“பால் இருந்தால் சூடு பண்ணி என் ரூமுக்கு எடுத்துட்டு வந்துரு.”
அவளிடம் கூறியவன் திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.
அவள் பல்லைக் கடித்தாள்.
‘என்னவோ பொண்டாட்டிக்கிட்ட சொல்லிட்டுப் போற மாதிரி போறான். திமிர் பிடிச்சவன். அம்மாவுக்கு உள்ள திமிர் இருக்கத்தானே செய்யும். பால் வேணுமா பால். இரு கொண்டு வர்றேன்.’
‘ஐயோ. அப்படி வேறு சொல்வானோ? நான் எதைக் காட்டுவேன்.’ திடுக்கிட்டாள்.
“என்னதான் பசும்பால் வாங்கினாலும், அங்கிள் எப்போதும் ஒரு பால் பாக்கெட் அவசர ஆத்திரத்துக்கு வைத்திருப்பார். அதை எடுத்துக் காய்ச்சித்தா. அப்பதான் எனக்குத் தூக்கம் வரும்.”
வேறு வழியில்லாமல் அவனுடன் சென்றாள்.
அவன் சொன்னது போலவே குளிர்சாதனப் பெட்டியில் ஒரு பால் பாக்கெட் இருந்தது.
அதைக் கத்தரித்து பாத்திரத்தில் ஊற்றியவள் அடுப்பைப் பற்ற வைத்தாள்.
“ஏன் நர்சம்மா? இதுதான் நீ சூடு பண்ணும்போது திரிஞ்சு போன பாலா? நீ கீழே கொட்டிட்டேன்னுதானே சொன்னே? பாரேன் எவ்வளவு சமர்த்தா இந்த பாத்திரத்தில் வந்து உட்கார்ந்திருக்குன்னு.” என்றான் கிண்டலாய்.
அவள் திருதிருவென்று விழித்தாள்.
“ரொம்ப விழிச்சுக்கிட்டு நிற்காதே. அப்புறம் இந்தப் பாலும் திரிஞ்சுப் போயிடப்போகுது.” என்றான் அதட்டலாய்.
‘நான் செய்ததை கவனித்துவிட்டானோ?’
‘எப்படி? என்கிட்ட சொன்ன உடனேதான் போயிட்டானே?’
‘அங்கிருந்து பார்த்தால் தெரியுமா?’
தனக்குள் யோசித்தவாறே மெல்ல சமையல் அறைக்கு வெளியே எட்டிப் பார்த்தாள்.
“அங்கிருந்து பார்த்தால் தெரியாது. ஆனால் கிச்சன் வாசலில் நின்றால் தெரியும்.” என்றான் அமர்த்தலாய்.
‘ஐயய்யோ. இவன் போயிட்டானா இல்லையான்னே கவனிக்காமல் நான் பாட்டுக்கும்…’ யோசித்துக்கொண்டே தன் தலையில் தட்டிக்கொண்டாள்.
“அப்படித் தட்டிக்கக் கூடாது. இப்படி குட்டனும்.” என்றவன்
“இனி இப்படி செய்வியா?” என்றவாறே அவள் தலையில் மெல்லக் குட்டினான்.
அவள் அவனை முறைத்துக்கொண்டே தன் தலையைத் தடவிக் கொண்டாள்.
“இனி இந்த மாதிரி சின்னப்பிள்ளைத்தனமா நடந்துக்கிட்டே மெதுவா குட்டமாட்டேன். மண்டை வீங்கிப் போயிடும்.”
“நான் என்ன உங்க வேலைக்காரியா?” என்றாள் கோபமாய்.
“இல்லம்மா. பொண்டாட்டி.” என்றான் அமைதியாய்.
அவள் விக்கித்து நிமிர்ந்தாள்.
“நான் சொல்லலை. நீதான் சொன்னே. அதை வச்சுத்தான் பொண்டாட்டிக்கிட்டதான் பால் கேட்கனும்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன்.”
அவன் சொன்ன உடன் அவன் கையில் இருந்து தம்ளரை வெடுக்கென்று பிடுங்கியவள் பாலை ஆற்றித் தந்தாள்.
