பிரகாசம் வசுமதியை ஏமாற்றி கீர்த்தியை மட்டும் அழைத்து சென்றதை அறிந்ததும் “உங்க அம்மாவை அவன் ஏமாத்தினதுக்கு சட்டத்து மூலமாவே தண்டிச்சிருக்கலாமே ப்ரீத்தி..?? உங்களோட உருவ ஒற்றுமையே போதுமே வேற ஆதாரம் தேவை இருக்காது” என்று அலர் கேள்வி எழுப்பவும்,
“என்னது சட்டமா..??? என்று உரக்க சிரித்தவள் உங்க சட்டம் சாட்சிக்கும் ஆதாரத்துக்கும் கொடுக்குற முக்கியத்துவத்தை உண்மைக்கும், நேர்மைக்கும் கொடுக்கறது இல்லையே அலர், சாட்சியை விலைக்கு வாங்குவதோ ஆதாரத்தை ஒண்ணுமில்லாம ஆக்குறது புதுசா என்ன? அதுவும் அவனை மாதிரி போர்ஜரிக்கு…!! அப்படி இருந்தா இத்தனை வருஷமா அரசியல்வாதிங்கிற போர்வையில அவன் பண்ணின அத்தனைஅய்யோக்கியதனத்துக்கும் எத்தனை முறை சாட்சியையும் ஆதாரத்தையும் கொண்டு உங்க சட்டம் அவனை தண்டிச்சிடுச்சு சொல்லு..?? என்று கேட்க..,
“ஆமா அமுலு ப்ரீத்தி சொல்றது ரொம்ப சரி!அவனோட அராஜகத்தால என் காலேஜ்பிரெண்டோட குடும்பமே ஒருமுறை தற்கொலைக்கு முயற்சி பண்ணினாங்க நானும், வெற்றியும் அவன்மேல கம்ப்ளைண்ட் கொடுக்க சொன்னோம்…, ஆனா அவன் அதையும் தன்னோட பதவி மூலமா ஒண்ணுமில்லாம ஆக்கிட்டான்” என்ற எழிலிடம்,
“அதுக்காக பண்ணின தப்புக்குஇத்தனை வருஷம்தண்டனையே இல்லாம அவன் தப்பிச்சிடே வந்திருக்கானே மாமா… எப்படி சும்மா விட சொல்றீங்க..??” அலர்…
விரக்தியான சிரிப்பொன்றை உதிர்த்த ப்ரீத்தி, “நீ சொல்ற மாதிரி தண்டிக்க அவன் ஒன்னும் அயோக்கியன் இல்லை அலர் அரக்கன், ஈவு இரக்கமற்ற அரக்கன், கேடுகெட்ட அரக்கன்…, அவனை அவனோட வழியில தண்டிக்கிறது தான் சரி” என்று கட்டுக்கடங்க சீற்றத்துடன்கர்ஜித்தாள்.
அவளின் ஆவேசத்தில் அதிர்ந்த எழில் பதறிகொண்டு அவள் தோள்களை பற்றி நிலைபடுத்தியவன், “ப்ரீத்தி என்ன பண்ற காம் டவுன் , ப்ளீஸ் பொறுமையா பேசு உன்னோட ஆக்ரோஷம் குழந்தைக்கும் உனக்கும் நல்லதில்லை.., யாருக்காகவும் உன்னை கஷ்டபடுத்திக்காத‘ என்று வலிமிகுந்த குரலில் கூறியவன் அவள் சிரத்தை ஆதூரமாக வருடிகொடுக்க,
அவனன்பில் உருகி போனவளுக்கு இப்போது கண்ணீரை கட்டுபடுத்த முடியாமல் போக, ‘ எப்படி மாமா எப்படி பொறுமை…??” என்று இதழ்கள் துடிக்க அவனை பார்த்தவள், “அவன் பண்ணினதை எல்லாம் இப்போ நினைச்சாலும்..” என்று இதழ்களை அழுந்த மடித்தவள் மெல்ல தன்னை மீட்டு..,
“உங்களுக்கு தெரியாது மாமா அந்த அயோக்கிய ராஸ்கல்கிட்ட கீர்த்தியை எடுத்துட்டு போன அப்புறம் என்னையும் ஏத்துக்க சொல்லி எங்க அம்மா கேட்ட போது” என்றவளுக்கு தொண்டை அடைக்க பேச்சு எழாமல் சில நொடிகள் மௌனித்து போனாள்.
