‘எங்கே போனாங்க’ என சிந்தித்தவாறே மெல்ல கட்டிலை விட்டு இறங்கியவள், வேகமாக அறையை விட்டு வெளியேற. மாடிப்படியின் அருகில் வந்து கொண்டிருந்தவளுக்கு கீழே கண்ட காட்சி கண்ணின் கருவிழிகளை உயர்த்தி உச்சக்கட்ட பேரதிர்ச்சியில் உறைய வைத்தது…
தன் கண்கள் பார்க்கும் செய்தியை மூளை நம்ப மறுத்தது. தணலனை நிறையின் அறையில் இருந்து அவர்களின் மாமா இருவரும், அவர்களின் பையன்கள், மற்றும் வீட்டில் கூடியிருந்த சொந்தங்கள் அனைவரும் தூக்கிக் கொண்டு மாடிப்படியில் இருந்து சிரமப்பட்டு இறங்க ஆரம்பித்தனர்…
பார்ப்பதற்கு உடல் முழுவதும் தொப்பலாக நனைந்தபடி மூச்சு என்பதை இல்லாததைப் போல் படுத்திருந்தவனைப் பார்க்க பார்க்க மனதில் வலி கூடிக் கொண்டேயிருந்தது…
அவனின் உடலில் எந்தவித அசைவும் இல்லாமல் படுத்திருந்தவனை பார்க்கும் பொழுது நெஞ்சில் சுருக்கென்று வலி தோன்றியது யமுனாவிற்கு…
‘தான் காணும் காட்சி நிஜமா? இல்லை ஏதாவது கனவு காண்கிறோமா’ என நினைத்தவளுக்கு அழுதுக்கொண்டே பின்னால் சென்ற வேதவள்ளி, நிறையை பார்த்ததும் நடப்பது நிஜம் என மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்தது…
‘இன்று காலை அவன் கட்டிய பொன்தாலியின் ஈரம் கூட காய்ந்து போகவில்லை. ஆனால் அவனின் உயிரே இப்பொழுது ஊசலாடிக் கொண்டிருக்கிறது’ என்பதை நம்ப முடியாத பேதையாக நின்றவளுக்கு அருகில் வந்து நின்றார் சௌந்தரவள்ளி…
“வா யமுனா” என்ற வார்த்தையில் அவரின் இழுப்புக்கு உடன்பட்டு அவருடன் நடந்து கொண்டே சென்றவளின் விழிகள் பார்த்துக் கொண்டேயிருந்தது தணலனை மட்டும்தான்…
ஏனோ கண்களை அவனில் இருந்து வேறு பக்கம் திருப்ப முடியவில்லை. விழிகளா அவை? இருபத்தி நான்கு மணி நேரமும் அவளை கட்டியிழுக்கும் காந்தமல்லவா. இன்று மூடியிருப்பதை பார்த்தவளின் கண்களில் ஒரு வித வெறுமை தான் குடியேறியது…
அவனுக்கு ஒன்று என்றதும் கத்தவில்லை! கதறவில்லை! கண்ணீர் வரவில்லை. அவன் வருவான் என்ற நம்பிக்கை மலையளவு அவளுக்குள் இருந்துக் கொண்டேயிருந்தது. அவன் விழிகளை காண தவம் இருந்தவள் அல்லவா அவள். அவள் உள்ளம் கொய்த மாயவன் அல்லவா அவன்.
தணலனை ஆண்கள் அனைவரும் காரில் ஏற்றிக் கொண்டு முதலில் மருத்துவமனை செல்வதற்காக விருட்டென்று கிளம்பினார்கள். பின்னாடியே இன்னொரு காரில் தேவா, வேதாச்சலம், வேதவள்ளி நிறை என அனைவரும் ஏறிட. சௌந்தரவள்ளயும் யமுனாவுடன் காரில் ஏறுவதற்கு முற்பட்ட சமயம்,
“நில்லுங்க” என்ற குரலில் அனைவரும் திரும்பி பார்க்க, கண்களில் கோபத்துடனும். கண்ணீருடனும் நின்றிருந்தாள் நிறை…
நீண்ட நேரம் அழுதிருப்பாள் போல. கண்கள் சற்று தடித்து, நுனிமூக்கு சிவந்து காணப்பட்டது.