“ம். குட். இப்படித்தான் இருக்கனும்.”
அவளிடம் இருந்து மௌனம்தான் பதிலாய் கிடைத்தது.
“சண்முகம் அங்கிள் இப்போதைக்கு இங்கு வரமாட்டார். வனிதா ஆன்ட்டியோட நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. அவர் வர்ற வரைக்கும் நீ சமையலைப் பார்த்துப்பேதானே?”
“நான் இங்கே நர்சம்மாவாத்தான் வந்திருக்கேன். உங்களுக்கு சமைச்சுப் போட வரலை.” என்றாள் வெடுக்கென்று.
“பெருசா சண்முகம் அங்கிள்கிட்ட வாக்கு கொடுத்தே. இங்கே நீ பார்த்துக்கிறதா. அவருக்கு இந்த வேலையை விட்டால் வேறு தெரியாது. நாங்களும் இப்போதைக்கு சமையல் வேலைக்கு வேறு ஆள் தேட முடியாது. திடீரென்று அங்கிள் வந்துட்டார்னா புதுசா வேலைக்கு வந்தவங்களை அனுப்பவும் முடியாது. நீதான் அவருக்கு வாக்குக் கொடுத்தே. அதனால் நீதான் பார்த்துக்கனும்.”
அவள் பதில் எதுவும் சொல்லவில்லை.
அவள் இப்படி ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை.
வனிதாவிற்கு இந்தளவிற்கு உடல்நிலை மோசமாக இருக்கும் என்று அவளுக்குத் தெரியாது.
ஓரிரு நாட்கள் சண்முகம் அங்கேயிருந்து விட்டுப் பிறகு வந்துவிடுவார் என்றுதான் நினைத்திருந்தாள்.
“நீங்க சொல்லிட்டா ஆச்சா? உங்கம்மா ஒத்துக்கனுமே.” என்று மடக்கினாள்.
“குட். சமைக்கிற வேலையைத் தள்ளிவிட என்னெல்லாம் சாக்கு சொல்றே? அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். உனக்கு வேணும்னா சம்பளம் கூட போட்டுத் தர்றேன்.”
‘முதல்ல வேலை பார்த்ததுக்கு சம்பளத்தை தந்தால் நல்லாருக்கும்.’ முணுமுணுத்தாள்.
“தரத்தான் நினைக்கிறேன். ஆனால் நீ பணத்தை வாங்கிக்கிட்டு ஓடிட்டால்? அதுக்குத்தான் தர யோசிக்கிறேன்.” என்றான் பாவனையோடு.
“சரி. போய் தூங்கு. காலையில் இருந்து நிறைய வேலை இருக்கு. அப்புறம் ராத்திரி படுக்கும்போது என்னோட அறைக்கு வந்து பால் தரனும். சண்முகம் அங்கிள் அப்படித்தான் செய்வார். வரட்டுமா?” அலட்டாமல் கூறியவன் வேக நடையில் சென்றுவிட்டான்.
அவள்தான் பல்லைக் கடித்துக்கொண்டு நின்றாள்.
மறுநாள் காலையில் சீக்கிரம் எழுந்தவள் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தாள்.
சமையல் அறையில் நுழையும்போதே எப்போதும் அவளைப் பார்த்துப் புன்னகைக்கும் சண்முகம் அன்று இல்லை என்ற உண்மை உரைத்தது.
அத்துடன் நேற்று இரவு சித்தரஞ்சன் சொல்லிச் சென்றதும்.
‘நீ அவன் சொன்னதை ஏன் பெருசா எடுத்துக்கறே? அவன் சொன்னால் நீ சமைக்கனுமா என்ன?’
தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள்.
‘இல்லை. இது சரண்யா வாழப்போகும் வீடு. நீ அலட்சியப்படுத்த முடியாது.’
தனக்குள்ளேயே வாதிட்டுக்கொண்டாள்.
சகுந்தலாவிற்கு நிச்சயம் இவள் சமைப்பது பிடிக்காது.
அவருக்குப் பிடிக்காததையே செய்ய வேண்டி வருகிறதே.
