தணலனுக்கு இரவில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான். அவனுக்கு இரு ஆரூயிர் நண்பர்கள். மூவருமே ஒரே வீட்டில் தான் தங்கியிருந்தனர்…
அந்த வீட்டின் வாடகை எல்லாமே தணலன் பொறுப்பு தான். அவன் படிப்பதற்காக தனியாக வீடு எடுத்து தங்க வைத்தது தேவா தான்…
ஆனால் தணலனோ தன் இரு நண்பர்களையும் உடன் அழைத்து வந்து விட்டான்…
அவனுடைய நண்பர்கள் சதீஷும் அவனும் ஒரே அறையில் தங்கியுள்ளனர்… ஸ்ரீராம் அடுத்த அறையில் தங்கியுள்ளனர். சதீஷும், ஸ்ரீராமும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள்…
தணலன் அளவிற்கு அவர்களுக்கு பண வசதி கிடையாது. ஆனால் தனிமை என்ற ஒன்று தணலனுக்கு எப்போதுமே பிடிக்காதது…
அதனாலேயே தன் நண்பர்களை அவனுடன் தங்க வைத்துக் கொண்டான்… மூவருக்குமே பெர்சனல் என்ற ஒன்று கிடையவே கிடையாது…
அவ்வளவு உயிர் நண்பர்களாக இருந்தனர். அதில் ஸ்ரீராம் சற்று தெளிவானவன். எதையும் பல தடவை யோசித்து செய்பவன். சதீஷோ விளையாட்டு பிள்ளை போல. எது வந்தாலும் டேக் இட் ஈஸி பாலிசி என்ற கொள்கையுடையவன்…
ஸ்ரீராம் அவன் காதலியுடன் பால்கனியில் நின்று போன் பேசிக் கொண்டு உள்ளே நுழைந்தவனுக்கு இன்னும் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்த தணலனை புருவம் சுருக்கி பார்த்தான்…
“என்னடா இன்னும் தூங்காம இருக்க?. காலேஜ் பர்ஸ்ட் நாளே உனக்கு அசைன்மெண்ட் ஏதாவது கொடுத்துட்டாங்களா என்ன?” என கேலியுடன் கேட்ட ஸ்ரீராமை சிறு தயக்கத்துடன் பார்த்தான்…
“ப்ச்ச். இல்லடா காலையில் ஒரு பொண்ணை” என்பதற்குள், எதிரில் இருந்த நண்பனின் முகம் பதட்டப்பட ஆரம்பித்தது…
“டேய்ய்.. பொண்ணா? ஏற்கனவே காலையில ஒரு பொண்ணை காப்பாத்தப் போய் பட்ட அவமானம் போதாதா?. நல்லவேளை ஜாக்கிங் உன்கூட நானும் வந்தேன்” என சுள்ளென்று கேட்டவனை கோபத்துடன் முறைத்துக் கொண்டு எழுந்து நின்றான் தணலன்…
“இப்போ நீ என்னதான் சொல்ல வர்ற? நான் பண்ணது தப்புன்னா. என் கண்ணு முன்னாடி ஒரு சின்னப் பொண்ணுக்கிட்ட தப்பா நடந்துக்கப் பார்க்கிறான்.. அதைப் பார்த்துக்கிட்டு அப்படியே போகிறதுக்கு நான் ஒன்னும் போக்கத்தவன் இல்லை”…
“அந்த நிலைமையில் என் அக்காவோ, உன் தங்கச்சியோ இருந்தா தான் காப்பாத்தணும்னு இல்லை… எந்தப் பொண்ணா இருந்தாலும் காப்பாத்தத்தான் தோணும்” என சிடுசிடுவென்று பேசியவனின் தோளில் கைப்போட்டவாறே பால்கனிக்கு அழைத்து சென்றான்…
