சிவந்த விழிகளுடன் தாடை இறுக கண்ணாடி குவளையையே வெறித்து கொண்டிருந்த சரண் மீது பிரகாசத்தின் பார்வை மிகவன்மையாக படிந்தது… அவனை இங்கேயே இந்த நிமிடமே கைகளால் பிய்த்து எறிந்து விடுமளவு ஆத்திரம்.
இருக்காதா பின்னே..!! பல வருடங்களாகவே அமைச்சர் பதவியைகுறிவைத்து காத்திருப்பவருக்கு அதிர்ஷ்டம் அவர் மகள் மூலமாக அல்லவா அடித்திருந்தது. பிரகாசத்துடன் சேர்த்து இன்னும் நான்கு நபர்கள் போட்டியில் இருக்ககட்சியில் செல்வாக்கும் சொல்வாக்கும் அமைய பெற்றவரும் பிரகாசத்தின் வழிகாட்டியுமான மூத்த அமைச்சர் தன் மகனுக்கு கீர்த்தியை பெண் கேட்டிருந்தார்.
அதற்கு கைமாறாக பிரகாசத்திற்கு மந்திரி பதவி என்று பேரம் பேசி இருந்த நேரத்தில் மகள் பிச்சைக்காரனை அவருக்கு மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்ததில் கொதித்து போயிருந்தவரின் மனம் இப்போது அடங்காத காட்டுத்தீயாக கனன்று சரணை பொசுக்க தயாராக இருந்தது.
சரணை நோக்கி எட்டு வைத்தவரின் வழியை எதிரே இருந்த நாற்காலி தடைசெய்ய அதை ஓங்கி உதைத்தவர், “என்ன மாமனை சொன்னதும் பொத்துகிட்டு வருதோ..!! என்று சீறியவர் அவனே ஒரு ***** ” என்று இப்போது நாதனை வெளிப்படையாகவே திட்ட தொடங்கவும்..,
அதுநேரம் வரை தந்தை செய்த தவறுக்காக அமைதி காத்து வந்தவன் நாதனை தரக்குறைவாக பேசுவதை சகிக்க முடியாது பிரகாசத்தின் சட்டையை பிடித்து, “டேய்ஈஈஈஈ…. இன்னொரு வார்த்தை பேசின” என்று அறைய முற்பட..,
நொடிக்கும் குறைவாக சரணின் கரத்தை லாவகமாக பிடித்து பின்னால் வளைத்தவர், “பார்ரா அப்பனை பேசினப்போ சட்டையை மட்டும் பிடிச்ச, மாமனை சொல்லவும் அடிக்கவே வர.., அவ்ளோ பாசமா..??” என்று வியந்தவர் அவன் கரத்தை வேகமாக உதற தடுமாறிய சரண் கால்களை ஊன்றி தன்னை நிலைப்படுத்தி மீசைதுடிக்க பிரகாசத்தை பார்த்தான்.
“அவனை ஏன்டா பேசக்கூடாது ? அவனால தானே கண்ட கண்ட கழிசடைங்க எல்லாம் என் குடும்பத்துல வந்து சேர்ந்து இப்போ என் உசுரை எடுக்குதுங்க அப்போ இதுவும் பேசுவேன் இதுக்கு மேலயும் பேசுவேன்டா” என்று உறும..,
சரண் ரௌத்திரத்தோடு அவரை பார்த்திருந்தான்.
