தேவேந்திரனை பரிசோதித்த அபர்ணா, “சித்து உடனே மாமாவை ஹாஸ்பிட்டல் கொண்டு போகனும்.” என்றாள்.
“என்னாச்சு?” என்றான் பதட்டமாக.
“ஹார்ட் அட்டாக்.”
அதிர்ந்தவன் உடனே அவரைத் தூக்கினான்.
அபர்ணா கார் சாவியை எடுத்துக்கொண்டு ஓடினாள்.
“மனோ. நீ உடனே கிருஷ்ணாவுக்கும், ஜெயச்சந்திரன் அங்கிளுக்கும் சொல்லு.” என்று ஓடியவாறே அவனிடம் கூறினாள்.
காரின் பின்னிருக்கையில் சகுந்தலாவை அமர்ந்து கொள்ள, அவர் மடியில் தேவேந்திரனின் தலையை வைத்தான் சித்தரஞ்சன்.
அவன் ஓட்டுநர் இருக்கைக்கு வரும் முன்னரே அவள் இயக்க ஆரம்பிக்க, சித்தரஞ்சன் அவளருகில் அமர்ந்தான்.
கார் விரைந்தது.
ஜெயச்சந்திரனுக்கு அழைத்தான்.
“ரஞ்சன். இப்போதான் மனோ பேசினான். நான் ஊருக்கு வந்திருக்கேன். இதோ கிளம்பிட்டேன்.”
“அங்கிள் சீக்கிரம் வாங்க.”
“அபர்ணா கூட வர்றாளா?”
“வர்றா அங்கிள்.”
“அப்ப கவலைப்படாதே. அவ பார்த்துப்பா.” என்றார்.
மருத்துவமனைக்குள் கார் நுழையும்போது அங்கே ஸ்ட்ரெச்சருடன் பணியாட்கள் நின்றிருந்தனர். கிருஷ்ணாவும் பதட்டத்துடன் நின்றிருந்தான்.
கார் நிற்கவும் பணியாட்கள் காரை சூழ்ந்து கொண்டு தேவேந்திரனை பத்திரமாக இறக்கி, ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து, அவசர சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டு சென்றனர்.
“கிருஷ்ணா. அங்கிள் எங்க வந்துக்கிட்டிருக்கார்?”
“தெரியலைண்ணா. ஆனால் சீக்கிரம் வந்துடுவேன்னு சொன்னார்.”
“வேற டாக்டர் இருக்காங்களா?”
“பதட்டப்படாதீங்கண்ணா. அப்பு இருக்காளே. அவள் பார்த்துக்கொள்வாள்.” என்றான்.
என்ன செய்வதென்று புரியாமல் உடனே அருண்பிரசாத்துக்கு அழைத்தான்.
“என்ன எல்லாரும் அப்பு பார்த்துக்குவா, அப்பு பார்த்துக்குவான்னு சொல்றீங்க? அவ ஒரு நர்ஸ். அவ என்ன பார்க்க முடியும்?” என்று கத்தினான்.
ஒரு கணம் அருண்பிரசாத்திடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
“நானும் அப்பாவும் உடனே கிளம்பறோம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ? அவ்வளவு சீக்கிரம் வருகிறோம்.” என்று உறுதியளித்தான்.
மனோரஞ்சன் வந்து சேர்ந்தான். இந்த நிலைமையில் சரண்யாவை அலைக்கழிக்க வேண்டாம் என்று அவளை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்தான்.
அவனிடம் புலம்பினான் சித்தரஞ்சன்.
ஜெயச்சந்திரன் வந்துவிட்டார்.
“அங்கிள். அப்பாவைப் பாருங்க அங்கிள்.” என்று பதட்டமானான்.
“ரஞ்சன். கவலைப்படாதே. அவனை நான் விட்டுடுவேனா? உள்ளே டாக்டர் பார்த்துக்கிட்டிருக்காங்க. நானும் இப்பப் போய் பார்க்கறேன். எப்பவும் நீதான் திடமா இருப்பே. இப்ப நீயே உடைஞ்சு போயிட்டா மத்தவங்களை பார்க்கறது யாரு?”
