“அ..ப்…பூ…” என்ற கூவலுடன் ஓடிவந்த நவீன் பிரசாத் அபர்ணாவைத் தூக்கிச் சுற்றினான்.
திருமணம் முடிவான உடனே அவர்கள் குடும்பத்துடன் இதோ வந்துவிட்டனர்.
பெரியவர்கள் பின்னே வர, நவீன் பிரசாத் மட்டும் ஓடி வந்திருந்தான்.
“அவளை விடு நவீன்.” என்றான் அருண்பிரசாத்.
அபர்ணாவின் அருகில் வந்தவன் பாசத்துடன் அவள் தலையைத் தடவினான். அதில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்தன.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சித்தரஞ்சன் அவர்களை வரவேற்கும் விதமாய் முன்னே வந்தான்.
“வாங்க.”
வரவேற்ற அவனைக் கண்ட அருண்பிரசாத்தின் முகத்தில் ஒரு கணம் திகைப்பு வந்து போனது. சித்தரஞ்சனின் கரத்தைப் பற்றிக் குலுக்கினான்.
“ஹலோ ரஞ்சன். நான் அருண்பிரசாத். இது என்னோட தம்பி நவீன் பிரசாத். இது கிருஷ்ணா. உங்களுக்குத் தெரியும். அம்மாவும், அப்பாவும் இதோ வந்துட்டாங்க.”
அறிமுகம் செய்து கொண்டிருந்த அருண்பிரசாத் கம்பீரமாக இருந்தான். நவீன் பிரசாத்திடம் கொஞ்சம் விளையாட்டுத்தனம் இருந்தது.
மருத்துவர் ராம்பிரசாத்தும், ராஜலட்சுமியும் ஜெயச்சந்திரனுடன் வந்து கொண்டிருந்தனர்.
அபர்ணா அவர்களின் காலில் பணிந்தாள்.
அவளை எழுப்பி அணைத்து உச்சி முகர்ந்தார் ராஜலட்சுமி. ராம்பிரசாத்தும் தன்னுடைய மூத்த மகன் போன்றே அவள் தலையை வாஞ்சையுடன் தடவினார்.
“தாத்தா, பாட்டீ…” என்று ஓடிவந்த மதன்ராஜை தூக்கிக் கொஞ்சினார் ராஜலட்சுமி.
“ஏய் செல்லம். உன் குரலைக் கேட்க எத்தனை சந்தோசமாயிருக்கு தெரியுமா?” என்றார் கண்கள் கலங்க.
இது எல்லாவற்றையும் சித்தரஞ்சன் கவனித்துக்கொண்டுதான் இருந்தான்.
வீட்டினர் அனைவரும் அங்கே குழுமிவிட்டனர். சித்தரஞ்சன் வீட்டினருக்கும், விருந்தாளிகளுக்கும் அறிமுகம் செய்து வைத்தான்.
ராஜலட்சுமி சகுந்தலாவின் அருகில் சென்று கைகளைப் பற்றிக் கொண்டார்.
ராம்பிரசாத் தேவேந்திரனுடன் அமர்ந்து கொண்டார்.
சித்தரஞ்சனுக்கு இதெல்லாம் பிரமிப்பாகத்தான் இருந்தது. அவன் மருத்துவர் ராம்பிரசாத் பற்றியும், அவர்கள் மருத்துவமனை பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறான்.
அந்த மனிதர் இத்தனை எளிமையாய் தங்கள் வீட்டில் வந்து அமர்ந்திருக்கிறார். அவர்கள் அனைவரும், அபர்ணா என்ற ஒரு பெண்ணிற்காக இங்கே வந்துள்ளனர்.
திருமணத்தை எளிமையாக குலதெய்வம் கோயிலில் வைத்துக்கொண்டு வரவேற்பை அவர்களுடைய திருமண மண்டபத்தில் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தனர்.
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் கொடுத்திருந்தாலும், சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தால், அவரவர் வசதிக்கேற்ப வரவேற்பன்று வந்து கொள்வார்கள் என்று மூன்று வேளையும் உணவு ஏற்பாடு செய்திருந்தனர்.
