அன்று சரண்யாவின் பெற்றோருடன் பேசும்போது வந்த அலைபேசி அழைப்பு அபர்ணாவுடையதாகத்தான் இருக்க வேண்டும்.
“சித்தி. சித்தி.. லைன்ல இருக்கீங்களா?” என்ற பெண்ணின் குரலைக் கேட்டுவிட்டு, பேசும்போது இடைஞ்சல் எதற்கு என்று அந்த அழைப்பைத் துண்டிக்க வைத்தான்.
அது அபர்ணாவுடையது என்று இப்போது புரிகிறது.
ஏனோ மீண்டும் வாய் விட்டு சிரிக்க வேண்டும் போல் இருந்தது. ஏனென்று அவனுக்குப் புரியவில்லை.
“இன்னிக்கு கிருத்திகையும் அதுவுமா ஏன் மீன் வறுத்துத் தொலைஞ்சே?” என்று எரிச்சலாகக் கத்தினார் சகுந்தலா.
‘சரண்யாவைப் பார்க்க எப்போது போகலாம்? என்ன சொல்லிவிட்டு வெளியில் செல்வது?’ என்ற யோசனையில் இருந்த அபர்ணாவுக்கு அவர் எதற்காக கத்துகிறார் என்று புரியவில்லை.
“என்ன மரம் மாதிரி நிற்கிறே?” என்று அவள் பதில் சொல்லாமல் நிற்பதற்கும் சேர்த்துத் திட்டினார் சகுந்தலா.
“அம்மா. அது மீன் இல்லம்மா. வாழைக்காய். மீன் மாதிரி செய்திருக்காங்க.” என்றான் மனோரஞ்சன்.
இப்போதெல்லாம் உணவு நேரத்தில் அவன் சாப்பாட்டு மேசைக்கே வந்துவிடுகிறான்.
சகுந்தலாவின் முகம் சொத்தென்றானது.
ஏதாவது குறை கூறலாம் என்றால் அதற்கு அபர்ணா இடம் கொடுப்பதே கிடையாது.
“சகுந்தலா. நாளைக்கு ஊரில் ஒரு முக்கியமான கல்யாணம் இருக்கு. போகனும்னு சொன்னேனே. ஞாபகம் இருக்கா?”
“இருக்குங்க.”
“நாளைக்கு முடியலேன்னு சாக்கெல்லாம் சொல்லக்கூடாது. காலையில் சீக்கிரமாகவே கிளம்பியாகனும்.”
“சரிங்க.”
அவர்கள் சாப்பிட்டு முடித்ததும், சாப்பாட்டு மேசையை சுத்தம் செய்துவிட்டு, நேரே தேவேந்திரனிடம் வந்தாள்.
“சார். நான் நாளைக்கு முக்கியமா ஒரு இடத்துக்குப் போகனும். காலையில் போயிட்டு சீக்கிரமாவே வந்துடுவேன்.” என்றாள்.
“சரிம்மா. எப்படிப் போவே?”
“கிருஷ்ணா சார் வண்டி ஏற்பாடு பண்றேன்னு சொன்னார் சார். ரொம்ப நாளா போகனும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்.”
“சரிம்மா. அதுக்கு ஏன் இப்படி தயங்கறே? பத்திரமா போயிட்டு வா.” என்றார்.
“அப்பா. சொல்ல மறந்துட்டேன். மாமா லலிதாவை ஹாஸ்பிட்டலில் சேர்க்கனும்னு சொல்லிக்கிட்டிருந்தார். நானும் நாளைக்கு வெளியில் கிளம்பறேன்.” என்றான் சித்தரஞ்சன்.
“அப்ப மதுவும், நானும் மட்டும்தான் வீட்டில் இருப்போமா?”
காலை உணவிற்குப் பின்னர் சித்தரஞ்சன் அபர்ணாவை அழைத்தான்.
“சொல்லுங்க சார்.” என்று வந்து நின்றாள்.
“என்ன நான் உனக்கு சம்பளம் தரலைன்னு சொல்லிக்கிட்டு திரியறியா?” என்றான்.
அன்று கிருஷ்ணாவிடம் பேசியதன் எதிரொலி என்று அவளுக்குப் புரிந்தது.
“இன்னும் ஏன் பணத்தை எடுக்காமல் வச்சிருக்கே?” என்றான் யோசனையாய்.
