அடுத்த நாள் தன் முன்னே வந்து நின்ற தணலனை பார்த்து திடுக்கிட்டுப் போனாள் கங்கா.
ஆனால் தணலனுக்கு எந்தவித திடுக்கிடலும் இல்லை.. அவளைப் பார்த்தவுடன் ஒரு வித ஆர்வமும் அதையும் தாண்டி சிறு படபடப்புடன் நின்றிருந்தான். பார்த்து பார்த்து காலையில் இருந்தே மெனக்கெட்டு ரெடியாகி வந்திருக்கிறான் என்பது அவனின் தோற்றத்தைப் பார்த்ததும் புரிந்தது…
சந்தன நிற பேன்ட், அடர் நிற சிவப்பு நிற சட்டையை அழகாக இன் பண்ணி வந்திருந்தான்… கையில் சிகப்பு நிற ரோஜாக்கள் அடங்கிய பொக்கே வேறு வைத்திருந்தான்…
அவனின் தோற்றத்தையும், அவன் கையிலிருந்த பூவையும் பார்த்த கங்காவிற்கு சில நிமிடங்களில் புரிந்து கொண்டாள்… “அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை?”…
உள்ளத்தில் பயம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியாக நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்…
“எதுவாக இருந்தாலும் அது அவன் வாய் மூலமாகவே வெளியே வரட்டும்” என அமைதியாக நின்றவளின் முன்பாக ரோஜாப்பூவை நீட்டியவன்,
“ஐ லவ் யூ” என அவளிடம் தன் காதலை தெரிவித்து விட, கங்காவோ இம்மியளவும் அசையாது அவனை தான் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்…
அதில் காதலோ, ஈர்ப்போ எதுவுமே இல்லை. ஆராய்ச்சி பார்வை மட்டுமே, அவனை மேலிருந்து கீழாக பார்த்தவளுக்கு அவன் செல்வநிலை உடனே புரிந்தது…
சுற்றிமுற்றி பார்த்தாள் அந்த இடத்தில் யாருமே இல்லை. நேற்று போல் இன்றும் இவள் சிக்கீரமாக வந்து விட்டாள். அதனால் காலேஜில் ஒரு சிலரின் வருகை மட்டுமே இருந்தது…
“கங்காவிடம் தன் காதலை சொல்லும் நேரம், அனைவருக்கும் காட்சிப்பொருளாக அமையக்கூடாது” என்பதற்காக தான் காலை நேரத்தை தணலன் தேர்வு செய்தது…
அவளிடம் தன் காதலை சொல்லியதும் உடனே ஏற்றுக் கொள்வாள் என்று நம்பிக்கை அவனுக்கில்லை தான்.. ஆனால் அவளின் அமைதி அவனை தவிக்க வைத்தது…
“என்னடா நேத்து தான் பார்த்தான். இன்னைக்கு காதலை சொல்றேன்னு தப்பா நினைக்காதே. எனக்கு ஒரு விஷயம் பிடிச்சதுன்னா அது என்னைக்கும் எப்பவும் மாறாது… நான் உன் மேல வைக்கிற பாசமும் என்றைக்கும் மாறாது” என உறுதியான குரலில் சொன்னவனை ஆழ்ந்து பார்த்தவள் நீண்ட பெருமூச்சை ஒன்றை வெளியிட்டாள்…
அவளின் முகத்தில் தோன்றும் ஒவ்வொரு உணர்வுகளையும் புருவம் இடுங்க பார்த்தவனுக்கு, “என்னாச்சி கங்கா?” என்றவனை பார்த்து இளம் புன்னகை ஒன்று உதட்டில் பரவிட,
“நேத்து தான் காலேஜ்ல பார்த்தீங்க… இன்னைக்கு காதல்னு வந்து பொக்கே நிட்டுறீங்க… கேட்டா கண்டதும் காதல்னு சொல்லுறீங்க… அப்படித்தானே” என்றவளின் விழிகளில் சலனமில்லை…
நெஞ்சில் சிறு தயக்கமோ, அச்சமோ இல்லை… அவனை நேருக்கு நேராக கண் கொண்டு பார்த்தாள் சிறு படபடப்பின்றி…
“ஏன் கண்டதும் காதல் வர்றது தப்பா?” என தாழ்ந்த குரலில் கேட்க,
“கண்டிப்பா தப்புன்னு சொல்ல மாட்டேன். என் மேல காதல் வந்ததை கூட நான் தப்புன்னு சொல்ல மாட்டேன். ஆனா காதலிக்கிற நிலைமையில் இப்போ மட்டுமில்ல எப்பவும் நான் கிடையாது” என எஃகு போன்ற உறுதியான குரலில் சொல்லிவிட்டு அவனை கடந்து செல்ல முயன்றாள்…
“கங்கா” என ஒலித்த ஆழ்ந்த குரல் அவளை அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் தடுத்து நிறுத்தியது…
“இப்போ என் மேல காதல் வரலைன்னு சொன்னதை வேணும்னா நான் ஒத்துக்கிறேன். ஆனா எப்பவும் காதல் வரக்கூடாதுன்னு இல்லையே. இன்னும் ரெண்டு வருஷம் இதே காலேஜ்ல தான் படிக்கப் போறோம். பார்க்கலாம்” என தீவிரமான முக பாவனையுடன் சொல்லிவிட்டு அவளை கடந்து செல்ல முயன்றவனின் முன்பாக வந்து நின்றாள் கங்கா கண்களில் அதிதீவிரத்துடன்…
அவனைப் பார்த்து சலனமடைந்து ரசித்த பல பெண்களை அவன் பார்த்திருக்கிறான். ஆனால் எந்தவித சலனமும் இன்றி எதிரில் நிற்பவளை பார்க்க, பார்க்க ஒரு வித சுவாரசியம் தான் தோன்றியது…
“வரும் என்னை யார் கல்யாணம் பண்றாங்களோ? அவர் மேல” என கத்தரித்தாற் போன்று சொல்லிவிட்டு போனவளை பார்த்துக் கொண்டிருந்தவனின் தோளில் கைப்போட்டவாறே வந்து நின்றான் சதீஷ்..
