள்ளி என பெயரிட்டனர்…
அவருக்கு அடுத்ததாக பிறந்து இருவரும் ஆண்களே… முதலாமவன் கதிர்வேல் இரண்டமாவன் வெற்றிவேல்…
சௌந்தரவள்ளியை வெளியில் கட்டிக் கொடுக்க மனமில்லாதவர்கள், வேதவள்ளி சித்தி மகனான மதுசூதனனுக்கு மணமுடித்து வைத்தனர்… ஆனால் அவரோ திருமணம் பத்து வருடத்தில் ஒரு ஆக்சிடெண்டில் உயிரிழந்து விட்டார்…
இருவரின் காதலுக்கும் சாட்சியாக முதலாக பிறந்தது பெண் பிள்ளை… தேவசேனா… அவருக்கு அடுத்ததாக பிறந்தவன் தான் தணலன்… நம் நாயகன்…
கதிர்வேலுக்கும் சங்கீதா என்ற பெண்ணை மணமுடித்து வைத்தனர்… இரு ஆண் குழந்தைகள் அவர்களுக்கு பிறந்தது…
வெற்றிவேலுக்கும் நித்யா என்ற பெண்ணை மணமுடித்து வைத்தனர்… அவருக்கு இரு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்…
ஆண்மக்கள் இருவருக்குமே ஆண் பிள்ளைகள் என்பதாலும் வேதவள்ளிக்கு சற்று மனவருத்தம் தான்… பெண் பிள்ளைகள் கொஞ்சி விளையாடும் வீட்டில் வளர்ந்தவர் அவர் என்பதால் பெண் பிள்ளைகள் மீது அவருக்கு பிரியம் அதிகம்…
வீட்டில் இருக்கும் ஒரே பெண் தேவசேனா என்பதால் வேதாச்சலமும், வேதவள்ளியும் அவளின் மேல் கொள்ளை பாசம் வைத்திருந்தனர்…
தேவசேனாவிற்கு செல்லம் அதிகம் என்பதை விட பிடிவாத குணம் அதிகம் என்றே சொல்லலாம்… அவள் வைத்தது தான் சட்டம் என கொள்கையுடையவள்…
எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் அவளிடம் கேட்டுத்தான் செய்ய வேண்டும் என நினைப்பாள்… அதற்கு ஏற்ப திறமையும் கொண்டவள்… அரசாள பிறந்தவள் போல் அவள் நினைத்து ஒன்று நடக்காமல் போனால் எதிர்வினை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்…
அப்படிப்பட்டவளும் காதலில் விழுந்தது பேரதிசியமே… தனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த வாத்தியார் மணிவண்ணன் மீது தான் காதல் கொண்டாள்… அவர் மீது மையல் கொண்டவள் அவளே தேடிச் சென்று தன் காதலையும் பகிர்ந்து கொண்டாள்…
அவருக்கும் தேவசேனா மீது விருப்பம் என்பதால் தன் தாய் தந்தையுடன் பேசி அவளை ஊரறிய மணமுடித்தார்…
திருமணம் முடிந்த பின்பு மறுவீட்டுக்கு அழைக்கும் போதே தேவசேனா அவரின் வீட்டிற்கு செல்லமாட்டேன் என அடம் பிடிக்க… மணிவண்ணனுக்கு திகைப்பு தான்…
“ஏன்??” என்ற ஒற்றை கேள்வி கேட்டவருக்கு, பதிலாக திமிருடன் ஒரு பார்வை பார்த்தவள்…
“என்னுடன் வாழ விருப்பம் என்றால் என் வீட்டிற்கு நீதான் வரவேண்டும்… நான் உன்னுடன் வரமாட்டேன்” என கல்யாணம் முடிந்த ஒரே வாரத்தில் தன் பிறந்த வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டாள் தேவசேனா…
அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு சாட்சியாக ஒரு ஆண் குழந்தையும் பிறந்து இன்றோடு எட்டு வருடங்களை கடந்து விட்டது… ஆனால் இன்றும் கணவனை பிரிந்து தான் வாழ்கிறாள்…
அல்லிராணியாக வாழும் அவளுக்கு கணவன் வீட்டில் அன்பிற்கு அடிமையாக வாழ விருப்பமில்லை என்று விட்டார்…
இந்தக் கல்யாணத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக நடத்துவதற்கு காரணமும் இவளே… தணலனுக்கு இதில் சிறிதும் விருப்பமில்லை என்று விட்டான்… ஆனாலும் அவனை விடாப்பிடியாக சம்மதிக்க வைத்திருந்தாள்…
மாப்பிள்ளையும், பெண்ணையும் ஹாலில் இருந்த சோபாவில் அமர வைத்தனர்… சில சடங்குகள் ஆரம்பித்தது இன்னும் சில நிமிடங்களில் ஆரம்பிக்க உள்ளது என்பதால்…
