மனோரஞ்சன் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தான்.
இரண்டு நாட்களாகின்றன. இன்னும் கண் விழிக்கவில்லை.
உயிர் பிழைத்துவிடுவான் என்று மருத்துவர்கள் நம்பிக்கையாக எந்த வார்த்தைகளும் இதுவரை கூறவில்லை.
காப்பாற்ற போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.
வெளியில் இருந்த இருக்கையில் சோர்வாக அமர்ந்திருந்தார் தேவேந்திரன். மனோரஞ்சனின் தந்தை.
மகனின் விபத்துப் பற்றிக் கேள்விப்பட்ட உடன் அவரது மனைவி சகுந்தலா மயங்கி விழுந்திருந்தார்.
அவரையும் அங்கேயே சிகிச்சைக்கு சேர்த்திருந்தார்கள்.
அவர் கண் விழிக்கும் போதெல்லாம் மகனை நினைத்து அரற்றிக் கொண்டே இன்னும் தன்னுடைய நிலையை மோசமாக்கிக் கொள்ள, மருந்து கொடுத்து உறங்க வைத்திருக்கிறார்கள்.
தேவேந்திரனுக்கும் மகனது இந்த நிலையைக் கண்டு மிகவும் வேதனைதான்.
ஆனால் அவரால் மனைவியைப் போல் எதையும் வெளிக்காட்டிக் கொள்ள இயலவில்லை.
இப்போதென்று இல்லை. எப்போதுமே அவர் அப்படித்தான்.
அவர் மனதில் என்ன இருக்கிறது என்று காட்டிக் கொண்டதில்லை.
இப்போதும் அவர் மனம் அழுதுக் கொண்டிருக்கிறது. ஆனால் பார்ப்போருக்கு அவர் அமைதியாக, சாதாரணமாக அமர்ந்திருப்பது போன்றுதான் தெரியும்.
அறை வாசலிலேயே தவம் கிடக்கிறார். அவரது மூத்த மகன் சித்தரஞ்சன் கூட அவரை வீட்டிற்குச் சென்று ஓய்வெடுத்துக் கொண்டு வரச் சொன்னான். ஆனால் அவர் செல்லவில்லை.
மகன் கண் விழிக்காமல் அவர் எங்கும் அசைய விரும்பவில்லை.
சித்தரஞ்சன் தலைமை மருத்துவர் ஜெயச்சந்திரனை காணச் சென்றிருக்கிறான்.
மருத்துவரைக் காணச் சென்ற சித்தரஞ்சன் அவரருகில் வந்தான்.
“அப்பா இப்படியே இருந்தால் எப்படிப்பா? வாங்க போய் காஃபி சாப்பிட்டு வரலாம். இரண்டு நாளா ஒன்னுமே சாப்பிடாமல் இருந்தால் உங்களுக்கும் முடியாமல் வந்தால் நான் என்ன பண்ணுவேன்? அம்மாவும் ஒருபக்கம் படுத்திட்டாங்க.” கவலைக் குரலில் தந்தையை அழைத்தான்.
“அவர் ரவுண்ட்ஸ் போயிருக்கார்ப்பா. அவர் வருவதற்குள் நாம் ….”
அவன் பேசி முடிப்பதற்குள் அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஜெயச்சந்திரன் அங்கே விரைந்து வந்தார்.
“என்னப்பா ரஞ்சன் என்னைத் தேடி வந்தியாமே? ஏதாவது பிரச்சினையா?” பதட்டத்துடன் கேட்டார்.
“வேற என்ன அங்கிள்? மனோவிடம் எந்த முன்னேற்றமும் இல்லை. என்னாச்சு சொல்லுங்க? இங்கே பார்க்க முடியலைன்னா வேற எங்க போகலாம்னு சொல்லுங்க. அவனைக் காப்பாத்த என்ன வேண்டுமானாலும் செய்யறோம்.“
ஜெயச்சந்திரன் தேவேந்திரனைப் பார்த்தார். அவரும் மகனது கேள்வியைத் தன் கண்களில் தேக்கி வைத்து நண்பனைப் பார்த்தார்.
