எழில் வெளியேறவும் அவனை தொடர்ந்து நாதன் அலருடன் செல்ல அவர்களை பார்த்து கொண்டிருந்தாலும் எவரையும் தடுக்கும் திறன் அற்றுபோயிருந்தனர் மீதம் இருந்த நால்வரும்.
நான்கு பேரின் மனமும் நான்கு துருவங்களாக வெவ்வேறு எண்ணங்களால் ஆட்கொள்ளப்பட்டு இருந்தது.
கீர்த்தி முன்பு வந்தமர்ந்த சரண் தாலி கட்டியபோது அவள் கொண்ட அதிர்வை கண்டுகொண்டாலும் அதையும் மீறி அவள் விழியில் உறைந்திருந்த உணர்வை கண்டறிய முயன்று தோற்றுபோனான். இது தான்.. இந்த பார்வையை தான் அவன் சில மாதங்களுக்கு முன்பும் பலமுறை அவளிடம் கண்டிருக்கிறான்.
அப்போதெல்லாம் ஏன் ? எதற்கு ? எதனால் ? என்று அவன் கேட்கும் எந்த கேள்விக்கும் அவளிடம் இருந்து பதில் வராது. ஒருவேளை அன்றே அவள் பதிலளித்திருந்தால் இந்நிலையை தடுத்திருக்கலாமோ இல்லை சரண் கோபத்தில் அவளை சரியாக கையாலவில்லையோ..?? என்ற எண்ணம் எழ மீண்டும் அவளை ஆராய்ந்தான்.
“பெண் மனது ஆழம்” என்று கேள்விபட்டதுண்டு ஆனால் இத்தனை ஆழமா! இத்தனை தீர்க்கமா..! இத்தனை மனோதிடமா..! என்று வியந்தவனால் அதன் ஆழத்தில் என்ன உள்ளது என்று அறியமுடியாமல் அலமலந்து போனான்.
அவன் கட்டிய மஞ்சள் கயிற்றை ஒருகையால் பிடித்திருந்தவளின் மறுகரம் மேடிட்ட வயிற்றில் பதித்திருக்க இப்போதும் கண்களில் இன்னதென்று பிரித்தறிய முடியா உணர்வை கண்டவனுக்கு பெரும் சலிப்பே மேலோங்கியது..
“ப்ளீஸ் கீர்த்தி வாயை திறந்து பேசுஎன்கிட்டே பேச உனக்கு என்ன தடை” என்றவனுக்கு இன்று அவள் விழிமொழி உணரமுடியாமல் சித்தம் பித்தம் கொள்ளும் நிலை..!
காதலை உரைப்பதில் ஆகட்டும் அதை தொடர்ந்த நாட்கள் ஆகட்டும் என்றுமே அவனிடம் மடை திறந்த வெள்ளமாய் ஆர்பரிக்கும் அவள் பேச்சு..! காதல் காலங்களில் அவனுக்கும் சேர்த்து பேசுபவளிடம் இன்று பேச்சு பஞ்சமாகி போயிருக்க ஏனோ அவளையும் அறியாமல் ஒருவித அன்னியதன்மையை சரணிடம் தோற்றுவித்திருந்தாள்.
அதன் கணம் தாங்காமல் மீண்டும்பசுமையாய் அவனில் நிறைத்திருக்கும் அவளுடனான நாட்களில் பின்னோக்கி பயணிக்க தொடங்கினான்.
சரண் கீர்த்தி மூன்றாம் சந்திப்பு :
தீபாவளியன்று சரண் வீட்டில் இருந்து திரும்பிவளுக்குமனதை ஆக்கிரமித்திருந்தவனுடன் செலவிட்டஒவ்வொரு நொடியும் மனமெங்கும் வியாபித்திருக்க உறக்கம் எங்கிருந்து தழுவும்..!!