யமுனாவோ மிகவும் சோர்ந்து விட்டாள்… நிற்பதற்கு கூட அவள் உடலிலும் தெம்பில்லை, மனதிலும் தெம்பில்லை… விருப்பமில்லாத திருமணம் என்பதால் மனதில் சிறு சோர்வு இருந்து கொண்டேயிருந்தது…
26 வயது தொடங்கும் பருவ மங்கையவள்… அசரடிக்கும் அழகு என்றெல்லாம் கூற முடியாது… சற்று பருமனான உடல்வாகினை கொண்டவள்… வட்டமுகம் அதில் எப்பொழுதும் கருப்பு நிற பொட்டு இடம் பெற்றிருக்கும்…
அவளுக்கு பிடித்த நிறம் என்றால் கூட அது கருப்புதான்… எதற்கும் அலைபாயாத கருவிழிகளை கொண்டவள்…
சிறு வயதில் இருந்தே கஷ்டங்களை மட்டுமே பார்த்து வளர்ந்ததால் எதிர்பார்ப்பு என்ற ஒன்று அவள் வாழ்க்கையில் இல்லவே இல்லை… இன்று நடப்பதை நாம் எப்படி தடுக்க முடியாதோ?? அதைப்போல் நாளை நடப்பதை நாம் மாற்றவும் முடியாது என்ற கொள்கையை உடையவள்…
மூன்று வருடங்களாக கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறாள்… அதுவும் தணலன் சிபாரிசில் தான் சென்றாள்… சிறிதும் விருப்பமில்லாத இந்த திருமணத்தில் வலுக்கட்டாயமாக தன்னை திணித்துக் கொண்டிருக்கிறாள்…
அதற்கு ஒரே காரணம் அவளின் தாய் மோகனா மட்டுமே… அவரின் கண்ணீரே இவளை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைத்தது…
அவளுக்கு ஒரே வாரத்தில் திருமணம் என்பதே அதிர்ச்சி என்றால்… அதிர்ச்சியிலும் பேரதிர்ச்சி தணலனுடன் திருமணம் என்பதே…
இந்த நொடி கூட அவளால் தணலனை தன் கணவனாக மனதளவில் ஏற்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறாள்…
தன் நினைவுகளில் உழன்று கொண்டிருந்தவளுக்கு, “பொண்ணையும் மாப்பிள்ளையையும் மணக்கட்டையில் உட்கார வைங்கோ” என்ற குரலில் தான் சற்று நிமிர்ந்து பார்த்தாள்…
வராண்டாவில் இருந்த நாற்காலிகள் அனைத்தையும் ஒதுக்கிவைத்து விட்டு நான்கைந்து ஜமுக்காளத்தை விரித்து அதில் முதன்மையாக மணக்கட்டையை வைத்து அதன் மேல் வெள்ளை நிற துணியை போட்டு மூடி வைத்திருந்தனர்…
“என்ன நடக்கப் போகிறது?” என் திகைத்து பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகில் வந்து நின்றார் அவளின் மாமியார் சௌந்தரவள்ளி…
“வாம்மா… வந்து அங்கே உட்காரு… சொந்தக்காரங்க எல்லாரும் சீர்வரிசை கொண்டு வந்திருக்காங்க” என்றவரை புரியாத பார்வை பார்த்தாள்…
ஆம்… இந்த சடங்குகள் எல்லாம் அவளுக்கு புதிது... அவள் தான் அவர்கள் இனமே இல்லையே… குழப்பமான முகத்துடனே அவள் எழுந்து நிற்க, அவளுடன் சேர்ந்து எழுந்து நின்றான் தணலன்…
வேறு வழியின்றி இருவருமே அந்த மணக்கட்டையில் அமர, “அத்தாச்சி நீங்க முதல்ல ஆரம்பிங்க” என யமுனாவின் தாயை அழைக்க… கண்ணீருடன் அங்கு வந்து நின்றார்…
அவர் செய்வதற்கு சீர்வரிசை என்று பெரிதாக எதுவுமில்லை… இதுவரை யமுனாவிற்கு சேர்த்து வைத்த முப்பது பவுன் நகையும், அவர் இருக்கும் வீடு மட்டுமே யமுனாவிற்கு இனி சொந்தம்…
பண்டபாத்திரங்கள் மட்டும் கடன் வாங்கி அங்கு முன்னால் வைத்திருந்தார்… ஏழு வகையான இனிப்பு வகைகளும், பதினோரு வகை காரவகைகளும் பித்தளை பாத்திரத்தில் சீராக முன்னிறுத்தி வைத்திருந்தார்…
தணலன் வீட்டின் பணவசதியின் முன்பு அவர் செய்த சீரெல்லாம் ஒன்றுமில்லை என்றாலும்… யமுனாவிற்கு அதெல்லாம் மிகப்பெரியது… தன் தாயின் வேர்வைத்துளிகள் அதில் கலந்திருக்கிறது என்பது புரிந்தது…
