என்று சத்தமாக பாடலை ஒலிக்க விட்டு அதற்கேற்றவாறு அமர்ந்த வாக்கிலேயே நடனமாடி கொண்டு வந்த அலரின் விழி வட்டத்தில் அவளவனின் சிந்தனை வயப்பட்ட முகம் விழ ஒலித்து கொண்டிருந்த பாடலின் அளவை குறைத்தவள் ‘மாமா‘ என்றழைத்தாள்.
பார்வையை சாலையில் பதித்து சுருங்கிய நெற்றியுடன் தனக்குள் உழன்று கொண்டிருந்த எழிலிடம் பதிலில்லை,
‘மாமா‘ என்று மீண்டும் அலர் அழைக்க,
‘ஹ்ம்ம்‘ என்று குரல் கொடுத்தானே அன்றி அவன் பார்வை மொத்தமும் சாலையில் பதிந்திருப்பதாக தோன்றினாலும் அவன் சிந்தை அதில் லயிக்கவில்லை என்பதை உணர்ந்தவள்,
‘டேய் மாமாஆஆ…‘ என்றாள் சற்று உரத்த குரலில்,
‘ஷ்ஷ் என்னடி!எதுக்கு இப்படி கத்தற..??’ என்று காதை குடைந்து கொண்டே கேட்கவும்,
“எது கத்தறனா!டேய் நான் சாதாரணமா பேசுறதே உனக்கு கத்தற மாதிரி தெரியுதா..? எல்லாம் என்னை சொல்லணும் எங்க அப்பா உன்னையே வந்து கூட்டிட்டு போக சொன்னப்பவும் அவர் வார்த்தையைமீறி உன்னை தேடி வந்தேன் இல்ல நான் பேசுறது உனக்கு கத்தற மாதிரி தான்டா தெரியும் இதுல இருந்தே உனக்கு என்னை பிடிக்கலைனு நல்லா தெரியுது அப்படிதானே மாமா..??” என்று முடித்தவளின் குரல் உடைந்திருக்க விழிகளோ பெரிதாக கலங்கி நீர் முத்துக்கள் கன்னத்தில் இறங்கி கொண்டிருந்தது.
அவள் பேச ஆரம்பிக்கவுமே வண்டியை நிறுத்தி அவளையே கூர்மையாக பார்த்திருந்தவன் “ஏய் நிறுத்துடி..!! இப்போ இதை வச்சு ஏதாவது பஞ்சாயத்தை கூட்டலாம்னு அழிச்சாட்டியம் பண்ணின வெளியே மழை வருதுன்னு கூட பார்க்காம அப்படியே இறக்கி விட்டுட்டு போய்க்கிட்டே இருப்பேன்எப்படி வசதி..?” என்று கேட்கவும்…
அவனிடம் வம்பு வளர்க்கும் எண்ணத்துடன் குதூகலமாக இருந்த அலரும் என்றுமில்லா வகையில் அவன் வார்த்தைகளில் கண்டிப்பு கூடி இருப்பதை கண்டு திகைத்தவள் விழிகளை திருப்பி ஜன்னல் வழியே அடித்து ஊற்றும் மழையை கண்டு, “அப்படி எல்லாம் இல்ல மாமா, உனக்கே தெரியும் நான் இப்போ எவ்ளோ குட் கேர்ளா மாறி இருக்கேன்னு” என்று ஓரக்கண்ணால் அவனை பார்த்தவள்,
“நீ ஏதோ யோசிச்சிட்டு இருந்த அதான் என்னன்னு கேட்டேன்.., வேற ஒண்ணுமில்லை அதுக்கு போய் மழையில இறக்கிவிடுவியா நான் பாவம் மாமா” என்று விழிகளில் மிரட்சியுடன் கூறி முடிக்க.