அடுத்தடுத்த நாள்களில் திருமணமும், வரவேற்பும் ஏற்பாடு செய்திருந்தனர்.
நாளை மறுநாள் திருமணம்.
“பொண்ணு வீடா எங்களுக்கு என்னென்ன வேலை வச்சிருக்கீங்க சம்பந்தி?” என்றார் ராம்பிரசாத்.
“நமக்குள்ள என்ன சம்பந்தி? நம்மகிட்ட பசங்க இருக்காங்க. அதனால் எல்லாத்தையும் பார்த்தாச்சு. நீங்க வந்து உங்க பொண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் அட்சதையைத் தூவி ஆசிர்வாதம் பண்ண வேண்டியதுதான். உங்க சார்பா இங்கே கிருஷ்ணா நின்னுட்டான்.” என்றார் தேவேந்திரன்.
உணவு உண்ட பிறகு மணமக்களுக்கு, வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் புத்தாடைகள் எடுக்க வேண்டும் என்று ராஜலட்சுமி கூறினார்.
அனைவரும் ‘அபிஸ் டெக்ஸ்’க்கு சென்றனர்.
“ஏய் அப்பு. அதற்குள் மாப்பிள்ளை உன் பெயரில் கடை எல்லாம் திறந்துட்டாரா என்ன?” என்று நவீன் பிரசாத் காதைக் கடித்தான்.
“அவர் அபிராமி தாயாரோட பக்தன்ப்பா. அதனால் தான் அந்தப் பெயரை வச்சிருக்கார்.”
“அப்படியா? நம்ப முடியலையே. ஒருவேளை அபர்ணாவோட பக்தரா இருப்பாரோ?”
“ப்ச். நான் சொன்னதுதான் உண்மை. அவங்க அம்மா பெருமையா பீத்திக்கிட்டாங்க. இந்தக் கடையை ஆரம்பிச்சு நாலு வருசமாச்சு. நான் இப்பத்தானே இங்கே வந்தேன்.”
“அட. ஆமாம்ல. ஆனால் பெயர் ரொம்ப பொருத்தமா இருக்கு.”
பெண் வீட்டு சார்பாக மணமக்களுக்கும், சம்பந்திகளுக்கும் எடுக்க, மாப்பிள்ளை வீட்டினரும் மணமக்களுக்கும், சம்பந்திகளுக்கும் ஆடைகள் வாங்கினர். தைக்க வேண்டியவற்றை அங்கேயே கொடுத்தனர்.
அதே போல் அவர்களுடைய நகைக்கடையிலேயே மணமக்களுக்கு நகைகள் எடுத்தனர்.
அபர்ணாவிற்கு ராம்பிரசாத் குடும்பத்தினர் வாங்க, சரண்யாவிற்கு அந்தப் பொறுப்பை அபர்ணா எடுத்துக்கொண்டாள்.
ராஜலட்சுமி மறுத்தும் அபர்ணா கேட்கவில்லை. சரண்யாவிற்கு செய்வது தனது கடமை என்று முடித்துவிட்டாள்.
அவளைப் பற்றி நன்கறிந்த ராஜலட்சுமியும் அதை மறுக்கவில்லை.
தேவையானவற்றை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தனர்.
இரவு உணவிற்குப் பின் பெரியவர்கள் விருந்தினர் அறையில் ஓய்வெடுத்தனர்.
இளையவர்களுக்கு மாடியில் அறைகள் ஒதுக்கப்பட்டன.
ஜெயச்சந்திரனும், கிருஷ்ணாவும் தங்கள் வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.
சரண்யா அபர்ணாவின் அறைக்கு வந்தாள்.
“அக்கா. எனக்காக…” என்றவளை மேலே பேச விடாமல் அணைத்துக்கொண்டாள் அபர்ணா.
“என்ன உனக்காக? உனக்காக செய்ய வேண்டிய கடமை எனக்கிருக்கு.”
“எவ்வளவு செலவு?” என்று மலைத்துப் போனாள்.