“ஆனா பிரச்சினை உனக்குத்தானே.. அந்தாள் தான் யோக்கியம்னு காட்டுறதுக்காக உன்னை போலீஸ்ல புடிச்சி கொடுக்கப்பார்த்தான். நல்லவேளை உங்கக்கா கிட்ட விஷயத்தை நான் சொன்னதுனால தான் நீ போலீஸ் ஸ்டேஷன் போகாம காலேஜ் போன”…
“உங்கக்கா தான் பெரிய இடத்துல பேசி உன்னை ஸ்டேஷன் கூப்பிட்டு போகாத அளவுக்கு பண்ணினாங்க” என்றவனுக்குமே நன்றாக தெரியும். ஸ்ரீராம் இல்லையென்றால் அவன் இந்த நொடி ஸ்டேஷனில் தான் இருப்பான்…
அதனாலேயே காலையில் இருந்து தேவாவின் அட்வைஸ் மழை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது…
“ப்ச்ச்.. இப்போ இதைப் பத்தி என்ன பேச்சு வேண்டியிருக்கு?. எனக்குத் தூக்கம் வருது” என தன் நண்பனிடம் இருந்து நழுவியவன் அறைக்குள் சென்று மீண்டும் படுத்தான்…
மணி பனிரெண்டு மணியை தாண்டிக் கொண்டிருந்த பொழுதும் அவனுக்கு இம்மியளவும் உறக்கம் வருவேனா என்றது…
அங்குமிங்கும் நடந்து பார்த்தான். புரண்டு பார்த்தான். கண்களை மூடி தூங்க முயற்சித்தான். கண்களை மூடினாலே இமைகளுக்குள் கன்னக்குழியோடு வந்து சிரித்தாள் கங்கா...
அவன் இதுவரை எந்தப் பெண்ணிடமும் இப்படியொரு சலனத்தை அடைந்ததேயில்லை. பெண்களை பார்ப்பான். ரசிப்பான். அடுத்த நிமிடம் அவன் வேலையை பார்த்துக் கொண்டு சென்று விடுவான்…
ஆனால் மறக்க முடியாத முகமாக கங்காவின் முகமும், அவளின் மிரட்சியான பார்வையும் அவனை கொல்லாமல் கொன்று புதைக்க ஆரம்பித்தது…
“ப்ச்ச்ச்” என ஒரு வித சலிப்புடன் எழுந்தமர்ந்தவன், தன்னருகில் எட்டிப் பார்க்க, அவனின் நண்பன் சதீஷோ கனவிலேயே யாருடன் வாழ்ந்து கொண்டிருந்தான்…
அதில் சில்மிஷ பேச்சுக்களும், அவன் நெளிந்து புரண்டு கொண்டிருப்பதையும் பார்த்தவனுக்கு கோபம் தான் வந்தது…
தான் இங்கு உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது, தன் நண்பன் உறங்குவதை தாங்க முடியாமல் தவித்தவன், அவனின் இடுப்பிலேயே ஓங்கி மிதிக்க…
“அம்ம்மாஆஆஆஆ” என அலறுவதற்கு பதிலாக, “சிலுக்குஉஉ” என அலறியபடி விழுந்தவனை இன்னும் தீயாய் முறைக்க ஆரம்பித்தான்…
தான் கீழே விழுந்த பின்பு தான் இடுப்பின் வலியை உணர்ந்து, ‘யாருடா அது நம்ம கனவை கலைச்சது?’ என தரையில் இருந்தபடி எட்டிப் பார்க்க…அங்கு தணலனோ செவ்வானமாய் சிவக்க ஆரம்பித்தான்…
“என்னை ஏன்டா எட்டி மிதிச்ச?”