அவருடன் ஒரு சுமூகமான உறவைப் பேண முடியாது போலவே என்று யோசித்தாள்.
வாசல் பக்கம் போன போது அங்கே வேலை பார்க்கும் பெண்ணொருத்தி வாசல் கூட்டி கோலம் போட்டுக்கொண்டிருந்தாள்.
“எழுந்து வந்துட்டீங்களாம்மா.” என்று காத்திருந்த ஒரு ஆள் பால் பாத்திரத்தை அவளிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்.
இதுதான் வழக்கம் போலும்.
பால் பாத்திரத்துடன் உள்ளே வந்தவள் பாலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டு, சமையல் அறையை சுத்தம் செய்தாள்.
அடுப்பையும், அடுப்பு மேடையையும் சுத்தம் செய்தவள், பாலை எடுத்து வெளியில் வைத்தாள்.
மீண்டும் கை கால் கழுவிக்கொண்டு வந்தவள், பாலைக் காய்ச்சி தனக்கு மட்டும் தேநீர் தயார் செய்து கொண்டாள்.
இப்போது யாரும் எழுந்திரிக்க வாய்ப்பில்லை. தேவேந்திரனுக்காக சத்துமாவுக் கஞ்சி தயார் செய்தாள்.
அவர் சீக்கிரம் எழுந்துவிடுவார் என்று தெரியும். இப்போது வைத்தால்தான் அவர் எழுந்து வரும் சமயத்திற்கு குடிக்கும் பதத்திற்கு இருக்கும்.
“ம். வெரிகுட். இப்படித்தான் இருக்கனும். பால் இருக்கா? இல்லை திரிஞ்சு போச்சா?” என்றான் கிண்டலாய்.
“இருக்கு.” என்றாள் ஒற்றை வார்த்தையில்.
“ம். எனக்கு டீ வேணும். டபுள் ஸ்ட்ராங்காய். அதுக்காக உப்பை அள்ளிக் கொட்டிடாதே.” கிண்டலுடன் கூறியவன் வெளியில் சென்றுவிட்டான்.
‘அவன் சொன்ன மாதிரியே தேநீரில் சர்க்கரைக்குப் பதிலாக உப்பை அள்ளிக் கொட்டினால் என்ன?’ என்று தோன்றியது.
‘இல்லை மிளகாய்த்தூளை அள்ளிப்போடுவோமா?’
“என்ன சிந்தனை பலமாயிருக்கு? எனக்கொன்னும் பிரச்சினையில்லை. எனக்கு தர்றதில் சந்தேகமா இருந்தால் உன்னைத்தான் முதலில் சாப்பிடச் சொல்லுவேன்.” என்றான் நிதானமாய்.
‘நமக்கெதற்கு வம்பு?’ என்று நினைத்தவள் சமர்த்தாய் அவனுக்கு நல்லவிதமாய் தேநீர் போட்டுக் கொடுத்தாள்.
“பரவாயில்லை. ஏதோ கொஞ்சம் வாயில் வைக்கிற மாதிரி இருக்கு.” என்றவன் நிதானமாய் ருசித்துக் குடிக்க ஆரம்பித்தான்.
“அப்புறம் சண்முகம் அங்கிள் என்ன சமைக்கனும்னு அம்மாக்கிட்ட மெனு கேட்டுத்தான் சமைப்பார். நீ கேட்டால் அம்மா என்ன செய்வாங்கன்னு தெரியலை. அதனால் இனி என்கிட்டே கேட்டுக்கிட்டு சமைக்கனும். என்ன புரியுதா?”
“இதப் பாருங்க. நான் ஏதோ சண்முகம் அண்ணாவுக்காக உதவி பண்றேன்னுதான் சொல்லியிருக்கேன். அதுக்காக ரொம்ப ஓவரா பண்ணாதீங்க. நான் ஒன்னும் இங்கே சமைக்க வரலை புரியுதா? அதனால் ரொம்ப அலட்டிக்காதீங்க.”
“இப்ப நான் என்ன நர்சம்மா சொல்லிட்டேன்?” என்றான் அப்பாவியாய்.