என்றவாறே அவர் அவசர சிகிச்சைப் பிரிவிற்குள் நுழைந்தார்.
சிறிது நேரத்தில் அந்த இடமே பரபரப்பாக இருந்தது.
ஜெயச்சந்திரன் கவலையுடன் வெளியில் வந்தார்.
“என்னாச்சு அங்கிள்?”
“சைலண்ட் ஹார்ட் அட்டாக். அதான் எந்த அறிகுறியும் காட்டாமல் ஆளை சாய்ச்சிடுச்சு.”
“அங்கிள்.”
“பயப்படாதே. உடனே ஆப்பரேசன் பண்ணனும். அதுக்கான பார்மாலிட்டீசை முதல்ல பார்ப்போம்.”
“அங்கிள் நீங்க எப்படி?”
அவர் ஒரு ஜெனரல் சர்ஜன். அதனால் அந்தக் கேள்வியைக் கேட்டான்.
“நீ ஒன்னும் கவலைப்படாதே. நான் பார்த்துக்கறேன்.” என்றவாறே உள்ளே சென்றார்.
ராம்பிரசாத்தும், அருண்பிரசாத்தும் உள்ளே நுழைந்தனர்.
அவர்களைக் கண்டதும்தான் அவனுக்கு நிம்மதி பிறந்தது. அவன் ராம்பிரசாத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். அவர் கைதேர்ந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர்.
“அங்கிள்.” என்றவன் அருகில் வந்து தோளைத் தட்டினார்.
“எல்லாம் சரியாயிடும் ரஞ்சன். கவலைப்படாதே.” என்றார்.
“ப்ளீஸ் சீக்கிரம் போய் அப்பாவைப் பாருங்க அங்கிள்.” அவன் சொல்லி முடிக்கவும், அறுசை சிகிச்சை அறைக்கதவு திறக்கவும் சரியாக இருந்தது.
“அப்பா ரஞ்சா. உன் அப்பா ஆபத்து கட்டத்தைத் தாண்டிட்டான். அவனுக்கு ஆப்பரேசன் முடிஞ்சுடுச்சு. அவனுக்கு நினைவு திரும்பின உடனே போய் பாருங்க.”
அவரருகில் அபர்ணா நின்றிருந்தாள்.
“அம்மாடி அபர்ணா.” ராம்பிரசாத் அவள் அருகில் வந்தார்.
“வெல் டன் அப்பு.” என்று அருண்பிரசாத் கை குலுக்கினான்.
“தேங்க்ஸ்ணா.”
அருண்பிரசாத் திருமணத்திற்குச் செல்லும்போதுதான் ராஜலட்சுமி அவளிடம் கடிந்து கொண்டார்.
“நம்ம சொந்தக்காரங்ககிட்ட எல்லாம் நீ எங்க பொண்ணுன்னு சொல்லியிருக்கோம். நீ பாட்டுக்கு சார் சார்னு கூப்பிடறே. இனி அவரை அப்பான்னு கூப்பிடு. அருணை இனி அண்ணான்னுதான் கூப்பிடனும்.” என்று கட்டளையிட்டிருந்தார்.
“அவ எப்படிப்பட்ட அருமையான பொண்ணு தெரியுமா மாப்பிள்ளை. அவளை முதன் முதலா நான் தங்கைன்னு சொன்ன அன்னிக்கு அவ என்ன செஞ்சா தெரியுமா? ஓன்னு அழுதாள்.”
என்றவன் பழைய நினைவுகளில் மூழ்கினான்.
நந்தவனம் இல்லம் ராம்பிரசாத் குடும்பத்தாரால் நடத்தப்படுகிறது என்று வெளியுலகிற்கு அவ்வளவாகத் தெரியாது. செய்யும் செயலை பறைசாற்றுவதில் அவர்களுக்குப் பிடித்தமில்லை.
ஆனாலும் குடும்பத்துடன் அடிக்கடி வந்து அங்குள்ளவர்களுக்கு சேவை செய்வார்கள். ராம்பிரசாத்தால் தொழில் நிமித்தம் அடிக்கடி வர முடியாது.
