மற்ற நாள்களிலும் நிறையை பார்க்க முடியவில்லை. வார இறுதியில் மட்டும் பார்க்கும் படி இருந்தது. அப்பொழுதும் விடாமல் யமுனா நிறையை தேடி வர, அவள் வரும் பொழுதெல்லாம் அவமானப்படுத்துவதை போல் பேச ஆரம்பித்தாள் தேவா.
தீபாவளி அன்று நிறைக்காக பார்த்து பார்த்து வாங்கிய ஆடையை மோகனாவின் கண் முன்னால் வேலைக்காரியின் கைவசம் கொடுத்தாள் தேவா. அதைப் பார்த்த மோகனாவின் மனம் சில்லு சில்லாய் உடைய ஆரம்பித்து விட்டது.
அவளின் செய்கை பெரிய அவமானமாகவே எண்ணினார் மோகனா. இனிமேல் நாம் இங்கு வந்தால், ஜாடைப் பேச்சுக்களின் மூலம் தன்னை அவமானப்படுத்துவார்கள் என்று உறுதியாக நம்பினார். அதன் பின் அவர்களின் வருகையும் குறைந்தது. அவர்களின் மீது நிறை கொண்ட பாசமும் குறைந்தது…
யமுனாவும் தன் தாயின் பேச்சை கேட்டு படிப்பை ஒன்றை கையில் எடுத்தாள். அவ்வப்பொழுது நிறையை பார்த்தால் பேச முயற்சிப்பாள். ஆனால் விவரம் தெரிந்த நிறைக்கு யமுனாவின் பாசம் வெறும் நடிப்பாக தான் தோன்றியது.
அன்று அவள் நடந்து கொண்ட விதத்தை நினைத்து பார்த்தவளுக்கு அவளால் மறக்க முடியவில்லை. அதன் பின் உறவுகளில் விரிசல் விழுந்து இரு உறவுகளுக்கிடையில் பிரிவினை என்ற ஒன்று வந்து விழுந்தது…
அதன் பின் எல்லாமே நன்றாக சென்று கொண்டிருந்தது. தணலனுக்கு ஜாதகத்தில் கண்டம் வரும்வரை.
தணலன் ஜாதகத்தில் கண்டம் வரவில்லை என்றால் இன்றும் யமுனாவின் குடும்பத்தின் அருகில் கூட நிறை நெருங்கியிருக்க மாட்டாள்.
அந்தக் கண்டத்தினால் மட்டுமே யமுனா குடும்பத்தை முழுதாக ஏற்றுக் கொண்டது.
இதையெல்லாம் நினைத்துக் கொண்டிருந்த தேவாவின் கண்களில் கண்ணீர் வழிந்துக் கொண்டேயிருந்தது.
“அக்கா வீடு வந்திருச்சி” என்ற வார்த்தையில் அதுவரை தன் நினைவில் உழன்றவள் மெல்ல இறங்கி வீட்டிற்குள் நடக்க ஆரம்பித்தாள்…
தேவாவை அப்படி பார்ப்பதற்கே தணலனுக்கு வருத்தமாக இருந்தது. அவளை பெரிய வீட்டன் முன்னால் இறக்கிவிட்டு யமுனாவின் வீட்டிற்கு சென்று விட்டான்.
மதிய நேரம் என்பதால், மோகனா உறங்கிவிட்டார். தன்னறையில் விழிகளை மூடி படுத்திருந்தவனுக்கு கங்காவுடன் வாழ்ந்த வாழ்க்கையினை பற்றி நினைத்துப் பார்த்தவனின் விழியோரம் கண்ணீர் கசிந்தது.
எவ்வளவு ஆசையுடனும், விருப்பத்துடனும் கரம் பிடித்தான் கங்காவை. அவர்களின் காதலுக்கு எந்தவித தடையும் இருக்கக்கூடாதென தன் உயிரையும் துச்சமாக எண்ணி தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியே அனைவரையும் கல்யாணத்திற்கு சம்மதிக்க வைத்தான்.
எந்த நிலையிலும், கங்காவை யாரிடமும் விட்டுக் கொடுக்காமல் அவளை சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டான்…
நிறைக்கு மூன்று வயதாகும் நேரத்தில் தான், கங்காவிற்கு இருக்கும் பிரச்சினையை பற்றி தணலன் அறிந்தான்…
ஆம். எப்பொழுதும் மாதவிடாயின் பொழுது தோன்றும் மார்பக வலி, சில சமயங்களில் உச்சபட்ச வலியாக இருந்திருக்கிறது.