இப்போது அவளை ஏற இறங்க பார்த்தவன் “யாரு நீ..?” என்று கேட்டவனின்குரலே அவளை நம்பவில்லை என்பதை அடித்து சொன்னாலும், தன் முயற்சியை கைவிடாதவளாக அவன் கையை பிடித்து அதில் தன் வெண்பட்டு கரத்தை வைத்து, “நம்பு மாமா நிஜம்! சரி சொல்லு நீஎன்ன யோசிச்சிட்டு இருந்த…??” என்று கொஞ்சும் குரலில் வினவ,
நெற்றியை பிடித்து கொண்டு அமர்ந்திருந்த எழில் தலையை குலுக்கி வண்டியை எடுத்தவன், “ரெண்டு நாள் முன்ன சரண் கால் பண்ணி இருந்தான்டி அதை பத்தி யோசிச்சிட்டு இருக்கேன்”
சரண் பற்றிய விடயம் என்றதும் விளையாட்டை முழுதாக கைவிட்டவள் “மாமாவா…? என்கிட்டே சொல்லவே இல்லை.., எதுக்கு பண்ணினாங்கஎன்ன விஷயம்..??”
“சொல்லனும்னு நெனச்சேன் பட் ரெண்டு நாளா முக்கியமான சர்ச் இருந்ததால மறந்தே போயிட்டேன்டி, நீயும் ஏதோ கேஸ் விஷயமா டீடைல்ஸ் எடுத்துட்டு இருந்த…,” என்றவனை இடைமறித்தவள்,
“ஆமாம் ஆனா அது இருக்கட்டும் என்ன விஷயம் அதை மொதல்ல சொல்லுங்க” என்று அவசரபடுத்தினாள்,
“சொல்றேன்” என்று சில நொடிகள் செலவழித்து அன்று மருத்துவமனையில் இருந்து அழைத்த சரண் எழிலிடம் கேட்ட சந்தேகங்களை அவன் சொல்லி முடிக்க,
“என்னடா இது ரொம்ப வியர்ட்டா(weird) இருக்கு” என்று புருவங்கள் நெறிபட கேட்டவள்,
“ஆமா எதுக்கு மாமா இப்படி எல்லாம் கேள்வி கேட்டாங்க..கேட்க வேண்டிய அவசியம் என்ன…?? ஒருவேளை கீர்த்திக்கும் மாமாக்கும் திரும்ப ஏதாவது மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் இருக்குமோ..??”
“தெரியலைடி எனக்கும் அதே யோசனையா தான் இருக்கு”என்ற எழிலின் முகம் தீவிரமடைய ஸ்டீரிங்கில் தாளமிட்டு கொண்டிருந்தவனின் விரல்கள் தன் செயலை நிறுத்தி கொள்ள,
“அமுலு அவனே அப்புறம்கூப்படறேன்னு சொன்னான் ஆனா இதுவரை..” என்றவன் அவர்கள் வீட்டிற்கு செல்லும் பாதையில் இருந்துஸ்டேரிங்கை திருப்பி சரணின் வீடு இருக்கும் தெருவிற்குள் விட்டவன் “என்னாச்சுன்னு தெரியலை இதுவரை கூப்பிடலை அதனால நாம நேர்லையேபாத்துட்டு போயிடலாம்டி” என்று கூறவும் யோசனையில் இருந்த அலரும்,
“சூப்பர் மாமா நானும் இதேதான் யோசிச்சிட்டு இருந்தேன் நாம மாமா கீர்த்தியை நேர்ல பார்த்துட்டு போகலாம் ” எனவும் கார் சரண் வீட்டின்முன் நிற்கவும் சரியாக இருந்தது.
இருவரும் உள்ளே நுழைந்த நேரம் “அமைதியா இருந்தா என்ன அர்த்தம் ஸ்பீக் அவுட்” என்ற சரணின் கர்ஜனையான குரல் தான் அவர்களை வரவேற்றது.
அதை எதிர்பாராத இருவரும்ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே கூடத்தில் இருந்த சரணை நெருங்க, அவனும் வாயிலில் கேட்ட அரவத்தில் இவர்கள் புறம் திரும்பி இருந்தான்.
“வாங்கண்ணா, அமுலு” என்றவனின் குரலில் என்ன முயன்றும் அவன் கட்டுபடுத்த எண்ணிய சினம் வெளிப்பட தான் செய்தது! அதோடு ஏமாற்றம், விரக்தி, வெறுமை என்று அனைத்தின் கலவையாக சரண் நின்றிருந்த கோலமும் அதற்கு சற்றும் சளைக்காமல் நேர்கொண்ட பார்வையுடன் சிரம் நிமிர்த்தி உறுதியுடன் நின்றிருந்த கீர்த்தியின் தோரணையுமே அவர்களுக்குள் ஏதோ சரி இல்லை என்பதை அலரெழிலுக்கு உணர்த்தியது.