“என்னடா தங்கச்சி என்ன சொல்லுறா?”
“கல்யாணம் பண்றவனை தான் காதலிப்பாளாம்”
“இந்த மாதிரி பொண்ணெல்லாம் நமக்கு செட் ஆகாது மச்சி.. வா வா நாம நல்ல பிகரா பார்ப்போம்”
“எனக்கு அவதான் வேணும்.. அவளை நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்” என்றவனை பார்த்து பேயடித்தாற் போல் நின்றான் சதீஷ்…
தணலனனின் பின்புலம் பற்றி தெரிந்தவனுக்கு இந்தத் திருமணம் நடக்காது என்பது நன்றாக தெரிந்தது…
************************
காரில் வேதவள்ளியை அழைத்துக் கொண்டு, காரைக்குடியில் இருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கும் ஒருவரின் வீட்டின் முன்பாக கார் சென்று நின்றது…
“இப்போ ஏன் தேவா இங்கே வந்திருக்கோம்?”
“நீங்க வாங்க முதல்ல” என்றவள் வேகமாக காரில் இருந்து இறங்கி வீட்டின் கதவை உடைக்காத குறையாக தட்டிக் கொண்டிருந்தாள்…
அவள் தட்டிய வேகத்திலும், சத்தத்திலும் வேதவள்ளிக்கு தான் சற்று பயம் கொடுத்தது… அர்த்தராத்திரியில் ஒருவரின் வீட்டை இப்படி தட்டுவதை யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்? என நினைத்தவர் வெளியே சொல்லவில்லை…
அதை தேவாவிடம் சொல்லிவிட்டு யார் அவளிடம் வாங்கிக் கட்டிக்கொள்வது என்ற பயமே? அவரின் வாயை கட்டிப்போட்டது…
“ஜோசியரே! இப்போ வரப்போறீங்களா? இல்லை கதவை உடைக்கட்டுமா?” என அதிகாரமாக கதவை உடைப்பதற்கு ஏதுவாக ஏதாவது கிடைக்குமா? என தரையில் தேட ஆரம்பிப்பதற்குள் கதவு நல்லவேளையாக திறந்து கொண்டது…
“வாங்க ஜோசியரே!! அப்புறம் எப்படி இருக்கீங்க?. வீட்டுல எல்லாரும் சௌக்கியமா?” என நக்கல் தொணியில் கேட்டவளை புருவம் சுருக்கி பார்த்தார் ஜோசியர்…
“தேவாஆஆ. பெரியவங்க கிட்ட இப்படியா பேசுவ?” என அதட்டல் குரலில் கேட்ட வேதவள்ளி சிறு தயக்கத்துடன் ஜோசியரை பார்த்தார்…
“தப்பா நினைக்காதிங்க ஜோசியரே!.. தணலனை ஹார்ட் அட்டாக்னு ஹாஸ்பிடல் சேர்த்திருக்கு… தம்பி மேலே உள்ள பாசத்துல சம்பந்தமேயில்லாம உங்ககிட்ட வந்து சண்டை போடுறா” என்றதுமே ஜோசியர் ஓரளவுக்கு புரிந்து கொண்டார் தேவாவின் மனநிலையை …
“உள்ளே வாங்கம்மா முதல்ல. வெளியவே நின்னு பேசிக்கிட்டு” என கதவை நன்றாக திறந்து வைத்து இருவரும் உள்ளே வருவதற்கு ஏதுவாக சற்று நகர்ந்து நின்றார்…
“நாங்க ஒன்னும் இங்கே உங்க உபசரிப்பை வாங்கிட்டு போறதுக்காக வரலை… உங்களை நாக்கைப் புடுங்கிற மாதிரி கேட்குறதுக்காக வந்திருக்கேன்” என கோபமும், ஆத்திரமும் கலந்து கேட்டவளின் விழகளும் சற்று கலங்க ஆரம்பித்தது…
ஜோசியருக்கு அவளின் கோபத்திற்கான காரணம் புரியவில்லை. வேதவள்ளிக்கு தனக்கு ஏன் இவ்வளவு கோபம்? என்றே புரியவில்லை…
“தேவா எதுக்கு இவ்வளவு கோபம்?” என்ற வேதவள்ளியை எரிக்கும் பார்வை பார்த்தவளின் விழிகளோ குற்றஞ்சாட்டியது ஜோசியரைத்தான்.