“உனக்குத் தெரியுமா சரண்யா? அன்னிக்கு வீட்டை விட்டுக் கிளம்பும்போது மாற்றுடை கூட இல்லாமல் என்னை சித்தியும், சித்தப்பாவும் அழைச்சுட்டு வந்தாங்க. ஊருக்குப் போறப்ப எனக்கு பார்சல் கட்டி கொடுத்து விட்டாங்க. அவங்க அவ்வளவு சிரமத்தில் இருக்கும்போதும் எனக்கு செஞ்சாங்க. இப்ப என்கிட்ட இருக்கு. செய்யறேன்.”
“உன்கிட்ட ஏதுக்கா அவ்வளவு பணம்?”
“நான்தான் படிச்சு முடிச்சதிலேர்ந்து வேலை பார்க்கறேனே. அங்கே எனக்கு எந்த செலவும் இல்லை. நான் கொடுத்தாலும் ராஜி அம்மா திட்டுவாங்க. இல்லத்துக்கு கொடுக்கிறதைக் கூட வாங்கிக்க மாட்டாங்க.”
“வாழ்க்கையில் செட்டில் ஆன பிறகு எல்லாம் செய்யலாம்னு சொல்வாங்க. சும்மா சம்பளப்பணத்தை பேங்கில் போட்டு வைக்கலை நான். ராஜிம்மா பணத்தை பெருக்கற மாதிரி முதலீடுகள் செய்ய வச்சாங்க. அப்புறம் நான் சம்பாதிச்சதெல்லாம் யாருக்கு? உனக்கும், மதுவுக்கும்தானே? சித்தி, சித்தப்பா இருந்தாலும் அதைத்தானே செஞ்சிருப்பாங்க. அவங்க இல்லாத இடத்தில் மூத்தவளா நான்தானே பார்க்கனும்.”
அவள் பேசப் பேச சரண்யாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“ப்ச். எதுக்கு இப்ப அழறே? இனி நீ அழவேக் கூடாது.”
“ஆமாண்ணி. அதனால் வெங்காயத்தைக் கூட அவளை உரிக்க விடாதீங்க.” என்றவாறே அங்கே ஆஜரானான் மனோரஞ்சன்.
இப்போதெல்லாம் ‘அண்ணி’ என்ற அழைப்பை அனைவரும் அறிய உற்சாகமாய், உரக்க உச்சரிக்கிறான்.
“நான்தான் உங்க உறவை முதல்ல சொன்னவன்” என்று பெருமை பீற்றிக்கொள்வான்.
“சந்தடி சாக்கில் உன் மனைவியை சமையல்கட்டிலிருந்து காப்பாத்தறியா மனோ?” என்றாள் அபர்ணா கிண்டலாய்.
சரண்யா முகம் சிவந்தாள். மனோரஞ்சன் அபர்ணாவை விட்டுவிட்டு சரண்யாவைப் பார்க்க ஆரம்பித்துவிட்டான்.
“இதெல்லாம் கல்யாணம் முடிஞ்ச பிறகு பார்த்துக்கலாம். இது பொது இடம் ஓடு. ஓடு.” என்றாள் அபர்ணா.
“அண்ணி. இது அநியாயம். பார்க்கிறதுக்குக் கூட தடையா?”
“ஆமாம். தடைதான். பெண்கள் ஏதாவது ரகசியம் பேசுவோம். இங்கு உனக்கென்ன வேலை?”
“அதுவா? அங்கே அண்ணன் உங்ககிட்ட பேச துடிச்சுக்கிட்டிருக்கார். அதனால் நான் சரண்யாவை கடத்திக்கிட்டுப் போயிட்டேன்னா அவருக்கு வசதியா இருக்குமேன்னு பார்த்தேன்.” என்றான் சமர்த்தாய்.
‘அப்படியே பேசிட்டாலும்’ என்று மனதிற்குள் நொடித்துக்கொண்டாள் அபர்ணா.
“பக்கத்து இலைக்குப் பாயசமா மாப்பிள்ளை.” என்றவாறே அங்கே வந்தான் நவீன் பிரசாத்.
