பதினைந்து நாட்கள் மருத்துவமனையில் இருந்து ஒரு வழியாக வீடு வந்த தணலனை அவனின் சொந்தங்களும், பந்தங்களும் தங்கத்தட்டில் வைத்து தாங்காத குறையாக வரவேற்றனர்…
தேவா ஆரத்தி எடுத்து தணலனை உள்ளே வரவேற்க, நிறையோ பல நாட்களுக்கு பிறகு அன்று தான் முகத்தை சந்தோஷமாக வைத்திருந்தாள்…
“உள்ளே வாப்பா” என்ற வேதவள்ளியின் அழைப்பில், வீட்டிற்குள் நுழைந்த தணலனுக்கு, அத்தனை சொந்தங்கள் இருந்தும்… விழிகளில் ஒரு வித தேடலும், தவிப்பும் இருப்பதை உணர்ந்தான்…
ஏனோ மனதில் அவனையும் அறியாமல் ஒரு வித வெறுமை குடியேறியது… அவன் மனதின் வெறுமை முகத்தில் அப்பட்டமாக தெரிய, தேவாவோ அவன் முகத்தில் தெரிந்த மாற்றத்தை தான் உற்றுக் கவனித்தாள்…
“என்ன வேணும் தணலா? ஏதாவது வேணுமா??”
“யமுனா” என பட்டென சொன்னவனின் வார்த்தையில், அதுவரை ஆங்காங்கு நின்றிருந்த சொந்தங்கள் ஒன்று கூட ஆரம்பித்தனர்…
முதியவர்கள் முதல் இன்றைய தலைமுறையினர் வரை அனைவரும் வெறுப்பு உமிழ ஒரே பெயரை தான் உச்சரித்தனர்…
“என்னப்பா நீ? அந்த ராசியில்லாதவளை போய் நினைச்சிட்டு இருக்க?” என வயது எழுபது வயதை கடந்த பாட்டியின் வார்த்தையில் புருவம் இடுங்க பார்த்தான்…
“ராசியில்லாதவளா?” என இதழ் முணுமுணுக்க,
“ஆமா.. பின்னே என்னப்பா. வீட்டுக்கு வந்த மகராசி வீட்டை வாழ வச்சா பரவாயில்லை… இப்படியா உன்னை கொண்டு ஹாஸ்பிடல்ல படுக்க வைப்பா… அவ அக்காவை காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்ட. அவளும் உன்னை ஹாஸ்பிடலுக்கு தான் கொண்டு போனா… இப்ப இவ உன்னை எமனுக்கே தாரை வார்த்து கொடுக்கப் பார்த்தா… போதும்பா இந்த தரித்திரம் புடிச்சவ நமக்கு” என்றவரின் ஒவ்வொரு வார்த்தையிலும் எதிரில் கேட்டுக் கொண்டிருந்தவனின் முகம் மாற ஆரம்பித்தது…
“போதும்ம்ம்… நிறுத்துறீங்களாஆஆஆ” என்ற கர்ஜனைக்குரலில் அதுவரை இருந்த சலசலப்பு மறைந்து, அவ்விடமே அமைதியாகியது…
“என்ன வாய் இருக்குன்னு பேசிக்கிட்டே இருக்கீங்க?… யமுனாவை எங்கே?.. எங்கே போனா அவ?? யமுனாஆஆஆ” என உடல் நிலையையும் பொருட்படுத்தாமல், அந்த இடமே எதிரொலிக்க கத்த ஆரம்பித்தான்…
“அவ இங்கே இல்லை” என்ற சௌந்தரவள்ளியை திரும்பி பார்த்தவனின் விழிகளில் அப்படியொரு ஜுவாலை தெரிந்தது…
கோபத்தின் உச்சத்தில் முகமோ செந்தணலை அள்ளி தட்டினாற் போன்று சிவக்க ஆரம்பித்தது…
“இங்கே இல்லைன்னா?” என பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டவன், தன் கோபத்தை அடக்க பெரும்பாடு பட்டான்…
“அவுங்க அம்மா வீட்டுல இருக்கா. இப்போ நீ எதுக்கு கோவப்படுற?” என்ற தேவாவை முறைத்துப் பார்த்தான்…
“எதுக்குக் கோபப்படுறேனா? ஏன்னு உனக்கு இன்னுமா புரியலையாக்கா.. நான் சாகத்தானே கிடந்தேனே… செத்துப் போகலையே” என்ற வார்த்தையில் துடிதுடித்துப் போனாள் தேவா..
“என்னடா இப்படியெல்லாம் பேசுற?”
