என்ன நடந்தது என்றே புரியாமல் எப்போதும் தப்பும் தவறுமாகவே பேசுவானா?
அவளுக்கு அலுப்பாக வந்தது.
“இப்ப உங்களுக்கு என்ன வேணும்? நான் உங்ககிட்ட வேலை பார்க்கிறவள்தான். என்னோட வேலையில் குறை இருந்தால் நீங்க என்னைக் கண்டிக்கலாம். மத்தபடி என்னோட தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.”
“எந்த உரிமையும் இல்லையா? அப்புறம் எந்த உரிமையில்மா எங்க வீட்டுப் பொண்ணுன்னு அந்த மைனர்கிட்ட சொல்லிக்கிட்டிருந்த?” என்றான் நக்கலாய்.
‘அதையும் கேட்டுவிட்டானா?’
“என்ன பதில் சொல்ல முடியலையா? எங்க வீட்டில் இருக்கிற வரைக்கும் நீ என்ன தப்பு செஞ்சாலும், அது எங்களுக்குத் தான் கெட்ட பெயரை உண்டாக்கும். எங்களை நம்பித்தான் சந்திரன் அங்கிள் உன்னை இங்கே அனுப்பிச்சு வச்சிருக்கார். நீ வெளியில் போன பிறகு உன் வண்டவாளத்தை எல்லாம் வச்சுக்கோ.” என்றான் கண்டிப்புடன்.
“ரஞ்சன். நீ இங்கே இருக்கியாப்பா.”
“சொல்லுங்கப்பா.”
“சண்முகத்தோட மனைவி வனிதா இறந்துடுச்சாம்பா. இப்பதான் தகவல் வந்தது.”
ஒரு நிமிடம் அங்கே மௌனம் நிலவியது.
“சரிப்பா. உடனே கிளம்புவோம்.”
“நானும் வர்றேன் சார்.”
அபர்ணா தேவேந்திரனிடம் கூறினாள்.
“துக்க வீட்டில் அதிகமா கூட்டம் சேரக்கூடாதுன்னு வேற சொல்லியிருக்காங்க. ராத்திரி நேரம் நீ எப்படிம்மா வருவே?”
“வரட்டும்பா. நீங்க அங்க ராத்திரி தங்க வேண்டாம்பா. ரெண்டு பேரும் வந்துடுங்க. காலையில் திரும்ப வரும்போது அம்மாவை அழைச்சுட்டு வாங்க.”
அவருடைய மகள்கள் கீதா, ராதா அருகில் அபர்ணா அமர்ந்து கொண்டாள்.
“நீங்க கிளம்புங்கப்பா. நான் இங்கேயே இருந்து பார்த்துக்கறேன். காலையில் வாங்க.” என்று சித்தரஞ்சன் அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தான்.
அபர்ணா அவன் எங்கே தங்குவான்? என்று கவலையுடன் கேட்க,
“இங்கே நம்மளுக்கு காய்கறி தோட்டம் இருக்கு. அங்கேயே வந்தால் போனா தங்குவதற்கு வீடு இருக்கும்மா. அங்கே தங்கிப்பான்.” என்றார்.
வீடு போகும் வழியில் மீண்டும் அபர்ணாவிற்குப் பழைய நினைவுகள்.
அன்று குமரன் வேர்க்க விறுவிறுக்க அவர்கள் இருவரையும் சைக்கிளில் மிதித்து அழைத்துக்கொண்டு சென்றான்.
தங்கள் வீட்டில் அவளைத் தங்க வைத்தால் அவளது பெற்றோர் கண்டு பிடித்துவிடுவர் என்று யோசித்த போதுதான், குமரனுக்குத் தன்னுடைய நண்பன் கந்தசாமியை அழைத்து என்ன செய்வதென்று கேட்டான்.
கந்தசாமியும் தன் வீட்டில் வைத்துப் பார்த்துக்கொள்வதாகக் கூறினார்.
அவருக்கு மனைவி கிடையாது. ஒரே மகள். அஞ்சலி.
