தாமரை அப்படி அமர்ந்திருப்பதை பார்க்கவே அத்தனை கஷ்டமாக இருந்தது அங்கைக்கு.
“என்ன தாமரை, யாரோ எதுவோ சொன்னா இப்படியா உட்காருந்திடுவ? அம்மா தேடி வர போறாங்க…” என அவளை அவளின் மோனநிலையிலிருந்து கலைக்க நீர் படர்ந்த விழிகளுடன் நிமிர்ந்து பார்த்தாள்.
“எதுக்கு ஆன்ட்டி எங்களுக்கு இத்தனை கஷ்டம்? இப்படி எல்லாம் பேச்சு வாங்கி ஒரு கல்யாணம் செய்யனுமான்னு இருக்குது. என்னை பேசினவரை பொறுமையா தான் இருந்தேன். பார்த்தீங்க தானே? இதுல நிவி வரைக்கும் இழுத்து…”
“தாமரை அவங்களை மாதிரி ஆளுங்க பேச்சுக்கு முக்கியத்துவம் குடுக்காதம்மா. எங்கடா பத்தி எரியும். குளிர் காயலாம்ன்னு கூட கொஞ்சம் தான் எண்ணெய்யை ஊத்துவாங்க. முதல்ல இதை நினைக்காம இரு…”
“அதெப்படி நினைக்காம இருக்க முடியும்? அதுவும் இவங்களும் உங்க சொந்தம் தானே?…”
“ஆமாடா தாமரை. சொந்தக்காரங்க தான். ஒரு பேச்சுக்கு கூப்பிட்டேன். கூடவே வருவாங்கன்னு நினைக்கலை…”
“வந்தவங்க ஏன் எங்களை இவ்வளவு பேசனும்? அதுவும் அவங்க கதிரை பத்தியும் எப்படி பேசினாங்க? நீங்க கேட்டுட்டே இருக்கீங்க?…” என்றாள் கோபத்துடன்.
“வேற என்னம்மா பன்றது? பேச்சு தப்பு. அதுல கல்லெறிஞ்சா இன்னும் கூடதான் பேசுவாங்க. நாம தான் பேசாம போய்டனும். அதான் நமக்கு மரியாதை…” என்ற அங்கை,
“விஷயம் தெரியாதுல உனக்கு. இவங்களுக்கு பையன் மட்டும் தான். அதனால அவங்க வீட்டுக்காரர் வழி சொந்தத்துல ஒரு பொண்ணை சொல்லி கல்யாணத்தை கண்டிப்பா முடிக்கறோம்ன்னு பேசி பொண்ணு வீட்டுல என்னவோ காரியம் சாதிச்சிருக்காங்க…”
“காரியம்ன்னா?…”
“உனக்கு இதை செய்யறேன். அதுக்கு பதிலா எனக்கு ஒன்னு செஞ்சு குடுன்னு. கதிர் வீட்டுல பொண்ணை பத்தி விசாரிச்சா பொண்ணுக்கு ஏற்கனவே வேற ஒரு பழக்கம். அதுக்கு மேல என்ன விசாரிக்கன்னு ஒரேடியா வேண்டாம்னு சொல்லிட்டாங்க…”
“அப்பறம்…”
“அப்பறம் என்ன அந்த வீட்டுக்கும் இந்தம்மாவுக்கும் பெரிய பிரச்சனை ஆகிடுச்சு. அந்த கோவம் தான். எதுடா சாக்குன்னு தேடி வந்து என்னை கலைச்சுவிட பார்க்குறாங்க…”
“அதுக்குன்னு இப்படியுமா? எங்க குடும்பத்துலயும் இருக்காங்க. என்னவோ பண்ணிக்க, நீ எப்படி பன்றன்னு பார்க்கறோம்ன்னு தள்ளி நின்னு. இப்ப வந்தம்மாவுக்கு அவங்களாம் தேவலை போல…” என்றாள் தாமரை.
அவளின் இந்த பேச்சில் சற்றே நிம்மதியாய் மூச்சுவிட்ட அங்கைக்கு கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்தது.