“இவர்தான் ஆச்சி இப்போ தணலன் இப்படி ஆகுறதுக்கு காரணம்” என்றவளின் பேச்சை கண்கள் இடுங்க குழப்பமான உணர்வுடன் பார்த்தார்
“இவரா? ஏன்?” என்ற கேள்வி அவரின் மனதுக்குள் விருட்சமாய் வளர ஆரம்பிப்பதற்குள்,
“இவர் சொன்னாருங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் நம்மளோட அந்தஸ்து, சொத்து தகுதி எல்லாத்தையும் மறந்து யமுனாவை பொண்ணு கேட்குறதுக்கு அவ வீட்டு முன்னாடி போய் நின்னேன்” என்றவளின் பேச்சில் சற்று கோபம் துளிர்விட ஆரம்பித்தது வேதவள்ளிக்கு…
யமுனாவை தணலனுக்கு கல்யாணம் செய்து வைக்கலாம் என தேவா சொல்லியதை நினைத்துப் பார்த்தவருக்கு ஏனோ, தேவாவின் இந்தப் பேச்சு அவருக்குப் பிடிக்கவில்லை என்பதை அவரின் முகத்திருப்பலே காட்டிக் கொடுத்தது…
“ஆமா ஆச்சி” என்றவள் சில மாதங்களாக தணலனின் வாழ்க்கையில் நடந்த சில பிரச்சினைகளை சொல்ல ஆரம்பித்தாள்…
ஏனோ சில நாட்களாக தணலனுக்கு பிசினஸில் ஏகப்பட்ட சறுக்கல்கள், மீண்டும் மீண்டும் தோல்வியை தழுவிக் கொண்டிருந்தான்…
இடையில் அவனின் உடல்நிலையும் அடிக்கடி பாதிக்கப்பட, தேவாவிற்கு தம்பியின் மனதும், உடலும் சரியில்லை என்று புரிந்தது…
‘அவனின் கால, நேரம் தான் இப்படி அவனை ஆட்டுவிக்கிறது’ என நினைத்தவள்.. அவர்களின் ஆஸ்தான ஜோதிடர் சிவனடியார் அருணேசன் அவர்களை பார்ப்பதற்கு தணலனின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு வந்தாள்…
உள்ளே நுழைந்தவளை சிரித்த முகத்துடன் எதிர்கொண்டார் சிவனடியார்…
“வாங்கம்மா எப்படி இருக்கீங்க? பெரிய வீட்டுல இருந்து வந்திருக்கீங்க? சமாச்சாரம் அப்போ பெருசு தான்” என்றவாறே கடவுள் முன்பாக இருகரம் கூப்பி, வணங்கி அங்கிருந்த மனைக்கட்டையில் அமர்ந்தார்…
அவரின் முன்பாக சில ஓலைச்சுவடிகளும், ஜோதிட குறிப்புகள் அடங்கிய புத்தகங்களும், பஞ்சாங்கமும் இருந்தது..
“ஜோசியரே! உங்களுக்கு நல்லா தெரியும். நாங்க ஏதாவது தொழில் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி உங்ககிட்ட கேட்காம ஆரம்பிக்கிறது இல்லை.. அதேமாதிரி தான் வீட்டில் நடக்கிற நல்ல காரியங்களுக்கும்” என்றவள் வார்த்தைகளை மெல்ல முழுங்கிக் கொண்டே, தன் கைப்பையில் கொண்டு வந்திருந்த தணலன் மற்றும் நிறை இருவரின் ஜாதகத்தையும் அவரின் முன்பாக நீட்டினாள்…
கடவுளை வணங்கிவிட்டு அந்த ஜாதகத்தை வாங்கியவர் அதை பிரித்துப் பார்ப்பதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை…
தன் முன்னால் தவிப்புடன் அமர்ந்திருந்த தேவாவின் முகத்தைத் தான் ஆராயும் பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். ஏதோ சொல்ல தவிப்பதும், சொல்ல முடியாமல் துடிப்பதும் தேவாவின் முகத்தை பார்த்ததுமே அவருக்கு புரிந்தது…
“சொல்லு தேவா. ஏதாவது பெரிய விஷயமா?”