அவரது வீட்டில் அபர்ணாவை தங்க வைத்தனர்.
தயக்கத்துடனே கலைவாணி அக்கா மகளை அங்கே விட்டுவிட்டுச் சென்றாள்.
கந்தசாமியின் மகள் அஞ்சலி அவளிடம் ‘அக்கா அக்கா’ என்று ஒட்டிக்கொண்டாள்.
கலைவாணி சந்தேகப்பட்டது மாதிரியே விஜயாவும், முருகேசனும் அவள் வீடு தேடி வந்துவிட்டனர்.
“ஏய் ஓடுகாலி. நீ கெட்டதும் இல்லாம இப்ப என் பொண்ணை கூட்டிக்கிட்டு ஓடி வந்துட்டியாடி? எங்கேடி என் பொண்ணு? அவளை என்ன செஞ்சே?”
“இதப்பாரு. உன் சங்காத்தமே வேண்டாம்னு தான் வெளியே வந்தேன். நான் ஏன் உன் பொண்ணைப் பார்க்கப் போறேன். நான் எப்பவாவது உன்னைத் தேடி வந்தேனா? உன் பொண்ணைக் காணோம்னா போய் போலீஸ்ல புகார் கொடு. இங்க வந்து தகராறு பண்ணாதே.” என்று தைரியமாய் அவளை எதிர்கொண்டாள் கலைவாணி.
அப்பாவியான அவள் இத்தனை தைரியமாய் பேசுவாள் என்று விஜயா எதிர்பார்க்கவில்லை.
தன் மானத்திற்கு ஒரு இழுக்கு என்று வரும்போது பெண்ணிற்கு தைரியம் தானாக வந்துவிடும்.
அப்படித்தான் கலைவாணி தைரியசாலியானாள்.
தன்னை ஒரு கேடுகெட்டவனுக்கு பணத்திற்காக இரண்டாம் தாரம் என்ற பெயரில் விற்கப் பார்க்கிறார்கள் என்று தெரிந்த உடன் அவள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள்.
குமரன் ஏற்கனவே திருமணம் ஆகி, மனைவியை இழந்தவன்.
அவனுக்கு ஒரு மகள் சரண்யா. இது எல்லாம் தெரிந்தும் அவனைத் திருமணம் செய்து கொண்டாள் கலைவாணி.
“இரண்டாம் தாரமா உன்னைக் கட்டிக் கொடுக்கப் பார்க்கிறார்கள் என்று வெளியில் வந்து, என்னை இரண்டாம் தாரமாகத்தானே கல்யாணம் செய்துகொண்டாய் கலை. உன்னைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.”
“நீங்கள் நல்ல மனிதர். எனக்குப் பணம் காசு பெரிசில்லை. நல்ல கௌரவமான வாழ்க்கை வேணும். நீங்கள் என் மீது வைத்தது காதல். என்னைத் திருமணம் செய்து கொள்ள இருந்தவன் என் அழகு மீது ஆசை கொண்டு என்னை விலை கொடுத்து வாங்க முயன்றான். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு. தயவுசெய்து உங்களோடு அவனை ஒப்பிடாதீங்க.” என்று கணவனிடம் கெஞ்சினாள் கலைவாணி.
இரண்டு, மூன்று நாட்கள் மகளைத் தேடிக் களைத்துப் போன விஜயாவும், முருகேசனும் அவளுடைய சித்தி மாதிரியே, அவளும் ஓடிப்போய்விட்டாள் என்ற முடிவிற்கு வந்தனர்.
ஒரு வாரம் வரை பொறுத்தவர்கள், கந்தசாமி மூலமாக பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழைப் பெற்றனர்.
கந்தசாமியே அபர்ணாவை ‘நந்தவனம் இல்லத்தில்’ சேர்க்கலாம் என்று கூறிவிட்டு அந்தப் பொறுப்பைத் தான் ஏற்றுக்கொண்டார்.
