நிலவு மகள் தன் வேலையை முடித்து விட்டு சிணுங்கலாக வெளியேற, சுட்டெரிக்கும் சூரியன் நிலவு மகளின் வெட்கத்தையும் தனக்குள் உள்வாங்கிக் கொண்டு லட்சம் கதிர்வீச்சுக்களால் இந்தப்பூமியை நோக்கி பாய ஆரம்பிக்க சரியான தருணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரமதில் பதினொரு வயது சிறுமியவள் தன் சைக்கிளின் பெடலில் கால்களை வைத்து அதிக அழுத்தம் கொடுத்து சற்று வேகத்துடன் செலுத்த ஆரம்பித்தாள்…
இன்னும் பத்து நிமிடத்தில் அவள் பால் டிப்போவை அடைய வேண்டும்.. அதனாலேயே வேகத்துடன் சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தாள்…
விடியற்காலை ஐந்து மணி என்பதால் பொழுது சற்று புலர ஆரம்பித்தது… தெருவின் விளக்கு வெளிச்சத்திலும், ரோட்டில் யாருமேயில்லை என்பதாலும் அதிவேகத்துடன் அவள் சைக்கிளை ஓட்டிக் கொண்டிருந்தாள் எந்தவித இடைஞ்சலுமின்றி…
காலை வேளையில் இந்த ஏரியாவிற்குள் வரமுடியாதபடி டிராபிக் சூழ்ந்திருக்கும்… ஆனால் இப்பொழுதில் அமைதியாக எந்தவித சத்தமும் இன்றி இனிமையான தருணமாக இருந்தது…
கால்மணி நேர பயணத்திற்கு பிறகே பால் டிப்போவினை அடைந்தாள்… சைக்கிளை நிறுத்தி வைப்பதற்குள்ளே கீழ்மூச்சு மேல்மூச்சு வாங்கியது அச்சிறுமிக்கு…
“வாம்மா கொஞ்சம் லேட்டா வந்தா தான் என்னம்மா… இப்படி மூச்சு வாங்க வரணுமா… மெதுவாக சைக்கிளை ஓட்டிட்டு வரலாம்ல” என்றவருக்கு பதிலாக சிறு புன்னகை ஒன்றை கொடுத்தவள்…
“இல்லை ஆங்கிள் சிக்கீரம் பால் பாக்கெட் போட்டுட்டு போனா தான் ஸ்கூலுக்கு கிளம்புறதுக்கு சரியா இருக்கும்” என தன் சைக்கிளின் கேரியரில் பால் பாக்கெட் அடங்கிய பச்சை கலர் ட்ரேயை தூக்க முடியாமல் எடுத்து வைத்தாள்…
ட்ரே கீழே விழாதவாறு கயிறு ஒன்றினை வைத்து கட்ட ஆரம்பித்தாள்… அந்த ட்ரேயினுள் வரிசையாக பால்பாக்கெட் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது… ஒரு பையில் தயிர் பாக்கெட்டை வாங்கிக் கொண்டு ஹேன்ட்பாரில் மாட்டினாள்…
இன்னும் சிறிது நேரத்தில் சைக்கிளின் வேகத்தைப் போன்று அவளின் வாழ்க்கை பயணமும் தொடங்க ஆரம்பித்து விடும்…
“நான் போய்ட்டு வர்றேன் ஆங்கிள்” என்றவள் யாரிடமும் அதிகமாக பேச மாட்டாள்…
பால் டிப்போவில் இருந்து வெளியேறியவள் ஒவ்வொரு வீடாக சென்று பால் பாக்கெட்டை போட ஆரம்பித்தாள்…
ஒவ்வொரு தெருவிற்கும் ஒரு பத்து வீட்டிற்காவது இவள் பால் பாக்கெட் போடுவாள்… அன்றும் இரண்டு மூன்று தெருக்களை தாண்டி செல்வதற்குள் பொழுது நன்றாக புலர ஆரம்பித்தது…
ஆங்காங்கே ரெண்டு மூன்று பேர் ஜாக்கிங் செல்ல ஆரம்பித்தனர்… அவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டே ஒரு வீட்டின் முன்பாக வந்து நின்றவள், கேட்டில் தொங்க விடப்பட்டிருந்த பிளாஸ்டிக் பையில் பால் பாக்கெட்டை போட்டு விட்டு அடுத்த வீட்டை நோக்கி செல்ல ஆயத்தமானாள்…
