உன் சுவாசம் என் மூச்சில் ……2 .1
“ அம்மா இந்தாம்மா கறி” என கூறிய பையை நீட்டிய கணேஷிடம் பையை வாங்கிவைத்துவிட்டு
“ டேய் தம்பி ரத்தம் வாங்க சொல்ல மறந்துட்டேன்டா” என கூறிய தெய்வானையிடம்
“ அம்மா அது எல்லாம் வாங்கியாச்சு. வேற என்னமும் வேணுமா??”
“ வேற ஒன்னும் வேணாம். எல்லாம் இருக்கு. சட்டுன்னு சமையலை முடிச்சுடுவேன்” என கூறிக்கொண்டு சமையல் வேலையை பார்த்துக்கொண்டிருந்த தெய்வானையிடம் ஒன்றும் கூறாது அமைதியாக சிறுதுநேரம் யோசனையில் இருந்த கணேஷ் பின்,
“ ஏம்மா நம்மவீட்டுல திருவிழா விருந்து இப்பாவது உன் மருமகளை ஊருக்கு அனுப்பாம இருந்துருக்கலாம்ல??” என கேட்ட கணேஷிடம்
“ டேய் என்னடா நீ அங்க அண்ணனுக்கும் அண்ணிக்கும் ஒத்த பொண்ணு சாரதா. அவங்களுக்கும் அடிக்கடி பார்க்க ஆசை இருக்கும்ல. அதான் ஊருக்கு போயிருக்கா”
“ அதுக்குன்னு மாசத்துல நாலுதடவையாம்மா??…”
“ என்ன இப்போ அவ ஊருக்கு போயிருக்கா எனக்கு சமைக்க கஷ்டமா இருக்கு வேலைக்கு ஒத்தாசை தேவைப்படுத்துன்னு சொன்னேனாக்கும். போடா…..” என கணேஷ் தன் மீது அக்கரையில் பேசுவதாக நினைத்துக்கொண்டு தெய்வானை சிறு சிரிப்புடன் கூற
“ உனக்கு பிரச்சனை இல்ல. ஆனா எனக்கும் ஒரு பொண்ணு தான். நானும் என் பொண்ணை பக்கத்துல வச்சு பார்த்துகணும்ன்னு நினைப்பேன்ல. அதுலயும் அடுத்த வருஷம் என் பிள்ளையை L.K.G சேர்க்கணும். சும்மா அப்பா வீட்டுக்கு பொட்டிய கட்டுனா உருப்படுமா???” என கணேஷ் தெய்வானையிடம் எரிந்து விழ,
என்றும் இல்லாது இன்று சாராதா ஊருக்கு சென்றதற்கு கோவப்படும் கணேசனை கண்டு அதிர்ந்த தெய்வானை,
“ டேய்!!!…. அவ….. உன்கிட்ட சொல்லிட்டுதானே போனா??”
“ ஹ்ம்ம்….. சொன்னா…… என்னன்னு??… நான் அத்தைகிட்ட சொல்லிட்டேன், என்னைய அத்தை ஊருக்கு போக சொன்னாங்க, அத்தை என்ன ஊருக்கு போகலையான்னு கேட்டாங்கன்னு சொல்லி சொல்லியே கிளம்பிடுவா. சரி நானும் உங்களுக்காகவும் மாமாவுக்காகவும் பார்த்தா அதிகமாதான் போறீங்க. இனி ஊருக்கு போறேன்னு சொன்னா இல்ல நீ போகச்சொல்லி என்கிட்டே கேட்டா அப்புறம் பாரு தெரியும் இந்த கணேஷை பத்தி” என மீண்டும் கத்தி விட்டு கணேஷ் சென்று விட அதில் அதிந்து நின்ற தெய்வானையிடம்,
“ தெய்வா ரத்தம் கொதிக்குதுப்பாரு…….” என கூறிய சுவாமிநாதனை கண்டு தெய்வானை முறைக்க
“ அட!!…. என்ன தெய்வா நான் அடுப்புல வச்சுருக்குறதை சொன்னே” சிறு சிரிப்புடன் கூறிவிட்டு சுவாமிநாதனும் சென்றுவிட,
‘ எல்லாம் இந்த மனுஷன் பண்ணுன வேலையா இருக்கும் போல. சும்மா இருந்தவனுக்கு இவரு சலங்கையை கட்டிருப்பாரு. இங்கே வந்து ஜிங்கு ஜிங்குன்னு குதிச்சுட்டு போறான். இதுல அண்ணனை எப்பிடி சமாளிக்க’ என யோசனையுடன் சமையல் வேலையை தொடர்ந்தார்.
