என்னுயிரில் தணிவதுண்டோ காதல்?
— ராசு
அத்தியாயம் – 1
“அண்டம் முழுதும் ஒன்றினுள் அடக்கம்
அதுவே ஆனை முகம் எனும் ஓம்கார விளக்கம்
சுழலும் கோள்கள் அவன் சொல் கேட்கும்
அவனை தொழுதால் போதும் நல்லதே நடக்கும்
ஆனை முகனை தொழுதால்
நவகிரகங்களும் மகிழும்
நல்லதே நடக்கும்
நல்லதே நடக்கும்
ஒன்பது கோளும் ஒன்றாய் காண
பிள்ளையார்பட்டி வர வேண்டும்
. . . . . . . . . .”
மனோரஞ்சன் இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே படுக்கையில் இருந்து எழுந்தான்.
சமையல்காரர் சண்முகம் தன் பணியை ஆரம்பித்துவிட்டார். அவருக்கு மிகவும் பிடித்த கடவுள் விநாயகப் பெருமான். தினமும் காலையில் விநாயகப் பெருமானின் பக்திப் பாடல்களை ஒலிக்க விட்டபடிதான் தன்னுடைய அன்றாடப் பணியைத் துவங்குவார். அதுவும் வீட்டினர் எழுந்து வரும் வரையில் தான். அதன் பிறகு நிறுத்திவிடுவார்.
எந்த விதமான உரிமையையும் எடுத்துக்கொள்ள மாட்டார். தனது இடம் எதுவென உணர்ந்து அதற்கேற்ப நடந்துகொள்வார். அதனால் தான் இத்தனை வருடங்கள் அவரால் இந்த வீட்டில் வேலையில் நிலைத்திருக்க முடிகிறது.
சலனமேயில்லாத முகத்துடன் குளியல் அறைக்குள் நுழைந்தான் மனோரஞ்சன்.
வீட்டினர் எழுவதற்குள் கிளம்பிவிட வேண்டும். யாருடைய முகத்திலும் அவன் விழிக்க விரும்பவில்லை.
போதும் அவன் மற்றவர்களுக்காகப் பார்த்தது, அதனால் அவன் இழந்தது, மற்றவர்களும் அவன் வாழ்க்கையில் விளையாடியது அனைத்தும் போதும்.
இப்போது அவன் எடுத்த முடிவு இறுதியானது. இதை யாருக்காகவும் அவன் மாற்றிக் கொள்ளத் தயாராயில்லை.
குளித்து உடை மாற்றியவன் சத்தம் கொடுக்காமல் வாசலை நோக்கிச் சென்றான். அவன் எழுந்ததை சண்முகம் பார்த்துவிட்டால் அவன் எதுவும் சாப்பிடாமல் விடமாட்டார். அவருடைய அன்பு அத்தகையது.
வீட்டில் வேலை பார்ப்பவர் என்பதால் கடமைக்கு எதுவும் செய்ய மாட்டார். அவர் அவனுக்குச் செய்வதில் உள்ளார்ந்த அன்பு இருக்கும். அவனைப் பொறுத்தவரையில் அவன் வயிறு வாடாமல் பார்த்துக்கொள்வதில் அவர்
ஒரு தாய்தான்.
இப்போது அவர் அவனைப் பார்த்துவிட்டால் நிச்சயம் வெறும் வயிற்றுடன் அனுப்பமாட்டார். அதுவும் இன்று நிச்சயம் அவனை தனியே விடமாட்டார். எப்படியும் வீட்டினரிடம் கூறுவார். அதற்குள் அவன் இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும்.
வெளியில் வந்தவன் வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கு வந்தான்.
அவனின் இருசக்கர வாகனத்தின் அருகில் வந்து நின்றான். அதைத் தடவிப் பார்த்தான். அவன் இந்த வண்டியில் பயணித்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இருக்கும். இருந்தும் இன்று வரையில் நல்ல நிலையில் ஓட்டும்படி உள்ளது. அதற்கு அவனுடைய தாயார் சகுந்தலாதான் காரணம்.
