அபர்ணா தன்னைக் காண வந்திருக்கிறாள் என்று முன்கூட்டியே தெரிந்ததினால் அவளால் நடிக்க முடிந்தது.
இப்போது திடீரென்று சித்தரஞ்சனை இங்கே காணவும், அவள் தன் நிலையை மறந்து அதிர்ச்சியை வெளிக்காட்டினாள்.
“என்னை இங்கே எதிர்பார்க்கவில்லைதானே?” என்றான் கிண்டல் குரலில்.
“நிச்சயமாய்.” என்றாள் அமைதியாய்.
“உன் அக்காவையும், தம்பியையும் என் வீட்டிற்கு அனுப்பி வைத்தது உன் கைங்கர்யம்தானே? என்ன திட்டம் போட்டிருக்கிறீர்கள்?” என்றான் அவளைக் கூர்ந்து கொண்டே.
“என்ன அவர்கள் உங்கள் வீட்டில் இருக்கிறார்களா?”
“என்னிடம் நடிக்க வேண்டாம்? என்ன திட்டம் என்று மட்டும் கூறு.”
“இல்லை சார். நீங்க சொல்லித்தான் அவர்கள் உங்கள் வீட்டில் இருக்கிறார்கள் என்றே எனக்குத் தெரியும்.”
“இப்போது உன்னைப் பார்க்க வந்தவள் என்ன கூறினாள்?”
“இல்லை. நான் அவர்களோடு பேசவில்லை.”
“என்ன பேசவில்லையா? என்னை நம்பச் சொல்றியா?”
“கண்டிப்பா இல்லை. எனக்காக எதையும் அவர்கள் செய்யுமளவிற்கு, நான் நல்லவளாக அவர்களிடம் நடந்து கொள்ளவில்லை. என்னுடைய அகம்பாவத்திற்கும், திமிருக்கும் ஆண்டவன் எனக்குத் தக்க தண்டனை கொடுத்துவிட்டான். அதை அமைதியாக ஏற்றுக் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.”
“அதை நம்ப முடிந்தால் எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.”
“நிச்சயமாய் நம்புங்கள். அவர்கள் ஏன் உங்கள் வீட்டில் இருக்கிறார்கள்?” என்றாள் புரியாமல்.
“ஏன் மனோவுக்கு ஆக்சிடென்ட் ஆனது உனக்குத் தெரியாதா?”
“என்னது மனோவுக்கு ஆக்சிடென்டா? இப்ப எப்படி இருக்கிறான்?” துடித்துப் போனாள்.
“திரும்பத் திரும்ப சொல்ல வைக்காதே. நடிக்காதே.”
“நீங்க என்னைப் பத்தி என்ன நினைச்சாலும் கவலையில்லை. மனோ இப்ப எப்படியிருக்கிறான்?”
“இப்ப பரவாயில்லை. அவனைக் கவனித்துக்கொள்ளத்தான் உன் அக்கா எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறாள்.”
“இத்தனை நாட்கள் எதற்காக அவள் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறாள் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நேத்துதான் அவள் உனக்காகத்தான் வந்திருக்கிறாள் என்று தெரிந்தது.”
“இல்லை. நாங்கள் எந்தத் திட்டமும் போடவில்லை. ஏன் மனோவின் மனைவி என்னவானாள்? தன் கணவனைக் கூட அவளால் பார்த்துக்கொள்ள முடியலையோ?” என்றாள் கோபமாக.
“அவர்களின் விவாகரத்து கிடைத்த பிறகுதான் அவனுக்கு ஆக்சிடென்ட் ஆனது. அது உனக்குத் தெரியாது. அப்படித்தானே?”
“என்ன விவாகரத்து ஆயிடுச்சா?” கவலைக் குரலில் கேட்டாள்.
“சரி. நான் உன்னை நம்பறேன். அதுக்கு நீ ஒன்னு செய்யனும்.”
“என்ன செய்யனும்?”
“நீ உடனே இந்த இடத்தைக் காலி பண்ணனும். நான் உனக்கு வேலை வாங்கித் தர்றேன். உன் அக்காவுக்குத் தெரியாமல் நீ அங்கே போயிடனும். அதன் பிறகு அவள் திட்டம் செல்லாது. அப்போது அவளாகவே எங்கள் வீட்டை விட்டுச் சென்றுவிடுவாள்.”
“சரி. செய்கிறேன். எப்போது கிளம்ப வேண்டும்?”
“எங்கே போகனும்னு கேட்கவேயில்லையே.”
“எங்கேயானாலும் சரிதான். நான் யாருக்கும் பாரமாக இருக்க வேண்டாம்னு ஏற்கனவே முடிவு பண்ணிட்டேன்.”
“சரி பார்க்கலாம். நான் உனக்கு போனில் தகவல் சொல்றேன்.” என்று கிளம்பிவிட்டான்.
சித்தரஞ்சன் கிளம்பிச் சென்ற பின்னரும், அவள் அவ்விடத்தை விட்டு நகரவில்லை. அவள் மனதில் பலவித எண்ணங்கள் குவிந்து போயிருந்தன.