“தேவா. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. நானும் எல்லாம் செஞ்சுப் பார்த்துட்டேன். ஆனால் மனோகிட்ட எந்த முன்னேற்றமும் இல்லை. மாறாக நிலைமை மோசமாகிக்கிட்டேதான் போகுது.”
“அதனால்தான் அங்கிள் நான் வேற எங்காவது… ” என்று அவன் முடிப்பதற்குள் ஜெயச்சந்திரன் பேச ஆரம்பித்தார்.
“எங்க கொண்டு போனாலும் மனோவோட நிலைமை இப்படித்தான் இருக்கும்.”
“ஏன் அங்கிள் இப்படி சொல்லறீங்க?” புரியாமல் அவரைப் பார்த்தான் சித்தரஞ்சன்.
“ஒரு நோயாளிக்கு வாழ வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்தானே மருத்துவ சிகிச்சை பலனளிக்கும். அவனுடைய ஒத்துழைப்பு எங்களுக்குக் கிடைக்கலை.”
“உயிர் பிழைக்க வேண்டும், வாழ வேண்டும் என்ற துடிப்பு அவனுக்குள் இருந்தால்தான் சிகிச்சையை அவன் உடல் ஏற்றுக்கொள்ளும். அவனுக்கோ வாழ வேண்டும் என்ற ஆசை இல்லை.”
“அவனது உயிரை நாங்கள் இப்போது பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறோம். அவன் எனக்கும் ஒரு மகன் போலத்தான்.”
“அவனுக்கு சிகிச்சை அளிக்க என்னால் முடியவில்லை என்றால் விபத்து நடந்த அன்றே அவனை நானே வேற பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்பேன். அவன் உயிரோடு நான் விளையாடுவேனா?”
வேதனையான குரலில் ஜெயச்சந்திரன் பேசப்பேச தேவேந்திரன் அப்படியே இருக்கையில் சரிந்துவிட்டார்.
“தேவா.” கவலையுடன் நண்பனின் அருகில் வந்தார் ஜெயச்சந்திரன்.
கண்கள் கலங்க அமர்ந்திருந்த நண்பனை எப்படித் தேற்றுவது என்று அந்த மருத்துவருக்குப் புரியவில்லை.
“கடவுளை வேண்டிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இனி அவர்தான் ஏதாவது செய்ய வேண்டும்.” என்று கடைசி நம்பிக்கையாய் கூறிவிட்டு அவசர சிகிச்சைப் பிரிவின் உள்ளே சென்றார்.
அங்கே மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் மூச்சு விட்டுக் கொண்டிருந்தான் மனோரஞ்சன்.
ஒரு மருத்துவர் என்பதையும் தாண்டி தந்தையின் வாஞ்சையுடன் அவனை கவலையுடன் பார்த்தார் ஜெயச்சந்திரன்.
தற்போதைய அவனுடைய உடல்நிலை எப்படியிருக்கிறது என்று உபகரணங்களின் வாயிலாகப் பார்த்துவிட்டு பெருமூச்சுடன் வெளியேறினார்.
வெளியில் நின்ற இருவரையும் கவலை தோய்ந்த முகத்துடன் பார்த்தவர், மேலே கையை உயர்த்திக் காட்டிவிட்டுச் சென்றுவிட்டார்.
அவர் வேறு என்ன செய்ய முடியும்? அவரை சந்திக்க இன்னும் பல நோயாளிகள் காத்துக்கொண்டிருக்கும் போது நண்பனின் அருகில் அமர்ந்து அவர் ஆறுதல் வார்த்தைகள் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அதனால் எந்தப் பயனும் இல்லை.
மருத்துவருக்கெல்லாம் பெரிய மருத்துவரான கடவுள்தான் இனி மனது வைக்க வேண்டும்.
ஏதாவது அதிசயம் நடந்து அவன் உயிர் பிழைத்தால்தான் உண்டு.
மனோரஞ்சனின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று அவருக்கு நன்றாகத் தெரியும்.
மனோரஞ்சனும் அவனது தந்தையைப் போன்றேதான். அமைதியானவன். அவன் மனதிற்குள் உள்ளதை மற்றவர்களிடம் பகிர மாட்டான்.