அவள் இங்கே வந்த ஒரு மாதத்தில், அவன் பெயரில் ஒரு வங்கிக்கணக்கை ஆரம்பித்து, அதற்கு ஏடிஎம் கார்டு வாங்கியவன், அதை மட்டும் அவளிடம் கொடுத்தான்.
முதலில் அவளுக்குப் புரியவில்லை.
“உன் சம்பளப்பணத்தை பேங்கில் போட்டிருக்கிறேன். அக்கௌண்ட் என் பெயரில்தான் இருக்கு. இந்தா ஏடிஎம் கார்டு. வேணுங்கிறப்போ பணம் எடுத்துக்கோ.”
அவள் புரியாமல் பார்த்தாள்.
“என்ன?”
“எல்லோரும் யாருக்கு சம்பளம் கொடுக்கிறாங்களோ அவங்க பெயரில்தான் அக்கௌண்ட் ஓப்பன் செய்வாங்க.”
“நான் கொஞ்சம் வித்தியாசமானவன். என் பெயரில்தான் நான் அக்கெளண்ட் ஓப்பன் செய்வேன். உனக்கு இப்ப என்ன பிரச்சினை? அக்கௌண்ட் யார் பேர்ல இருந்தால் என்ன? அதை உன்னால் எடுக்க முடிஞ்சா அது போதும்ல.” என்றிருந்தான்.
இது நாள் வரைக்கும் அவள் அதில் இருந்து ஒரு ரூபாய் கூட எடுக்கவில்லை.
“நான் கேட்டால் பதில் சொல்லனும்.” என்றான் அழுத்தமாய்.
“எனக்கு என்ன செலவு சார்? எல்லாத்தையும் நீங்களே வாங்கிக் கொடுத்துடறீங்க? வேற எங்கும் போக வேண்டிய வேலையும் இல்லை. அதனால் செலவு இல்லை.” என்றாள் மனதார.
அவன் அவளுக்குத் தேவையானது எல்லாமே தங்கள் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து கொண்டு வந்து கொடுத்துவிடுகிறான்.
மதுவுக்கு தின்பண்டங்களும் அவனே வாங்கிவிடுகிறான். அதன் பிறகு அவளுக்கு என்ன செலவு?
“இன்னிக்கு எங்கேயோ போறேன்னு சொன்னியே? அதற்கு வேண்டாமா?”
“வேண்டாம் சார். என்கிட்ட பணம் இருக்கு. நான் வேணும்கிறப்ப உங்ககிட்ட வாங்கிக்கிறேன்.” என்றாள்.
அதன் பிறகு அவன் கிளம்பிவிட்டான்.
மதிய உணவை சமைத்தவள் தங்களுக்கும் எடுத்துக்கொண்டாள்.
“மனோ. டைனிங் டேபிளில் சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன். நேரத்துக்கு சாப்பிட்டுவிடு. நான் சீக்கிரம் வந்துடுவேன்.”
“எப்படி போறீங்க அண்ணி?”
“கிருஷ்ணா கார் அரேஞ்ச் பண்ணியிருக்கார்.”
சொல்லிவிட்டு விடைபெற்றனர் அவர்கள் இருவரும்.
சரண்யாவை நேரில் பார்த்த அபர்ணாவிற்கு பெருத்த ஏமாற்றம்தான்.
அவளை சரண்யா நேரில் பார்த்தது இல்லை.
ஆனால் மதன்ராஜை பார்த்தும் அவளிடம் எந்த சலனமும் இல்லை.
அவளிடம் பேசிப்பார்த்துப் பழைய நினைவுகளை கொண்டு வர முயன்றாள்.
ஆனால் சரண்யாவிடம் எந்த மாற்றமும் இல்லை.
அவள் எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
வருத்தமுடன் அங்கிருந்த மருத்துவரிடம் பேசினாள்.
“சில நேரம் கொஞ்சம் குணமாகி வருகிற மாதிரி தெரியுது. நீங்க கவலைப்படாதீங்க. சீக்கிரமே நல்ல ரிசல்ட் தெரியும்.” என்றார் அந்த மருத்துவர்.
அதற்கு மேல் அங்கிருந்து என்ன செய்ய என்று கிளம்பிவிட்டாள்.