அங்கே ஆதரவற்ற குழந்தைகள், பெரியவர்கள் இருந்தனர்.
அந்த இல்லத்தில்தான் அபர்ணாவை கந்தசாமி சேர்த்திருந்தார்.
அன்றைய தினம் முதலுதவி செய்வது பற்றிய விழிப்புணர்வை கொடுக்க ராம்பிரசாத் குடும்பத்துடன் வந்திருந்தார்.
பலதரப்பட்ட வயதினரும் இருக்கும் இல்லம் என்பதால் அனைவருக்கும் முதலுதவி பயிற்சி பயன்படும் என்று அன்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அதன் பிறகு வாரக் கடைசியில் ராஜலட்சுமி மட்டும் வந்திருந்தார். அவருக்குத் திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவருக்கு ஏற்கனவே இதயம் பலவீனமானது. அப்போது அங்கிருந்த அபர்ணா கூட இருந்த பெண்ணிடம் இல்லத்துப் பொறுப்பாளரிடம் தகவல் கொடுக்கச் சொல்லிவிட்டு அன்று ராம்பிரசாத் சொல்லித் தந்த மாதிரி அவருக்கு முதலுதவி அளித்தார்.
இல்லத்துப் பொறுப்பாளர் தகவல் அறிந்ததும், உடனே ராம்பிரசாத்துக்குத் தகவல் கொடுக்க அவர் உடனே ஆம்புலன்சுடன் வந்துவிட்டார். அவருடன் அருண்பிரசாத்தும், நவீன் பிரசாத்தும் வந்திருந்தனர்.
அவர் வந்து பார்த்த போது ராஜலட்சுமி சாதாரணமாக இருந்தார். அவருக்கே ஆச்சர்யம்தான்.
அப்போது பொறுப்பாளர் அபர்ணாதான் முதலுதவி செய்ததாக கூறினார்.
“அம்மா. இது போலத்தான் ஒரு தங்கச்சி பாப்பா வேணும்னு சொன்னீங்களாம்மா. இந்தப் பாப்பாவையே தங்கச்சியா வீட்டுக்கு அழைச்சுட்டுப் போகலாம்மா.” என்று அருண்பிரசாத் சொன்னதுதான் தாமதம்.
அவன் காலடியில் மண்டியிட்ட அபர்ணா கதறியழத் தொடங்கினாள்.
அவன் பதறிவிட்டான்.
“ஐயோ. பாப்பா. உனக்குப் பிடிக்கலைன்னா வேண்டாம்.”
அவன் என்ன சமாதானப்படுத்தினாலும் அவள் அழுகை நிற்கவில்லை.
அருண்பிரசாத்தை நகரச் சொன்ன ராஜலட்சுமி, அபர்ணாவின் அருகில் வந்து அவளை மடியில் சாய்த்துக்கொண்டார்.
அவருடைய அனுபவ அறிவு அபர்ணா எதற்காக அழுகிறாள் என்று சொன்னது. அன்பைத் தாங்க முடியாமல் அழுதது அந்தப் பிஞ்சு.
“நீங்க போங்க. நான் லேட்டா வர்றேன்.” என்று அவர்களை ராஜலட்சுமி கிளம்பச் சொல்லிவிட்டார்.
இல்லத்துப் பொறுப்பாளரிடம், அபர்ணாவைப் பற்றிக் கேட்டறிந்தார் ராஜலட்சுமி.
அவள் நிலையை உணர்ந்துகொண்ட அவர், அவளைத் தங்களுடைய வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.
அருண்பிரசாத்திடம் அவளது நிலையை மேலோட்டமாகச் சொன்னார். அவனுக்கு அவள் ஏன் அழுதாள் என்று புரிய வர அவள் மேல் பச்சாதாபம் தோன்றியது. அப்போது அவன் மருத்துவக்கல்லூரியில் இளநிலை படிப்பு படித்துக்கொண்டிருந்தான்.
“அம்மா. இவளை எல்லாம் என்னால் தங்கையாக ஏத்துக்கொள்ள முடியாது.” என்றான் நவீன் பிரசாத்.
“நவீன்….” என்றார் அதட்டலாய்.