இன்று அலுவலகத்தில் அவளின் முதல் நாள் என்பதால் தந்தைக்கு வீடியோகாலில் அழைத்து, “கொஞ்சம் நர்வஸா இருக்குப்பா” எனவும்,
“நான் என்ன ஸ்கூல் பிள்ளையா முதல் நாள் அப்பா கையை பிடிச்சிட்டு ஆபிஸ் போய் இறங்க, அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ஆல் தி பெஸ்ட் சொல்லுங்க போதும்” என்று பரபரப்பாககிளம்பிகொண்டிருந்தாள்.
பயிற்சிகாலம் முடிந்தபின் பணியில் சேர்பவளுக்கு தன்னால் சரியான முறையில்செயல்பட முடியுமா? தவறிழைத்து விடுவோமா..? லீட் எப்படி அமைவார்..?? என்ற பதட்டம்.
தன்னிடத்தில் அமர்ந்திருந்தசரணும் அவனிடம் அளிக்கப்பட்ட ஃபிரெஷர்ஸ் பற்றிய விவரங்களை பார்த்தவனுக்கு கீர்த்தியின் புகைப்படமும் அவள் குறித்த விபரமும் கண்டு இனிய அதிர்ச்சியாகி போனது.
கீர்த்தியும் தனக்கு கீழ் பணிபுரிய இருப்பவர்களில் ஒருத்தியாய் இருப்பதை கண்டு மனதினுள் அத்தனை குதூகலம்..!!
அதிலும் இருவரும் ஒரே ஊர் என்பதை அறிந்தவனுக்கு ஏன் என்று தெரியாத மகிழ்ச்சி முகிழ்க்க மனமோ கட்டவிழ்ந்த காளையாக நிலையின்றி தாவி திரிய ஆரம்பித்திருந்தது. அவள் வரவை ஆவலுடன் எதிர்பார்த்தவனுக்கு ஒரு இடத்தில் நிலையாய் நிற்கவோ அமரவோ முடியாது போனவனுக்கு தன்னை எதிர்கொள்பவளின் குழந்தை முகத்தில் தோன்றும் வானவில் ஜாலங்களை காண பெருமாவல் பெருகியது.
இனி கீர்த்தி தன்னுடனே தன் அருகே என்ற எண்ணமே பரவசத்தை கொடுக்க கரத்தில் இருந்த கோப்பும் கைநழுவ முகத்தில் அழையா விருந்தாளியாய் நிறைந்திருந்தது இளநகை.
நிச்சயமாக இத்தகைய உணர்வுகளின் படையெடுப்பு சரணுக்கு முற்றிலும் புதிதான அனுபவம்.
******************************************
என்னதான் படித்து முடித்து முறையான பயிற்சி பெற்றிருந்தாலும் இத்துறையில் வழிகாட்டியாய் அமையபோகும் லீட் சரியாக அமைந்தால் மட்டுமே தங்களின் பணி சிறக்கும், எவ்வித மனசஞ்சலமும், அழுத்தமும் இல்லாமல் இருக்க முடியும் என்பதால் டீம்லீட் பற்றிய கவலையில் உழன்றவாறே அலுவலகத்தினுள் நுழைந்தவளிடம் அவளின் டீம்லீட் சரண் என்று அறிவிக்கபட, இருமுறை அவனை சந்தித்திருந்தாலும் அவன் பெயர் தெரியாததால் மனதினுள் அனைத்து கடவுள்களுக்கும் வேண்டுதல் வைத்தவாறே சைந்தவியின் கரங்களை அழுந்த பற்றிக்கொண்டு மூன்றாம் தளம் சென்றாள்.
“என்ன கீகீ கை இவ்வளவு சில்லுன்னு இருக்கு”
” நர்வஸா இருக்கு சவி”
“அதுக்குன்னு உள்ளங்கையில இப்படியா தண்ணி ஊத்தும்” என்று ஆச்சர்யமாய் கேட்டவளிடம்,
‘ஆமாடி எனக்கு இப்படிதான் அதைவிடு ஃபர்ஸ்ட்டே எப்படி இருக்கும் ?எதாவது எரர் வந்தா திட்டுவாங்களா.. இல்லை பொறுமையா கரெக்ட் பண்ணுவாங்களா சொல்லு..?’