“ஆனாலும் ஆன்ட்டி, மனசு என்னவோ அடிச்சுக்குது. இப்படி கல்யாணம் பண்ணனுமான்னு. எனக்கு ஒரு பிடிப்பே இல்லாதது மாதிரி தோணுது. இதுமாதிரி எவ்வளவு பேசுவாங்க. கஷ்டப்படறதை தூக்கிவிட ஆளில்லை. தட்டு தடுமாறி எழுந்து நின்னாலும் தள்ளிவிட தான் பார்க்கறாங்க…”
“தாமரை அப்படி எல்லாம் ஏன் நினைக்கிற? இன்னும் ஒருவாரத்துல கல்யாணம். இப்போ போய் வேணுமா வேண்டாமான்னு யோசிக்கிற?…” என்றார் அங்கை.
என்ன இந்த பெண் இத்தனை யோசிக்கிறாள் என்று அதிர்ந்து போய் பார்த்தார் அங்கை.
“தாமரை, என்ன நீ இத்தனை தீவிரமா பேசற?…”
“ரொம்ப வாரி வழிச்சு எடுக்கற மாதிரி இருக்குது. உங்களுக்கு தான் தெரியுமே இப்போ வீட்டோட நிலைமை. இதை எதையும் சரி பண்ணாம நான் மட்டும் சந்தோஷமா இன்னொரு வீட்டுக்கு போறதா? செல்பிஷா இருக்குமே?…”
“ஐயோ அவங்க எல்லாரோட சந்தோஷமே உன் கல்யாணத்துல தான் இருக்குது தாமரை. இவ்வளோ நேரம் தைரியமா பேசிட்டு இருந்துட்டு இப்போ என்ன இது பேச்சு?…” அங்கைக்கு படபடப்பாய் வந்துவிட்டது.
“தைரியமா பேசிட்டேன். ஆனா நினைக்கும் போதே ஒரு மாதிரி கஷ்டமா இருக்குது ஆன்ட்டி. இதுல இருந்து மீண்டு வரதுக்குள்ள…”
“அதை எல்லாம் யோசிச்சா யாருக்கும் கல்யாணம் நடக்காது. நகை கிடைச்சுட்டா இந்த பிரச்சனையுமே தீர்ந்திரும் தானே?…”
“தீர்ந்திரும் தான். கொஞ்சமாவது கௌரவமா கல்யாணம் பண்ணிட்டு போகலாம். எங்கப்பாவுக்கும், அம்மாவுக்கும் மரியாதையா இருக்கும். இன்னைக்கு இந்த லேடி பேசின மாதிரி தானே மத்தவங்களும் பேசுவாங்க?…”
“நீ நினைக்கிறது புரியுது தாமரை. ஆனா சூழ்நிலை அப்படி இல்லை….”
“எனக்கு கதிர்ட்ட இதை பத்தி பேசினா என்னன்னு இருக்கு ஆன்ட்டி…”
“என்ன பன்ற தாமரை? சும்மா இரேன். இன்னும் ஒருவாரத்துல கல்யாணம். நீங்க ஒன்னும் வச்சுகிட்டு போடாம இல்லையே? ஊருக்கே தெரியும் என்ன நடந்ததுன்னு. நீ இப்படி யோசிக்க அவசியமே இல்லை…”
அங்கைக்கு புரிந்தது அவள் உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறாள் என்று. தான் செல்லும் குடும்பத்தின் மரியாதை எப்படியோ தான் குடும்பத்தின் மரியாதையும் அப்படி பார்க்கப்படவேண்டும் என நினைப்பது நிச்சயம் புதிதல்ல.
பெண்கள் அனைவருக்குமான எண்ணம் அது. தனது பெற்றோரை எந்தவகையிலும் கீழிறங்கி பார்த்துவிட கூடாது என்னும் பதைபதைப்பு.
தாமரையின் நினைப்பிலும் தவறில்லை. நல்லவிதமாய் சீர் செய்து நடக்கும் திருமணங்களிலேயே எத்தனையோ இடறுகளும், இளக்காரங்களும்.
பெண்ணின் வீட்டினர் என்னவோ சீர்வரிசைகளை செய்வதற்கென்றே படைக்கப்பட்டதை போல எத்தனை செய்தாலும் குறை கண்டுபிடிக்கும் புகுந்த வீடுகள் இன்னும் பரவலாக காணப்பட தாமரையின் பயத்திலும் நியாயம் இருந்ததை புரிந்துகொண்டார் அங்கை.
“தாமரை நீ போய் முதல்ல தூங்கு. கொஞ்சமும் முகத்துல நிம்மதி இல்லை. தூங்கி எழுந்தா உனக்கு தெளிவா இருக்கும். இதையே நினைச்சுட்டே இருக்காத. வா…” என அங்கையும் தாமரையுடன் தைத்து வாங்கி வந்திருந்த உடைகளுடன் சென்றார்.