“அம்மா. இவளைப் பார்த்தீங்களாம்மா? என்னை விட பெரிய பொண்ணா இருக்கிறா. அவளைப் போய் என்னோட தங்கை என்றால் யார் ஒத்துக்குவாங்க. நான் வேணா அவளை அக்கான்னு கூப்பிடவா?” என்று கேட்ட அவனையும் அபர்ணாவிற்குப் பிடித்துப் போனது.
ராஜலட்சுமியிடம் சமையல் பயின்றவள், பிறகு தானே வேலைகளைக் கவனித்துக்கொண்டாள்.
அவள் சமையல் அத்தனை சுவையாய் இருந்தது. அவளுக்கு கற்பூர புத்தி. எதையும் பார்த்த உடன் கற்றுக்கொள்வாள். கற்றுக்கொள்வதில் ஆர்வமும் உண்டு.
அவளை நவீன் பிரசாத்துடனே பள்ளியில் சேர்த்தனர்.
அவள் அவனை ஒரு தாயைப் போலக் கவனித்துக்கொண்டாள்.
அவனுடைய உடைகளைப் போட்டுக்கொள்வாள். அதற்கு நவீன் பிரசாத் சண்டை போடுவதைக் கண்ட ராஜலட்சுமி, அவன் அணிவதைப் போலவே உடைகள் வாங்கிக் கொடுத்தார்.
அவர் “அம்மு” என்று அவளை செல்லமாக அழைக்க, நவீன் பிரசாத்தோ, “அப்பு”ன்னுதான் அவளைக் கூப்பிடனும் என்று அடம்பிடிப்பான்.
“அவள் பெண் பிள்ளைடா. அவளை அம்முன்னுதான் கூப்பிடனும்”
“அம்மா. அவ போடுற டிரஸ்ஸைப் பாருங்க. ஆண் பிள்ளை போடறதுதானே போடறா. அப்படின்னா அவ அப்புதானே?” என்று நியாயம் பேசுவான்.
எப்படியோ அங்கே செல்லப் பெண்ணானாள்.
ராஜலட்சுமி அவளைத் தத்தெடுத்துக் கொள்ளலாம் என்ற போது ராம்பிரசாத்,
“ஒரு பேப்பர் தான் அவளை உன் பொண்ணுன்னு சொல்லும்னு நினைக்கறியா ராஜி? அவள் பெற்றோர் இல்லாத பெண் கிடையாது. அவள் மேஜராகும்போது அவள் விருப்பத்துடன் தத்து எடுத்துக் கொள்ளலாம்.”
அவர் சொன்னதும் சரியெனப்பட்டது. எப்படி இருந்தாலும், அவள் அவர்களுடைய மகள்தானே?
ராஜலட்சுமி அதிகமான வேலைப் பளுவை எடுத்துச்செய்கிறார் என்று வீட்டினருக்குப் புரிய வைத்தாள்.
அவருடைய வேலைகளை வீட்டில் குறைத்துவிட்டு, அவருக்கு ஆர்வம் உள்ளவற்றில் அவர் கவனத்தைத் திருப்பிவிட்டாள்.
அப்படி இருவரும் பயின்றதுதான் ஓவியம்.
நவீன் பிரசாத் அபர்ணாவை விட வயதில் மூத்தவனாக இருந்தாலும் இருவரும் ஒரே வகுப்பில்தான் பயின்றனர்.
அவள் சொல்லித்தான் ராஜலட்சுமி, நியூட்ரிசன் படிப்பைப் படித்தார். இப்போது அவர்கள் மருத்துவமனையில் அவர்தான் உணவு ஆலோசகர்.
பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்று, நவீன் பிரசாத்தையும் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வைத்தாள்.
அவளுடைய லட்சியம் என்ன என்ற போது ராம்பிரசாத்தைக் காட்டி அவர் போல் ஒரு மருத்துவர் ஆக வேண்டும் என்று சொன்னாள்.
அதனால் அவர்கள் இருவரையும் மருத்துவப்படிப்பில் சேர்த்தனர்.