“சரண் என்னடா ஆச்சுஏன் இப்படி இருக்க..??” என்று சீற்றத்துடன் இருந்தவனின் முகத்தை ஆராயந்தவாறே எழில் கேட்க,
அதற்குள் கீர்த்தியை நெருங்கிய அலரும், “என்ன கீர்த்தி உனக்கும் மாமாக்கும் என்ன பிரச்சனை?எதுக்கு மாமா இவருக்கு கால் பண்ணி என்னென்னமோ கேட்டு இருக்கார்” என்றாள்.
அதேசமயம் தன் எதிரில் இருந்தவளின் மீது பார்வையை அகற்றி எழிலை பார்த்த சரணின் பார்வையில் அத்தனை ரணம்.
பின்னேஇத்தனை மாதங்களாக தன்னவளின் பெயரில் வேடம் பூண்டு தன்னை பைத்தியக்காரனாக்காத குறையாக நடந்து கொண்டவளின்நடத்தையை இன்று எண்ணி பார்க்கையிலும் அவனுக்குதேகமே பற்றி எரிந்தது என்றால் மிகையல்ல..!! அதிலும் எத்தனை சாமார்த்தியமாக நடித்து அனைவரையும் முட்டாளாக்கி இருப்பவளை பற்றி எப்படி ஆரம்பிப்பது என்று அலமலந்து தலையை அழுந்த கோதிகொண்டே ‘அண்ணா… அது..,’ என்று எழிலை பார்த்தவன் அலரின் கேள்வியில் அவள் புறம் திரும்பி,
“நீ இந்த கேள்வியை கீர்த்திகிட்ட தான் கேட்கணும் அமுலு” என்றான் விண்டுபோன மனதுடன்.
“அது தான் மாமா பண்ணிட்டு இருக்கே….” என்று பேசிக்கொண்டு வந்தவளுக்கு அப்போது தான் அவன் வார்த்தையின் அர்த்தம்புரிய, “என்.. என்ன மாமா சொன்னீங்க கேள்வியை கீர்த்தி கிட்ட கேட்கணுமா..??” என்று தன்னெதிரே நின்றிருந்தவளை தலை முதல் கால்வரை பார்த்தவள், “அப்போ இது யாரு..??” என்றாள் குறையாத அதிர்ச்சியுடன்.
“அவள் யார்..??” என்று கேட்ட அலரின் கேள்விக்கு அவனும் என்னவென்று பதில் சொல்ல…!! கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்களுக்கு மேலாக அவளிடம் அவன் கேட்டுகொண்டிருக்கும் கேள்வி அல்லவா இது…, ஆனால் என்ன முயன்றும் அவளிடம் இருந்து அதற்கான பதிலை தான் பெற முடியவில்லை, அவள் வாய் திறவாமல் தன்னவளின் நிலையும் அறிய முடியாமல் தவித்து கொண்டிருக்கும் சரண் அழுத்தமான குரலில், “தெரியாது” என்றான்.
இருவரின் சம்பாஷனையையும் கேட்டு கொண்டிருந்த எழில், “என்னடா உளர்ற..??” என்று கேட்டாலும் அவன் பார்வையும் அங்கே கீர்த்தியின் உருவில் இருந்தவள் மீதுதான் பதிந்திருந்தது.
“உளறலைண்ணா உண்மையை சொல்றேன்இவ கீர்த்தி இல்லை வேற யாரோ.., இத்தனை நாள் என்னோட பாப்பு இடத்துல இருந்து எல்லாரையும் முட்டாள் ஆக்கியிருக்கா” என்று அவளின் துரோகத்தில் கனன்று கொண்டிருந்த மனதின் வெம்மை குறையாமல் சரண் கூற,
“என்ன மாமா சொல்றீங்க எனக்கு எந்த வித்யாசமும் தெரியலையே..!! அப்புறம் எப்படி மாமா? எப்படி சொல்றீங்க இது கீர்த்தி இல்லைன்னு..??”