அவள் நிலை உணர்ந்த அலர் அவள் முன் தண்ணீரை நீட்ட நம்பமுடியாமல் ப்ரீத்தி அவளை பார்க்கவும் மூடியை திறந்து தானே அவளுக்கு நீரை புகட்டி இருந்தாள் அலர்விழி.
சூழ்ச்சியாலும் நடிப்பாற்றலாலும் தன் இருகுழந்தைகளில் ஒன்றை யாருக்கும் சந்தேகம் வராத வகையில் இடம் மாற்றிய பிரகாசம்இத்தனை வருடங்கள் கீர்த்தியைதன் உயிராக நேசித்து அவளுக்கு ஒன்ரென்றால் துடித்து அவள் கட்டளையை சிரம் மேற்கொண்டு செய்து சீரும் சிறப்பமாக வளர்த்து மற்றொன்றை பரிதவிக்க விட்டு சென்றதோடு அல்லாமல் கொல்லவும் துணிந்ததை கேட்டு அதிர்ந்து நின்றனர் ஏனைய மூவரும்..!!
எத்தகைய கொடூரனாலும் தன் உதிரத்தில் ஒன்றிற்கு வெண்ணையும் மற்றொன்றிற்கு சுண்ணாம்பும் அளிக்க முடியுமா..?? கீர்த்தியை கண்ணுக்குள் பொத்தி வளர்த்து வந்த இத்தனை காலத்தில் ஒருமுறை கூடவா மற்றொரு குழந்தையின் நினைவு அவனுக்கு இல்லாது போயிருக்கும் ஒரு நொடி கூடவா ப்ரீத்திக்காக துடிக்கவில்லை..?? என்ற கேள்வியே மனதை குடைந்து கொண்டிருக்க அலரால் அதற்கு மேலும் எதையும் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
பின்னே தந்தை இன்றி ஒரு ஆண் குழந்தை சமூகத்தை எதிர்கொள்வதே பெரும் சவாலாக இருக்கும் நிலையில் தந்தை இன்னார் என்று அடையாளம் காட்ட முடியாத பெண்குழந்தையின் நிலையை சொல்லவும் வேண்டுமா..?? எத்தனை இடர்பாடுகளை கடந்து ப்ரீத்தி வந்திருப்பாள் என்பதை சக மனுஷியாக அலர் நன்கு உணர்ந்திருந்தாள். பெற்றோரை ஏமாற்றி காதலிக்கும் காலத்தில் இளமை பசிக்கு முன்னுரிமை அளிப்போர் அறிவதில்லை தங்களின் வாழ்வு நினைத்தபடி அமையாத பட்சத்தில்நாளை தங்களால் இப்பூவுலகில் பாதம் பாதிக்கும்பிள்ளைகளின் நிலையை..!!
ஆம் பிரகாசமும் வசுமதியும் செய்த தவறின் விளைவான ப்ரீத்தியின் பங்கு அதில் என்ன..?? எதற்காக அவள் தண்டிக்க படவேண்டும் சமூகத்தின் இழி பார்வைக்கு உள்ளாக வேண்டும் சொல்லபோனால் எவ்வித தவறும் செய்யாமல் அதிகளவில் பாதிக்கபட்டிருப்பது ப்ரீத்தி அல்லவா?குழந்தை பருவம் தொட்டு இந்நாள் வரை அவள் இழந்தது அதிகமே..!! தவறு செய்தவர்களுக்குமகளாக பிறந்து உரிய அங்கிகாரம் இன்றிபிரகாசத்தால் புறக்கணிக்கபட்டிருப்பவளை காலம் எத்தகைய நிலையில் நிறுத்தியிருக்கும் என்பதை உணர்ந்த அலருக்கு தாளவில்லை..!!