சித்தரஞ்சனும், சந்தானமும் லலிதாவை மனநல மருத்துவமனையில் சேர்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.
சந்தானம் முகம் சோர்ந்திருந்தது.
கணவன் தன் மீது கொண்ட சந்தேகத்தால் அவள் ஏற்கனவே மனதளவில் தளர்ந்து போயிருந்தாள்.
அத்தோடு பிரசவ நேரத்தில் ஏற்பட்ட சிக்கல் வேறு.
அமைதியாக இருப்பவள் திடீரென்று ‘நான் சாகப்போறேன்.’ என்று கையில் கிடைத்ததை வைத்து தன்னைக் காயப்படுத்திக் கொண்டாள்.
“அப்படியே குணமாகலைன்னாலும், அவள் உயிரோடவாவது இருக்காளேன்னு சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான் மாப்பிள்ளை. அவள் குணமாகி வந்து தன்னோட வாழ்க்கையை நினைத்து வேதனைப்படறதுக்கு, இப்படியே இருந்துடலாம்.” என்றார் வேதனைக்குரலில்.
“காலம் எல்லாத்தையும் ஆத்தும் மாமா.”
“லலிதாவோட இந்த நிலைமைக்குக் காரணம் என்னுடைய பொறாமைக் குணமும், போட்டி உணர்வும்தான் மாப்பிள்ளை.”
“என்ன மாமா சொல்றீங்க?”
“ஆமாம் மாப்பிள்ளை. என்னோட பங்காளி ஒருத்தன். உங்கப்பா வகையிலும் உங்களுக்கு அவன் உறவு. அவன் தன் பொண்ணை உங்கள் வீட்டில் கட்டப் போவதாக பீற்றிக்கொண்டான். அவனுக்கு நீங்கள் இரண்டு பக்கமும் உறவு. அவனுக்குத்தான் உரிமை அதிகம் என்றான்.”
“அதனால் என்ன மாமா?”
“நம் தங்கை வீட்டில் அவன் எப்படி பெண்ணைக் கட்டிக்கொடுக்கலாம் என்ற பொறாமைதான் உடனே லலிதாவுக்குத் திருமணம் செய்யத் தூண்டியது.”
“சரி எல்லாம் முடிஞ்சுடுச்சே. இப்ப எதுக்குத் திடீர்னு இதை சொல்லறீங்க?”
“அவன் முதல்ல குறி வச்சது உங்க தம்பியை இல்லை மாப்பிள்ளை. உங்களைத்தான்.”
“நான்தான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னேனே.”
“அதனால்தான் அவன் இப்ப காயை நகர்த்தப் பார்க்கிறான். உங்க தம்பிக்கு விபத்து நடந்ததால் குழந்தை பிறக்க வாய்ப்பிருக்காது என்று என் மாமனைக் குழப்பிவிட்டு, அவர் மூலமாக உங்கள் திருமணத்தை நடத்திவிட திட்டம். எதுக்கும் கொஞ்சம் பார்த்து இருங்க. உண்மையான பிரியத்தில் நடக்கிற கல்யாணம்தான் நிலைக்கும்னு இப்ப காலம் கடந்துதான் எனக்குப் புத்தி வந்திருக்கு.” என்றவர் அமைதியானார்.
‘இது யாருடா இப்ப இந்த புது கேரக்டர்? இது என்ன ட்விஸ்ட்?’
அவன் கேள்விக்கு வீட்டிற்குச் சென்ற பிறகு அவனுக்குப் பதில் கிடைத்தது.
சந்தானத்தின் பங்காளி, தன் மனைவியுடன் வீட்டிற்கு வந்திருந்தார்.
“இப்படி சொல்லிட்டா எப்படிண்ணே? நம்ம குலம் விருத்தியாக வேண்டாமா?”
“சரிம்மா. நான் என் பிள்ளைக்கிட்ட கலந்து பேசிதான் முடிவு சொல்ல முடியும்.”
“சரிங்க மாமா. நீங்க கலந்து பேசிட்டு நல்ல பதிலா சொல்லுங்க. இப்ப நாங்க கிளம்பறோம்.” என்றவர்கள் அபர்ணாவை ஒரு மாதிரியாகப் பார்த்துக்கொண்டே சென்றனர்.
‘எங்கள் மகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் இடத்தில் இப்படி ஒரு அழகான பெண் நடமாடலாமா? முதலில் இவளை வீட்டை விட்டுத் துரத்த வேண்டும்.’ மனதிற்குள் நினைத்தவாறே சித்தரஞ்சனிடமும் விடைபெற்றுக் கிளம்பினர்.
“ரஞ்சன்.” என்று அழைத்த தந்தையிடம் வந்தான் சித்தரஞ்சன்.
“அப்பா. முதலில் நீங்க வந்த களைப்புத் தீர ஓய்வெடுங்க. எதுவா இருந்தாலும் அப்புறம் பார்த்துக்கலாம்.”
“ரஞ்சன் அவர் சொன்னதை நினைச்சா எனக்குக் கவலையாயிருக்குப்பா.”
“அவர் என்ன கடவுளாப்பா? அவர் சொன்ன மாதிரியே நடக்க? நீங்க கவலைப்படாதீங்க. முதல்ல போய் ரெஸ்ட் எடுங்க.”