“நம்பு அமுலு இது கீர்த்தி இல்லை! உனக்கு எப்படி புரிய வைக்க…” என்று நெற்றியை பிடித்து கொண்டு சில நொடிகள் யோசித்தவன்,
“அண்ணா நீங்க என்ன சொன்னீங்க கீர்த்தியை நீங்க மறுத்தபோது கொஞ்ச நேரம் அழுதா, நீங்க உங்களோட முடிவை உறுதியா சொன்ன பிறகு அதுல ஏதாவது மாற்றம் இருக்குமான்னு கேட்டான்னு தானே சொன்னீங்க.., ஆனா அதுக்கு அப்புறம் உங்களை நெருங்க எந்த வித…” என்று பேசிக்கொண்டு சென்றவனுக்கு அப்போது தான் என்ன பேசுகிறோம் என்பதே புரிபட தன் மீதே எழுந்த கோபத்தை கட்டுபடுத்த வலது காலை ஓங்கி தரையில் உதைத்திருந்தான்.
பின்னேஅவள் யாராக இருப்பினும் இருவாரங்கள் அவனுடன் தங்கி இருந்தபோது அவளின் வரம்பு மீறிய தவறான செயல்களை அடுத்தவரிடம் வெளிச்சம் போட்டு காட்டிஒரு பெண்ணின் கௌரவத்தை சீர் குலைக்கும் செயலை செய்யும் அளவிற்கு அவன் கீழ்த்தரமானவன் அல்ல..! தன்னை நிருபிக்க மற்றொரு பெண்ணின் நடத்தையை பலி கொடுக்கும் சுயநலம் மிக்க ஆண்மகன் அவனல்ல..!! அத்தனை பெண்களுடன் பிறந்து அவர்களின் பெண் குழந்தைகளை கரத்தில் எந்தியவனுக்கு அவளின் செயலை பகிர விருப்பமற்று போக தன்னிடம் கேள்வி கேட்பவர்களுக்குஎப்படி புரிய வைக்க என்ற புரியாமல் தன்னை இந்நிலையில் நிறுத்தி இருந்தவளை ஆவேசத்துடன் பார்த்தான்.
அதற்கு நேர்மாறாக அவளோ எழிலையும் அலரையுமே ஒருவித சுவாரஸ்யத்துடன் மாறி மாறி பார்த்துகொண்டிருந்தாள். ஆனால் இப்போதும் முகத்தின் இறுக்கம் தளராமல் அவர்கள் மீதான அவளின் பார்வை அழுத்தம் பெறுவதை கண்ட சரணின் உணர்வுகளை எழுத்தில் வடிப்பது சற்று கடினமே!
இத்தனை நாட்களாக நிகழ்காலத்தில் கீர்த்தியின் வடிவில் இருந்தவளின் நெறி பிறழ்ந்த செயல்களில் அதிர்ந்து இருந்தவனின் சிந்தையைசிறை செய்து அவளை தவிர்த்து வேறு கோணத்தில் அவனை யோசிக்கவிடாது செய்திருக்க.., அந்நாட்களில்இத்தகைய நிலைக்கு செல்லும் அளவிற்கு தன்னவளுக்கு என்ன ஆகி இருக்ககூடும் என்ற சிந்தனையில் பல நாள் இரவை தொலைத்து இருந்தவனுக்கு அத்தகைய நேரங்களில் இறந்தகாலத்தில் கீர்த்தியுடனான அவன்நினைவுகளின் படையெடுப்பில் திளைத்து நிஜத்திற்கும் நிழலுக்கும் இடையில் போராடிக்கொண்டிருந்தவனின்அலைப்புறுதலுக்கு ஒரு முடிவு கிட்டியுள்ளதே..!!
தன்னிடம் முறையற்று நடந்து கொண்டவள் தன்னவள் இல்லை என்ற நிஜமே இதுநாள் வரை அவன் கொண்ட காயங்களுக்கு மருந்திட்டிருந்தது என்றால் மிகையல்ல..!!
ஆயினும் இப்போதுஅதை எண்ணி ஆசுவாசம் கொள்ளும் நிலையில் அவன் இல்லை, இவள் கீர்த்தி இல்லை என்றால் கீர்த்தி எங்கே? அவளுக்குஎன்னவாகிற்றோ, எங்கே, எந்நிலையில் இருக்கிறாளோஎன்ற பதைபதைப்பு அதிகரிக்க இத்தனை நேரமாக அவளிடம் அதை கேட்டும் தெரியாது என்று சாதிப்பவளை கொல்லும் வெறி எழுந்தாலும் அதை செயல்படுத்த அவன் கற்றிருந்த தர்மம் அனுமதிக்கவில்லை.