“பாப்பா நில்லுமா” என்ற குரலில் சட்டென்று அவ்விடத்திலேயே நின்றாள்…
“என்ன ஆங்கிள் என்ன வேணும்? பால் பாக்கெட் எக்ஸ்ட்ரா வேணுமா?” என்று கேட்டாள்…
சிலர் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள் என்றால் அந்த சமயம் பால் பாக்கெட் இன்னொன்று வாங்குவார்கள்… அவளுக்கும் இது புதிதல்ல என்பதால் தன்னெதிரில் நின்றிருந்த பெரியவரிடம் விசாரிக்க ஆரம்பித்தாள்…
“பால் வேணும்தான்… ஆனா” என்றவரின் பார்வை எதிரில் இருந்த சிறுமியை முழுதாக ஆராய்ந்தது…
ஜீன்ஸ் மற்றும் ஆண்கள் அணியும் காலர் வைத்த சட்டை தான் அணிந்திருந்தாள்… ஆனால் அவளின் பருமனான உடல்வாகிற்கு அவளை சற்று முதிர்ச்சியான பெண்ணாக காட்டியது… வயதுக்கு வராமலே வயதை மீறிய பருவ வளர்ச்சி அவளின் உடலில் தென்பட்டது…
அவரின் பார்வையில் என்ன உணர்ந்தாளோ, “ஆங்கிள்… ஆங்கிள்” என சற்று அழுத்தமாக கூப்பிட, எதிரில் இருந்தவரின் கண்களோ அவளை மேய்ந்து கொண்டிருந்தது…
இப்படியொரு பார்வையை இதுவரை அவள் உணர்ந்ததில்லை… உள்ளுக்குள் சற்று நடுக்கமாக இருந்தாலும் வெளியில் தைரியமாக இருப்பதைப் போல் காட்டிக் கொண்டாள்.
“நான் போறேன் ஆங்கிள்” என வேகமாக சொல்லி விட்டு சைக்கிளை எடுப்பதற்குள், சைக்கிளின் முன்பாக இரு கைகளையும் விரித்தபடி நின்றார் அந்தப் பெரியவர்…
அவரின் செய்கையை கண்டு ஒரு நிமிடம் திகைத்து, பின் மனதில் இருக்கும் பயத்தை தனக்குள் மறைத்தவள், ” ஆங்கிள் வழியை விடுங்க” என சொல்லிக் கொண்டே தன் பார்வையை அங்குமிங்கும் சுழற்றிட… அப்பொழுது தான் கவனித்தாள் அந்தத் தெருவே காலியாக இருந்ததை…
அவளுக்குள் இருக்கும் தைரியமெல்லாம் பின்னங்கால் பிடரி எடுத்து ஓடிட, கண்களில் நீர் கோர்க்க ஆரம்பித்தது…
“ஆங்கிள் வழியை விடுங்க… நான் போகணும்” என்றவளின் குரலில் இருந்த நடுக்கமே அவள் எவ்வளவு பயத்தில் இருக்கிறாள் என்பதை உணர்த்தியது…
“வழியை விடணுமா… விட்டுட்டா போச்சி” என்றவர் மெல்ல அவளை நெருங்க ஆரம்பிக்க, அந்தச் சிறுமிக்கோ அந்த இடத்தை விட்டு சிக்கீரமாக அகன்று விட்டாள் போதும் என்றே எண்ணியது…
“ஆங்கிள் விடுங்க நான் கத்திக் கூச்சல் போடுவேன்” என்றவளைப் பார்த்து ஏளனமாக சிரித்தவர்…
“கூச்சல் போடு… உன்னால எவ்ளோ கத்த முடியுமோ?? அவ்வளவு கத்து… ஆனா யாரும் உன்னை காப்பாத்த வரமாட்டாங்க.. ஏன்னா இந்தத் தெருவுல ஆட்கள் நடமாட்டமே கிடையாது” என்றவரின் கண்களோ திவீரமாக அவளை ஆராய்ந்தது…
“நான் போறேன்” என சைக்கிளின் ஹேன்ட்பாரில் கை வைப்பதற்குள்… அவளின் கைமேல் அவரின் கையை வைக்க… நடுங்கி விட்டாள் அந்தச் சிறுமி…
“இப்பொழுது வேகத்தை விட விவேகம் தான் முக்கியம்” என்று நினைத்தவள், சைக்கிளை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு ஓடிவிடலாம் என நினைத்து ஓட முயன்றவளின் கையினை அழுத்தமாக பிடித்துக் கொண்டார்…