“இவ்வளவு நேரமா தாமரை? அப்பா கேட்டுட்டு இருந்தாங்க…” என சரளா மகளை பார்த்து கேட்க,
“நான் தான் பேச்சுல பிடிச்சுக்கிட்டேன் சரளா. இன்னும் புள்ள லீவ் போடாம இருக்கே. அதான் சும்மா பேசிட்டு இருந்தோம்…” என அங்கை சமாளித்தார்.
“ஓஹ், ஆனா இவ ஏன் ஒருமாதிரி இருக்க?…” மகளின் முகத்தை பார்த்து சரளா கேட்க,
“சோர்வா இருக்கா. வேலை வேலைன்னு ஓடிட்டே இருக்கா இல்லையா? அதான். லீவ் போட்டா சரியா இருக்கும்…” அங்கையே பதில் சொன்னார்.
“எங்க கேட்கறா? இன்னும் ரெண்டு நாள் போகட்டும்னு சொல்றா. கல்யாணத்துக்கு பின்னால லீவ் எடுக்கற மாதிரி பார்த்துக்கலாம்ன்னுட்டா…” சரளா சலித்துக்கொண்டார்.
“அதுவும் சரிதான். லீவ் போட்டா வீட்டுக்குள்ளயே மொட்டுமொட்டுன்னு உக்கார்ந்திருக்கனும். கல்யாணத்துக்கப்பறம்ன்னா விருந்துக்கு போக வசதியா இருக்கும். யோசிச்சு தான் சொல்றா…” அங்கை தாமரைக்கு சப்போர்ட் செய்து பேசிக்கொண்டு இருந்தார்.
“அக்கா வந்துட்டியா? ப்ளவுஸ் எப்படி இருக்கு?…” என நிவி வந்ததும்,
“இந்தா நீயே பிடிச்சு பாரு நிவி…” என அங்கை அவளிடம் அந்த பையை நீட்டினார்.
“இன்னுமா பார்க்கலை. ஏதாவது ஆல்டர் பண்ணனும்னா உடனே குடுக்கனும்ல. என்னக்கா நீ?…” என்று அதில் இருந்த ப்ளவுஸ், மற்றும் தனக்கு தைத்திருந்த சுடிதாரை வெளியே எடுத்தாள்.
லெஹெங்கா வேண்டுமென்ற பெண் மறுநாளே உடை எடுக்குமன்று சுடிதாரை தைப்பதற்கு அத்தனை உயர் விலை பட்டு வேண்டாம் என சொல்லி அளவான விலையில் எடுத்துக்கொண்டாள்.
அதற்கென்று சரளா மகளுக்கு ஒரு புடவையுமே எடுத்துவைத்தார் தனியே. யமுனாவின் வீட்டினர் வேறு உடைகள் எடுத்து தந்திருந்தார்கள்.
“உனக்கு முதல் சுடிதார் அளவு பார்த்துட்டு வா நிவி. போட்டு பார்த்துட்டு வா…” என தாமரை சொல்லவும்,
“அதெல்லாம் கரெக்ட்டா தான் தைச்சிருப்பாங்க. எனக்கு எப்பவும் தைக்கிறவங்க தானே? இதுவரைக்கும் அம்மாவோட ஓல்ட் சேரிஸ் என்னோட சுடிதாரா மாறுச்சு. இப்போ பர்ஸ்ட் டைம் ஒரு புது சேரி…” என சிரித்தாள்.
தங்கையின் நிறைவான முகத்தை உள்ளே பொங்கிய வலியுடன் பார்த்துக்கொண்டு இருந்தாள் தாமரை.
ராமேஸ்வரம் சென்று வந்த பின்னர் தனது அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணிடம் அழைத்து சென்று அங்கே லெஹெங்கா எடுத்து தரலாம் என நினைத்து வைத்திருந்தாள் தாமரை.
இப்போது எதற்கும் வழியின்றி இப்படி ஆகிவிட்டதே என இன்னும் உள்ளுக்குள் குமைந்து போனாள்.
“க்கா, நீ என்ன பார்த்துட்டே இருக்க? இதை ட்ரையல் பாரு…” என தாமரையை எழுப்பிக்கொண்டு சென்றாள் நிவேதா.