அருண்பிரசாத் இளநிலை மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு, முதுநிலையில் மூளை நரம்பியல் நிபுணத்துவம் படிக்க விரும்பி அந்த படிப்பில் சேர்ந்துவிட்டான்.
“அம்மா. இவளை வேற காலேஜில் சேர்த்து விடுங்கம்மா. இவ சரியான ராட்சசிம்மா. படிப்பு ராட்சசிம்மா.” என்று நவீன் பிரசாத் கெஞ்சினான்.
பிறகு. அவனையும் சேர்த்து வாட்டிவிடுவாளே?
கல்லூரியிலும் அவள் நவீன் பிரசாத்தின் நிழல் போல் இருந்தாள். அவள் அவனைக் காப்பாற்ற, அவர்கள் உறவு அவளை மற்றவர்களிடம் இருந்து காப்பாற்றியது.
ஒரு முறை ராம்பிரசாத்தின் மீது பொறாமை கொண்ட மருத்துவர் ஒருவர், நவீன் பிரசாத்தை ஒரு பிரச்சினையில் மாட்டிவிட முயன்றார்.
அங்கு படித்த பெண் ஒருத்தி மிகவும் ஏழை. நன்கு படித்து மதிப்பெண்கள் பெற்றதால் அவளுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது.
ஆனால் இங்கு மருத்துவம் பயிலும் மற்றவர்களின் பகட்டில் அவள் தன்னை மறந்தாள். அதைப் போல் தானும் வாழ வேண்டும் என்ற ஆசை கொண்டாள். அவளுக்கு நவீன் பிரசாத்தின் மீதும் பிரியம். இதை எல்லாம் தெரிந்த அந்த மருத்துவர், ஒரு குறுக்கு வழி அந்தப் பெண்ணிற்கு சொல்லிக்கொடுத்தார்.
எப்படியாவது அவன் அவளிடம் தவறாக நடந்து கொண்டான் என்று அவள் மற்றவர்களை நம்ப வைத்துவிட்டால், அவனுடைய அப்பா அவளை அவனுக்குத் திருமணம் செய்து தருவார் என்று அவளை நம்ப வைத்தார்.
அதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்றும் வழி சொல்லிக் கொடுக்க, மனம் தடுமாறியிருந்த அந்தப் பெண்ணும் அதற்கு ஒத்துழைப்புக் கொடுத்தாள்.
அதன்படி பராமரிப்பின்றி கிடந்த ஒரு ஆய்வகத்திற்குள் அவனை அழைத்துச் சென்றவள், அவள் உடைகளை அவளே கிழித்துக்கொண்டு, தன்னை அலங்கோலப்படுத்திக்கொண்டாள்.
முன்னேற்பாடாய் அந்த இடத்திற்கு அந்த மருத்துவர் மற்றவர்களுடன் ராம்பிரசாத்தையும் வரவழைத்தார்.
கதவைத் தட்டும் ஒலியில் திடுக்கிட்டான் நவீன் பிரசாத். அந்தப் பெண் என்ன செய்ய முயலுகிறாள் என்று அவனுக்குப் புரிந்து போனது.
இந்த நிலையில் அவர்களைக் கண்டால் நிச்சயம் அவனைத் தப்பாகத்தான் நினைப்பார்கள். எத்தனையோ முறை வீட்டினர் விளையாட்டுத்தனத்தைக் குறை என்று சொன்னாலும், கேட்காமல் போன தன் முட்டாள்தனத்தை எண்ணி வருந்தினான்.
எப்படியும் வெளியேச் சென்றுதான் ஆக வேண்டும். தன்னால் தன் குடும்பத்திற்கு அவமானம் வரப்போகிறது என்ற பயத்துடன் கதவைத்திறந்தான்.
அவன் கலவர முகத்துடன் கதவைத் திறக்க, திறந்த கதவுக்கு எதிரே அந்தப் பெண் அலங்கோலமாய் நின்றிருந்தாள்.
“எத்தனை நேரம் இப்படி அதிர்ச்சியாய் நிற்பே நவீன்? இதுதான் நீ டாக்டருக்குப் படிக்கிற லட்சணமா? முதல்ல காயம்பட்டவங்களை பார்ப்பியா?” என்று அவனைத் திட்டியவாறே முதல் உதவிப் பெட்டியுடன் மறைவில் இருந்து வெளிப்பட்டாள் அபர்ணா.