தன் பிறகு அவள் வாழ்க்கை திசை மாறிப் போயிற்று. அங்கேதான் அவள் ராஜலட்சுமி குடும்பத்தினரை சந்தித்தாள்.
அவளை மான மரியாதையோடு வாழ வைத்த அவர்களை என்றுமே நன்றியோடு நினைத்திருப்பாள் அபர்ணா.
குமரன் உடலளவில் பலவீனமானவன்.
அப்படியிருந்தும் அந்த இரவு நேரத்தில் வியர்க்க விறுவிறுக்க அவளையும், கலைவாணியையும் சைக்கிளில் அழைத்துக் கொண்டு சென்றான்.
அப்படிப்பட்டவனின் மக்களை எப்படி அபர்ணாவினால் கைவிட முடியும்?
சரண்யா கலைவாணிக்குப் பிறக்காமல் இருந்திருக்கலாம்.
ஆனால் கணவன் மீது கொண்ட காதல், அவளை சரண்யாவின் தாயாகத்தான் உணர வைத்திருந்தது.
அந்தப் பாசத்தை சரண்யா வேண்டுமானால் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம்.
ஆனால் அபர்ணா புரிந்து வைத்திருந்தாள். உண்மையான பாசத்திற்கு ஏங்கியவள் ஆயிற்றே.
கந்தசாமிக்கும் அவளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.
ஒரு மனிதாபிமானத்திலும், தனக்கும் ஒரு மகள் இருக்கிறாளே என்ற பரிதவிப்பிலுமாகத்தான் அவர் அந்த உதவி செய்தது.
குழந்தைத் திருமணம் செய்து வைக்கிறார்கள் என்று அவர்கள் மீது குற்றம் சாட்டவும் முடியாது.
அவர்கள் யாரும் அறியாமல் தான் அந்தத் திருமணப் பேச்சை நடந்தியிருந்தனர்.
அத்துடன் அந்த மைனர் தன் செல்வாக்கை பயன்படுத்தலாம்.
எதற்கு வம்பு? பெண்ணை அவர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே அவர்களுடைய எண்ணம்.
கந்தசாமி அவளை பொறுப்பாக ‘நந்தவனம்’ இல்லத்தில் சேர்த்துவிட்டு, அவளுக்கு அறிவுரைகளையும் கூறிவிட்டுத்தான் சென்றார்.
“இதப்பாரு அம்மு. நீ நல்லா படி. படிச்சு உன் சொந்தக் காலில் நில்லு. படிப்பு மட்டும்தான் உன்னைக் காப்பாத்தும்.”
“அதோட ஏதாவது தற்காப்புப் பயிற்சியை கத்துக்கோ. இங்கே பெத்தவங்களோட இருக்கிற பொண்ணுங்களுக்கே பாதுகாப்பு இருக்க மாட்டேங்குது.”
“உன்னைப் பெத்தவங்களைப் பத்தி உனக்குத் தெரியும். அவங்க நிச்சயமா உனக்குப் பாதுகாப்பா இருக்க மாட்டாங்க. இனி உன்னை நீதான் காப்பாத்திக்கனும்.”
“உன்னோட சித்தியும், சித்தப்பாவும் அந்தளவு வசதியானவங்க கிடையாது. அவங்களால் உனக்கு எதுவும் செய்ய முடியாது. அதனால் அவங்களை நீ எதிர்பார்க்காதே.” என்று தெளிவாகக் கூறினார்.
“எனக்கும் ஒரு பொண்ணு இருக்காம்மா. உன்னை என் பொண்ணு மாதிரிதான் நினைச்சு இதெல்லாம் சொல்றேன். பார்த்து பத்திரமா இருந்துக்கோ.” என்று அவளிடம் விடைபெற்றார்.
அவள் இல்லத்தில் இருந்த போதும், அதன் பிறகு ராஜலட்சுமி வீட்டிற்குச் சென்ற பிறகும் சரி, அடிக்கடி இல்லையென்றாலும் எப்போதாவது தன் சித்தியை அவள் தொடர்பு கொள்ள மறந்ததேயில்லை.