அவள் சென்றுவிட்டாள் என்று தெரிந்த பிறகு சாதாரணமாக இருக்க ஆரம்பித்தாள் சரண்யா.
அவள் அபர்ணாவை நேரில் கண்டதில்லை.
ஆனால் அவள் மீது எப்போதும் பொறாமை உணர்வு உண்டாகும்.
அவளைப் பற்றிப் பேசும் குமரன், கலைவாணியின் முகத்தில் தெரிந்த அன்பை அவள் வெறுத்தாள்.
சரண்யாவின் தாய், குமரனின் மனைவி திருமணம் ஆகும்போதே அவனைப் பிடிக்காமல்தான் திருமணம் செய்து கொண்டாள்.
நோஞ்சானாக இருக்கும் அவனைப் பார்க்கவே பிடிக்கவில்லை அவளுக்கு.
அவள் மற்றவர்களை எடுத்தெறியும் குணம் கொண்டவள். பயங்கர திமிர் பிடித்தவள்.
மகளின் குணம் தெரிந்த அவள் அன்னை, தன் தம்பிக்கே மகளை மணமுடித்துவிட்டாள்.
அதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு.
சொத்து வெளியில் போய்விடக்கூடாது என்ற எண்ணம்தான்.
திருமணம் ஆன நாளில் இருந்தே அவள் குமரனை நிம்மதியாக இருக்க விடவில்லை.
தேவை இல்லாத மன அழுத்தம், சாப்பாட்டில் கவனமின்மை இதெல்லாம் சேர்ந்து, முதல் பிரசவத்திலேயே சரண்யாவைப் பெற்றுப் போட்டுவிட்டு அவள் போய் சேர்ந்துவிட்டாள்.
அதன் பிறகு சரண்யாவின் தாய் வழிப்பாட்டி அவளை வளர்த்தார். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது.
குமரன் வாழ்க்கையை வெறுத்து நடமாடிக்கொண்டிருந்தான்.
அந்த சமயத்தில்தான் கலைவாணியின் அறிமுகம் அவனுக்குக் கிடைத்தது.
அவளின் அன்பான அணுகுமுறையில் அவளை நேசிக்க ஆரம்பித்தான்.
அவளைத் திருமணமும் செய்து கொண்டான்.
யாரோ ஒருத்தியை தன் மகள் இடத்தில் வைத்துப் பார்க்க சரண்யாவின் தாய் வழிப்பாட்டிக்கு மனம் வரவில்லை.
மகன் ஊர் பேர் தெரியாத ஒருத்தியை கூட்டிக்கொண்டு வந்துவிட்டான் என்று குமரனின் தாயாருக்கும் மகன் மீது கோபம்.
அவர்களை ஒதுக்கி வைத்தனர்.
தன் மகளை தானே வளர்த்துக்கொள்வதாக சரண்யாவை தூக்கி வந்துவிட்டான் குமரன்.
கலைவாணியும் சரண்யாவை தன் சொந்த மகள் போல் பார்த்துக்கொண்டாள்.
அப்படி நிம்மதியாக வாழ விடுவார்களா என்ன?
சரண்யாவின் பாட்டி பேத்தி மேல் உரிமை கொண்டு அடிக்கடி பார்க்க வருவார். தங்கள் வீட்டிற்கும் அழைத்துச் செல்வார்.
அப்போதெல்லாம் தங்கள் மனதில் உள்ள வெறுப்பை அந்த பிஞ்சு மனதில் விசமாய் விதைத்தனர்.
கலைவாணியின் அழகில் மயங்கி, மனைவியைக் கொடுமைப்படுத்தியதால்தான் சரண்யாவின் அம்மா இறந்து போனாள் என்று அவளை நம்ப வைத்தனர்.
கருப்பாக இருக்கும் சரண்யாவுக்கு ஏற்கனவே தாழ்வு மனப்பான்மை.
இப்போது இந்தப் பொய்யும் சேர்ந்துவிடவே, அழகான கலைவாணியை அவள் வெறுத்தாள்.
அவளைப் பற்றித் தன் தோழிகளிடம் அவதூறாகப் பேசினாள்.
இதை எல்லாம் தெரிந்த குமரன் கோபப்பட்டு அவளைக் கண்டிக்க, அவளது மனம் இன்னும் அவர்களை வெறுக்க ஆரம்பித்தது.