இது என்ன திரைப்படமா..?? காதலித்தவன் கைவிட்டு சென்றாலும் என் பையனுக்கு அப்பாவும் நானே அம்மாவும் நானே என்று வசனம் பேச..!! அத்திரைப்படத்தில் கூட குமரனின் அன்னையான மகாலட்சுமி படித்து சுயமாக நிற்பவள், ஆணின் துணையன்றி தன் பிள்ளையை தனித்து வளர்க்ககூடிய அளவு படிப்பறிவும், சிந்திக்கும் திறனும் சமூகத்தை எதிர்கொள்ளகூடிய திடமும் கொண்டவள். ஆனால் இங்கோ பள்ளி படிப்பை முடிக்காத அடுத்து என்ன என்று யோசிக்க கூட தெரியாத முதுகெலும்பே இல்லாதகோழையான வசுமதிக்குபெண்ணாக பிறந்திருக்கும் ப்ரீத்திசமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தையா பெற்றிருப்பாள்..?? எத்தனை வலியை கடந்து வந்திருந்தால் இன்று தன்னையே பணயம் வைத்து பிரகாசத்தை கதற வைத்து கொண்டிருப்பாள்..!!!
ஆணின் துணையன்றி அனாதரவாய் நிற்கும் பெண்கள் ஆண்களின் பொது சொத்து அவர்களை யாரும் எந்நேரமும் நெருங்கலாம் என்ற மனோப்பன்மை கொண்ட பெரும்பாலான ஆண்கள் கொண்ட சமூகத்தில் மனித கழுகுகளின்பார்வையையும், வக்கிர பேச்சையும் எவ்வாறு அவள் கடந்திருப்பாள் என்று எண்ணி பார்த்தவளுக்கு அத்தனை எளிதாக அவளின் நிலைக்கு காரணமானவர்களை மன்னிக்க முடியவில்லை.
இத்தனை நாட்களாக சரணின் அக்கா பெண்ணாக தவறே செய்யாத தன் மாமன் மீது குற்றம் சுமத்தியவளாக ப்ரீத்தியை கணிக்க தவறிய அலர் இப்போது சரியான பாதையில் சிந்திக்க தொடங்க அதன் விளைவாக புரிபடாத பல விடயங்கள் புரிபட தொடங்கியது.
குடித்து முடித்தவள் இதழ்களை துடைத்துகொண்டே, “அவன் என்னை நாலு மாச குழந்தைன்னு கூட பார்க்காம என்னை.. என்னை.., என்று தொடங்கவுமே அவள் பேச்சை தடை செய்தது அலரின் குரல்…,
“குழந்தைக்காக தீபிகா சித்தியை விவாகரத்து செஞ்சிட்டு வேற கல்யாணம் பண்ணினா அவனோட அரசியல் கனவுக்கு மூடு விழா நடத்திட வேண்டியது தான் என்பதால உங்க அம்மா தயவு தேவைப்பட்டு அவங்ககிட்ட வந்தவனோட நடிப்புல திரும்பவும் உங்க அம்மா ஏமாறவும் அவன் போட்ட கணக்கு சுலபமா நிறைவேறிடுச்சு அவனுக்கு தேவையான ஒரு குழந்தையோட கிளம்பிட்டான்.., ஆனா ஏதோ ஒரு காரணத்தால உங்க அம்மாக்கு திரும்ப அவனை தேடி போக வேண்டிய கட்டாயம் இருந்திருக்கும்…., எப்படியும் சில மனித மிருகங்களை உள்ளடக்கிய இந்த சமூகமே அவங்க திரும்ப அவனை தேடி போக காரணமா இருந்திருக்கலாம். அப்படி உங்க அம்மா உனக்கான நியாயம் கேட்டு அவன்கிட்ட திரும்ப வரவும் அதை எதிர்பார்த்து இருந்தவன் இந்தமுறை அவனோட இன்னும் கொடூரமான பக்கத்தை உங்க அம்மாக்கு காட்டி இருப்பான்..“
அதாவது இனி அவனை நெருங்கனும்னோ இல்லை உன்னை பத்தி யாருக்காவது தெரியபடுத்தனும்னோ நினைச்சா என்ன பண்ணுவேன்னு காட்டுறதுக்காக சின்ன குழந்தையான உன்னை கொன்னுடுவேன்னு சொன்னது மட்டுமில்லாம அவங்க எதிர்லயே அதற்கான முயற்சியும்பண்ணியிருப்பான்…, அதுல மிரண்டு போன உங்க அம்மாக்கு இனியும் அவனை நெருங்கும் தைரியம் இல்லாம போயிருக்கும் உன்னைகாப்பாத்தினா போதும்னு அவன் என்ன சொன்னாலும் எல்லாத்துக்கும் தலையாட்டிட்டு உன்னை கூட்டிட்டு திரும்ப ஓடி இருப்பாங்க இது தானே நீ சொல்ல வந்தது” என்று இறுகிய முகத்துடன் அலர் முடிக்கும் முன்னமே கைதட்டல் கூடத்தை நிறைத்தது.
