கனத்த மனதுடன் நினைவுகளில் இருந்து மீண்ட சரணின் முகம் வேதனையில் வெகுவாக கசங்கி போயிருக்க முகத்தை அழுந்த துடைத்து கீர்த்தியை பார்த்தவன் அவள் அதே அழுத்தத்துடனும் திடத்துடனும் அமர்ந்திருப்பதை கண்டு, “எவ்வளவு நேரம் இப்படியே உட்காந்திருப்ப வா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு” என்றவாறே அவள் கரத்தை பிடிக்க முயல,
‘விடு‘ என்ற கர்ஜனையுடன் அவன்கரத்தை உதறிக்கொண்டு எழுந்தவள் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிற்றை உயர்த்தி பிடித்து, “இது இருந்தாதானே நீ என்னை அதிகாரம் பண்ணுவ” என்றவாறே அதை கழற்ற முற்பட அவளை சரண் தடுக்குமுன்,
“குட்டிமாஆஆஆஆ…” என்ற பெருங்கேவலுடன் கீர்த்தியின் பாதங்களில் சரணடைந்த பிரகாசம் “வேண்டாம்மா வேண்டாம் இதுக்கு மேலயும் என்னை தண்டிக்கிறேன்னு உன்னோட வாழ்க்கையை அழிச்சுக்காத அதை பார்க்கிற சக்தி எனக்கு இல்லை…, எனக்கு என் பொண்ணு வாழனும் என்று அவளிடம்கைகூப்பியவர்,
“இந்த நாளுக்காக தான் நான் காத்துட்டு இருந்தேன்ஆனா ஏறின கையோட இப்படி இ..இற….” என்றவருக்கு துக்கம் நெஞ்சை அடைக்க அதற்கு மேலும் தொடர முடியாது ஓய்ந்துபோனவர்,
“ப்ளீஸ் கீர்த்தி உன்னை கெஞ்சி கேட்கிறேன் எதுக்காக இன்னும் இப்படி பண்ணிட்டு இருக்க? ஒருவேளை என் பெண்ணை இந்தனை மாசம் இந்த நிலைல பார்த்த பிறகும் நான் சாகாம இருக்கேன்னு இப்படி பண்றியா சொல்லு..” என்றவர் இப்போது மகளின் முகத்தை இருந்த தீவிரத்தை கண்டு,
‘நான் செத்தாதான் நீ வாழ முடியும்னா சொல்லுநான் இப்பவே இங்கயே செத்துடுறேன்… ஆனா ஆனாதயவுசெஞ்சு இப்படி பண்ணாத குட்டிமாகையை கீழே இறக்குடா” என்று கதறிக்கொண்டே தன் கண்ணீரால் அவள் பாதங்களை கழுவ அதை கண்ட சரண் குறையாத அதிர்ச்சியுடன் திரும்பி கீர்த்தியை தான் பார்த்தான்.
ஆனால் அங்கு அவளோ சிறு சலனமின்றி கூர் விழிகளில் குறையாத வேட்கையுடன் அவரின் செயல் அவளை சிறிதும் பாதிக்கவில்லை என்பதை போல் உணர்வுகள் துடைத்த முகத்துடன் நின்றிருந்தாள்.
அதில் மேலும் அதிர்ந்தவன் “கீர்த்தி என்ன இது உங்கப்பா கால்ல விழுந்து இருக்காரு நீ அமைதியா பார்த்துட்டு இருக்க முதல்ல அவரை எழ சொல்லு, பெத்தவங்க பிள்ளைங்க காலுல விழுறது பெரிய பாவம்” என்றவன் ‘யோவ் எந்திரி‘ என்றவாறு பிரகாசத்தை தூக்கமுயல,
“நான் பிறக்க காரணமானவன் எல்லாம் எனக்கு அப்பன் ஆகிட முடியுமா..??”என்று நேர்கொண்ட பார்வையுடன் முகத்தில் எவ்வித உணர்வையும் வெளியிடாமல் அலட்சியத்துடன் கீர்த்தி கேட்கபிரகாசத்தை தூக்க முயன்ற சரணுக்கு தூக்கிவாரி போட அவன் கரமோ அந்தரத்தில் நின்றுபோனது.