“இப்படி என்னை நர்சம்மா நர்சம்மான்னு கூப்பிடறதை விடுங்க. எனக்குன்னு ஒரு பேரு இருக்கு.”
அது என்னவோ சித்தரஞ்சன் அவளைப் பெயர் சொல்லி அழைத்த மாதிரியே அவளுக்கு நினைவு வரவேயில்லை.
எப்போதும் அவளிடம் பேச்சை ஆரம்பிக்கும்போதெல்லாம் மொட்டையாகத்தான் ஆரம்பிக்கிறான்.
இப்போது புதிதாக ‘நர்சம்மா’ என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறான்.
“எனக்குன்னு ஒரு பேரு வச்சிருக்காங்க. அதைச் சொல்லிக் கூப்பிடுங்க.”
“எனக்கு எப்படி கூப்பிடனும்னு தெரியும். நீ நான் சொல்றதை மட்டும் கேளு.”
“இதப்பாருங்க சார். ‘தானத்துக்குக் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடிச்சுப் பார்த்தானாம்’னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. சண்முகம் அண்ணா இல்லை. சமையலுக்கும் நீங்க ஆள் தேடனும். அதனால் நான் சமைக்கலாம்னு உதவி செய்ய முடிவெடுத்தால், நீங்க அதிகாரம் பண்றீங்க. நான் சமைச்சு வக்கிறதுதான் சாப்பாடு. உங்க இஷ்டத்துக்கு எல்லாம் சமைக்க முடியாது. நான் என்ன கேட்கிறோனோ அதைக் கொண்டு வந்து மட்டும் கொடுங்க. சரியா?” என்றவள் அவனுக்குப் பதில் பேச இடம் தராமல் சென்றுவிட்டாள்.
அவன் காலை உடற்பயிற்சியை மேற்கொண்டான்.
மனதிற்குள் ஏனோ உல்லாசமாக உணர்ந்தான். இப்போது தான் தன் இளம்பிராயத்திற்குச் சென்றுவிட்ட உணர்வு.
சகுந்தலா காலையில் எழுந்து வந்ததும் நேரே சமையல் அறைக்கு வந்தார்.
அங்கே அபர்ணா பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தாள்.
“ஏய். இங்கே என்ன பண்றே? உன்னை யார் இதை எல்லாம் செய்யச் சொன்னது?” என்றார் அதிகாரமாய்.
“அம்மா. என்னாச்சும்மா?” என்றவாறே உள்ளே நுழைந்தான் சித்தரஞ்சன்.
அவன் தாய் எழுந்து வரும் நேரம் அவனுக்குத் தெரியுமாதலால் சரியாக அந்த நேரத்திற்கு வந்துவிட்டான்.
“இவளை யார் சமைக்கச் சொன்னது?”
“சரிதான். நீ இனி சமையல் எல்லாம் செய்ய வேண்டாம்.” என்றான் அவளிடம்.
“அவ இனி செய்ய மாட்டாள்மா. அப்பா சொன்னதினால்தான் செய்தாள். நீங்க சமையல் பொறுப்பை பார்த்துக்கங்கம்மா.” என்றான் நிதானமாய்.
“என்ன நான் சமைக்கனுமா?” என்றவர் முகம் சுளித்தார்.
“வேறு என்னம்மா செய்வது? சண்முகம் அங்கிள் இப்போதைக்கு வரமாட்டார். இந்த லாக்டவுன் நேரத்துல சாப்பாடு வெளியில் வாங்கவும் முடியாது. உங்களுக்கு ஹோட்டல் சாப்பாடும் ஒத்துக்காது.”
“வேற ஆளைப் பிடிக்க வேண்டியதுதானே?”
“அதாம்மா நான் சொன்னேன். உங்களை சமைக்க சொல்லலை. உங்களுக்கு ஏத்த மாதிரி ஆளை நீங்களே அழைச்சுட்டு வாங்கன்னுதான் நான் சொல்றேன். அதுவரைக்கும் நாம பட்டினி கிடக்க முடியாதுல்ல. அதனால ஆள் கிடைக்கிற வரைக்கும் நீங்க சமையலை பார்த்துக்கிட்டீங்கன்னா அப்பா ஒன்னும் சொல்லமாட்டார்.”