அவரை வேறு சிந்திக்க விடாமல் அவரது பணி அழைக்க அதில் ஆழ்ந்துபோனார்.
“என்னப்பா சந்திரன் இப்படி சொல்லிவிட்டுப்போறான்?” கவலையுடன் தந்தை கேட்ட கேள்விக்கு சித்தரஞ்சனால் பதில் சொல்ல முடியவில்லை.
அப்படியே இடிந்து போய் அவனும் ஒரு நாற்காலியில் அமர்ந்துவிட்டான்.
“உயிர் பிழைக்க வேண்டும், வாழ வேண்டும் என்ற துடிப்பு அவனுக்குள் இருந்தால்தான் சிகிச்சையை அவன் உடல் ஏற்றுக்கொள்ளும். அவனுக்கோ வாழ வேண்டும் என்ற ஆசை இல்லை.”
மருத்துவரின் குரல் அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.
‘அவனுக்கு அந்த ஆசை வராமல் போனதற்கு நான்தான் காரணம்.’ அவன் மனசாட்சி அவனை இடித்துரைத்தது.
‘நான் அவனுடைய வாழ்க்கையில் விளையாடிவிட்டேன். அவனுக்கு நல்லது செய்வதாக நினைத்துக்கொண்டு நான் செய்த செயல் அவனுக்கு வாழ்க்கையையே வெறுக்கடிக்க வைத்துவிட்டது.’
தந்தையைப் பார்த்தான். அவருக்கு நடந்தது ஒன்றும் தெரியாது. எல்லாம் அவனும், அவனுடைய தாயும் தான் செய்தனர்.
இப்போதும் நடந்தது ஒரு விபத்து என்றுதான் தேவேந்திரன் நினைத்துக் கொண்டிருக்கிறார்.
அவனும் அதை மாற்ற முயலவில்லை.
தம்பி தற்கொலை முயற்சி செய்திருக்கிறான் என்று தெரிந்தால் இன்னும் உடைந்து போவார்.
விபத்து நடந்த இடத்தில் இருந்த ஒருவர் கூறித்தான் அவனுக்கு நடந்தது எதிர்பாராமல் நடந்த விபத்து இல்லை.
அவனே தன்னை விபத்துக்குள்ளாக்கிக் கொண்டான் என்று தெரிய வந்தது.
அதைக் கேள்விப்பட்டதில் இருந்தே அவனுடைய மனசாட்சி அவனை நிம்மதியாக இருக்க விடவில்லை.
மனம் தாங்காமல் தம்பியைக் காணச் சென்றான். மனோரஞ்சனை அப்படிக் காண அவனுக்கு சகிக்கவில்லை.
‘டேய் மனோ. என்னை மன்னிச்சிடுடா. நான் உனக்கு தீங்கு நினைக்கவில்லை. நீ உலகம் அறியாதவன், நீ எதிலும் ஏமாந்து விடக்கூடாது என்று நான் எடுத்த முடிவு உன்னை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது?’
‘நீ உன் காதலில் இவ்வளவு தீவிரமாக இருந்திருப்பாய் என்று நான் நினைக்கவில்லை.’
‘வயதுக் கோளாறு என்றுதான் நினைத்திருந்தேன். தயவு செய்து எழுந்து வாடா.’
‘நீ ஆசைப்பட்ட வாழ்க்கையையே உனக்கு அமைத்துத் தர்றேன். என்னை மன்னிச்சிடுடா.’ மனதிற்குள்ளேயே அரற்றினான்.
அதற்குமேல் அவனால் அங்கே இருக்க முடியவில்லை. வெளியேறினான்.
தந்தையின் மறுபக்கம் அமர்ந்து தம்பி எப்போது கண் விழிப்பான் என்று தவமிருக்க ஆரம்பித்தான்.
அப்போது தயக்கத்துடன் அங்கே வந்தார் சந்தானம். சகுந்தலாவின் தம்பி. சித்தரஞ்சன், மனோரஞ்சனின் தாய் மாமா. அத்துடன் லலிதாவின் தந்தை.
மாமனார் என்ற உறவில் வந்தால் அவரை விரட்டலாம்.
