அவளுக்கெங்கே தெரிய போகிறது கதிரவன் எழில்விழி தம்பதியின் முப்பது ஆண்டு திருமண வாழ்வில் இன்றுதான் எழில்விழி இவ்வாறு பேசி இருக்கிறாள் என.
இவ்வாறு மாமியார் மருமகள் இருவரும் பேசிக்கொண்டே சமையலை முடிக்கும் தருவாயில் வெளியே சத்தம் கேட்க எழில்விழி வாசலுக்குச் சென்று பார்க்க,
அங்கு துளசியின் நான்கு வயது இரட்டை செல்வங்களான வதன் வதனி கதிரவனோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அதனைக் கண்டு எழில்விழி வேகமாக அவர்களை நெருங்கும் பொழுது வதனி,
“ கதி தாத்தா நீங்க என்னை வீட்டுக்கு வந்து பாக்க வரலைல. உங்ககூட சண்டை நா பேச மாட்டேன் ” என கூறி அந்த வாண்டு முகத்தை திருப்ப
கதிரவனோ,
“ பேத்தியா!!.. தாத்தாவுக்கு லீவு இல்லடா அதான் உங்கள பார்க்க வரமுடியல. அதான் நீங்க இப்ப வரவும் தாத்தா இந்த ஒரு வாரம் லீவு போட்டேன் ” என கூறி தனது பேத்தியை சமாதானம் செய்ய வதனோ,
“ தாத்தா அவ கிடக்குறா பேட் கேர்ள் நாம வாங்க வீட்டுக்குள்ள போலாம் ” என கூறி கதிரவன் வலதுகையைப்பிடிக்க அதற்குள் வதனியோ,
“ டேய்!!.. நீதான் பேட் பாய் நான் ஒன்னும் இல்லை ” என சண்டையை துவங்கும் நேரம் அங்கு வந்த எழில்விழி,
“ பேத்திப்பொண்ணு குட்டிபையா….” என கூறி வதன் வதனியை இருகரங்களாலும்அணைத்துதூக்கி கொஞ்ச,
அவர்களும் அவர்களின் சண்டையை மறந்துவிட்டு எழில்விழியை கொஞ்சினர். பின் மகன் மருமகளை முறையாக வரவேற்று அனைவரையும் உள்ளே அழைத்துச் செல்ல வதனியோ,
“ தாத்தா இங்க வாங்க ” என அழைக்க கதிரவன்அதுவரை தனது கையில் வைத்திருந்த கண்ணாவின் ஒன்பது மாதம் குழந்தை ருத்ரனை துளசியிடம் குடுத்துவிட்டு
“ என்ன பேத்தியா??…” என கேட்க,
“ ம்மஷு மாட்டிக்கிச்சு கழட்ட முடியல கழட்டிவிடுங்க ” எனக் கூற
அதனை கண்டு சிறு சிரிப்புடன் எழில்விழியும் வீட்டிற்குள் நுழைந்தாள்.
பின் விருந்து முடிந்ததும் குடும்பமாக அனைவரும் பேசிக்கொண்டிருக்கையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்லலாம் என முடிவு செய்தனர்.
அப்பொழுது எழில்விழி கதிரவனிடம்,
“ ஏங்க எல்லாரும் போயிட்டு வாங்களேன் நான்தான் சின்னபிள்ளைல அடிக்கடி போயிருக்கேனே ” என கூற கதிரவனோ
“ ஏய்!!… வாடி சும்மா பேர பிள்ளைகள் கூட சந்தோசமா போய்ட்டுவருவோம் ” என கூறி அழைக்க எழில்விழியும் சரி என சம்மதித்துவிட்டாள்.
அதன்படி மறுநாள் காலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றனர்.
மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் கைப்பை , எலக்ட்ரிக்கல் சாமான்கள் , போன் மற்றும் கேமரா என எதையும் எடுத்துச் செல்லக்கூடாது என துளசியின் கணவன் ஹரிஸ் துளசியிடம் கூற,
அவளோ “ சரி சரி ” என கூறிவுட்டு. அருகில் பார்க்க எழில்விழியும் ராதாவும் நின்றுக்கொண்டிருக்க அவர்களும் கேட்டிருப்பர் என எண்ணிகணவன் கூறியதை அவர்களிடம் சொல்லாமல் விட
எழில்விழியும், ராதாவும் எதோ ஒரு சிந்தனையில் துளசி கணவர் ஹரிஸ் கூறியதை கவனிக்காமல் விட்டனர்.