கலைவாணி மனதளவில் துவண்டு போனாள்.
அவள் சரண்யாவின் மீது உண்மையான அன்பை வைத்திருக்கிறாள்.
ஆனால் அவளோ தேவையில்லாத வெறுப்பை சுமந்து கொண்டு திரிகிறாள்.
ஒரு கட்டத்தில், அவளை மாற்ற முடியாது என்ற நிலையும் வர, தங்களுக்கு இன்னுமொரு குழந்தை வேண்டும் என்று குமரன் முடிவெடுத்தான்.
இதுநாள் வரை சரண்யாவே போதும் என்று கலைவாணி கூறியிருந்தாள்.
குழந்தை ஏற்கனவே நம் மீது வெறுப்பாக இருக்கிறாள்.
அவளால் இன்னொரு குழந்தையை ஏற்றுக் கொள்ள முடியாது. அவள் மனதை மாற்றுவோம் என்றிருந்தனர்.
இப்போது அவள் மூலம் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று அவன் தன் ஆசையைக் கூற, அப்படி கருவில் உதித்தவன்தான் மதன்ராஜ்.
அவனுக்கு சரண்ராஜ் என்று பெயரிட அவர்கள் முயன்றபோது, தன் பெயர் அவனுக்கு வரக்கூடாது என்று சண்டையிட்டாள் சரண்யா.
அவள் செய்வதில் எல்லாம் கலைவாணிக்குக் குழந்தைத்தனம் தான் தெரிந்தது.
மதன்ராஜ் தன் தாயைக் கொண்டு அழகாகப் பிறந்ததில் அவன் மீதும் அவளுக்கு வெறுப்பு.
யாரையும் அவளுக்குப் பிடிக்கவில்லை. அவளுக்கு தூபம் போடவே அவள் தாய் வீட்டுச் சொந்தங்கள்.
கல்லூரியில் படிக்கும்போதும் மற்றவர்களிடம் அலட்சியமாகத்தான் நடந்து கொண்டாள்.
மனோரஞ்சனுக்கு அவளைப் பிடித்திருக்கிறது என்று அறிய வந்த போது அவளுக்கு ஆச்சர்யம்தான்.
அவன் பணக்காரன் என்று தெரிந்த போது அவளும் அவனுடன் பழகினாள்.
எதற்காக மனோரஞ்சனுக்கு அவளைப் பிடித்தது என்றெல்லாம் அவள் ஆராயவில்லை.
அவள் ஆசைப்பட்டதை எல்லாம் அவன் வாங்கித்தந்தான்.
வீட்டினருக்குத் தெரிந்துவிடுமோ என்ற நிலையில் அவர்கள் திருமணமும் செய்து கொண்டனர்.
யாரும் இல்லாமல் ஒரு கோயிலில் தாங்களாகவே திருமணம் செய்திருந்தனர்.
அவர்கள் இருவரும் சேர்ந்த மாதிரி புகைப்படங்கள் மட்டும் எடுத்துக்கொண்டனர்.
அந்த விசயம் கல்லூரியில் இருந்து சித்தரஞ்சனுக்குச் சென்று சேர்ந்தது.
அவன் வந்து மிரட்டலாகப் பேசவும் அவள் வீட்டினர் பயந்து போயினர்.
காதலுக்காக உயிரை விடுமளவிற்கு எல்லாம் அவள் இல்லை.
இந்தக் காதல், கல்யாணத்தை வைத்துப் பணம் பெறலாமா? என்றுதான் அப்போது யோசித்தாள்.
ஆனால் அவளிடம் இருந்த புகைப்படங்களை எல்லாம் குமரன் சித்தரஞ்சன் எதிரிலேயே அழித்துவிட்டான்.
ஆனாலும் அவள் கவலைப்படவில்லை.
தனக்கு அம்மா வீட்டினர் இருக்கிறார்கள்.
தனக்கு என்ன பிரச்சினை என்றாலும் அவர்கள் துணை நிற்பார்கள் என்று அவள் நம்பினாள்.
அந்த நம்பிக்கையில்தான் அங்கு போனாள்.
அங்கே அவளை விட இளையவள், அவளது சித்தப்பா மகளுக்குத் திருமண ஏற்பாடாகியிருந்தது.
