சித்தரஞ்சன் சொன்ன படியே காலையில் சரண்யாவை அழைப்பதற்கு கார் வந்துவிட்டது.
“கார் எங்கு போகிறது?” என்று எதுவும் கேட்காமல் ஏறி அமர்ந்தாள்.
அவள் நினைவு முழுவதும் அபர்ணா, மதன்ராஜ் பற்றியே இருந்தது.
தன்னைக் காணாமல் நிச்சயம் தவிப்பார்கள்.
எந்த உரிமையில் அவர்களை எதிர் கொள்வாள் அவள்?
‘அக்கா அக்கா’ என்று காலைச் சுற்றி வந்தவனை அவள் கண்டு கொண்டதே இல்லை.
அச்சு அசலாக சித்தி மாதிரியே அபர்ணாவைக் காணவும், அப்படியே அவள் காலடியில் விழுந்து கதறி மன்னிப்புக் கேட்கத் துடித்தது மனம்.
அவள் மாறிவிட்டாள் என்று தெரியாமலே ஏற்றுக் கொண்ட அபர்ணா, அவள் மட்டும் மன்னிப்பு கேட்டுவிட்டால் ‘தங்கம் தங்கம்’ என்று தாங்குவாள்.
ஆனால் அத்தனை எளிதில் அவளுக்கு மன்னிப்பு கிடைத்தாலும், அவளுடைய மனசாட்சி இருக்கிறதே. அது அவளை சும்மா விடுமா?
சித்தரஞ்சன் தனக்கு எந்த இடத்தில் வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறான் என்ற கவலை அவளுக்கு இல்லை.
தான் இங்கிருந்து கிளம்பி விட்டால், திட்டம் போட்டுத்தான், அபர்ணாவும், மதன்ராஜூம் தங்கள் வீட்டிற்குள் நுழைந்தார்கள் என்ற நினைப்பை சித்தரஞ்சன் விட்டுவிடுவான்.
‘சித்தி சொன்ன மாதிரியே மதன்ராஜை அவனது அக்கா அபர்ணா கவனித்துக்கொள்கிறாள். இனியும் பார்த்துக் கொள்வாள். நான் அவர்களுக்கு இடையில் இருக்க வேண்டாம்.’
சித்தரஞ்சனின் வீடு.
தேவேந்திரனின் முகம் மலர்ந்திருந்தது. இத்தனை வருடங்கள் அவர் மனசை வருத்திக் கொண்டிருந்தவை எல்லாம் பகலவனைக் கண்ட பனி போல விலகியதை அவரால் இன்னமும் நம்ப முடியவில்லை.
இன்னும் எதுவும் நடந்துவிட வில்லைதான்.
ஆனால் மூத்த மகன் அவருடைய விருப்பத்திற்கு செவி சாய்த்துவிட்டான்.
“அம்மாடி அபர்ணா.” அவரது குரலில் சமையல் அறையில் வேலையாக இருந்தவள் வந்து நின்றாள்.
“சொல்லுங்க சார்.”
“பூஜை ரூமை கொஞ்சம் சுத்தம் செய்திடறியாம்மா?”
தன்னைச் செய்யச் சொல்கிறாரே என்ற யோசனையுடன் அவள் மெல்லத் தலையசைத்தாள்.
பூஜையறையை சுத்தம் செய்துவிட்டு வந்தவளிடம், பூஜைக்குப் பூ பறித்துக் கொண்டு வரச்சொன்னார்.
அவள் பூப்பறித்துக் கொண்டிருக்கும்போதுதான் அந்தக் கார் வந்து நின்றது.
‘யாரோ?’ என்ற எண்ணத்தில் அவள் தன் வேலையைத் தொடர்ந்தாள்.
“அம்மா. நீங்க வரவேண்டிய இடம் வந்தாச்சு.” என்றார் ஓட்டுநர்.
காரிலிருந்து இறங்கும் முன் மெல்லச் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தாள்.