“டேய்… டேய்டேடேடேய், அவன் தான் மூளை கெட்டு போய் தராதரம் இல்லாம வெளங்காதவன் வீட்டுல பொண்ணு எடுத்தான்னா.. நானும் என் பொண்ணை அந்த வீட்டுக்கு அனுப்புவேன்னு நெனச்சிடீங்களா..? ஓஓஓஓஓ நாதனுக்கு மச்சாங்கிற ஒரே தகுதி போதும் என் பெண்ணை கரெக்ட் பண்றதுக்குன்னு கணக்கு போட்டுட்டியா..?? டேய் ஒன்னு தெரிஞ்சிக்கோ எப்பவுமே பணம் பணத்தோட தான் சேரனும் அதுதான் அந்த பணத்துக்கே மதிப்பு” என்று விழிகளில் மட்டுமின்றி வார்த்தைகளிலும் அனலை கக்கியவர்,
“என் பொண்ணு மகாராணிடா..!!அதுவும் அதிர்ஷ்ட தேவதை அவளை வச்சுதான் என் அரசியல் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயமே தொடங்க போகுது அது தெரியுமா உனக்கு..?? என்று சரணின் கழுத்தை நோக்கி தன் கரத்தை கொண்டு சென்றவர் பின் பாதி வழியிலேயே நிறுத்தி, “இந்த நேரத்துலயா இந்த இது…இது… ” என்று வலக்கரத்தை மேஜையில் ஓங்கி அறைந்து,
“அதான்டா இந்தகாதல் கன்றாவி எல்லாம் இந்த நேரத்துலயா வந்து தொலைக்கணும்.. அதுவும் உன் மேல..!!ஏன்டா ஏன்… என் அரசியல் கனவுக்கு நடுவுல அந்த கருமத்தை கொண்டுவந்து என் தாலியை அறுக்குறீங்க..???” என்று ஆத்திரத்துடன் நிறுத்தசில நிமிடங்களுக்கு கனத்த அமைதி அறையினுள்..,
தன் வாழ்வில் இப்படி ஒரு நாள் வரும் என்று கனவிலும் எண்ணி பார்த்திராத சரண் அதீத அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தான்.
“என் பொண்ணு வாழ்க்கையை எப்படி எல்லாம் அமைக்கனும்னு பல வருஷமா கனவு கண்டுட்டு இருக்கிறவன் நான் அவளை போய் அன்னக்காவடி உன்கூட அதுவும் அந்த குப்பைமேட்டுல …” என்று உடலை ஒரு முறை அருவெறுப்புடன் குலுக்கிவர்,
“சீச்சை நெனச்சி பார்க்க கூட முடியல என்னால” என்று கைகளை பின்னால் கட்டிக்கொண்டு கூண்டு புலியாக அவன் குறுக்காக நடந்தவர் ஒரு கட்டத்தில் நடையை நிறுத்தி..,
“டேய்.. டேய்… எல்லாத்துக்கும் மேல இந்த பிரகாசத்துக்கு சம்பந்தியாக ஒரு தராதரம் வேணா..?? இன்னும் நாலு மாசத்துல..!! எண்ணி நாலே மாசத்துலமினிஸ்டராக போறவன்டா நான்..!! கொஞ்சம் யோசிச்சி பாரு எனக்கு முன்ன.., அதுவும் சரி சமமா.. ச்சை ஒரு பிச்சைக்காரனடா அதுவும்என்கிட்டே பிச்சை எடுத்து பொழப்பு நடத்துற ப***** “என்று மூச்சை இழுத்துவிட்டவர்,
“நல்லா வருதுடா வாயில த்தூ… ஏன்டா உங்கப்பன் என்கிட்ட வாங்கின கடன் எவ்ளோன்னு தெரியுமா” என்றவாறே மேஜையின் இழுப்பறையை திறந்தவர்அதில் இருந்து சில காகித கற்றைகளை எடுத்து அவன் முன்போட்டு …,
“இதெல்லாம் ஒவ்வொரு முறை என்கிட்டே கடன் வாங்க வந்தப்போ உங்கப்பன் கையெழுத்து போட்டு குடுத்த தொகைநிரப்பபடாத வெத்து ஸ்டாம்ப் பத்திரங்கள்…, இதை வச்சி நான் என்னவெல்லாம் பண்ண முடியும்னு உனக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை” என்று நிறுத்தி கூர்மையாக அவனை பார்த்தவர் குரலை செருமி..,