சகுந்தலாவுக்கு ஏற்ற மாதிரி ஆளை அவரே அழைத்து வருவதா?
நடக்கிற காரியமா அது?
அவரது அலட்டல் தெரிந்த யாராவது இங்கே வேலைக்கு வருவார்களா?
அவர்கள் இருவரும் பேச ஆரம்பித்த உடனே அபர்ணா அங்கிருந்து சென்றுவிட்டாள்.
தாய்க்கும், மகனுக்கும் இடையில் அவள் நிற்க விரும்பவில்லை. இருவருமே சேர்ந்து ஒரு முடிவு எடுக்கட்டும் என்று விலகி விட்டாள்.
தான் சமைப்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தான் அவள் முன்பே யூகித்திருந்தாளே.
“என்னவோ செய்து கொள்ளுங்கள் போங்கள்.” என்று கோபமாய் சென்றுவிட்டார் சகுந்தலா.
அவனுக்குத் தன் தாயைப் பற்றி நன்கு தெரியும். அவராவது உடல் வளைந்து வேலை பார்ப்பதாவது?
கொஞ்சம் கசப்புடன் நினைத்துக்கொண்டான்.
ஊர் உலகத்தில் இப்படியா தன் தாயைப் போல இருக்கிறார்கள்.
சிறு வயதில் அவன் ஜெயச்சந்திரன் வீட்டிற்குச் செல்லும்போது அவருடைய மனைவி எப்படி கவனிக்கிறார்கள் என்பதைக் கண்டவனுக்குத் தன் தாய் மட்டும் ஏன் அப்படி இல்லை? என்ற கேள்வி மனதில் எழுந்தது.
அதன் பிறகு அவன் அவர்கள் வீட்டிற்குச் செல்லவில்லை.
அவர்கள் வீடென்று கிடையாது. வேறு யார் வீட்டிற்கும் செல்வதில்லை.
எப்போதும் யாரையேனும் அதிகாரம் பண்ணிக்கொண்டு திரிவாரே தவிர, இறங்கி ஒரு வேலை செய்ய மாட்டார்.
கேட்டால் பிறந்த வீட்டில் ராணியாய் வளர்ந்தவர்.
கோட்டைக்கு ராணி ஆனாலும், பிள்ளைகளுக்குத் தாய்தானே? அந்த கடமையை ஏன் அவர் சரிவர செய்யவில்லை.
அவனுடைய அப்பா வழிப் பாட்டி இருந்ததினால் அவர்களின் வளர்ப்பு அவரது பொறுப்பாயிற்று.
இல்லை என்றால் தங்களை வேலைக்காரர்களின் பொறுப்பில் விட்டிருப்பாரே தவிர்த்து வேறு ஒன்றும் செய்திருக்க மாட்டார் என்பது அவனுக்கு நிச்சயமாகத் தெரியும்.
கதவைத் தட்டும் ஒலியில் கதவைத் திறந்தாள் அபர்ணா.
“நீ ஏன் சமையலை பாதியிலேயே விட்டுட்டு வந்துட்டே. இனி அம்மா உன்னை எதுவும் சொல்லமாட்டாங்க.” என்றுவிட்டுச் சென்றுவிட்டான்.
இந்த விசயத்தில் அபர்ணாவை அவன் மனதார பாராட்டவே செய்தான்.
நேற்று சண்முகம் இல்லை என்றதும், சகுந்தலா திட்டுவார் என்று தெரிந்தே இரவு உணவை முடித்து வைத்திருந்தாள்.
இந்த பொறுப்பு ஏன் தன் தாய்க்கு இல்லாமல் போனது என்று வருந்தினான்.
சண்முகம் எப்போதும் சகுந்தலா சொல்படி தான் செய்வார்.
அது மற்றவர்களுக்குப் பிடிக்கிறதா, இல்லையா என்று எப்போதுமே சகுந்தலா யோசித்ததில்லை.