மேலும் பேச வந்தவரை அவர்கள் அறையில் விட்டுவிட்டே வந்தான்.
“நீ என்ன லட்சணத்துல வீட்டைக் கவனிச்சுக்கறே? இப்படித்தான் களைத்துப் போய் வந்தவங்களை அவங்க பிடிச்சு வச்சுப் பேசுவாங்க. அவங்களுக்கு நீ விருந்துபச்சாரம் பண்ணுவே?”
“நான் இந்த வீட்டில் வேலைக்காரி சார். நான் என்ன செய்ய முடியும்னு நீங்க நினைக்கறீங்க?” என்றாள் அவளும் கோபத்துடன்.
“ப்ச். உன்கிட்ட மனுசன் பேசுவானா?” என்று எரிச்சலுடன் கத்திவிட்டுச் சென்றுவிட்டான்.
அறைக்குள் வந்தவன் சிறிது நேரம் யோசனையிலேயே நடை பயின்றான்.
“சரி. இதுக்கு மேல காலம் தாழ்த்தக் கூடாது. முயற்சி பண்ணி பாத்துட வேண்டியதுதான்.”
மனநல மருத்துவமனைக்கு அழைத்தவன் சரண்யாவிடம் பேச வேண்டும் என்றான்.
“உனக்கான வேலை தயாரா இருக்கு. நாளை அதிகாலையில் உனக்குக் கார் வரும். அதில் ஏறினால் நீ வேலை செய்யப் போற இடத்தில் விட்டுடுவாங்க.”
“ரொம்ப நன்றி சார்.”
“நன்றியை உன் செயலில் காட்டுப் பார்ப்போம். திரும்பவும் கேட்கிறேன். உண்மையாகத்தானே நீ வேலை கேட்டாய். இல்லை எனக்காக அப்போது நடித்தாயா?”
“அந்த சரண்யா எப்போதோ செத்துவிட்டாள். என் அம்மாவும், அப்பாவும் எரியறதைப் பார்த்த போதே என்னுள்ளே உள்ள கெட்ட குணம் அனைத்தும் எரிந்து போச்சு. நீங்க என்னை நம்பலாம். நான் உங்க தம்பியின் வாழ்க்கையில் இனி தலையிட மாட்டேன்.” என்று உறுதியளித்தாள்.
“குட்.” என்றவன் அழைப்பைத் துண்டித்தான்.
இரவு நேரத்தில் தன் தந்தையிடம் சென்றவன் அவர் மனம் ஆறுதல் அடையும்படி பேசினான்.
“என்னை மன்னிச்சிடுங்கப்பா. அப்ப சூழ்நிலைல அது மாதிரி நடந்துக்க வேண்டியதா போயிடுச்சு.”
“உன் கல்யாணத்தைப் பத்தி என்ன யோசிச்சேப்பா? இனி உன்னை விட்டுட்டு உன் தம்பிக்கு மட்டும் கல்யாணம் பண்ணற ஐடியா எனக்கு இல்லை. இப்பவாவது என் பேச்சைக் கேளு. இன்னிக்கு வந்திருந்தானே ஒருத்தன் உனக்குப் பொண்ணு கட்டப் பேசிக்கிட்டு. அவன் சொன்ன மாதிரி மனோவுக்கு ஏதாவது பிரச்சினையிருந்தால்…?” என்றார் நடுங்கும் குரலில்.
“அப்பா. அப்படி எல்லாம் நடக்காதுப்பா. நீங்க என்னை நம்ப வேண்டாம். சந்திரன் அங்கிள் உங்க நண்பர்தானேப்பா. அப்படி ஏதாவது இருந்திருந்தால் உங்களிடம் சொல்லாமல் இருப்பாரா?”
“அப்படியா சொல்கிறாய்?” என்றார் தவிப்புடன்.
“ஆமாப்பா. நீங்கள் நிம்மதியாக தூங்குங்கள்.”
அதன் பிறகு அவன் நேரே அபர்ணாவைத் தேடித்தான் வந்தான்.
அவள் முகம் சோர்ந்திருந்தது.
“நாளைக்குக் காலையில் உனக்கு முக்கியமான வேலை இருக்கு.”
அவள் என்ன என்று கேட்கவில்லை.
“என்ன வேலைன்னு நீ கேட்கமாட்டே. அவ்வளவு திமிர். நானே சொல்றேன். இன்னிக்கு என்னோட கல்யாணத்தைப் பத்தி என் மாமா பேசிட்டுப் போனாரே. அது தெரியும்ல. அத்தோட மனோவுக்கும் கல்யாணம் பண்ற முடிவுல அப்பா இருக்காங்க. பொண்ணு முடிவு பண்ணியாச்சு. நாளைக் காலையில் இந்த வீட்டு மருமகள் ஒருத்தி வரப்போகிறாள். அவளுக்கு ஆலம் சுத்தனும். தயாரா இரு.” என்றுவிட்டுச் சென்றான்.
அவள் உள்ளத்தில் உணர்வலைகள்.
காதல்வளரும் ……
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.