“அது நமக்கு வாய்க்கிற டீம்லீடையும் அவங்க மூடையும் பொறுத்து.. ஆனா நீ ஏன் நெகட்டிவா யோசிக்கிற எல்லாருமே அப்படி இருக்க மாட்டாங்க பொறுமையா கைட் பண்றவங்களும் இருப்பாங்க.. பீ பாசிடிவ்” என்று இருவரும் சரண் முன் நிற்க..,
கண்ணை கசக்கி கொண்டு மீண்டும் தன்முன் இருப்பவனை பார்த்து உறுதி செய்துகொண்ட கீர்த்திக்கு மனதினுள் சந்தோஷஊற்று பெருக்கெடுத்தது.
‘என்னடி உன் ஹீரோ தான் நம்ம லீடா..??’ என்று சைந்தவி கீர்த்தியின் காதை கடிக்க,
அவளிடமிருந்து பதிலில்லை, மாறாக இத்தனை நேரம் கொண்டிருந்த பயமும் படபடப்பும்நீங்கி மனதினுள் பெரும் நிம்மதி. பின்னே கல்லூரி வரை ஆரணியை தாண்டாமல் இருந்தவளுக்கு இப்பெருநகரம் பெரும்சவாலாக அமைந்தது என்றால் மிகையல்ல..!!
கீர்த்திக்கு இச்சூழல் புதிது இங்கிருக்கும் மனிதர்கள் அவர்களின் பழகுமுறை என்று ஒவ்வொன்றுமே அவளியல்புக்கு பொருந்தாததாகவே இருந்தது. எப்போது சல்வார் அல்லது தாவணி அணிபவளுக்கு இங்கு சிலபெண்கள் அணியும் உடையும் அதீத ஒப்பனையும் ஒருவித அந்நியத்தன்மையை ஏற்படுத்தி இருக்கஇவர்களுக்கு இடையில் எவ்வாறு பணிபுரிவோம் என்று கேள்வி மனதினுள் எழுந்து அச்சுறுத்த தொடங்கியிருந்தது.
இப்போது சரணை கண்டதும் ஏனோ அசாத்திய துணிவும் தன்னை பார்த்துகொள்வான் என்ற அதீதநம்பிக்கையும் பிறக்க அவளின் அர்த்தமற்ற அச்சம் நொடியில் விலகியிருந்தது.
மறுபுறம் கீர்த்தியின் உணர்வுகளை படித்தவனுக்கு அத்தனை நிறைவாக இருந்தது அதன் அடையாளமாய் அவனின் அதரங்கள் மேலும் விரிய, ‘வெல்கம் டு மை டீம் கைஸ்‘ என்று புதியவர்களை வரவேற்று விரைவாக பேச்சை நிறைவு செய்தான்.
ஆனால் அவன் பேச்சு ஒன்றுகூட கீர்த்தியின் மனதில் பதியவில்லை தன்பேச்சு, பார்வை, நேர்த்தி, ஆளுமை, பழகும்விதம் என்று ஒவ்வொரு அசைவிலும் அவளை வசீகரித்திருந்தான்.
“இஸ் தட் கிளியர்கீர்த்தி எனி டவுட்ஸ்” என்றதில் சைந்தவி அவளை நினைவுலகிற்கு மீட்கவும் ‘இல்லை’ என்பதாக தலையாட்டி வைத்தாள்.
கிளம்பும்வேளை கீர்த்தி அமைதியாக அவனறையில் நிற்கவும் ‘எஸ் கீர்த்தி ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ’ என்ற மறுநொடி,
“தேங்க்ஸ், தேங்க்ஸ், தேங்க்ஸ்”
‘எதுக்கு இவ்ளோ தேங்க்ஸ்?’