அவளது பாட்டி, தன் அண்ணன் பேரனுக்கு சரண்யாவைக் கட்டிக் கொடுக்கச் சொல்ல, குமரனின் தாயாரே அதை எதிர்த்தார்.
“ஏன்டி. உன் மகளை என் மகனுக்குக் கட்டி வச்சு அவன் வாழ்க்கையைப் பாழாக்கினது போதாதுன்னு, அவன் அடுத்து கட்டிக்கிட்டு வந்தவளையும் என்ன பாடு படுத்தினே. உன் பேத்திக்கிட்ட அவங்களைப் பத்தி இல்லாதது பொல்லாதது சொல்லி அவள் மனதில் விசத்தைக் கலந்தே.”
“என்னம்மா என்னை மட்டும் குறை சொல்றீங்க? நீங்களும்தானே எனக்கு ஒத்தூதினீங்க?”
“ஆமாம். என் பையன் என் பேச்சைக் கேட்காம எவளோ ஊர் பேர் தெரியாதவளை இழுத்துட்டு வந்துட்டான்னு கோப்பபட்டேன். அவ என்ன உன் பொண்ணு வாழ்க்கையில் பங்கு போட வந்தவளா? உன் பொண்ணு குற்றுயிரா விட்டுட்டுப் போன அவனை திரும்ப மனுசனா உருவாக்கினா. அந்த நேரத்தில் நானும் உன் பேச்சைக் கேட்டு ஆடிட்டேன்.”
“பேரான்டி. நீ சரண்யாவைக் கட்டிக்கிறியாப்பா?” என்று அம்மாவிடம் பேச்சை விடுத்து நேரே பேரனிடம் சரண்யாவின் பாட்டி கேட்கவும், அவன் கிண்டலாய் சிரித்தான்.
“அவளை எல்லாம் யார் கட்டிக்குவா பாட்டி? சரியான திமிர் பிடிச்சவ. சரி குணம்தான் இல்லை. ஆளாவது அழகா இருக்கிறாளான்னு பார்த்தால் அதுவும் இல்லை.”
இதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த சரண்யா தன் சொந்தங்களின் உண்மை முகத்தைக் கண்டு அதிர்ந்து போனாள்.
‘இவன் எல்லாம் என்னிடம் நேரில் எப்படி வழிவான்? இப்போது இப்படிப் பேசுகிறானே?’
‘இவர்கள் பேச்சைக் கேட்டு என் அம்மா அப்பாவை, என் காலைச் சுற்றி வரும் ராஜாக்குட்டியை எந்தளவிற்கு எடுத்தெறிந்து பேசியிருக்கேன்.’
நினைக்க நினைக்க தன்னையே அருவருத்தாள்.
அத்துடன் மனோரஞ்சனின் நினைவும்.
‘என்னை உண்மையாகக் காதலித்தவன். அவன் கட்டிய தாலிக்கு நான் மரியாதை கொடுக்கவில்லை. அவன் காதலுக்கும் நான் மரியாதை கொடுக்கவில்லை.’
‘இன்று அவனுடைய திருமணம். அதுதான் என்னை வருத்தி இங்கே வரவழைத்திருக்கிறது. அது புரியாமல் நான் அவன் மீது அன்பு வைத்தில்லை என்று தவறாகப் புரிந்துகொண்டேனே.’
‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பிரயோசனம்?’
உடனே பெற்றோரின் காலில் விழுந்து கதறி அழ வேண்டும் என்று தோன்றியது.
அவர்கள் இப்போது வேறு ஊருக்கு வந்திருக்கின்றனர்.
அடுத்த வேளை உணவிற்கே சிரமம். பெற்றோர் இருவரும் பார்த்த வேலை பறிபோய்விட்டது.
இதற்கெல்லாம் மனோரஞ்சனின் உறவினர்கள்தான் காரணம் என்று அவள் வீட்டினருக்குத் தெரியும்.
ஆனாலும் இப்போது வரை அவளை கை நீட்டி அவர்கள் குற்றம் சுமத்தவில்லை.
வீட்டை நெருங்கிவிட்டாள்.
அப்போதுதான் அவளுக்கு கலைவாணியிடம் இருந்து அழைப்பு வந்தது.