“என்ன பேசுற கீர்த்தி” என்றவாறே பிரகாசத்தை தூக்கி நிறுத்தி “நீ பேசுறதுக்கு என்ன அர்த்தம்னு தெரிஞ்சுதான் பேசுறியா..? இந்த ஆளு எந்தளவுக்கு கேடுகெட்டவன்னு எனக்கு தெரியும் இல்லைன்னு சொல்லலை, என்னை பொறுத்தவரையில் இவனெல்லாம் வாழவே தகுதி இல்லாதவன், எனக்கு பண்ணின கொடுமைக்கு இவனையெல்லாம் நான் கண்ட துண்டமா வெட்டி போட்டிருக்கணும்” என்றிட அதுவரை முகம் கசங்க மகளையே யாசிப்புடன் பார்த்துகொண்டிருந்த பிரகாசம் தன் செயல்களை எண்ணி வெட்கி தலைகுனிந்தார்.
“அதுவும் இப்போ இல்லை மூணுவருஷத்துக்கு முந்தியே” என்றவனின் விழிகளில் வழிந்த கனலே சொல்லியது அவனுள் அணையாமல் இருக்கும் ஜுவாலையின் அளவை..!!
“இதோ இப்போ கூடஇவனை பார்க்க பார்க்க எனக்கு…” என்றவனுக்கு அன்றைய நாளின் நினைவுகள் ஆர்பரித்து எழ அதன் அழுத்தம் தாளாமல் கண்களை இறுக மூடி அதை உள்ளேயே விழுங்கி தன்னை கட்டுபடுத்தி கீர்த்தியை பார்க்க அவளோ விழிகள் பளபளக்க இரையை வேட்டையாட துடிக்கும் புலியாக பிரகாசத்தையே வெறித்து கொண்டிருந்தாள்.
அவளின் பார்வையை கண்ட சரணுக்கு இது அவளது வழக்கமான பார்வை இல்லையே என்று தோன்றாமல் இல்லை.. தந்தை மீது உயிரையே வைத்திருக்கும் கீர்த்திக்கு ஏன்இத்தனை வெஞ்சினம்..!! என்று எண்ணியவனுக்கு அப்போதுதான் அன்று கீர்த்தி கூறியது நினைவு வந்தது.
ஆம் அன்று அவள் தந்தையை பழிவாங்க வழி ஏற்படுத்தி கொடுப்பதாக கூறினாளேஅப்படி என்றால்..? என்று மீண்டும் மனதினுள் அவள் பேசியவைகளை நினைவு கூர்ந்தவனுக்கு நூற்கண்டின் நுனி பிடிபட..,
“இவன்உனக்கு நல்ல அப்பனாதானே இருந்தான்!இவன் உன் வாழ்க்கையில எந்த அளவு முக்கியம்னு எனக்கு நல்லா தெரியும்.. அப்படி இருக்க இப்போ அலட்சியத்தோட இப்படி நிற்க வச்சிருக்கன்னா?” என்று புறவம் சுருக்கியவன்,
‘உன்னோட நிலைக்கு இவன்தான் காரணம் இல்லையா..?’ என்றவாறே அவளை நெருங்கியவன்,
‘என்ன ஆச்சு உனக்கு..?? நான் இல்லாத இந்த சில வருஷத்துல அப்படி என்ன நடந்தது, இவன் உன்னை என்ன பண்ணான் அதையாவது சொல்லுமா..?’ என்றுஅடுத்தடுத்து கேள்விகளை தொடுக்க,
கீர்த்தியோ அப்போதும் சளைக்காமல் அதே அலட்சிய பாவத்துடன் பார்வையால் பிரகாசத்தை தான் துளைத்தெடுத்து கொண்டிருந்தாள்.