சாதாரண வலி தான் என தன்னைத் தானே தேற்றிக் கொண்ட கங்கா, இந்த வலியை பற்றி யாரிடமும் கூறவில்லை. தணலனிடம் கூட மறைத்தே வைத்திருந்தாள்…
ஆனால் அதையும் மீறி ஒரு நாள் தணலன் அறிந்து கொண்டான். அதுவும் வலியில் அவள் துடித்ததை பார்க்கும் பொழுது அது சாதாரண வலியாக அவனுக்கு தோன்றவில்லை.
இதை இப்படியே விடக்கூடாது என்று டாக்டரிடம் அழைத்துச் சென்றான். அவர்கள் எடுத்த ஸ்கேன் மூலமூம், ரத்த மாதிரியின் மூலமும் அறிந்து கொண்டான். கங்காவிற்கு இருப்பது சாதாரண வலியில்லை. மார்பக புற்றுநோயினால் வந்த வலி என்று.
அதுவும் இரண்டாம் கட்டத்தில் இருப்பதை அறிந்தவனுக்கு மனம், மூளை இரண்டுமே வேலை செய்யவில்லை. அதை அறிந்த நொடியில் இருந்து உள்ளுக்குள் சில்லு சில்லாய் உடைந்தாலும் கங்காவிற்கு முழு தைரியமும் கொடுத்தான்.
கங்காவிற்கு வேண்டிய சிகிச்சைகள் ஆரம்பிக்கும் பொழுது தான் மார்பகத்தை நீக்க வேண்டிய நிலைமை அவளுக்கு ஏற்பட்டதை அறிந்து கொண்டான். ஆனால் உடனே அதைச் செயல்படுத்த கங்காவே பெரிய தடங்கலாக இருந்தாள்.
ஒவ்வொரு பெண்ணும் தான் அழகு என்று பிரதானமாக எண்ணுவதில் மார்பகமும் ஒன்று. அதை நீக்கிவிட வேண்டுமென்பதை கங்காவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மிகவும் தவித்துப் போனாள். அவளுக்கு இப்பொழுது யாராவது ஆறுதல் சொல்லியே ஆகவேண்டும் என சென்னையில் படித்துக் கொண்டிருந்த யமுனாவிற்கும், மோகனாவிற்கும் தகவலை சொல்லி வரசொல்லியிருந்தான்…
கங்காவின் நிலைமையை புரிந்தவர்கள் சில காலம் கங்காவை காரைக்குடியில் இருந்து சென்னைக்கு அழைத்து பத்திரமாக பார்த்துக் கொண்டாலும் கங்காவினால் டாக்டர் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தாள்.
சில நாட்கள் அழுவாள் சில நாட்கள் கதறுவாள். சில நாட்கள் புலம்புவாள். ஆனால் தணலனின் மீது அதீத அன்பு வைத்திருந்தாள்.
கங்காவிற்கு அறுவை சிகிச்சை மூலம் மார்பகங்கள் அகற்றப்பட உள்ளுக்குள் மொத்தமாய் உடைந்து போனாள்…
கங்கா ஒரு வித மன அழுத்தத்திற்கே சென்று விட்டாள். முப்பொழுதும் எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். குழந்தையை பற்றி நினைப்பதை கூட விட்டு விட்டாள்.
தணலனுடன் சாதாரணமாக பேசுவதையே நிறுத்திவிட்டாள். அவன் ஏதாவது கேட்டால் கூட விட்டேற்றியாக பதில் சொல்ல ஆரம்பித்தாள்…
கங்காவின் நிலையறிந்த மோகனாவும், யமுனாவும் சென்னையை விட்டு விட்டு காரைக்குடிக்கு வந்தனர். யமுனா, கங்காவின் மனதை முழுதாக மாற்றாவிட்டாலும், ஓரளவிற்கு கங்காவை பேசியே தன் வழிக்கு கொண்டு வந்தாள் யமுனா…
ஆரம்பத்தில் விரக்தியாக இருந்தவள் அதன்பின் குழந்தையை மட்டும் அரவணைப்பாக பார்த்துக் கொண்டாள். அவளின் முழு உலகம் குழந்தை என்றானது.