“நீங்களுமா?” என்று சோகமானான் மனோரஞ்சன்.
“போங்க போங்க. கல்யாணத்துக்குப் பிறகு நீங்க எவ்வளவு வேணும்னாலும் பேசலாம். இப்ப எங்க பொண்ணுங்ககிட்ட நாங்க பேசனும்.”
“நானும் உங்ககூட இருக்கேனே.” என்றான் பாவமாய்.
“சரி. போனாப் போயிட்டு போறீங்க. இருங்க.” என்று பெருந்தன்மையாய் விட்டுக்கொடுத்தான் நவீன் பிரசாத்.
இது எல்லாவற்றையும் சித்தரஞ்சன் தூர இருந்து பார்த்தானே தவிர இங்கே வர முயலவில்லை.
“போச்சுடா. நீங்களும் அவன் பக்கம் சாஞ்சுட்டீங்களா?” என்றான் சோகமாய்.
கலகலப்புடன் அன்றும், மறுநாளும் சென்றன.
மறுநாள் அருண்பிரசாத்திற்கு நிச்சயம் செய்த மகாலட்சுமி வந்து சேர்ந்தாள்.
அபர்ணா ராம்பிரசாத் குடும்பத்தைத் தவிர வேறு யாரும் தன் பக்கம் இல்லை என்று விட்டாள்.
சரண்யா தனது அம்மா குடும்பத்தினரை திருமணத்திற்கு அழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள, அவளுடன் மதன்ராஜ், அபர்ணா சென்றனர். அவர்களை சித்தரஞ்சன்தான் அழைத்துச் சென்றான்.
அவள் திருமணப் பத்திரிக்கையை நீட்டவும் அவர்கள் முகத்தில் ஈயாடவில்லை.
“இது என்னோட அக்கா அபர்ணா. இவங்க என்னோட அத்தான். என் அத்தானைத்தான் உங்களுக்கு நல்லாத் தெரியுமே. இது தம்பி மது. அப்புறம் ரொம்ப நெருங்கின சொந்தங்கள் மட்டும் கல்யாணத்துக்கு வந்தா போதும்னு நிறைய பேரை கல்யாணத்துக்கு அழைக்கலை. அதனால் நீங்க வரவேற்புக்கு வந்துடுங்க.” என்று வரவேற்புப் பத்திரிக்கையை கொடுத்துவிட்டு கைகள் கூப்பி அழைத்துவிட்டுக் கிளம்பிவிட்டாள்.
அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
“வெல் டன் சரண்யா.” என்று அவள் கைகளைப் பிடித்துக் குலுக்கினான் சித்தரஞ்சன்.
“அத்தான்.” என்றவள் குலுங்கி அழுதாள்.
“வேண்டாம் அழாதே. அங்கே எத்தனை தைரியமான பெண்ணாய் நடந்து கொண்டாய். இனி அப்படித்தான் இருக்கனும். அழாதே.”
“அவங்க எல்லாம் தான் என் சொந்தம்னு அவங்க பேச்சைக் கேட்டு நான் ஆடிட்டிருந்தேன். அம்மா அப்பாவை மதிக்கலை. ஆனால் அவங்க எல்லாம் என்ன பேசிக்கிட்டாங்க தெரியுமா?”
“வேண்டாம் சரண்யா. அதெல்லாம் மறந்துடு. இனி நீ எங்க வீட்டுப் பொண்ணு. அவங்களை விட்டுத்தள்ளு. எனக்கே அவங்க மீது ஆத்திரம்தான்.”
“ஏன் அத்தான்?”