விளைவு இருவரும் அவர்களின் பைகளுடன் கோவிலுக்குள் செல்ல சோதனை சாவடியில் பெண்கள் பகுதியில் இருவரையும் நிற்க வைத்து பெண் காவலர்கள் சோதனை செய்ய ராதா தனது அசட்டுச்சிரிப்புடன் கைப்பிள்ளையின் பொருட்கள் என கூறி விட்டாள்.
“ நீ மட்டும் உள்ளே போகலாம் ” என்றதும் ராதா உள்ளே சென்றுவிட
எழில்விழி பையை உள்ளே எடுத்துச் செல்லக்கூடாது என தடுத்துவிட்டனர்.
எழில்விழிக்கு அடுத்து வந்த துளசியோ பை இல்லாமல் நிற்க அப்பொழுதுதான் அன்னை பையுடன் வந்ததை கவனித்து,
“ அச்சச்சோ!!… ம்மா பை எடுத்துட்டு வரக்கூடாதுன்னு உங்க மாப்பிள்ளை சொன்னாங்கல்ல ” என துளசி கூற
“ நான் கவனிக்கல துளசிம்மா நீயாவது சொல்லிருக்கலாம்ல ” என எழில்விழி விழிகளை பிதுக்கி பதட்டத்துடன் கூற
அதற்குள் பெண் காவலரோ, “ இங்க பாரும்மா கிளம்புங்க நேரம் ஆகுது போங்க பின்னாடி ஆட்கள் நிக்குறாங்கல்ல. போங்க பையைஎங்கையாவது பாதுகாப்பான இடத்துல வச்சுட்டுவாங்க ” என விரட்ட
அதில் கடுப்பான எழில்விழி வேகமாக வெளியே சென்று விட அவளைத்தொடர்ந்து துளசியும் வெளியேற,
ஏற்கனவே கதிரவன் ஹரிஸ் ராதா என மூவரும் பிள்ளைகளோடு கோவில் வாசலில் நின்றனர்.
“ என்னமா ராதா உன் பின்னாடி தானே துளசியும் அத்தையும் வந்தாங்க ” என ஹரிஸ் கேட்க ராதாவோ
“ இல்லண்ணே உள்ள பை எடுத்துட்டு வர கூடாதாம்ல. நானும் அத்தையும் எடுத்துட்டு வந்தோம் போலீஸ் எடுத்துட்டு போக கூடாதுன்னு சொன்னாங்க.
நான் பிள்ளைக்கு பால் பாட்டில் சாப்பாடுன்னு சொன்னவுடன் செக் பண்ணி விட்டுட்டுட்டாங்க அத்தைய பையை வச்சுட்டு வர சொல்லிட்டாங்க. அண்ணி அத்தைக்கூட துணைக்கு போயிருக்காங்க அண்ணே ” என ராதா கூற
“ இவகிட்ட சொன்னேனே பை எடுத்துட்டு வர கூடாதுன்னு. இவ சொல்லலையா ” என துளசியை பற்றி ஹரிஸ் கேட்க அதற்குள் கதிரவனோ,
“ அது அப்பிடித்தான் மாப்பிளை நான் கட்டுனதும் சரி பெத்ததும் சரி இப்படித்தான் ஏடாகூடமா வேலை பார்க்கும்ங்க. இதுல இந்த கண்ணாயிரம் இருக்கானே அவன பாருங்க ஆகாத வேலை எதாவது பார்த்திருப்பான் ” என கதிரவன் பல்லை கடித்துக்கொண்டு கூற
தன் கணவனை மாமனார் குறை சொன்னவுடன் ஒரு வேகத்தில்,
“ மாமா அவரு பை எல்லாம் எடுத்துட்டு வரல மாமா ” என கூற
“ அப்போ எங்கம்மா உன் புருஷன் நானும் வந்துட்டேன் மாப்பிள்ளையும் பிள்ளைகளோடு வந்துட்டாரு எங்க பின்னாடி வந்தவனை காணோம் ” என கதிரவன் கேட்க,