அதை கண்ட சரண் ஓங்கி பிரகாசத்தை அறைந்து, “சொல்லுடா அவளை என்ன பண்ணின?அவளுக்கு என்னாச்சு..?? நான் இல்லாதப்போ உன் பதவி வெறிக்கு அவளை பலியாக்கிடியா…?? என்று கைமுஷ்டியை இறுக்கியவனுக்கு தன்னவளின் நிலைக்கு பிரகாசமே காரணம் என்பதுகீர்த்தியின் பார்வையில் பிடிபட பிரகாசத்தின் கழுத்தில் இருகரங்களையும் பதித்து அழுத்தம் கொடுத்துக்கொண்டே
“டேய்ஈஈஈஈ… சொல்றா இவளை இந்த நிலைக்கு கொண்டு வந்தவன் யாரு…?? அந்த மினிஸ்டர் பையனா இல்லை…” என்று மொத்த ஆவேசத்தையும் கரங்களின் வழியே கடத்தியவன் “சொல்லுடா என்ன ஆச்சு என் பாப்புக்கு..அவ குழந்தைக்கு காரணம் யார்..???” என்று கர்ஜிக்க,
இருகரங்களையும் மார்பின் குறுக்கே கோர்த்து கொண்டு அங்கிருந்த தூணில் சாய்ந்து விழிகளில் குறையாத ரசனையுடன் பிராகசத்தின் திணறலை ரசித்து கொண்டிருந்த கீர்த்திக்கு வன்மமும் பழிவெறியும் அதிகரிக்க அவரின் துடிப்பில் ஏதோ குறைவதை காணவும் ‘ப்ச்..‘ என்று கீர்த்தி இதழ் வளைத்து தன் அதிருப்தியை முகத்தில் வெளிபடுத்த அவள் இதழ்களோ சற்று உரக்கவே ‘இது போதாதே..!!‘ என்று முணுமுணுத்தது.
அதுவரை அவனின் அழுத்தம் தாளாமல் திணறிக்கொண்டிருந்த பிரகாசத்திடம் சரணின் இறுதி கேள்வியில் அசைவற்று போனது.
முகத்தில் உச்சகட்ட மின்சாரம் பாய்ந்த அதிர்வுடன் விழிகள் தெறிக்க சரணை பார்த்தவர் கண்களில் நீர் திரண்டுவிட, “மா.. மா.. மாப்பிள்ளை” என்று திணறிக்கொண்டே அவன் கரங்களை விடுவிக்க முயல அதற்குள் வலக்கரத்தால் அவரை ஓங்கி அறைந்த சரண் இன்னொரு முறை இந்த வார்த்தையை சொன்ன… என்று எச்சரித்தான்.
பிரகாசமோ அவன் கன்னத்தில் அடித்த அடியை விடவும் நெஞ்சில் அடித்த அடியில் எழுந்த வலியை கிரகிக்க முடியாமல் நெஞ்சம் விம்ம கலங்கிய கண்களுடன் சட்டென சரணின் காலில் விழுந்து “அப்படி சொல்லாதிங்க மாப்பிள்ளை என்ன இருந்தாலும் இது உங்க குழந்தைநீங்களே இப்படி பேசலாமா..??” என்றார்.
அதை கேட்ட சரண் புரியாமல் கீர்த்தியை பார்க்க சரணுக்கு முன் கீர்த்தியின் குரல் பிரகாசத்தைசென்றடைந்து அவர் உயிரை வேரோடு பிடுங்கி எறிந்திருந்தது.