“டேய் சொல்லப்போனா இந்த இருபது லட்சம் எனக்கு பிச்சை காசுடா..!! உங்கப்பன் வேற ஒழுங்கா வட்டி கட்டுறவன் அதனால இதை எல்லாம் நான் பெருசுபடுத்தியே இருக்கமாட்டேன்.. ஆனா என்ன பண்ண என் பொண்ணு நீ தான் வேணும்னு வந்து நிற்கிறாளே அதனால தான்டா நான் இதையெல்லாம் தோண்டி துருவ வேண்டியதா இருக்கு…. இப்போ கொஞ்ச வருஷமாவே நான் லேவாதேவில நேரிடையா இறங்குறதில்லை அதெல்லாம் பசங்க தான் பார்த்துக்குறாங்கஆனா என் பொண்ணுக்காக..!! என்றவர் இப்போது நாற்காலில் தோரணையாய் அமர்ந்துகால் மேல் கால் போட்டு மேஜையில் இருந்த பேனாவை எடுத்து சரணை பார்த்து ஆட்டிக்கொண்டே, “அப்புறம் மாப்பிள்ளை” என்று அழைக்கவும்..,
அவரின் அழைப்பில் சரணின் அகமெல்லாம் தீப்பற்றி எரிய தொடங்கியது…, விழி வழியே சரண் கனலை உமிழ..,
அதில் அட்டகாசமாக சிரித்தவர், “நீ தானடா ரொம்ப ஆசைப்பட்ட எனக்கு மாப்பிள்ளை ஆகணும்னு…, அதான் நிஜத்துல ஆக முடியாட்டியும்உன் ஆசையை கெடுப்பானேன்னு ஒரு நல்ல எண்ணம்” என்றவர் இப்போது எழுந்து பின்னங்கழுத்தை வருடிக்கொண்டே சரணை நெருங்கி,
“இதான் நல்லதுக்கே காலம் இல்லைன்னு சொல்றது பாரு உன் ஆசையை நிறைவேத்த நீயே விட மாட்டேங்கிற…, ஆனாலும் உனக்கு வேற வழி இல்லை மாப்பிள்ளைபேச்சுவாக்குல நாமஅப்பப்போ இந்த மானே, தேனே, பொன்மானே போடுவோமே அது மாதிரி நான் உன்கூட பேசும்போது ஆசையாஅப்பப்பமாப்பிள்ளையும் வரும் கண்டுக்காத” என்றவரின் குரல் மறுநொடியேமாறுபட சரணுக்கு தன்னை கட்டுப்படுத்துவது பெரும்பாடாகி போனது…
“அப்படி சொல்லுவேன்னு நெனச்சியா..?? அது அப்படி இல்ல மாப்.. பிள்.. ளை” என்று ஒவ்வொரு எழுத்தையும் அழுத்த கொடுத்து உச்சரித்தவர்
“நான் ஒவ்வொருமுறை உன்னை மாப்பிள்ளைன்னு கூப்பிடும் போதும் ஏன்டா இவன் பொண்ணை காதலிச்சோம்னு நீ அணுஅணுவா துடிக்கனும்டா”என்று ஒட்டுமொத்த வெறுப்பையும் ஒற்றை பார்வையில் கடத்த.. சரணிடம் கனத்த அமைதி மட்டுமே !
“என்னடா இவ்ளோ நேரம் பேசுறேன் உன்கிட்ட இருந்து சத்தமே வரமாட்டேங்குது…??ஓஓ… ஒருவேளை நீ நெனச்ச மாதிரி நான் பேசலையோ..??” என்றிட,
“இப்போ உனக்கு என்ன வேணும்..!! சுத்தி வளைக்காம சொல்ல வந்ததை சொல்லு” என்று அதுநேரம் வரை அனைத்தையும் பொறுமையாக கேட்டு கொண்டிருந்த சரணிடம் இருந்து வார்த்தைகள் அழுத்தமாக வந்து விழ…,
அதை கேட்ட பிரகாசத்தின் முகம் சட்டென பிரகாசிக்க, “செல்லம்… லவ் யூ செல்லம்… லவ் யூஊஉ…!! பார் எப்படி ஸ்ட்ரைட்டா பாய்ன்ட்டுக்கு வந்துட்ட இப்பதான்டா உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சிலாகித்தவர் ..,