எப்போதும் வசதியை பறைசாற்றும் விதமாகவே உணவுகள் சமைக்கப்பட்டிருக்கும்.
அது உடலுக்கு ஆரோக்கியமா இல்லையா என்றெல்லாம் அவர் யோசித்ததேயில்லை.
இதை எல்லாம் அபர்ணா இங்கு வந்ததில் இருந்து கவனித்துக்கொண்டுதான் இருந்தாள்.
எப்போதாவது அது மாதிரி சாப்பிடலாம்.
ஆனால் எப்போதுமே இது மாதிரி கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் மனிதரையும் நோயில் தள்ளிவிடும் என்று ராஜலட்சுமி அடிக்கடி சொல்வார்.
அதனால் எப்போதும் ராஜலட்சுமி சாப்பாடு விசயத்தில் வெகு கவனமாக இருப்பார்.
அவர் செய்வது எல்லாம் எளிய வகை உணவுகள் தான். ஆனாலும் வெகு ருசியாக இருக்கும்.
ஆரோக்கியம் அதிகம் நிறைந்த உணவாக இருக்கும்.
அவரிடம் தான் அபர்ணா சமையல் கற்றுக்கொண்டாள். அது இப்போது கை கொடுத்தது.
இட்லி, வெண் பொங்கல், மல்லிச் சட்னி, சாம்பார் என்று அன்றைய காலை உணவைத் தயார் செய்திருந்தாள் அபர்ணா.
“பொங்கலில் நெய் ஊத்தினியா இல்லையா? அவங்க அவங்க தராதரத்திற்கு ஏற்ற மாதிரிதானே சமைக்க வரும். இங்கு நெய்க்குப் பஞ்சமா என்ன? கூட ஊற்ற வேண்டியதுதானே? சாப்பாடா இல்லை மண்ணா? ஒரு வாசமும் இல்லை.” என்று வெடுவெடுத்தார்.
ஏதாவது பேசி அவளை சமையல்கட்டிலிருந்து ஓட வைக்கும் திட்டம். அபர்ணா எதுவுமே பேசவில்லை.
அவர்களை அவள் வேறாக நினைக்கவில்லை.
இன்றும் மனோரஞ்சனுடன் மதன்ராஜ் சாப்பிட்டுவிட, மற்றவர்களுக்காக காத்திருந்தாள் அபர்ணா.
சித்தரஞ்சனும், தேவேந்திரனும் உணவருந்த வந்தனர்.
சித்தரஞ்சன் எதுவும் பேசவில்லை. அமைதியாக சாப்பிட்டான்.
தேவேந்திரன் ரசித்துச் சாப்பிட்டார். அருகில் இருந்து பார்த்துப் பார்த்துப் பரிமாறினாள்.
அவர் நெகிழ்ந்து போனார்.
தன் தாய்க்குப் பிறகு அவர் சாப்பிட்டது எல்லாம் சண்முகத்தின் கையால்தான்.
மனைவி ஒரு நாள் கூட அருகில் இருந்து பரிமாறியதில்லை.
எல்லோரையும் அதிகாரம் செய்து கொண்டு திரியும் மனைவியை இவர் அதிகாரம் செய்யவில்லை.
தன் தந்தையிடம் இருந்து மனைவியை எப்படி மரியாதையாக நடத்த வேண்டும் என்று கற்றுக்கொண்டவர் அவர்.
அவசர ஆத்திரத்திற்கு தேநீர் போட வேண்டும் என்றாலும் சண்முகத்திடம் சொல்லச் சொல்லிய மனைவியின் செயலில் அவர் டீ, காபி என்று எதுவுமே குடிப்பதில்லை.
சண்முகம் வேலையாள். முதலாளி வேண்டாமென மறுக்கவும் அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.
இதோ அபர்ணா அவர் காலையில் எதுவும் குடிப்பதில்லை என்று தெரிந்து இப்போது சத்துமாவுக் கஞ்சி வைத்துத் தருகிறாள்.
அவள் செயலில் அவர் மனம் குளிர்ந்து போயிற்று.