“ஆமா ஜோசியரே!… என் தம்பியை பத்தி நான் உங்களுக்கு சொல்லணும்னு இல்லை. அவனோட முதல் திருமண வாழ்க்கை இப்படி பாதியில் முடிஞ்சிரும்னு யாருமே எதிர்பார்க்கலை. அதிலிருந்து அவன் மீண்டு வந்ததே பெருசு.. ஆனா இப்போ தொழில்ல மட்டுமில்ல அவனும் மனசளவுல ரொம்ப தளர்ந்துட்டான்…
“பிசினஸ்ல பெருசா எந்தவித ஆர்வமும் இல்லாமல் இருக்கான்.. மனசுக்குள்ள எதையோ போட்டு அழுத்திக்கிட்டே இருக்கான்னு தோணுது. ரெண்டாவது கல்யாணத்தை பத்தி பேசினாலே கோபத்துல பேசாம போயிடுறான்”…
“அதான் அவனோட ஜாதகத்தையும், அவன் பொண்ணு ஜாதகத்தையும் கொண்டு வந்திருக்கேன்.. நீங்க தான் பரிகாரம் சொல்லணும்னு ஜோசியரே” என தான் வந்த நோக்கத்தை பற்றி எடுத்துரைத்தவள் அமைதியாக அருணேசனின் முகத்தை உற்றுப் பார்த்தாள்..
அவரின் முகமோ திவீர சிந்தனை படர்ந்த பாவனையுடன் ஜாதகத்தை கையிலெடுத்தவரின் முகமோ திவீரமாக சிந்திக்க ஆரம்பித்தது…
எதிரில் இருந்த பலகையில் தணலன் மற்றும் நிறையின் ஜாதகத்தை வைத்தவர் உள்ளுக்குள் திடுக்கிட்டுத் தான் போனார்…
அவரின் முகத்தில் தோன்றும் ஒவ்வொரு உணர்வுகளையும் உள்வாங்கிக் கொண்டிருந்த தேவாவின் முகமோ கலவரமானது…
ஏதோ பெரியதாக சொல்லப் போகிறார் என நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு, அவர் அடுத்து சொன்ன வார்த்தையில் தீயிலிட்ட புழுவினைப் போல் துடிக்க ஆரம்பித்தாள்…
கண்களில் கண்ணீரின் ஈரம் உணர்ந்து தான் ‘தான் அழுகிறோம்’ என்பதே தேவாவிற்கு புரிந்தது…
ஆப்ரேஷன் நல்லபடியாக முடிந்தது என டாக்டர் சொல்லும் வரை அங்கிருந்து யாரும் ஒரு இன்ச் கூட அகலவில்லை.
நிறை சிறிது நேரம் மட்டுமே கண்களை மூடினாள்.. கனவிலும் தணலனின் நியாபகமே வியாபிக்க, சட்டென கண்களை திறந்து கொண்டாள்…
அவளின் இமைகள் கூட தூங்க மறுத்தது தணலனனின் நிலையை எண்ணி… “அப்பாஆஆஆ” என்பதை தாரக மந்திரம் போல மனதுக்குள் சொல்லிக் கொண்டே இருந்தவளின் நேரெதிரில் அமர்ந்திருந்தாள் யமுனா…
உள்ளுக்குள் தோன்றிய படபடப்பை மறைப்பதற்காக தன் சேலையை உள்ளங்கைக்குள் பொத்தி வைத்துக் கொண்டிருந்தாள்..
ஐசியூவின் கதவு திறக்கும் வரை ஆடாமல், அசையாமல் அமர்ந்திருந்த கங்கா, நிறை இருவரின் மனதிலும் ஒரே ஒருவனின் நினைவு மட்டுமே…
உறவுகள் வேறாயினும், அவன்மேல் கொண்ட அன்பு ஒன்று தானே.. சட்டென கதவு திறக்கும் ஓசையில் ஒன்று போல் எழுந்து டாக்டரின் முன்பாக நின்ற இருவரின் தோள்களும் உரசிக் கொண்டது…
மெல்ல திரும்பி பார்த்த நிறையின் கண்களில் கோபமும், யமுனாவின் கண்களில் தவிப்பும் இருந்தது…
“டாக்டர் இப்போ அவருக்கு எப்படியிருக்கு?”, “அப்பாவுக்கு எப்படியிருக்கு?” என இரு குரல் ஒன்று சேர்ந்து ஒன்று போல் ஒலித்தது…