மற்றவர்களுக்கு அவள் அங்குதான் இத்தனை நேரம் அவர்களுடன் இருந்த மாதிரியான தோற்றம்.
“இந்தா பிடி.” என்று அவனை அதட்டி முதலுதவிப் பெட்டியை அவன் கையில் கொடுத்துவிட்டு, அந்தப் பெண் தானே உருவாக்கிக் கொண்ட காயங்களுக்கு மருந்திடலானாள் அபர்ணா.
கூட்டத்தைக் கூட்டி வந்த அந்த மருத்துவருக்கு முகம் அஷ்டகோணலானது.
ராம்பிரசாத் அத்தனை நிம்மதியாய் உணர்ந்தார்.
“சார். இந்த இடத்தில் ஒரு காமிரா வக்கச் சொல்லனும் சார். அப்படி வைத்திருந்தால் யார் இப்படி இவளிடம் நடந்து கொண்டது என்று கண்டுபிடிச்சிருக்கலாம். நல்ல வேளை நானும், நவீனும் வரவும் இவள் தப்பித்தாள்.” என்றவாறே அந்தப் பெண்ணைப் பார்த்தவள், “மருந்து போட்டாச்சு. இனி பார்த்துப் பத்திரமா இருந்துக்கோ.” என்றாள்.
அந்தப் பெண் விடுதி அறைக்குச் சென்று தூக்கு மாட்டிக்கொள்ள முயல, அவளைக் காப்பாற்றவும் செய்தாள்.
“நீ நவீனை உண்மையா காதலிச்சிருந்தால் முறையா நீ அவன்கிட்ட காதலை சொல்லியிருக்கனும். அதை விட்டுட்டு குறுக்கு வழியில் அடைய நினைச்சே. இப்ப என்னாச்சு? உன் மானம்தான் போச்சு. இனியாவது புத்தியா நடந்துக்கோ. நவீனோட அப்பா உனக்கு வேற காலேஜில் படிக்க இடம் வாங்கித்தருவார். அப்படியே படிப்பு செலவையும் பார்த்துப்பார். இனியாவது கண்டவங்களோட பேச்சைக் கேட்காமல் சுயபுத்தியோட நடந்துக்கோ.” என்று அவளை ராம்பிரசாத்திடம் அழைத்துச் சென்றாள்.
அவள் அவர் காலில் விழுந்து கதறினாள். அவரும் அபர்ணா சொன்னதை ஏற்றுக் கொண்டார்.
காரில் ஏறி அமர்ந்த உடன் நவீன் பிரசாத் “அப்பு. நீ இல்லன்னா இன்னிக்கு?” என்று அவளைக் கட்டிக் கொண்டு அழுதான்.
“நவீன். அம்மா உன்னை என் பொறுப்பில் விட்டிருக்காங்க. உன்னை நான் பார்த்துக்காமல் வேற யார் பார்த்துப்பாங்க?” என்றாள் மென்மையாக
வீட்டிற்கு வந்ததும், ராஜலட்சுமியிடம் கூறிய ராம்பிரசாத் குலுங்கி அழுதுவிட்டார்.
அவளுடைய இருபதாவது வயதில் அவளை தத்தெடுத்துக்கொள்ள விரும்புவதாக அவர்கள் கூற,
“ஒரு பேப்பர்தான் நான் உங்க பொண்ணுன்னு சொல்லுமா அம்மா. நான் எப்படியிருந்தாலும் உங்க பொண்ணுதான்மா.” என்று ராம்பிரசாத் மாதிரியே அவள் கூறினாள்.
இளநிலை மருத்துவப்படிப்பில் நிறைய தங்கப்பதக்கங்கள் பெற்றாள்.
நவீன் பிரசாத் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் படிப்பைத் தேர்ந்தெடுத்தான். அப்போது அவனுடன் படித்தவன் தான் கிருஷ்ணா.