“அதான் மாப்பிள்ளை இந்த வழக்கமான அப்பனுங்க மாதிரி என் பெண்ணை விட்டு விலகு இல்ல கொன்னு புதைச்சிடுவேன்னு சொல்லுற ரகம் நான் இல்லை” என்றவர்இப்போது அவன் தோளில் கை போட்டு
“நான் கொஞ்சமே கொஞ்சம் வித்யாசமான ஆளு மாப்பிள்ளை எப்படின்னு பார்க்குறியா..?? எது பண்ணினாலும் அதுல என்னோட டச் இருக்கனும்ன்னு நினைக்கிறவன் சின்ன வயசுல இருந்தே அப்படி வளர்ந்துட்டேன் என்ன பண்ண..?” என்று தாடையை நீவியவர்,
“அதான் எப்பவுமே நேர்மை, உண்மை, எருமை, கருமை, பாசம், பற்று, புண்ணாக்குன்னு இருக்கிற உன் மாமனை கண்டாலே எனக்கு அலர்ஜி” என்று மேலும் நாதனை மோசமாக பேச போனவர் நிதானித்து..,
அவனை பத்தி பேச ஆரம்பிச்சா நிறுத்தவே முடியாது ப்ச் இப்ப எதுக்கு அவனை பத்தி இங்க..? என்று அவர் பேச்சை நிறுத்தி ‘சரி எங்க விட்டேன்‘ என்று நெற்றியை நீவியவர்..,
“ஹான் அதான் மாப்பிள்ளைநான் கொஞ்சம் வித்யாசமானவன்எப்படின்னு பார்க்குறியா..?? சொல்றேன் கேளு” என்று சரணை நாற்காலியில் அமர்த்தியவர் தானும் அவன் முன் மேஜையில் அமர்ந்து,
“என் பெண்ணை காதலிச்சதுக்காக உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன்” என்று கூறவும் சரணின் பார்வை கூர்மை பெற,
“ஆமா செல்லம் நெசமாத்தான் சொல்றேன் உன்னை ஒண்ணுமே பண்ணமாட்டேன்…, உன்னை நான்ஏதாவது பண்ணி நீ பொட்டுன்னு போய் சேர்ந்துட்டன்னாஅப்புறம் என் பொண்ணு மனசுல நீ தியாகி ஆகிடுவியே..!!!அதுக்கு அப்புறம் உனக்காக கோவிலை கட்டி உன் நியாபகத்துலையே என் பொண்ணு காலம் பூரா கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டா? அப்படி மட்டும் நடந்துட்டா…? என்று அத்தகைய நிலையை எண்ணி பார்க்கவும் விரும்பாதவரின் விழிகள் அச்சத்தில் உறைய,
‘அதுக்கு அப்புறம் என்னோட மந்திரி கனவு என்ன ஆகுறது…??’ என்று அப்பட்டமாக வழிந்தநடுக்கத்துடன் கேட்டவர்,
“எனக்கு தேவை உன் உசுரு இல்லைடா எனவுமே கண்கள் இடுங்க பிரகாசத்தை பார்த்த சரணிடம், “என்ன பார்க்குற உன் உசுரு என்னோட ***** சமம்..!!”,
“இதோ இப்படி..!! என்று தன் தலையில் இருந்து ஒரு முடியை பிடுங்கியவர் இப்படி புடுங்கி போட்டுட்டு போய்க்கிட்டே இருப்பேன் ஆனா அதனால என்ன பிரோஜனம் பத்து பைசா தேறுமாடா உன் உசுரு..!!” என்று எள்ளலாக பார்த்தவர் ,
“எனக்கு தேவை அமைச்சர் பதவி..!! என் பொண்ணு மனசு வச்சா மட்டுமே சாத்தியம்அதுக்கு நீ என் பொண்ணு வாழ்க்கையில இருந்து மொத்தமா விலகனும் அதுவும் சத்தமே இல்லாம ! என்று சுட்டுவிரலை அவன் முன் நீட்டி எச்சரிக்க
சரணோ இப்போதுபுருவங்கள் நெறிபட ஒரு அலட்சிய பாவத்துடன் அவரை பார்த்திருந்தான் .