தாய் மாமா என்ற உறவுடன் வந்தவரை தேவேந்திரனே ஒன்றும் சொல்லாத போது அவன் என்ன சொல்ல முடியும்?
அவரோ தன் மகள் லலிதாவுடனான உறவை முறித்திருந்தார்.
அவள் என்றைக்கு மனோரஞ்சனை விட்டுவிட்டுச் சென்றாளோ அன்றே அவர் தன் வீட்டிற்குள் அவளை விடவில்லை.
தான் வீட்டிற்குள் நுழைய விடவில்லை என்றால் வேறு வழியில்லாமல் அவள் தன் புகுந்த வீட்டிற்குத்தானே செல்ல வேண்டும்.
அதன் பிறகு மகள் மனம் திருந்தி மனோரஞ்சனுடன் வாழ ஆரம்பித்துவிடுவாள் என்ற அவர் கணக்கு பொய்த்துப் போனது.
அவளோ தன் காதலனிடம் சென்றுவிட்டாள். இதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. விவகாரத்திற்கு விண்ணப்பம் கொடுத்த கையோடு காதலனோடு வாழவும் ஆரம்பித்துவிட்டாள்.
பெயருக்கு ஏதோ கல்யாணம் நடந்தாலும் அது சட்டப்படி செல்லாதே. அதன் பிறகு மனோரஞ்சனிடம் இருந்து முறைப்படி விவாகரத்தும் பெற்றுவிட்டாள்.
இப்போது அவள் வேறொருவனின் மனைவி.
இனி நடந்ததை நினைத்து யாரிடமும் சண்டை போட்டு எதையும் மாற்ற முடியாது. இனி என்ன நடக்கப் போகிறது என்பதுதான் முக்கியம்.
அவனுக்கு சந்தானத்திடம் பேச விருப்பமில்லை. என்ன பேசுவான்? தம்பியின் வாழ்க்கையில் நடந்ததற்கு அவன் ஒரு காரணம் என்றால் இன்னொரு முக்கியமான காரணம் சந்தானம்தான்.
அவருக்கு மனோரஞ்சனின் காதல் பற்றி தெரியும்.
அவன் இன்னொரு பெண்ணை விரும்பினான் என்று திருமணத்திற்கு முன்பே அவரிடம் கூறிவிட்டான் சித்தரஞ்சன்.
ஆனால் பெண் யார் என்று கூறவில்லை. அவளால் இனி எந்தப் பிரச்சினையும் வராது என்று மட்டும் உத்தரவாதம் கொடுத்தான்.
உறவுக்குள் உண்மையை மறைத்துத் திருமணம் செய்து அதனால் பின்னால் பிரச்சினை வந்துவிடக்கூடாது என்று அவன் நினைத்து உண்மையை எல்லாம் கூறியிருந்தான்.
எல்லாம் தெரிந்திருந்தும் தன்னுடைய மகளையே அவனுக்கு கட்டி வைக்க முன் வந்தபோது அவருடைய தமக்கை தம்பியின் பெரிய மனது கண்டு பெருமிதம் கொண்டார்.
ஆனால் சந்தானமோ லலிதாவின் காதல் பற்றி அறிந்தும், அதைப் பற்றி அவர்களிடம் கூறாமல் மறைத்து, லலிதாவை என்னவோ கூறி மிரட்டி அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டார்.
இருவரின் மனதிலும் வேறொருவர் மீது காதல். இதில் மனோரஞ்சனாவது அமைதியாக தனக்கு வாய்த்த வாழ்வை ஏற்றுக்கொள்ள முயற்சி செய்தான்.
அவன் என்ன நினைத்தானோ? லலிதாவோடு சுமூகமாகவே நடக்க முயற்சி செய்தான். ஆனால் லலிதா அத்தனை ஆர்ப்பாட்டம் செய்துவிட்டாள்.
தன் காதலனைப் பிரியக் காரணமாக இருந்த மனோரஞ்சனுடனான திருமணம் அவளுக்கு மனோரஞ்சனின் மீது வெறுப்பை விதைக்க அதன் பொருட்டு அவள் மனோரஞ்சனுக்கு நரகத்தைக் காட்டினாள்.
அவன் அத்தனையையும் பொறுத்துக்கொண்டான்.