அவர் எதையும் எடுத்துச் செய்தார் என்றால் இல்லை. வேலைக்காரர்களிடம் ஏவி அந்த வேலையை செய்ய வைத்திருந்தார். மகன் எப்போது அந்த வண்டியை ஓட்ட விரும்பினாலும் அது தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பது அவரது கட்டளை. வேலைக்காரர்களும் அதை நிறைவேற்றியிருக்கின்றனர்.
வண்டியில் ஏறியமர்ந்து சாவியை மாட்டி வண்டியைக் கிளப்பினான். சிறிது நேரம் ஏதேதோ நினைவுகள் வந்து உடல் சிலிர்த்தது. அவன் முகத்தில் ஒரு அலாதியான அமைதி படர்ந்தது.
இப்போது எங்கே செல்வது? இன்னும் நீதிமன்றம் திறக்க நேரம் இருக்கிறது. இவன்தான் வீட்டினரின் முகத்தில் விழிக்கப் பிடிக்காமல் சீக்கிரமாகக் கிளம்பிவிட்டானே. நீதிமன்றத்தில் அவர்களைப் பார்க்க நேரும்தான். அவர்களும் வராமல் இருக்க மாட்டார்கள்.
ஆனால் அங்கேயும் அவர்களைத் தவிர்த்துவிடவே யோசித்திருக்கிறான். இவன் வழக்கு வரும் நேரம் தெரியும். அந்த நேரத்திற்குச் சென்று முடிவு வந்த உடன் கிளம்பிவிட வேண்டியதுதான். அவர்கள் அவனை நெருங்க முயற்சிப்பர்.
அவனுக்கும் அமைதியாக எங்கேனும் அமர வேண்டும் போல் தோன்றவே நீதிமன்றத்திற்குச் செல்லும் வழியில் இருந்த பூங்காவினுள் நுழைந்தான்.
நடைபயிற்சி செய்பவர்கள் ஆங்காங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவனைக் கவனிக்க யாரும் இல்லை. அமைதியாக அங்கிருந்த சிமெண்ட் பலகையில் அமர்ந்தான்.
கண்களை மூடியிருந்தவனின் முகத்தில் பலவித பாவனைகள். என்னென்ன அவன் மனதில் ஓடியதோ?
சில தினங்களுக்கு முன் சந்தித்த அவன் நண்பனின் நினைவும், அப்போது அவன் பகிர்ந்து கொண்டவற்றையும் நினைத்துப் பார்த்தவனின் உடல் ஒரு முறை தூக்கிப் போட்டது.
அவன் மனோரஞ்சனின் உயிர் நண்பன். அவனுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவன். இருந்தும் அவன் மனோரஞ்சனைப் பார்த்ததும் அவனுடன் பேச விரும்பாமல் ஒதுங்கிப் போக, மனோரஞ்சனே நீண்ட நாட்களாக பார்க்காமல் இருந்த நண்பனுடன் ஆவலாகப் பேச முயன்றான். அப்போதும் வேண்டாவெறுப்பாகத்தான் பேசினான் அவனுடைய நண்பன் அரவிந்தன்.
“உன்னை மாதிரி கோழைகள் எல்லாம் காதவிக்கவே லாயக்கில்லைடா? உன்னுடைய கோழைத்தனம் ஒரு குடும்பத்தையே குலைத்துவிட்டது. உயிர்களைப் பலி வாங்கிவிட்டது. எனக்கு உன் முகத்தையேப் பார்க்கப் பிடிக்கவில்லை.” என்று அவன் முகம் திருப்பினாலும், சொல்ல வேண்டியவற்றை முடித்துவிட்டேச் சென்றான்.
அவன் சொல்லிச் சென்ற தகவல்கள் கேட்டு அவன் உடல் அதிர்ச்சியில் குலுங்கியது. இது அத்தனைக்கும் அவன் குடும்பத்தினர்தானே காரணம். அவர்களை மட்டும் அவன் குறை கூற இயலுமா?