“நிறை என்னாச்சி உனக்கு? அங்கே தணலன் உயிருக்கு ஆபத்து” என்ற தேவாவின் குரலில் தணலன் மேல் இருந்த பாசம்தான் அதிகம் தென்பட்டது…
“ஆமா அத்தை. அப்பா உயிருக்கு ஆபத்துதான். இதோ இவுங்களால மட்டுந்தான்” என யமுனாவை நோக்கி கையை நீட்டிட. அவள் பேசுவதை கேட்ட அனைவருக்கும் பேரதிர்ச்சி தான் தேவா உள்பட. அவளுமே இப்பேற்பட்ட பேச்சை எதிர்பார்க்கவில்லை…
“இவுங்க நம்ம கூட ஹாஸ்பிடல் வரக்கூடாது” என அழுகுரலில் ஆனால் தீர்க்கமாக சொல்லிய தன் அக்கா மகளை தான் ஆழ்ந்து பார்த்தாள் யமுனா…
“ப்ச்ச்ச்ச்… நிறைஐஐ வாயை மூடு. இப்போ சண்டை போடுறதுக்கான நேரமில்லை” என சீறியவளின் குரலில் அப்படியொரு கோபம் இருந்தது. தன் தம்பி உயிருக்குப் போராடும் நிலையில் பார்த்தபின்பு அவளால் இங்கு வாதிடவோ, சண்டையிடவோ தோன்றவில்லை…
“அத்தை ப்ளீஸ். இவுங்க இந்த கார்ல ஏறுனா. கண்டிப்பா எங்கப்பாவும் எனக்கில்லாம போயிருவாங்க” என உச்சக்கட்ட வெறுப்பிலும், கோபத்தில் வார்த்தைகளை கடித்து துப்பிட. தணலனை உயிருக்குப் போராடிய நிலையில் தூக்கிக் கொண்டு செல்லும் பொழுது கலங்காத கண்கள், இன்று தன் தமக்கை மகள் சொல்லிய ஒற்றை வார்த்தையில் விழிகளை தாண்டி கண்ணீர் கோடாய் இறங்க ஆரம்பித்தது…
அவளின் கண்ணீரை பார்த்த நிறைக்கு அப்படியொரு கோபமும், வெறுப்பும், ஆத்திரமும் தோன்றியது…
“போதும். உங்க கண்ணீர் நாடகத்தை எல்லாம் நிப்பாட்டுறீங்களா? இதெல்லாம் நான் நிறைய பார்த்துட்டேன். எங்கம்மாவை கொன்னு எனக்கு அம்மா இல்லாம பண்ணிட்டீங்க … அடுத்து எங்கப்பாவா?. எங்கப்பாவையாவது எனக்குத் திருப்பி கொடுங்க. ப்ளீஸ்” என கையெடுத்து கும்பிட்டவளின் செய்கையில் கண்களில் இருந்து கண்ணீர் இறங்கிக் கொண்டேயிருந்தது விழித்திரையினை மறைக்கும் அளவிற்கு…
எவ்வளவு பெரிய வார்த்தையை உதிர்த்து விட்டாள்? தன் நாக்கில் இருந்தே வரும் ‘சொல்’ என்ற விஷ அன்பினால் யமுனாவின் மனதினை கொன்று போட்டாள் நிறை…
அவள் சொல்லிய வார்த்தையை சட்டென அவளால் கிரகிக்க முடியவில்லை. ‘தன்னால் தணலனுக்கு ஆபத்து’ என்ற சொல்லினை கேட்ட பின்பும் காரில் ஏறும் தைரியம் யமுனாவிற்கு இல்லை…
சட்டென்று தன் கால்களை பின்னால் எடுத்து வைத்தாள். கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டே, ‘நீங்க போய்ட்டு வாங்க’ என மெல்லிய குரலில் சொன்ன யமுனாவிற்கு ஆயிரம் வலி. ஆனாலும் நிறை என்ற தன் அக்கா மகளுக்காக தன்னிலை விட்டு இறங்கி வந்தாள்…
“ப்ளீஸ். எங்கப்பா திரும்ப வரும்போது நீங்க இந்த வீட்டுலேயே இருக்காதிங்க” என்ற வார்த்தையில் இதயத்தில் யாரோ ஈட்டி பாய்ச்சியதை போல் வலிக்க ஆரம்பிக்க. தன் மனதில் தீர்க்கமான ஒரு முடிவை எடுத்தாள் யமுனா.