யாருமே எதிர்பார்க்காமல் அபர்ணா இதய நோய் அறுவை சிகிச்சைத் துறையைத் தேர்ந்தெடுத்தாள்.
அவள் படிப்பை முடித்து வேலையை நல்லபடியாக ராம்பிரசாத்திடம் கற்றுக்கொண்டாள்.
கண்டதும் கற்றுக்கொள்ளும் கற்பூரபுத்தி அவளுக்கு.
அதன் பிறகுதான் சரண்யாவின் பெற்றோர் இறந்த செய்தி கேட்டு இங்கே வந்தாள்.
“அவளுக்கு யாராவது உதவி செய்தால் நன்றிக்கடனுக்காக அவள் என்ன வேண்டுமானாலும் செய்வாள். கந்தசாமிதான் அவளை எங்கள் இல்லத்தில் சேர்த்தார். அவருடைய மகளுக்கு கிட்னி பெயிலியர் ஆன போது யோசிக்காமல் தானம் செய்தாள்.”
அவன் பேசப்பேச சித்தரஞ்சன் அப்படியே அமர்ந்திருந்தான்.
“அவள் மனதில் ஆறாத ரணம் இருக்கு மாப்பிள்ளை. நாங்கள் அறிந்தது அதிகம் அல்ல. அவள் அத்தனை எளிதில் தன்னுடைய கஷ்டங்களை பகிர்ந்து கொள்ளமாட்டாள்.”
“திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்றவள் திடீரென்று திருமணம் என்கிறாளே என்ற இதுவும் நன்றிக்கடனுக்காகத்தானோ? என்ற சந்தேகத்தில்தான் நான் இங்கே வந்தேன். ஆனால் உங்களைப் பார்த்த பிறகு அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.”
அவன் ‘ஏன்’ என்பது போல் பார்த்தான்.
“நான் உங்களை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். நேரில் அல்ல. ஓவியமாய்.”
சித்தரஞ்சனிடம் பேச்சில்லை.
“உங்களை அபர்ணாவின் லேப்டாப்பில் ஓவியமாகப் பார்த்திருக்கிறேன். எதார்த்தமாகத்தான் அந்த ஓவியம் என் கண்ணில் பட்டது. அவள் வரும்போது லேப்டாப்பை வைத்துவிட்டு வந்துவிட்டாள். நான் எடுத்து வந்திருக்கிறேன். அவளுடைய நன்மைக்காகத்தான். அதை எடுத்துப் பாருங்கள்.” என்று அவனிடம் லேப்டாப்பைக் கொடுத்துவிட்டு நகர்ந்தான்.
தேவேந்திரனுக்கு இனி எந்தப் பிரச்சினையும் இல்லை என்ற உடன் ராம்பிரசாத்தும், அருண்பிரசாத்தும் கிளம்பிவிட்டனர்.
தேவேந்திரன் வீட்டிற்கு வந்த பிறகும் அவரைக் கவனிக்க வேண்டும் என்ற சாக்கில் அபர்ணா மதன்ராஜின் அறையிலேயே தங்கிக் கொண்டாள்.
அவள் தன்னிடம் அவளைப் பற்றிய உண்மையைக் கூறாமல் மறைத்துவிட்டாள் என்ற கோபத்தில் அவன் இருந்தான். அவளுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை.
அவளும் அவனை தவிர்த்தாள்.
இந்த நேரத்தில்தான் அவர்கள் திருமண நாள் வந்தது. மறுநாள் அவர்கள் திருமண நாள். அதற்காக சென்னையில் இருந்து ராம்பிரசாத் குடும்பத்தினரும் வந்திருந்தனர்.
அதைக் காரணம் காட்டி அவர்களுடனே தங்கிவிட்டாள் அபர்ணா.
மறுநாள் காலை.
தங்கள் அறைக்கு வந்தவள் தன்னுடைய உடைமைகளை பெட்டியில் எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.
கேள்வியாய் நோக்கியவனிடம், “உங்க அக்ரிமெண்ட்படி இன்னியாட நம்ம திருமண வாழ்க்கை முடியுது. நான் கிளம்பறேன்.” என்றாள் அபர்ணா.
காதல்வளரும் ……
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.