ஆம் அவரின் துடிப்பு அவளுக்கு திருப்தி அளிக்காததால் அதை கூட்ட வேண்டி, ஒற்றை புருவம் உயர்த்தி எள்ளலுடன் பிரகாசத்தை பார்த்தவள், “அதை நான் சொல்லணும்… நான் எப்போ இது அவரோட குழந்தைன்னு உன்கிட்ட சொன்னேன்.. எந்த தைரியத்துல இந்த குழந்தைக்கு அவரோட இனிஷியல் போட பார்க்கிற” என்று சிறு பிசிறு தட்டாமல் இளக்கமின்றி தெளிவாக தன் வார்த்தைகளை உதிர்க்கவும் பிரகாசத்திற்கு சப்தநாடியும் ஒடுங்கி போனது.
பேச்சற்று மகளை பார்த்தவரின் முகமோ வெளுத்து போயிருக்க சரணின் கால்களை கட்டிகொண்டிருந்தவரின் கரங்கள் நடுங்கிட அசைய மறுத்த உடலை கடினபட்டு பிடித்திழுத்து எழுந்து நின்றவர் கண்ணீருடன் மகளருகே வந்து “குட்டிமா..” என்றழைத்தார்.
சரண் புறம் இருந்து பார்வையை திருப்பாமல் கீர்த்தி நிற்கவும் “அம்மாடி ஏன்டா ஏன்..??” என்றுவெடித்து கிளம்பிய கதறலுடன் வேரற்ற மரமாக மீண்டும் அவள் பாதங்களை அடைந்தவர் “நீ பொய் தானே சொல்ற இது மாப்பிள்ளையோட குழந்தை தானே..??” என்று தான் கேட்டதை நம்பமுடியாமல் உறுதிபடுத்தி கொள்ளவேண்டி மீண்டும் கேட்டவர்..,
“ஏன்டா குட்டிமா இப்படி பேசுற நாங்க உன்னை மாப்பிள்ளை கிட்ட இருந்துதானே கூட்டிட்டுவந்தோம், அவர்.. அவ.. அவரு” என்று மெண்டு முழுங்கியர் சரணை பார்க்கும் சக்தி இல்லாதவராக தலையை தாழ்த்தி கொண்டே “அவருக்கு என் மேல இருந்த கோபத்துக்கு நிச்சயமா உன்…” என்று மேலும் பேசமுடியாமல் முகம் பொத்தி கதறியவர்,
“இல்ல நான் நம்பமாட்டேன் என் பெண்ணுக்குஎன்னோட வாரிசுக்கு இனி… இனிஷியல்” என்றவர் மனதின் கனம் தாங்க இயலாதவராக ‘நிச்சயமா இது மாப்பிள்ளையோட குழந்தை தான்..!!‘ என்றார்.
மீண்டும் நிமிர்ந்து நின்றவள், “என்னது மாப்பிள்ளையா ! அது யாருஎனக்கு தெரியாம..??” என்று அலட்சியமாக கேட்டவள் “ஓஒ.., ஒருவேளை இதை கட்டிட்டதால இவரை மாப்பிள்ளைன்னுசொல்றியா..?? என்றவளின் முகம் கொள்ளா புன்னகை பிரகாசத்தின் வயிற்றில் புளியை கரைத்தது.