“பின்னே உன்னை தூக்கி வச்சி கொஞ்ச சொல்றீயா?. அது என்னடா விழும் போது சிலுக்குன்னு கத்திட்டு விழுற” என்றதும் வெட்கப்பட்டுக் கொண்டே அவனைப் பார்த்து இளித்து வைத்த, சதீஷை ஒரு மார்க்கமாக பார்த்தான் தணலன்…
“அது வந்து மச்சி.. கனவுல சிலுக்குஉஉ”
“ஏது சிலுக்காஆஆஆ… அவுங்க செத்தே பல வருஷம் ஆச்சி பக்கி”
“செத்தா அவுங்களை ரசிக்கக்கூடாதா? அவுங்க கூட டூயட் பாடக்கூடாதா? சின்ன வயசுல இருந்தே அவுங்க என் க்ரஸ்ஸு” என ஜொல்லு விட்டுக் கொண்டே எழுந்தமர்ந்தவன்… கட்டிலின் பெட்டில் தலைகுப்புற படுத்தான்…
“ரொம்ப பழைய பீஸா இருக்கீயேடா” என சிறு சிரிப்புடன் சொல்ல,
“ஆமாடா பழைய பீஸ் தான் அதுக்கென்ன இப்போ” என்றவன் விழிகளை மூடி தூங்க முயற்சி செய்ய,
“மச்சி எனக்கு தூக்கமே வரலைடா”
“தூங்காதே முழிச்சே இரு”
“ப்ச்ச்.. எனக்கு அவளை பார்க்கணும் போல இருக்கே?”
“எவளை டா?” என்றவனின் முதுகில் ஒரு அடி போட்டான் தணலன்…
“உன் தங்கச்சியை டா”
“எனக்கு தங்கச்சியா? எங்கப்பா பெத்ததே ஒன்னுக்கும் உதவாத என்னை மட்டும்தானே டா”
“உன்னை பெத்ததுக்கு அவர் சும்மாவே இருந்திருக்கலாம்… இன்னைக்கு காலையில் நீயும் நானும் பார்த்தோமே அந்தப் பொண்ணு தான் மச்சி “
“நீ எந்தப் பொண்ணை பார்த்த? நான் நிறைய பொண்ணை பார்த்தேன்? ஏன்டா இப்படி குழப்புற?” என மீண்டும் தூங்க முயற்சிக்க,
“ப்ச்ச்.. காலையில் போன் பேசும் போது பார்த்தோமே. பிபிஏ க்ளாஸ்ல அவ தான்டா?”
சிறிது நேரம் யோசித்து பார்த்தவன், “ஓஹ்ஹ்ஹ… அந்த குண்டு பூசணிக்காவா?”
“அவ உனக்கு குண்டுபூசணிக்காவாடா? கொஞ்சம் புஸ்புஸ்னு பப்ளிமாஸ் மாதிரி இருக்கா? அவ்வளோ தான்”…
“இப்போ அவ எப்படி இருந்தா நம்மளுக்கு என்னடா?” என தூக்க கலக்கத்தில் பேசியவனின் விரலோடு விரல் கோர்த்த தணலனை வித்தியாசமாக பார்த்தான் சதீஷ்…
“இப்போ என்ன தான்டா சொல்ல வர்ற? அவளை லவ் பண்றீயா”. என விளையாட்டு போல் கேட்டவனின் தோளில் சாய்ந்து கொண்டே அவன் அணிந்திருந்த பனியனை முறுக்கியவாறே, “ஆமாடா அவளை காதலிக்கிறேன். அவ கூட வாழணும்னு ஆசைப்படுறேன்.. ஏனோ அவளை மறக்க முடியும்னு தோணலை. நான் என்ன பண்ணட்டும்?”… என ஏக்கப் பெருமூச்சுடன் சொன்ன நண்பனை எரிச்சலுடன் பார்த்தான் சதீஷ்…
“பேசாம ஒன்னு பண்ணு, நாளைக்குப் போய் அவகிட்ட ஐ லவ் யூ ன்னு சொல்லிடு. போதுமா” என தூக்க கலக்கத்தில் உளறிவிட்டு சதீஷ் உறங்கிவிட,
தணலனோ அதையே பின்பற்றி அடுத்த நாள் காலை கங்காவின் முன்பாக வந்து நின்றான் தன் காதலை சொல்லிவிடும் எண்ணத்தில்…
********************
தான் அவ்வளவு சொல்லியும் பிடிவாதமாக அமர்ந்திருந்த யமுனாவை பார்க்க பார்க்க, எரிச்சலுடன் கலந்த கோபம் தான் வந்தது மோகனாவிற்கு…