“என்ன அங்கை அக்கா, ஏன் அவ முகமே மாறி இருக்கு?…” என மீண்டும் சரளா கேட்க,
“எல்லா பொண்ணுங்களை மாதிரி தான். கல்யாணம் ஆனதும் வீட்டை விட்டு பிரிஞ்சு போகனுமேன்னு கவலை. அதுவும் இப்ப இருக்கற நிலையில. அதான் டல்லா இருக்கா….” என்ற அங்கை,
“முதல்ல இப்படி உத்து உத்து பார்த்துட்டே இருக்காம வேலையை பாரு. அவ முன்னாடி நீங்களும் சந்தோஷமா இருங்க. உங்க முகத்தை பார்த்து தான் அவள் தெளிவா இருப்பா. நிவி சின்ன பொண்ணா இருந்தாலும் உடனே அவ எப்படி பார்த்துக்கறா…”
அங்கை சொல்வதில் இருந்த உண்மையில் சரளாவும் ஆமோதிப்பாக தலையசைத்தார்.
“சரி நான் கிளம்பறேன். அவர் சாப்பிட வந்திடுவார்….” என எழுந்துகொண்டார்.
“உங்க மகன் எப்போ வரான்? கல்யாணத்துக்கு வருவானா?…” என சரளா கேட்க,
“லீவ் கேட்டிருக்கேன்னு சொன்னான். பார்ப்போம். இங்க இல்லாத காலேஜ்ன்னு டெல்லி போய் படிக்கனும்னு நின்னு சேர்ந்துட்டு இப்ப நினைச்ச நேரம் பார்க்க முடியுதா?…” என்றபடி அங்கை சென்றார்.
அங்கை கிளம்பி சென்றதும் நிவேதா உடைகளை எல்லாம் எடுத்து பார்த்துவிட்டு ஒன்றுபோல எடுத்து மடித்து வைத்தாள்.
“நல்லவேளை நானே சொல்லனும்னு இருந்தேன். நீயே மடிச்சு வச்சுட்ட…” என சரளா வர,
“ஏன்ம்மா என்ன சொல்லனும்?…”
“தாமரை ப்ளவுஸ் எல்லாம் தனியா எடுத்து வை நிவி. மாப்பிள்ளை வீட்டுக்கு குடுத்து விடனும். அவங்க தான் இதை சபையில தட்டுல வச்சு நம்மக்கிட்ட குடுப்பாங்க….”
“ஆமாம்மா, எனக்கு மறந்து போச்சு. இப்ப வைக்கறேன்…” என நிவேதா தனியே எடுத்து வைக்க மாடிக்கு சென்றாள்.
“என்ன தாமரை ப்ளவுஸ் சைஸ் எல்லாம் சரிதானா?…”
“பார்த்துட்டேன்ம்மா. கரெக்ட்டா இருக்கு…” என சொல்ல,
“நாளைக்கு எந்நேரம் போய் செயின் வாங்கனும்? நீயும், நிவியும் போய்ட்டு வந்திடறீங்களா?…” என சரளா கேட்க,
“நிவி காலேஜ்ல இருந்து வர லேட் ஆகும். நான் ஆபீஸ் முடிச்சதும் அங்க போய் வாங்கிட்டு வீட்டுக்கு வரேன்…”
“அப்ப நைட் ஆகிடுமே தாமரை..”
“அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா. பார்த்துக்கலாம்…”
“பத்தரமா கொண்டு வரனும். நீ வேற ஸ்கூட்டில போவ…” சரளாவுக்கு நடுக்கமாய் இருந்தது.
ஏற்கனவே அத்தனையையும் பறிகொடுத்துவிட்டு நிற்பவர்கள். மகள் நகைக்கடையிலிருந்து கிளம்புவதை யாராவது நோட்டமிட்டு தொடர்ந்து வந்து வழிப்பறி செய்து மகளுக்கும் ஏதாவதென்றால்?
சரளாவின் எண்ணங்கள் நாலாபக்கமும் யோசித்தது. அவரின் பயம் அப்படி யோசிக்கவைத்தது.
“ம்மா, என்ன நினைக்கறீங்க?…”என்றாள் மகள்.
“ஹ்ம்ம், ஒண்ணுமில்லைம்மா. நீ தனியா போக வேண்டாம். ஒன்னு பண்ணலாம். இதை மாமாக்கிட்டையோ, அங்கை வீட்டுக்காரர்கிட்டையோ குடுத்து வாங்கிட்டு வர சொல்லுவோமா?…” என சொல்லவும் தாமரை முறைத்தாள்.