*****************************************
ஆம் சுவரில் சாய்ந்து மெச்சுதலான பார்வையோடு அலர் பேசுவதைகேட்டு கொண்டிருந்தவள் அவள் முடிக்கும் முன்னமே பலமான கரகோஷம் எழுப்பி, ‘நீ ரொம்ப புத்திசாலி அலர்..!!’ என்று பாராட்டிட தொடர்ந்த அலர்,
“கண்டிப்பா உங்க அம்மாவால நீ இந்த நிலைக்கு வந்திருக்கமாட்டன்னு தெரியும் யார் உங்களுக்கு உதவினா..? மாமாவை உனக்கு எப்படி தெரியும்…? கீர்த்தி இடத்துக்கு எப்படி வந்த..?? என்று அடுத்து அடுக்கடுக்காக கேள்விகளை தொடுக்க,
கசந்த முறுவலுடன், நான் பார்த்த வரையில்இந்த உலகம் ரொம்பவே சுயநலமானது அலர்.., இங்க ஒரு துரும்பை அசைக்கனும்னாலும் அதுல தனக்கு என்ன ஆதாயம் இருக்கும்னுபார்க்கிற மனுஷங்கதான் அதிகம். அதுல ஒருத்தன் தான் நான் பிறக்க காரணமானவன்..!! என்று கூறும்போதே அவள் குரல் உச்சகட்ட வெறுப்பில் ஒலித்தது.
இப்போ நேரம்மட்டுமில்லை மனுஷங்களும் யாருக்காகவும் காத்திருக்கிறது இல்லை மத்தவங்களோட உணர்வு, சூழல், பத்தின புரிதல் யாருக்கும் அவசியமாபடுறது இல்லை, பல இடங்களில் மனிதம் அழிஞ்சிட்டு வருவதை கண்கூடா நாமலே பார்க்கிறோம். தான் அனுபவித்து உணராத வரை என்னைக்குமே மத்தவங்களோட வலி அடுத்தவங்களுக்கு பொழுதுபோக்கும் ஒரு சுவாரசியமான கதை தானே..!!” என்று விரக்தியாக புன்னகைத்தவள்,
“எங்க அம்மா என்னை அவன்கிட்ட இருந்து காப்பாத்தினா போதும்னு ஆரணியை விட்டுசென்னைக்கு ஓடி வந்தவங்களை மறுபடியும் அரவணைத்து ஆதரவளிக்க அந்த பாட்டி இல்லை.. அவங்க ஒரு விபத்துல காலமாகிட்டாங்க, எங்க அம்மாக்கு அவ்ளோ பெரிய நகரத்துல தெரிஞ்சது அந்த பாட்டியை மட்டும் தான் இப்ப அவங்களும் இல்லை என்றானதும் அடுத்து என்ன பண்றதுன்னு எங்க அம்மாக்கு புரியலை, அவங்க கையில இருந்த என்னை எப்படி வளர்க்கிறது, பாதுகாக்கிறதுன்னு அடுத்த வேலை சாப்பாட்டுக்கு என்ன பண்றதுன்னுகூட யோசிக்க முடியாம அழுதவங்களுக்கு அந்த பாட்டி விட்டுட்டு போன குடிசையில தங்குறதுக்குகூட அங்க இருந்த பெரிய மனுஷங்க அனுமதி வேண்டி இருந்தது.”