“பார்த்தீர்களா நீங்கள் அமைத்துக் கொடுத்த வாழ்க்கையை.” என்று ஒருநாள் கூட அவன் அவர்களை குற்றம் சாட்டவில்லை. பொறுத்துப் போனான்.
ஆனால் லலிதா எப்படியெல்லாம் அவனைத் துன்புறுத்த முடியுமோ அப்படியெல்லாம் செய்துவிட்டு இப்போது அவனுடைய வாழ்க்கையையும் விட்டு நிரந்தரமாகப் போய்விட்டாள்.
வேறொரு பெண்ணைக் கட்டியிருந்தால் எப்படியாவது தம்பியின் வாழ்க்கை சீர்பட்டிருக்கும் என்பதுதான் இப்போது வரைக்கும் சித்தரஞ்சனின் எண்ணம்.
தன் தம்பி சுயநலத்தோடு தன்னிடம் உண்மையை மறைத்துவிட்டான் என்று சகுந்தலாவிற்கு சந்தானத்தின் மீது கோபம்.
இது எதுவும் அறியாத அப்பாவியான தேவேந்திரன் மட்டுமே சந்தானத்திடம் முகம் கொடுத்துப் பேசுவார்.
சந்தானத்தை திரும்பியும் பாராமல் அங்கிருந்து அகன்றான்.
அவனுக்கு தான் செய்த தவறை சீர் செய்ய வேண்டும். தம்பி பிழைத்து எழ வேண்டும்.
அவன் ஆசைப்பட்ட வாழ்க்கையை அவன் வாழ வேண்டும். இப்போதைக்கு அந்த எண்ணம் மட்டும்தான் அவனுக்கு.
மருத்துவமனையை விட்டு வெளியில் வந்தவன் தன் அலைபேசியை கையில் எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்து சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு வைத்தான்.
இருந்தும் அவனுக்கு நிம்மதி இல்லை. மறுமுனையில் இருந்து எப்போது அழைப்பு வரும் என்ற எதிர்பார்ப்போடு மருத்துவமனையின் வாசலிலேயே நடைபோட்டான்.
சிறிது நேரத்திற்கெல்லாம் அவன் எதிர்பார்த்த அழைப்பு வந்தது.
“சார். நீங்கள் சொன்ன அட்ரஸில் போய் பார்த்தேன். அங்கே நீங்க சொன்ன பெயரில் யாரும் இல்லை. இரண்டு வருடத்திற்கு முன்பே அவங்க வீட்டை காலி செய்து போய்ட்டாங்களாம்.” என்ற பதில் வந்தது.
“அப்படியா?” என்றவன் மேலும் தகவல்களைக் கூறி விசாரிக்க சொன்னான்.
“எனக்கு உடனடியாகப் பதில் வேண்டும்.” என்று உத்தரவிட்டான்.
“சரிங்க சார்.” என்று மறுமுனையில் இருந்து பவ்யமாகப் பதில் வந்தது.
அப்போது அங்கே சமையல்காரர் சண்முகம் ஆட்டோவில் வந்து இறங்கினார். கையில் பாத்திரங்கள் அடங்கிய பை இருந்தது.
“தம்பி. மனோ தம்பிக்கு இப்ப எப்படியிருக்கு?” கவலை தோய்ந்த குரலில் கேட்டார்.
“என்ன சொல்றதுன்னு தெரியலை அங்கிள். அப்படியே தான் இருக்கு நிலைமை?”
“கடவுள் கைவிட மாட்டார் தம்பி. மனோதம்பி சீக்கிரம் கண் விழிச்சிடுவார். நீங்க வாங்க சாப்பிடலாம். அய்யாவும் இரண்டு நாளா எதுவுமே சாப்பிடலை.”
இரண்டு நாட்களாக அவர் சமைத்து எடுத்து வரத்தான் செய்தார். யாருக்கும் சாப்பிட மனமில்லை.
சகுந்தலாவோ சாப்பிடும் நிலையில் இல்லை. அவருக்கு குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருக்கிறது.
தன் தந்தையின் உடல்நிலையை மனதில் கொண்டு சித்தரஞ்சன் சண்முகத்துடன் மருத்துவமனையின் உள் நுழைந்தான்.