பின்னே அவனுடன் அவளிருந்த இருவாரங்களில் அவள் முறையற்ற செயல்களுக்கு அவளை தண்டித்தான் என்றால் அது தன்னவள் என்ற உரிமையில் ஆனால் இப்போதுயார் என்றே தெரியாத பெண்ணிடம் அவனுக்கு என்ன உரிமை உள்ளது? அதிலும் அவனவளாக நடித்து கொண்டிருந்த போதே இவன் கூறிய எதையும் இவள் பெரிதாக மதித்தது இல்லை எனும் நிலையில் இப்போதும் அதையே அவள் தொடர்வது அவனது சீற்றத்தை அதிகரித்தது.
கைமுஷ்டிகள் இறுக அவளையே வெறித்து பார்த்து கொண்டிருந்த சரணை நெருங்கிய எழில், “என்னடாதயங்குற..?? எதுவா இருந்தாலும் சொல்லு..??” என்றிட,
அப்போதுதான் அவன் அவளை கீர்த்தி இல்லை என்று எவ்வாறு கண்டுகொண்டான் என்பதுநினைவு வர உடனே அங்கே தரையில் அவன் விசிறியடித்ததில் ஆங்காங்கே சிதறி இருந்தரிப்போர்ட்அனைத்தையும் எடுத்து ஒன்று சேர்த்து அலர் கரத்தில் திணித்தவன், “நல்லா பாரு அமுலு என் பாப்புவோட ப்ளட் க்ரூப் O+ve ஆனா இந்த ரிப்போர்ட்ல இவளோட ப்ளட் க்ரூப் A+ve ன்னு இருக்கு…
“ஆரம்பத்துல இருந்தே இவளோட நடவடிக்கைகள் வித்யாசமா இயல்புக்கு மீறினதா இருந்த போதே எனக்கு சந்தேகம் ஏன் இப்படி நடந்துக்குறான்னு இருந்தது… ஆனா நான் இங்க இல்லாதப்ப இவளுக்கு ஏதோ விபரீதமா நடந்து அதனால பாதிக்கப்பட்டு இப்படி நடந்துக்குறான்னு நினைச்சேனே தவிர இவ கீர்த்தியாவே இருக்க வாய்ப்பு இருக்காதுன்னு சுத்தமா எதிர்பார்க்கலை.., இன்னைக்கு ரிப்போர்ட் வாங்க ஹாஸ்பிட்டல் போயிருந்தேன் அப்போதான் இந்த உண்மையே தெரிஞ்சது”
“நிஜமாவா டா..??” என்றவாறே அலரிடம் இருந்த ரிப்போர்ட்டை எழில் பார்க்க.. ரிப்போர்ட்டில் விழிகளை ஓடவிட்டிருந்த அலருக்கு தெரியும் தன் மாமனுக்கும் கீர்த்திக்கும் ஒரே ரத்தவகை என்பதும் இருவரும் அடிக்கடி ரத்ததானம் செய்பவர்கள் என்றும், சரண் சொன்னது போல ரிப்போர்ட்டில் ரத்தவகை மாறுபட்டிருப்பதை கண்டவள்,
“என்ன மாமா இதெல்லாம் ஒரு ஆதாரமா..?? ஒருவேளை இது டைப்பிங் எரர்ராக இருக்கவும்வாய்ப்பு இருக்கு ”
“இல்லடா அமுலு நானும் முதல்ல அப்படி தான் நெனச்சேன்அதான் திரும்ப லேப் போய் க்ராஸ் செக் பண்ணினேன்இதுதான் இவளோட உண்மையான பிளட் க்ரூப்…, அது மட்டுமில்லாம கீர்த்தியோட குணமும் இவளோட குணமும் ஒன்னுக்கொன்னு நேரெதிரா இருக்கு.. இப்போகூட பாரு நான் எவ்ளோ நேரமா இவ யாரு..? என் பாப்பு எங்கன்னு..?? கேட்டுட்டு இருக்கேன் எதுக்கும் பதில் சொல்லாம எவ்ளோ அழுத்தமா நின்னுட்டு இருக்கா… என்று பல்லை கடித்து தன்னை கட்டுபடுத்தியவன் என்னோட பாப்புக்கு இதெல்லாம் தெரியாதுடா” என்றிட,
சரண் கூறியதை நம்ப முடியாமல் நின்றிருந்த எழிலும் அன்று பல வருடங்கள் கழித்து அவளை இங்கு பார்த்த போதான நினைவுகளை கிளறி பார்க்க அப்போதுதான் எழிலுக்கும் அவ்வேற்றுமை புரிந்திட உடனே கீர்த்தியாக இருந்தவளை நெருங்கி..,