‘என்ன சொல்ற ப்ரீத்தி.. ஏன் அப்படி?’
ஆமா அந்த பாட்டி இருந்த வரையில் பாதுகாப்போட நிம்மதியா ரெண்டு வேலை சாப்பிட்ட எங்க அம்மாக்கு இப்போ அதுவும் இல்லைங்கிற நிலை.. அது நாள் வரை தங்கச்சின்னு வாய் நிறைய கூப்பிட்ட சில நாய்ங்க அந்த பாட்டி இல்லைன்னு ஆன அப்புறம் எங்க அம்மாவை பார்த்த பார்வையும் அவங்ககிட்ட பேசின விதமும் எங்க அம்மாவை உடல்கூச செய்ய என்ன பண்றதுன்னு தெரியாம குடிசையை இழுத்து சாத்திட்டு என்னை மடியில போட்டு அழுது கரைவாங்கலாம்.
“அந்த ஆளுங்க திரும்ப திரும்ப வந்து எங்க அம்மாவை குடிசையை காலி பண்ண சொன்னபோ எங்க அம்மா தன்னோட நிலையை எடுத்து சொல்லி அங்க தங்கிக்க அனுமதிக்க கேட்டு இருக்காங்க ஆனா, ஆனா, அதுக்கு… அந்த குடிசையில தங்கறதுக்கு விலையா அந்த ****** எங்க அம்மாவையேகேட்டது தான் கொடுமையின் உச்சம்” என்றிட மற்றவர்களின் முகம் இறுகி போனது.
அதுக்கு அப்புறம் பல இடங்களில் வேலை செஞ்சு என்னை காப்பாத்தினவங்க ஒவ்வொரு நாளும் வேலை முடிஞ்சி வீட்டுக்கு வந்ததும் கதவை இழுத்து சாத்திடுவாங்கலாம். தனியா இருக்க அவங்களை பயன்படுத்திக்க நினைக்கிறவங்க நேரம் காலம் இல்லாம அவங்களுக்கு தொல்லை கொடுப்பாங்களாம் பல நாட்கள் நடு இரவு வரைக்கும் கதவு தட்டற சத்தம் கேட்டுட்டே இருக்குமாம் அப்பகூட என்னை இறுக்கி பிடிச்சிட்டு ஒரு மூலையில முடங்கி இருப்பாங்களே தவிர கதவை திறக்க மாட்டாங்களாம்.
இதை பத்தி அக்கம் பக்கம் தெரிஞ்சவங்ககிட்ட சொன்னா அவங்களும் கதை கேட்கிற மாதிரி கேட்டுக்குவாங்களே தவிர யாருமே எங்க அம்மாக்கு உதவ வரலை, கொஞ்சம் கையில காசு சேர்ந்த அப்புறம் அதைவிட கொஞ்சம் நல்ல பகுதிக்கு வாடகை வீடு எடுத்துட்டு போனவங்களுக்கு இந்த அளவுக்கு இல்லைன்னாலும் அங்கயும் தொல்லை தொடரத்தான் செய்ததாம்.
ஆனால்அதையெல்லாம் தாங்கிகிட்டு என்னை நல்லபடியா வளர்க்கணும்னு இருந்தவங்களுக்கு இந்த சமூகத்தின் பார்வை என்மேல விழ தொடங்கவும் தான் அவங்க செய்த தப்போட வீரியமே புரிஞ்சது.
‘ஏன் சின்ன குழந்தையான உனக்கென்ன ஆச்சு..??’