எங்கு செல்வதாக இருந்தாலும் குழந்தையை அழைத்துக் கொண்டு சென்றாள். தணலனை ஒதுக்க ஆரம்பித்தாள். அவனுடனான தாம்பத்ய உறவையும் அறவே வெறுத்தாள்…
தணலனும் கங்காவின் நிலையறிந்து ஒதுங்கி இருந்தாலும், ஆசையாக சிறு பார்வை பார்த்தால் கூட “பாவமா இருக்கா தணு என்னைப் பார்த்தா?” எனக் கேட்டு அவனை சித்ரவதை பண்ண ஆரம்பித்தாள்…
அப்படி இப்படி என்று இரண்டு வருடங்கள் சென்று விட்டது. கங்காவும் உள்ளுக்குள் இருக்கும் குழப்பத்தில் மீண்டு வர வேண்டுமென்று மீண்டும் மீண்டும் முயற்சி செய்தாள். ஆனால் அதன் பலன் சிறிது மட்டுமே முடிந்தது.
அவளுக்குள் இருக்கும் குழப்பத்திற்காக மனநிலை மருத்துவர் ஒருவரை வீட்டிற்கே அழைத்து வந்தான் தணலன்..
மனோதத்துவத்தில் மிகவும் புகழ்பெற்ற டாக்டரான அவருக்கு காலையில் அதிக அப்பாயின்மெண்ட் இருப்பதால் இரவு ஏழு மணிக்கு வருவதாக சொல்லியிருந்தார்…
அவர் வரும் நேரம் தேவாவும் கங்காவுடன் தான் இருந்தாள் நிறையை கவனித்துக் கொண்டு. அவர் கங்காவின் மனதினை சிலகாலத்தில் மாற்ற ஆரம்பித்தார்..
எல்லாம் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. தணலனுடன் கூட இப்பொழுதெல்லாம் சிரித்துப் பேச ஆரம்பித்தாள். மறுபடியும் கங்காவிற்கு வலி வரும் வரை தான்…
வலி அதிகமானதால் டாக்டரை சென்று தனிமையில் சந்தித்தாள். அவர்கள் சொல்லிய செய்தி அவள் வாழ்க்கையில் மேலும் இடியாய் அமைந்தது…
அவளின் புற்றுநோய் கட்டிகள் இன்னும் சரியாகாமல் அடுத்த கட்டத்தை நோக்கி சென்றுவிட்டது. முதலில் மார்பகத்தில் மட்டுமே பரவியிருந்தது இப்பொழுது ரத்தத்திலும் பரவ ஆரம்பித்து விட்டது என்பதை அறிந்தவள் பித்து பிடித்தவள் போல அமர்ந்திருந்தாள்…
இதை யாரிடமும் சொல்ல அவளுக்கு மனமில்லை. அதனால் எல்லாரிடமும் இருந்து மறைத்து விட்டாள். அந்த புற்றுநோய் சிகிச்சைக்கு வாய்ப்புகள் ஐம்பது சதவீதம் தான் என் டாக்டர்கள் கூறிவிட்டனர்.
சிகிச்சை மேற்கொள்ளா விட்டால் கண்டிப்பாக அது மரணத்தில் தான் முடிந்துவிடும் என அறிவுறுத்தியே தான் அனுப்பி வைத்தனர்..
