கங்காவினை ஒரு புறம் கவனித்துக் கொண்டு, தேவாவின் திருமண ஏற்பாடுகளையும் ஊரே மெச்சும் அளவிற்கு செய்தான்.
மணிவண்ணன் தேவா இருவருடைய திருமணமும் நல்லபடியாக நடந்து முடிந்தது. தேவாவும் மணிவண்ணனுடன் வாழ்வதற்காக அவர்கள் வீட்டிற்கு தான் சென்றாள். அங்குதான் பிரச்சனையே ஆரம்பித்தது…
மூன்று நாட்கள் நன்றாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் தணலனை பற்றி அவர்கள் பேசிய பேச்சுக்களை இப்பொழுது நினைத்தாலும் தேவாவிற்கு கோபம் தான் வரும்.
மூன்றாவது நாள் மறுவீட்டிற்கு புறப்படுவதற்காக அறையில் தயாராகிக் கொண்டிருந்தனர் தேவாவும், மணிவண்ணனும்…
மணியின் சித்தியின் வீடு பக்கத்து ஊர் என்பதால் அடிக்கடி வந்து போவார். அன்றும் அப்படித்தான் வந்திருந்தார்.
“என்னக்கா பெரிய இடத்து பொண்ணு எப்படி நடந்துக்கிறா?” என விசாரிப்பதை போல் கேட்டவர், அடுத்தவர் வீட்டை நோட்டம் பார்த்தார்…
“ம்ம்ம். மூணு நாளுல ஒருத்தரை பத்தி என்னடி தெரிஞ்சிக்க முடியும். நல்லாத்தான் நடந்துக்கிறா. பட்டும் படாமலும் எல்லார்க்கிட்டையும் பேசுறா. என்ன பண்றது மணி காதலிக்கிறேன்னு வந்து நின்னுட்டான் அதான் கட்டி வச்சோம்”.
“ஏன்க்கா பெரிய இடத்து பொண்ணுங்க அப்படி இப்படின்னு கேள்விப்பட்டிருக்கேன் நானு. நீ நல்லா விசாரிச்சிப் பார்த்தீயா?”.
“அப்படி, இப்படின்னா என்னடி சொல்ல வர்ற?”
“அதான்க்கு வெளிநாட்டுக்கு போய் கண்ட பழக்கத்தையும் பழகிட்டு வந்திடுவாங்களே. அதைத்தான் கேட்டேன்”
“ப்ச்ச். அப்படியெல்லாம் இல்லைடி. இவ ரொம்ப நல்லா பொண்ணா தான் இருக்கா. என்ன கொஞ்சம் துடுக்கா பேசுறா. வேற ஒன்னுமில்லை”.
“என்னக்கா நீ அறிவு இல்லாத மாதிரி பேசுற. அவளை பத்தி நானும் விசாரிச்சிட்டுத் தான் வந்திருக்கேன். அவ தம்பி பொண்டாட்டியை பத்தி சேதி தெரியுமா உனக்கு?”.
“அவுங்களை பத்தி நம்மளுக்கு எதுக்குடி. நம்ம வீட்டுக்கு வர்றவ நல்லவளா இருக்காளான்னு மட்டும் பார்ப்போம்?” என அந்த பேச்சை கத்தரித்து முடிக்க பார்த்தார் மணியின் தாய்.
“நம்மளுக்கு எதுக்கா? அவ தம்பி சரியில்லை க்கா. இல்லைன்னா சொந்த வீட்டுல அவன் இருக்கும் போதே. நைட்டுல இன்னொருத்தன் உள்ளே நுழைவானா?. ராத்திரி முழுக்க அந்தப் பையனும், அவன் பொண்டாட்டியும் ரெண்டு பேரும் ஒரே ரூம்ல தான் இருந்தாங்களாம். அவுங்க வீட்டுல வேலை பார்க்கிற பொண்ணு தான் எனக்குச் சொல்லிச்சி”…
“என்னடி சொல்ற? இதெல்லாம் எனக்குத் தெரியாதே?”.
“ஆமாம்மா. பெரிய வீட்டுல நடக்கிற விஷயத்தை வெளியே சொல்லிட்டுத் தான் மறுவேலை பார்ப்பாங்க பாரு. எவ்வளவு மானங்கெட்ட பையனா இருப்பான் அவ தம்பி. அவனே இப்படின்னா இவ” என்பதற்குள்,
“போதும் நிறுத்துங்க” என்ற கம்பீரக்குரலில் திரும்பி பார்க்க அங்கு கோபத்தின் உச்சத்தில் நின்று கொண்டிருந்தாள் தேவா.