“தெரியல ஆனா சொல்லனும்னு தோனுச்சு”
“ஓகே தேங்க்ஸ் அக்செப்டட் பட் ஹவ் ஆர் யூ பீலிங் நவ்..?” என்று நேற்றைய தீபாவளி நிகழ்வை கேட்க..,
கேட்கணும் என்றுவிட்டாளே தவிர எப்படி கேட்பது என்ற தயக்கத்தோடு ‘அது ‘என்று கரங்களை கோர்த்து பிரித்தவள், ‘அது வந்து நீங்க நேத்து..‘
‘ஹ்ம்ம் சொல்லுங்க நேத்து..’ என்று எடுத்து கொடுக்கவும்
‘இல்ல அது நீங்க நேத்து எனக்கு கொடுத்த ட்ரெஸ் யாரோடது..?’ என்று கேட்டுவிட்டவளின் மனமோ தனக்கு சாதகமான பதிலை கூறவேண்டுமே என்று அத்தனை கடவுளுக்கும் வேண்டுதல் வைத்தது.
எதற்கு இக்கேள்வி என்று புரியாவிட்டாலும், ‘என் அக்கா பொண்ணுக்கு தீபாவளிக்காக வாங்கிவச்சது‘ என்றதும் பெரும் நிம்மதி பரவ மீண்டும் நன்றி சொல்லி கிளம்பினாள்.
ஆனால் பேச வந்த எதையும் பேசாத தன் மடத்தனத்தை திட்டிக்கொண்டே வீடு சென்று சேர்ந்தவள் அன்று இரவும் அவனை சந்தித்த இடத்தில் சென்று அமர சரணும் அவளை எதிர்பார்த்திருந்தானோ என்னவோ சரியாக அங்கே வந்துசேர ஒருவரை ஒருவர் அமைதியாக பார்த்தவாறே மெளனமாக அக்கணங்களை கடத்தினர்.
சரணே தன்னை அறிமுகபடுத்தி தானும் அதேஊர் என்று கீர்த்தியிடம் பகிர அவளும் தன்னை பற்றிய விவரங்களை சொல்லவும் இருவருமே உறவினர்கள் என்பதை அறிந்த கீர்த்திக்கு பெருமகிழ்ச்சியே ! அதே மகிழ்வுடன் அடுத்தடுத்த நாட்களை வரவேற்க ஆவலுடன் காத்திருந்தாள்.
இதுவரை சரண் மீதான உணர்வுகளுக்கு பெயர் சூட்டமுடியாமல் இருந்தவளுக்கு இரவு முழுக்க எழில் அன்று காதல் குறித்து கேட்ட கேள்விகளே மனம் நிறைக்க அனைத்திர்குமான விடையாக சரணை உணர்ந்தவளுக்கு அத்தனை நிறைவு..!!
*****************************
மறுபுறம் சரணின் உறக்கமும் பறிபோனது ஆனால் இனிய கனவுகளால் இன்றி கீர்த்தி நாதனின் தம்பி மகள் என்பதை அறிந்து..! ஆம் இருவருமே உறவினர்களாக இருந்தாலும் இருவருக்கு இடையிலும்இதுவரைபெரிதாக எவ்விதசந்திப்பும்நிகழ்ந்ததில்லை அதற்கு காரணமும் நாதன் தான்.., அவரின் நேர்மையான குணத்திற்கும் கொள்கைக்கும் எதிராக மாறுபட்டு நிற்கும் பிரகாசத்தின் மீது கொண்ட அதிருப்தியின் காரணமாக அவரை நாதன் விலக்கி நிறுத்தி இருந்தார். இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தையும் போக்குவரத்தும் நின்று போய் இருபது வருடங்களுக்கு மேலாகி இருந்தது.
பெரும்பாலும் நாதனின் வீட்டு விசேஷங்களில் மட்டுமே பங்குகொள்ளும் சரணுக்கு அங்கு கீர்த்தியை சந்திக்கும் வாய்ப்பு பெரிதாக அமையவில்லை. அதேபோல நாதன் தவிர்த்து மற்ற உறவினர்களின் வீட்டு விசேஷங்களில்அவன் பெற்றோரே கலந்துகொண்டதால் மற்ற உறவினர்களிடமும் சரணுக்கு பெரிதாக பரிட்சியமில்லை. நாதனின் உடன் பிறந்தோர் எனும்வகையில் அவர்களை தெரிந்து வைத்திருந்தானே தவிர அவர்கள் குடும்பத்துடன் பெரிதாக நெருக்கம் இல்லை.