‘என்ன புரியலையா செல்லம்..?? இப்போ சொல்றேன் கேட்டுக்கோ’ என்று அவன் சட்டையை நீவி சரி செய்தவாறே,
“அதாவது நான் இங்க வந்ததோ உன்கூட பேசினதோ எதுவும் என் பொண்ணுக்கு தெரியகூடாது அவளுக்கு பிடிக்காத மாதிரிநீ நடந்துக்குற விதத்துலஎன் பெண்ணா உன்னை விட்டு விலகனும் புரிஞ்சதா” என்று புருவம் உயர்த்தியவர் மறுநொடி அட்டகாசமான சிரிப்புடன்,
“நீ சுத்த ஆம்பளை மாப்பிள்ளை..!! நமக்கு நடுவுல நடக்குற இந்த டீல் என் பொண்ணுவரை கொண்டு போக மாட்டேங்கிற நம்பிக்கை எனக்கு ரொம்பவே இருக்குடா..!!” என்று அவனை பார்வையால் குத்தி கிழித்தவர்..,
“என்ன சொல்ல மாட்டதானே..??” என்று மீண்டும் கேட்டு சரணின் அழுத்தமான தலையசைப்பில் அதை உறுதிபடுத்தி கொண்டவர்,
“வெரி குட் என் பொண்ணு மினிஸ்டர் பையனை கட்டிக்கணும் அதுக்கு நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாதுஎந்த வாயால நீ இல்லாம வாழ்க்கையே இல்லைன்னு என் பொண்ணு சொன்னாலோ அதே வாயால உன்னை வெறுத்து நீ வேண்டாம்னு சொல்லனும்.. நான் காட்டுற பையனை தான் கட்டனும்” என்று நிறுத்தியவரின் விழிகள் சரணின் செய்கையில் மேலும் சிவக்க தொடங்கியது,
பின்னே அவர் பேசிகொண்டிருக்கும் போதே அலட்சியமாக கால் மேல் கால் போட்டு காதை குடைந்தவன் “என்ன முடிஞ்சதா இல்லை இன்னும் இருக்கா..???” என்றிட அதுவரை பதவி மோகத்தில் பிதற்றி கொண்டிருந்தவரின் ஆத்திரம் அவனது எள்ளலில்பன்மடங்காக பெருகிட சரண் சட்டையை பிடித்து, “என்னடா நக்கலா…??? ” என்று கர்ஜித்திருந்தார்.
“பின்னே..!! நான் கூட எங்கே எங்கப்பா பட்ட கடன் தான் என் காதலுக்கு எமனாகி இருக்கோன்னு அமைதியா இருந்தா, இப்போ தானே தெரியுது…” என்று சட்டையை விடுவித்து அவரை மேலிருந்து கீழ் பார்த்தவன்,
“இவ்ளோ நேரம் பதவிக்காக பெண்ணையே விக்கிறதுக்கு என்கிட்டே பேரம் பேசிட்டு இருக்க…” என்று முடிக்கும் முன்னமே,
“டேய்” என்று அடிக்க பாய்ந்த பிரகாசத்தின் கரத்தை பிடித்து பின்னால் வளைத்தவன் பலமாக முறுக்கி கொண்டே..,
“டேய் இப்போ சொல்றேன் நல்லா கேட்டுக்கோ உன் பதவிவெறிக்கு என் கீர்த்தியை நான் பலி கொடுக்கமாட்டேன்.., நீ சொன்ன மாதிரி விட்டுவிலகவும் மாட்டேன்” என்று அவர் கரத்தை மேலும் முறுக்கிட வலி தாளாமல் கத்திய பிரகாசத்திடம்,
“ஷ்ஷ்ஷ் இப்போ என்ன அவளுக்கும் எனக்கும் நடுவுலஇருபது லட்சம் தானே தடையா இருக்கு..!! இன்னும் ஒரே வாரத்துல அந்த பணத்தை உன் முகத்துல விட்டெறிஞ்சிட்டு என் பாப்புவைகூட்டிட்டு போவேன்டா உன்னால முடிஞ்சதை பாரு” என்று கையைவிட தடுமாறி மேஜையில் இடித்து கொண்டு கீழே விழுந்திருந்தார் பிரகாசம்.