‘ஏதோ வீடு போல் இருக்கிறதே? இங்கா எனக்கு வேலைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்?’
அவள் கண்களை கண்ணீர் மறைத்தது. ஆனந்தத்தோடு ஆரத்தியெடுத்தாள்.
“இப்படியா அழுதுகொண்டே ஆலம் சுற்றுவது?” என்று கடிந்து கொண்டான் சித்தரஞ்சன்.
“வலது காலை எடுத்து வைத்து வாம்மா சரண்யா.” என்றார் தேவேந்திரன்.
வீட்டிற்குள் நுழைந்த உடன் அவர் காலில் பணிந்தாள்.
“நல்லாரும்மா.” என்றவருக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை. நெகிழ்ந்திருந்தார்.
அவளை கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த மனோரஞ்சனிடம் வந்தவள் “மானு என்னை மன்னிச்சிடுங்க.” என்று அவன் காலடியில் அமர்ந்தவள் அவன் காலைக் கட்டிக்கொண்டாள்.
“சரண் நீயும் என்னை மன்னிச்சிடு. எப்போதும் போல் என்னை நீ வா போன்னே கூப்பிடு. இது என்னவோ வித்தியாசமா யாரோ மாதிரி இருக்கு.” என்றவன் கண் கலங்கியவாறே அவள் தலையைத் தடவினான்.
“போதும். யாரும் யாரிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டாம். சரண்யா. மாடியில் இருக்கிற மனோரஞ்சனின் அறையிலேயே நீ தங்கிக்கோ. அவன் இப்ப கீழேதானே இருக்கான். முதல்ல வந்த களைப்பு தீர ரெஸ்ட் எடு.” என்றான் சித்தரஞ்சன்.
“சரி சார்.”
“இனி ரஞ்சனை சார்னு சொல்லாதேம்மா. அத்தான்னு சொல்லு. எங்களையும் மாமா அத்தைன்னு கூப்பிடு. இல்லைன்னா உன் தம்பியைப் போல் என்னை தாத்தான்னே நீ கூப்பிடலாம்.” என்றார் தேவேந்திரன் சிரித்துக்கொண்டே.
“சரண்யாவுக்கு என் அறைக்குப் பக்கத்து அறையைக் காட்டு.” என்றான் அவளிடம்.
அவள் தலையாட்டியவாறே சரண்யாவை அழைத்துக்கொண்டு மாடியேறினாள். கூடவே மதன்ராஜ் சென்றான்.
அறைக்குள் நுழைந்த உடனேயே அவளை அணைத்துக்கொண்டாள் சரண்யா.
“அப்ப உனக்கு குணமாகியிருந்தது அப்படித்தானே? அப்படி இருந்தும் ஏன் எங்ககிட்ட நீ பேசலை?”
“எந்த முகத்தை வச்சுக்கிட்டு நான் பேசுவேன்? நல்லா இருந்த போது உங்களை எத்தனை அலட்சியப்படுத்தியிருக்கேன். இப்ப மட்டும் எப்படி பேசுவது?”
“அது எல்லாம் நீ மனதார செய்தது இல்லை சரண்யா. உன் மனதை அப்போது குழப்பி விட்டிருந்தனர். நீ சிறு பெண் என்பதால் நீயும் குழம்பிவிட்டாய். அவ்வளவுதான். சித்தி அதை நினைத்துத்தான் வருத்தப்படுவார்கள்.”
“அம்மாவை நான் கடைசி வரைக்கும் ரொம்ப சிரமப்படுத்திவிட்டேன். என்னை அவங்க மன்னிப்பாங்களா?”
“நீதானே அவன் அக்கா. அதில் என்ன உனக்கு சந்தேகம்? சரி முடிந்ததெல்லாம் போகட்டும். அதைப் பற்றி இனி பேச வேண்டாம். நீ ரெஸ்ட் எடு. நான் உனக்கு டீ எடுத்துட்டு வர்றேன்.”
“இல்லக்கா. இப்ப எதுவும் வேண்டாம்.”