ஆனால் சிறுவயதில் எழில் சிலகாலம் நாதனின் பராமரிப்பில் இருந்தபோது அவனையும்சுடர்கொடியையும் எழிலின் நண்பன் என்ற முறையில் வெற்றியையும் அறிவான்.
அவர்கள் வீட்டின் மூத்த மருமகனான அயவந்திநாதன் மீது அனைவருக்குமே பெரும்மரியாதை. அதிலும் சரணின் மற்ற தமக்கைகளை கரை சேர்த்ததில் அவரின் பங்கு அலாதியானது என்பதால் சரணின் வீட்டில் அவரின் மதிப்பும் மரியாதையும் வானளவு கூடியது. எப்போதும் நாதன் வார்த்தைகளை அவன் தந்தை சிதம்பரம் “சரிங்க மாப்பிள்ளை” என்று மறுவார்த்தை பேசாது ஏற்றுகொண்டதில் மற்றவர்களுக்கும் அதை பின்பற்றியே பழக்கம்.
சரணுக்கு நாதன் அக்கா கணவனாக இருந்தாலும் அத்தனை இலகுவாக அவரை நெருங்கிவிட முடியாது. சரண் எப்போது வளர்மதி வீட்டிற்கு சென்றாலும் மருமகனின் மனம் கோணாமல் நடக்க வேண்டும் என்று பெற்றோர் பலகட்ட அறிவுரைகளுக்கு பின்பே அனுப்புவர்.
தன்நிலை இவ்வாறு இருக்கையில் கீர்த்தி மீது தனக்கு தோன்றும் உணர்வு சரிதானா..?? ஒருவேளை இது காதலாக இருப்பின் இதை சரணின் தந்தையை விட நாதன் எவ்வாறு வரவேற்பார் என்ற கேள்வியே அவனை அரித்தது.
பின்னே காதல் என்ற வார்த்தை நாதனுக்கு பாகற்காய் என்பதும் ஒருபோதும் அதை வரவேற்கமாட்டார் என்பதை அவன் நன்கு அறிவானே..! ஆனால்மொட்டு மலரும் நேரத்தை எவ்வாறு கணிக்க முடியாதோ அவ்வாறே சரணுக்கும் கீர்த்திக்கும்மற்றொருவர் மீதான ஈர்ப்பும் அன்பும் காதலாய் தடம் மாறிய நொடியும் அவர்களே அறியாதது.
அதை அறிந்த பின்பும் ஏற்கமுடியாமல் தவித்து போனது சரண் தான்.
கீர்த்திக்கு ஒரே மகளான தன் ஆசையை தந்தை நிச்சயம் ஏற்று கொள்வார் என்ற திண்ணம். அதனால் அலுவலகத்தில் தயக்கமின்றி கீர்த்தி தன் பார்வைகளை தொடரசரண் சில நேரங்களில் அவளை தவிர்த்தாலும் பலநேரம் மனம் கட்டில் நிற்காமல் அவள் பின்னே செல்வதை அவனும் கையை பிசைந்துகொண்டு பார்த்திருப்பான்.
மாதங்கள் பல கடந்தும் ஒருவரின் மீதான மற்றொருவரின் நேசம் நித்தம் இதயப்பெட்டியில் பூட்டி வைக்கப்பட்டு யார் முதலில் திறப்பது என்ற கண்ணாமூச்சுஆட்டம் அவர்களிடையே நிகழ்ந்து கொண்டிருக்க இறுதியில் கீர்த்தி அதை உடைத்தெறிந்து அவள் காதலை தெரிவித்தாள்.
***************************************
முப்பத்திரண்டு வயதிற்கு வாழ்க்கை தன்னை நூலறுந்த பட்டமாக அலைகழித்து திசையறியாது கடும்பாறைகள், முட்கள், கனலுக்கிடையில்பயணிக்க வைத்துவதைத்தது போதாது என்று விடாது துரத்தும் விதியை நொந்து கொள்வதை தவிர சரணும் வேறு என்ன தான் செய்ய…!!