“விடுங்க விடுங்க… யாராவது வாங்களேன்… ப்ளீஸ் ஆங்கிள்” என்றவளை இழுத்துப் பிடித்து அணைப்பதற்குள்… பெரியவரின் பின்கழுத்தில் யாரோ ஓங்கி அடிப்பதை போல் வலியை உணர்ந்தவர், சட்டென அந்த சிறுமியின் கையை விட்டுவிட, அவர் கையில் இருந்த விடுபட்ட தன் கையையும், அவரின் பின்னால் நின்றிருந்த நபரையும் கண்களில் வழியும் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தாள்…
தன் குடும்ப கஷ்டத்திற்காக பலநூறு பெண்கள் அனுபவிக்கும் பாலியல் தொல்லை என்ற துன்பத்தை அவளும் அறிய நேர்ந்த தருணமது…
“ஏய்ய்ய்… யாருடா என்னை அடிச்சது” என கோபத்துடன் எரிச்சல் மிகுந்த குரலில் சட்டென திரும்பி பார்த்தார் அந்தப் பெரியவர்…
ஆறடி உயரத்தில், ட்ராக் பேன்ட் மற்றும் டீஸர்ட் அணிந்தபடி நின்று கொண்டிருந்தான் அந்த இளைஞன்… அவனின் முகத்தில் கோபத்தின் சாயல் அதிகமாக இருந்தது… கோபத்துடன் கைகள் முறுக்கியபடி நின்று கொண்டிருந்தது வேறு யாருமில்லை தணலன் தான்…
ஜாக்கிங் செல்வதற்காக காலை வேளையில் சென்று கொண்டிருந்தவனுக்கு அந்தப் பெரியவரின் செய்கை சற்று வித்தியாசமாகப்பட தூரத்தில் நின்றிருந்த அவர்கள் இருவரையும் கண்காணிக்க ஆரம்பித்தான்…
அந்தச் சிறுமியின் கையைப் பிடிக்கவும் ஆத்திரம் தாங்காமல் வேகநடையுடன் அவர்கள் அருகில் வந்தவன்… கண்ணிமைக்கும் நொடியில் பின்தலையில் ஓங்கி ஒரு அடி அடித்தான்…
“என்னையே அடிச்சிட்டீயா??” என அவனை அடிக்க செல்ல முயன்றவரின் கையைப் பிடித்து முறுக்கிட… அவ்வளவு தான் வலியில் துடிக்க ஆரம்பித்தார் அந்தப் பெரியவர்…
“டேய்ய்ய… விடுடா.. விடுடா”என்பதற்குள்… ஜாக்கிங் சென்று கொண்டிருந்த இரண்டு மூன்று பேர் கூட ஆரம்பித்தனர்…
கூட்டம் கூடுவதை பார்த்த அச்சிறுமிக்கு பயத்தில் வியர்க்க ஆரம்பித்தது…
அவன் இதழ் பிரித்து உதிர்க்காத வார்த்தையில் தைரியம் வந்ததைப் போல் உணர்ந்தவள் அங்கிருந்த சைக்கிளோடு சென்று விட்டாள்…
************
அவள் சட்டென அப்படி பேசியதை கண்ட திகைத்து நின்ற தணலனின் இதழில் சிறு புன்னகை தான் தோன்றியது…
அவனுக்கு யமுனாவை பற்றி நன்கு தெரியும்… உள்ளே ஒன்று வைத்துக் கொண்டு வெளியே ஒன்று பேசமாட்டாள்…
தன் மனதில் நினைத்ததை எதிரில் இருப்பவர்களின் மனம் நோகாமல் பேசுவதில் கில்லாடி அவள்… நீண்ட நாட்களுக்கு பிறகு மனதில் இருந்த அழுத்தமே இந்த கோபத்தின் வெளிப்பாடு என்பதை அறிந்தவன் சில நிமிடங்கள் அவளையே உற்றுப் பார்த்தான்…
“அண்ணா”, “பப்ளிமாஸ்” என்ற இரு குரல்களும் சேர்ந்தாற் காதருகினில் ஒலிப்பதை போன்று தோன்றிட இதழ்களின் புன்னகை இன்னும் அழகாய் விரிந்தது…
பல நாட்களாய் தொலைந்து போன புன்னகை இன்று மீண்டும் அவனிடத்தில் வந்தது என்றால் அது யமுனாவினால் மட்டுமே…