“சரண்யா என்னை மன்னிச்சிடும்மா. நீங்க ஊரை விட்டுப் போனதோ, உன் பெற்றோருக்கு வேலை போனதோ எதுவும் எனக்குத் தெரியாது. அது தெரிய வந்த பிறகு நீங்க எங்கேன்னு விசாரிக்க சொன்னேன். அப்பதான் விபத்தில் உன் பெற்றோர் இறந்தது எனக்குத் தெரிய வந்தது. உன்னைப் பத்திக் கேட்டா யாருக்கும் தெரியலை. யாரோ சொந்தக்காரங்க அழைச்சுட்டுப் போயிட்டாங்கன்னு சொன்னாங்க. அப்புறம் உன் அம்மா வீட்டுச் சொந்தத்தில் விசாரிச்சா யாருமே எங்களுக்குத் தெரியாதுன்னு சொல்லிட்டாங்க. எனக்கு அப்பவே அவங்க மீது கோபம்தான். அதன் பிறகுதான் உன்னைத் தேட சொன்னேன். அப்புறம் தான் உனக்குத் தெரியுமே.” என்றான்.
“ரொம்ப நன்றி அத்தான். மன்னிப்பு கேட்டு என்னை பெரியவளாக்காதீங்க அத்தான். நான் அந்தளவுக்கு நல்லவ இல்ல.”
“அடிப்படையில நீ நல்ல பொண்ணுதான் சரண்யா. அவங்க நடிப்பு உன் கண்ணை மறைச்சிருந்தது. நீ என்ன பண்ணுவே.”
வீடு திரும்பும் வழியில் அவர்கள் பேசிக்கொண்டு வர, மௌனமாய் அனைத்தையும் கவனித்தாள் அபர்ணா.
சித்தரஞ்சன் அமைதியாக இருக்கவில்லை. அவனுக்குத் தெரிந்த பிறகு சரண்யாவைத் தேட தொடங்கியிருக்கிறான் என்று தெரிந்ததுமே, அவன் மீது கொஞ்ச நஞ்சம் இருந்த கோபமும் காணாமல் போனது.
அதுவும் அவன் சரண்யாவிடம் வாஞ்சையுடன் நடந்து கொள்வதைப் பார்க்கும் போது, முன்பு அவன்தான் அவர்கள் குடும்ப நிலைமைக்குக் காரணம் என்று அவளால் குற்றம் சாட்ட முடியவில்லை.
சரண்யாவே தன்னை தவறாகத்தானே சொல்லிக்கொள்கிறாள். அப்போதைய சரண்யாவை சித்தரஞ்சனுக்குப் பிடிக்காமல் இருந்தாலும், இப்போதைய சரண்யாவை அவன் மதிக்கிறான்.
அவள் மீது அன்பு செலுத்துகிறான். இந்தத் திருமணமே அவனால் தான் நடக்கிறது. சகுந்தலாவை சம்மதிக்க வைத்தவனும் அவனே.
தான் இல்லாவிட்டாலும், புகுந்த வீட்டில் கணவனைத் தவிர அவளுக்கு ஆதரவு உண்டு என்று நினைக்கும்போது அவளுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.
மறுநாள் முதல் முகூர்த்தத்தில் அபர்ணாவின் பெற்றோர் இடத்தில் இருந்து ராம்பிரசாத்தும், ராஜலட்சுமியும் அவளைத் தாரை வார்த்துக்கொடுத்தனர். மச்சான் முறையை அருண்பிரசாத் செய்தான்.
அடுத்த முகூர்த்தத்தில், அபர்ணாவும், சித்தரஞ்சனும் பெற்றோர் இடத்தில் இருந்து சரண்யாவை தாரை வார்த்துக் கொடுத்தனர். எதிர்மாலையை மதன்ராஜ் எடுத்துப் போட்டான்.
“ஏய் யாராவது என் மச்சானை தூக்கி விடுங்கப்பா. என்னால் அவ்வளவு குனிய முடியாது.” என்று கெஞ்சினான் மனோரஞ்சன்.
“எங்க வீட்டுப் பெண்ணைக் கல்யாணம் செய்யனும்னா பணிந்து போக தெரியனும் மாப்பிள்ளை.” என்று கிண்டல் செய்தவாறே மதன்ராஜை நவீன் பிரசாத் தூக்கிக் கொண்டான்.
கலகலப்புடன் இரண்டு திருமணங்களும் நல்லபடியாக நடந்தன.