கணேஷிற்கும் சாரதாவிற்கும் திருமணம் முடிந்து ஐந்து வருடம் முடிந்து அருளாசினி என்ற நான்கு வயது பெண்குழந்தையும் உள்ளது. சாரதாவிற்கு திருமணம் முடிந்து மூணாவது மாசம் கர்ப்பமாக மசக்கை, பிரசவம் பின் குழந்தையை சமாளிக்க முடியவில்லை அம்மாவிற்கு முடியவில்லை என காரணங்களை கூறி வருடத்தில் அதிக நாட்கள் பிறந்த வீட்டில் இருக்க அதில் சுவாமிநாதனுக்கு ஏக கடுப்பு.
அதனை மேலோட்டமாக பலமுறை கூறியும் தெய்வானையும் கணேஷும் கண்டுகொள்ளவில்லை. சாரதா எப்பொழுதும் ஸ்வாமிநாதனிடம் அதிக பேசமாட்டாள்.
இத்தனைக்கு கணேஷ் சாரதா திருமணத்திற்கு முன்பே தெய்வானை சுவாமிநாதனின் இரண்டாவது பிள்ளை வாணிக்கும் இரு வருட இடைவெளியில் பிறந்த மூன்றாவது பிள்ளை ஜெயாவுக்கும் பக்கத்தூரான சாஸ்திரப்பட்டியில் ஒரே குடும்பத்தில் உள்ள அண்ணன் தம்பிக்கு திருமணம் செய்துவிட்டனர்.
அதோடு இங்கு வீட்டில் சமையல் வேலை முதல் அனைத்தும் தெய்வானையை செய்துவிட இங்கு ஒரு வேலையும் பிரச்சனையும் இல்லாத நிலையிலும் சும்மா சும்மா அம்மா வீட்டிற்கு சென்றுவிடும் சாரதாவை எண்ணி எப்பொழுதும் ஏற்படும் சலிப்பைவிட இன்று கணேஷிற்கு கோவம் வந்தது ஏனோ தெய்வானைக்கே ஆச்சிரியம்தான்.
சமையல் வேலையை முடித்துவிட்டு பாத்திரத்தை கொல்லைப்புறத்தில் போட்டு விளக்க ஆரம்பித்த தெய்வானை சிறுது நேரத்தில் கதிர் யாருடனோ சத்தம் போடுவதை கேட்டு வேகமாக வாசலுக்கு செல்ல அங்கு வாணியும் ஜெயாவும் தங்களது பிள்ளைகளுடன் நிற்க கதிர் அவர்களை முறைத்துக்கொண்டிருந்தான். அதனை கண்டு,
“ டேய்!!…. டேய்!!… என்னடா??… என்ன??.. ஏன்… வந்த பிள்ளைகளை வீட்குள்ள விடாம சண்டைக்கு நிக்குற??” என தெய்வானை குரலை உயர்த்தி கேட்க
“ நல்லா கேளும்மா இதுக்குதான் வர சொன்னியா விருந்துக்கு??” என ஜெயாவும் கோவமாக கத்த
“ என்னமா ஜெயா அவனை பத்திதான் தெரியும்ல. உள்ள வாத்தா. வாணி நீயும் வா. ஹே….. பேர பிள்ளைகளா அம்மாச்சிகிட்ட வாங்க” என கூறி அனைவரையும் தெய்வா வீட்டினுள் அழைக்க
“ ஏம்மா இங்க நான் ஒருத்தன் நிக்குறேன்ன்ல உனக்கு தெரியலையா இல்ல இவன்லாம் ஒரு ஆளுன்னு யோசிக்குறியா??” என கதிர் தெய்வானையிடம் கேட்க காலையில் இருந்து அனைவரிடமும் பேச்சு வாங்குனதில் சோர்ந்த தெய்வானை கதிரிடம் பதில் கூறாது வாணியிடம்,
“ என்ன வாணிமா என்ன அச்சு ஏன் இப்போ உன் தம்பி ஐய்யனாருகணக்கா நிக்கிறான்” என சோர்ந்த குரலில் கேட்ட தாயின் முகத்தில் களைப்பை கண்ட வாணி கதிரின் கையை பிடித்துக்கொண்டு வேகமாக வீட்டினுள் இழுத்துக்கொண்டு சென்றுவிட அவர்களை தொடர்ந்து ஜெயாவும் தெய்வானையும் பிள்ளைங்களுடன் வீட்டிற்குள் சென்றனர்.