“சரி. ரெஸ்ட் எடு.” என்றவள் சென்றுவிட்டாள்.
சரண்யாவுக்கு இதெல்லாம் கனவு போல் இருந்தது.
“இது என் மானுவோட அறை.” என்றவள் உரிமையாய் அந்தக் கட்டிலில் விழுந்தாள்.
“சகுந்தலா. இது என்ன சின்னப் பிள்ளை போல் அடம். கதவைத் திற.” என்றார் தேவேந்திரன்.
கணவனின் குரலில் இருந்த கடினத்தை உணர்ந்தவர் கதவைத் திறந்தார்.
“என்னைக் காரணம் காட்டி எத்தனையோ செய்திருக்கே. நிறைய விசயம் எனக்குத் தெரியாமலே போயிருக்கு. அப்பல்லாம் நான் உன்னை எதுவும் சொன்னதில்லை. இப்ப தேவை இல்லாத உன் பிடிவாதத்தால் நம்ம பிள்ளைங்க வாழ்க்கை வீணாப் போறதை நான் விரும்பலை. எனக்கு என் பிள்ளைங்க வாழ்க்கை மட்டும் தான் முக்கியம். அதற்கு மேல் உன் பிரியம்.”
அவர் சென்றுவிட்டார்.
“அம்மா. மனோவுக்கு நம்ம சொந்தத்திலேயே நல்ல இடமாப் பார்த்துக் கல்யாணம் செய்யனும்னு நினைச்சிருக்கலாம். ஆனால் அது அத்தனை சுலபம் இல்லம்மா.”
“எதையாவது சொல்லி நீ செஞ்சதுக்கு சப்பைக்கட்டு கட்டாதே.” என்றார் கோபமாய்.
“நேத்து மாமாவோட பங்காளி வந்தாரே. அவர் என்ன சொன்னார்? அதையே எத்தனை பேர்க்கிட்ட சொன்னாரோ? ஒருத்தனுக்குக் குழந்தையேப் பிறக்காதுன்னு தெரிஞ்ச பிறகு யாரும்மா பொண்ணு கொடுப்பா?”
சகுந்தலா திகைத்து நின்றார்.
“மிரட்டலா பேசிட்டுப்போன அவரோட பொண்ணை நான் கட்டிக்கனுமாம்மா. சொல்லுங்க. நீங்க இப்படி கட்டாயப்படுத்தி லலிதாவை மனோவுக்குக் கல்யாணம் செஞ்சு வச்சீங்க. என்னாச்சும்மா? இப்ப லலிதா மனநல மருத்துவமனையில். இதுக்கு மேல நான் சொல்றதுக்கு ஒன்னுமில்லைம்மா.” என்றுவிட்டுச் சென்றான்.
அவர் அப்படியே யோசனையில் ஆழ்ந்தார்.
சமையல் அறையில் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தாள் அபர்ணா.
அவள் நினைத்தது இப்படி சட்டென நிறைவேறும் என்று அவள் நினைக்கவேயில்லை. மனதார கடவுளுக்கு நன்றி கூறிக்கொண்டாள்.
காலை உணவு, இனிப்புடன் எல்லோருக்கும் பரிமாறப்பட்டது.
காலை உணவிற்குப் பின் அவளைப் பார்க்க வந்தான் சித்தரஞ்சன்.
“என்ன இப்ப சந்தோசம்தானே? உன் திட்டம் நிறைவேறிடுச்சு.”
அவள் பேசாமல் நின்றாள்.
“அப்பா இந்தக் கல்யாணம் நடப்பதற்கு ஒரு கண்டிசன் போட்டிருக்கார்.”
அவனை ஏறிட்டாள்.
“எனக்கும், மனோவுக்கும் சேர்த்தே திருமணம் என்கிற மாதிரி அப்பா கண்டிசன் போட்டிருக்கார்.”
இப்போதும் எதுவும் பேசாமல் நின்றாள்.