தங்கள் சார்பாக ஒரு வைர நெக்லசை சரண்யாவிற்கு அன்பளிப்பாகத் தந்தார் ராஜலட்சுமி. மனோரஞ்சனுக்கு வைர மோதிரமும்.
“அம்மா. அக்காதான் எல்லாம் செஞ்சாச்சே அம்மா.” என்றாள் தயக்கமுடன்.
“நான் உங்க ரெண்டு பேரையும் பிரிச்சுப் பார்க்கலைடா. ஆனால் உன் அக்காதான் எதுவுமே நீங்க சரண்யாவுக்கு செய்யக்கூடாது. அந்த உரிமை எனக்கு மட்டும்தான் என்று என் கையைக் கட்டிப் போட்டுவிட்டாளே.” என்றார் பெருமையாய்.
மறுநாள் வரவேற்பு. காலையிலேயே மண்டபம் களை கட்டத் தொடங்கிவிட்டது.
உறவினர்கள், நண்பர்கள், தொழிலாளர்கள் என்று ஏகப்பட்ட பேர் வரவேற்புக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
தன்னை விட சரண்யாவின் அலங்காரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாள் அபர்ணா.
சரண்யா மாநிறத்திற்கும் சற்றுக் குறைவான நிறத்தில் இருப்பதால் தான் அழகில்லை என்று அவளுக்குத் தாழ்வு மனப்பான்மை.
ஆனால் அது உண்மையில்லை. அவள் முகம் அத்தனை களையாயிருக்கும்.
அவளிடம் ஒரு ஆளுமைத்திறன் இருந்தது. பேச்சிலும் வசீகரம் இருக்கும். இத்தனை குணநலன்கள் இருந்தும், அவற்றை அவள் அறியாமல் இருந்தாள். இது எல்லாம் தான் மனோரஞ்சனை அவள்பால் ஈர்க்கக் காரணம்.
இப்போது அழகுநிலையப் பெண்களின் கைவண்ணத்தில் அவள் கம்பீர அழகுடன் நின்றிருந்தாள்.
சில பேர் பாசத்தில் வந்திருந்தாலும், சிலர் இவளை எல்லாம் பெரிய இடத்தில் எப்படி மருமகளா எடுப்பாங்க?
அவனுக்கு ஏதாவது குறையிருக்கும். இப்பத்தானே அவனுக்கு ஆக்சிடெண்ட் ஆச்சுன்னு சொன்னாங்க.
அவனுக்கு கைகால் போயிருக்கலாம், இல்லை கண்ணு பிரச்சினை இருக்கலாம்.
அப்படி இருந்தும் என்ன திமிரா நடந்துட்டுப் போறா? நேர்ல போய் பார்த்துட்டு நாக்கைப் பிடுங்கிக்கற மாதிரி நாலு கேள்வி கேட்டுட்டு வரனும் என்ற எண்ணத்தில் வந்திருந்தனர்.
ஆனால் அவர்கள் எண்ணத்தை எல்லாம் பொய்யாக்கும் வகையில் அவளுக்குப் பொருத்தமாய் கம்பீரமாய் நின்றிருந்தான் மனோரஞ்சன்.
ஏற்கனவே குணமாகிக் கொண்டிருந்தவன்தான். சரண்யாவைப் பார்த்த உடன் முழு முயற்சியில் நன்றாக நடக்க ஆரம்பித்துவிட்டான்.
சரண்யாவைக் கட்டிக்கொள்ள மாட்டேன் என்று சொன்ன அவள் பக்க இளைஞர்கள், அவள் தோற்றத்தில் மலைத்துப் போயினர்.
அத்துடன் மனோரஞ்சன் அவளுக்கு இணையாக நின்று தோற்றப் பொருத்தத்தில் அவர்களுக்குப் பொறாமையை உண்டாக்கினான்.
நல்லபடியாக வரவேற்பும் முடிந்தது.