அறையை விட்டு வெளியே வந்தவள், வந்தவர்களை ‘வாங்க’ என சொல்வதற்காக வேகமாக வெளியே வந்தாள். ஆனால் அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை காதில் கேட்டதும் சட்டென்று ப்ரேக் அடித்தாற் போன்று நின்று விட்டாள்…
“என்ன பேசிட்டு இருக்கீங்க நீங்க?. என் தம்பியையும் அவன் பொண்டாட்டியையும் பத்தி பேசுற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தா?. வாய் இருக்குன்னா யாரைப் பத்தியும் தப்பா பேசுவீங்களா?” என ஆத்திரத்தில் சரமாரியாக இருவரையும் தன் நாக்கு என்னும் சாட்டையால் சுழற்றி வீச ஆரம்பித்தாள்…
“இல்லை தேவா நீ விடு. அவ ஏதோ புரியாம பேசுறா” என அவளின் மாமியார் அவளை சமாதானம் செய்ய முயன்றிட, அவரையும் சேர்த்து முறைத்துப் பார்த்தாள் தேவா…
“நீங்க பேசாதிங்க அத்தை. அவுங்க பேசும் போது எல்லாத்துக்கும் மண்டையை தானே ஆட்டினீங்க” என அதிகாரமாக கேட்க, தேவாவின் பதிலில் மணியின் அம்மாவிற்கும் கோபம் சுருக்கென வந்தது.
யார் இவள்? நேற்று தன் வீட்டிற்கு வந்து விட்டு, இன்று தன்னையே அதிகாரம் செய்வதா? என பொதுவான மாமியாரைப் போல் யோசித்தவர். பதிலுக்கு தேவாவை முறைக்க ஆரம்பித்தார்…
இவர்களின் சத்தம் கேட்டு அறையை விட்டு அப்பொழுது தான் வெளியே வந்தான் மணி.
“என்னாச்சி தேவா?” என்றவனையும் சேர்த்து முறைத்துக் கொண்டு நின்றாள் தேவா…
தன் பையன் தன்னை தவறாக நினைக்கக்கூடாது என்றெண்ணி, “ஒன்னுமில்லை மணி. நீங்க மறுவீட்டுக்குப் போயிட்டு வாங்க” என மெல்லிய குரலில் பேசிய தன் மாமியாரை தான் எரிச்சல் மீதூற பார்த்தாள்…
“என்ன ஒன்னுமில்லை. எதுக்கு இப்படி பூசி மொழுகுறீங்க?” என கோபத்தில் எகிற,
“ப்ச்ச். தேவா அதான் ஒன்னுமில்லை விடுன்னு சொல்றேன்ல. நீ ஏன் அதையே புடிச்சி தொங்கிட்டு இருக்க?. சின்ன விஷயத்தை ஏன் இப்படி பெருசாக்குற?” என்ற மாமியாரை அற்ப புழுவை போல் பார்க்க ஆரம்பித்தாள்…
“என்ன ஒன்னுமில்லை. ஹான் என்ன ஒன்னுமில்லை. நீங்க பேசினதெல்லாம் நான் கேட்டுட்டு தான் இருந்தேன். எவ்வளவு வக்கிரமான புத்தி உங்க ரெண்டு பேருக்கும். ஒரு பொண்ணை பத்தி தப்பா பேசிட்டு. இப்போ ஒன்னுமில்லைன்னு எவ்வளவு சாதாரணமா பேசுறீங்க?”.
“தேவா விடு தேவா. அவுங்க தான் ஒன்னுமில்லைன்னு சொல்றாங்களே” என்ற மணியை தீயாய் முறைக்க ஆரம்பித்தாள்…
“என்னடி மன்னிப்பு. மன்னிப்புன்னு சொல்லிட்டு இருக்க?. நாங்க என்ன இல்லாதது, பொல்லாதது பற்றியா பேசினோம். ஆமாடி சொன்னோம். உன் தம்பி பொண்டாட்டி ஒரு நடத்தைக்கெட்டவ தான். சொந்த புருஷன் வீட்டுல இருக்கும் போதே, இன்னொருத்தன் கூட நைட் முழுக்க இருந்த அவளை என்ன பத்தினின்னா சொல்லமுடியும். தே*** ன்னு தான் சொல்லுவோம்” என மணியின் சித்தி சொல்லி முடிப்பதற்குள் அவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டாள் தேவா…
அவள் அறைந்த அறையில் அனைவரும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்று விட்டனர். மணி உள்பட…
மணிக்குமே தேவாவின் செயல் சற்று அதிகப்படி என்று தோன்றியதே தவிர. ஒரு பெண்ணின் வாழ்க்கையின் அந்தரங்கத்தை பற்றி தரக்குறைவாக பேசிய தன் தாயையும், சித்தியையும் கண்டிக்க தவறினான்…
“ச்சீ. நீயெல்லாம் ஒரு பொண்ணா?” என தேவா ஒருமையில் திட்ட ஆரம்பித்தாள்.