என்ன கீர்த்தி என்று ஆரம்பித்தவன் பின் “சொல்லும்மா யார் நீ..? உன் பேர் என்ன ? எங்க கீர்த்தி எங்கே..? எதனால இத்தனை நாளா கீர்த்தியா நடிச்சிட்டு இருந்த?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை தொடுக்க எழிலை நெருங்கிய அலர்
“மாமா இம்பர்சனேட் (impersonate) பண்ணி வந்திருக்க இவகிட்ட என்ன நிதானமா குசலம் விசாரிச்சிட்டு இருக்க? ஆள்மாறாட்டம் எவ்ளோ பெரிய அஃபன்ஸ் தெரியுமா” என்று அவளை முறைத்தவள் சரணிடம்,
“நீங்க ஏன்மாமா இன்னும் போலிசை கூப்பிடாம இருக்கீங்க, இவளை எல்லாம் முதல்ல உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்டி லாடம் கட்டினா எல்லா உண்மையையும் சொல்ல போறா..!! அதை விட்டுட்டு ஆளாளுக்கு கெஞ்சிட்டு இருக்கீங்க” என்றவாறே தன் மொபைலைஎடுத்து காவல்துறைக்கு அழைக்க முற்பட,
“மாமா” என்ற அழுத்தமான அழைப்புடன் அப்பெண் எழிலை நெருங்குவதை கண்டஅலருக்கு சப்தநாடியும் ஒடுங்கிட கையில் இருந்த மொபைலை நழுவ விட்டவளாக உடனே அவளை நெருங்கி இருந்தாள் அலர்விழி.
************************
“ஏய் ஃபிராடு, யாருக்கு யாருடி மாமா..?” என்று ஆவேசமாக கை ஓங்க சடுதியில் அவள்கரத்தை பிடித்த எழில்,
“என்னடி இது எதுக்கு இப்போ அந்த பெண்ணை அடிக்க போற..?? அதுவும் அவ இருக்கிற இந்த நிலைமையில.. எதுவா இருந்தாலும் அமைதியா பேசுன்னு எத்தனை முறை தான் சொல்றது உனக்கு.. இதுவே கடைசி இனி கை ஓங்குற வேலை எல்லாம் இருக்க கூடாது” என்று எழில் கட்டுபடுத்த..
ஏற்கனவே அவள் அழைப்பில் கொதித்து போயிருந்த அலரை எழிலின் வார்த்தைகள் மேலும் சீண்ட கட்டுபாட்டை இழந்தவள், ‘டேய் லூசுபயலேஎதுக்கு அடிக்கிறேன்னுதெரியலையா..??” என்று அடிக்குரலில் எகிறியவள்
“அவ யாருடா உன்னை மாமான்னு கூப்பிட? ஊர்ல போற வரவ எல்லாம் என் புருஷனை என்னனாலும் பேசுவா நான் அமைதியா இருக்கனுமா…? வேண்டாம் எவளோ ஒருத்திக்காக தேவை இல்லாமஎன் கோபத்தை கிளறாத அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று அவனுக்கு குறையாத சீற்றத்துடன் கூற,
“ஏய் எப்படி கூப்பிட்டா என்னடி இதெல்லாம் ஒரு பிரச்சனையா..?? அவளே ஏதோ சொல்ல வரா அதை சொல்லவிடாம எதுக்கு இப்போ ஓவர் ரியாக்ட் பண்ற”
அதே நேரம் அங்கே இருந்தவள் அழுத்தமான குரலில், “யாரோவா இருந்தா தப்பு தான் ஆனா நானும் இவருக்கு மாமா பெண்ணா இருந்தா..??” என்று சிறு இடைவெளி விட்டவள் “நானும் உன் சித்தப்பாவின் மகள் தான்னுநான் சொன்னா?… அப்போ எனக்கு அவரை கூப்பிடுற உரிமை இருக்குதானே..!” என்று அழுத்தமாக கேட்க அலருக்கு ஒருநொடி உலகமே தன் சுழற்சியை நிறுத்திட நெஞ்சில் கரம் பதித்தவள் பின் மெல்ல தன்னை மீட்டெடுத்து,