‘என்ன அலர் சின்ன குழந்தைகள் தான் சில சைக்கோக்களோட ஈஸி டார்கெட்னு தெரிஞ்ச நீயே இப்படி கேட்கலாமா?’ என்றிட அலரின் முகத்தில் கனல் கூடியது.
‘ஒருமுறை ரெண்டு வயசு குழந்தையான என்னை ஒரு கிழட்டு நாயை நம்பி விட்டுட்டு தண்ணீர் எடுக்க அடுத்த தெருவுக்கு போனவங்க திரும்ப வந்தபோது அவன் என்கிட்டே தப்பா நடக்க முயற்சி பண்ணினதை பார்த்தபோது வாழ்க்கையே வெறுத்து போனது. அவங்க பண்ணின மாபெரும் தவறுக்கு சிசுவான நான் தண்டனை அனுபவிக்கிறதை தாங்கிக்க முடியல..அதனால இதுக்கு மேலயும் உயிரோட இருந்து எனக்கு மேலும் கஷ்டத்தை கொடுக்க கூடாதுன்னு என்னோட சேர்ந்து தன்னோட வாழ்க்கையை முடிச்சிக்க நினைச்சாங்க..அந்த நேரத்துல தெய்வமாபார்வதி அம்மா எங்களை தேடி வந்தது தான் நான் செய்த அதிர்ஷ்டம்’ என்றவளின் கண்களில் நீர் துளிர்த்திருந்தது.
டாக்டர் பார்வதி..??
“ஆமா நான் பிறந்த ஒன்றரை வருஷம்வரை வீட்டு வேலைகள் செய்திட்டு இருந்த எங்க அம்மாக்கு அதுக்குஅப்புறம் அந்த தெருவுல இருந்த ஒருலேடி மூலமா பார்வதி அம்மாவோட ஹாஸ்பிட்டல வேலை கிடைச்சது. பார்வதி அம்மா அவங்க பெயருக்கு ஏத்த மாதிரி கருணையே வடிவானவங்க, சேலத்தை பூர்வீகமா கொண்டவங்களோட அப்பாவும் புகழ்பெற்ற இருதய சிகிச்சை நிபுணர்… இங்க சென்னையில மருத்துவமனை கட்டி ஏழைகளுக்கு சேவை செய்தவரை பார்த்தே வளர்ந்தவங்களுக்கு சின்ன வயசுல இருந்தே உயிர் காக்கும் மருத்துவத்தின் மேல இருந்த காதலாலும் சேவை மனப்பான்மையாலும் திருமணம் செய்துக்காம தன்னோட வாழ்க்கையை மருத்துவத்திற்கு அற்பணிச்சவங்க..!!”
அனைத்து புறமும் அடைக்கப்பட்டு இருண்டு போயிருந்த எங்க வாழ்க்கையில கதவினூடே வரும் மெல்லிய ஒளிகற்றையாய் எங்க வாழ்க்கைக்கு கிடைச்ச வெளிச்சம் தான் பார்வதி அம்மா. எங்களோட வாழ்க்கையை முடிச்சிக்கனும்னு நெனச்ச எங்க அம்மா அன்னைக்கு சாப்பாட்டுல விஷத்தை கலக்க தொடங்கிய நேரத்துல வெளியில விளையாடிட்டு இருந்த நான் எதிர்பாராத விதமா ரோட்டுக்கு போகவும் அந்த வழியே இலவச முகாம் நடக்கும் இடத்துக்கு வேகமா போய்கிட்டு இருந்த பார்வதி அம்மா காரில் அடிபட்டு செத்திருப்பேன் ஆனா கடைசி நிமிஷத்துல வண்டியை நிறுத்தி என்னை காப்பாற்றினவங்க எங்க வீட்ட தேடி கண்டுபிடிச்சி விட்டுட்டு போக வந்தாங்க அப்பதான் எங்க அம்மா விஷத்தை சாப்பாட்டுல கலக்கறதை பார்த்துடாங்க..,
எங்க அம்மாவும் அவங்களை அங்க எதிர்பாராம மேடம்னு பதறி நிற்க சில நொடியிலேயே அவங்க பண்ண இருந்த முட்டாள்தனத்தை புரிஞ்சிகிட்ட பாரும்மா எங்க அம்மாவை ஓங்கி அறைஞ்சு அடுத்த சில மணி நேரங்களில் எங்க அம்மாகிட்ட நடந்த விஷயங்களை கேட்டு தெரிஞ்சிகிட்டு எங்களை அவங்களோட பாதுகாப்புல கொண்டு போயிட்டாங்க.. அவங்களோட நிழலில் தங்க ஆரம்பித்த பிறகு தான் எங்க அம்மாவால நிம்மதியான மூச்சேவிட முடிஞ்சது… அதன்பிறகு அவங்களுக்கான தொல்லைகள் ஓரளவு நின்றுபோனாலும் மெல்ல தொடர்கதையா என்னை தொடர்வதை பார்த்து எங்க அம்மா முழுசா ஒடஞ்சு போயிட்டாங்க.., தன்னோட தப்பை நினச்சு தினம் தினம் கதறி அழாம அவங்க நாள் முடிவடையாது.