“அம்மாஆஆ” என கலங்கிய குரலில் அழைத்த மகளை வாஞ்சையுடன் பார்த்தவர், “நீ தீர்க்காயுசா புருஷன் குழந்தைகளோட வாழணும் பதினாறு செல்வமும் பெற்று பெருவாழ்வு வாழணும்டா” என வாழ்த்தி இருவருக்கும் திருநீறு வைத்தவர் அங்கிருந்த நகன்று விட்டார்…
அவருக்கு அடுத்ததாக தணலனனின் அத்தைகள் சீர் செய்ய வந்தனர்… தங்கத்தாலும், வைரத்தாலும் வாரியிறைக்க… நகைகளே ஒரு புறம் ஜொலிக்க ஆரம்பித்தது…
வேதாச்சலத்தின் உறவினர்கள் அனைவரும் சீர்செய்து முடித்து விட, தணலனோ தன் தமக்கையை ஏறிட்டுப் பார்த்தான்…
“அக்கா நிறையை அழைச்சிட்டு வா” என்ற குரலில் அனைவரும் அவனைத்தான் பார்த்தனர்…
வீட்டில் நடக்கும் விஷயம் என்ன என்பதை அறிந்தபின்பும் நிறையை அழைப்பது சரியா?? வீட்டினர் திகைத்து நிற்க… வேலைக்கார பெண் கோமதிக்கு கண் காட்டினாள் தேவசேனா…
அவளின் கண்ணசைவில் மாடியில் வலதுபக்கம் இருந்த அறையை நோக்கி சென்றவள், ஒரு அறையின் முன்பாக கதவை தட்டிக் கொண்டிருந்தாள்…
கதவு திறப்பதற்கான வழியே இல்லை… “அக்கா நீ போய் கூப்பிட்டு வா” என்ற தணலனின் வார்த்தையில் “ப்ச்ச்ச்… நீ கொடுக்கிற செல்லம் தான் அவ இப்படி ஆடுறா” என அங்கிருந்த வேகமாக அறையை நோக்கி சென்றாள் தேவசேனா…
“நிறை கதவை திற” என அதிகாரமாக அழைக்க…
“முடியாது” என தீர்க்கமான குரலில் உள்ளிருந்தே பதில் கூறினாள் நிறை…
“ப்ச்ச்… நிறை உன்கிட்ட கல்யாணம் ஏன் நடந்ததுன்னு காரணம் எல்லாமே சொல்லிட்டேன்… இதுக்கு மேல உனக்கு என்ன தான் வேணும்… வா கீழே” என சற்று சத்தமாக கூப்பிட…
அவர் கூப்பிடுவது கீழே இருக்கும் உறவினர்கள் அனைவருக்குமே கேட்டது… யமுனாவிற்கும் கேட்டது…
“ப்ச்ச்ச்… நிறை வெளியே வரப்போறீயா இல்லையா?? கதவை உடைச்சிட்டு உள்ளே வர எனக்கு அஞ்சு நிமிஷம் போதாது” என கோபத்தில் கத்தினாள் தேவசேனா…
சட்டென கதவு திறந்து கொள்ள… வெளியே வந்து நின்றாள் பதினொரு வயது பதுமையவள்…
அழகிய வட்டமுகமோ கோபத்தில் ஆற்றாமையிலும், கண்ணீரிலும் சிவந்திருந்தது… அழுகையுடனே, “என்னை என் அப்பாக்கிட்ட இருந்த பிரிக்கிற அவுங்களை பார்க்கிறதுக்கு நான் வரணுமா… அதுக்கு நான் சாகுறதே மேல்” என வார்த்தையை அழுகையுடனே சொல்லி முடிப்பதற்குள்… தணலன் சட்டென அங்கிருந்த மணக்கட்டையில் இருந்து எழுவதற்கும் சரியாக இருந்தது…
அவனின் எண்ணமெல்லாம் அவன் மகளைப் பற்றித்தான்… ஆம் இது அவனுக்கு இரண்டாவது திருமணம் தான்… யமுனாவை விட்டு இரண்டடி கூட வைத்திருக்க மாட்டான்… இருவரின் ஆடைகளுடன் சேர்த்து பிணைக்கப்பட்ட மூன்றுமுடிச்சு அவனை தடுத்து நிறுத்தியது
தவிப்புடன் யமுனாவை பார்க்க… அவளோ அந்த முடிச்சை அவிழ்க்கும் எண்ணத்தில், ஆடையின் மேல் கை வைக்கப்போன நேரத்தில் சட்டென அவளின் கையை பிடித்துக் கொண்டார் வேதவள்ளி…
“என்ன ஆத்தா நீ… முடிச்சை அவிழ்க்கப் போற” என சற்று கோபத்துடன் சொன்னவரை பரிதவிப்பாய் பார்த்தாள் யமுனா…
தணலனுக்கு நிறையை பார்க்க வேண்டும் என்ற அவசரத்தில் தன் தோளில் கிடந்த மேல் துண்டினை சட்டென எடுத்தவன், யமுனாவின் தோளில் மாலையாக போட்டுவிட்டு அவளை அத்தனை உறவினர்கள் மத்தியில் தனித்து விட்டு விட்டு மாடியறையை நோக்கி சென்று விட்டான்…
இல்லறம் : தன் துணையை இன்பத்திலும், துன்பத்திலும் பிரியாதிருப்பதே இல்லறம் என்ற நல் அறமாகும்…