“ஏய் நீ யாரோவா வேணும்னாலும் இருந்துட்டு போடி எனக்கென்ன..?? என் புருஷனை எப்படி நீ அப்படிகூப்பிடலாம்..? இதோ பாரு நான் ஒரு வக்கீல் எதுவா இருந்தாலும் என்கிட்ட பேசுஅவர்கிட்ட உனக்கென்ன பேச்சு”என்று எழிலுக்கு முன் வந்து கூற,
சில நொடிகள் அலரையே பார்த்து கொண்டிருந்தவளுக்கு அன்று ஊட்டியில் அவர்களின் தேனிலவின் போது கீர்த்தியுடன் எழில் பேசிக்கொண்டிருக்கையில் எழுந்த அதே பொறாமை உணர்வு வருடங்கள் பல கடந்தும் இன்றும் தொடர்வது பெரும் ஆச்சர்யமாக இருக்க அலரை சீண்டும் எண்ணத்தோடு இருகரங்களையும் தன் மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு அழுத்தமாக எழிலைபார்த்தவாறே,
“இங்க நான் யாரு?என்னன்னு கேட்கிற முழு தகுதியும் இவருக்குமட்டும் தான் இருக்கு ஸோ என் பெயர் தெரியனும்னா… இவரை நான் மாமான்னு கூப்பிட யாரும் எந்த தடையும் சொல்ல கூடாது” என்று எழில் மீதான பார்வையை அகற்றாமல் தீர்மானமாக கூறியிருந்தாள்.
“ஏன்டிஅறிவுகெட்டவளே காரியம் முக்கியமா வீரியம் முக்கியமா..?? அந்த பொண்ணு பேரைகூட சொல்ல மாட்டேன்னு சாதிக்கிறாநீ என்னடானா அவளை பேசவே விடமாட்டேங்கிறஅவளும் உன் சொத்தப்பனுக்கு பொண்ணு தானேடி..!! எனக்கு முறைபொண்ணு என்னை மாமான்னு கூப்பிடாம அண்ணான்னா கூப்பிட முடியும்? கீர்த்தி, ரேவதி எல்லாரும் அப்படிதானே கூப்பிடுவாங்க அப்புறம் எதுக்கு பிரச்சனை பண்ற” என்று அடக்கப்பட்ட குரலில் கேட்க,
அச்சமும் கலக்கமும் சரிவிகிதத்தில் போட்டிபோட நின்று கொண்டிருந்த அலரை எழிலின் வார்த்தைகள் மேலும் கலவரபடுத்த, “அப்போ இன்னைக்கும் நீ என்னை அடிப்பியா மாமா..??” என்று தன் கன்னத்தை பிடித்துகொண்டு கேட்டிருந்தாள்.
“என்னடி உளர்ற..?”
“நான் ஒன்னும் உளறலை..! யாருன்னே தெரியாத பொண்ணுங்களுக்காக என்னை முப்பத்தி ஏழு முறை அடிச்சவன் தானடா நீ ! இப்போ இவ உனக்கு முறைபொண்ணுன்னு தெரிஞ்ச அப்புறம் கண்டிப்பா நீ என்னை அடிப்பஎனக்கு தெரியும்..இவ்வளவு ஏன் என் மண்டையைகூட உடைக்க வாய்ப்பு இருக்கு” என்று உதட்டை பிதுக்கிகொண்டு அழ தொடங்கவும்,
“ஏய் லூசு நான் எதுக்குடி உன்னை அடிக்க போறேன், என்ன பேசுறன்னு புரிஞ்சிதான் பேசுறியா..??” என்று அவள் தலையில் கொட்ட,
“அண்ணா என்ன இது எதுக்கு இப்போ அமுலுவை அடிக்கிறீங்க..??”என்று எழிலை கண்டித்த சரண் கலங்கி நின்ற அலரிடம் “நீ அழாதடா அமுலு” என்று சமாதானபடுத்த பதிலளிக்காமல் நின்றிருந்த எழில் சரணிடம் அலர் ஏதோ உளற தொடங்குவதை கண்டவன் அவளை இழுத்துக்கொண்டு அறையின் மூலைக்கு சென்றான்.