அன்று இரவே ராம்பிரசாத் குடும்பத்தினர் ஊருக்குக் கிளம்பிவிட்டனர். கூடிய விரைவில் அருண்பிரசாத் திருமணம் இருக்கும். அதற்கு வரவேண்டும் என்ற அழைப்பை விடுத்துவிட்டு அபர்ணாவைப் பிரிய மனமில்லாமல் சென்றனர்.
அபர்ணாவின் உடைமைகள் சித்தரஞ்சனின் அறைக்குள் குடிபெயர்ந்தன. மதன்ராஜ் மட்டும் அங்கே தங்கிக் கொண்டான். தேவேந்திரன் அவனைப் பார்த்துக் கொள்வதாகக் கூறினார்.
ஒரு வாரத்திற்குப் பிறகு நகைக்கடையை சரண்யாவின் பொறுப்பில் விட்டான் சித்தரஞ்சன்.
“அத்தான். நான் எப்படி? எனக்கு எதுவுமே தெரியாதே.” என்று தயங்கினாள் சரண்யா.
அவள் மனதிற்குள் அதுக்கான தகுதி தனக்கு இருக்கிறதா? என்ற பயமும் இருந்தது.
“உன்னைப் பத்தித் தெரிஞ்சதால்தான்மா இந்தப் பொறுப்பை உன்னிடம் கொடுக்கிறோம். அப்பாவும், நானும் கலந்து பேசித்தான் இந்த முடிவை எடுத்திருக்கோம். ஆரம்பத்தில் நானும் அப்பாவும் உன் கூட இருந்து சொல்லித்தர்றோம். பிறகு மனோவும் உன் கூட அப்பப்ப இருந்து பார்த்துப்பான். அவனுக்கு பர்னிச்சர் கடையைக் கொடுத்திருக்கு. அப்பா சூப்பர் மார்க்கெட்டை பார்த்துப்பார். அம்மாவும் இனி பாத்திரக் கடையை பார்த்துக்கிறதா சொல்லியிருக்காங்க.” என்று வீட்டுச் சூழலை ஒரு மருமகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது அவன் கடமையெனக் கருதி அவளிடம் கூறினான்.
இதைப் பேசும்போது வீட்டினர் அனைவருமே இருந்தனர்.
“அண்ணா. அண்ணியை மட்டும் ஃப்ரீயா விட்டுட்டியா?” என்றான்.
“ஹலோ. நான் எங்கே ஃப்ரீயா இருக்கேன். எனக்குத்தான் ஹோம் மினிஸ்டர்னு பெரிய பதவியைக் கொடுத்துட்டீங்களே.” என்றாள் அபர்ணா.
“வீட்டு வேலைக்கு ஆள் வச்சுக்கலாம்மா.”
“இல்ல மாமா. டாக்டர் சார் அவசர கேஸ் ஏதாவது வந்தால் உதவிக்குக் கூப்பிடறேன்னு வேற சொல்லியிருக்கார். அதுக்கு நான் வீட்டில் இருந்தால்தான் சரியா இருக்கும் மாமா.”
“ஆமாம்மா. சந்திரன் என்கிட்டயும் சொன்னான். பெரிய இடத்து மருமகள்னு வீட்டுக்குள்ளேயே பூட்டி வச்சிடாதே. அப்பப்ப ஹாஸ்பிட்டலுக்கு அனுப்புன்னான். அப்ப ரஞ்சனும் நீயும் ஏற்கனவே பேசித்தான் இந்த முடிவை எடுத்தீங்களா?”
“ஆமாம் மாமா.” வேறு வழியில்லாமல் சிரித்துக் கொண்டே சொன்னாள் அபர்ணா.
இதோ, இப்போது குடும்பத்தினரிடம் பேசும்போதுதான் என்ன நடக்கிறது என்றே அவளுக்குத் தெரியும். சொல்லப்போனால், அவன் அவளிடம் எதுவுமே பேச முயற்சிக்கவில்லை.
இப்போதும் தனக்கு எந்தப் பொறுப்புமே கொடுக்கவில்லையே என்று அவள் வருந்தவில்லை.