அரவிந்தன் கூறியதுபோல் தன்னுடைய கோழைத்தனம்தான் இதற்கெல்லாம் காரணம் என்று அவனுடைய அறிவு இடித்துரைத்தது. தன்னுடைய குடும்பத்தைப் பற்றி அறிந்திருந்தும் அவன் காதல் வயப்பட்டிருக்கக் கூடாது.
என்னதான் அவன் அப்படி நினைத்தாலும் நாம் விரும்பியா காதல் உணர்வு நமக்குள் முளைக்கிறது. அது எந்த நேரத்தில் எப்படி, யார் மீது தோன்றும் என்பதை முன்கூட்டியே யார் அறிவார்? அது காலத்தின் முடிவு.
அவன் காதலித்த நாட்களும், அதன் பின்னர் நடந்த பிரச்சினைகளும் மனதிற்குள் ஓடின. எதுவும் அவன் விரும்பி நடக்கவில்லை. எல்லாரும் அவனை ஆட்டுவித்தனர். அவனுக்கும் வேறு வழியில்லை.
யோசித்ததில் நேரம் போனதே தெரியவில்லை. கையில் கடிகாரம் கட்டவில்லை. வீட்டினர் தொல்லை செய்வார்கள் என்று அவன் எப்போதோ கைப்பேசி பயன்படுத்துவதை நிறுத்தியிருந்தான்.
பூங்காவில் இருந்த மணிக்கூண்டில் மணி பார்த்தான். இப்போது கிளம்பினால் நேரம் சரியாக இருக்கும்.
சரியான நேரத்திற்கு நீதிமன்ற வளாகத்தினுள் நுழைந்தவனை எதிர்பார்த்தவாறு அவன் குடும்பத்தினர் நெருங்க முயல அவன் அவசரமாக நீதிமன்றத்திற்குள் நுழைந்தான்.
யார் முகத்தையும் ஏறிட்டுப் பார்க்கவில்லை.
அங்கே அவன் மனைவி லலிதா, இன்னும் சிறிது நேரத்தில் முன்னாள் மனைவியாகப் போகிறவள் மேடிட்ட வயிற்றுடன் நின்றிருந்தாள். அருகில் ஒரு இளைஞன். அவளது கண்களில் கலக்கம்.
இவன் மறுத்துவிடுவான் என்ற பயத்தில் இருக்கிறாளா? அப்படியெல்லாம் எதுவும் செய்யும் நோக்கம் அவனுக்கில்லை. அவன் நினைத்த வாழ்க்கை அவனுக்கு அமையவில்லை. அவளாவது மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்பதுதான் அவனுக்கு.
இப்போது மட்டுமல்ல. அவனுக்கு லலிதாவுடன் திருமணமாகி, அதன் பிறகு என்னென்னவோ நடந்த பிறகும் அவனுக்கு லலிதாவின் மீது கோபம் வரவில்லை. மாறாக அவளை நினைத்துப் பரிதாபம்தான் வந்தது.
அவன் இருந்த நிலைமையில் அவனால் அவளை நினைத்து பரிதாபப்படத்தான் முடிந்தது. அவனால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. எல்லாம் அவன் கையை மீறியிருந்தது. அவன் முடிந்த அளவிற்கு லலிதாவை நிம்மதியாக வைத்துக்கொள்ளத்தான் முயற்சித்தான். ஆனால் அதற்கு அவன் மட்டும் முயன்றால் போதுமா? லலிதாவும் அவன் எண்ணத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமே?
ஒருவழியாக அவனுடைய விவாகரத்து வழக்கிற்கு தீர்ப்பு வந்துவிட்டது. இனி லலிதா அவள் விருப்பப்படி வாழலாம்.
‘இவன்…………….?’
நேரே லலிதாவிடம் வந்தான்.