“சும்மா இருங்கம்மா, ஏன் அடுத்தவங்களையே இழுத்துவிடறீங்க? அவங்களை எவ்வளவு தான் தொந்தரவு செய்ய? எனக்கு கஷ்டமா இருக்குது. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நான் நிவியோடவே போய்ட்டு வரேன்….”
தாமரை சொல்லிவிட்டு கட்டிலில் கோபமாய் அமர்ந்துகொள்ள சரளாவால் ஒன்றும் பேசமுடியவில்லை.
தாமரைக்கு மனதெல்லாம் நிவியிடம் உள்ள பணம் மறுநாளைக்கு அத செயின் மோதிரத்திற்கு பத்துமோ பத்தாதோ என்று தான்.
பணம் போதவில்லை என்றால் தனது கையில் இருக்கும் மோதிரத்தை வைத்துவிட்டு அந்த நகையை வாங்கிவிடலாம் என நினைத்து யாரையும் அனுப்ப வேண்டாம் என முடிவெடுத்தாள்.
அது புரியாமல் சரளா பேசவும் இதுவும் அதுவும் சேர்ந்து அவளை குரல் உயர்த்தி பேச வைத்துவிட்டது.
சரளாவின் அதிர்ந்த முகத்தை பார்த்தவளுக்கு பாவமாகிவிட எழுந்து அணைத்துக்கொண்டாள் தாயை.
“ம்மா, ப்ளீஸ். என்னால முடியலை. நான் சொன்னா அதுல ஒரு காரணம் இருக்கும் தானே? புரிஞ்சுக்கோங்க. இப்படி இருக்காதீங்க. மாமா வந்திருவாங்க இல்லையா? நீங்க போங்க. கொஞ்சம் நேரத்துல நானே வரேன்…” என சொல்லி அனுப்பி வைத்தாள் தாமரை.
சரளா அறையை விட்டு வெளியே வர அப்போதுதான் நுழைவதை போல அங்கை வந்துகொண்டு இருந்தார்.
பேசியதை கேட்டிருப்பாரோ என சரளாவின் முகம் சங்கடமாய் மாறியது. அதை எல்லாம் காட்டிக்கொள்ளாத அங்கை,
“கறிவேப்பிலை இல்லை சரளா. அதான் வாங்கிட்டு போகலாம்ன்னு வந்தேன். அவர் வரதுக்குள்ள சட்னி செய்யனும்…” என்றார்.
“அதுக்கென்ன? நிறைய இருக்கே…” என சரளா எடுத்து தரவும் வாங்கிக்கொண்டு கிளம்பினார்.
எப்போதும் போல சிரித்தமுகமாகவே சாதாரணமாக பேச அங்கை எதுவும் கேட்கவில்லை என சரளா நினைத்துக்கொண்டார்.
ஆனால் அத்தனையும் அங்கை கேட்டிருந்தார். வருத்தமாகவும் இருந்தது அவருக்கு.
தாமரையும், அவர்கள் குடும்பமும் உதவி கேட்க கூட இத்தனை யோசிக்கிறார்களே என நினைத்து வருந்தியபடி இருந்தவர் யமுனாவிடம் சொல்லலாமா வேண்டாமா என்னும் யோசனையிலேயே இருந்தார்.
தவசியிடம் கூட இதை பற்றி தெரிவிக்கவில்லை. வீட்டில் அந்த பெண்மணி வந்து பேசியது தெரிந்தால் நேரடியாக போன் போட்டு பேசிவிடக்கூடியவர் தவசி.
அதனால் எதையும் காட்டிக்கொள்ளாமல் இருந்தவருக்கு இதை கதிரிடம் பேசினால் என்ன சென்று தோன்ற மறுநாள் காலை ட்ராவல்ஸ் எண்ணிற்கு அழைத்துவிட்டார்.
முதலில் தீபக் தான் எடுத்தான். கதிர் இன்னும் வரவில்லை என்றதும் தனது பெயரை சொல்லி வரவும் அழைக்குமாறு சொல்லிவிட்டு வைத்துவிட்டார்.
கதிரின் எண்ணிற்கே அழைத்தால் அந்த நேரம் அவன் வீட்டிலிருந்தால் பேசவும் முடியாது. அதனோடு யமுனாவும் என்ன ஏதென்று கேட்பார் என்றே அமைதியாக இருந்துகொண்டார்.