நம்பமட்டாமல் அவரின் தலை தன்னிச்சையாக இல்லை என்பதாக இருமருங்கிலும் அசைந்தவாறே “அம்மாடி ஏன்டா இப்படி பேசுற?நீ சொல்றதை பார்த்தா எனக்கு பயமா இருக்கு ஒருவேளை மாப்பிள்ளை சொல்ற மாதிரி உனக்கு ஏதாவது.. ” என்று ஆரம்பித்தவரின்குரல் பெரும் நடுக்கம் கொள்ளஎங்கே மகளுக்கு தனக்கே தெரியாமல் அநீதி நடந்திருக்குமோ என்ற எண்ணமே வியர்வையை தோற்றுவிக்க ‘இல்லை இல்லல்ல நான் நம்பமாட்டேன் உண்மையை சொல்லுடா இந்த குழந்தை மாப்பிள்ளையோடது தானே?’ என்று உடைந்த குரலில் பெரும் எதிர்பார்ப்புடன் கேட்கவும்,
அதுநேரம் வரை கொண்டிருந்த புன்னகை துணி கொண்டு துடைக்கபட, “அப்படியா..??” என்று ஆச்சர்யத்துடன் பிரகாசத்திடமே கேட்டவள் “பாருடா எல்லாரும் ஒரு குழந்தையோட அப்பாவை அம்மாதான் அடையாளம் காட்டனும்னு சொல்லுவாங்க இங்க வித்யாசமா இருக்கு… இந்த குழந்தைக்கு இவரை அப்பான்னு நீ சொல்ற” என்று அவரை அழுத்தமாக பார்த்தவள்,
“அவ்ளோ நம்பிக்கையா..??” என்று புருவம் உயர்த்தியவள் அதே நிமிர்வுடன் தயவு தாட்சன்யமே இல்லாமல், “ஒருவேளை நீ ……..” என்று தொடங்கவுமே…,
தந்தை மகள் இருவருக்கும் இடையிலான சம்பாஷணையை ஒருவித திகைப்புடன் பார்த்து கொண்டிருந்த சரண் “கீர்த்திஈஈஈஈ…. ” என்று கர்ஜிக்க
“சிவா சிவாஆஆஅ” இரு கரங்களாலும் தன் செவிகளை பொத்திகொண்டபிரகாசத்தின் இதயத்துடிப்பே சில நொடிகளுக்கு நின்றுபோனது என்றுதான் சொல்ல வேண்டும்… அவரையும் அறியாமல் விழிகளில் இருந்து அணை உடைத்த வெள்ளமாக கண்ணீர் கரை புரண்டோட கத்தி இன்றி ரத்தமின்றி அவர் உயிரை கைகளால் பிய்த்து எறிந்திருந்தாள் கீர்த்தி.
“என்ன பேசுற கீர்த்தி ஒரு அப்பாகிட்ட பேசக்கூடிய பேச்சா இது…?? இந்த நேரத்துல குழந்தை முக்கியம்உன்னை ஏதோ ரொம்ப டிஸ்டர்ப் பண்ணி இருக்குன்னு எனக்கு புரியது.., உன்னோட இந்த மனநிலை நிச்சயமா குழந்தைக்கு நல்லதில்லை எதுவா இருந்தாலும் என்கிட்டே சொல்லு” என்று சரண் கேட்க,
வெறுமையான விழிகளுடன் அவனை பார்த்தவள்மீண்டும் மெளனகவசத்தை அணிந்து அவனிடமிருந்து விலகிசென்று அமர, அவளையே விளங்கா பார்வையுடன் பார்த்தவன் மனம் எதற்குமே பிடிகொடுக்காமல் செல்பவளை கண்டு ஓய்ந்து போனது… தலையை கோதி தன்னை மட்டுபடுத்தியவன் அருகே வேரற்ற மரமாக விழுந்து கிடந்த பிரகாசத்தை நெருங்கி சட்டையை பிடித்து எழுப்பி நிறுத்தியவன்,
“டேய் திரும்ப உன் நடிப்பை ஆரம்பிச்சிட்டியா அதுவும் இந்த நிலையில் இருக்க பொண்ணுகிட்டயே” என்று ஓங்கி அறைந்தவனுக்கு அவரை கொன்று கூறுபோடும் வெறி!