“நான் தான் அவுங்களை எங்கப்பா கண் முன்னாடி இனி வராதீங்கன்னு சொன்னேன்” என்ற நிறையை திரும்பி பார்த்தவனின் விழிகளில் கோபத்தை தாண்டி ஒரு வித வலி தான் தோன்றியது…
அந்த வலி நிறைந்த சொற்களில், அடுத்துப் பேசிட நினைக்கும் வார்த்தைகள் கூட தடுமாற ஆரம்பித்தது…
“யார் என்ன சொல்லியிருந்தாலும் அவள் எப்படி இந்த வீட்டை விட்டு வெளியேறலாம்?” என யமுனாவின் மீது சிறு கோபமும் தோன்றியது…
அங்கிருக்கும் அனைவரையும் ஒரு முறை பார்த்தான்.. இதில் நிறைக்கும் மட்டும் பங்கு இருப்பதாய் தோன்றவில்லை. பெரியவர்கள் யாரும் ஏதும் சொல்லியிருப்பார்களா? என்ற எண்ணமும் அந்நிமிடத்தில் தோன்றியது…
“இங்கே இருக்கிற எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க.. நான் கட்டுன தாலி யமுனா கழுத்துல இருக்கிற வரைக்கும்… அவளுக்கும் எனக்குமான பந்தத்தை யாராலும் அறுத்து எறிய முடியாது… அப்படி யாருக்காவது நினைப்பு இருந்தா அதை அடியோடு மறந்திடுங்க… பெத்த பொண்ணாவே இருந்தாலும்” என அழுத்தமாக நிறையை பார்த்துக் கொண்டே சொன்ன தணலன் அனைவருக்கும் சற்று புதிதாக தெரிந்தான்…
அவன் சொல்லிய வார்த்தையிலும் அழுத்தம் நிறைந்த பார்வையிலும், அத்தனை பேரும் வாயடைத்து நின்றனர்…
ஏனோ அவன் இருக்கும் நிலைமையில் இவ்வளவு கோபம் அவனின் உடல்நிலைக்கு நல்லதல்ல என்று எண்ணிய வேதவள்ளி தான் தணலனை சற்று சமாதானப்படுத்த முன் வந்தார்…
“சரிப்பா ஒன்னும் பிரச்சினை இல்லை.. நீ போய் மாத்திரை போட்டு ரெஸ்ட் எடு. அப்புறம் இதைப்பத்தி எல்லாம் பேசிக்கலாம்” என சொல்லிய வரை அழுத்தமாக பார்த்தான்…
அவன் இதழ் மொழி உதிர்க்காத ஆயிரம் வார்த்தைகளை, அவன் விழிப்பார்வை பேசியது…
“நான் பதினைந்து நாட்கள் இல்லாத நிலையில், என் மனைவிக்கு இந்த நிலை என்றால்??.. நான் இறந்திருந்தால்” என்ற கேள்வியை தொக்கி நின்ற பார்வையின் அர்த்தம் புரியாமல் திணறித்தான் போனார் வேதவள்ளி…
“யப்ப்பாஆஆ.. தணலா” என தவிப்புடன் பார்த்த வேதவள்ளியின் கையை ஆறுதலாக பிடித்தவன், “நான் இன்னைக்கு யமுனா வீட்டுல தங்கிக்கிறேன்” என்றவனின் வார்த்தையில் கோபத்தில் முகம் கறுக்க ஆரம்பித்தது தேவாவிற்கு…
“உனக்கென்ன பைத்தியமா? அவளை வேணும்னாலும் இங்கே வரவைக்கிறேன்.. நீ ஏன் அங்கே போகணும்?. அவளுக்காக நீ இறங்கிப் போறீயா?” என கேட்ட தமக்கையை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன் கேட்ட கேள்வியில் ஆடித்தான் போனாள் தேவா…
“தணலாஆஆ” என வார்த்தைகள் திக்கித் திணறிய,
“ஆமாக்கா… அவ என் பொண்டாட்டி அவளுக்காக நான் இறங்கிப் போறதில் எந்த தப்பும் இருக்கிறதா எனக்குத் தோணலை” என்ற வார்த்தையில் செருப்பாற் அடித்தாற் போன்று உணர ஆரம்பித்தாள்…
“தணலா.. நான்” என்றவளை தன் வலது கரம் உயர்த்தி தடுத்து நிறுத்தியவன்,
“ஆமா க்கா… நான் கேட்டதுல என்ன தப்பு?. அவ என்னை நம்பி இந்த வீட்டுக்குள்ள வந்தவ.. அவளுக்கு என்னால பாதுகாப்பு கொடுக்க முடியலன்னா.. நான் தான் அவளைத்தேடி போகணும்.. அவ என்னைத் தேடி வரணும் இல்லை… புருஷன் பொண்டாட்டி உறவுக்கு ஈகோ தேவையில்லை.. யமுனாக்கிட்ட ஈகோ பார்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. எங்களோட விருப்பு, வெறுப்புக்குள்ள நீங்க யாரும் வரவேண்டிய அவசியமும் இல்லை” என்றவன் நிறையை அழுத்தமாக பார்த்தான்…
அவளும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். “நான் உன்னோட அம்மாச்சி வீட்டுக்குப் போறேன். நீ வர்றீயா?” என கேட்டவனுக்கு, ‘இல்லை’ எனும் விதமாய் தலையாட்டியவள்… வேகமாக தன்னறைக்கு சென்று விட்டாள்..