அப்போதெல்லாம் அவள் கந்தசாமியைப் பற்றியும் கேட்டு அறிந்து கொள்வாள்.
அவர் மாற்றலில் வேறு ஊருக்குப் போய் விட்டதாக அவளது சித்தி கூறியிருந்தாள்.
மூன்று வருடங்களுக்கு முன் அவர்களிடம் பேசும்போது அஞ்சலிக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகிவிட்டன என்று கேள்விப்பட்டதும் துடித்துப் போனாள்.
வலி நிவாரணி அதிகமாக சாப்பிட்டதால் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து விட்டன.
அவர்கள் வீட்டில் இருந்த ஒரு வாரமும், அந்த சிறுமி ‘அக்கா அக்கா’ என்று அவளைச் சுற்றி வந்தது அவள் கண்ணிலேயே நின்றது.
கந்தசாமி ஒரு நேர்மையான அதிகாரி. அவரிடம் அஞ்சலிக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தும் அளவிற்கு வசதியில்லை.
அவர்கள் எல்லாம் தனக்கு உதவியிருக்கவில்லை என்றால், தன்னைப் புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும்.
அவர்களுக்காக தன்னுடைய சிறுநீரகத்தைக் கொடுப்பதாக முடிவெடுத்தவள் ராஜலட்சுமியிடம் கூறினாள்.
ராஜலட்சுமிக்கு அவளைப் பற்றி நன்கு தெரியும். அவள் நன்றிக்கடனுக்காக எதையும் செய்வாள்.
அவளை நினைத்து அவருக்குப் பெருமையாக இருந்தது.
தங்கள் மருத்துவமனையிலேயே டிரஸ்ட் மூலமாக அந்த அறுவை சிகிச்சைக்கான செலவை ஏற்றுக்கொண்டார்.
இதை எல்லாம் கேள்விப்பட்ட கந்தசாமி அவளிடம் கதறி அழுதார்.
“சார். அஞ்சலி எனக்குத் தங்கை. அவளுக்கு ஒரு பிரச்சினை. அதை என்னால் சரி செய்ய முடியும்னு தெரியும்போது அதை செய்யாமல் எப்படி என்னால் இருக்க முடியும்?
சொன்னபடியே எந்த செலவும் இல்லாமல் அஞ்சலிக்கு அறுவை சிகிச்சை நடந்து அவள் உயிர் பிழைத்தாள்.
அதனால்தான் கந்தசாமி அவளை இங்கே கண்டபோது பாசத்துடன் பேசியது எல்லாம்.
நிச்சயம் இதைத்தான் அவர் சித்தரஞ்சனிடம் சொல்லியிருப்பார்.
அவன் தன்னைப் பற்றி நல்லவிதமாக மற்றவர் கூறுவதை நம்புவது கஷ்டம்தான்.
வீடு வரவும் கார் நின்றது. அவள் நினைவு கலைந்தது. குளித்துவிட்டு வந்தவள் இரவு உணவாக இட்லி மட்டும் செய்தாள்.
எல்லாம் கவனித்துக்கொண்டிருந்த தேவேந்திரன் அவளை மெச்சிக்கொண்டார்.
மறுநாள் காலை.
சாப்பிட்ட உடன் தேவேந்திரன் கிளம்ப, இன்னும் சகுந்தலா கிளம்பாமல் இருப்பதைக் கண்டு என்னவென்று கேட்டார்.
“ப்ச். நான் அங்கெல்லாம் வரலைங்க. எனக்கு உடம்பு முடியலை.”
“சகுந்தலா. என்ன சொல்றே? அந்த அபர்ணாப் பொண்ணு சண்முகத்தோட பழகியே கொஞ்ச நாட்கள் தான் ஆச்சு. அதுக்கே அந்தப் பொண்ணு நேத்து கிளம்பிடுச்சு. நீ என்னன்னா?” என்று இழுத்தார்.
“ஒரு வேலைக்காரி, வேலைக்காரனோட வீட்டுக்குப்போனாள். அதில் என்ன அதிசயம்?”