எந்தவித ஓசையும் எழுப்பாமல் வெளியே செல்ல, அப்பொழுது தான் முக்கியமான க்ளையண்ட் ஒருவரிடம் போன் பேசிவிட்டு வந்த தேவாவின் கண்களில் விழுந்தான் தணலன்…
தணலன் சற்று மெதுவாக நிறையின் அறைக்கு செல்வதை பார்த்துக் கொண்டிருந்த தேவாவின் இதழ்களில் சிறு புன்னகை தோன்றி மறைந்தது…
நிறைக்கு தனியாக ஒரு அறை கொடுத்தாலும் இரவு நேரத்தில் அவள் அறை எல்லாரும் திறக்கும் வகையில் தான் இருக்கும்… இன்று தணலன் அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல, ஏசியின் குளுமையில் மார்பிள் தரைகள் சில்லிட்டு இருந்தது…
தன் நீண்ட அழுத்தமான பாதங்களை ஜில்லென்று இருக்கும் தரையில் ஊன்றியவன், மெல்ல அவளின் படுக்கையை நோக்கிச் சென்றவனுக்கு அவளின் தேக்குமர கட்டிலின் மேல், அவனின் தங்கப்பதுமையவள் நல்ல நித்திரையில் இருந்தாள்…
அவள் தூங்கும் அழகை பார்ப்பதற்கே இரண்டு கண்கள் போதாது என்பதைப் போல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்… தன் அன்னையை உரித்து வைத்தாற் போன்ற தோற்றம் கொண்டவளின் குணமோ தகப்பனை கொண்டிருந்தது…
அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களோ கட்டிலின் மேல் சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்தின் மேல் அழுத்தமாக படிந்தது…. பார்த்தவனின் மனதில் இனம் புரியா வலி ஒன்று உருவாகிட.. கண்களோ ஈரத்துடன் கசிய ஆரம்பித்தது…
தணலன் கங்காவை அணைத்தபடி நின்றிருக்க, கங்காவோ ஒரு வயதான நிறையை தூக்கிக் கொண்டு நிற்பதை போன்று ஒரு புகைப்படம் தான் பெரியதாக ப்ரேம் பண்ணி மாட்டியிருந்தனர்…
அதைப் பார்த்தவனின் இதயத்தில் சுரீரென்ற வலியும், கங்காவின் நினைவும் அதிகமாக வாட்டியது…
இரண்டு வருட காதலுடன், ஆறு வருட திருமண பந்தம் அவளுடனே கழித்தவனுக்கு… இன்று அவள் இல்லாதது ஏனோ கண்களை தாண்டி இதயம் தன் வலியை மேலும் மேலும் அதிகப்படுத்தியது…
நிறையை கண்ணுக்குள் வைத்து பொத்தி பாதுகாத்தவள் கங்கா… நிறையை தாலாட்டி, சீராட்டி வளர்த்தவளுக்கு இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற எண்ணமே தோன்றவில்லை…
இன்னொரு குழந்தை கூட வேண்டவே வேண்டாமென்று இருந்த பிடிவாதமாக இருந்து விட்டாள்…
அதையே நினைத்துக் கொண்டிருந்தவனின் இதயத்தில் அதிகமாக வலிப்பது போல் தோன்றியது… சிறு வலியுடன், இடது பக்க மார்பை பிடித்தவனுக்கு, இடது கரமும் வலிக்க ஆரம்பித்தது…
சட்டென்று உடலெல்லாம் வேர்த்து வியர்க்க ஆரம்பித்தது… அவன் அணிந்திருந்த சட்டை தொப்பலாக நனைந்து அப்படியே நெஞ்சை பிடித்தவாறே மயங்கி சரிந்தான்…
இல்லறம் : தனக்குப் பிடித்த ஒரு பொருளை தன் இணையிடம் திணிப்பது இல்லறமல்ல… பிடித்தம் என்பது வெவ்வெறு மனிதர்களிடத்திலும் வேறுபடும்.. அதைப் புரிந்து கொள்வதே இல்லறம் என்ற நல் அறமாகும்…