வேகமாக மாடியேறி செல்பவளை பார்த்தவனுக்கு நீண்ட பெருமூச்சு தான் வெளிவந்தது… புரிந்து கொள்ள இயலாத பருவம் இது? சிறிது பிசகினாலும், உறவு மட்டுமல்ல உயிர்களையும் இழக்க வேண்டி வரும் என்ற அச்சம் அவனுக்குள் எப்பொழுதும் இருக்கின்றது…
மனதில் இருப்பதை அப்படியே பேசிவிடும் நிறையால் சிறு தோல்வியை கூட ஏற்றுக் கொள்ள முடியாது…
தன் தாயின் அன்பு, அழகு, அத்தையின் பிடிவாதம், வீம்பு, பொறாமை, தந்தையின் கம்பீரம், துணிவு என அனைத்தையும் ஒருங்கே பெற்றவளுக்கு ‘தான்’ என்ற கர்வமும், அகந்தையும் மிக அதிகம்…
‘தன்னால் எதுவும் முடியும்’ என்ற எண்ணமே அவளை யமுனாவிடம் எட்டி நிறுத்தி வைத்தது. சில கடந்த கால நிகழ்வுகளும் யமுனாவின் மேல் வெறுப்பை உமிழ வைக்கின்றது…
அந்த வெறுப்பு எப்பொழுது விருப்பமாகவும், பாசமாகவும் மாறும் என்பது இன்றுவரை புரியாத விடுகதையாகவே இருந்து வருகிறது…
விடையறியா வினாவாக அவள்?
அந்திமாலைப் பொழுதில் தன் வீட்டின் முன்பு, ஒன்று முதல் பனிரெண்டு வகுப்பு பிள்ளைகளுக்கு டியூஷன் எடுத்துக் கொண்டிருந்தாள் யமுனா…
கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பாகவும் அவள் டியூஷன் எடுத்துக் கொண்டிருப்பதால் வழக்கமான மாணவர்கள் வந்து அமர்ந்திருந்தனர்…
வீட்டின் முன்னால் இருக்கும் திண்ணையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தவள், வலது பக்கம் வந்து நின்ற தணலனை கவனிக்கவேயில்லை…
காரை தூரமாக நிப்பாட்டி விட்டதால் காரின் சத்தமும் யமுனாவிற்கு கேட்கவில்லை… அவளைத் தவிர அனைவரும் கவனித்தனர் அவனை சிறு சிரிப்புடன், அந்த இடத்தில் பிறு சலசலப்பும் ஏற்பட்டது..
“தன் முன்னால் இருந்த பையனுக்கு வினா எழுதிக் கொடுத்துக் கொண்டே, அவனைப் பார்க்க, அவன் விழியோ தன்னைத் தாண்டி தன் முதுகுப்புறம் இருப்பதை அப்பொழுது தான் உணர்ந்தாள்…
“யாரைப் பார்க்கிறான் இவன்?” என்ற கேள்வி உந்த, சட்டென திரும்பி பின்னால் பார்த்தவளின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தது…
“தான் காணும் காட்சி நிஜமா? இல்லை கனவா?” என இமைகள் படபடக்க, உடலில் லேசான நடுக்கம் தோன்றிட, முகம் முழுவதும் அச்சம் பரவிட அவனை ஏறிட்டுப் பார்த்தாள்…
மௌன பரிபாஷைகள் இருவருக்குள்ளும் நடந்தேறிய அப்பொழுதில், எங்கிருந்தோ கேட்ட குக்கர் விசில் சத்தத்தில் இருவரும் தங்கள் சுயம் கலைந்தனர்…
“வாங்க” என பொதுவாக அழைத்தவளுக்கு, அடுத்து என்ன பேசுவதென்றே தெரியவில்லை…
தமிழ்மொழி எழுத்துக்கள் அத்தனையும் மறந்து போக, பாஷையறியா பாவையவள் திக்கித் திணறினாள் தலைவனின் முகம் கண்டு…
அவனோ அவளின் நிலையை உணர்ந்து மென் சிரிப்புடன், “டியூஷன் முடியுறதுக்கு எவ்வளவு நேரமாகும்?” என தானே தன் மௌனத்தை கலைத்தான்..