“ஏய்ய்ய்.. எவ்வளவு திமிரு இருந்தா என் தங்கச்சியை என் கண்ணு முன்னாடி அடிச்சிருப்ப?” என மணியின் தாய் தேவாவிடம் சண்டைக்கு வர்ற, அவரையும் கோபத்தில் முறைத்துக் கொண்டு நின்றாள்…
“என்ன அவ தப்பா சொல்லிட்டா. உள்ளதை தானே சொன்னா. சொந்த புருஷன் முன்னாடியே ஒரு பொண்ணு இன்னொருத்தன் கூட நெருக்காம இருந்தா. ஊர் அவளை வே*ன்னு தான் சொல்லும்” என்ற மணியின் அம்மாவையும் அடிப்பதற்காக கையை ஓங்கிவிட்டாள் தேவா..
மணி மட்டும் பிடிக்கவில்லை என்றால் கண்டிப்பாக அடித்திருப்பாள். அவ்வளவு கோபமும், ஆத்திரமும் தேவாவிடம் இருந்தது…
“தேவா நீ என்ன பண்றன்னு உனக்குப் புரியுதா?” என கோபத்துடன் கேட்ட மணியை முறைத்து கொண்டு நின்றாள் தேவா…
“அவுங்க என்ன பேசினாங்கன்னு உனக்குப் புரியுதா மணி?. ஒரு பொண்ணோட கேரக்டர் பத்தி அசிங்கப்படுத்துறாங்க” என தன் நிலையை பற்றி விளக்கமாக சொல்ல ஆரம்பிக்க.. அதற்குள் அவளை கையை உயர்த்தி தடுத்து நிறுத்தியிருந்தான்.
“அவுங்க உன்னைப் பத்தி பேசலையே?. உன் தம்பி பொண்டாட்டியை பத்தி தானே பேசுனாங்க. அதைப் போய் பெரிய பிரச்சனையா பண்ணிட்டு இருக்க?”
“என்ன உளறிட்டு இருக்க மணி?. அவளை பேசினா என்னை பேசினா என்ன? ஒரு பொண்ணோட ஒழுக்கத்தை பத்தி பேசுறாங்க”
“ப்ச்ச்.. தேவா ப்ளீஸ் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாதே. நானும் கேள்விப்பட்டேன். தினமும் ஒருத்தன் உன் தம்பி ரூம்க்கு போறான். உன் தம்பி அவன் வந்ததும் கொஞ்ச நேரத்துல வெளியே போறானாம். அவன் வெளியே போனதுக்கப்புறம் தான் உன் தம்பி ரூம்க்குள்ளேயே போறானாம். இதெல்லாம் என்ன தேவா?” என்றவனை அடிபட்ட பார்வை பார்த்தாள். தன் காதல் பொய்த்துப் போனதை எண்ணி மனதுக்குள் வெம்பி போனாள் தேவா…
“மணி. ஒரு பொண்ணு தப்பு பண்றவளா இருந்தா கட்டின புருஷன் முன்னாடியே பண்ணுவாளா? ஏன் இதெல்லாம் உங்களுக்குப் புரிய மாட்டேங்குது. கங்காவோட நிலைமை என்னன்னு தெரியாம ஏன் இப்படி பேசுறீங்க?”
“அப்படி என்ன பொல்லாத நிலைமை கங்காவுக்கு” ஒன் ஆத்திரமாக கேட்ட மணியின் தாயின் கண்களை பார்த்துக் கொண்டே, அடுத்து தேவா சொல்லிய மணி மட்டுமல்ல அவனின் ஒட்டு மொத்த குடும்பமும் சற்று ஆட்டம் கண்டு விட்டது…
“தேவா நீ என்ன சொல்ற?” என கண் கலங்கிய குரலில் கேட்ட மணியை இப்பொழுது வெறுப்பாக பார்த்தாள் தேவா…
“ஆமா. நான் சொன்னது தான் உண்மை. நீங்க சொன்ன மாதிரி அந்த ரூம்ல அவன் மட்டுமில்லை. நானும் கங்கா கூட தான் இருந்தேன். ஒரு பொண்ணோட வலியை பத்தி கவலைப்படாம, கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாம நீங்க பேசின வார்த்தைக்கு ரொம்ப தாங்க்ஸ் மணி. இன்னைக்கு கங்காவை பத்தி பேசின அதே வாய் நாளைக்கு என்னைப் பத்தி பேசுறதுக்கு ரொம்ப நேரமாகாது.. நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன் இனிமேல் திரும்பி வரவேமாட்டான். உங்க காதலுக்கு என்னோட பரிசு” என்றவள் தன்னறைக்கு சென்று மிகப்பெரிய அட்டைப்பெட்டியை அவன் கையில் கொடுத்துவிட்டு வெளியே சென்று விட்டாள்…
தன் பெட்டி, படுக்கையோடு வீட்டை விட்டே வெளியே சென்று விட்டாள்…
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.