அதனால் ட்ராவல்ஸிற்கு வந்ததும் அவனே அழைக்கட்டும் என இருந்தார் அங்கை.
அவர் அழைத்ததென்னவோ மாலை நகை வாங்க செல்லும் பொழுது தாமரைக்கு துணையாக செல்ல முடியுமா என கேட்க தான்.
தவசியிடம் சொல்லிவிடலாம். ஆனால் அவர்களாக அழைக்காமல் நான் போய் வாங்கி வருகிறேன் என சொல்ல முடியாதே.
அதனால் கதிரிடம் சொல்லி அவனை அனுப்ப முடியுமா என யோசித்தார். அதனோடு இருவரும் பார்துக்கொண்டால் கொஞ்ச குழப்பம் தெளிந்து தாமரையின் மனநிலை மாறும் என்றும் யோசித்தார்.
சரளாவிடம் அவரின் வீட்டில் அமர்ந்து மதிய உணவிற்கான காய்களை வெட்டிக்கொண்டே பேசிக்கொண்டு இருந்தார் அங்கை.
திருடு போனதில் இருந்து சரளா வீட்டை விட்டே வெளி வருவதில்லை. வெளியேவும் ஏதேனும் சிறு சத்தம் கேட்டாலும் பதறி போய் பார்ப்பார். அந்தளவுக்கு பயந்தும் போய் இருந்தார்.
இனி திருடி செல்ல எதுவும் இல்லை என்றாலும் கையில், கழுத்தில் இருப்பவற்றை பறித்துக்கொண்டால் என்று அச்சப்பட்டுகொண்டே தான் இருந்தார்கள்.
இரவுறக்கம் நிம்மதியா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. அரைவுறக்கம், அதிலும் ஆழ்ந்த தூக்கம் இன்றி அவ்வப்போது எழுந்து வீட்டை வலம் வருவதும், வெளியே புதிதாய் யாரின் நடமாட்டமும் தட்டுப்படுகிறதா என ஜன்னலின் வழியே பார்ப்பதும் என அவர்களின் நடைமுறையே மாறிப்போனது.
தங்களை போல இன்னொரு குடும்பமும் பாதித்துவிட கூடாதென்று ஒருமுறை சரளா புலம்பியிருக்க அங்கைக்கு இப்போதைக்கு அவர்கள் இதிலிருந்து மீளபோவதில்லை என புரிந்துபோனது.
அதனாலேயே வீட்டில் வேலை முடிந்துவிட்டால் துணைக்கென்று இங்கு வந்து இருந்துகொள்வார்.
முன்பே அங்கையும், சரளாவும் நல்ல பழக்கம் தான். கடைகண்ணிக்கென்று வெளியே செல்வதும், வருவதும் கூட இருந்தது.
இப்போது சரளா எங்கும் நகராமல் போக அங்கை துணையாகி போனார் சரளாவுக்கு.
இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள் என்றைக்கு பந்தல் போட ஆட்கள் வருகிறார்கள் என்பதை பற்றி.
அந்த நேரத்தில் கதிர் அழைத்துவிட அங்கை எழுந்துகொண்டார். சரளாவிடம் சொல்லிவிட்டு தனது வீட்டிற்கு வந்தாள்.
“என்ன சித்தி முதல்ல கூப்பிட்டேன் ரிங் போய்ட்டே இருந்தது…” என கதிர் கேட்க,
“தாமரை வீட்டுல இருந்தேன் கதிர்…”
“ஓஹ், சரி. அங்க எல்லாரும் ஓகே தானே?…” என கேட்டதும்,
“இல்லப்பா. என்னன்னு சொல்ல? இப்போதைக்கு அவங்க எங்க சரியாக? நகை திரும்ப கிடைச்சா தான் ஓரளவு தேறுவாங்க…”
“ஹ்ம்ம், பார்த்துட்டு இருக்காங்க சித்தி. நானும் நேத்து கூட அவங்க மாமாவோட ஸ்டேஷன் போய்ட்டு தான் வந்தேன்…”
“என்ன சொன்னாங்க கதிர்?…”
“வழக்கம் போல தான. ஆனா முன்னை விட இப்போ கொஞ்சம் நல்லா தேடறாங்க போல. பார்ப்போம். கிடைக்கும்ன்னு நம்புவோம்…” என்றவன்,
“என்ன சித்தி எதுவும் விஷயமா? மொபைலுக்கு கூப்பிடாம இங்க கால் பண்ணிருக்கீங்க?…” என்றான்.