“நீ ஹாஸ்பிடல் வர்றதும் வராததும் உன் இஷ்டம். ஆனா நான் கண்டிப்பா போவேன்” என வேகமாக தன் பர்ஸை தேடி எடுத்துக் கொண்டு வெளியே செல்வதற்காக வாசல் வரை வந்த மோகனாவிற்கு தூக்கிவாரிப்போட்டது எதிரில் நிற்பவர்களைப் பார்த்து,
தணலனின் பெரிய மாமாவும், அவரின் பையனும் தான் நின்று கொண்டிருந்தனர்… அவர்களைப் பார்த்ததும் பயத்தில் எச்சில் முழுங்கியபடி நின்றிருந்த மோகனாவிற்கு பேச்சே வரவில்லை என்பதே உண்மை…
இவர்கள் இந்நேரத்தில் இங்கிருக்கிறார்கள் என்றால், தணலனுக்கு என்னவானது? என்ற நினைவே ‘அய்ய்யோஓஓஓ’ என மனம் ஒரு ஓலமிட ஆரம்பிக்க, அவரின் முகத்திலோ பயத்தின் சிந்தனைகள் படர ஆரம்பித்தது…
“ப்ளீஸ் யமுனாவை கொஞ்சம் கூப்பிடுறீங்களா?” என கேட்ட குரலில், உள்ளிருந்து மெல்ல எட்டிப் பார்த்தாள் யமுனா…
கார் நிற்கும் சத்தம் அர்த்தஜாம ராத்திரியில் தெளிவாக கேட்டது யமுனாவிற்கு.. மோகனாவின் பின்னாடியே எழுந்து வந்தவள், வாசலில் நின்றிருந்த இருவரையும் மிரட்சியாக தான் பார்த்துக் கொண்டிருந்தாள்…
“யமுனா. சிக்கீரம் வா” என அவளின் கைப்பிடித்து இழுக்காத குறையாக அவசரப்படுத்தினான்… தணலனின் மாமன் மகன் முரளிதரண்…
“தம்பி அவருக்கு எப்படி இருக்கு?. இப்போதான் விஷயமே எனக்குத் தெரிய வந்தது?” என தன்னிலை விளக்கம் கொடுக்க நினைத்த மோகனாவின் பேச்சை யாரும் அங்கே செவியில் வாங்கிக் கொள்ளவில்லை. வாங்குவதற்கு அவர்களுக்கு நேரமில்லை…
“பெரியம்மா. இப்போ பேசுறதுக்கு நேரமில்லை… அத்தானுக்கு ஹார்ட் அட்டாக். சர்ஜரி பண்ணினா மட்டுந்தான் காப்பாத்த முடியும்னு டாக்டர் சொல்லிட்டாங்க… யமுனா கையெழுத்து இல்லாம ஆப்ரேஷன் ஸ்டார்ட் பண்ண முடியாது” என ஹாஸ்பிடல் நடந்த போராட்டத்தை சிறு சுறுக்கமாக சொல்லி முடித்த, அடுத்த கணமே யமுனா வாசலை விட்டு வெளியேறி விட்டாள்…
தன்னவனுக்கு ஆபத்து, உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், அவளின் வீம்பு, பிடிவாதம் எல்லாமே காற்றில் கரைந்த கற்பூரமாய் காணாமற் போய் கொண்டிருந்தது…
யமுனா வேகமாக காரில் ஏறியமர்ந்தவள், “முரளி… வண்டியை எடு” என துரிதப்படுத்த,
மோகனாவிற்கு யமுனாவின் செய்கை அதிர்ச்சியோடு சிறு நிம்மதியும் ஏற்பட்டது… தன்மகள் இன்னும் குடும்ப வாழ்க்கையை முழுதாக துறக்கவில்லை என்ற ஆத்மார்த்த நிம்மதி ஏற்பட்ட தருணமது…
அரைமணி நேர பயணத்தில் மிகப்பெரிய ஹாஸ்பிடலின் வாயிலை வந்தடைந்தனர் நால்வரும்… காலில் செருப்பு கூட அணியாமல் வேகமாக காரில் இருந்து இறங்கிய யமுனாவிற்கு இப்பொழுதே இந்த நொடியே தணலனை பார்க்க வேண்டும் என்ற தவிப்பு நொடிக்கு நொடி அதிகரிக்க ஆரம்பித்தது…