“என்ன பேசாமல் நிக்கிறே?”
“என்னை என்ன செய்யச் சொல்றீங்க? உங்கப்பா சொன்னா செய்துக்க வேண்டியதுதானே?” என்றாள் புரியாமல்.
“நீங்க என்னோட கல்யாணம் பத்திப் பேசறீங்க சார்.” என்று அவளும் நிதானத்திற்கு வந்திருந்தாள்.
“அதனால் என்ன?”
“என்னோட கல்யாணம் பத்தி என்கிட்ட இல்ல பேசியிருக்கனும்? அது எப்படி நீங்களா முடிவு பண்ணுவீங்க?”
“மனோவுக்கும், சரண்யாவுக்கும் கல்யாணம் பண்ண நாங்கதான் முடிவு பண்ணோம்.”
“அது வேற. அவங்க இரண்டு பேரும் காதலிச்சாங்க. என்னோட விசயம் அப்படியில்லையே. எனக்குக் கல்யாணத்திலேயே விருப்பம் இல்லை.”
“ஐயோ. அம்மணி. நான் உன்னைக் காதலித்துக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்னு நினைச்சிட்டியா? ரொம்பத் தப்பும்மா. என் அப்பாவோட விருப்பத்தைத்தான் உன்னிடம் சொல்லிக்கிட்டிருந்தேன்.”
“சரி. சொல்லிட்டீங்கதானே. போங்க. உங்களுக்கு வேறு பொண்ணைப் பார்க்கச் சொல்லுங்க.”
“ஹலோ ஒரு நிமிசம். நான் சொல்றதைக் கேளு. எனக்கும் கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லை. இப்போதைக்கு அப்பாவை சமாதானப்படுத்தத்தான் இந்தக் கல்யாணம். இது ஒரு கண் துடைப்பு.”
“எனக்குப் புரியலை.”
“எனக்கும் கல்யாணத்தில் விருப்பமில்லை. அதனால்தான் மனோவுக்குக் கல்யாணம் பண்ணோம். இப்ப அப்பா பிடிவாதமா இருக்கார். அதனால் என்னைக் கட்டாயப்படுத்தறார். நானெல்லாம் உன்னை மாதிரி ஒரு பெண்ணை நம்பி என் வாழ்க்கையைப் பழிகொடுப்பேனா? ஒரு வருடம். கணவன், மனைவி மாதிரி நடிப்போம். அதன் பிறகு ஒத்து வரலைன்னு சொல்லி பிரிஞ்சிடுவோம். வேற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டால் இந்த ஒப்பந்தத்திற்கு ஒத்துக்கொள்வாளா? சொல்லு. நீ சொல்ற பதிலில் தான் உன் தங்கையோட வாழ்க்கை இருக்கு.”
“நான் கொஞ்சம் யோசிக்கனும்.”
“ஏன் யார்கிட்டயும் பர்மிசன் வாங்கனுமா?”
“ஆமாம்.”
“யார்கிட்ட? உன்னைப் பெத்தவங்ககிட்டயா?”
“இல்லை. வளர்த்தவங்ககிட்ட.”
“எப்படி ஒப்பந்த கல்யாணம்னு சொல்லப் போறியா?”
“அது எதுக்கு உங்களுக்கு. நான் என்னமோ சொல்லிக்கறேன்?”
அவன் எதுவும் பேசாமல் சென்றான். என்னவோ நினைத்தாற் போல் திரும்பினான்.
“அப்பா என்னைக் கட்டாயப்படுத்தினதால், அம்மாவை ஒத்துக்கொள்ள வைக்க நான் உன்னைக் காதலிக்கிறதா பொய் சொல்லியிருக்கேன். அதற்கு ஏத்தமாதிரி நடந்துக்கோ. கட்டாயம் இந்தக் கல்யாணம் நடக்கனும்.”
உறுதியான குரலில் கூறியவன் அவளைத் திரும்பியும் பாராமல் சென்றுவிட்டான்.
காதல்வளரும் ……
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.