“ஆமாப்பா. நகை ஆடர் குடுத்திருந்த இடத்துல இருந்து போன் வந்திருக்கும் போல?…”
“ஓஹ், போய் வாங்கனுமா? நான் பார்த்துக்கறேன் சித்தி…” என்றதும்,
“இல்ல இல்ல. அதை தாமரை ஏற்பாடு பண்ணிட்டா. ஆனா சரளா பயப்படறாங்க. அவங்களுக்கு ஏற்கனவே ஒரு சந்தேகம். கல்யாண வீடு. நகையை பாலீஷ் பண்ண குடுத்துட்டு வாங்கிட்டு வந்ததை நோட் பண்ணி தான் யாரோ இதை பண்ணிருக்கனும்னு…”
“எனக்கும் அதை சந்தேகம் இருக்குது சித்தி. தெரியாம யாரும் பண்ண வாய்ப்பில்லை….”
“அதான் சொல்ல வரேன். நீ துணைக்கு போக முடியுமா? நானே சித்தப்பாவை அனுப்பலாம்னு நினைச்சேன். ஆனா ரொம்ப தொந்தரவு பன்றோமோன்னு வருத்தப்படறா தாமரை…” என்றதும் அங்கை சொல்லவருவது புரிந்தது கதிருக்கு.
“நான் பார்த்துக்கறேன் சித்தி. இந்த நேரத்துல நாம செய்யற உதவி கூட சங்கடமா தான் பீல் ஆகும். என்கிட்டே சொன்னதாவே இருக்கவேண்டாம். நான் தற்செயலா போற மாதிரி போய்க்கறேன்…” என்றான்.
“ஏற்கனவே ரொம்ப வேதனைல இருக்கற பொண்ணு. இருக்கற வேதனை போதாதுன்னு நம்ம பக்கத்துல வந்து வாய்க்கு வந்தபடி பேசி நொந்து போய் இருக்கா…” என பேச்சுவாக்கில் அங்கை உளறிவிட,
“யார் சித்தி? யார் வந்தாங்க?..” என்றான் கதிர் உடனே.
அங்கைக்கு தூக்கிவாரிபோட்டது. இப்படி சொல்லிவிட்டோமே என தலையில் அடித்துக்கொண்டார் மானசீகமாய்.
“சித்தி, கேட்கறேன்ல. உண்மையை சொல்லுங்க…” என்றவனின் குரலில் நடந்ததை எல்லாம் சொல்லிவிட்டவர்,
“கதிர் அம்மாக்கிட்ட எதையும் பேசவேண்டாம். கல்யாணம் முடியட்டும். நமக்கு அதுதான் முக்கியம். இதை எல்லாம் பெருசு பண்ண வேண்டாம். பேசறவங்க ஆயிரம் பேசுவாங்க…” என அங்கை சமாளிக்க,
“தாமரை என்ன சொன்னா சித்தி?…”
“தைரியமா தான் அவங்கட்ட பேசினா…” என தாமரை பேசியதையும் சொல்லியவர்,
“ஆனா அவங்க கிளம்பவும் ரொம்ப நொடிஞ்சு போய்ட்டா. அழுகலை அவ்வளோ தான். இப்படியா அந்த பொண்ணையும், குடும்பத்தையும் இந்த கடவுள் சோதிக்கனும். ரொம்ப மரியாதை பார்க்கிற பொண்ணு. இந்த கல்யாணத்தால பிறந்தவீடு கௌரவம் குறையுமோன்னு பயப்படறா…” என்றார்.
“ஓகே சித்தி நான் பார்த்துக்கறேன். நீங்க சொன்னதுக்கு தேங்க்ஸ்…” என்று சொல்லி போனை வைத்துவிட்டான் கதிர்.
அரைமணி நேரம் ஆகியிருக்கும். தீபக்கை ட்ராவல்ஸ் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான் தாமரையை பார்ப்பதற்காக.
அவனுக்கு அவளை பார்த்தாகவேண்டும், பேசியாகவேண்டும் என தோன்றவுமே அவளின் முன்னே பிரசன்னமானான்.
தாமரை இப்படி கதிர் சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்பான் என்பதை எதிர்பார்க்கவே இல்லை.