அபர்ணாவைப் போன்ற ஒரு பெண்தான் தங்கள் வீட்டு மருமகளாக வரவேண்டும் என்று அவர் மனம் ஆசைப்படுகிறது.
தனக்குக் கிடைக்காதது, தன்னுடைய மகன்களுக்காவது கிடைக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார்.
இன்று சரண்யாவின் பிறந்த நாள்.
அவளுக்காக வேண்டிக்கொள்ள கோயிலுக்குச் செல்லலாம் என்றால், கொரோனா ஊரடங்கு என்று கோயில்களும் திறக்கப்படவில்லை.
ஆற்றங்கரை பிள்ளையார் கோவில் இருப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டவள் அங்கே செல்ல முடிவெடுத்தாள்.
தோட்டத்தில் இருந்து அருகம்புல்லை சேகரித்தவள் அதை மாலையாகக் கட்டினாள்.
காலையில் எழுந்த உடன் வேலைகளை வேகமாக முடித்துக்கொண்டு மதன்ராஜை அழைத்துக்கொண்டு கோயிலுக்குச் சென்றுவிட்டாள்.
விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றிவிட்டு, சரண்யாவிற்காக வேண்டிக்கொண்டாள்.
அவள் விரைவில் குணமடைய வேண்டும்.
அவள் ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டவள் சிறிது நேரம் அங்கிருந்த படிக்கட்டில் அமர்ந்து தியானம் செய்தாள்.
பின் இருவரும் வீட்டிற்குச் செல்ல நடக்க ஆரம்பித்தனர்.
“அபர்ணாம்மா. இந்த ஊர்லதான் இருக்கியாம்மா.” என்ற குரலில் திரும்பினாள்.
ஒரு காவலர் நின்றிருந்தார். அவரைக் கண்டதும் மகிழ்ந்து போனாள்.
“சார். எப்படியிருக்கீங்க? இங்கே தான் இப்போ வேலை பார்க்கறீங்களா? அஞ்சலி எப்படியிருக்காள்?”
“உன் புண்ணியத்தில் நல்லாருக்காம்மா.”
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே அங்கே சித்தரஞ்சன் வண்டியில் வந்து கொண்டிருந்தான்.
“சார். அவங்க எங்க வீட்டில்தான் வேலை பார்க்கிறாங்க.” என்றவாறே அவன் வரவும் காவலர் புரியாமல் பார்த்தார்.
“வணக்கம் சார். நான் ஏட்டு கந்தசாமி. இவங்க எனக்கும் தெரிஞ்சவங்கதான் அதனால்தான் பேசிக்கிட்டிருந்தேன்.”
“அப்படியா சார். ஊரடங்கு என்பதால் தேவை இல்லாமல் சுத்தறாங்கன்னு விசாரிக்கிறீங்களோன்னு நினைத்தேன்.” என்றான் பதிலாய்.
“சரி. சார். இங்கேதானே இருக்கப் போறீங்க. அப்புறம் பார்க்கலாம். அஞ்சலியை விசாரித்ததாய் சொல்லுங்க சார்.” என்று அபர்ணா அவரிடம் விடைபெற்றாள்.
வீட்டிற்கு வந்த பிறகு சித்தரஞ்சன் அவளைத் தேடி வந்தான்.
“உன்னைப் பற்றிப் பெருமையா சொல்ல ஆள் செட் பண்ணி வச்சிருக்கே போலருக்கே. ஆள் வாயைத் திறந்தால் உனக்குப் புகழாரம் சூட்டறார். என்ன விசயம்?” என்றான்.
அவள் மௌனமாய் அவனைக் கடந்து சென்றாள். அவள் மனதில் பழைய நினைவுகள் பாரமாய் அழுத்தின.
அவள் மனம் அலைபாய்ந்ததில் சற்று காற்றாட இருக்கலாம் என்று அருகில் இருந்த பூங்காவிற்குச் சென்றாள்.
“அப்ப உன்னைத் தவற விட்டது தப்பே இல்லைன்னு இப்பத் தோணுது.” என்று பல்லை இளித்தவாறு நின்றிருந்தவனைக் கண்டு திடுக்கிட்டாள்.