**************************
எத்தனை நிமிடம் அதே நிலையில் சரணை வெறித்து கொண்டிருந்தார் என்பது அவருக்கே வெளிச்சம் ஆனால் மேஜையின் முனையில் முட்டியதில் நெற்றியில் காயம் ஏற்பட்டு குருதி வழிந்து அவர் கன்னத்தை நனைக்கவும் தான் ஸ்மரன் பெற்றவர் அறையில் இருந்து வெளியேற முயன்ற சரணை சொடக்கிட்டு அழைத்தார்.
“இதுக்கு நீ ரொம்பவே அனுபவிப்படா..” என்று தன் குருதியை சுட்டிக்காட்டி பல்லை கடித்தவர் “டேய் என்னை என்ன சொம்பைன்னு நெனச்சிட்டியா…?? இந்த பிரகாசத்தை ரொம்ப லேசா எடை போட்டுட்ட… ஹ்ம்ம்” என்று தாடையை நீவியவாறே சம்மணமிட்டு அமரவும் சரணும் அழுத்தமாக பார்த்தான்.
“மாப்..பிள்..ளை உங்கப்பனையே பார்த்தவன்டா நான்..!! என்கிட்டேயே ஹீரோயிசமா..?” என்று உருமியவர் தன் கைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்து பேசியவர்,
“உன் போனை எடுத்து அதுல அனுப்பி இருக்க வீடியோவை பாரு மா..ப்..பிள்..ளை நான் யாருன்னு புரியும்” என்றார்.
அலைபேசியை உயிர்பித்து பிரகாசம் அனுப்பிய காணொளியை கண்ட சரண் அதில் தெரிந்த காட்சியை கண்டு உடலின் குருதி மொத்தமும் வடிந்த நிலையில் உச்சபட்ச அதிர்ச்சியில் அசைவற்று போனான்.
பின்னே ! இரக்கமே இல்லாத கயவர்கள் இருவரின் கரங்களில் பச்சிளம் பாலகனான சரணின் அக்கா பிள்ளை வருண் பள்ளிச்சீருடையில் வாயில் துணியை வைத்து அடைக்கபட்டு கண்கள் கட்டப்பட்ட நிலையில் ரயில் தண்டவாளத்தில் கொண்டு சென்று படுக்க வைக்கப்படும் காட்சியை கண்டுநெஞ்சை அடைத்திட முதல்கட்ட அதிர்ச்சியில் சரண் அசைவற்று போனது சில கணங்களுக்கு தான்…
இப்ப தெரியுதாடா என்று பிரகாசம் கேட்கவும் தன்னை மீட்டெடுத்தவன் பிரகாசத்தின் சட்டையை கொத்தாக பிடித்திருந்தவன் விழிகள் சிவந்திருந்தாலும் அதற்கு நேர்மாறாக அவன் குரல் முற்றாக உடைந்திருந்தது..,
“டே..ய் வ… வரு..ண்”, ‘குழந்..தை..க்கு‘என்று கலங்கிய கண்களை புறங்கையால் துடைத்தவாறே “குழந்தையை எதுக்கு… இப்படி.. என்ன ஆச்சு அவனுக்கு.., எங்… எங்க வருண்” என்று சீறவும்..,
“அதான் சொன்னேனேடா நான் எப்பவும் எதையும் வித்யாசமா செய்வேன்னு…!! என்றவரின் உதடுகளை அவர் நெற்றியில் இருந்து வழிந்தகுருதி நனைக்கஒற்றை விரலால் சுண்டி விட்டவாறே…,
“உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன்னு சொன்னேனே தவிர உன் குடும்பத்தை என்ன பண்ணுவேன்னு சொல்லலையே மாப்பிள்ளை” என்றுஎழுந்து நின்றவர் கை கால்களை உதறி வலக்கரத்தை புறங்கழுத்தில் பதித்து சொடுக்கெடுத்தவாறே சரணை நெருங்கி அவன் செவியோரம், “மொத்த குடும்பத்தையும் உரு தெரியாம அழிச்சிடுவேன்டா” என்றுசன்னக்குரலில் அழுத்தமாக கூற விழிகள் தெறிக்க ஸ்தம்பித்து போனான் சரண்.