அதே நேரம் கண்ணாயிரம் பொருட்களை பாதுகாக்கும் மையத்தில் டோக்கன் போட வரிசையில் நின்றுகொண்டிருந்தான். பையை அங்கு வைக்க வந்த துளசியும் எழில்விழியும் வரிசையில் கடைசியாக நின்றுகொண்டிருக்க எழில்விழி துளசியிடம்,
“ துளசி நீ பேசாம போ. மாப்பிளை வேற காத்திருப்பாங்க பிள்ளைகளை வச்சுக்கிட்டு. நான் இந்த கோவிலுக்கு சின்ன பிள்ளைல பலதடவை வந்துருக்கேன். என்னமோ இன்னைக்கு எனக்கு விதிக்கல போல. நீ போத்தா போய் சாமியை கும்புடு உங்க அப்பாவுக்கு வேற கோவம் வந்துற போது ” என எழில்விழி கதிரவனை நினைத்து படபடப்புடன் பேச
“ அட அம்மா இது என்னோட தப்பு ஒழுங்கா உங்க மாப்பிளை சொன்னதை உங்ககிட்ட சொல்லிருக்கணும் விடுங்க. என்ன நடை சாத்திடுவாங்க பார்த்துக்கலாம் ” என துளசி பேசிக்கொண்டிருக்கையில்
எழில்விழியோ, “ ஏன் துளசி உங்க அண்ணன் இங்க என்ன பண்ணுறான்??..” என கேட்க அதில் துளசி,
“ அண்ணனா எங்கம்மா??…” என கேட்க
“ அங்க பாரு முன்னாடி நிக்குறான் ” என எழில்விழி சுட்டி காட்டிய இடத்தில் துளசி பார்க்க,
அங்கு கண்ணாயிரம் நின்றுகொண்டிருப்பதை கண்டு மனதில் துளசி ஒரே மகிழ்ச்சியுடன் மனதில்டன்டக்கு டன்டக்கு என குத்தாட்டம் போட்டுக்கொண்டே,
“ அண்ணே!!…” என அழைக்க துளசியின் குரலில் திரும்பிய கண்ணாயிரம்
“ என்ன துளசி நீ எங்க இங்க??…” என கேட்க நடந்ததை கூறியவள் பின்,
“ நீ என்னண்ணே இங்க??…” என கேட்க
“ அதை ஏன் கேட்குற அப்பா மச்சான் எல்லாரும் போனவுடன் நான் போய் நிக்குறேன் அந்த செக்கிங் மெஷின் கிட்ட திடீர்ன்னு சவுண்டு”
“ எப்படி அண்ணே??….”
“ நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். போன் எல்லாம் வெளியே வச்சிட்டோமே கைல என்னடா இருக்குன்னு ”
“ ஹ்ம்ம் அப்புறம் வேற என்னத்தடா வச்சுருந்த ” என எழில்விழி கேட்க
“ ஹீ… ஹீ… அதுமா இந்த ப்ளூடூத் ஹெட் செட்ட மறந்துட்டேன் அதனால அதை வைக்க இங்க நிக்குறேன் ” என கூற எழில்விழி பயங்கரமாக முறைக்க துளசியோ சத்தமாக சிரித்துவிட்டு,
“ அண்ணே எப்பிடியும் அப்பாகிட்ட வசவு தான் அதுக்கு மூணு பேரா வாங்குறதுக்கு நீயே வாங்கு ” என கூறி பையை கண்ணாயிரத்திடம் திணித்துவிட்டு எழில்விழியை இழுத்துக்கொண்டு வேகமாக கோவிலுக்கு செல்ல அங்கு வாசலில் கதிரவன் இருவரையும் முறைத்துக்கொண்டிருக்க அதில் எழில்விழி பயந்துகொண்டு,
“ இல்லங்க அது பை….” என ஆரம்பிக்க கதிரவன் மருமகன் மருமகள் முன் எதுவும் பேச தோணாது
“ எங்க உன் மகன்??…” என கேட்க வேகமாக துளசியும் நடந்ததை கூறினாள்.