‘விடுடா’ என்றவளிடம்
“ஏய் லூசு இதோபாரு இங்க என்ன பிரச்சனை போயிட்டு இருக்கு நீ என்ன பேசிட்டு போற, அவ என்னை மாமான்னு கூப்பிட்டா உன்னை அடிப்பேனா..?? என்னடி லாஜிக் இது உன் கற்பனைக்கு ஒரு அளவில்லையா…?? ” என்று எழில் சீற,
“டேய் லூசு மாமா கற்பனை இல்லடா கனவு..!! எப்பவும் வர கனவு அதுல இன்னிக்கு இவளுக்காக நீ கண்டிப்பா என்னை அடிப்ப எனக்கு தெரியும்”
இப்போது தான் அவள் கூற வருவதே புரிபட சில கணங்கள் அவளையே பொருள் விளங்கா பார்வை பார்த்து கொண்டிருந்தவன் “இப்போ உனக்கு கனவு தானேடி பிரச்சனை” என்றதுமே,
அலர் ‘ஆம்‘ என்று தலையசைக்க,
“ஓகே லிசன் இன்னைக்கு உனக்கு கனவு வராது அதுக்கு நான் பொறுப்பு”
“எப்படி மாமா..?”
“நைட் நீ தூங்கினா தானேகனவு வரும்..!” என்று தாடையை நீவிக்கொண்டே அவளை அழுத்தமாக பார்த்தவன்,
“இன்னைக்கு உன்னை தூங்கவிடாம விடிய விடிய கச்சேரி தான்டி” என்று கண் சிமிட்டியவன் அவள் கொண்ட அதிர்வில் அரும்பிய புன்னகையோடு, “ஆமா செல்லம் ஐ மீன் இட்.., நைட் முழுக்க உன்னை தூங்கவிட போறது இல்ல ஸோ கனவும் வரபோறது இல்லை, நான் உன்னை அடிக்கவும் போறது இல்லை போதுமா..!! இப்போ திருப்தியா” என்று தலை சாய்த்து கேட்டிருந்தான்.
கருவிழிகள் அசைந்தாட அவனுக்கு பதிலளிக்க முடியாமல் வாயடைத்து போன அலர், இதழ்களை தாண்டாத அவன் புன்னகையிலும் விழிவீச்சிலும் பிரம்மை பிடித்தது போல நின்றிருக்க,
அவள் கன்னத்தை தட்டிய எழில் “அமுலு அந்த பொண்ணு மலை முழுங்கி மகாதேவனான உன் சித்தப்பனையே கதற விட்டவ அவகிட்ட முரண்டிக்கிட்டோம்னாகீர்த்தி எங்க இருக்கான்னே தெரிஞ்சிக்க முடியாது.., அதேபோல இத்தனை வருஷமா நமக்கெல்லாம் தெரியாம இத்தனை பெரிய உண்மையை மறைச்ச உன் சித்தப்பனை நல்லவன்னு நம்பிட்டு இருக்க உங்கப்பாக்கு இவளை வச்சுதான்அந்த ஆளோட முகத்திரையை கிழிக்க முடியும்…, அதனால தேவை இல்லாததையோசிக்காம, ஒழுங்கு மரியாதையா ஒரு லாயரா அங்க வந்து அந்த பொண்ணுகிட்ட உண்மையை வாங்குற வழியை பாருடி செல்லகுட்டி” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டு சென்றவன் கீர்த்தியாக இருந்தவள் முன் சென்று நின்று,
“இப்போ சொல்லுமா நீ யார்..?? உன் பேர் என்ன..??” என்று கேட்க,
என்னதான் அவளின் திட்டத்தை சரண் தவிடு பொடியாக்கி இருந்தாலும் அவளின் நோக்கம் நிறைவேற இவர்கள் உதவகூடும் என்ற எண்ணம் வலுப்பெற தலையை குலுக்கிக்கொண்டு ஒரு பெருமூச்சை வெளியிட்டு “ப்ரீத்தி” என்றாள்.