இந்த சொற்ப வருடங்களில் தன் வாழ்வில் சரண்கடந்து வந்தவை மிக அதிகமே..! அதிலும் இன்று காலை அவன் எதிர்கொண்டது அவன் கற்பனைக்கும் அப்பாற்பட்டது.. ஆம் கீர்த்தியின் நிலை அவன் இதுவரை பெற்ற அடிகளிலே வலுவானதாக அமையபெற்றிருக்க அதன் தாக்கம் அவனைநிலைகுலைய செய்திருந்தது என்றால் மிகையல்ல..!
எதிர்பாராத சம்பவங்கள் அவனை மனதளவில் பெரும்களைப்புற செய்திருக்க சோர்ந்து அமர்ந்திருந்தவனின் விழிகளில் தென்படும் வலியே அவன் நிலை உணர போதுமானது..!!
தன் வாழ்வில் தனக்கே தெரியாமல் கண்ணுக்கே புலப்படாத ஏதோ ஒரு மாயவலை பின்னப்பட்டு அதில் தான் சிக்க வைக்கபட்டிருப்பதைஉணர்பவனுக்கு இதோ இப்போது கீர்த்திக்கு தாலிகட்டி முடித்திருந்தாலும் பலதடைகளை தாண்டி தன்னவளை சேர்ந்த மனநிறைவையோ நிம்மதியையோ சுத்தமாக இல்லை.
மாறாக இனி பிரச்சனைகளின் வீரியம் குறையுமாஅல்லது அதிகரிக்குமாஎன்ற ஒருவித ஊசலாட்டம்மட்டுமே..!
ஏதோ பொம்மலாட்டத்தில் ஆடும் பொம்மையின் கைகால்களில் கயிறு கட்டப்பட்டு அதன் நுனி வேறொருவரிடம் இருந்து அதன் எண்ணப்படிதான் ஆட்டுவிக்கபட முயற்சிக்கபடுகிறோமோ..?? என்ற கேள்வி அவனுள் எழுந்துமாதங்கள் பல ஆயிற்று..
ஆனால் இன்றுவரை அதன் விடையை தான் அவனால் காண இயலவில்லை.
அனைத்து காதலும் கைகூடும் யோகம் பெறாது அது போலத்தான் தனக்கும் விதித்திருக்கிறது என்ற நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு கீர்த்தியை சரண் தலைமுழுகிவருடங்கள் பல ஆகிவிட்டதே..! இவ்வளவு ஏன் சில மாதங்களுக்கு முன் அவள் தேடிவந்த போதுகூட அதை மறுத்துவிட்டவனேஇப்போது தாலி கட்டி உறவை பலபடுத்தி விட்டான்.
இருகரங்களையும் தலைக்குபின் கோர்த்து கண்களை மூடியவனுக்குள் பல கேள்விகள் முளைக்க அதனிடையே அவன்தாயின் கண்ணீர் முகம் அகக்கண்ணில் மின்னியது.
“எவ்வாறு இவரை மறந்தோம்” என்று விதிர்த்துபோய் கண்களை திறந்தவன் அங்கு சுவரில் சாய்ந்து கண்ணீரோடு தளர்ந்து அமர்ந்திருந்தவரை கண்டவனின் வேதனை பன்மடங்காக பெருகியது.
“அம்மா” என்றதுமே அவர் கண்களில் இருந்து வழிந்த நீர் அவன் நெற்றி நனைக்க, ‘என்னை மன்னிச்சிடுங்கம்மா‘ என்றவனின் கண்களிலும் நீர் துளிர்த்திருந்தது.
பல மாதங்களுக்குபின் மகனை ஸ்பரிசித்த மகிழ்வோடு, ‘மன்னிப்பு வேண்டாம்‘ என்பதாக தலையசைத்தார்.
“ம்மா நீங்க அன்னைக்கு சொன்னமாதிரி நான் தாலி கட்டிட்டேன் இப்போ என்னை ஏத்துப்பிங்களா..??” என்று கேட்ககண்நீரினூடே ‘அந்த பெண்ணுக்கு என்னாச்சுப்பா..??’ என்று ஈனஸ்வரத்தில் கேட்கவும் சரண் திகைத்து போனான்.