சண்முகம் கண்ணாடி வழியே மனோரஞ்சனை பார்த்துக் கண்கள் கலங்க திரும்பினார்.
‘யாரையும் அதிர்ந்து பேசாத பிள்ளை. அதற்குப் போய் இப்படி ஒரு நிலைமையா?’
“அப்பா. சண்முகம் அங்கிள் சாப்பாடு கொண்டு வந்திருக்கார். கொஞ்சமாக சாப்பிடுங்கள்.”
“வேண்டாம்ப்பா.”
“அய்யா. இன்னும் எத்தனை நாள்தான் இப்படியே இருப்பீங்க? அம்மா ஒரு பக்கம் படுத்துட்டாங்க. நீங்களும் இப்படியிருந்தா நம்ம ரஞ்சன் தம்பி நிலைமையை நினைச்சுப் பாருங்க. உங்களோடு சேர்ந்து அவரும் சாப்பிடாமல் இருக்காரு. கொஞ்சமாவது சாப்பிடுங்கய்யா.” கெஞ்சும் குரலில் கூறினார்.
அப்போது அங்கே வந்த ஜெயச்சந்திரன், “சண்முகம். நீ என்னோட ஓய்வறைக்கு சாப்பாடை எடுத்துட்டுப்போ. நாங்க வர்றோம்.” என்றார்.
“சரிங்க டாக்டரய்யா.”
சண்முகம் ஜெயச்சந்திரனின் ஓய்வறைக்கு உணவுப் பாத்திரங்களுடன் சென்றார்.
இரண்டு நாட்களாக அவர் சமைத்துக் கொண்டு வருவதை அப்பா, மகன் இருவரும் சாப்பிடுவதில்லை. திருப்பி எடுத்துக் கொண்டுதான் செல்கிறார்.
ஜெயச்சந்திரனும், சித்தரஞ்சனும் தேவேந்திரனை வற்புறுத்தி சாப்பிட அழைத்து வந்தனர்.
“தேவா. உன்னால் எத்தனை நாட்கள் ஆனாலும் பசி தாங்க முடியும். ஆனால் என்னால் முடியாதப்பா. நான் படுத்துக் கொண்டால் என்னுடைய நோயாளிகளை யார் பார்ப்பது?” என்று சோகமான குரலில் ஜெயச்சந்திரன் கூறியதும் தேவேந்திரன் பதறிப்போனார்.
நண்பன் சிறு வயதில் இருந்தே பசி தாங்க மாட்டான் என்று அவருக்கு நன்றாகத் தெரியும்.
“டேய் உனக்கு என்ன பைத்தியமாடா? நீ ஏன் பட்டினி கிடக்கிறே?” கோபமுடன் கேட்டார்.
“ஏன்னா எனக்கும் மனோ ஒரு பையன் போலத்தான். அதோடு நீ சாப்பிடாமல் பட்டினி கிடக்கிறப்போ என்னால் எப்படி சாப்பிட முடியும். அதற்காக உன்னை மாதிரி என்னால் கிடக்க முடியாதப்பா. அப்பப்ப டீ, காஃபின்னு வயிற்றை நிரப்பிக் கொண்டேன். இல்லைன்னா என்னோட மருத்துவமனையில் நானே ஒரு நோயாளியா படுத்திருப்பேன்.”
சண்முகம் சாப்பாடை எடுத்து வைத்தார். ஒரு தம்ளரில் வாளியில் இருந்து கஞ்சியை ஊற்றினார்.
“கஞ்சியா?” முகம் சுளித்தார் ஜெயச்சந்திரன்.
“உங்களுக்கு இட்லி கொண்டு வந்திருக்கேன் டாக்டரய்யா. இது எங்க அய்யாவுக்கு. அவங்க இரண்டு நாளா எதுவுமே சாப்பிடாமல் இருக்காங்க. இப்படி கஞ்சியா கொடுத்தால் சிரமமா இருக்காதுன்னு என்னோட மனைவி வள்ளிதான் சொல்லுச்சு. அதனால் கஞ்சியா கொண்டு வந்தேன்.”