“இதப் பாரு சகுந்தலா. நான் உன்கிட்ட அத்தனை தடவை சொல்லிட்டேன். சண்முகத்தை நான் வீட்டு வேலைக்காரனா பார்க்கலை. சரி. நீ சண்முகத்திற்காக வரவேண்டாம். வனிதா உன்னோட உறவுக்காரிதானே?”
“எப்ப பணம் இல்லைன்னு சாதி சனம் பார்க்காமல் அவள் கல்யாணம் பண்ணிக்கிட்டாளோ அப்பவே அவ என்னோட உறவுக்காரி இல்லைன்னு ஆயிட்டாள்.”
“சரி. யாருக்காகவும் வரவேண்டாம். நான் சொல்றேன். எனக்காக வா.” என்று கட்டளை போல் கூறினார்.
அதை சகுந்தலாவால் மறுக்க முடியவில்லை. முணுமுணுத்துக்கொண்டே கிளம்பிப்போனார்.
போனவர்கள் அன்று மாலைதான் வீடு திரும்பினர்.
“சண்முகம் அங்கிள் கொஞ்ச நாள் அங்கேதான் இருப்பார். இப்ப உடனே அவரை வரச்சொல்றது நல்லாருக்காது. கொஞ்சம் அவங்க மனசு ஆறட்டும். உனக்கு வேலை பார்க்கிறது சிரமமா இருந்தால் சொல்லிடு. வேற ஆளைப் போட்டுக்கலாம்.” என்றான் சித்தரஞ்சன்.
ஒரு வீட்டு வேலை. இதை செய்ய அவளுக்கு என்ன சிரமம்? அவள் வேண்டாமென மறுத்துவிட்டாள்.
நாட்கள் விரைந்தன.
சந்தானம் அன்று சித்தரஞ்சனை சந்திக்க வந்திருந்தார்.
“மாப்பிள்ளை. நாளுக்கு நாள் என் பொண்ணு லலிதாவைப் பார்க்கும்போது இப்படியே இருந்துடுவாளோன்னு பயமா இருக்கு. எங்கேயோ வெறிச்சுப் பார்த்துக்கிட்டிருக்கா. சில நேரம் வெறி வந்தது போல் நடந்துக்கிறா. அப்ப யாரையாவது ஏதாவது செஞ்சால் கூட பொறுத்துக்கலாம். தன்னைத்தானே அழிச்சுக்க முயற்சி பண்றா. உங்க அத்தையால் குழந்தையையும் பார்த்துக்கிட்டு, அவளையும் கவனிக்க முடியலை. அவளை ஒரு மனநல மருத்துவமனையில் சேர்த்துட்டால் நிம்மதியா இருக்கும்.” என்றார் பரிதவிப்புடன்.
சித்தரஞ்சனுக்கும் அவரது முடிவு ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே தோன்றியது.
அவர் இந்தளவிற்கு யோசித்து வந்திருக்கிறாரே என்று அவரை பாராட்டவே செய்தான்.
உடலுக்கு ஒரு பிரச்சினை என்கிறபோது உடனடியாக மருத்துவரை நாடிச்செல்லும் நாம், மனதிற்குப் பிரச்சினை வரும்போது அதற்கான மருத்துவரை நாடிச்செல்ல பயப்படுகிறோம்.
இந்த சமுதாயம் நம்மை ஒதுக்கி வைத்துவிடுமோ? என்ற கவலை கொண்டு, எளிதில் முடிக்க வேண்டிய பிரச்சினையை பூதாகரமாக்கி விடுகிறோம்.
இப்போது சந்தானம் எடுத்த முடிவு நல்லது என்பதை உணர்ந்தவன், தான் அதைப் பற்றி விசாரிப்பதாகக் கூறினான்.
“ரொம்ப தூரத்தில் வேண்டாம் மாப்பிள்ளை. அடிக்கடி போய் பார்க்கிற மாதிரியே சேர்த்துடுவோம்.”
“சரி மாமா. நான் விசாரிக்கிறேன்.” என்றான்.