“ம்மா” என்று அதிர்ச்சியுடன் பார்க்க..,
“தாய் அறியாத சூலா” என்பதாக அமைந்திருந்தது அவர் பார்வை.
பின்னே தன் மகன் யாருக்கும் தெரியாமல் ஒரு பெண்ணை தன்னுடன் வைத்திருந்ததுஅதை கேட்ட பெரியவர்களை மதிக்காமல் எடுத்தெறிந்து பேசியது,இறுதியாக தன் கட்டளையை ஏற்காமல் தன் உறுதியில் நின்றது என்று பல தவறுகளை செய்தவன் தான்.., ஆனால் ஒரு பெண்ணை அதுவும் காதலித்தவளை இந்நிலையில் நிறுத்தும் அளவு தரங்கெட்டவனல்ல என்று நம்பியவரின் விழிகளில் தன் வளர்ப்பு என்றும் பொய்க்காது என்ற திடம்.
“அம்மா கீர்த்தி தான் உங்க மருமகள் அது என்னோட குழந்தை இதுல உங்களுக்கு எதாவது ஆட்சேபனை இருக்கா..??” என்று எதிர்பார்ப்புடன்கேட்கவும்…,
‘இல்லை‘ என்று மகன் உச்சியில் இதழ் பதித்தவர் “அது நம்ம வீட்டு வாரிசுப்பா” என்றார் நிறைந்த மனதுடன்.
***************************
தன் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த எழிலுக்கு பாதி வழியில்தான் கலைவாணியின் நினைவெழ மிகவும் அசாதாரணமான சூழல் நிலவுகையில் அங்கிருப்பது அவரின் உடல் மற்றும் மனநிலைக்கு நிச்சயம் உகந்ததல்ல என்பதால் அவசரமாக வண்டியை திருப்பிக்கொண்டு வந்திருந்தான்.
உள்ளே நுழைந்தவன்வாயிற்கதவோரம் சுவரில் சாய்ந்து அமர்ந்து வெதும்பும்மனதோடு விட்டத்தை வெறித்திருந்த பிரகாசத்தை காணவும் அவன்முகம் அப்பட்டமாக வெறுப்பை உமிழ்ந்து திரும்ப அவன் விழிவட்டத்தினுள் விழுந்த கீர்த்தியை கண்டவனின் அகம் கடும்வேதனை கொண்டது.
மேடிட்ட வயிற்றில் கரம்பதித்து அவளமர்ந்திருந்த கோலம் அவன் நெஞ்சை பிசைய அகனுக்கு அலர் கருவுற்றிருந்தபோது கொண்டிருந்தமனநிலையும் தன் அருகாமையை அரவணைப்பையும் நித்தம் நாடியதும் மனதிலாட இத்தனை மாதங்களை கீர்த்தி எவ்வாறு கடந்திருப்பாள் என்று நெஞ்சம் வெதும்பியது.
உடனே கீர்த்தியிடம் சென்றவன், “ஏன் கீர்த்தி எதையும் என்கிட்ட சொல்லல நான் உனக்கு அவ்ளோ அந்நியமா போயிட்டேனா..? உங்க வாழ்க்கையில இத்தனை நடந்திருக்கு அவன் தான் ஏதேதோ காரணம் சொல்றான் ஆனா இத்தனை நாளில்உனக்குமாஒருமுறைகூட என் ஞாபகம் வரலை”
“அன்னைக்கு அவ்ளோ சந்தோஷமா என்கிட்டே உன்னோட காதலை சொன்ன ஆனா ஒரு பிரச்சனை வரும்போது ஏன் என்கிட்ட சொல்லனும்னு தோணலை ? சரண் பேசின அப்புறம் உன்னை பார்க்க ரெண்டுமுறை முயற்சி பண்ணேன் உன் நம்பரும் சுவிட்ச்ஆப்ல இருக்க நீயும் ஊர்ல இல்லை சொன்னாங்க ஆனா இந்த நிலையில் இப்போ என்முன்னாடி.. சரண்மேல கோபம் இருக்கட்டும் ஆனா ஏன் கீர்த்தி உனக்கு என்னை தேட தோணலை” என்று கேட்க கீர்த்தி ஆச்சர்யமாக அவனை பார்த்தாள்.