“கடைசி வரைக்கும் நீ திருந்தவே இல்லை சரண்யா. அந்த புகைப்படங்களை அப்பா அழித்துவிட்டார். ஆனால் நீ அவற்றை உன் மெயிலுக்கு அனுப்பி வைத்திருக்கிறாய். அதை வைத்து என்ன செய்வதாக உத்தேசம்? காதலுக்கு நீ கொடுக்கும் மரியாதை இவ்வளவுதானா? உன்னை நினைத்தால் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.”
“அம்மா. இல்லை.” என்று இழுத்தாள்.
“வேண்டாம் சரண்யா. நீ நடிக்க வேண்டாம். இனி அதற்கு எந்தத் தேவையும் இருக்காது. என் கணவர் இப்பதான் திடீர்னு ஹார்ட் அட்டாக்ல போய்விட்டார். அவரை அடக்கம் செய்யக்கூட என்கிட்ட பணம் இல்லை. அவரைப் பிரிஞ்சு என்னால் இருக்க முடியும்னும் தோணலை. என் மகனை அவனோட அக்கா பார்த்துப்பா. நீ உன் இஷ்டப்படி இருந்துக்கோ. நான் போறேன்.” மறுபக்கம் அழுத்தமான குரலில் பேசினாள் கலைவாணி.
அவளுக்கு கலைவாணி என்ன பேசுகிறாள் என்று உணர்ந்து கொள்ளவே நேரம் பிடித்தது.
“அம்மா. நான் மாறிட்டேன். என்னை தண்டிச்சிடாதீங்க. என்னை விட்டுப் போயிடாதீங்க.” கதறினாள்.
மறுபக்கம் எந்தப் பதிலும் இல்லை. எந்தச் சத்தமும் இல்லை.
வீட்டை நெருங்கியதும்தான் அவள் அந்தக் கொடூரத்தைக் கண்டாள்.
அவர்கள் வீடு எரிந்து கொண்டிருந்தது.
தூக்கத்தில் இருந்து அப்போதுதான் விழித்தவனைப் போல் நின்றிருந்த மதன்ராஜின் முகத்தில் அதிர்ச்சி. அவன் தூங்கும்போது வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தடியில் போட்டிருந்தாள் கலைவாணி.
பேச்சற்று நின்ற சரண்யா அப்படியே வேரறுந்த மரம் போல் சாய்ந்தாள்.
பழைய நினைவில் இருந்து மீண்டாள் சரண்யா.
அவளுக்கு சுயநினைவு வந்த போது அவள் இந்த மருத்துவமனையில் இருந்தாள்.
அவளை அவள் சகோதரிதான் கொண்டு வந்து சேர்த்தாள் என்று சொன்னார்கள்.
இப்போதும் மதன்ராஜைப் பார்த்த போது கட்டியணைத்துக் கதறியழ வேண்டும் போல் இருந்தது.
அதனால் என்ன பிரயோசனம்?
அவர்களுக்கு அவள் பாரமாகத்தான் போவாள்.
இப்படியே மனநிலை சரியில்லாதவள் போன்று இங்கேயே அவள் இருந்துவிட முடியாதுதான்.
அதற்கு மருத்துவமனையின் நிர்வாகம் இடம் கொடுக்காது.
அவள் தலைமை மருத்துவரிடம் தன்னுடைய நிலையை எடுத்துக் கூறி ஏதாவது ஆசிரமத்தில் வேலை வாங்கித் தருமாறும், தான் இங்கிருந்து கிளம்பும் வரையில் எக்காரணத்தைக் கொண்டும் தனக்குக் குணமாகிவிட்டது என்று அபர்ணாவிடம் தெரிவிக்க வேண்டாம் என்றும் வேண்டிக்கொண்டாள்.
அவர் யோசித்தார்.
“நீங்க இந்தளவுக்கு யோசிக்க வேண்டாம் டாக்டர். நான் ஒரு பாவி. அவர்கள் அன்புக்கு நான் தகுதியானவள் அல்ல.” என்று கெஞ்சினாள்.
அவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
“நடிப்பெல்லாம் பிரமாதம்.” என்ற குரல் அருகில் கேட்கவே திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள் சரண்யா.
அங்கே சித்தரஞ்சன் நின்றிருந்தான்.
காதல்வளரும் ……
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.