அவர் தளர்வுடன் சென்றார்.
கிருஷ்ணா இன்று மனோரஞ்சனை பரிசோதிக்க வந்திருந்தான்.
இப்போது மனோரஞ்சனுக்கு பிசியோதெரபி கொடுக்கப்படுகிறது.
அவன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம். ஓரளவிற்குப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பிக்கிறான்.
இதுவரை கிருஷ்ணா இங்கு வரவேயில்லை. ஜெயச்சந்திரன் வருவார். கூடவே அவன் எலும்பியல் நிபுணர் ஒருவரை அழைத்து வருவார்.
கிருஷ்ணா இன்றுதான் வந்திருக்கிறான்.
மனோரஞ்சனை பரிசோதித்தவனுக்கு தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள் அபர்ணா.
அதன் பிறகு அவள் சமையல் அறைக்குள் சென்றுவிட்டாள்.
வீட்டிற்குக் கிளம்பும்போது கிருஷ்ணா அவளிடம் விடைபெற சமையலறைக்குச் சென்றான்.
“என்ன நீ இங்கே முழு நேர சமையல்காரியா ஆயிட்டியா?” என்றான் கோபமாக.
“நாங்க ஒன்னும் சும்மா சமைக்க சொல்லலை டாக்டர் சார். அவங்களுக்கு வேலை பார்க்கிறதுக்கு ஏற்ப சம்பளத்தைப் பேசி கொடுக்கிறோம்.”
அப்போது அங்கே வந்த சித்தரஞ்சன் அமர்த்தலாய் கூறினான்.
“இவனுக்கு வேற வேலையே இல்லையா? எப்பப் பாரு நாம என்ன செய்யறோம்னு பார்க்கிறதுதான் இவனுக்கு வேலையா?” என்று அவளருகே குனிந்து முணுமுணுத்தான் கிருஷ்ணா.
“என்ன பண்றது டாக்டர்? வேலையோட வேலையா வேலை செய்யறவங்க சரியா இருக்காங்களான்னு பார்க்க வேண்டியதும் என்னோட வேலையா இருக்கே?” என்றான் கிண்டலாய்.
“இப்ப உங்களுக்கு என்ன வேணும் சார்?”
“மறந்துட்டீங்க டாக்டர். நீங்க இப்ப எங்க வீட்டில் இருக்கீங்க. நான்தான் உங்களுக்கு என்ன வேணும்னு கேட்கனும்.”
“எனக்கு ஒன்னும் வேண்டாம். நான் மனோவை செக்கப் பண்ண வந்தேன்.”
“இது மனோவோட ரூம் இல்லைன்னு நினைக்கிறேன்.”
“செக்கப் எல்லாம் முடிஞ்சுடுச்சு. எங்க ஸ்டாப் ஒருத்தங்க இங்க இருக்காங்க. அவங்களைப் பார்க்க வேண்டியதும் என்னோட கடமை இல்லையா?”
“ஆமா ஆமா. உங்க கடமைதான். நல்லாப் பார்த்துக்கங்க.” என்றவன் சமையல் அறையை விட்டு வெளியேறி வரவேற்பறையில் போய் நின்று கொண்டான்.
“அப்பு. சரண்யா இருக்கிற ஹாஸ்பிட்டலில் இருந்து என்னோட நண்பன் பேசினான். அவளிடம் இப்ப மாற்றம் தெரியுதாம். நீ ஒரு தடவை மதுவை அழைச்சுட்டுப் போய் அவளைப் பார்க்கறியா? தனக்குத் தெரிந்தவங்களைப் பார்த்தால் எப்படி ரியாக்ட் பண்றான்னு தெரிஞ்சுக்கலாம்.”
அழைப்பைத் துண்டித்தவன், வாட்சப்பிற்குள் நுழைந்து அந்தப் புகைப்படத்தைப் பார்த்தான்.
“கடைசியில் பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது.” என்று வாய் விட்டுச் சிரித்தான்.
காதல்வளரும் ……
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.