அதனை கேட்டு கதிரவன் ராதாவை ஒரு பார்வை பார்க்க அவளோ மனதில்,
‘ இன்னைக்கு முதவேலை இந்த ப்ளூ டூத் செட்டை அடுப்புக்குள்ள போடுறதுதான் ’ என மனதில் எண்ணிக்கொண்டிருக்கையில் கதிரவன்,
“ சரி கண்ணா வரட்டும் நாம உள்ளாரா போவோம் ” என கூறி அனைவரும் கோவிலுக்குள் செல்ல அங்கு நெருக்கி ஐநூறு பேருக்கு மேல் வரிசையில் நின்றுகொண்டிருப்பதை பார்த்து கதிரவன் எழில்விழியை பார்க்க,
அதை பார்த்த துளசி,
“ அப்பா நாங்க சீக்கிரமா வந்திருந்தா இன்னும் ஒரு பத்து பேருக்கு முன்னாடி நின்றுபோம் அவ்வளவுதான் ” என கூற
அதற்குள் எழில்விழியோ கணவனின் பார்வையில் கோவம் வர,
“ இப்போ என்ன என்னாலதான் லேட்டுன்னு முறைக்குறிங்களா?… இதுக்குதான் நான் கோவிலுக்கு வரல. நீங்க மட்டும் போயிட்டு வாங்கன்னு சொன்னேன் ” என கிளம்பும் போது கதிரவனிடம் எழில்விழி கூறியதை நினைவுகூர்ந்து கூற
ஏற்கனவே கடுப்பில் இருந்த கதிரவன்
“ ஆமா நீ வீட்டுல இருக்க தான் லாயக்கு. உன்னைய எல்லாம் வெளிய கூட்டிட்டே வர கூடாது ” என கூறி வரிசையில் நின்றுவிட துளசியோ கலங்கிய கண்களுடன் நிற்கும் எழில்விழியின் அருகில் சென்று,
“ அம்மா என்னமா நீங்க….” என கூறி கண்ணீரை துடைக்க வேகமாக எழில்விழியும் பேரனை தூக்கிக்கொண்டு வரிசையில் நின்றுவிட,
பின் கண்ணாவும் வந்துவிட ஒரு வழியாக வரிசையில் நின்று தரிசனம் முடித்து வெளியே வந்தனர்.
கதிரவன் தாயின் முன் கூட மனைவியை திட்டாதவன் இன்று அனைவரின் முன் திட்டியதால் மனதில் சிறு குற்ற உணர்வு வர வேகமாக மனைவியின் அருகில் சென்றவன்,
“ ஏண்டி இப்போ என்ன சொல்லிட்டேன்னு மூஞ்சிய தூக்கி வச்சுருக்க??..” என கேட்க
அதில் எழில்விழி கணவனை முறைக்க சற்றே உடல் கனத்து முகமும் வயது காரணமாக சற்று சுருங்கி விழிகள் கீழ் சிறு கருவளையம் என வயது முதிர்ந்த தோற்றத்திலும் அவளின் விழியின் வீச்சில் வீழ்ந்தவன்,
“ என்னடி முறைக்குற இப்போ என்ன நான் தானே சொன்னே கோவத்துல பேசுனா இப்படி அழுவியா??… உன் பிள்ளைகள் பேர பிள்ளைகள் பேசுனா கம்முன்னு இருப்ப. நான் எதாவது சொன்னா அழுவ கோவப்படுவ” என கூறிய கணவனின் பேச்சில் கோவம் மறந்து வழக்கம் போல் குழம்பியவள்
“ என்னங்க நீங்க??…. எல்லாரும் நீங்களும் எனக்கு ஒன்னா??…” என கேட்க
“ இல்லைதானே அப்போ நான் பேசுனா இன்னும் அழுவியா??…. என்னத்தை இத்தனை வருஷம் நாம குடும்பம் நடத்துனோமோ போ” என கூறி கதிரவன் முன்னே செல்ல
இம்முறை எழில்விழி கணவனை சமாதானம் செய்ய கணவன் பின் செல்ல இதனை கண்ட ராதா,
“ என்ன அண்ணி அதுக்குள்ள மாமா அத்தைகிட்ட ராசி ஆகிட்டாங்க…..” என துளசியிடம் கேட்க
“ அண்ணி எங்க அப்பா எவ்வளவு கோவத்துல இருந்தாலும் எங்க அம்மாவோட கண்ணீருக்கும் விழியோட பாஷைக்கும் சாந்தம் ஆகிடுவாங்க. என்ன இது சுத்தி இருக்குற எங்க எல்லாருக்கும் புரியுது ஆனா அது புரியாமலேயே அவுங்க வாழ்க்கையை ரசனையோடு வாழுறாங்க ” என துளசி தனது பெற்றோரை ரசித்துக்கொண்டு கூற
அங்கு கதிரவனோ சிறுது நேரத்தில் எழில்விழி கையில் இருந்த பேரனை தூக்கிக்கொண்டு எழில்விழி கையை பிடித்துக்கொண்டு நடக்க அவர்களின் இருபுறமும் துளசியின் இரட்டை வாண்டுகளும் நடக்க அந்த கவிதையான காட்சியுடன் நான் விடை பெறுகிறேன்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.