அவள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் அவளுக்கு சாதகமாக இருக்குமா? உயிருக்குப் போராடும் நிலையில் இருக்கும் தணலன் மீண்டு வருவானா? தன் அன்னையின் உடன் பிறந்தவளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் நிறைக்கு வருமா? என ஏராளமான விடையறியா வினாக்களை சுமந்து கொண்டு நகர்ந்தது யமுனாவின் மனம்…
அந்த காரும் அனைவரையும் ஏற்றிக் கொண்டு விருட்டென்று கிளம்ப ஆரம்பிக்க, அவர்கள் செல்லும் வழித்தடத்தை, தன் கண்களில் வழியும் கண்ணீர்த்தடத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் யமுனா…
தான் கலங்கும் வேளையில் தன் கண்ணீர்த்துடைக்கும் தன் தமக்கையினை எண்ணி, எண்ணி அழ ஆரம்பித்தவளின் கால்கள் சற்று தொலைவில் இருக்கும் தன் வீட்டை நோக்கி நடை போட்டது…
‘தன் மகளை கல்யாணம் முடித்துக் கொடுத்து விட்டோம்’ என்ற நிம்மதியில் நித்திரையில் இருந்த மோகனாவிற்கு கதவு தட்டப்படும் சத்தத்தில் தான் விழிப்பு வந்தது…
கதவை திறந்துப் பார்த்தவருக்கு உச்சக்கட்ட பேரதிர்ச்சி. யமுனா வெளியே நின்று கொண்டிருந்தது…
அப்பொழுது தான் அவளை முழுதாக பார்த்தார். முதல் இரவுக்கான அலங்காரத்தில் இருந்தவளின் முகமோ, களையிழந்து போயிருந்தது…
மாம்பழ வண்ண நிறத்தில் மஞ்சள் மற்றும் சிகப்பு நிறம் கலந்த சேலையில் அரக்கு பார்டர் வைத்த காஞ்சிப்பட்டு சேலை, அவள் உடலை பாந்தமாக தழுவியிருந்தது.
அஞ்சனம் தீட்டிய மைவிழிகள் இரண்டும் கலங்கி கண்ணீர்த்தடங்களில் கரைந்து காணாமல் போய்க்கொண்டிருக்க, அவள் அணியும் சிவப்பு நிற மூக்குத்தி இரவு நேர விண்மீனாய் அவளின் மூக்கில் ஜொலித்தது…
காலையில் தணலன் தன் கரங்களால் சூட்டிய பொன்தாலி மட்டுமே அவள் பளிங்கு கழுத்தை அலங்கரித்தது. மற்ற நகைகளை கழற்றி வைத்து விட்டாள் போல…
‘இத்தனை அலங்காரமும் இன்று தணலனனின் கைப்பட்டு கலைந்திருந்தாள் சந்தோஷப்பட்டிருப்பார். தன் பெண் இல்லற வாழ்க்கையின் முதல் அடியான தாம்பத்ய வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கிறாள் என்று’…
ஆனால் இப்படி நள்ளிரவு வேளையில் விழிகள் மட்டும் கலங்கி, அனாதரவாய் நின்று கொண்டிருந்த தன் பெண்ணை பார்த்ததுமே புரிந்து கொண்டார்…
‘தன் பெண் இல்லறத்தை துறந்து வந்து நிற்கிறாள் என்று’ என நினைத்தவரின் விழிகள் கலங்கிட, யமுனாவை உள்ளே அழைத்தார்…
உள்ளே நுழைந்தவளின் விழிகளில் பட்டது கங்காவும், யமுனாவும் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றும், தணலனும் கங்காவும் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றும் சுவற்றில் மாட்டப்பட்டிருந்தது…