“ என்னடா உனக்கு இப்போ இனிமே நாங்க தனியா வரல சரியா. ஒன்னு எங்க வீட்டுகாரவங்களோட வரோம் இல்ல உனக்கு போனை போட்டு கூட்டிட்டுப்போக சொல்றோம் சரிதானே என வாணி கதிருடன் சமாதானத்தில் இறங்க,
கதிரோ, “ அதுசரி ஆனா இப்போ தனியா வந்திங்கள்ல அதுக்கு நான் ரெண்டு மாமா கிட்டயும் பேசணும்” என கூற இதனை கேட்டுக்கொண்டு வீட்டினுள் வந்த ஜெயாவோ,
“ டேய்!!…. உனக்கு என்ன இப்போ நாங்க என்ன சின்ன பிள்ளையா எங்களுக்கும் கல்யாணம் ஆகி ஆளுக்கு ரெண்டு பிள்ளையை பெத்து வச்சுருக்கோம் சும்மா ஒன்னொன்னுக்கும் எதாவது சொல்லிக்கிட்டு இருக்காதா” என எகுற
“ என்ன சின்ன பிள்ளை இல்லையா??…. இங்க பாருக்கா பிறந்த குழந்தைல இருந்து மண்ணுக்குள்ளே போற வயசு வரைக்கும் இங்க பொம்பள பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்ல. அதோட சும்மாவா வந்துருக்கிங்க??…..
கழுத்துல என்னமோ தேரு இழுக்குற வடம் (கயிறு) மாதிரி போட்டுட்டு பிள்ளைகளுக்கும் நகையை அள்ளி போட்டுட்டு வந்துருக்கிங்க. எவனாவது செயின பரிச்சா கழுத்துல காயம் எல்லாம் வராது கழுத்தே வந்துரும் போல. அவ்வளவு பெரிசா போட்டுருக்க.
நம்ம வீட்டுக்கு தானே வர எங்களை பார்க்க வந்துருகியா இல்ல நகையை காட்ட வந்தியா??” என கதிர் பேச ஏனோ ஜெயாவுக்கு கண் கலங்கிவிட்டது.
“ இங்க பாரும்மா உங்களை பார்க்க அம்புட்டு ஆசையா வந்தா இவன் என்ன பேசுறான்னு. என்னமோ போலீஸ்க்கு பரிட்சை எழுதிட்டா இவன் போலீஸ் மாதிரி பேசுறான்” என தெய்வானையிடம் கூறிய ஜெயாவை கண்டு
“ இங்க பாருக்கா நான் பாஸாகி போலீஸ் ஆகுறேன் ஆகல. ஆனா நான் உன் தம்பிதானே??…. அது மாறாதுல. நான் எப்பவும் இப்படித்தான் பேசுவேன். மாமா ரெண்டு பேருகிட்டையும் பேசுன பிறகுதான் ஊருக்கு போக முடியும்” என கூறிவிட்டு கதிர் சென்றுவிட
“ இவன் பேசுனப்பிறகு நாங்க எங்க புருஷன் வீட்டுக்கு போக இங்கயே இருந்துட வேண்டியதுதான். வாயாம்மா அது????….. கொஞ்சம் கூட மட்டு மரியாதை இல்லாம பேசுவான்” என ஜெயா கூற
“ சரிவிடு ஜெயா அப்பாட்ட சொல்லி பேச சொல்லுவோம். நீங்க ஏன் மாப்பிளைக்கூட வரல” என தெய்வானை கேட்க
“ யம்மா!!…. சும்மா கடுப்பேத்தாத சொல்லிட்டேன்” என ஜெயா எரிந்து விழ
“ ஏய்”!!…. சும்மா இருடி அம்மாகிட்ட எதுக்கு கத்துற??” என வாணி திட்டிவிட்டு தெய்வானையிடம்
“ அம்மா நாங்க எல்லாரும் ஒன்னாதான் கிளம்புனோம் சரியா பஸ் ஏறப்போறப்ப கடைல ஜமானை இறக்கனும்ன்னு மாமனாரு போனை போட்டாரு. உடனே உன் பெரிய மாப்பிள்ளையும் சின்ன மாப்பிள்ளையும் பஸ் ஏத்திவிட்டுட்டு கடைக்கு கிளம்பிட்டாங்க. நாங்க என்ன செய்றது” என வாணி கூறியவுடன்
“ ஏன்மா சும்மா சும்மா இந்த கதிரு எதாவது சொல்லிக்கிட்டு இருக்கான் இப்படித்தான் கல்யாணத்துக்கு முன்னாடி கொலுசு போட்டு மாடு மாதிரி ஜங்கு ஜங்குன்னு நடக்காத சத்தமா சிரிக்காத சத்தமா பேசாத இப்படி ஏதாவது சொல்லிகிட்டே இருப்பான்.