வளர தொடங்கின நான் அதே சமூகத்தால படிக்கிற இடம், விளையாடுற இடம்னு பல இடங்களில் பல பேரிடம் இருந்து கேள்விகளை எதிர்கொள்ள நேரிட்டது. சின்ன வயசுல பெருசா அதை பற்றி புரியலைன்னாலும் ஓராளவுக்கு விவரம் தெரிய தொடங்கிய பிறகு தினமும் எங்க அம்மாகிட்ட நான் கேட்கிற ஒரே கேள்வி ‘எனக்கு அப்பா இருக்கங்களா இல்லையாங்கிறது தான்!’
அப்போகூட அவன் செத்துட்டான் உனக்கு அப்பாவே இல்லைங்கிற பதிலை சொல்லுற தைரியம்கூட எங்கம்மாக்கு இல்லை.., எப்போ கேட்டாலும் எதை எல்லாமோ நினச்சி அழுவாங்களே தவிர அவனை பத்தி என்கிட்டே மூச்சுகூட விடமாட்டாங்க.ஆனா அன்னைக்கு அவன் கத்து கொடுத்த பாடம் எங்க அம்மாவை அதுக்கு பதில் சொல்ல விடலை… அவங்களோட ரகசியம் அவங்களோடவே போகட்டும்னு நெனச்சவங்க பார்வதியம்மா எத்தனையோ முறை அவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்குறேன் யாருன்னு சொல்லுன்னு வற்புறுத்தி கேட்ட போதுகூட அந்த அய்யோக்கியன் பத்தின எந்த தகவலையும் சொல்ல மறுத்துட்டாங்க…
ஏன்..?
‘ஏன்னா அவன்கிட்ட ஒரு முறைக்கு பலமுறை அவங்க பட்ட அடிகளே எதுக்கும் அவங்களை துணியவிடலை’
அப்பா இல்லாம இருக்கிற என்னை நோக்கி சின்ன வயசுல இருந்தே வரக்கூடிய கேள்விகளால நான் மனசொடிஞ்சி போக கூடிய நேரத்துல எல்லாம் நான் போய் நிற்கிற ஒரே இடம் பார்வதி அம்மா வீடு தான்..!! இந்த சமூகத்துல எப்படி வாழனும் மனுஷங்களை எப்படி எதிர்கொள்ளனும்னு ஒரு தாயா தந்தையா எனக்கு வழி காட்டினது அவங்க மட்டுமே! சொல்லபோனா என்னோட பலம், தன்னம்பிக்கை, தைரியம், ரோல்மாடல்எல்லாமே அவங்க தான்..!!