அவனைப் பொறுத்த வரைக்கும் ஒரு வருடத்தில் அவர்கள் பிரியப் போகிறார்கள். அதனால் அவளுக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்காமல் இருப்பதுதான் நல்லது.
“ஏன் மாமா? எல்லாத்துறையிலயும் கால் பதிச்சாச்சு. ஏன் ஹோட்டல் பிசினசை மட்டும் விட்டுட்டீங்க.” என்றாள் எதார்த்தமாக.
இத்தனை நிறுவனங்களை இத்தனை நாட்கள் சித்தரஞ்சன் ஒருவனாய் நிர்வகித்திருக்கிறான் எனும்போது, இன்னும் தொழிலை விரிவு படுத்த ஒரு யோசனை சொன்னாள்.
“சமைக்கிறவ புத்தி.” என்று மெல்ல முணுமுணுத்தார் சகுந்தலா.
அருகில் இருந்த சித்தரஞ்சனுக்கும் அது கேட்டது.
அது ஏனோ சகுந்தலாவிற்கு இன்னமும் அபர்ணாவை பிடிக்கவில்லை. சரண்யாவோடு கூட பேசுகிறார்.
‘மாமா மாமா’ என்று தேவேந்திரனிடம் பாசமாக இருக்கும் அபர்ணாவும் கூட சகுந்தலாவை எதுவும் அழைத்துப் பேசுவதில்லை.
போகிற போக்கில் ‘திமிர் பிடித்தவள்’ என்று திட்டிக் கொண்டே போவார்.
வாழ்க்கை இயல்பாக நகர்ந்தது. காலை உணவை முடித்துக் கொண்டு கிளம்பிவிடுவர்.
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மதன்ராஜ் வீட்டிலிருந்தான்.
வேலை முடித்துவிட்டு அவனுக்குப் பாடங்கள் சொல்லித் தருவாள்.
மதிய உணவுக்கு சில நேரங்களில் அவர்களால் வர முடியாமல் போனால், இவள் கேரியரில் கொடுத்தனுப்புவாள்.
சித்தரஞ்சன் மட்டும் வீட்டிற்கு வந்துவிடுவான். அவள் பரிமாறுவதை எதுவும் பேசாமல் சாப்பிட்டுவிட்டுச் சென்றுவிடுவான்.
இரவு உணவு நேரத்தில் எல்லாரும் ஒன்றாக சாப்பிடுவார்கள்.
இன்னும் அபர்ணா சமையல் அறையில் உள்ள சாப்பாட்டு மேசையில் அமர்ந்துதான் சாப்பிடுவாள்.
அவள் சமைத்ததை குறை கூறிக் கொண்டே சாப்பிடுவார் சகுந்தலா.
தினமும் ஏதாவது கீரை, மூலிகைத் துவையல் இருக்கும். அதற்கு அவளைத் திட்டித் தீர்ப்பார்.
அவள் வேலை பார்க்கும்போதே என்ன சமைக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டதில்லை. அந்தக் கோபம் அவருக்கு இன்னும் மறையவில்லை.
ஒரு மாதம் கடந்த நிலையில் மனோரஞ்சனுக்கும், சரண்யாவிற்கும் அந்த மாத ஊக்கத் தொகை என்று ஒரு தொகையை தேவேந்திரன் கொடுக்க சரண்யா கண் கலங்கினாள். இது அவள் சம்பாதித்தது.
இரவில் தங்கள் அறைக்கு வந்தபோது, அபர்ணாவிடம் சித்தரஞ்சன் பணம் கொடுக்க அவள் வாங்க மறுத்தாள்.
“சம்பளமில்லாத வேலைக்காரின்னுதானே சொன்னீங்க? இப்ப எதுக்கு பணம் தர்றீங்க?” என்றாள் கோபமாய்.
“ஏய் என்ன திமிராடி?” என்றவன் அவளைப் பார்த்து அதிர்ந்து போனான்.
அவளும் “சித்து” என்றவாறே அவன் மீது சரிந்தாள். அவன் மார்பில் அவளின் ரத்தத் துளிகள்.
காதல்வளரும் ……
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.