‘ஒன்னு தெரிஞ்சுக்க எனக்கு உங்கப்பனைதான் பிடிக்காதே தவிர உன்மேல இருக்க பாசம் எப்பவும் குறையாதுடா.. இப்பவும் சொல்றேன் உனக்கு ஏதாவது பிரச்சனை, கஷ்டம் வந்தா என்னை கூப்பிட மறந்துடாதஉனக்காக என்னைக்குமே நான் இருப்பேன்“என்று அவள் தலையை ஆறுதலாக வருடினான்.
“உன்னோட இந்த நிலைக்கு…”என்று பிரகாசத்தை பார்த்தவன் தன்னை கட்டுபடுத்தி, “உனக்கு என்ன நடந்திருந்தாலும் எல்லாத்தையும் கெட்டகனவா நினைச்சு மறந்துடு இப்போ நீ சரண்கிட்ட வந்துட்டகண்டிப்பா அவன் உன்னை ரொம்ப நல்லா பார்த்துப்பான்” என்றிட இப்போது அவள் விழிகளில் இன்னதென்று பிரித்தறிய முடியாத உணர்வு.
இதுவரை தனக்கு மறுமொழி கூறாதவளின் சோர்ந்த முகம்கண்டு, “சாப்பிட்டியா கீர்த்தி..??” என்றிட,
‘இல்லை’ என்ற தலையசைப்பு..
உடனே சமையலறைக்கு சென்றவன் உணவோடு திரும்பி, “மணி என்ன ஆகுது இன்னுமா உனக்கு பசிக்கலைமுதல்ல சாப்பிடு.. குழந்தை எப்படி பசி தாங்கும்” என்று நீட்டதட்டை வாங்காமல் அவனையே வெறித்தவள் விழிகளில் அவளைறியாமல் நீர்திரண்டிட அதை கீழேவிழாமல் திடத்துடன் உள்ளிழுக்க அதேநேரம் எழில் பொங்கலை எடுத்து ஊட்டியிருந்தான்.
அதை கண்டவளின் மனதை உணர்வுகள் ஆர்பரித்து அழுத்தவும் கண்களை இறுகமூடி உதட்டை கடித்து கட்டுபடுத்தியவள் அவனிடம் இருந்து கவளத்தைபெற்றுகொண்டு உண்ணத் தொடங்கினாள்.
அவள் சாப்பிடத் தொடங்கவும் அவளருகே குடிநீரை வைத்து சரணிடம் சென்றவன்,
‘சரண் நான் அம்மாவை கூட்டிட்டு போய்நாளைக்கு கூட்டிட்டு வரேன்… நீ இங்க பார்த்துக்கோ’ என்றவன் வார்த்தைகளில் சரண் ஆசுவாசம் கொள்ள கலைவாணியும் மகன் வாழ்விற்கு அர்த்தம் கிடைத்த நிறைவுடன் எழிலுடன் கிளம்பிசென்றார்.
*******************************
“எவ்வளவு நேரம் இப்படியே உட்காந்திருப்ப வா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு” என்றவாறே அவள் கரத்தை பிடிக்க முயல,
‘விடு‘ என்ற கர்ஜனையுடன் அவன்கரத்தை உதறி கழுத்தில் இருந்த மஞ்சள்கயிற்றை உயர்த்திகொண்டே “இது இருந்தாதானே நீ என்னை அதிகாரம் பண்ணுவ” என்று கழற்றமுற்பட.., அவள் கரத்தை சரண் தடுக்கும் முன்,
“குட்டிமாஆஆஆஆஆஆஆஆ…” என்ற பெருங்கேவலுடன் கீர்த்தியின் பாதங்களில் சரணடைந்திருந்தார் பிரகாசம்.