எங்க அம்மா செஞ்ச தப்புக்கு அநியாயமா நான் தண்டனை அனுபவிக்கிறதையும் வாழ வழி தெரியாம சாக துணிஞ்சவங்க என் உயிரையும் எடுக்க முடிவு பண்ணினதை அவங்களால ஏத்துக்கு முடியலை. அதனால சின்ன வயசுல இருந்து என்னை படிக்க வைக்கிற பொறுப்பை ஏத்துகிட்டவங்க தரமான கல்வியை கொடுத்ததோட என்னை அவங்களோட சொந்த பொண்ணு மாதிரி பார்த்துகிட்டாங்க.., எப்பவும் அவங்க வீட்டுக்கு வந்துபோக கூடிய சுதந்திரம் எனக்கு இருந்தது. அவங்க வீட்டுல இருந்து ரெண்டு தெரு தள்ளி அவங்க அப்பா கட்டி இருந்த குடியிருப்புல ஒரு போர்ஷன்ல தான் எங்களுக்கு தங்க இடம் கொடுத்து இருந்தாங்க ஸோ நான் ஸ்கூல் முடிஞ்சு வந்ததும் அவங்க ஹாஸ்பிட்டல்ல இருந்து எப்போ வருவாங்கன்னு பார்த்துட்டே இருப்பேன் வந்ததுமே அவங்ககிட்ட ஓடிடுவேன்.
பல மிருங்கங்கள் உலவுற இதே சமூகத்துல தான் பார்வதி அம்மா மாதிரி நல்லவங்களும் இருக்காங்கன்னு நான் தெரிஞ்சிக்கிட்டேன் ஆனா என்ன அவங்களோட சதவிகிதம் ரொம்ப கம்மி சுயநலம் பார்க்காம அடுத்தவங்களோட கஷ்டத்தை தன்னோடதா பார்கிற மக்கள் ரொம்பவே அபூர்வம் அதுல ஒருத்தங்க தான் பார்வதி அம்மா. அப்பா இருக்கானா இல்லையான்னு தெரியாம போனாலும் பார்வதி அம்மாவோட அரவணைப்புல ரொம்ப சந்தோஷமாவே வளர்ந்த எனக்கு இந்த சமூகத்தை எதிர்கொள்வதும் ரொம்ப எளிதாகி போனது.., நான் எங்க அம்மா மாதிரி கிடையாது ஒருவேளை அப்பா அம்மான்னு பாசத்தோட அவங்க அரவணைப்போட ஒரு கூட்டுக்குள்ள வாழ்ந்திருந்தேன்னா நானும் அப்படி தான் இருந்திருப்பேனோ என்னவோ..!! ஆனா வாழ்க்கை எனக்கு அதை விதிக்கலை, சின்ன வயசுல இருந்தே மேடு, பள்ளம், இடி,, மழை, வெயில், புயல், இருட்டு வெளிச்சம்னு எல்லாத்துக்கும் பழக்கி என்னை ரொம்ப திடமாக்கி இருந்தது.
‘இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் என்னோட இந்த நிலைக்குநான் பிறக்க காரணமானவன் மீது விதையாஎன் மனசுலஇருந்த வெறுப்பு நாளாக நாளாக விருட்சமா வளர தொடங்கியது’ என்று அதற்கு மேல் பேசஎதுவும் இல்லை என்பது போல ப்ரீத்தி சுவரில் தலைசாய்த்து நிற்க,
அவள் பேச்சு நிற்கவும் அங்கு கனத்த அமைதி யாருக்குமே அவளிடம் எதுவும் கேட்க தோன்றவில்லை… இது நேரம் வரை கீர்த்தி குறித்து கேள்வி எழுப்பி கொண்டிருந்த சரணும் ப்ரீத்தியின் பேச்சில் அமைதி காத்தான்.
‘ஆரம்பம்னு ஒன்னு இருந்தா முடிவு ஒன்னு இருக்கணும் தானே..!! அதுமாதிரி தான் இதுநாள் வரை நான் கொண்டிருந்த பொறுமைக்கும் முடிவு காலமா ஒரு நாள் வந்தது என் வாழ்க்கையில மறக்க முடியாத நாள் அது..!! சொல்ல போனா அந்த நாளைக்கு அப்புறம் தான்நான் இவரை பார்த்தேன்’ என்று சரணை சுட்டி காட்டியவள்அந்நாளை விவரிக்க தொடங்கி இருந்தாள்.