அதனால நான் எப்படா கல்யாணம் பண்ணி வேற வீட்டுக்கு போவோம்ன்னு இருந்துச்சு. இப்பாவது நிம்மதியா இருக்க விடுறானா அதுவும் இல்ல. நகை போடாத தனியா வராதன்னு ஆயிரெத்தெட்டு குறை சொல்லிக்கிட்டு திரியுறான்” என ஜெயா புலம்ப
“ சரி விடுடி பார்த்துக்கலாம். இருங்க குடிக்க எதாவது தாரேன்” என கூறிவிட்டு தெய்வானை சமையல் அறைசென்றுவிட
“ அக்கா நிஜமா கதிரை கட்டிக்குற பிள்ளை பாவம்தான் என்னன்னு இவனை சமாளிக்க போகுதோ” என ஜெயா வாணியிடம் புலம்ப
“ நீ வேறடி. இப்போ இப்படி இருக்கறவன் பாரு பொண்டாட்டி வந்தவுடன் அவ பேச்சை தட்டாம கேட்பான்” என வாணி சிறு சிரிப்புடன் கூற
“ நீ இன்னும் இந்த கதிரை நம்புறியாக்கும். பாரு அந்த பிள்ளை இவன் பேச்சு தாங்காம கதற போது”
“ இல்ல ஜெயா இவன்தான் வரவகிட்ட கதறுவான்” என வாணி பேசிக்கொண்டிருக்கையில்,
கையில் நீர்மோருடன் வந்த தெய்வானை, “ என்ன யாரு கதறுவாங்க” என கேட்க ஜெயா சிரிப்புடன் பேசியதை கூற தெய்வானை,
“ அட!!….. நீங்க வேற காலையில என்ன நடந்துச்சுன்னு தெரியுமா???” என கதிருக்கு பெண் பார்த்த விஷயத்தை கூறி அதற்கு கதிர் கூறிய பதிலையும் கூறி,
“ இதுல உங்க அப்பாவுக்கு ஏத்தம் வேற என்னைய நக்கல் பண்ணிகிட்டே இருக்காரு” என கூறி பெருமூச்சினை வெளியேற்றிய தெய்வானையை கண்டு வாணியும் ஜெயாவும் ஒரு சேர முறைக்க,
“ என்னங்கடி என்னைய முறைக்குறிங்க??”
“ பின்ன நீ அண்ணனுக்கு கல்யாணம் பண்ணிவச்சததான் பார்த்தோமே” என ஜெயா கூற தெய்வானையோ
“ என்னடி ஆளாளுக்கு சாராதவையே ஏதாவது சொல்றிங்க” என கேட்க
“ பின்ன என்னமா அந்த பிள்ளை வீட்டுல ஒழுங்கா அண்ணங்கூட குடும்ப நடுத்துதா??….. இல்ல எங்களோடதான் நல்லா பேசுதா??….. நாங்களே எப்போதாவதுதான் வரோம் அப்பயும் அந்த ரூம்குள்ள அடைஞ்சுக்கும். இதுல கதிருக்கு நீ பொண்ணு பார்க்குறியாக்கும்” என வாணி கேட்க
ஜெயாவும், “ கதிருக்கு நீ உன் அண்ணன் யாரும் பொண்ணு பார்க்க வேணாம் நாங்களோ இல்ல அப்பாவோ பார்த்துக்குறோம்” என ஜெயா கூறிவிட்டு உள்ளே சென்றுவிட தெய்வானைக்கு மனதில் பெரிய அடி.
வீட்டில் எந்த முடிவாகினும் தெய்வானை ஸ்வாமிநாதனிடம் கேட்பதுபோல கேட்டாலும் அவர் விருப்பப்படி நடத்திக்கொள்வார். இதில் பிள்ளைகளையும் பேசி பேசி அவரின் முடிவுக்கு ஒத்துக்க வைத்துவிடுவார். இதில் கதிர் கல்யாணத்துக்கு மட்டும் அனைவரும் இவருக்கு எதிராக இருப்பது ஏனோ எரிச்சலை கிளப்ப கதிருக்கு தான் பார்க்கும் பெண்ணுடன் தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.