“சொல்லு அவளுக்கு என்ன ஆச்சு..??” என்று குறையாத சீற்றத்துடன் கேட்கவும்,
சரணையே வெறித்து பார்த்து கொண்டிருந்த பிரகாசத்திற்கு இம்மையும் தெரியவில்லை மறுமையும் புரியவில்லை. மகளின் வார்த்தைகளில் மூச்சடைத்து போயிருந்தவருக்குசரணின் குரலில் இருந்த அறியாமை அவன் பொய்யுரைக்கவில்லை என்பதை நெற்றிபொட்டில் அறைந்து உணர்த்த அவர் விழிகளோ அவன் முகத்தில் தன் மகளுக்கான துடிப்பின் தவிப்பின் நிஜத்தை படம் பிடித்து காட்டவும்,,
மறுநொடியே பிரகாசத்திற்குஇதயத்துடிப்பு வேகமாக அடித்துக்கொண்டு உச்சம் எட்டி அதன் துடிப்பை பிரகாசம் உணர கண்கள் இருட்டி கொண்டு வந்தது…. எச்சில்கூட்டி விழுங்கி தன்னை தேற்ற முயன்று தோற்றுப்போனவர்மூச்சுகாற்றிற்கு தவித்து தள்ளாடியவாறுதலையை பிடித்து கொண்டு தரையில் அமர்ந்தவருக்கு சித்தம் கலங்கி போனதென்றால் மிகையல்ல..!!
பின்னே நடப்பவைகள் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு நிற்க பித்து பிடிக்காத குறையாக நின்றிருந்தவருக்கு இதுநாள் வரை அது சரணின் குழந்தை என்று நம்பி இருக்க இப்போது மகளின் பதில் பேரதிர்ச்சியே..!!
ஏனெனில் அன்று சரண் வீட்டில் இருந்து கீர்த்தியை அழைத்து வந்த நாதன் பிரகாசத்துடன் அனுப்பாமல் அவளை தன் பொறுப்பில் எடுத்துகொண்டார். எங்கே காதலனிடம் இருந்து பிரித்து அழைத்து வரப்படும் பெண்கள் வழக்கமாகசெய்யும் முட்டாள்தனத்தை அவள் செய்யக்கூடும் என்பதாலேயே இம்முன்னேற்பாடு.
அவளை தன் மாலின் இறுதி தளத்தில் அவர் ஓய்வெடுக்க என்று பயன்படுத்தியமூன்று அறைகள் கொண்ட சிறிய வீட்டில் தங்க வைத்தவர்மற்றவர்களிடம் கூறி வந்தது போல பெண் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் தன் தாய்க்கும், மகன் மகளுக்குகூட அவள் இவரின் கண்காணிப்பில் இருந்ததை தெரியாத விதத்தில் பார்த்துகொண்டார்.
அவ்வப்போது விசேஷ நாட்களிலும், வருட இறுதி நாட்களிலும், சரக்கு இறக்கப்பட்டு ரகம் பிரித்து விலை நிர்ணயிக்கும் நாட்களில் அவர் வீட்டிற்கு செல்லாமல் அங்கு தங்குவது வழக்கம்… அதனால் தாயம்மாளுக்கு பெரிதாக மாறுபாடு தெரியவில்லை.
இரவு பலநேரங்கள் வளர்மதியை துணைக்கு அழைத்து கீர்த்தியுடன் படுக்க வைத்துவிட்டு வீட்டு பெண்ணின் வாழ்வை சீரமைக்க வேண்டிநாதன் ஹாலில் தூக்கம் இன்றி யோசனையுடன் நடைபயின்று கொண்டிருப்பார்…
எப்பாடுபட்டேனும் கீர்த்திக்கு நல்வாழ்க்கை அமைத்து விடுவதையே லட்சியமாக கொண்டிருந்த மனிதர்கீழே கடைக்குசெல்லும் நேரங்களில்படுக்கை அறையையும் வாயிற்கதவையும்பூட்டி விட்டு அவளை எச்சரித்து விட்டு செல்வார்.
நாதன் உடன் இல்லாத நேரங்களில் ஹாலை மட்டுமே உபயோக படுத்தவேண்டிய நிலை கீர்த்திக்கு! சமையலறையும் சுத்தமாக துடைத்து வைக்கபட்டிருக்கும் ஆபத்தான எந்த பொருட்களும் இருக்காது. வளர்மதி வீட்டில் இருந்து சமைத்து கொடுத்து அனுப்பிவிடுவார். அது மட்டுமின்றிஅவள் ஏதேனும் தற்கொலை முயற்சி எடுத்து விடகூடாது என்பதற்காக ஹாலில் கண்காணிப்பு கேமரா பொருத்தி இருந்தார்.