வரவேற்பரையில் நின்று கொண்டிருந்த மொத்த குடும்ப உறுப்பினர்களை பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தவளின் விழிகளில் விழுந்தது தேவாவின் தோளோடு சாய்ந்து அழுதுக் கொண்டிருந்த நிறை தான்…
அவளோ அழுகையில் தன் துக்கத்தை கரைக்க நினைத்தாற் போன்று அழுதுக்கொண்டேயிருந்தாள். சிறு பிள்ளை அழுவதை பார்ப்பதற்கே பாவமாக இருந்தது…
“யமுனா இங்கே யாரு?” என செவிலியர் பெண் ஒருத்தி கேட்க, வண்டுகள் ரீங்காரமிடும் அவ்வேளையிலும் சுவற்றில் எதிரொலிப்பட்டு எட்டுத்திக்கும் யமுனாவின் பெயர் ஒலிக்க ஆரம்பித்தது…
“இதோ இவ தான்” என்ற சௌந்தரவள்ளியின் கூற்றில், அந்தப் பெண் அருகில் வந்து ஒரு பார்ஃம் ஒன்றை நீட்டினாள்…
அந்த விண்ணப்ப படிவம் எதற்கு என்பதை அறியாத சிறு பிள்ளையல்லவே அவள்… “நடக்கும் ஆப்ரேஷனில் பேஷன்ட்க்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால் அதற்கு நிர்வாகம் பொறுப்பேற்காது” என்பதை தான் ஆங்கிலத்தில் பதிவிடப்பட்டிருந்தது…
ஏனோ மனதில் இருந்த திடமெல்லாம் பின்னாங்கால் பிடறியில் ஓட ஆரம்பித்து… மனம் நிலையில்லாமல் தவிக்க, யமுனா என்ற மூன்றெழுத்தை போட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்
கண்களை மூடி நின்றவள், தன் உடன் பிறந்தவளை மட்டுமே நினைவில் கொண்டு வந்தாள்… “அக்கா ஆஆஆஆ… எனக்கு அவரை மீட்டுக்கொடுத்திடு… இது எனக்காக மட்டுமில்ல நம்ம நிறைக்காகவும் தான்” என மனதார வேண்டியவள், விண்ணப்ப படிவத்தில் கையெழுத்திட்டு, செவிலியப் பெண்ணை அனுப்பி வைக்க… சில நிமிடங்களில் தணலனுக்கு ஆபரேஷன் ஆரம்பித்தது…
தேவாவோ அங்கு நடப்பவற்றை பார்த்துக் கொண்டுதானிருந்தாள். தடுக்க முடியாத சூழ்நிலையில் அவள் இருந்தாள்…
ஆனால் ஒருவரின் மேல் அவளின் கோபம் அதிகரித்துக் கொண்டே போனது… அருகிலிருந்த தேவாவினை பார்க்க அழுதழுது தூங்கவே ஆரம்பித்து விட்டாள்…
“அம்மாஆஆ” என்ற குரலில் சௌந்தரவள்ளி திரும்பி பார்த்தார்…
“என்னாச்சி தேவா?”…
“நிறையை பார்த்துக்கோங்க. நான் இப்போ வந்திடுறேன்… அவ தூங்கி எழுந்தா குடிக்க ஏதாவது ஜுஸ் கொடுங்க. பாவம் ரொம்ப அழுதுட்டா” என்றவளின் பார்வை , தன் தம்பி மகளின் மேல் அழுத்தமாக பதிந்தது…
சரிந்து படுத்திருந்தவளின் முன்நெற்றியில் முத்தமிட்டாள், “உனக்காகவது என் தம்பி மீண்டு வருவான்ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு” என்ற தேவா, ஹாஸ்பிடலை விட்டு மெல்ல வெளியேறினாள் வேதவள்ளியையும் அழைத்துக் கொண்டு…
இல்லறம் : சில இடத்தில் நம் இணையிடத்தில் நாம் விட்டுக் கொடுக்காமல் இருந்தால்.. உறவுகளுக்குள் அதுவே பல சிக்கலை உண்டாக்கும்.