தணலனை பார்க்கும் பொழுதெல்லாம் காதலுடன் குற்றவுணர்ச்சியும் சேர்ந்தே எழுந்தது. இன்னும் சில காலத்தில் இறந்து போக இருக்கும் தன்னால் அவனுக்கு எந்த சுகத்தையும் கொடுக்க இயலாது என்பதை உணர்ந்தாள். அவனை மனதளவிலாவது சந்தோஷமாக வைத்திருப்போம் என்று முடிவெடுத்தாள்…
எப்பொழுதும் குழந்தையுடன் இருப்பதை விட அதிக பாசத்துடன் இருந்தாள். முன்பு போல் தணலனிடம் எடுத்தெறிந்து பேசுவதை இல்லை. அவன் வீட்டிற்கு வரும் நேரம் அவனை காதலுடன் கவனித்துக் கொண்டாள்…
கங்காவின் இந்த மாற்றமே அவனுக்கு போதுமானதாக இருந்தது. டாக்டர் அழைக்கும் போதெல்லாம் புற்றுநோய்க்காக சிகிச்சை மேற்கொள்ள மறுத்து விட்டாள்…
புற்றுநோய் சிகிச்சையை பற்றி நினைத்தாலே அவளுக்கு நரகத்தை போன்று இருந்தது. இருக்கும் வரை சந்தோஷமாகாக இருந்துவிட்டு இந்த உலகத்தை விட்டு நீங்கி விட வேண்டும் என்றே எண்ணினாள்…
அவளின் ரிப்போர்ட்டை தணலனிடம் இருந்து மறைத்து வைக்கவேண்டும் என்று எண்ணினாள். பெரிய வீட்டில் வைத்து அது முடியாது. எந்நேரமும் வீட்டில் ஆட்கள் இருந்துக் கொண்டேயிருப்பார்கள் என்று புரிந்தது…
தன் தாயின் வீட்டில் சில காலம் இருந்து விட்டு வரலாம் என்று முடிவெடுத்தாள்.
அன்று காலை அலுவலகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த தணலனின் புறமுதுகை அணைத்தவாறே நின்றிருந்தாள் கங்கா.
நீண்ட நாள் கழித்து அவளுடைய அணைப்பு சற்று திகைப்பு தான் என்றாலும், “என்ன கங்கா காலையில புருஷனை கொஞ்சணும்னு தோணியிருக்கு” என நக்கல் குரலில் கேட்டாலும் அவளின் அணைப்பிற்கு எவ்வளவு ஏங்கியிருக்கிறான் என்பது அவனின் குரலில் இருந்தே தெரிந்தது…
“என் புருஷன் தானே நீங்க உங்களை கொஞ்சுறதுக்கு காலையில் என்ன? இரவு என்ன? எனக்கு எப்போ எல்லாம் தோணுதோ அப்போ எல்லாம் கொஞ்சிக்க வேண்டியதுதான்”. என்ற கங்காவினை தன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினான்.
அவளோ அவனின் கண்களை சந்திப்பதையே தவிர்த்தாள். “என்னாச்சி?” என்றவனின் இதழ்களை ஆழமாக அதே சமயம் சற்று அழுத்தமாக சிறையெடுத்தாள்.
நீண்ட நாள் இதழ் தேடலின் பயணமது முற்றுப் பெறவே சில நொடிகளை கடந்து சென்றது. கங்காவிற்கு அவனின் ஒற்றை முத்தம் உணர்த்தியது அவள் மீது அவன் கொண்டிருக்கும் காதலை.
ஆனால் அதை அனுபவிக்க முடியாத தன்னிலையை எண்ணி அழுகை தான் வந்தது. “என்னை மன்னிச்சிடு தணலா” என மனதுக்குள் மன்றாடியவள். அவனின் முத்தத்தில் லயித்தாள்…
சில நிமிடங்களுக்கு பிறகே அவளின் இதழ்களை விடுவித்தவன், “ஐ லவ் யூ கங்கா” என்றவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். இருவரின் அன்பின் பரிமாற்றமான அணைப்பு அது.
“நான் எங்கம்மா வீட்டுல ரெண்டு நாள் இருந்துட்டு வரட்டுமா?”
“ம்ம் சரி கங்கா போயிட்டு வா. எனக்கு கோயம்புத்தூர்ல ஒரு மீட்டிங் இருக்கு. நான் போயிட்டு வர்றதுக்கு எப்படியும் ரெண்டு நாளைக்கு மேலே ஆகிடும். அதுவரைக்கும் அங்கேயே இருந்துக்கோ”
“ம்ம்.சரி” என தலையாட்டியவள் நிறையையும் அழைத்துக் கொண்டு தன் தாயின் வீட்டிற்கு புறப்பட்டாள்.
புறப்படும் வேளையில் திரும்பி தணலனை பார்க்க, அவனும் அவளை தான் திரும்பி பார்த்தான். அவளின் விழிகளில் தவிப்போடு சேர்ந்த காதல் தான் தெரிந்தது.
இவன் கண்களில் அன்போடு சேர்ந்த காதல் தான் தெரிந்தது. இருவருக்கிடையே காதல் அளவுக்கு அதிகமாகவே தெரிந்தது.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.