சண்முகம் பேச்சில் அவர் தன் முதலாளியின் மீது வைத்திருந்த பக்தியும், பாசமும் தெரிந்தது ஜெயச்சந்திரனுக்கு.
எப்போதுமே சண்முகத்தின் இத்தகைய குணத்தைக் கண்டு அவர் வியக்காமல் இருந்ததில்லை.
தன் முதலாளியை கட்டாயப்படுத்தி கஞ்சியைக் குடிக்க வைத்தார்.
அவர்கள் உணவை சாப்பிட்டுக்கொள்வதாக கூறி அவரை வீட்டிற்கு செல்லச் சொன்னான் சித்தரஞ்சன்.
மீண்டும் ஒருமுறை மனோரஞ்சனை கண்ணாடி வழியாகப் பார்த்துவிட்டே சென்றார் சண்முகம்.
போவதற்கு முன்பு, “அய்யா. ஃப்ளாஸ்க்கில் பால் காய்ச்சி எடுத்து வந்திருக்கேன். சர்க்கரையை தனியா எடுத்து வந்திருக்கேன். மறக்காமல் பால் சாப்பிடுங்க.” என்று கூறிவிட்டே சென்றார்.
ஜெயச்சந்திரனும் இரண்டு நாட்களாக மருத்துவமனையிலேயே தங்கிவிட்டார்.
எந்நேரமும் மனோரஞ்சனின் நிலைமையில் முன்னேற்றமோ, பின்னேற்றமோ எது வேண்டுமானாலும் வரலாம். அந்த நேரத்தில் தான் அங்கிருப்பது முக்கியம் என்று அவர் வீட்டிற்குச் செல்லவில்லை.
அந்தளவிற்கு அவர் தேவேந்திரனின் குடும்பத்திற்கு கடமைப்பட்டிருக்கிறார்.
அதற்காக மட்டுமல்லாது, தேவேந்திரன் அவர் மீது காட்டும் அன்பிற்கு ஈடாக அவர் எதைத் தந்துவிட முடியும்.
இப்போது அவரது மகனின் உயிரைத் திருப்பித் தந்துவிட போராடிக் கொண்டிருக்கிறார்.
அவரே பாலுடன் சர்க்கரையைக் கலந்து தேவேந்திரனிடம் கொடுத்து கட்டாயப்படுத்திக் குடிக்க வைத்தார்.
“தேவா. நீ இந்தக் கட்டிலில் படுத்துக்கோப்பா.” என்று தான் ஓய்வெடுக்க அந்த அறையில் போட்டிருந்த கட்டிலைக் காட்டினார். இரண்டு நாட்களாக தேவேந்திரன் உறங்கவில்லை.
“இல்லைப்பா. வேண்டாம்.” என்று மகனைக் காண எழுந்தார் தேவேந்திரன்.
மகனைக் காணக் காண அவரது கவலை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.
இதைக் கண்ட ஜெயச்சந்திரனுக்கு தன் நண்பனின் உடல்நிலையைக் கண்டு கவலை பிறந்தது.
“சரிப்பா. தூங்க வேண்டாம். கொஞ்ச நேரம் கட்டிலில் உட்காரு. நாங்களும் வந்துடுறோம். சேர்ந்தே போகலாம்.” என்று அவரை ஒத்தே பேசினார்.
அதனால் தேவேந்திரன் அந்தக் கட்டிலில் ஒரு ஓரத்தில் அமர்ந்தார்.
“இருக்கட்டும்ப்பா. நான் சுத்தம் செய்ய ஆளை வரச் சொல்றேன்.” என்றவர் அழைப்பு மணியை அழுத்தினார்.
சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு பணியாள் வர சுத்தம் செய்யச் சொல்லி பணித்தார். அவளும் அந்தப் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு, அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு சென்றாள்.
என்ன பேசுவதென்று தெரியாமல் சிறிது நேரம் அவர்கள் அமர்ந்திருந்தனர்.
கட்டிலில் அமர்ந்திருந்த தேவேந்திரன் தடுமாறி கட்டிலில் இருந்து விழப்போக அதை கவனித்த சித்தரஞ்சன் அவரைத் தாங்கிப் பிடித்தான்.