“லலிதா. இனியாவது நிம்மதியா மகிழ்ச்சியா இரு. என்ன நீ கல்யாணத்திற்கு முன்னாடியே நம்ம திருமணத்தில் விருப்பம் இல்லைன்னு சொல்லியிருந்தால் நான் ஏதாவது செய்து அதை நிறுத்தியிருப்பேன். உனக்கும் இந்த இரண்டு வருடங்கள் தேவையில்லாத கவலை? இனி என்னால் உனக்கு எந்தத் தொந்தரவும் இல்லை.”
அவன் இத்தனை பேசிய பிறகும் லலிதா அவனிடம் பேசத் தயாராயில்லை. அருகில் இருந்த இளைஞனோடு சென்றுவிட்டாள். மனோரஞ்சன் விரக்தியோடு சிரித்தான்.
“உனக்கு அவளோட என்ன பேச்சு? அவதான் நம்ம குடும்பத்து மானத்தை சந்தி சிரிக்க வச்சிட்டாளே?” பின்னே கேட்ட தாயின் குரல் அவர் அருகில் நெருங்கி வருவதைக் காட்ட, அவரது முகத்தைக் காணப் பிடிக்காமல் அவ்விடம் விட்டு வேகமாய் நகர்ந்தான்.
“மனோ…” பின்னேயே தன் குடும்பத்தவரின் குரல்கள் கேட்டும் அவன் திரும்பிப்பார்க்கவில்லை.
அவன் இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தான். லலிதாவின் வாழ்க்கையில் இருந்து அவளுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் ஒதுங்கிவிடத்தான் இத்தனை நாட்கள் பொறுமையாக இருந்தான்.
போதும். இனி யாரைப் பற்றியும் யோசிக்க வேண்டிய அவசியமில்லை. அவனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இராது எனும்போது அவன் யாரைப் பற்றி யோசிக்க வேண்டும். இனி அவன் எடுப்பதுதான் முடிவு.
வண்டியில் ஏறியமர்ந்தான். வண்டி வேகமெடுத்தது. அவன் மனக்கண்ணில் அந்தக் குட்டிச் சிறுவனின் அழகு முகம் தோன்றியது.
“ராஜாக்குட்டி. என்னை மன்னிச்சிடுடா. நான் உங்கள் வாழ்க்கையில் நுழையாமல் இருந்திருந்தால் நீ மகிழ்ச்சியோடு வாழ்ந்திருப்பே. உன் குடும்பம் சிதைய நான் காரணமாக இருந்துவிட்டேனடா.”
மனதார அவன் மனக்கண்ணில் தோன்றிய சிறுவனிடம் பேசினான். அடுத்து அவள் முகம். அவனை உறங்க விடாமல் உயிரை உறிஞ்சுக்கொண்டிருக்கும் அவள் முகம்.
“சரண். இனியும் உன்னைப் பிரிஞ்சு என்னால் இருக்க முடியாது. எங்கேயோ நீ உயிரோட பத்திரமா இருக்கனும்னுதான் நான் உன்னை விட்டு விலகினேன். ஆனால்……. நான் உன்னைவிட்டுக் கொடுத்திருக்கக் கூடாது. இப்போது உன்னை முழுமையாக இழந்திருக்க மாட்டேன். நான் உன்கிட்டயே வர்றேன்.”
மனதிற்குள் அரற்றிக் கொண்டே கண்களை மூடிக்கொண்டான். வண்டி வேகமெடுத்தது.
“சரண். ஐ லவ் யூ ஊ ஊ ஊ……….”
அடுத்த கணம் அவன் வண்டி எதன் மீதோ மோதியது. அவன் தூக்கியெறியப்பட்டான். தலையில் நல்ல அடி. சிறிது நேரத்திற்கெல்லாம் அவனைச் சுற்றி இரத்த வெள்ளம். சிறிது சிறிதாக அவன் இருளில் மூழ்கினான். காதல் வளரும் . . . . . .