பிரகாசத்தைதண்டிக்க வேண்டி பல வருடங்களாக மனதினுள் உருப்போட்டு அவள் வகுத்த சக்ரவியூகத்தை தகர்த்தெறிந்த நாதன் அவரை அறியாமலே கீர்த்தியின்இரண்டாம் எதிரி ஆகிபோனது அவரின் விதி..!!
கீர்த்தியை பொறுத்தமட்டில் நாதனிடம் இருந்தஅந்த இரண்டு மாதங்கள் கொடுமையின் உட்சம்..!!இதுவரை அவள் கடந்து வந்தவர்களில் பாசத்தை மட்டுமே காட்டி சாவடிக்ககூடிய மனிதர் ஒருவர் இருக்ககூடுமெனில் அது நாதன் மட்டுமே..!!!
தினமும் அவரின் அறிவுரைகளையும் பாச பேச்சுக்களையும் கேட்கமுடியாமல் தவித்த கீர்த்தி பலமுறை நாதனிடம் தற்கொலைக்கு முயலமாட்டேன் என்று உறுதியளித்தும் அதை ஏற்காதவர் கீர்த்தியை வீட்டு சிறையில் வைத்திருந்தார்.
அவரின் கண்காணிப்பில் இருந்த நாட்களில் காலை உணவை அவளுக்கு ஊட்டிவிடுவதில் ஆரம்பிக்கும் நாதனின் நாள் அடுத்துசுப்ரபாதமாக தாய் தந்தை பற்றியும், ஒழுக்கம் பற்றியும் , கோட்பாடு, நெறிமுறை, குடும்பகௌரவம், மானம், மரியாதை, ஏன் காதல் கூடாது என்று அவளுக்கு வகுப்பு எடுக்க ஆரம்பித்துவிடுவார். அதுமட்டுமா மாலை வேளைகளில் அவளிடம் தன் பிள்ளைகளை எப்படி வளர்த்திருக்கிறார் என்பது குறித்து பேசி அவள் மனதை கரைத்துசரணை மறந்து புதுவாழ்விற்கு அவளை தயார்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டவர் கீர்த்தியின் செயல்பாடுகளில் மாற்றம் வரும்வரை அவளை அத்தனை சுலபத்தில் விட்டார் இல்லை.
பழிவெறியில், பிரகாசத்தை கொன்று புசிக்கும் ஆவேசத்தில் பாயும் புலியாக வேட்டையாடும் மனநிலையில் இருந்தவளை கூண்டு புலியாக அடைத்து வைத்து அவளின் அனைத்து கனவுகளையும்தவிடுபொடியாக்கிய நாதன் அவரையறியாமலேயே கீர்த்தியின் பழிவாங்கும் பட்டியலில் பிரகாசத்துடன் இணைந்திருந்தார்.
சில நிமிடங்கள் மெளனமாக கழிய அங்கே கனத்த அமைதி…
கீர்த்தியை நெருங்கிய சரண், அவளிடம் பழங்கள் அடங்கிய கிண்ணத்தை அளித்து ‘சாப்பிடு கீர்த்தி’ என்றான்.
அதை தட்டிவிட்டு எழுந்தவள், “லுக் மிஸ்டர் சரண் நான் ஒன்னும் இங்க சீராட வரலை! நீ ரூம்குள்ள பண்ணினதை வெளியே அத்தனை பேர் எதிரில் செய்து என்னை கழுத்தை பிடிச்சி வெளியே தள்ளுவன்னு தான் இங்க வந்தேன்… ஆனா நீ இதை கட்டி என்னை..” என்று பல்லை கடித்துக்கொண்டே தாலியை கழட்ட முறைப்பட மறுநொடியே ‘பளார்’ என்ற சத்தத்துடன் கீர்த்தியின் கன்னம் சிவந்து போனது.