“இன்னும் ஒரு மணி நேரமாகும்” என பதில் சொல்லியவளின் உள்ளங்கை வேர்த்துக் கொட்ட ஆரம்பித்தது…
“ம்ம்ம்.. சரி” என இயல்பாக வீட்டிற்குள் சென்றுவிட, இவள் தான் இருக்கும் இடத்தில் அமரவும் முடியாமல் எழுந்து செல்லவும் முடியாமல், ‘எதற்காக வந்திருக்கிறார்?’ என்ற காரணமும் புரியாமல் குழப்பமான மனநிலையில் அமர்ந்திருந்தாள்…
உள்ளே நுழைந்த தணலனை பார்த்த மோகனாவிற்கு சந்தோஷத்தில் பேச்சே வரவில்லை. நேற்று வரை தன் மகளின் வாழ்க்கையை எண்ணி பயத்திலும், தவிப்பிலும் இருந்தவருக்கு தணலனை பார்த்த பொழுது தான் மூச்சே வந்தது எனலாம்…
ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து குடிப்பதற்காக கொடுத்தவர், நேராக வீட்டிற்கு வெளியே ஓடிச்சென்றவர் யமுனாவிடம் அனுமதி கூட கேட்காமல், “டேய்ய்… பசங்களா இன்னைக்கு டியூஷன் லீவு… ஓடுங்க” என்றதும், சிறையில் அடைப்பட்ட பறவையை போல் அனைவரும் தெறித்து ஓட ஆரம்பித்தனர்…
“அம்மா நீ என்ன பண்ணிட்டு இருக்க?” என கோபமாக கேட்ட யமுனாவின் கேள்வியை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை மோகனா…
“நீ வாடி முதல்ல.. அழுது வடிஞ்சிக்கிட்டு உட்கார்ந்திருக்கா பாரு.. மாப்பிள்ளை வந்திருக்கிற நேரமா பார்த்து” என்றவரை முறைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவள் அங்கிருந்த கண்ணாடியில் தன்னை பார்த்தாள்…
நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னைப் பார்க்கிறாள்… எப்பொழுதும் வீட்டில் போடும் பழைய நையிட்டி தான் போட்டிருந்தாள்… அதுவும் வெளுத்துப்போன கலரில்…
பெரிதாக எந்த மேக்கப்பும் இல்லை. எப்பொழுது முகத்திற்கு பவுடர் போட்டாளோ? அவளுக்கே நியாபகமில்லை… எண்ணெய் வழியும் முகத்துடன், கன்னத்தில் எப்பொழுதும் இருக்கும் பரு, இன்றும் இருந்தது…
தலைமுடியை புத்தர் போன்று முடிந்து அதில் ஒரு பென்சிலை வேறு குத்தி வைத்திருந்தாள்… அவளைப் பார்க்கும் பொழுது அவளுக்கே சகிக்கவில்லை… சட்டென அந்தப் பென்சிலை உருவி எடுக்க, அடங்க மறுத்த சிகை அவள் தோளில் தவழ்ந்து அவளை சற்று அழகியாக காட்ட முயன்றது…
“யமுனா” என கத்தி அழைத்த தன் தாயின் குரலில் மோன நிலை கலைந்தவள், எதிரில் பார்க்க அங்கு தணலன் இருப்பதற்கான அறிகுறியே இல்லை…
“எங்கே போனாங்க?” என ஒரு வித தேடலுடன் அடுப்படியை நோக்கி சென்றாள்…
“அடியேய்ய்… என்ன மசமசன்னு நின்னு பார்த்துட்டு இருக்க? இந்தா இந்த காஃபியை கொண்டு போய் மாப்பிள்ளை கிட்ட கொடு. நான் முறுக்கு, மிக்சரும் எடுத்துட்டு வர்றேன். மாப்பிள்ளை உன் ரூம்ல தான் இருக்காங்க” என அவள் கேட்க நினைத்த கேள்விக்கும் பதில் சொல்லிவிட்டு சென்றவரை பார்த்து நீண்ட பெருமூச்சு தான் வந்தது…
“அவர் எதுக்கு வந்திருக்கார்னே தெரியலை. இதுல இந்த அம்மா வேற தாம்தூம்னு குதிக்கிறாங்க. ப்ச்ச்” என சலிப்புடன் கதவை திறந்தவளின் விழிகளோ சட்டென இறுக்க மூடிக் கொண்டது தான் கண்ட காட்சியில்…